தாய்மடி தேடி.....

கார்த்திகாயினி சுபேஸ்

இச்சிறுகதை அண்மையில் ''ஞானம்'' சஞ்சிகை நடாத்திய அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்த - 2009  சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை)






ஆ... அம்மா வந்திட்டா!

இதோ.... அம்மாவோட அப்பா, அக்கா, தம்பி எல்லாரும் வந்திட்டினம்.

எத்தினை நாள் இவையளைக் காணாமல் இந்த உடம்பு முழுக்க காயத்தோட நான் பட்ட வேதினை எல்லாம்... அவையளக் கண்டவுடனைக்கு காற்றாய் கடந்து போயிட்டுது.

பாசத்தோட கிட்ட வந்த அம்மாவைக் கண்டவுடன் .... 'அம்மா' எண்டு கூப்பிட்டன்.

அம்மா கையை நீட்டியபடி கண்ணீரோடு ஓடிவந்து என்னைக் கட்டி அணைக்கிறா.

அப்பா, அக்கா, தம்பி எல்லாரும் என்னைச் சுத்திக் கட்டிலில் இருக்கினம்.

அம்மாவின்ர அணைப்பில எனக்கு அழுகை அழுகையாக வருகிறது. இத்தனை நாளும் அவையளப் பிரிஞ்ச ஏக்கம் என்னைப் பேசவிடாமல் தொண்டையை அடைக்கிறது.

'அம்மா... இந்தளவு நாளும் என்னை தனிய விட்டிட்டு நீங்கள் எல்லாரும் எங்க போனனீங்கள் அம்மா....'

அம்மா ஒண்டும் பேசாமல் என்னைத் தன்ர நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு அழுகிறா. அந்த அணைப்பு எனக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது.

இதுக்காகத்தானே என்ர உடம்பில உள்ள காயங்களின் வலியோடு காத்திருந்தேன்.

இந்தக் காயங்களின்ர வலியை விட என்ர அம்மா, அப்பா, அக்கா, தம்பி எல்லாரையும் காணேலை எண்ட வலிதானே எனக்கு நிறைய இருந்திச்சு. இப்ப எல்லாரையும் கண்ட உடன என்ர உடம்பில இருந்த எல்லா வலியும் போயிட்டுது.

அம்மா என்ர தலையைத் தடவி விடுவது எனக்கு ஆறுதலாக இருந்தது.

அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன்.

என்ர பார்வையில எதைக் கண்டாவோ... அருவியாய் ஓடும் கண்ணீரோடு என்ர நெத்தியில இதமா ஒரு முத்தம் தந்தா.

அப்போது அம்மாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளியொன்று என் கண்ணுக்குள் விழுந்ததும் என் இரண்டு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டு சிறுது நேரம் இருந்தேன்.

என் கால்மாட்டில் இருந்த அப்பாவைப் பார்த்தேன்.

முழங்காலோடு மருந்து கட்டிய என்ர வலது காலை தன்ர மடியில வைத்து மெதுவாகத் தடவியபடி அழுதுகொண்டிருந்தார்.

'அப்பா' எண்டு கூப்பிட்டேன்.

அவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தபடி அழுதுகொண்டிருந்தார்.

அவரழுத கண்ணீர் என்ர முழங்காலில் கட்டப்பட்ட பன்டேஜில் பட்டுத் தெறித்தது.
திரும்பிப் பார்த்தேன்.

அக்காவும் மணிக்கட்டோடு போன என் கையைத் தடவியபடி அழுதுகொண்டிருந்தா.
தமபி பெருவிரலை வாயில் வைத்து சூப்பியபடி என்னையே இமைவெட்டாது பார்த்துக்கொண்டிருந்தான்.

'ஏன் எல்லாரும் என்னோட கதைக்காமல் அழுதுகொண்டிருக்கிறியள். என்னோட கதையுங்கோவன்.'

நான் குளறி அழுகின்றேன்.

குண்டுச் சத்தங்கள் பக்கத்தில் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

திடீரென எங்கேயோ இருந்து வந்த குண்டு ஒண்டு பெரிய சத்தத்தோட வெடிக்கிறது.

