மின்சாரத் தகனம்

முனைவர் பூ.மு.அன்புசிவா

த்தங்கரையை ஒட்டிய சுடுகாட்டுக்குள் ஊதா நிற ஜீப் நுழைந்தது. டிப்-டாப் ஆசாமிகள் ஐந்து பேர் இறங்கினார்கள். ஜீப் டிரைவர் நூல,; பந்து, டேப் சகிதமாய் அவர்களோடு சேர்ந்து கொண்டார். மண் வெட்டியையும் தன் வளைந்த முதுகையும் குழாயடியில் கழுவியபடி மங்கலான கண்கள் வழியே மேலோட்டமாகப் பார்த்தார, கருப்பு என்கிற கருப்புசாமி. டிப் - டாப் ஆசாமிகளில் இரண்டு பேர் டேப்பைப் பிடித்து நீள வாக்கிலும் அகல வாக்கிலும் குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். அருகில் நின்ற மொக்கனிடம், 'ஏய்...யப்பா... துக்க வீட்டுக்காரவுக குளிச்சு வந்ததும் நூத்தம்பது அட்வான்ஸ் போக மீதி நானூறு ருபா வாங்கி வை நா...போயீ...அளக்குற சேதீய அறிஞ்சு வாறேன்..' கருப்பு டிப்-டாப் ஆசாமிகளிடம் சென்றார். எண்பது வயது கருப்புவை அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றாலும் கூட கருப்புவின் நாக்கு சும்மாயிருக்கவில்லை.

'சாமி யோவ்...ஏ...அளக்கறீக... பெரிய தல எதுன்னாச்சும் போச்சா? பஸ்பமாக்க போ...றீ...ளா? கல்ற கட்ட போ...றீயளா? ஆபிஸர்ட்ட அனுமதி வாங்கியாச்சா?'

ஒருவர் 'இல்ல...பெருசு...இங்ஙன மின்சார சுடுகாடு வரப்போவுது'. கை நாட்டுப் பிறவியான கருப்புவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்று தனது வழுக்கைத் தலையைச் சொரிந்து கொள்வதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'மின்சார சுடுகாடுன்னா என்..என்னா சாமி? வொன்னும் புறிய மாட்டேங்கு...'
'ஆங்...பொணத்த...கரண்ட்ல சீக்கிரமா எரிச்சு... சீக்கிரமா சாம்பல் கொடுக்கறது.'

'ஆத்தாடி...யோவ்' என்;றபடி கருப்பு தன் பொக்கை வாயைப் பிளந்தார். குழிவிழுந்தப் பகுதிகளில் உள்ள கண்கள் ஆச்சரியத்தில் அகலமாயின.
'அப்படின்..னா வரட்டியில, கட்டயில, எரிக்கிறப் பொதக்கிறதெல்லாம் எப்படியாம்?'
எரிக்கிற மிசுனு வந்தப்புறம் வரட்டி தட்ட பொதக்கிறதெல்லாம் கிடையாது.

கருப்புவின் வயிறு அதிர்ச்சியில் ஒரு அங்குலம் உள்ளே போயி வெளியே வந்தது.
'எரிக்கிற மிசுனுக்கு எத்தனபேர் வேல பாக்கனும்..'

ஓன்று இரண்டு ஆளுக போதும்.

கருப்புவின் கண்கள் அதிர்ச்சியில் சுருங்கிப் போயின. கண்ணீர் எடடிப் பார்க்கத் தொடங்கியது.

'அய்...ய்...யோ வரட்டியில எரிக்கிறது, மண்ல பொதக்கிறத நம்பி ஏழு, எட்டு குடும்பங்கள் உள்ளமே...அடே...சுடல...மாடா...கவருமண்டு, வெட்டியாங்க பொலப்புலயும் மண்ண அள்ளிப்போடுதே. சுடல...மாடன்... சுடல...மாடன் செத்துட்டான்.'

