அவள் முடிவு....!

திருமதி. தர்சினி அகிலேஸ்வரன்

தீபாவின் கைபிடி தளர்ந்து கத்தி 'டங்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது. அவளது உடல் சேர்ந்தது. கண்கள் இருண்டுகொண்டு வந்தன. நெஞ்சின் படபடப்பு மெல்ல மெல்ல அடங்கியது. அவள் உடல் மெல்லச் சரிந்தது. ஒரு பூமாலை விழுந்துகிடப்பது போல அவள் பூட்டிய கதவை ஒட்டியபடி கிடந்தாள்.

நாவரண்டு தாகம் எடுப்பது போல உணர்ந்தாள். அவளால் பேச முடியவில்லை. தொண்டைக்குள் யாரோ பந்தை இறுக்கியது போல இருந்தது. கண்களைத் திறக்க முயற்சி செய்தாள். அதுவும் முடியவில்லை. மாறாக அவை ஒருபக்கமாய் சொருகிக்கொண்டன. ஏதேதோ கனவுகள், கற்பனைகள். காற்றிலே பறப்பது போல இருந்தது தீபாவிற்கு.

 'வேண்டாம் இந்த நரக வாழ்க்கை. இதுக்கு மேலயும் என்னால பொறுக்க ஏலாது' என்று நினைத்தவள் எடுத்த முடிவுதான் இது.

அன்று வழமைபோல் நேரம் தாழ்த்தி வீட்டுக்கு வந்த கார்த்திக்குடன் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. "உந்தப் பழக்கங்கள விட்டிருங்கப்பா. எங்களுக்கு ரெண்டு பிள்ளையல் இருக்குதுகள். அதுகளுக்காகவாவது திருந்தி நடவுங்கோ. உதெல்லாம் இப்ப உங்களுக்கு தேவைதானா" தீபா எடுத்துச் சொன்னாள். சுவரை வெறித்துப் பார்த்தபடி நின்றான் கார்த்திக்.

"காசு கட்டச் சொல்லி பில்லுகள் எல்லாம் வந்து விழுகுது. அப்பிடி என்ன உங்களுக்கு இவ்வளவு செலவு. இதுகளுக்கெல்லாம் உழைச்சுக் கொட்ட என்னால ஏலாது. நானும் உழைச்சு உழைச்சு களைச்சுப் பொயிட்டன். நீங்க இப்ப வேலைக்கும் ஒழுங்கா போறதில்லை. பத்தாததிற்கு குடி, கூத்தி என்று நீங்க ஆடிற ஆட்டம்...."

அவள் சொல்லிமுடிக்கவில்லை.

"என்னடி சொன்னாய்"

தீபாவின் கன்னத்தில் மாறி மாறி அடிகள் விழுந்தன.

"நானும் பாக்கிறன் வரவர வாய் கொழுத்துக்கொண்டு போகுது. அளவுக்கு மிஞ்சினா நான் என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது. எப்ப பார்த்தாலும் சண்டை. சீச்சீ.... அழுமூஞ்சி. உன்னோட எவன் குடும்பம் நடத்துவான்............." மீண்டும் இரண்டு அடி. உதை. தொடர்ந்து ஏதோ காது கொடுத்துக் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகள். திட்டித்தீர்த்துக் கொண்டே கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறினான். தேம்பித் தேம்பி அழுதாள் தீபா. ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. பிள்ளைகள் அறையில் நல்ல நித்திரை. அம்மாவும் தங்கை வீட்டிற்குப் புறப்பட்டிருந்தாள்.

'ஐயோ எனக்கு இப்படி ஒவ்வொருநாளும் கண்ணீர் சிந்த ஏலாது'. பெருமூச்செறிந்தாள் தீபா.

