திருக்குறளில் அளவு
முனைவர் அ.கோவிந்தராஜூ
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, அளவுக்கு
மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழிகள்இ தமிழர்கள் அளவு குறித்த
அறிவும் விழிப்புணர்வும் உடையவர்கள் என்பதற்குச் சான்றாக உள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் அளவு குறித்த
திருவள்ளுவரின் பார்வை எப்படி உள்ளது என்பதை ஆய்வது இக் கட்டுரையின்
நோக்கமாகும்.
களவினால் வரும் பொருள் தொடக்கத்தில் அளவின்றிப் பெருகுவதுபோல்
தோன்றினாலும் இறுதியில் உள்ளதும் போய்விடும் என்று கூறுகிறார்
திருவள்ளுவர்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும். 283
தம் வருவாயின் அளவுக்குத் தக்கவாறு சிக்கனமாகச் செலவு செய்யத்
தெரிந்தவர்கள் களவினால் வரும் ஆக்கத்தை விரும்பமாட்டார்கள் என்பதும்,
வருவாயின் அளவுக்குத் தக்கவாறு சிக்கனமாகச் செலவு செய்தல் சிலருக்கே
வாய்க்கப்பெற்ற ஆற்றல் என்பதும் வள்ளுவரின் கருத்தாகும்.
களவென்னும்
காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். 287
புலன்கள் வழியே பெறப்படும் இன்பத்தை அளவுடன் நுகரவல்லவன் நெஞ்சத்தில்
அறவுணர்வு ஓங்கி நிற்கும் என்பதை, 'அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல'
என்னும் உவமையின் மூலம் அறியலாம்.
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல
நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288
களவில் ஆர்வமுடையோர் அளவற்ற தீமைகளை மேலும் மேலும் செய்து தாமே
அழிந்துவிடுவர் என்பதை வள்ளுவர் உறுதிபடக் கூறுகிறார்.
அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர். 289
வலியறிதல் என்னும் அதிகாரத்தில் அளவு குறித்து விரிவாகப் பேசுகிறார்
வள்ளுவர். தன் வலிமையின் அளவு, மாற்றான் வலிமையின் அளவு ஆகியவற்றை
கணக்கிட்டுச் செயலாற்ற வேண்டும் என்பதைப் பல குறட்பாக்களில்
வலியுறுத்துகிறார்.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். 474
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். 475
வருகிற வருமானத்தின் அளவு குறைந்தாலும், செய்யும் செலவின் அளவைக்
கூட்டாமல் இருந்தால் ஒருவன் கடன் சுமை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்
என்பது குறள் கூறும் பொருளியல் கோட்பாடு.
ஆகாறு அளவிட்டி
தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. 478
தனக்கு உரிமையாக உள்ள செல்வத்தின் அளவை அறியாமல் ஆடம்பர மோகத்தில்
வாழ்பவனின் வாழ்க்கை இருப்பதுபோல் காட்டி நாளடைவில் எதுவும் இல்லாமல்
அழிந்து வறுமையில் வீழும்.
அளவறிந்து
வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். 479
பிறர்படும் துன்பம் கண்டு இரங்கும் தன்மையன கண்கள்; உதவும் தன்மையன
கைகள். அப்படி பிறர்க்கு உதவுவதிலும் ஓர் அளவு வேண்டும்.
கண்கள் காட்டும் இரக்கவுணர்வுக்கும் ஓர் அளவு வேண்டும் என்னும் குறட்பா
ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
உளபோல்
முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 574
ஒரு பாடப்பொருள் குறித்து மாணவர்கள் தாமே கற்றுத் தெளிய பல்வேறு
தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால், அவர்கள் கற்கும் அளவைவிட ஆசிரியர்
அதிகம் கற்றல் வேண்டும்; நாளும் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றால்தான்
வகுப்பில் மாணவர்களைக் கண்டு அஞ்சாமல் பாடம் நடத்தமுடியும் என்னும்
நுட்பமான செய்தியை ஒரு குறட்பாவில் பதிவு செய்கிறார்.
ஆற்றின்
அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. 725
உறவினரும் நண்பர்களும் நமக்கு எந்த அளவுக்கு ஓடி வந்து உதவி
செய்வார்கள் என்பது நமக்குக் கேடு வரும்போது அதாவது துன்பம் வரும்போது
தெரியும் என்பார் வள்ளுவர்.