டிப்-டாப் ஆசாமிகள் சில வினாடிகள் மௌனமானார்கள். ஒருவர் கருப்புவின் கண்ணீர் கேள்விக்கு மருந்தாக, 'பெருசு...அழுவாதீங்க...கெவர் மண்டுல மாத்து வேல கேளுங்க மனு கொடுங்க. வேற வேல ஏதாச்சும் தருவாங்க... கவல படாதீங்க' கருப்புவின் மனம் அமைதியாகவில்லை. 'இந்த சென்மத்துக்கு வேற என்னா...தெரியும் சாமி? ஏன் சாதிப் பொலப்புக்கே அஸ்தமனம் வந்துருச்சே' என்றபடி தன் இரு கைகளை வயித்தல் மூன்று முறை அடித்துவிட்டு அவர்களைக் கண்ணீருடன் நடுங்கிய கைகளால் கூப்பியபடி,

அய்...யா..சாமிகளா...நல்லா இருப்பீங்க... ஒங்க புள்ள குட்டியும் நல்லா இருக்கும். கரண்டுல எரிக்கிறது...வேண்டாம். வெரட்டி, சந்தனக்குச்சி, கட்ட வச்சு எரிக்கிறது பொதக்கிறதுல்லே அர்த்தம் இருக்குய்யளூ சம்பிரதாயம் இருக்குய்யாளூ புண்ணியம் இருக்குய்யா... புனிதம் இருக்குய்யா காசு பணத்த விட எங்க சாதி சனம் லட்சியம், கடம உரிம எல்லாம் போகுதய்யா, என்று இரு கைகளையும் கூட்டல் குறி போல் வைத்து, அளக்க விடாமல் தடுத்தார். டிப்-டாப் ஆசாமிகளில் ஒருவர் எரிச்சலுடன் அதட்டினார். 'பெருசு...நாங்க...வெறும் வேலக்காரங்க போயி ஆபீசர்ட்ட முறையிடுங்க' என்று வலுக்கட்டாயமாக கருப்புவின் முதுகைப் பிடித்து மெல்ல இழுத்தார். இதனை தூரத்தில் கவனித்த மொக்க ஓடிவந்து 'கருப்பண்ணா வாங்க... உணர்ச்சி வசப்படாதீங்க' என்று அவர்களிடமிருந்து அவரை அப்புறப்படுத்தினார். கருப்பு தன் அழுகையை எரிந்து கொண்டிருக்கும் ஒரு சிதையை வெறித்தபடி கண்ணீரைத் துடைத்துவிட்டு தேம்பி தேம்பி

'ஏலே மொக்க இனுமே... பொணத்த கரண்டுல எரிக்க போறாகளாம். எம்பாட்டன், முப்பாட்டன், நானு தெய்வமா நெனைக்கற வெட்டியா வேலக்கி முடிவு கட்டியாச்சு. சுடல மாடன் நம்மல கைவுட்டுப்புட்டான் . இனி வாயிக்கும் வயித்துக்கும் அல்லாட வேண்டியத தான்.'