அவள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். கார்த்திக் கேட்கவில்லை. மாறாக குடித்துவிட்டு அவளை நன்றாக உதைப்பான். பிள்ளைகளுக்குத் தெரிந்தால் அவர்கள் எதிர்காலம் பாழாகிவிடுமே. அவள் யாருக்கும் தெரியாமல் இருளில் அழுதாள். சத்தம் போட்டால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துவிடுவார்களே. அவள் வெளியே மூச்சுவிடுவதில்லை. எல்லாவற்றையும் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டாள். வெளியே தெரிந்தால் மானம் கப்பல் ஏறிவிடும். அம்மாவைப் பார்க்க தங்கை வீட்டுக்குப் போனாலும் அங்கும் அவள் இதைப்பற்றி மூச்சுவிடுவதில்லை. அவர்களைக் கவலைப்படுத்துவானேன்.

தீபா தினமும் காலை 4 மணிக்கே எழும்பிவிடுவாள். குளித்து, சாமிக்கு விளக்கேற்றி, அரக்கப்பரக்க சமைப்பாள். பிள்ளைகளுக்கு காலை உணவு, இவர்கள் வேலைக்கு கொண்டுசெல்ல மதிய உணவு என்று சமைப்பதற்குள் நன்றாக விடிந்துவிடும். வினி, மிதுன் இருவரையும் பாடசாலைக்குத் தயார்படுத்தி அவளும் வேலைக்குத் தயாராக வேண்டும். இடையிடையே கார்த்திக் குரல் கொடுக்கும்போது அவனுக்கு முன்னால் போய் நிற்க வேண்டும். வேலைத்தளத்திற்குப் போய்ச்சேரும்போது எப்படியும் வேலை ஆரம்பிக்க ஒன்று, இரண்டு நிமிடங்களே இருக்கும். இப்படி கால்களில் சக்கரங்களைப் பூட்டிக்கொண்டு நாள் முழுக்க ஒரு இயந்திரமாக வலம்வந்தாள்.

சொந்த வீடு, இரண்டு கார், அன்புக் குழந்தைகள் என்று நிறைவாக இருந்தாலும் கணவனின் நடத்தை?

முன்பெல்லாம் கார்த்திக் இப்படி இல்லை. அன்புக் கணவனாக, பொறுப்புள்ள அப்பாவாகத்தான் இருந்தான். ஆனால் இப்போது இப்படி தலைகீழாக மாறிவிட்டான். தினந்தினம் வாய்த்தர்க்கம்..., கண்ணீர்.... நெஞ்சு நிறைந்த வேதனையை யாருக்கும் தெரியாமல் மூடி வைத்ததால் இதயமே வெடித்துவிடும் போல் கனத்தது. இத்தனைக்கும் பத்து வருடக் காதல்த் திருமணம். இவ்வளவு சீக்கிரம் கசந்துபோகும் என்று அவள் நினைக்கவில்லை.

'நித்தமும் அழுதுகொண்டு தனிமையில் புழுங்கிச் சாகிறதைவிட நான் ஒரேயடியாக செத்துப்பொயிட்டா ஒரு பிரச்சனையும் இல்ல. பிள்ளயல அம்மா பார்த்துக்கொள்ளுவா. நான் செத்தாத்தான் என்ற அருமை மனுஷனுக்கு விளங்கும். ஒரு நொடியில் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.'

ஆவேசம் கொண்டவள்போல எழுந்தாள் தீபா. முன்கதவை இழுத்து மூடினாள். கடைசியாக ஒருமுறை அறைக்குள் சென்று குழந்தைகளை எட்டிப் பார்த்தாள். அவர்களை உள்ளே வைத்து கதவைப் பூட்டினாள். சமையலறையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பழம் வெட்டவென்று வாங்கிய புதிய கத்தி அவள் கண்களில்பட்டது. எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் வந்து கதவைச் சாத்தினாள்.

தீபாவுக்கு நெஞ்சு படபடத்தது. எல்லாம் கனவு போல இருந்தது.

இப்போது அவளுக்கு ஒரு துன்பமும் இல்லை. காற்றிலே மிதப்பது போல உணர்ந்தாள். இதயம் இலேசாக இருந்தது. அவள் கண்களை மூடி மூடித் திறந்தாள். அவளால் முடியவில்லை. ஏதேதோ காட்சிகள் கண் முன்னே விரிந்தன.

