இக்காலப் பெண் கவிஞர்களின் கவிதைப் போக்குகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றுவரை மனிதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற வசீகர சக்தி 'காதல்' என்று சொன்னால் மிகையாகாது. காதல் என்பது ஓர் உணர்வு. பருவம் எய்திய இளைஞனிடத்தும் இளம் பெண்ணிடத்தும் தோன்றுகின்ற அக உணர்வு. இரண்டு உள்ளங்கள் அன்புடன் ஒன்றும் போது தோன்றுவது. இக்காதல் உணர்வு மனிதனுக்கு மட்டுமின்றிப் பிற உயிரினங்களுக்கும் இருப்பது உற்று நோக்கத்தக்கது. ஏனைய உயிரினங்களுக்கும் காதலுணர்வு பொதுவானதாகும். காதல் உணர்வு தோன்றாத உயிரில்லை. உயிரினம் தோன்றிய காலம் தொட்டே காதல் வளர்ந்து வருகிறது.

இயற்கையால் படைக்கப்பட்ட மனித உயிர்களுக்குக் காதல் ஒரு அரிய வரப்பிரசாதமாகும். அரிய வரப்பிரசாதமாகக் காணப்படும். இக்காதல் மனித உடலில் எப்பாகத்தின் வழியாக உள்ளே நுழைந்தது என்று தெரியவில்லை. ஆண் பெண் இருவரிடத்தும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் இரு உயிர்களையும் துடிதுடிக்கச் செய்வது காதல் ஒன்று தான். காதல் வாழ்வின் உயிர்மூச்சு என்று நினைக்கச் செய்கிறது. மனித உடலில் அணுவளவு நுழைந்தக் காதல் அண்டமாக விரிந்து ஆட்டிப்படைக்கிறது. காதல் இல்லையென்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்றளவிற்கு கொண்டு செல்கிறது. காதல் வயப்பட்ட ஆடவரும் மகளிரும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். தங்களின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர் என்று எவரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். காதலுக்;காக எதையும் செய்யத் துணிவார்கள். தங்களது இன்னுயிரையும் போக்கிக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள். வாழ்வில் காதல் ஒன்றே பெரிதென எண்ணும் மனப்பக்குவம் உண்டாகும். அம்மனப்பக்குவமே அவர்கள் தங்களின் இன்னுயிரையும் போக்கத் தயங்குவதில்லை. தங்களுடைய வாழ்வில் காதலுக்குப் பிறகு தான் எதுவும் என்பார்கள். காதல் இல்லை என்றால் மரணம் என்பதை

'காதல், காதல், காதல், காதல்
போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல'

என்ற கவிதை வரிகளில் காணலாம். காதலுக்கு அத்தகைய மகத்துவம் வந்து விடுகிறது. காதலுக்கு அடிப்படையாக அமைபவர்கள் பெண்களாவார்கள். காதலுக்கு அடிப்படையாக அமையும் பெண்களைப் புறக்கணித்தால், சுற்றிக் கொண்டிருக்கும் பூமி இயங்காது எனலாம்.

காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் அமையும் பொதுவானக் கூறாகும். இருவரிடமும் ஒத்து அமையும் காதல் உண்மையானக் காதலாகும். இத்தகைய காதலே நமது சங்க இலக்கியங்களில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. சிற்சில பாடல்களில் ஒரு தலைக்காதலும் பேசப்பட்டுள்ளன. ஒருதலைக் காதலில் ஆடவர் ஈடுபட்டால் மடலேறும் வழக்கமும் இருந்தது என்பதை

'மாவென் மடலும் ஊர்ப் பூவெனக்
குழமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளிளே'


என்று குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. பெண்கள் பசலை நோயால் அவதியுற்று, தலைவனையே நினைத்திருக்கும் பாடல்கள் காணப்படுகின்றன. தலைவி தன்னுடைய காதலை எவரிடத்தும் கூறாமல் உள்ளத்திலேயே வைத்திருக்கும் செயலினையும் தான் தலைவன்மேல் கொண்ட காதல் எல்லாவற்றையும் விடப் பெரியது என்று கூறுவதை

'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆறலன் வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'