கேட்டினும்
உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். 796
குறைமதியாளர் தாமாகவும் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்யமாட்டார்கள்.
வழிகாட்டினாலும் வகையறிந்து செய்யார். தம் உயிர் போகும் அளவும்
அப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.
ஏவவும்
செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். 848
ஒரு நோயாளியின் வாழ்நாள் அளவு அதாவது வயது, நோயினால் அவதியுற்ற
காலத்தின் அளவு, அந் நோயைக் குணப்படுத்த ஆகும் கால
அளவு ஆகியவற்றை மருத்துவர் கணக்கிட வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஒரு
குறளில் பதிவு செய்கிறார்.
உற்றான் அளவும்
பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். 949
பசியின் அளவு அறிந்து அதற்குத் தக்கவாறு அளவாக உண்ணும் அதாவது
குறையாமலும் மிகாமலும் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டால் இவ்வுடம்பை
வைத்துக்கொண்டு நெடுநாள் வாழலாம் என்பது நாம் திருக்குறளிலிருந்து
அறியத்தக்க அரிய செய்தியாகும்.
அற்றால்
அளவுஅறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943
மிகினும்
குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
941
தீயள வன்றித்
தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947
கல்லாமை என்னும் அதிகாரத்தில் அளவு என்னும் சொல்லுக்கு இணையாக மாத்திரை
என்னும் சொல் காணப்படுகிறது. தொல்காப்பியரும் நன்னூலாரும் ஓர் எழுத்தை
உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவினை மாத்திரை என்பர். எழுதப் படிக்கத்
தெரியாத ஒருவரை இந்தப் பூமியில் இருக்கின்றார் என்ற அளவில்தான்
ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறார் வள்ளுவர்.
உளரென்னும்
மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். 406
தூக்கு என்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்கு நிறைகோல் அல்லது தராசு என்று
பொருள். தூக்குதல் என்றால் அளத்தல் ஆகும். வரைவின் மகளிர் என்னும்
அதிகாரத்தில் மிகப் பொருத்தமான ஒரு சூழலில் வள்ளுவர் இச்சொல்லைப்
பயன்படுத்துகிறார். தன்னை அணுகும் ஆண்மகனிடம் உள்ள பணத்தின் அளவைப்
பொருத்தே பரத்தை இன்பம் நல்குவாள். ஓர் அறிவார்ந்த ஆண்மகன் என்ன செய்ய
வேண்டும்? பரத்தையின் இந்தத் தீய பண்பை அளந்து பார்த்து, ஆய்ந்து
பார்த்து அவளை அணைதலை, அணைத்தலைத் தவிர்க்க வேண்டும்.
பயன்தூக்கிப்
பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
912
செய்ந்நன்றியறிதல் என்னும் அதிகாரத்திலும் தூக்கி என்னும் சொல்லை
அளத்தல் என்னும் பொருளில் கையாள்கிறார்.
பயன்தூக்கார்
செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 103
துணை என்னும் சொல்லுக்கு அளவு என்றும் பொருள் உண்டு. இன்னும் எத்துணை
தூரம் நடக்க வேண்டும் அதாவது எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று
கேட்கிறோம் அல்லவா? இப் பொருளில் அமைந்த குறட்பாக்கள் சில பின்வருமாறு:
இனைத்துணைத்
தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். 87
துறந்தார்
பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22
யாதானும்
நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. 397
ஒருவர் நமக்குத் தினைவிதை அளவுக்குச் செய்த உதவியைக் கூட பனைவிதை
அளவுக்கு மதித்துப் போற்றுவதே சிறப்பு என்னும் பொருளில் அமைந்த
மணிக்குறளை நாம் மனத்தில் நிறுத்த வேண்டும்.
தினைத்துணை
நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார். 104
தினையளவும் பனையளவும் வள்ளுவருக்குப் பிடித்தமானவை போலும்! அதற்குச்
சான்றாகச் சில குறட்பாக்களைக் காணலாம்.