அவளது வீட்டைச் சுற்றிக் காவல்துறையினர் சூழ்ந்து நின்றனர்.

"பெட்ட செத்து இன்டைக்கு மூன்டு நாளாச்சு. இன்னும் 'பொடி' அந்த இடத்திலயே கிடக்குது" முகம் தெரியாத யாரோ முணுமுணுத்தார்கள்.

கார்த்திக்கை ஒரு மேலதிகாரி தனியே வைத்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அவள் காற்றைப் போல அவ்விடத்தை நெருங்கினாள். கார்த்திக்கின் கோலம் அவளை ஒரு நிமிடம் வாட்டியது. அவன் நன்றாகக் குடித்திருந்தான்.

"நானில்லாதது பகல்லயும் குடிக்கத் தொடங்கீற்றார்" பெருமூச்சொன்றை விட்டபடி அவர்கள் சம்பாஷனைக்கு காது கொடுத்தாள் தீபா.

தீபா ஏன் செத்தாள் என்று தனக்குத் தெரியாதாம். அவன் அடித்துச் சொன்னான். முகத்திலும் குரலிலும் துயரம் தோய்ந்திருந்தது. உண்மையிலேயே அவனுக்குத் தெரியாதா சிந்தித்தாள் தீபா. அம்மாவும் தங்கையும் கூட நடந்த உண்மை தெரியாமல் கவலையும் குழப்பமுமாய் துக்கம் விசாரிப்பவர்களுக்கும், வம்பளப்பவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியாமல் தவித்தார்கள்.

"வீடு வசதியென்டு வந்திட்டா இந்தப் பொம்பிளயல் எங்க வீட்டு ஆம்பிளயல மதிக்குதுகள்?. இவன் நல்ல பொடியன்." அயல்வீட்டுப் பஞ்சாட்சரம் தன் பங்குக்கு ஏதோ சொன்னார்.

"அவள் வேலைக்கு போற இடத்திலயும் ஏதோ பிரச்சனையாம். நேரகாலத்துக்கு வீட்டுக்கு வாரதில்லையாம். என்ன பிரச்சனையோ ஆருக்குத் தெரியும்". அவளுக்கே தெரியாத புது விஷயம் ஒன்றைப் பற்றி பேசிக்கொண்டார்கள். தலையில் அடித்துக்கொண்டாள் தீபா. அப்படிப் பேசியவளின் கூந்தலைப் பற்றி சுவரில் மோதவேண்டும் போல ஆத்திரமாக இருந்தது தீபாவுக்கு. "இல்லை. இதெல்லாம் பொய்" உரக்கக் கூவினாள் தீபா. அவள் பேசுவது யாருக்குமே கேட்கவில்லை.

அம்மாவும் தங்கையும் விவரம் ஒன்றும் தெரியாமல் கண்ணீர் சிந்தியபடி நின்றனர். தாய்க்கு திடீரென நடந்துவிட்ட அசம்பாவிதம் கண்டு அதிர்ச்சியில் குழந்தைகள் கண்ணீர் சிந்தியபடி நின்றனர். அவர்கள் யாருடனும் சேர்வதற்கு அஞ்சினர். அப்பாவை சந்தேகத்துடன் பார்த்து விலகிக்கொண்டனர். தீபாவின் அம்மாவையும், தங்கையையும் கூட அச்சத்துடன் நோக்கினர். யாரைக் கண்டாலும் அவர்களுக்கு பயமாக இருந்தது. அழுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. யாரோ வெள்ளைக்கார பெண்ணொருத்தி அவர்களை அரவணைத்து ஆறுதல்படுத்தினாள். அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடினாள்.

