ஈழத்தில் நாட்டுக்கூத்துக் கலை

த.சிவபாலு B.Ed.Hons, M.A.

 

கிராமியக் கலை வடிவங்கள் பல்வேறு வகையினவாக தொன்று தொட்டு மக்களிடையே பயின்று வந்துள்ளமை நாம் அறிந்ததே. கூத்து என்னும் பதம் தமிழில் மிக நீண்ட காலமாக நிலவி  வருகின்றது.  திருமூலரின் திருமந்திரத்திலும்.  திருக்குறளிலும் தொல்காப்பியத்திலும் இச்சொல்லாடலைக் காணமுடிகின்றது. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே பல்வேறு வகைகளில் தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளன. கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் ஒற்றுமை பேணப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் இடவேறுபாடு காரணமாக பிரதேசத்திற்கான தனித்துவமும் பேணப்படுகின்றது. தமிழால் இணைந்துள்ள நிலைமையை நாம் எல்லாக் கலைகளிலும் காணமுடியும்.                                                  

'கூத்தாட்ட அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வம் 

                              போக்கும் அதுவிளிந் தற்று' – குறள் 332

திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர் மத்தியில் கூத்துக்கலை முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதற்கு இந்தத்  திருக்குறளே போதுமானது. கூத்து இடம்பெறும் அவைக் குழாம் என வரும் உவமானம் மக்கள் பெருந் தொகையாகக் சேர்ந்து கண்டு களித்துள்ளனர் என்பது விளக்கம். எனின் தமிழர் சமூகம் கூத்தாட்டத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது வெளிப்படை.

               புகவே தகேன்உனக்கு அன்பருள் யான் என்பொல்லா மணியே

               தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மைஎப் புன்மையரை

               மிகவே உயர்த்திவிண் ணோர்ரைப் பணித்தி அண்ணா ஆமுதே

               நகவே தகும்எம் பிரான்என்னை நீ செய்த நாடகமே.

எனவும்

               நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே

               வீடகத்தே புகுந்திடுவான் மிக்பபாரிதும் விரைகின்றேன்

               ஆடக்சீர் மிக்குன்றே இடையறா அன்பனக்கென்

               ஊடகத்தே நின்றுரகத் தந்தருள்எம் உடையானே

எனவும்

               . . . . . . . . . . . . . . . . . . . . . . .

கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு

                 வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவதே

எனவும்

               செழுமலர் கொண்டெங்கும் தேடஅப் பாலன்இப் பால்எம்பிரான்

               கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதியிலியாய்

               உழுவையின் தேராலுககுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழிதருமே.

 எனவும் மணிவாசகர் நாடகம்பற்றிப் பேசுவது நாடகக் கலையின் மேன்மையை எடுத்துக்காட்டுவதோடு இறைவனை அடைவதற்கு நான் வணங்கும் மார்க்கம் நாடகம்போல் நிலையாமல் உன்னை அடையவேண்டும் எனக் கூறுவது அக்காலத்து நாடகத்தின் வாழ்விலைக்

 

காரைக்கால் அம்மையாரும் இறைவனின் நாடகத்தைப் பார்க்க வரம்வேண்டும் என்கின்றார். 'வேண்டும் இன்னும் வேண்டும் ஆடும்போது அரவா உன்னடியின் கீழ் இருக்க' எப்பாடி இறைவனின் ஆடற்கலையைப் பார்க்க விளைகின்றார்.

 

திருமூலர் இறைவனின் கூத்துவகைகள் ஐந்து என வகைப்படுத்தி அவற்றிற்க விளக்கமும் தந்துள்ளார். சுpவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, அற்புதக் கூத்து எனத் தந்துள்ளமையைக் காணமுடிகின்றது.

சிவானந்தக் கூத்து

தானந்தமில்லாச் சதானந்தத்தின் சக்தி மேல்

தேனுந்தும் ஆனந்தமா நடங்கண்டீர்

ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு

ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது'

சுந்தரக்கூத்து:

'அண்டங்கள் ஏழினுக்கு அப்பாற்பறந்து அப்பாலும்

உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்

கண்டங்கரியான் கருணை தீருவுருக்

கொண்டங்கு உமை காணக் சுது;து தந்தானன்றே!

பொற்பதிக் கூத்து:

தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்

அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்

ஒப்பியல் பேரின்பத்து உபய உபயத்துள்

தற்பரன் நின்று தனிநடஞ்செய்யுமே'

 

பொற்றில்லைக் கூத்து:

' அண்டங்கள் ஓரேழும் அப்பாற் பதியாகப்

பண்டை யாகாசங்கள் ஐந்தும் பதியாகத்

தேண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்

கொண்டு பரஞ்சோதி கூத்துகந்தானன்றே!'

 

என நடராஜரின் கூத்துப்பற்றிப் பாடியிருப்தனை நோக்கும்போது தொடக்கமற்ற இறைவனாகப் பார்க்கபடும் சிவனின் நடனமே உலகின் கூத்துக்கலைக்கு அத்திவாரம் எனக் கொள்ளமுடிகின்றது, 

இலங்கையின் தமிழர் வாழும் பிரதேசங்களில் அவை தனித்தன்மை வாய்ந்தவையாக வேறுபட்ட பாங்குகளைக் கொண்டனவாக இடம்பெற்று வந்துள்ளன. தமிழர் கலை இலக்கிய வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகையினவாகக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்வதாகவே இந்தக் கட்டுரை அமைகின்றது.

