சா.கந்தசாமியும் நானும்
பேராசிரியர் இராம.குருநாதன்
1973
ஆம் ஆண்டு முதல் கந்தசாமி எனக்குப் பழக்கமானார். பச்சையப்பன் கல்லூரி
அப்போதெல்லாம் காலை
8
மணிமுதல்
2
மணிவரைதான். மதியத்திற்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்கு
நான் சென்றுவிடுவது வழக்கம். நான், அப்போது எம்.லிட் பட்டத்திற்காக
ஆய்வு செய்துகொண்டிருந்த நேரம். எங்கள் முதல் சந்திப்பும் அங்கேதான்.
அப்போது காவ்யா சண்முகசுந்தரமும் படிக்கவருவார். அவரும் பச்சையப்பன்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர். நாங்கள் மூவரும் இலக்கியம்
பற்றிக் கொஞ்சநேரமாவது பேசாமல் இருந்தில்லை. தொடர்ந்து மாதக்கணக்கில்
சந்தித்துக்கொண்டிருந்தோம்.
சாயாவனத்தைத் தொடர்ந்து தக்கையின் மீது நான்கு கண்கள் வெளிவந்த நேரம்.
அதனைக் கல்லூரி நூலகத்திற்கு வாங்குவதற்காக எம் கல்லூரி வந்தார்.
அதன்பிறகு கசடதபற இதழின் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவரது
சிறுகதைகளைப் பற்றி விவாதிப்போம். பிறகு நீண்ட நாள் கழித்துத்தான்
எங்கள் சந்திப்பு. ஆண்டுக்கணக்கில் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனது.
நான் ஆதம்பாக்கத்தில் குடியிருந்தபோது என் இல்லத்திற்கு நண்பர்கள்
சிலருடன் வந்திருக்கிறார். அதன்பிறகு நீண்டநாள் தொடர்பில் இல்லை. அவரது
இல்லம் டர்ன்ஸ் புல் சாலையில் இருந்த து. அங்கு ஐந்தாறு முறை சென்று
உரையாடிருக்கிறேன். அவர் குணம் ஒரு போராட்டக்குணம் என்பதை அறிவேன்.
இருப்பினும் அது தார்மீக க் கோபமாகும். அவருக்கே உரிய பாணியில் சற்று
உரத்துத்தான் குரல் கொடுப்பார்.
என் முதல் நாவல் முயற்சியை அவரிடம் கொடுத்தேன். ஊமைக்காலங்கள் என்ற
தலைப்பில் அமைந்த அந்த நாவல் நடை கட்டுரை நடையாக இருக்கிறது. சிற்சில
இடங்களில் மாற்றவேண்டும் என்றார். அவர் சொன்ன கருத்தின் அடிப்படையில்
திருத்திய பின் அதனை நாவலாக்கினேன். அவரது இல்லத்தில் சில
இலக்கியக்கூட்டங்கள் நடைபெறும்.அதில் பங்கேற்றுச் சிறுகதை விமர்சனம்
செய்திருக்கிறேன். அதன் பிறகு ஓய்.எம்.சி. ஏவில் அவரது சிறுகதைகள்
குறித்து விரிவாகப் பேசியிருக்கிறேன்.அவரது கதைசொல்லும் பாணி
வித்தியாசமானது. கதையைக் கதையிலிருந்து வெளியேற்றும்படியான பார்வை
கொண்டது.
வெளிநாட்டுத் தொலைக்காட்சியில் என்னைப் பங்கேற்கச்செய்திருக்கிறார்.
தொல்காப்பியம் குறித்தும், சங்க இலக்கியம் குறித்தும் தமிழிலும்,
ஆங்கிலத்திலுமாகப் பேச ச்சொன்னார். எங்கள் சந்திப்பு அதன்பின்னர் நீண்ட
நாள் கழித்து எங்காவது இலக்கியக்கூட்டத்தில் இருவரும்
சந்தித்துக்கொள்வோம். சாகித்திய அகாதெமியில் நான் பொதுக்குழு
உறுப்பினரான பின்இ அவரை இருமுறை பேச அழைத்திருக்கிறேன். எளிமையான
ஆங்கிலத்தில் உரையாற்றிய சூழலும் அவருக்கு நேர்ந்திருக்கிறது.
சாகித்திய அகாதெமியின் உறுப்பினராக அவர் ஆனபோது அவரது தலைமையின் கீழ்
நூல் விமர்சனம் செய்திருக்கிறேன். அவரது பேச்சு மற்றவர்களிடமிருந்து
வேறுபட்டிருக்கும். பேச்சில் மட்டுமல்லாமல் அவரது கட்டுரையிலும்
அப்படியே!
பழந்தமிழிலக்கியத்திலும் அவருக்கு ஈடுபாடு மிக்கிருந்தது. எதையும்
புதுகோணத்தில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் எப்போதும்
இருந்திருக்கிறது.
சில மாதங்களுக்குமுன்னர் பூம்புகாருக்கு நண்பர்களோடு சென்றேன்.
பூம்புகார் போகும் வழியில்தான் சாயாவனம் இருக்கிறது. பழங்காலத்திய
கோயில் ஒன்று அங்கு உண்டு. அந்தக் கோயிலுக்குச் சென்ற போது கந்தசாமியை
நினைத்துக்கொண்டேன். நண்பர்களிடம் சொன்னேன். இந்தச் சாயாவனத்திற்கு
எழுத்தால் உயிர்கொடுத்தவர் என் நண்பர் கந்தசாமி என்று சொன்னேன்.
அந்தச் சாயாவனம் அழியாது. என்றும் நினைவில் இருக்கும். இனி பூம்புகார்
செல்லும்போதெல்லாம் அவர்நினைவுக்கு வருவார். ஊர்ப்பெயரால் அழியாத இடம்
தந்துவிட்டு அவர் அமர ரானார்.
பூம்புகாரின் கடற்கரையில் அவர் இன்னும் உலவிக்கொண்டிருக்கிறார்.
இறந்தார் என்று யார் சொன்னது. அவரது புகழைத்தான் அங்குள்ள கடல்
அலைகள் ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கும்.

பேராசிரியர் இராம.குருநாதன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|