மொக்கயோ கருப்புவின் பேச்சுக்கு அழுவாமல் மாறாக சிரித்தபடி, 'அவுதி..அவுதியா வாழ்ந்து அவுதியா போய்ச்சேர்ந்த மனுசன அவுதி அவுதியா எரிக்க மிசுனு கண்டாச்சு...அப்படிப்போடு..சக்க..ஓ...கோ..னான்னா தில்லாலே...' என்று சுடுகாடே அதிரும் வண்ணம் சிரித்தார். ஐம்பது வயதான திடமான உடம்பும் மனசும் கொண்ட மொக்க. மொக்கயின் இந்த சிரிப்பு ஆத்திரமா? அகங்காரமா? பழிவாங்கும் உணர்வா? மகிழ்ச்சியா? துன்பமா? இன்பமா? என்று இனங்காண முடியாமல் கருப்பு திகைத்தார். இந்த மொக்க கையெழுத்துப் போடுவார். பேப்பர்களையெல்லாம் எழுத்து கூட்டியே வாசித்துவிடுவார். தினந்தோறும் பேப்பர் கடைக்குப் போறதே, பேப்பர் படிக்கத்தான். ஒரு நாள் பேப்பர் படிக்காவிட்டாலும், எதையோ இழந்த மாதிரி முகத்தை வைத்துக் கொள்வார். அரசியல் கூட்டத்துக்கெல்லாம் போவார். மொக்க படிக்கும் போதும், சிந்திக்கும் போதும் சுருட்டுப் பிடிப்பார். எப்போதும் தம் இடுப்பில் நாலைந்து சுருட்டுகளை வத்திருப்பார். யாராவது நாட்டு நடப்புப் பற்றிக் கேட்கிறப்போ, சுருட்டு எடுத்து பத்த வைத்தபடியே, தீர்க தரிசிபோல ஆலோசனைகளை வழங்குவார். மொக்கையோட அறிவு பலத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, கொஞ்சம் நஞ்சம் இருந்த காடு மேட்ட வித்து மூத்தவன டாக்டருக்கும், இளையவன இஞ்சினியருக்கும் படிக்க வைத்துள்ளார். இரண்டு மகன்களையும, சுடுகாட்டுப் பக்கம் வரவிடமாட்டார். அவர்களிடம்இ 'இந்த எலவு எடுத்த பொலப்பு ஒரு பொலப்பா...த்து..தெறீ' என்று தன் நிலையை என்று தன் நிலையை ஒரே வரியில் கூறிப் புலம்புவார். ஏன் என்று விவரமாகக் கேட்டாலே, 'என்னோடயே இந்த எலவு முடியட்டும் நீங்களாச்சும் ஊர போல வாழுங்கல. என்னமேல் சாதி சனமெல்லாம் வெட்டியான்னு ஏளனமாத்தான் நினைக்கிறாகஇ பாக்குறாக பேசுறாக ' என்றும் வருந்திச் சொல்வார்.

கருப்புவின் கதையே வேறு. மூன்று மகன்களும் சென்னையில், டீக்கடை வைத்துள்ளார்கள். ஊரில் வேரோடு இருப்பது மனைவியான அறுபது வயது பேச்சி மட்டும்தான். பகல் முழுக்க கருப்பும் பேச்சியும் தார்ரோட்;டில் கிடக்கும் சாணியை வாளியில் போட்டு அள்ளி வருவார்கள். இதற்காகவே தினந்தோறும் ஐந்து கிலோ மீட்டர் தூரமாவது நடப்பார்கள். ஆத்தில் மணல் அள்ளப்போகும் வண்டிச்; சத்தம் கேட்டால் போதும், கருப்புவோ, பேச்சியோ, சாணிப் பொறுக்கிவர நம்பிக்கையோடு போவார்கள். சில வேளைகளில் ஏமாற்றம் தான் கிடைக்கும். பேச்சி கிடைத்த சாணிகளை ஊரிலிருந்து கொணாந்து வந்த வைக்கோல் கூலங்களைச் சிறிதளவு சேர்த்துஇ கருப்புவிடம் பேசிக்கொண்ட, அல்லது திட்டியபடி சாணி தட்டுவாள். வயசானா போதுமா? 'ஒரு ஆம்பளக்கு புத்தி வேணா, சாணி அந்த சிறுக்கி மவ எடுத்துப் போறவரைக்கும் வேடிக்கை பாக்குற. வர்ற பொணத்துக்கு வரட்டி இல்லாட்டி ஒன்னய வச்சுதான் எரிக்கணும்' என்று தொடர்கள் தான் பெரும்பாலும் வலம்;வரும்.