நாங்கள் இருந்த இடமெல்லாம் ஒரே புகைமண்டலம்.

நான் என்ர அப்பா, அம்மா, அக்கா, தம்பியைத் தேடினன். அந்தப் புகை மண்டலத்தோட அவையளும் மெல்ல மெல்ல மறைஞ்சு போய்க்கொண்டு இருக்கினம்.

நான் அவையள 'நில்லுங்கோ நில்லுங்கோ' எண்டு கத்திக் கத்திக் கூப்பிடுறன். அவையள் போயே விட்டினம்.

'அம்மா... அம்மா...' எண்டு கத்தியபடி நானும் அவையளோட போகவேணும் எண்டு எழும்புறன்.... ஆனால் கட்டில விட்டு எழும்ப முடியேல்ல... என்ர உடம்பெல்லாம் என்னவோ செய்யிது. மூச்சு அடைக்குமாப் போல கிடக்கிறது.

திடீரென யாரோ என்னை உலுக்குமாப் போல இருக்க கண்களைத் திறந்து பார்க்கிறன்.

அங்கே 'நேஸ் அம்மா' நிண்டுகொண்டிருந்தார்.

சுற்றும் முற்றும் பார்க்கிறேன். அந்த ஆஸ்பத்திரி வழமைபோல இயங்கிக்கொண்டிருந்தது.

'அம்மா அம்மா' எண்டு என்ர வாய் முணுமுணுத்தபடி இருக்கிறது.

நான் கண்டது கனவு எண்டு விளங்கின பிறகு எனக்கு ஏமாற்றத்தில் அழுகையே வந்துவிட்டது.

என்ர நிலமை அந்த நேஸம்மாவுக்கு விளங்கிவிட்டது போல...

'தம்பி... என்னப்பன் செய்யுது... கனவு கண்டனிங்களோ. அப்பன் பயப்பட வேண்டாம்... அம்மாவை வருவினம் என்ன? பிள்ளைக்கு மாக் கரைச்சுத் தரவே குடிக்க...'

எண்டு என்ர தலையத் தடிவியபடி அன்போட கேட்ட நேஸ் அம்மாவைப் பார்க்க எனக்கு அம்மா ஞாபகம்தான் வந்தது.

தொண்டை வறண்டதுபோல இருக்க மெல்ல தலையசைத்தேன்.

அவவும் மாவைக் கரைச்சு எனக்கு மெல்ல மெல்லப் பருக்கிவிட்டா.

'தம்பிக்கு காருண்யன்தானே பேர்...'

'ம்ம்...'

'எத்தினையாம் வகுப்புப் படிக்கிறியள்...?'

'நான் இந்த வரிசம் ஆறாம் வகுப்புப் படிக்க வேணும். ஆனா சண்டையால பள்ளிக்கூடம் போகேலை... உங்களுக்கொண்டு தெரியுமே... நான் ஸ்கொலஸிப் எல்லே பாஸ் பண்ணினனான். பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போக சப்பாத்து, பாக் எல்லாம் புத்தம் புதுசா வாங்கி வைச்சுக் கொண்டிருந்தனான். அதுக்குள்ள...'

'சரி... சரி... இனிக் காயம் மாற பள்ளிக்கூடம் போகலாம் தானே... நான் பிள்ளைக்கு அம்மா மாதிரி. என்ன வேணுமெண்டாலும் என்னட்ட கேளுங்கோ... என்ன...?'

'ம்'

'இந்தாங்கோ இது கந்தசஷ;டி கவசப் புத்தகம். முருகனை நினைச்சுக்கொண்டு இதைப் படிச்சீங்கள் எண்டால் உங்களுக்கு ஒரு பயமும் இருக்காது என்ன?'

எண்டு சொன்னபடி அதை என்னட்டத் தந்திட்டு மெல்லமா தலையையும் தடவிப் போட்டுப் போய்விட்டா!

நான் இந்த வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்ததில் இருந்து நேஸ்மாரும் டொக்டர்மாரும் என்னை மட்டுமில்ல எல்லாரையும் தான் அடிக்கடி வந்து பாத்து கதைச்சுப் போட்டுப் போவினம். என்னோட கன காயக்காரர் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தவை. அதிலையும் என்னப் போல சின்னாக்கள் தான் கனக்க...