கூத்துக்கலை எப்பொழுது ஆரம்பமானது என்பதனைத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளது. கிராமியக் கலைகள் மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. தமிழரின் நாடகக்கலையின் தோற்றம் தொல்காப்பியர் காலத்திற்கு முந்தியது என்பதுவெளிப்படை. தொல்காப்பயித்திலும் சங்க இலக்கியங்களிலும் நாடகவகைகள் பற்றிப் பேசப்பட்டுள்ளன. நாடகம் பற்றி அகத்தியம், நாட்டிய சாத்திரம் போன்றன விபரித்துள்ளன எனக் கூறுவர் அறிஞர் பெருமக்கள். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாகக் கொள்ளப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் குணநூல், கூத்தநூல், சயந்தநூல், மதிவாணர் நாடகத்தமிதமிழ், முறுவல் போன்ற நாடகநூல்கள் இருந்துள்ளன என்பதற்கு சிலபபதிகார்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நால்லார் எடுத்துரைக்கின்றார். தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும் தமிழரின் நாடகக் கலைகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

               தமிழ் இலக்கணம் பற்றிக்கூறும் திவாகர நிகண்டு நாடகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளப் பாலன.

               'நடமே நாடகம் கண்ணுள் நட்டம் பரதம் ஆடல் தாண்டவம் பரதம்

               ஆலுதல் தூங்கல் வாணி குரவை நிலையம் நிறுத்தம் கூத்தென் படுமே'  திவாகர நிகண்டு

கூத்த நூலின் முதல் இரண்டு பகுதிகளை ச.து.சு யோகியார் அவர்கள் தமிழ் நாடு சங்கீத நாடக சங்கம் மற்றும், மத்திய சங்கீத நாடக அக்கடமி உதவியுடன் வெளியீடு செய்துள்ளார். இப்பகுதியில் நாட்டிய நாடகம் பிறந்த வரலாற்றைப் பற்றி விபரிக்கின்றது. இறைவனது உடுக்கையில் இருந்து ஓசையும், ஒசையிலிருந்து கூத்தும், கூத்திலிருந்து நாட்டியமும், நாட்டியத்தில் இருந்து நாடகமும் தோன்றின எனப்படுகின்றது.

                              'மோனத்து இருந்த முன்னோன் கூத்தில் உடுக்கை பிறந்தது

ஓசையின் சுழலே ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

                              இசையில் பிறந்தது கூத்தினது அமைவே ஆட்டம் பிறந்தது

கூத்தினது அமைவே கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

                              நாட்டியம் பிறந்தது நாடக வகையே'  - கூத்தநூல்

யோக நிலையில் இருந்த இறைவன் மகேந்திர மலை உச்சியில் அந்திப்பொழுதில் ஆடிய கூத்தினால் ‘கூத்த பிரான்’  எனஅழைக்கப்படலானார். சிவனும் உமையும் ஆடிய ஆடலை அகத்திய மாமுனிவர் கண்டு அதனைத் தனது மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். இறைவன் ஆடிய கூத்தின் பொருளையும் அதன் இலக்கணத்தையும் விபரித்துள்ளார். அதனை பிற்காலத்தில் சாத்தனார் 'கூத்த நூல்' என இயற்றினார் என்பது வரலாறு. அதே போன்று ஈழத்து மட்டக்களப்பிற்கு வந்து தவம் நோற்ற சிகண்டி முனிவர் எழுதிய 'இசை நுணுக்கம்' என்னும் நூலில் சிவன் ஆடிய கூத்தில் அவனது கையிலிருந்த உடுக்கையில் இருந்து பிறந்ததே ஓசை, ஓசையின் சுழர்ச்சியினால் இசை பிறந்தது அந்த ஓசையின் இனிமையில் பிறந்ததே ஆட்டம் இந்த அட்டத்தில் இருந்து தோன்றியதே கூத்து என எடுத்துரைக்கின்றது கூத்த நூல். ஆதியும் அந்தமும் இல்லா நடராஜனின் ஆதிக்கூத்தே கூத்தின் தோற்றுவாய் எனக் குறிப்பிடுகின்றது.  

தொல்காப்பியரும்            

                              பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

                              கண்ணிய புறனே நானான் கென்ப

                                                                           (மெய்ப்பாட்டியல். . )

பண்ணை என்பது விளையாட்டு என தொல்காப்பியத்திற்கு உரைதந்த நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். அத்தோடு