எனைத்துணையர்
ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல். 144
தினைத்துணையாம் குற்றம் வரினும்
பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 433
தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
பனைத்துணையும்
காமம் நிறைய வரின். 1282
வரை என்னும் சொல் அளவு என்னும் பொருளில் வரும் ஒரு குறளும் உண்டு. நாம்
ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவைப் பொருத்துச் சிறப்பு அமையாது.
அந்த உதவியைப் பெற்றவரின் பண்பின் அளவைப் பொருத்தே அந்த உதவிக்குச்
சிறப்புச் சேரும்.
உதவி
வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105
இறந்த என்னும் சொல்லை அளவு கடந்த என்னும் பொருளில் வள்ளுவர் மிக
நுட்பமாகப் பயன்படுத்துகிறார்; ஒருவனுக்கு அவன் கொள்ளும் அளவு கடந்த
சினம் அவனுக்கும் மற்றவர்க்கும் அதிக தீமையைத் தரும். அதுபோல அளவு
கடந்த மறதியும் தீமை தரும் என்பது வள்ளுவரின் கணிப்பு.
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531
அளவு கடந்த சினத்தை அவ்வப்போது வெளிக்காட்டுபவர் இறந்தவருக்குச் சமம்
என்று கூறும் குறளும் உண்டு.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
அளவு என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல் அளவு பற்றிப் பேசும் அதிசயக்
குறட்பாக்களும் உண்டு.
கணவன் மனைவி சண்டை அதாவது புலவி எனப்படும் ஊடல் எந்த அளவுக்கு இருக்க
வேண்டும்? சாம்பாரில் சுவைக்காகச் சேர்க்கப்படும் உப்பின் அளவுக்கு
இருத்தல் வேண்டும்.
உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் 1301
நம் வீட்டின் முன்புறம் முளைத்துள்ள முள்செடியை எந்த அளவுக்கு
வளரவிடலாம்? வள்ளுவரிடம் கேட்கலாம். அவர் சொல்கிறார்: 'அது இளைய
செடியாக இருக்கும்போதே பிடுங்கி எறிக. அது பெரிய அளவில் வளர்ந்தால்,
அப்போது அதை வெட்டி அகற்ற முயற்சி செய்தால், அது உன் கைகளைக் குத்திக்
கிழித்துவிடும்' அவர் இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்? நம்முடைய
பகைவர்களை முன்னதாக இனங்கண்டு ஒழிக்க வேண்டும் என்பது அவர் சொல்ல வந்த
செய்தி. பிறிது மொழிதலணி - புலவர் தான் உணர்த்த விரும்பும் செய்தியைப்
பிறிதொன்றை அதாவது மற்றொன்றைச் சொல்லி அதன் மூலமாக உணர்த்துவது என்னும்
நுட்பத்தைக் கொண்ட குறள் பின்வருமாறு:
இளைதாக
முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. 879
நாம் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை செய்வதாய்க் கருதுவோம். நமக்கு மேலே
உள்ள அதிகாரியிடத்தில் எந்த அளவுக்கு நெருங்கி அல்லது விலகி இருக்க
வேண்டும். தீமூட்டிக் குளிர்காயும்போது அகலாமலும் அணுகாமலும் ஒரு
வசதியான தூரத்தில் அமர்ந்திருப்போம் அல்லவா? மேல் அதிகாரியிடத்திலும்
இதே அளவைப் பராமரிக்க வேண்டும்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார். 691
அளவு குறித்த ஆய்வு இப்படி நீண்டு கொண்டே செல்கின்றது. ஆய்வின்
பிழிவாகப் பின்வருவனவற்றைச் சுட்டலாம்.
வள்ளுவர் காலத்தில் அளவையியல் பற்றிய அறிவு மக்களிடத்தில் மிகுந்து
இருந்தது. அது திருக்குறளில் பிரதிபலிக்கிறது.
சினம், ஆசை, ஊடல், உறக்கம், உணவு, கொடை, செலவு, நட்பு, பேச்சு ஆகியவை
அளவு கடவாமல் இருக்க வேண்டும்.
புகழ், கல்வி, அறிவு, முயற்சி, ஊக்கம், அன்பு, காதல், அறவழியில்
ஈட்டும் பொருள் ஆகியவற்றுக்கு அளவு எதுவும் இல்லை.
வாழ்க வள்ளுவம் வழியெனக் கொள்ளுவம்.
முனைவர் அ.கோவிந்தராஜூ
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|