கருப்புவும் பேச்சியும் சேர்ந்தே பழைய கேட்பாரற்ற கல்லறைகளில் சுற்றுச் சுவர்களில் ஆத்துக்கரை ஓரங்களில் சாணியைத் தட்டி வைப்பார்கள். எலவு வீட்டுக்காரர்களிடம் வரட்டி விலையை
25,50 ரூபாய் குறைத்து கருப்பு பேசியது, தெரியவந்தால், பேச்சி அவரை வாய்க்கு வந்தபடி திட்டியே தீர்ப்பாள். பித்தம் தலைக்கு ஏறஏற உள்ளங்கால் எரிய எரிய கையெல்லாம் நடுநடுக்க நெஞ்சடைக்க ஒச்சது, துப்பு கெட்ட மனுசன் என்பாள். மாலையில் சில வரட்டிகள். முள்ளுக்குச்சிகள் பாடைகட்டி வந்த மூங்கில்களை சிறிது சிறிதாக வெட்டி, அரிசி பழங்களை எடுத்து வீட்டிற்குப் போய் விடுவாள். பிணம் வராத நாளில் மட்டுமே கருப்பு பேச்சியோடு செல்வார். பிணம் வருவது தெரிந்தால் இருந்து செய்யவேண்டிய சம்பிரதாயச் சடங்குகளை முடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவார். மொக்க உள்ளிட்ட சிலர் கூலியைப் பெற்றுக்கொண்ட, மாலையில் விடைபெற்றுக் கொள்வார்கள். கருப்பு இரண்டு கிலோ மீட்டா தொலைவிலுள்ள வீட்டிற்குப்போய் கோழி தின்பது போல் நாலைந்து உணவு உருண்டைகளை வயிற்றில் நிரப்பிக்கொண்ட, நள்ளிரவில் பசியெடுக்கயில் சாப்பிடுவதற்கும், இரவு முழுக்க புகைப்பதற்கு ஒரு கட்டு பீடியுடன் எரியும் பிணத்தின் முன் ஆஜராகிவிடுவார். நேரம் செல்லச் செல்ல சிதை நன்றாக எரியும். எரியூட்டிய நாலுஇ அது விழாதபடிக்கு கழுகு கோழிக்குஞ்சை கவ்விட வளைந்து வளைந்து வருவது மாதிரி எரியும் பிணத்தைச் சுற்றி வாயில் பீடியுடன் கையில் மூங்கிலுடன் வலம் வருவது வழக்கம்.

மிகத் துல்லியமான நேரம் பார்த்து, இடுப்பிலும், கால் மூட்டு, கை மூட்டு, பாதம், நெஞ்ச, தலை எல்லாவற்றிலும் அடித்து ஆறு அல்லது ஏழு நொடிகளில் வீழ்த்துவார். ஏதோ பெரிசா சாதிச்ச கர்வத்தில். பெண் பிணமாக இருந்தால், 'சிறுக்கி மவளே!...' என்றும் ஆண் பிணமாக இருந்தால் 'சிறுக்கி மவனே!..' என்றும் 'நா...யாராக்கும் சூரனாக்கும் மருவாதியா பஸ்பமாகு' என்று அதட்டுவார். போரடித்தால் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி' என்ற சித்தர் பாடலையும் முணுமுணுப்பார். சிதையின் நெருப்பருகே பாம்பு, தேளு பூச்சி பெட்டெல்லாம் வராது. எனவே எரியும் சிதையின் அருகே கருப்பு அரைத்தூக்கம் தூங்குவதும் உண்டு. திடீரென விழிப்பு வந்தால் காதோரம் சொருகியிருக்கும் பீடியை எடுத்துப் பத்த வைத்துக் கொள்வார். பசியெடுத்தால் குத்துக்காலிட்டபடியே டிபனில் உள்ள உணவை எடுத்துச் சாப்பிடுவார். ஒரே நேரத்தில் நாலைந்து பிணங்களை எரிக்க நேர்ந்தால், துளியும் தூக்கம் தலை காட்டாது. பொழுது விடிந்தவுடன் ஒரு கல்லறைமேல் ஆழந்து தூங்கிக் கொண்டிருப்பார்.