                              பாடல் வழக்கினும் உலகியல் வழக்கினும்

                              பாடல் சான்ற புலனெறி வழக்கம்' – தொல். பொருள்

என்று தனக்கு முற்பட்டோரின் கூற்றைத் தொல்காப்பியர் ஆதாரமாக்குவதனை நோக்குமிடத்து கூத்து என்பது தமிழர்களிடையே நெடுங்காலத்திற்கு முன்னரே வழக்கிலிருந்தது என்பது பொருளாகும். பாடலும் ஆடலும் மனிதன் தோன்றிய காலந்தொட்டே நிலவி வந்துள்ளன. வாய்மொழியால் சொல்ல முடியாதவற்றை உடல் மொழியால் தெளிவாக உரைப்பது கூத்தின் பாற்பட்டது. செய்து காட்டல், நடித்துக்காட்டல் என்பன உடல்மொழியாக மனிதன் பிறந்தகாலந் தொட்டு இடம்பெற்று வந்திருத்தல் கூடும். என்னும் துணிவிற்கு ஆய்வாளர்கள் வந்தமைக்கு இன்றும் எம்மோடு வாழ்ந்து வரும் வாய்பேச முடியாதவர்களின் செய்கைகள்; மட்டுமன்றி ஒரு மொழியைத் தெரியாதவிடத்து தங்கள் உள்ளத்தை  செய்கையின் மூலம் தெளியவைத்து வெளிக்கொண்டு வருவதனைக் காண்கின்றோம். எனவே நடிப்பு என்பது மனித வாழ்வியலோடு பின்னிப்பிணைந்துள்ளது.   

தமிழகத்தில் காணப்பட்ட கூத்துக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தியுளளனர்.

1.சாந்திக் கூத்து                                            

2.மெய்க் கூத்து                                                

3.நாட்டுக்கூத்து                                               

4.குரவைக் கூத்து                                            

5.கரகம் என்னும் குடக் கூத்து                       

6.நோக்கு 'பார்வைக் கூத்து'                          

7.சாமியாட்டம் /வெறியாட்டு                         

8. சாக்கம்

9.அபிநயக் கூத்து

10.விநோதக் கூத்து

11.கலிநடனம் என்னும் கழாய்க் கூத்து

12.பாய்ந்தாடும் கரணம்

13.நகைச்சுவை கொண்ட வசைக் கூத்து

14.பொம்மலாட்டம் 

என்பனவற்றில் இன்று பெரும்பாலானவை அழிந்துபோயுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன என்றே கொள்ளலாம். கி.பி. 60 தொடக்கம் 80 வரை பாண்டி நாட்டை ஆண்ட மதிவாணனார் எழுதியதாகக் கருதப்படும் 'மதிவாணர் நாடகத்தமிழ்' என்பதில் 'பதினெண் கூலமும் உளவர்க்கு மிகுக' எனவரும் அடிகள் அந்த மறைந்த நூலில் இருந்ததாகக் கருதப்படுகின்றது.  

நடிப்பு, இசை என்பனபற்றி இளங்கோவடிகளும் மிக நயமாக அரங்கேற்று காதையிலே குறிப்பிடுகின்றார்.

                              'இருவைகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து

                              பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து

                              பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து – ஆங்கு

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்

கூடிய நெறியின் கொளுத்தும் காலை

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில்கையும்

கொண்டவகை அறிந்து கூத்து வரு காலை

கூடை செய்த ககை வாரத்துக் களைதலும்

பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்

ஆடல் செய்தகை பிண்டியில் களைதலும்

குரவையும் வரியும் விரவல செலுத்தி

ஆடற்கு அணைந்த ஆசான் - தன்னோடும்

                                             (சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 12-25

இருவகை என்பது அகக்கூத்து, புறக்கூத்து என்பனவாகும். அரசருக்காக அரண்மைனையிலே ஆடப்படுவது அகக்கூத்து. பொதுமக்களுக்காக பொதுவிடத்தில் ஆடப்படுவது புறக்கூத்தாகும். இளங்கோவடிகள் கூறிய இருவகைக் கூத்து வகைகள் பற்றி ஆராயமுற்பட்ட அடியாற்கு நல்லார் அவற்றை வசைக்கூத்து, புகழ்க்கூத்து என்றும், வேத்தியல், பொதுவியல் என்றும், வரிக்கூத்து, வரிச்சாந்திகக் கூத்து என்றும், சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என்றும், ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்றும் இயல்புக்கூத்து, தேசியக் கூத்து என்றும் என்றும் பல்வேறு பெயர்களைக் கொண்டு வழங்கின என்று விளக்கம் தந்துள்ளார். 

இங்கு குறிப்பிடப்படும் ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்ற இரண்டுமே வடமோடி, தென்மோடி என்ற வகையைச் சார்ந்தவையாக இருக்கலாமென்று கொள்ளக்கிடக்கின்றது' என அனுவுருத்திர நாடகம் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் அதன் ஆசிரியர் வி.சீ. கந்தையா அவர்கள் (1969) கருத்துத் தெரிவித்துள்ளார். தென்மோடி, வடமோடி பாங்குகளின் வேறுபாடுகளுக்கு அவற்றின் தாளக்கட்டுக்கள், பாடல்வகைகள், ஆடும்முறைகளில் உள்ள வேறுபாடுகளைக் காணலாம். வடமோடியில் 'முத்திரைப்பல்லவம்' என்ற பாட்டு வடிமோடிக்குரிய விசேடமான ஆடலுக்கானதாகக் கொள்ளப்படுகின்றது. இது தென்மோடிக் கூத்தில் இல்லை என்கின்றார் வி.சீ. கந்தையா அவர்கள். ஈழத்தில் ஆடப்படும் கூத்துவகைகளில் இவ்விரு வகைகளும் பின்பற்றப்படுகின்றன எனினும் முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கான தனித்துவமான பாங்கினைக் கொண்டுள்ளது  கோவலன் கூத்து. இதில் வரும் தருக்கங்கள், ஆடல்வகைகள் வடமோடி, தென்மோடி பாங்குகளில் இருந்து வேறுபட்டனவாக உள்ளன என கலாநிதி வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) அவர்கள் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கற்பாலது. 