தீபா துடித்துப் போனாள். ஆதரவற்று நிற்கும் தன் பிள்ளைகளை அருகே அழைத்தாள். அது அவர்கள் காதில் விழவில்லை. அவர்கள் அந்த வெள்ளைக்காரப் பெண்ணுடன் ஒட்டிக்கொண்டார்கள்.
இப்பொழுது அந்தப்பெண் அம்மாவுடனும் தங்கையுடனும் ஏதோ பேசினாள். அம்மா ஏதோ மறுப்பாக தலையசைத்தாள். ஆனால் அந்தப் பெண் அதற்கு செவிசாய்க்கவில்லை. வினியையும், மிதுனையும் அவள் அழைத்துக்கொண்டு சென்றாள். "ஐயோ என்ன நடக்கிறது இங்கே. என் குழந்தைகள் என்னை விட்டுப் போகிறார்களே." தீபா தடுத்துப் பார்த்தாள். முடியவில்லை. கணவனைத் தேடினாள். கார்த்திக்கை இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். கார்த்திக் அவர்களிடம் எவ்வளவோ மன்றாடினான். அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்தாள். அவள் பேசுவது யார் காதிலும் விழவில்லை. குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்படத் தயாரானது.

தீபா ஓடிச் சென்றாள். மிதுனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். "மிதுன் அவர்களுடன் போகாதீர்கள். வினி அவர்களுடன் போகாதீர்கள்". அவள் கதறுவது யார் காதிலும் விழவில்லை. வாகனம் புறப்பட்டது. "ஐயோ மிதுன்......... வினி........" "மிதுன்.......... வினி........." திடுக்குற்று கண்விழித்தாள் தீபா. அவள் இதயம் படபடவென்று வேகமாக அடித்தது. நாவரண்டு தாகம் எடுப்பது போல உணர்ந்தாள். அவளால் பேச முடியவில்லை. தொண்டைக்குள் யாரோ பந்தை இறுக்கியது போல இருந்தது. கண்களை சிரமப்பட்டுத் திறந்தாள். ஒரு பூமாலை விழுந்து கிடப்பது போல பூட்டிய கதவை ஒட்டியபடி கிடந்தாள் தீபா. "ஐயோ, பிழை செய்துவிட்டேனோ." கதறியபடி வயிற்றில் கையை வைத்தாள். இரத்தமோ, காயமோ எதுவும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். கத்தி அவள் கைபிடி நழுவி கீழே விழுந்துகிடந்தது.

ஆவேசம் வந்தவள் போல குனிந்து கத்தியை எடுத்தாள். கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள். அறையினுள் வினியும், மிதுனும் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். தீபா நிம்மதியாக மூச்சு விட்டாள். அறையை விட்டு அமைதியாக வெளியேறினாள். கார்த்திக்கின் அறையில் அவன் குடிபோதையில் புலம்பும் சத்தம் கேட்டது.

மெதுவாக வந்து விறாந்தையில் கிடந்த சோபாவில் அமர்ந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது. அன்று காலை முதல் எதுவும் சாப்பிடாதது அப்போதுதான் நினைவு வந்தது. பசிக்களை, போதாதற்கு கார்த்திக்கின் அடி, உதை. தீபா மிகவும் களைத்திருந்தாள். அதனால் தான் அந்த திடீர் மயக்கமும் ஏற்பட்டிருக்க வேண்டும். நேரம், நள்ளிரவைக் கடந்துவிட்டதைக் காட்டியது.

யோசிக்க வேண்டும். அவள் நிதானமாக யோசிக்க வேண்டும். அவள் எதிர்காலம், குழந்தைகள் எதிர்காலம் பற்றி ஒரு சரியான முடிவெடுக்க வேண்டும். அவசரப்பட்டுவிடக் கூடாது. முதலில் ஏதாவது சாப்பிட்டால்தான் அவளால் ஏதாவது உருப்படியாக சிந்திக்கமுடியும் போலத் தோன்றியது. தீபா எழுந்து சாப்பாட்டு மேசையை நோக்கி நடந்தாள்.


poetakil@hotmail.com