என்ற பாடல் மூலம் அறியலாம். இதன் மூலம் தலைவி தலைவன் மேல் கொண்ட காதல் எத்தகைய உறுதி வாய்ந்தது என்பதனை நன்கு அறிய முடிகிறது. இதே போன்று தலைவனும் தலைவியின் மேல் கொண்ட காதல் உறுதியானது என்பதையும் அறியலாம்.
காலம் செல்லச் செல்ல காதல் வயப்படும் ஆடவரிடத்தும் மகளிரிடத்தும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாயின. உண்மையான காதலுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியராலும் இக்காலக் காதலுக்கு இலக்கணம் வகுக்க இயலாமல் சற்று தடுமாற்றம் அடைவார்கள். பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொண்டு பின்னர் காதலனிடத்தில் என்னை மறந்துவிடு என்று கூறும் அவநிலை பிற்காலத்தில் ஏற்பட்டது. அதே போன்று தான் ஆணும் பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டு பின்னர் அவள் மறக்கக் கூறியவுடன், அவளை மறக்க முடியாமல் அவதிப்படும் நிலையும் உண்டாயிற்று. இக்காலச் சமுதாயத்தில் இது போன்ற காதல் ஏராளம்.

இதயத்தில் புகுந்து உடலைத் துன்புறுத்தும் இக்காதல் பூவைவிட மென்மையானதாகும். பூவிற்கு இலக்கணமாகக் கூறப்படும் பெண், காதலன் ஒருவனைக் கைப்பற்றி அவனின் அனைத்து நற்செயல்களுக்குத் துணை நின்று இல்லறத்தில் பின்பற்றப்படும் நீதிகளைத் தவறாமல் பின்பற்றுதல் பொறுப்பாக அமையும். இத்தகைய பொறுப்பினை உணர்ந்து செயல்படும் பெண்மையின் சிறப்பினை

'உயிரைக்காக்கும் உயிரினைச் சேர்ந்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகி விடும்
உயிரினும் இந்த பெண்மை இனிதடாழூ
ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே'


என்ற கவிதை வரிகளில் அறியலாம், பெண்ணினத்திற்கும் பெருமை சேர்க்கும் இக்காதல் மிகவும் சிறப்புடையது. ஆனால் பெண்ணினம் காதலை ஏற்றுக் கொண்டு காதலனிடம் என்னை மறந்து விடுக என்று கூறியவுடன் காதலன் அடையும் மனத்துயரை அளவிட முடியாது.

காதல் குறித்து உலகின் பல்வேறு அறிஞர்கள் தங்களது கருத்துக்களைக் கூறியுள்ளனர். காதல் வாழ்விற்கும் வளத்திற்கும் பெருந்துணையாக அமைந்து மனித இனத்தை மகிழ்வித்து இன்பக் கடலினுள் இழுத்துச் செல்லும் ஓர் ஈர்ப்பு விசை எனலாம். இந்தக் காதலை ரா.பி. சேதுப்பிள்ளை

'காதல் என்பது காதுக்கினிய சொல்,
கருத்துக்கினிய பொக்கிஷம்
காதல் உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு, காதல்
இல்லையேல் ஒன்றும் இல்லை'


என்று காதலைப் பற்றிக் கூறியுள்ளார். சங்கப் புலவர்கள் தமது ஒவ்வொரு பாடல்களிலும் காதலை உயிர் நாடியாக வைத்துப் பாடியிருக்கின்றனர். காதலை மனிதக்காதல், தெய்வக்காதல், இயற்கைக் காதல் என்று வகைப்படுத்திக் கூறலாம். மனிதக் காதல் இயல்பானது. தெய்வக்காதல் அரிதானது. இயற்கைக் காதல் மாறாதது என்றென்றும் நிலையானது ஆகும்.

காதல் கவிதை தோன்றக் காரணம்

மனிதனிடம் இயல்பாக முகிழ்கின்ற மலருள் காதல் மலரும் ஒன்று 'கவிஞனும் ஒரு சாதாரண மனிதன் தான் அவன் சமுதாயத்தில் தங்கியிருக்கின்றான் என்ற வகையிலே சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு அவன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவனுக்கென்றுள்ள தனிப்பட்ட சொந்த அனுபவங்களும் பிரச்சனைகளும் உண்டு. எனவே அவை உணர்வுகளாக கவிதைகளில் வெளிவருவது தவிர்க்க முடியாதது'9 என்னும் நிலைக்கேற்ப புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் காதலை மையப்படுத்திக் கவிதைகளை எழுதினர் என்று கருதலாம்.