சிலப்பதிகாரத்தில் கூத்தின் வகைகள் பதினொன்று என்பதும், அவற்றில் பயன்படும் நடன முறைகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பதினொரு வகை ஆடல்வகைகளையும் பின்வருமாறு வகுத்தள்ளனர்

மாயவன் ஆடுவது அல்லி

சிவன் ஆடுவது கொட்டி

ஆறுமுகன் ஆடுவது குடை

குன்றெடுத்தோன் ஆடுவது குடம்

முக்கண்ணன் ஆடும் பாண்டரங்கம்

நெடியொன் ஆடுவது மல்லாடல்

வேல்முருகன் ஆடுவது துடியாடல்

அயிராணி ஆடுவது கடையம்

காமன் ஆடுவது பெரு

துர்க்கை ஆடுவது மரக்கால்

திருமகள் ஆடுவது கரவைக்கூத்து என வகுத்துள்னர்

 

பிண்டி என்பது ஒற்றைக் கைக்குறி, பிணையல் என்பது இரண்டு கைகளாலும் குறிப்பது, எழிற்கை என்பது அழகாகக் காட்டுவது, தொழிற் கை என்பது தொழிலைக்காட்டுவது, குடை என்து ஒற்றைக்கைக்கும் குவித்த கைக்கும் உரிய குறியீடாகும்.

கூத்து வகைகளில் வரிக்கூத்துப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் மிக நயமாக இளங்கோவடிகள் பதிவிட்டுள்ளார். வுரிக்கூத்தில் எட்டுவகையான வரிக்கூத்துக்கள் உள்ளன என்பது தெளிவு: 1. கண்கூடுவரி, 2. காண்வரிக் கோலம், 3. உள்ளவரி ஆடல், 4. பன்புறவரி, 5. கிளர்வரிக் கோலம், 6. தேர்ச்சிவரி, 7. காட்சிவரி, 8. எடுத்துக்கோள் வரி என்பன. இவை சங்க காலக் காதல் காட்சிகளைப் படம்பிடித்துக்காட்டுவன. காதலனைத் தன்வயப்படுத்துவதாக அமைகின்றன இவ்வகைக் கூத்துக்கள். சங்க இலக்கியத்தில் காதல் வயப்பட்டுக் கருத்தொருமித்து மணம் கொள்ளும் முறையாக அமைவதோடு சுயம்வரம், ஊடல், காதலனின் காமரசத்தைத் தூண்டி அவனை அவதியுற வைத்தல், தான் விரும்பிய ஒருவனோடு தன்னைச் சேர்த்து வைக்கும்படி ஊரவரிடம் பசப்புதல் போன்ற நிலைகளைக் கொண்டவையாக வரிக்கூத்து வகைகள் அமைந்துள்ளன.  நாடகத்தின் சுவையினை தொல்காப்பயிர் பின்வரும் வரிகளிலே அங்கதச்சுவைகளை எடுத்துரைத்து அந்தச் சுவைகள் எட்டே எனக்குறிப்பிடகின்றார்.

               நகையே அழுகை இளிவரல் மருட்கை

               அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

               அப்பா லொட்டாம் மெய்ப்பா டென்பர்

ஆனால் இன்று நவரசம் என அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என ஒன்பது வகையாக வடமொழி வாயிலாகக் கொள்ளுகின்றனர். அமைதி என்பது இயல்பு அதனை சுவைப்பதும் நடிப்பதும் எப்படி என்னும் வினா தொல்காப்பியத்தை உயர வைக்கின்றது. ரசம் என்பது தமிழில் இரசாயனக் கலவையைக் குறித்த சொல். இரசவாதி என்பது ஒன்றை இன்னொன்றாக மாற்றும் தன்மை கொண்டது. ஆனால் இது சுவை என்னும் அழகிய தமிழ்ச் சொல்லை ஆக்கிரமித்துக்கொண்டது. அதனை அனைத்துத் தமிழ் நடன ஆசிரியர்களும் இறுகப் பற்றிக்கொண்டனர். அமைதிக்கும் நடிக்கக் கற்றுக்கொடுக்கின்றனர். ஒருவரிடம் உள்ள இயல்பான தோற்றத்தின் வெளிப்பாட்டை நடிப்பாக்கலாமா? என்பது எனது கேள்வி. மாற்றத்தைக் கண்டுதான் சுவைக்க முடியுமே ஒளிய இயல்பை நடிப்பில் காட்டி அதனைச் சுவைக்கவைக்க முடியுமா என்பதனை சிந்திக்கணேடும். 