தலைச்சன் பிள்ளைப் பிணம் என்று தெரிய வந்தால் புதைக்க வேண்டாம, எரித்துவிடுங்கள் என்று பரிந்துரை செய்வார். ஏன் என்று கேட்டால் 'தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டை எடுத்து பூச பண்ண மந்திரவாதி மை தயாரிப்பான், குடும்பத்துக்கு அடுத்த வாரிசு வராது' என்பார். தலைச்சன் பிள்ளைப் பிணத்தை மட்டும் நாலு மணி நேரத்தில் எரித்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த சாம்பலை நல்லபடியாகக் கொடுத்தப்புறந்தான் கருப்புவுக்கு உயிரே வரும். இரவு நேரங்களில் சுடுகாட்டிற்குள்; மந்திரவாதி, குடுகுடுப்பைக் காரன் உலவுவது தெரிந்தால் போதும், கருப்பு அவர்களிடம் ஓடிச்சென்று மூங்கில் கம்பைக் காட்டி கெட்டவார்த்தைகளில் திட்டி அனுப்பி விடுவார். சில வேளைகளில் 'நான் சுடல மாடன் பேசுகிறேன்' என்று சாமியாடி வந்த மந்திரவாதிகளையும் குடுகுடுப்பையையும் விரட்டி விடுவார். வெளியூரில் உள்ள உறவினர்கள் விஷேசத்திற்குச் செல்லவும் மாட்டார். பேச்சிதான் உறவினர்கள் நடத்தும் சடங்கு, விழாவுக்கெல்லாம் போவார். சென்னையிலுள்ள மகன்களுடன், தங்கிவர, குழந்தைத்தனமான ஆசை உண்டு. ஆனாலும் கருப்புவின் தொழில் பக்தி இவற்றிற்கெல்லாம் இடம் தராது. இப்படியாக கருப்புவின் தொழில் தீரத்தை விவரித்துச் சொல்லலாம். இங்கெ இது போதும். இடையில் நின்றுவிட்ட சம்பவத்தைத் தொடருவோம்.

எலவு வீட்டுக் காரர்கள் குளித்து விட்டு ஈரத்துண்டுடன் ஆத்துக்கரையேறி வந்தார்கள். அருகில் நின்ற தார, தப்பு, சங்கு, மொட்டையடித்தவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கணக்குத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த கருப்பு வேகமாக நடந்து சென்று பவ்யமாக அவரிடம் கெஞ்சுகிற தொனியில், 'ஹ சாமி...யோவ்...எரிப்புக் கூலி சாமி...நூத்தம்பது போக மீதி நானூறு ரூபா தாங்க சாமி...'

சுலிப் பத்தைப் பங்கிட்டுத் தரும் மஞ்சள்பை குடிபோதையில் தள்ளாடியபடி பதில் கொடுத்தது ஏ...கிழமே...
300 ரூபா பத்தாதா?

'இன்னா... சாமி... எனக்கு மட்டும் சாணி வெராட்டியா வானத்துல இருந்து அப்பிடியே குதிச்சுருதா இன்னா..' ஒரு பொணத்துக்கு வைக்கிற வெராட்டிய எம் பொண்டாட்டி நாள் முச்சுடும் அடி வவுறு இயிக்க, மூச்சியீக்க பித்தம் தலைக்கேற அடிபாதம் திகுதிகுன்னு வேக தட்டுன்னுது சாமி. தண்ணி மழை படாம பாதுகாத்து ஒரு வாரம் கலுச்சு எடுத்து இரண்டு நாள் காய வைச்சது சாமி... இவ்ளொ கஷ்டம் இருக்கு சாமி...'

'ஆமா இவரு பெரிய மொத்த ஏவாரி...போடா...போடா...இவனே' அந்தப்போதை வயதுக்குக்கூட மரியாதை தராமல் பேசியது. ஏதிர்த்துப்பேசி பழக்கமில்லாத கருப்பு பணிவுடன்இ 'அய்...யா..சாமி...ஏற்கனவே 50 ரூபா கொரச்சேன் இப்ப வேணுனா 10 ரூவா கொரச்சுக்கிறேன் சாமி...நாளக்கி நம்ம உறவு நீடிக்கணும்...'

இன்னொரு குடிபோதை கருப்புவின் முதுகில் எட்டி உதை கொடுத்தது.

'அட நாலாங்கரை நாயே... ஓ வூட்டுல எலவு உழ...வெட்டியா ஒறவு எங்களுக்கு இன்னாத்துக்கு ஏண்டி எங்க வூட்ல எல்லாரையும் சாவ சொல்றீயா?'