எங்களைப் பாக்கிறதுக்கு எந்தச் சொந்தக்காரர்களையும் உள்ளுக்க விடாததால் நேஸ்மார்தான் எங்கட எல்லா வேலையையும் பாக்கிறவை. கக்காக்கு, ஒண்டுக்குப் போனாலும், சத்தி எடுத்தாலும் அவையள்தான் கழுவித் துடைச்சு விடுவினம்.

இப்ப என்னோட பேசின நேசுக்கு என்னில நல்ல விருப்பம். அவவில என்ர அம்மாவின்ர முகச்சாடை இருக்கிறதால எனக்கும் அவவில நல்ல விருப்பம். நான் அவவை 'நேசம்மா' எண்டுதான் கூப்பிடுறனான்.

என்ர கையில அவ தந்திட்டுப் போன புத்தகத்தைப் பார்த்தன். 'ஆபத்து வேளையில் கைகொடுக்கும் கவசம்' என முருகன் படத்தோட அச்சிடப்பட்டிருந்தது.

''படிப்போர்க்குத் துன்பம் போம்...'' என்று தொடங்கி 'சரணம் சரணம் சண்முகா சரணம்' என்ற இறுதிவரை எனக்கு மனப்பாடம் ஆகி இருந்தது அவவுக்குத் தெரியாது தானே.'

மாங்குளத்தில இருந்து கிளிநொச்சி அங்க இருந்து புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு இடமா விமானக் குண்டு வீச்சுக்கிளாலேயும் பல்குழல், செல் வீச்சுக்குள்ளாலேயும் உயிரைப் பிடிச்சுக் கொண்டு ஓடிப் போகேக்கையும் நாள் கணக்காய் பதுங்கு குழிக்குள்ள இருக்கேக்கையும் இந்தக் கவசத்தைத்தானே வாயோயாமல் சொல்லிக்கொண்டிருந்தனாங்கள் எண்டது இவையளுக்கு எப்பிடித் தெரியும்?

இப்பிடி நாள் முழுக்க கவசத்தைச் சொல்லியும் என்ன பயன். முருகன் கூட எல்லாரையும் கைவிட்டிட்டாரே!

அண்டைக்கும் அப்பிடித்தானே!

செல்லடி தொடங்கியதும் பதுங்கு குழிக்குள்ள ஓடுவம் எண்டு வெளிக்கிட மேல 'சுப்பசொனிக்' பெரிய இரைச்சலோட பறந்து வந்து குண்டு போட வீட்டுக்குள்ள இருக்க முடியாமலும் பதுங்கு குழிக்குள்ள போக முடியாமலும் அந்தரிச்சுக்கொண்டு,

'காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க

எண்டு கந்தசஷ;டி கவசத்தைச் சொல்லிக்கொண்டிருக்க அம்மா என்னையும் தம்பியையும் நிலத்தில படுக்க வைத்து எங்களை அணைத்தபடி எங்களுக்கு மேல அம்மாவும் படுத்துக்கொண்டா. அப்பாவும் அக்காவ அணைச்சபடி குப்புறப்படுத்தார்.

பெரிய சத்தத்தோட பக்கத்தில விழுந்து வெடித்த குண்டால் உயிரே போனதுபோல இருந்தது. அதுக்குப் பிறகு என்ன நடந்ததெண்டு எனக்குத் தெரியேல்ல.

கண்ண முழிச்சுப் பாக்கேக்க நிலத்தில விரிக்கப்பட்ட உரைப்பையில மரத்துக்குக் கீழ கிடந்தன்.

மரத்தின்ர கிளை ஒண்டில உயர்த்திக் கட்டப்பட்ட குளுக்கோஸ் என்ர இடக்கையில ஏறிக்கொண்டிருந்தது.

இப்போதைக்கு இதுதான் எங்கட ஆஸ்பத்திரி எண்டதை அறிஞ்சு கொண்டன்.

வலது கை மணிக்கட்டோட இல்லை. வலது கால் முழங்காலோட இல்லை எண்டதை அறிஞ்சபிறகு இதுக்கு நான் செத்திருக்கலாம் எண்டுதான் நினைச்சன்.