நான் பிறந்து வளர்ந்த மண்ணைச் சார்ந்தவர் நாட்டுக்கூத்துக் கலைஞர் திரு. தம்பிப்பிள்ளை தம்பையா அவர்கள். காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, ஏழுபிள்ளை நல்ல தங்காள, கோவலன் கூத்;து என்னும் நாட்டுக்கூத்துக்கள் எமது பிரதேசத்தில் பிரபல்யமானவை. இலங்கையில் பிரதேச ரீதியாக கூத்துக்கள் வடமோடி, தென்மோடி, வசந்தன் கூத்து, மகுடிக்கூத்து, முல்லைமோடி போன்ற பாணிகளைக் பொதுவாகக் கொண்டவையாக அமைந்திருந்தபோதிலும் அவை பழக்கும் அண்ணாவியாருக்கும் பங்குகொள்ளும் கலைஞர்கள் வாழந்துவரும் இடம், சமயம் என்பனவற்றறிற்கேற்ப வேறுபாடுகளைக் கொண்டவiயாக அமைந்திருப்து கண்கூடு. பெண்களுக்கு கும்மி. கரகம். போன்று கோலாட்டம் அல்லது வசந்தன் கூத்து போன்றன ஆண்பிள்ளைகள் ஆடுவதாக அமைந்துள்ளது, குமுளுமுனையில் கந்தப்பிள்ளை சண்முகம் அவர்கள் இளம் பிள்ளைகளைப் பழக்கிக் கோலாட்டம் வருடாவருடம் ஆடுவது வழக்கம். 1956ம் ஆண்டு பழகி ஆடியது நினைவில் உள்ளது. 

கூத்துவகைகளை வட்டுக்கோட்டை மரபு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் கரையோரப் பிரதேசத்தில் கத்தோலிக்க மரபு, வசாப்பு மற்றும் மாதோட்ட மரபு என்பன வௌ;வேறு வகையினவாகக் காணப்படுகின்றன.

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் முல்லைப்பாங்கு அல்லது முல்லைமோடி வகைக் கூத்தாக  சிலம்பு, கண்ணகி அல்லது கோவலன் கூத்து முக்கியம் பெறுகின்றது. வற்றாப்பளை ஆலய முன்றலில் வைகாசி மாதத்தில் கோவலன் கூத்து தொடர்ந்து சில தினங்களாக இடம்பெறுவதனைக் காணலாம். பொதுவாக காத்தவராயன் கூத்து வன்னி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அரங்கேறுவதனைக் காணமுடிகின்றது.  

நான் பல்கலைக்கழகத்தில் இருந்தவேளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த  நண்பன் மெட்ராஸ் மெயில் கோவலன் கூத்தை அங்கு மேடையேற்றிப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களனின் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். முள்ளியவளை நண்பர்கள் வந்து ஆடினார்கள். எனக்கும் பெருமையாக இருந்தது. மாணவனாக இருக்கும்போது அவர் பேராதனை விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் அவரால் தனது சொந்தச்செலவில் அதனை மேடையேற்ற முடிந்தது. 

ஆங்கில ஆட்சிக்காலத்தில் மலையகத்தில் குடியேற்றப்பட்டவர்களிடையே அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன்கூத்து என்பன முக்கியம் பெறுகின்றன.

கூத்துவகைகள் பொதுவாக தென்னிந்தியாவில் இருந்துவந்தவையே. ஈழத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய கூத்துக்கலைஞர்கள் சிலர் தென்னிந்தியாவிற்குச் சென்று அங்கு கூத்துக்கலையைப் பயின்று வந்து இங்கு கூத்துக்களைப் பழக்கியும் ஆடியும் வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக எம்.வி. கிருஷ்ணாழ்வார் அவர்கள் இந்தியா சென்று பயின்று வந்ததோடு மட்டுமன்றி இந்தியாவில் இருந்து வந்து கூத்துக்களை மேடையேற்றும் நாடக சபாக்களில் சேர்ந்தும் நடித்தும் வந்துள்ளார் என்பதனை நான் நன்கு அறிவேன். நடிகவேள் எம்.வி. வைரமுத்து அவர்களைப் பயிற்றுவித்ததோடு மட்டுமன்றி அவரோடு இணைந்தும் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்விதமே அண்மையில் இயற்கை யெய்திய அரியகுட்டி அவர்கள் அமைதியும் அடக்கமும் நிறைந்தவர். ஆனால் அவரது அமைதி அடக்கம் எல்லாம் மேடையில் ஏறிக்கூத்தில் ஆடும்போது எங்கோ பறந்து சென்றுவிடுகின்றன. அவரது இனிமையான கம்பீரமான குரல்வளத்தை மேடையைத்தவிர எக்குமே கேட்க முடியாது. ஆவர் யாருடனாவதுஉரையாடிhனல் அது மிக மென்மையானதாகவே இருக்கும்.  

எனது தந்தையார் சத்தியவான் சாவித்திரி நாடகத்திலும், ஏழுபிள்ளை நல்லதங்காள் நாடகத்திலும் இளமைக்காலத்தில் நடித்துள்ளதாகக் கூறுவார். ஆனால் அவரோடு நடித்தவர்கள் சிலர் 1960களில் நடித்ததைக் கணமுடிந்தது. எமது ஊரைச் சேர்ந்தவர் கணபதிப்பிளை அவர்கள் அவர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல வேதாளம் ஆடவதிலும் வல்லமை கொண்டவராகக் காணப்பட்டதைப் பார்க்கமுடிந்தது. ஆவரை எல்லோரும் ‘வப்பர் கணபதிப்பிள்ளை’ என்றே அழைத்தனர். அதன் பொருள் அவர் புதுமை படைக்கும் ஒரு கூத்தாடியாகத் திகழ்ந்ததே காரணமாகும். தம்பையா என்னம் அரியகுட்டியவர்களுக்கு காத்தவராயன் கூத்து கைவந்த கலை. அவர் அந்தக் கூத்தில் இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் தோன்றி நடிக்கும் அற்றலையும் பெற்றிருந்தார். கிருஷ்ணராக அல்லது சின்னானாக அல்லது காத்தானாக அவர் வரும்போது அவரது தோற்றம் மிக அழகுவாய்ந்ததாக அமையும். நீல உடையில் அவர் மேடையில் தோன்றுவதைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவோரையும் காணமுடியும். அவ்வளவிற்கு அவரது பாத்திரப் பொருத்தம் அமைந்திருக்கும்.  