'அய்யா...சாமி நா அந்த அருத்தத்தில் சொல்லல என்றபடி கீழே விழுந்து கிடந்த மூக்குக் கண்ணாடியைக் கண்ணீர்த்துளி மண்ணில் விழ விழ தடவி எடுத்துக்கொண்டார். தூரத்தில் நின்ற மொக்க ஓடிவந்து பரிதவித்தபடி கருப்புவை 'இருங்கண்ணே... பொறுமையா இருங்க' என்று சமாதானப் படுத்ததான் முடிந்தது. பக்கத்தில் நின்ற பலர் அந்தக் குடிபோதைக்குத்தான் ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீசினார்கள். 'அவன் என்ன சாதி... நாம...என்ன சாதி வெட்டியான நாம மொதல்ல தொடலாமா? கேட்ட பணத்தை எலவு சனியன் தொலையுதுன்னு விட்டெறி' என்று கூட்டத்தில் ஒருவன் குரைத்தான். குடிபோதை மூன்று நூறு ரூபாய்த் தாள்களை வீசியது. திசைக்கு ஒரு பக்கமாக விழுந்து ரூபாய்களை கருப்புவும் மொக்கனும் பொறுக்கினார்கள். கூட்டம் குறையத் தொடங்கியது.

கருப்பு, மொக்க உட்பட பிற மண்வெட்டி ஆட்களுக்குக் கூலியைப்; பிரித்துக் கொடுத்தார். காலையில் ஒரு சிதைக்குப் படைத்தத் தி;ன்பண்டங்களை மண்வெட்டி ஆட்களுக்குத் தந்தது போக, பேச்சிக்குப் பாதியளவு துண்டில் முடிந்து தோளில் போட்டபட, கருப்பு மொக்கயுடன் தன் பாதயாத்திரயைத் தொடங்கினார். மொக்க தின்பண்டங்களில் பிரியம் வைத்திருந்தாலும், பிணத்துக்குப் படைத்ததைச் சாப்பிடுவதில்லை. எனவே கருப்பு தந்ததை மறுத்துவிட்டு, சுருட்டு பத்தவைத்து மண் வெட்டிய தோளில் சுமந்தபடி நடந்தார். கருப்புவால் சில வினாடிகள் கூட பேசாமல் வர முடியவில்லை.

'ஏ..லே..மொக்க மின்சார சுடுகாடு வந்துச்சுன்னா நம்ம மாதிரி இருக்கறவன் என்ன...செய்ய.. பிச்ச எடுக்க வேண்டியதுதானாக்கும்?