அதைவிட தோள் மூட்டோட ஒரு பெரிய காயம். உடம்பெல்லாம் சரியான வலியாக இருந்தது. மருந்து கட்டேக்க செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியதாய் கிடக்கு.

நான் மட்டுமில்ல என்னோட நூற்றுக்கணக்கான பேர் கால் கை இல்லாமலும் பெரிய பெரிய காயங்களோடயும் இருக்கினம். என்னவிட சின்னச் சின்னக் குழந்தையள், வயசு போனவை, பொம்பிளையள், ஆம்பிளையள் எண்டு அந்த இடமே காயக்காறரால நிறைஞ்சு வழிஞ்சுது.

சிலர் செத்துப்போனவையின்ர உடம்பை வைச்சு அழுதுகொண்டிருந்திச்சினம். டாக்குத்தர், நேஸ்மார் ஓடி, ஓடி காயக்காறரை கவனிச்சுக் கொண்டிருந்திச்சினம்.

நான் இந்த மரத்தடி ஆஸ்பத்திரிக்கு வந்ததில இருந்து என்னை ஒருத்தருமே வந்து பாக்கேல. அம்மாவையளுக்கு என்ன நடந்துதோ. எங்க இருக்கினமோ தெரியேல்ல. ஆளுக்காள் ஒவ்வொரு இடமா இடம்பெயர்ந்து போனதில பக்கத்தில சொந்தக்காரரும் இல்லை. ஆரும் தெரிஞ்சவையக் கூடக் காணேல்லை.

எனக்கு அப்பா அம்மாவையப் பாக்கோணும் போல ஆசையா இருக்கு..

அண்டைக்கு திடீரெண்டு ஆரோ வந்தினம். என்னையும் இன்னும் காயக்காரரையும் வாகனத்தில ஏத்திக்கொண்டு வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திச்சினம். அம்மா, அப்பா, சகோதரங்கள் எல்லாரையும் விட்டிட்டு நான் மட்டும் அநாதையா இஞ்ச இருக்கிறன்.

கையில இருந்த கந்தசஷ;டி புத்தகம் கைதவறிக் கட்டிலுக்குக் கீழ விழுந்திட்டுது... அத அப்பிடியே விட்டிட்டன். எனக்கிப்ப கந்தசஷ;டி கவசமும் வேண்டாம் கடவுளும் வேண்டாம். அம்மாதான் வேணும்.

தோள் மூட்டுக் காயத்தால முள்ளந்தண்டு, முதுகெல்லாம் ஒரே வலி.

கால் கையில இருக்கிற காயத்தால கால் கையெல்லாம் வலிக்குது...

எனக்கு அம்மாவின்ர மடியில படுத்திருக்க வேணுமாப் போல இருக்கு. அம்மா இந்தக் காயங்கள தன்ர கையால தடவி விட்டாலே காணும் எல்லா வலியும் போய்விடும்.

இப்ப எல்லாரும் எங்க இருக்கினமோ எப்பிடி இருக்கினமோ தெரியாது? ஏன் என்னை ஒருத்தரும் வந்து பாக்கேல்லை...?

நித்திரை கொள்ளேக்க எல்லாம் எல்லாரும் கனவில வருவினம். கனவு கலையேக்க எனக்கு கவலையாத்தான் வரும்...

ஆஸ்பத்திரியில இடைக்கிட ரி.வி. போட்டு விடுவினம். எனக்கு ரி.வி பாக்கிற மனநிலையே இல்லை. இறுக்க கண்ணை மூடிக்கொண்டு நித்திரை கொள்ளப் பாப்பன். அப்பத்தானே கனவு வரும். கனவில அம்மா என்னைத் தன்ர மடியில வைச்சு தலையைக் கோதி விடுவா.

வீட்ட அம்மாவோட படுக்கிறதுக்கு நாங்கள் மூண்டுபேரும் சண்டை பிடிப்போம். அம்மாக்குப் பக்கத்தில அவவுக்கு மேல கால்போட்டுக் கொண்டு படுத்தால்தான் எனக்கு நித்திரையே வரும்.