'மனிதன் அமைதியை வெளியே அடைய முடியாமையின் உள்;ளே நாடி இருக்கிறான்'. இம் முயற்சியும் கூட காதல் கவிதை தோன்றக் காரணமெனலாம். இவ்வகையில் தோன்றிய காதல் கவிதைகளில் காதல் சிந்தனைகள் கவிஞர்க்கு கவிஞர் மாறுபட்டு அமையும் என்பதை ஆண்டாள் பிரியதர்ஷினி, தமிழச்சி, வெண்ணிலா ஆகியோர் கவிதைகள் மூலம் அறியலாம். ஒவ்வொரு மனிதனும் அன்பு என்னும் காதல் வலையில் ஒன்றிதான் வாழ்கின்றான். உயிரினங்களாகத் தோன்றிய அனைத்து உயிரிகளிடமும் தினம், தினம் காதல் வந்து போகின்றன.

'ஒப்பந்தப் பயணமாக
உதிர்ந்த இறகின்
முதுகில் நான்
......................................
குறிவைத்தன தோட்டாக்கள்
தலைமைப் பீடத்துக்கு
உயிர்ப்பிச்சை கேட்டு
உண்ணா விரதம் இருந்தன
முறித்துப் போட்ட
காதல் அம்புகள்'


என்று ஆண்டாள் பிரியதர்ஷினி காதலின் ஒரு நோக்கைப் பதிவு செய்துள்ளார்.
வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதைப் போலவே காதலர் சில நிமிடம் மகிழ்வோடும், சில நிமிடங்கள் கோபத்தோடும் அன்பைப் பரிமாறிக் கொள்கின்றார்கள்.
வெளிச்சமும் இருளும் சேரும் நேரத்தில் மகிழ்வோடும் உள்ளோம். அத்துடன் உன்னுடைய சிரிப்பு, கோபம், வருத்தம் இவற்றின் திறவுகோல்கள் என்னுடைய வேகம், உற்காசம், பயணம் ஆகியவைகளின் வழிகாட்டுதல்களும் என்னிடமும் உள்ளன. உனக்கு நானும் எனக்கு நீயும் என்னும் உண்மையான வாழ்வை மேற்கொள்கின்றார் என அ. வெண்ணிலா குறிப்பிடுகின்றார்.

'வெளிச்சமும் இருளும் சேரும்
அற்புத நேரத்தின்
மகிழ்வோடு
சேர்ந்துள்ளோம் நாம'


உண்மையான பண்பு, பாச பரிவர்த்தனையுடன் உள்ளங்களைப் புரிந்து கொண்டு வாழ்கின்றார்கள்.

பரிணாம வளர்ச்சி

பண்டைய காலம் முதல் இன்றுவரை காதல் என்பது ஒரு புனிதமான சொல்லாகவும் உன்னதமான வார்த்தையாகவும் உச்சரிக்கப்படுகின்றன. அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளன.

இன்றைய காதல் நாகரிக வளர்ச்சியடைய அவர்களின் காதல் வாழ்க்கையும் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. பெண்களைப் பல அவதாரமாகவும் ஆண்களை ஆண் என்றே குறிப்பிட்டுள்ளனர் ஆண்டாள் பிரியதர்ஷினி.

'அவளுக்குப், பல அவதாரம்
அவனுக்கு ஒன்றே , ஆண்
காதல் கவிதை , திசை மாறுகிறது
குற்றப் பத்திரிகையாக'


காதலில் கற்பனை
மனிதன் ஒன்று என்றாலும் அவனுக்குப் பல முகங்கள் உண்டு. பகலில் ஒரு முகம் இரவில் ஒரு முகம் என் சாமிக்கே தெரியாது என்றும் கூறுகின்றன. காதல் உண்மையானது, காதலர்கள் பொய்யானவர்களாக உள்ளனர். காதல் கற்பனையுடன் கலந்த ஒரு பகுதியாகக் குறிப்பிட்டுள்ளார் ஆண்டாள் பிரியதர்ஷினி.

'
காதல் நிஜம்
காதலர்கள் தான்
பொய்'


காதலனை மறந்து வேதனைப்படும் ஒரு பெண்ணின் நிலையானது. புடவையை எரிப்பதற்குப் பயன்படுத்தும் தீக்குச்சி போல்வன என்றாலும் அதனை வாங்கி கொடுத்தது நீ என்று உன் ஈர நினைவால் என்னை வருடியது என தன்னுடைய கவிதை வரிகளில் தமிழச்சி குறிப்பிடுகின்றார்.