'இல்லண்ணே நகராச்சி ஆபீசாட்டே சொல்லுவோம் மாத்து வேல தருவாங்க' கெவுளிச் சத்தம் போல கருப்புச் சிரித்து விட்டு' கலெக்டரு வேலையா தரப் போறாக, அடப் போப்பா. இந்த பொழப்புல என்னதான் காசு வாங்கிட்டு காரியம் பண்ணிக் குடுத்தாலும் நல்லவே கெட்டவே ஏல பணக்காரன் பாகுபாடு இல்லாம ஆம்பள பொம்பள பேதமில்லாம மனுச பய ஒடம்ப வாங்குன்ன கடன அடைக்கிற மாதிரி ஆண்டவன் கிட்ட திரும்ப ஒப்படக்கிறோம்ல. சுடலமாடன், சிவன், பரமேஸ்வரன் சிஷ்யன்னா நின்னு இந்த பொழப்ப செய்றோம். ரொம்ப நேரம் அழுது பொணத்த நம்மட்ட ஒப்படச்சவுடனே நல்ல முறையா பஸ்பமாக்கி அந்த எலும்ப மக்கியா நாளு ஆத்துல கரச்சு விடுறப்போ செ;துப்போன ஆத்துமா எனக்கு நன்றி சொல்ற மாதிரி இருக்கும். அந்த மன நிம்மதிய எனக்கு மின்சார சுடுகாடு தருமா? சிதையில வச்சு பங்காளிகள், மாமன், மச்சான் வாக்கரிசி போட்டு செத்த ஆத்மாவோட பசிய ஆத்து வாங்க. மண்ண போட்டு மண்ணாசைய நீக்கு வாங்க. இருக்குறவன் மில்லி தங்கம் போடுவான். இல்லாதவன் காசு போடுவான். அத்தோட அந்த சென்மத்துக்கு காசு ஆச நீங்கும். நீர் சத்தியம் பண்ணி துஷ்டத்தெய்வம் தீண்டாம குடம் ஒடப்பேன். வரட்டியெல்லாம் அடுக்கி முகத்த மட்டும் மூட மாட்டேன். சுத்தி நிக்கிற கொள்ளி போடுற உறவுமாமன, மச்சான் பங்காளிக பாத்து சாமியோவ்....அய்யா...அல்லாங்காட்டி அம்மா... முகத்துல நல்ல பாக்குறவங்க கடசியா பர்த்துங்கண்ணு சொன்னவுட்டி சுத்தி நிக்குற எல்லாம் செத்த முகத்த பாக்கையில் மூணு விரலால் முகத்த மூடுவேன். கொள்ளி வைக்கிறது பெத்தப் புள்ளையா இருந்தா தெக்கே ஒரு கால திருப்பி வச்சுட்டு வடக்க ஒரு கால வச்சுட்டு தெக்க தன் முகத்தவச்சுட்டு பொணத்த திரும்பி பாக்காமா தல மாட்டுல கொள்ளிக் கட்ட நெருப்பு வக்கயில அழுவுமே ஒரு அழுக அய்யோ... சாமி அந்த அழுக சுத்தி நின்னவங்கள்ளாம் அழவைக்குமே. மின்சார சுடுகாடு வந்தா இதெல்லாம் கோவிந்தா...கோவிந்தா தான் இன்னா மொக்க? பொணத்த எரிச்சா அடுத்த நாள் வந்து குடம் குடமா தண்ணி ஊத்துவாங்க. 9,11,13 குடம் கூட சிதைச் சாம்பல் குடிக்கும். அதிகம் தண்ணி இருந்தா செத்தவனுக்கு இன்னும் பாதி ஆயுசு இருக்கு பாவம், அதுதான் தண்ணி இழுக்குதுன்னு சொல்லுவாறு எங்க அப்பா. பிறகு எரிச்ச இடத்துலேயே, நெறய எலும்பு அடுக்கி வச்சு செத்தவனுக்காகப் புடிச்சுதெல்லாம் படப்பாங்க. அத எனக்குக் கொடுப்பாங்க. பிறகு காக்காவுக்கு வப்பாங்க. செத்தவங்க காக்கா, கோழி, ஆடு, மாட, உருவத்துல வந்து சாப்புடுவாங்க. அப்புறம் நவதானியம் தொளிப்பாங்க. அந்த சம்பிரதாயமெல்லாம் அழியப்போவுது மொக்க,' என்று பெரு மூச்சு விட்டார். மொக்கயோ பாதி சுருட்டை உறிஞ்சிய படி கீழே போட்டுட்டு

'அதெல்லாம் சரியா கூட இருந்தாலும் காலம் வளருதுல்ல. ஜனக் கட்டுப் பெருத்துப் போச்சு. அந்தக் காட்டுல இனிப் பொதக்கவே இடமில்ல. எலலாம் கல்ற கட்டி செத்தவனுக்கு சாதி மத அடையாளத்தவேற நட்டுவைக்கிராக. ஒரே நாளுல ஏழு எட்டு பொணம்கூட வருது. நம்மாளயே அத பங்குடு பண்ணமுடியல. கலியுகத்தல எல்லாம் அவசரம் காசு..காசு.. பொறுமைலெ;லாம் செத்துப் போச்சு. நீங்க சொல்ற சம்பிரதாயம் எல்லாம் விடு தொலையட்டும் முழிச்சு பார்க்கப் போறானா என்ன? மின்சார சுடுகாடு வந்தவுடன் நா எறிமாட்டேன்னு செத்தவன் பேசறானாக்கும். பக்கத்து ஊருலஇ சைக்கிள் டயர், வேஸ்ட் ரப்பர் கூட பொணத்து மேல போட்டு எரிக்கிறானுக. சுகாதார கேடு வேற. ஒரு வசதி வேணுமின்னா ஏதாவது இழந்தாகனும்.'