சுவரில் இருந்த மணிக்கூட்டைப் பார்த்தன். நேரம் ஏழு மணியைத் தாண்டிவிட்டது. சிங்கள நிகழ்ச்சி ஒண்டு ரி.வி.யில போய்க்கொண்டிருந்தது. சிறுவர்கள் விதவிதமாய் தங்களச் சோடிச்சுக்கொண்டு அந்த நடனப்போட்டி நிகழ்ச்சியில ஆடிக் கொண்டிருந்திச்சினம். அவையள் கதைக்கிற மொழி எனக்கு ஒண்டும் விளங்கேல.

எனக்கு பாட்டு, நடனம் எண்டால் நல்ல விருப்பம் எண்டதால அந்த நிகழ்ச்சியப் பாத்தன். அவர்கள் சந்தோஷமாக ஆடிப்பாடி கைதட்டி மகிழ்ந்திருக்கினம். எல்லாரும் எங்கட வயசுப் பிள்ளையள்தானே! எங்களுக்கு மட்டுமேன் இந்தக் கஸ்டம்.

பள்ளிக்கூடத்தில கலைவிழா எண்டால் கட்டாயம் என்ர நடனமும் இருக்கும். விளையாட்டுப் போட்டியில எத்தின 'கப்' எடுத்தனான் தெரியுமே! தமிழ்த்தினப் போட்டியிலேயும் எத்தின பரிசு பெற்றனான். எங்கட கந்தசுவாமி கோயிலில அம்மா வைச்ச நேர்த்திக்காக ஒவ்வொரு திருவிழாவிலேயும் காவடி எடுக்கிறனான். என்ர காவடியாட்டம் 'சுப்பரா' இருக்கெண்டு எல்லாரும் சொல்லுறவை.

அடுத்தமுறை திருவிழாவுக்கு நான் செடில் குத்தி ஆடவேணும் எண்டு அம்மாவை ஆக்கினைப்படுத்தி ஓம்பட வைச்சன். பங்குனியில திருவிழா நடக்கிறது. நடக்கிற சண்டேக்க திருவிழாத்தான் நடக்குமோ? நடந்தாலும் என்னாலதான் பழையபடி ஆடமுடியுமோ?

நடக்கவே ஆற்றையன் உதவி தேவைப்படேக்க... ம்... எல்லாம் கனவிலதான் முடியும்.

என்னைப் பாக்க ஆராவது வருவினம் எண்டு வாசலைப் பாத்துப் பாத்து ஏமாந்தததுதான் மிச்சம். என்ர கைகால் புண் கொஞ்சம் கொஞ்சம் ஆறிவரேக்க எனக்கு ஒரு பொல்லொண்டத் தந்து மெல்ல மெல்ல நடக்கப் பழக்கிச்சினம். ஒற்றக் காலால தெத்தித் தெத்தி நடக்கப் பழகினன்.

இடது கையாலயும் மெல்ல மெல்ல எழுதப் பழகினன்.

திடீரெண்டு ஒருநாள் கொஞ்சப் பேர் வந்து என்னையும் என்னோட காயப்பட்டு சுகமடைஞ்சவையையும் வாகனத்தில ஏத்திக்கெர்ணடு போக வெளிக்கிட்டிச்சினம்.

என்னைப் பார்த்த நேசம்மா என்னைக் கொஞ்சி என்ர தலையைத் தடவி விட்டா...

'எங்கள வீட்டுக்கே கூட்டிக்கொண்டு போகப் போகினம்... அய்யா... நான் என்ர அம்மா, அப்பா, அக்கா, தம்பி எல்லாரையும் பாக்கப் போறன். நான் போய் என்ர அம்மாட்ட கட்டாயம் உங்களப் பற்றிச் சொல்லுவன் நேசம்மா... ஒரு நாளைக்கு நீங்களும் எங்கட வீட்ட வாங்கோ என்ன?'

அவ எதுவும் கதைக்காமல் என்னையே பாத்துக் கொண்டிருந்தா. கண்ணால கண்ணீர் வடிஞ்சு கொண்டிருந்திச்சு.

பாவம் என்ர பிரிவை அவவால தாங்க முடியேல்லப் போல...

அவவோட கனநேரம் கதைக்கவிடாமல் என்னைத் தூக்கிக்கொண்டு போய் வாகனத்தில ஏத்திப் போட்டினம்.