'உன்னைத் தொலைத்த , துக்க நாளில்
உடுத்தியிருந்த, துக்கிரிப் புடவையினை
எரிப்பதற்காக எடுத்த , தீக்குச்சி நீ
அது நீ, வாங்கிக் கொடுத்தது
எனும் ஈர நினைவால்
நம நமத்து விட்டது'


உன் நினைவுகளை அங்கும் இங்குமாய் சேமித்து வைக்கிறேன். என் இதயத்தில் பிரிவின் கனம் தாங்காமல் குழந்தை விளையாடும் கற்பனையாக பொருட்களைச் சுற்றி வைத்துள்ளேன் என்று அ. வெண்ணிலா குறிப்பிடுகின்றார்.

'உன் நினைவுகளை
இங்கொன்றும் அங்கொன்றுமாகத்
தெளித்துக் கொள்கிறேன்
உன் பிரிவின்
கணம் தாக்காதிருக்க
குழந்தை
விளையாடுவதான பாவனையில்
தன்னைச் சுற்றி
பொருட்களைப்
பரத்திக் கொள்வதைப் போல்'


என்று காதலியின் நினைவாகக் குழந்தை விளையாடுவதைப் போல் பொருட்களைப் பரப்பி வைத்துக் கொண்டுள்ளார்.

நடை பாதையில் உன்னோடு பேச வேண்டும் என்று கூடுதலாய் தேநீர் அருந்தியது. விரைந்து வரும் வாகனங்களில் சட்டென்று உன்னுடைய வாகனம் தானா என்று பார்ப்பது. உன்னை சுமந்து வரும் வாகனத்தைப் பார்க்க விடியலில் கூட காத்துக் கிடக்கும் வினாடிகள் எனக்கு வரும் அநாமத்து காதல் கடிதங்களையும், என்னை கடந்துப்போகும் பெண்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் அந்தரங்க வினாடிகள் அத்தனையும் கற்பனையாய் போனது நண்பன் கணவனானபோது என்று அ. வெண்ணிலா குறிப்பிட்டுள்ளார்.

'நடைபாதைக் கடையில்
பேச்சுத் தொடர வேண்டி
................................
அத்தனையும் காணாமல் போயின
நண்பன்
கணவனான போது'


என்று காதலில் கற்பனை நயத்தையும் தெளிவுபடுத்துகிறார் கவிஞர்கள்.

கற்பனை ரசனை

தினம் தோறும் எழுதுகையில் காதலன் காதலியிடம் என்னைப் பற்றியும், என் அழகைப் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்பது முறையானாலும் 'உரிமையுடன் என்னைப் பற்றியே எழுத வேண்டும் என்று கெஞ்சுவதை காதலில் மூழ்குவது சுகமா, காதல் பற்றி எழுதுவது சுகமா என்று அ. வெண்ணிலா குறிப்பிடுகின்றார்.

'எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா?
மழை பற்றி எழுதுவது சுகமா?'


என்பதை கற்பனை ரசனையுடன் காதலை ஒப்பிடுகின்றார்



மௌனம்


காதல் மொழிகளில் மௌன மொழி என்பது இன்றியமையாத ஒன்றாகும். காதல் மொழியில் நிறைய வார்த்தைக்கும் சொல்லுக்கும் மௌனமொழியே பதிலாக அமைகின்றன.
'மௌனம் வலிக்கு நிவாரணி என்று ஆண்டாள் பிரியதர்ஷினி பின்வருமாறு குறிப்படுகின்றார்.

'மௌனம்
வலி நிவாரணி
பேசுகிறாள்
மௌனத்தை
யுகம் யுகமாக'
21

ஒருவரிடம் எடுத்து வந்த பொருளை திருப்பிக் கொடுப்பது தன்னுடைய பொருள் என்று தெரிந்து தான் வாங்கிக் கொள்ளுவதும் முறையாகும். இதனை தமிழச்சி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'கையோடு எடுத்து
வந்துவிட்ட உன்
கண்களைத் திருப்பித் தர
விரைகின்றேன்.
என் கண்களுடன் காத்திருக்கும்
உன் கைகளுக்குப் பயந்து
மௌனமாய் திரும்புகின்றேன்'


காதலியின் கண்களை எடுத்து வந்து விட்டு திருப்பித் தரலாம் என்று காத்துக் கொண்டு இருக்கையில் என் கண்களுடன் காத்திருக்கும் உன் கைகளைப் பார்த்து மௌனமாய் செல்கிறேன்.

ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் நிலையில் ஒருவர்க்கு ஒருவர் நினைத்தும் நினைவில் வாழ்வதும் இயல்புதான். இவை காதலின் மௌன மொழியாகும் என்பதை அ. வெண்ணிலா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'நீ இல்லாத இரவுகளில்
என்னையே நினைத்துக் கொண்டிருப்பாய்
என நினைத்து
தூங்கிப் போய்விட முடிகிறது.
இருக்கும் இரவுகளில்
மௌனங்களில்
நழுவிப் போகும் இடைவெளிகள்
தூங்க விடாமல் செய்கின்றன
இரவுகளை'


நீ இல்லாத நேரத்தில் என்னை நினைத்துக் கொண்டு இருப்பாய் என உறங்கி விடுகின்றேன். இருக்கும் நேரத்தில் மௌனங்களில் நழுவிப் போகும் இடைவெளிகள் தூங்கவிடாமல் செய்கின்றன.

தத்துவம்

மனித வாழ்க்கையே தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொருவரின் காதல் வாழ்க்கையும் தத்துவத்தை மையங்களாகக் கொண்டுள்ளன. 'உண்ணாவிரதம் என்பது தாத்தாவுக்கு மட்டும் இல்லை, தம்பதிக்கும் உண்டு போர்க்களத்தில் என்பதை ஆண்டாள் பிரியதர்ஷினி குறிப்பிடுகின்றார்.

'உண்ணாவிரதம்
தாத்தாவுக்கு மட்டுமா?
தம்பதிக்கும் உண்டு
போர்க்களத்தில்'


கல்யாணத்தில் முடிய வேண்டும் காதல், காதலை முடிக்க வேண்டுமா கல்யாணத்தில் என்பதை பின்வருமாறு கூறுகிறார்.

'கல்யாணத்தில்
முடிய வேண்டுமா காதல்
காதலை
முடியவேண்டுமா
கல்யாணத்தில்'


திருமணத்தில் முடிய காதல், காதலில் முடிய திருமணம் என்பன வாழ்க்கை தத்துவமாக அமைந்துள்ளன. தத்துவம் என்பது வாழ்க்கையின் உள்நோக்குக் கொண்டே அமைந்துள்ளது.

இயற்கையோடு ஒப்பிடல்

ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பினை தன்னுடைய கற்பனை நயத்தோடும் இயற்கையோடும் ஒப்பிட்டும் அன்பினை வெளிப்படுத்துகின்றன. தோட்டத்தைச் சுத்தம் செய்வது போல மனநிலையை தூய்மையாகக் காட்டி இருவரும் சேர்ந்து தென்னைக்குக் குழி வெட்டி வாழ்க்கையில் பொருள் சேர்த்து வியர்வையோ உழைத்து சேமித்து வைத்த பணத்தைத் தொட்டுப் பார்த்தால் நம்முடைய உழைப்பு ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒளிந்திருக்கும் என்பதை அ. வெண்ணிலா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'தோட்டத்தைச்
சுத்தம் செய்வதான
பாவனையில்
தென்னைக்குக் குழிவெட்டி
சருகுகளை அள்ளி வீசி
பூச்செடிகளைத் திருத்திவிட்டு
நீர் இறைத்து ஊற்றி
வியர்வையோடு
தோட்டம் பார்ப்போம்
நம் பேச்சுகள்
பூத்திருந்கும்
ஒவ்வொரு கிளையிலும்'


என்று இயற்கையின் மூலம் காதலர் உழைப்பை ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

ஒரு தலைக் காதல்

ஒரு தலைக் காதல் என்பது ஒருவர் விரும்பி மற்றவர் உணராத நிலையை தான் ஒரு தலைக் காதல் என்பார்கள்.
நொறுக்கப்படும் எண்ணங்கள் மெதுவாய் நகர்ந்து செல்லுகிறது இந்த இரவு நேரம் வலியுடனும், வன்மைக் கசிவுடனும் மொழி பெயர்க்க முடியாமை ஒரு பொழுதேனும் அவனை பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும் உன் நினைவை மட்டுமாவது என்பதை தமிழச்சி பின்வருமாறு சுட்டியுள்ளார்.