தென்ன மரவடியைச் சேர்ந்தவர் பேச்சுமுத்து அண்ணாவியார் வந்தால் ஊரே களைகட்டும், இரவிரவாக கூத்துப் பழகும் சத்தம் கேட்கும். உடுக்கு, தாள ஒலிகள் ஓங்கும். கொக்கிளாயைச் சேர்ந்தவர் முருகேசு அண்ணாவியார். ஆவர் காத்தவராயன் கூத்தைப் பழக்கி அரங்கில் ஏற்றுவார்.  

அரங்கம் கட்டுதல்:

'ஆடத்தெரியாதவள் அரங்கு கோணல் என்றாளாம்' என்பது முதுமொழியாகும். இங்கு அரங்கு மிக நேர்த்தியாக அமைக்கப்படவேண்டும் என்பது வெளிப்பாடு. அரங்கமைத்தலில் ஊரவர்கள் அனைவரும் இணைந்தே மேற்கொள்ளுவார்கள். வண்டில்கள் பலவற்றில் சேர்ந்து காட்டிற்குச் சென்று தேவையான மரங்களை வெட்டிக் கொண்டு வருவார்கள். தேவையான அளவுகளில் மேடை அமைக்கப்படும். அதற்குத் தேவையான திரைச்சீலைகள் மற்றும் உடைகள் வேறு இடங்களில் இருந்து வாடகைக் காரர்கள் கொண்டு வருவார்கள். திரைச் சீலை கட்டுவதற்கு ஏற்ப கூத்துமேடை அமைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் திரைச்சீலையைக் கட்டி ஏற்றி இறக்கமுடியாது. அதனால் ஆடற் களரிக்கு அளவுகள் தேவைப்படும் அதன் அடிப்படையிலேயே மேடைகள் அமைக்கப்படுகின்றன. ஆடற் களரி அல்லது கூத்துமேடையமைப்புப் பற்றி பண்டைய தமிழ் நூல்கள் விபரித்துள்ளன. கி.பி. 2ம் நூற்றாண்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் மிக நுட்பமாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையை கீழ்வரும் பாடல்வரிகள்:

                              'நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்

                              கோலளவு இருப்பத்து நல்விர லாக

                              எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

                              ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி

                              உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

                              வைத்த இடைநிலம் நாற்கோ லாக

                              ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

                              தோன்றிய அரங்கில்

                                                     - சிலப்பதிகாரம் 106-113 

 

                                                            என வரும் பாடலல் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை 99-106 யில் காணப்படுகின்றது, கூத்துக்களரி கட்ட அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின்மூலம் அரங்கம் அமைக்கப்படவேண்டும் என்னும் விதியைப் பண்டைத்தமிழர் பின்பற்றியுள்ளர். தங்களது அளவுகோலாக மூங்கில் மரத்தில் வெட்டப்பட்டு அவை சரியாக அளவீடு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதனைச் சிலபபதிகாரம் காட்டுகின்றது. 

இதனை விட அரங்கம் மேலும் அழகுபடுத்தப்பட்டமைக்கான குறிப்புக்களைப் பெருங்கதை என்னும் நூலில் காணமுடிகின்றது. திரைச்சீலைகள் பற்றிய குறிப்புக்களில் ஒருமுக எழினி, பெருமுக எழினி, கரந்து வரல் எழினி என்பன பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புக்கத்தில் கட்டப்படும் திரைகளும் மேலிருந்து கீழே வரும் திரைகளும் பக்கவாட்டில் சுருக்கக்கூடிய திரைகள் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய மேடை அமைப்பு திரையமைப்பினை நான் எனது இளமைக்காலத்தல் கண்டு பிரமித்துள்ளேன்.  

அரங்கினைப் பயன்படுத்தும் முறை எந்த நடிகர் எந்தப்பக்கதில் இருந்துவரவேண்டும் என்பது போன்றனவற்றில் மிகத் தெளிவான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.    

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் ஆண்டுதோறும் இடம்பெறும் கோவலன் கூத்து நீண்டகாலப் பயிற்சிக்குப்பின்னர் களரிக்கு வருகின்றது. முல்லைமோடியில் அமைந்து கோவலன் கூத்துக்கான மேடையமைப்பு சற்று வித்தியாசமானது. இங்கு திரைச்சீலைகளோ அன்றி வேறு எந்த அழகுபடுத்தும் நிலைமைகளே பின்பற்றப்படுவதில்லை. வட்டமாக அமைக்கப்பட்ட களரி வளைத்து கட்டப்பட்ட இடத்துக்குள்ளேயே இக்கூத்தின் ஆட்;டம் இடம்பெறுகின்றது. கூத்தர்கள் வெளியே இருந்து வரும் காட்சியையும் இந்தக்கூத்தில் காணமுடியும். அண்ணாவீயார் ஆட்டிவைக்கும் பாங்கு இங்கு இடமபெறும் மத்தளம் மிக முக்கிய இசைச்கருவியாகக் பயன்படுத்தப்படுகின்றது. காத்தவராயன் கூத்தில் பிற்பாட்டுக்காரர் மிக முக்கியமானவர்களாக இருப்பதோடு ஆர்மோனியம், உடுக்கு என்பன முக்கிய இசைக்கருவிகளாகக் காணப்படுகின்றன. பாடல்களை நடிகர்கள் பாடிய பின்னர் பிற்பாட்டுக்காரர் அல்லது பக்கப்பாட்டுக்காரர் எனப்படும் குழுவினரால் பாடல்கள் வரிக்கு வரி இசைச்சப்படுவது இக்கூத்துக்கலையின் இயல்காகக் காணப்படுகின்றது.  