நானும் அம்மாவையப் பாக்கப் போற சந்தோஷத்தில இருந்தன்.

கொஞ்ச நேரத்திலேயே வாகனம் நிண்டுட்டுது...

யன்னலால எட்டிப் பாத்தன். வரிசையா தகரத்தால அடிச்ச வீடுகள் வெய்யிலில பளபளத்துக் கொண்டிருந்திச்சு... அதச் சுத்தி கம்பி வேலி அடிச்சிருந்தது... உள்ளுக்க ஒரே சனம்.

எனக்கு ஒரே ஏமாற்றமா போச்சு... அழுகையும் வந்திட்டு.

எல்லாரையும் இறக்கி வாசலில நிண்டவேற்றை பேருகள் விபரங்கள் குடுத்தபிறகு உள்ளுக்க கொண்டு போய் விட்டினம். என்னையும் இன்னும் நாலு பேரையும் ஒரு தகரக் கொட்டகைக்குள்ள கொண்டுபோய் விட்டினம்.

எனக்கு காயம்பட்ட கால் நிலத்தில் வைச்சபடி இருக்க கஸ்ரமா இருந்திச்சு... வசதியாய் இருக்க ஒரு கதிரை கூட இல்லை. உள்ளுக்க ஒரே வெக்கை. வாசல் பக்கமா இருந்தால் கொஞ்சம் காத்து வரும் எண்டு அரக்கி அரக்கி வாசலில் போய் இருந்தன்.

ஆராரோ என்னைக் கடந்து போகினம், வருகினம்... எல்லாற்ற முகத்தையும் உத்து உத்துப் பாத்தன். ஆரும் அறிஞ்சவை தெரிஞ்சவை இருக்கினமோ எண்டு...

சிலவேளை என்ர அப்பா, அம்மா கூட இஞ்ச இருக்கலாமெல்லோ?

ஆனால் அப்பிடி ஒருத்தரையும் காணேல்லை. எல்லாற்ற முகத்திலயும் ஒரே சோகம்தான். இவையளும் ஆராரைத் துலைச்சுப்போட்டு தேடித் திரியினமோ தெரியாது.

இடது கால நீட்டி ஒரு மரக்குத்தியோட சாஞ்சு இருந்தன்.

ஒரு கோழியின் அலறல் சத்தம் என்னைத் திடுக்கிட வைச்சது.

திரும்பிப் பாத்தன்.

அஞ்சாறு கோழிக்குஞ்சுகளுடன் தாய்க்கோழி மேல பாத்துக் கத்தியது...

அண்ணாந்து பாத்தன்...

பருந்து ஒண்டு கோழிக்குஞ்சுகளை குறிபாத்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அந்த வெட்டவெளியில் குஞ்சுகளுடன் பதுங்குவதற்கு இடமில்லாமல் கோழி அந்தரிச்சுக்கொண்டு நிண்டது.

ஓடிச் சென்று தன்ர குஞ்சுகளை தன் சிறகால அணைச்சுக் கொண்டது.

நானும் இப்பிடித்தானே அண்டைக்கு குண்டு விழேக்க அம்மாண்ட அணைப்பில இருந்தன்... இப்ப... என்ர அம்மா...

கோழியின் அகோரச் சத்தம்...

பருந்து கோழியைத் தள்ளிவிட்டு குஞ்சொன்றைக் கால்களில் தூக்கியபடி சுப்பர்சொனிக் குத்திக் குண்டு போட்டிட்டு எழும்புவதைப் போல சடாரென மேலெழுந்து பறந்தது...

தாய்க்கோழியும் குஞ்சுகளும் அவலக் குரலில் கத்திக்கொண்டிருந்தன.

பருந்தின் கால்களில் சிக்குண்ட குஞ்சின் அவலச் சத்தம் என்ர காதில விழுந்தது. எனக்கு என்னவோ செய்தது. மெல்ல மெல்ல அந்தக் குஞ்சின் சத்தம் நின்று போக... எனக்கு மயக்கம் வருமாப் போல் இருந்தது....

மெல்ல அந்த மரக்குற்றியோடு சாய்ந்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.

 

karthi.subess37@gmail.com