'ஒரு இரக்கப் பொழுதில்
எனக்காய் இரைக்கப்பட்ட தானியங்களை
விடியும் வரை
எப்படியேனும் பத்திரப்படுத்த வேண்டும்
விதை நெல்லாய் நான் ஒளித்து வைத்திருக்கும்
உன் நினைவை மட்டுமாயினும்'


ஒருவர் வைத்துள்ள ஒரு தலைக் காதல் அன்பை கவிஞர் விதை நெல் மூலம் வெளிக் காட்டியுள்ளார். இவை நினைவுடன் மட்டுமே முடியும் காதல் ஆகும்.

காதலில் நிறைவேறாத ஆசை

ஒருவருக்குள் ஒருவர் தேடிக்கொள்ளும் நிலையில் தான் காதல் ஏமாற்றம் ஏற்படுகிறது. இதையே காதலில் நிறைவேற ஆசை நிராசையாக மாறுகின்றன. எனக்கு சொந்தமான உன்னை உன்னில் தேடி, தேடி ஏமாறுகிறேன். உனக்கான என்னை உனக்கு உணர்த்த முடியவில்லை. உனக்காகவும், எனக்காகவும், யாருக்காகவும் இல்லாமல் இயங்கிக் கொண்டே உள்ளன அவரவர் உள்ளங்களில் என அ. வெண்ணிலா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'எனக்கான உன்னை
உன்னில் தேடித் தேடி
ஏமாறுகிறேன்
உனக்கான என்னை
உனக்கு உணர்த்த முடியவில்லை
..............................'


என்று காதல் சிந்தனையில் தொடங்கி அவர்களின் வளர்ச்சி, கதால் கற்பனை, ரசனை, ஒப்புமை, மௌனம், தத்துவம், வெட்கம், வேதனை, இயற்கையோடு ஒப்பிடல், காதல் நடப்பியல், ஒரு தலைக் காதல், காதலில் நிறைவேறாத ஆசை போன்றவற்றையும் இவ்வாய்வு மூலம் அறியப்பட்டன.


தொகுப்புரை:

 

  • ஆண்டாள் பிரியதர்ஷினி – முத்தங்கள் தீர்ந்து விட்டன, காதல் நாற்பது, மன்மத எற்திரம், தமிழச்சி– எஞ்ச்சோட்டு பெண், வனப்பேச்சி, அ. வெண்ணிலா – நீரில் அலையும் முகம், ஆதியில் சொற்கள் இருந்தன என்ற ஏழு கவிதை நூல் வாயிலாக காதல் சிந்தனைப் பற்றி விளக்கப்படுகிறது.

  • காதலுணர்வு உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது என்பதன் மூலம் காதலின் சிறப்பு கூறப்படுகிறது.

  • காதலுக்குக் கண்ணில்லை என்பதும் ஆசை, வெட்கம் அறியாது என்பதையும் சில கவிதைகளில் காண முடிகிறது.

  • பெண்ணினத்திற்குப் பெருமை சேர்ப்பதும் காதல் உலகின் உன்னதங்களை எடுத்துக் காட்டுவதுமான போக்கை மூன்று கவிஞர்களின் கவிதைகளிலும் காண முடிகின்றது.

  • ஆண் பெண்ணின் காதல் வளர்ச்சி, வெட்கம் ஒருதலைக் காதல் போன்றவை பற்றிய பதிவுகளும் உள்ளன.

  • உண்மையான காதல், காதல் என்னும் பெயரில் நடக்கும் போலித்தனங்கள் ஆகியவற்றைப் பற்றிய எச்சரிக்கையுணர்வைச் சில கவிதைகள் புலப்படுத்துகின்றன.

  • மௌனக் காதல், தத்துவக் காதல் போன்றவற்றைப்பற்றி விளக்கப்பட்டுள்ளன.

  • இயற்கைக் காதல், நடப்பியல் காதல், வேதனைக் காதல் போன்றவற்றை கவிஞர்கள் கவிதை வரிகளில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

  • ஒரு தலைக் காதல், நிறைவேறாத காதல் போன்றவற்றையும் கவிதை வரியில் அறிய முடிகின்றது.

  • காதலின் இயல்புகள், இன்றைய சமுதாயத்தில் காதலின் போக்கு, காதலின் வகைகள் ஆகியவற்றைக் குறித்து மூன்று கவிஞர்களும் ஆழமாகச் சிந்தித்துள்ளனர்.



முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நேரு நகர், கோயம்புத்தூர்-641 014.
பேச:9842495241.
                          


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்