திரைப்படத் துறையின் ஆக்;கிரமிப்பு நாட்டுக்கூத்துக் கலையை புறந்தள்ளியுள்ளமை கருத்திற்கொள்ளத் தக்கது. நவீன விஞ்ஞான உபகரணங்களொடு பயன்படுத்தப்படும் திரைப்படத்துறை கிராமப்புறக் கலைகளை ஆக்கிரமித்துக்கொண்டன என்பது உண்மை. எனினும் இன்றும் சிற்சில் இடங்களில் நாட்டுக்கலைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுவருகின்றன. எனினும் பண்டைக்காலத்தல் இரவு முழுமையும் இடம்பெறும் தன்மை இன்று இல்லை எனலாம். இதற்குப் பலகாரணகள் உள்ளன. முக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களின் ஓய்வு நேரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. ஆண்டுதோறும் இடம்பெற்ற கூத்துக்கள் இன்று இடம்பெறுவது அருகிவிட்டது. நடிகமணி வி.வி. வைரமுத்துவின் குழுவினர் எமது ஊரில் அரிச்சந்திரா நாட்டுக்கூத்தினை மேடையேற்றியமை நினைவில் வருகின்றது. கொட்டுக்கிணற்று ஆலயத்திற்கு முன்பாக உள்ள காணியில் அந்தக்கூத்து ஒரு முறை இடம் பெற்றமையை நான் பார்துள்ளேன. அது மட்டுமன்றி ஏழுபிள்ளை நல்ல தங்காள் போன்றவையையும் பார்த்துள்ளேன். ஆபாரமான அவர்களின் நடிப்பை ஜனரஞ்சகமாகக் காணும் நிலைமை இன்றைய திரைப்படங்களில் இல்லை என்றே சொல்லலாம்.  

நாட்டுக் கூத்துக்லையில் சன நெருக்கடி மிக்க நகரங்களில் மட்டுமன்றி மக்கள் செறிந்துவாளாத  குக்கிராமங்களிலும் கூத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இரு பிரிவுகளாகப் பார்க்கலாம்.

1.கிராமத்தவர்கள் சேர்ந்து தாமே நடித்து ஆடும் கூத்துக்கள்.

2.வெளியிடங்களில் இருந்து வந்து மேடையேற்றப்படும் கூத்துக்கள். 

காத்தவராயன் கூத்து, கோவலன் கூத்து என்பன முதலாவது வகையைச் சார்ந்தவவை. ஆரிச்சந்திரா, ஏழுபிள்ளை நல்லதங்காள், சத்தியவான் சாவித்திரி போன்றன இரண்டாவது வகையைச் சார்ந்தவை. எனினும் இந்தவகை நாடகங்களை சிற்சில காலங்களில் கிராமத்தவவ்கள் ஆண்ணாவியாரை அழைத்து தாமே பழகி மேடையேற்றுவதம் வழமையாக இருந்துவந்துள்ளது. 1960களுக்கு முன்னர் கிராமந்தோறும் இவ்வித கூத்துக்கள் இடம்பெற்று வந்துள்ளன. தமிழ்த் திரைப்படத்தின் தாக்கத்தால் தென்னிந்தியாவிலிருந்து வந்து நாடகமேடை யமைத்து செயற்பட்டவர்களின் வருகை தடைப்பட்டதற்கு முக்கியகாரணி திரைப்டத்துறையின் வளர்ச்சி என்றால் தவறாகாது. எம். ஆர். இராதா குழவினர் இலங்கைக்கு வந்து தங்கியிருந்து கூத்துக்களையும் நாடகங்களையும் மேடையேற்றியது அனைவரும் அறிந்ததே. எம்.ஆர். இராதா கண்டியில் தான் கண்டுகொண்ட நங்கையை மணம்புரிந்து தன்னோடு அழைத்துச் சென்றதும் அவருக்கு ஒரு புதல்வி பிறந்திருந்ததும் வெளிச்சம். அவரது புதல்வி திருமதி ராதிகா அவர்கள் பிரபல கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்ததோடு இன்றும் தனது நடிப்பாற்றலை காண்பித்து வருகின்றார்.  

நடிகமணி வைரமுத்து அவர்கள் தனதுகுழுவுடன் தமிழகம் சென்று அரிச்சந்திரா நாடகத்தை மேடையேற்றினார் என்றால் அண்மைக்காலம் வரை நாட்டுக்கூத்தின் பாரம்பரியம் தொடர்த்தான் செய்கின்றது. நான் பிறந்து வளர்ந்து வந்த குமுளமுனைக் கிராமத்தவர்கள் பங்களிப்புச் செய்துவந்துள்ளது என்பதனை துணிந்து கூறக்கூடியதாக இருப்பதற்கு நாட்டுக் கூத்துக்கலைக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் அண்மையில் கனடாவில் காலமான (2019) தம்பிப்பிள்ளை தம்பையா (அரியகுட்டி) போன்ற தன்னலம் கருதாத கலைஞர்களே காரணம் எனலாம். இவ்வித கலைஞர்களால் எமது பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடாது பாதுகாக்கப்பட்டுவந்துள்ளன. கிராமிகக் கலை தொடர்ந்தும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே இன்று நம்முன்னே எழுந்துள்ள வேணவா. ஈழத்தின் போராட்டக் காலத்தில தெருக்கூத்து மரபு முதன்மை பெற்று பல்வேறு நாடகங்களை தந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்து குழந்தை மாஸ்ரர் போன்றவர்களின் தெருக்கூத்துக்கள் மறக்கமுடியாதவை. தமிழர் மரபினை தொடர்ந்த ஒரு கூத்துவடிவமாக அது உயர்ந்து நின்றது. 

தமிழ் நாட்டில் தெருக்கூத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அவை பல்வேறு பாங்குகளைக் கொண்டவையாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துத் தெருக்கூத்துக்கள் இன்றும் இடம்பெறுவதனைக் காணலாம். சிலப்பதிகாரத்தில் மாதவி 11 வகையான நடனங்களை ஆடியதாக விபரங்கள் காணப்படுகின்றன.

1.கொடுகொட்டி, 2. பாணடுரங்கம், 3. அல்லிக்கூத்து, 4. மல்லாடல், 5.துடிக்கூத்து, 6.குடைக்கூத்து 7.குடக்கூத்து, 8.பேடிக்கூத்து, 9.மரக்கால்கூத்து, 10.பாவைக்கூத்து, 11. கடையக்கூத்து

இவ்வகைக் கூத்துக்களை ஈழத்து மலையக மக்களிடையே காணலாம். மட்டக்களப்பு இஸ்லாமியரிடையே  மல்லாடல் முறையிலான தெருக்கூத்து வடிவம் நிண்டகாலமாக பயின்று வந்துள்ளது. இஸ்லாமிய மதத்தினருக்கும் பிராமணருக்கும் இடையே இடம்பெற்ற வாதப்பிரவாதங்களாக மந்திர வித்தைகளைக் காட்டி பேய்களை ஏவிவிடுவதாக 'மகுடிக் கூத்து' அமைந்துள்ளது.  

ஈழத்தின் வடபால்  இடம்பெற்ற கூத்துக்கலை பற்றிப் பலர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் நாடகக் கலையில் கொடிகட்டிப்பறந்தவர். பாசையூர், கரையூர், மயிலிட்டி, காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற கரையோரப் பிரதேசங்களில் கிறிஸ்தவ மதம் பரப்புவதற்காக தமிழ்க்கூத்து பயன்படுத்தப்பட்டு வந்தது. அது தொடர்ந்து இடம்பெறுவது தமிழ்க் கூத்துக்கலையை அழியவிடாது பாதுகாக்கும் பாங்கில் நிலைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வயிரமுத்து வரலாற்றுக் கூத்துமரபினைப் பின்பற்றி மேற்கொண்ட கூத்துக்கலை அத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.  

யாழ் மாவட்டத்திற்கு வெளியே வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கூத்துக்கள் இடம்பெற்றுள்ளன. வற்றாப்பளை ஆலயத்தில் இன்றும் ஆடப்பட்டுவரும் கோவலன்கூத்து முல்லைமோடி என்னும் தனித்துவ வகையைச் சார்ந்தது. கண்ணகி காதை பல்வேறு வடிவங்களில் வடமோடி மற்றும் தென்மோடி வகைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமாயணம் இலங்கை வேந்தன் என்னும் பெயரில் கம்பராமாயணத்தில் இருந்து வேறுபட்டதாக இடம்பெறுகின்றது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இன்றும் இப்பாரம்பரியம் தொடர்கின்றது. கண்ணகி அம்மன் கோவில் உற்சவகாலத்தில் இவ்வித கூத்துக்கள் ஆடப்படுவது மரபாக உள்ளது.  

தென்னமரவடியில் வாழ்ந்து வந்தவர் பேச்சுமுத்து அண்ணாவியார். இலைமறை காயாக இருந்து ஆண்டுதோறும் கூத்துக்களை மேடையேற்றிவர் அவர். ஆனால் அவரைப்பற்றி அறிந்தவர்கள் அப்பிரதேச மக்களே ஆவர். குமுளமுனை, முள்ளியவளை, செம்மலை, கொக்கிளாய் போன்ற பிரதேசஙகளில் அவரால் அந்தந்த ஊரவர்களபை; பழக்கி மேடையேற்றும் கூத்துக்கள் இடம்பெற்றுள்ளன. காத்தவராயன் கூத்து உட்பட சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்துக்களையும் பழக்கி மேடையேற்றியுள்ளார்.  

அழிந்து வரும் கூத்துக்கலைக்கு உயிரரூட்டக்கூடிய கமுயற்சிகளைச் சமூகத்தவர்களும் அரசாங்ககும் இணைந்து முயற்றி செய்யவேண்டிய தேவை தவிர்க்கமுடியாதது,





                             

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்