கருப்பு மொக்கயிடம் தொடர்;ந்தார். 'எம்பாட்டன் இந்தத் தொழில்ல ரொம்ப பத்தியா நெனப்பாராம். அந்த சுடல மாடன் தொழிலுனு அளிக்கிறது அத இந்த பூமியில செய்யறதுக்கு ஆள் தேடுனப்போ சுத்த பத்தமா அப்பாவியா இருக்குற நம்ம சாதிக்கார பயலுகதான் லாய்ககுனு சொல்லி நேமிச்சாரம்பா, அப்பிடினு எங்க பாட்டி அடிக்கடி சொல்லி பெரும பேசும் தெரியுமா? எங்க பாட்டன் தொடங்கி நான் வேற இந்தப் பொலப்புல இறங்கியாச்சு. எம் புள்ளீங்க இந்த பொலப்ப அசிங்கமா நெனப்பாங்க இத எதிர்த்து அவுங்ககிட்ட பல தடவ மணிக்கணக்கா விவாதம் பண்ணியிருக்கேன். முடிவு என்னாச்சு கவருமண்டு எனக்கே ஆப்பு வச்சுருச்சு...' கருப்புவுக்கு காடத்துச் சடங்கில் பச்ச பட்டாணி, பயிறுகளைக் கொறித்துக் கொண்டே வந்ததால் தாகம் எடுத்தது ஒரு வீட்டைப் பார்த்தார்கள்.

'ஏலே மொக்க தண்ணி தவியா தவிக்குது சாமிவூட்டு தண்ணிய ஒரு வா குச்சட்டு போகலாம்'. மொக்க ஒண்ணும் சொல்லாமல் இருந்தார். வீதியை அடைத்து மாக்கோலம் போட்ட வீட்டை நெருங்கி முன்பக்கத் திண்ணையில் ஆங்கில தினசரி புரட்டிக்கொண்டிருந்த ஆச்சாரம் அனுஷ்டானம் தோற்றம் கொண்டு வெத்திலையை குதப்பிக்கொண்டிருந்த பொக்க வாய் கிழத்திடம்,

அய்யா சாமி கும்புடுறேங்க தண்ணி தவியா தவிக்குது ஒருவா தண்ணி குடுங்க சாமி என்ற துண்டை கக்கத்தில் வைத்து கைகளை கட்டிக்கொண்டே கேட்ட கருப்புவைப் பார்த்து மொக்க மனசுக்குள்இ 'கருப்புவுக்கு வயசு ஆயிருக்கே தவிர அறிவு துளி கூட இல்ல' என மொணங்கினார் ஆச்சாரமான ஆசாமி.

'ஆங்... அங்கே நில்லுடா! வாசல்படி மேல கால் வைக்காம வீதியில் நில்லு தண்ணி வரும்' என்று ஆணையிட்டார். கருப்பு, 'அப்படியே ஆகட்டுஞ்சாமி', என்ற படி ஏற்கனவே வாசற்படியில் நில்லாமல் வீதியில் நின்று கேட்டவர் மேல் சாதி ஆசாமியின் சொற்படி இன்னும் கொஞ்சம் தள்ளி நடு வீதியில் போய் நின்று கொண்டார்.

உள்ளேயிருந்து ஒரு கிழவியின் குரல் 'பாத்திரம் இருக்கான்னு கேளுங்கோ' என்றது. கருப்பு டக்கென டிபன் பாக்ஸ் இருக்குத் தாயீ என்று பதில் கொடுத்தார். ஒரு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் வந்தது. கருப்பு பவ்யமாகப் பணிந்து கொண்டு சிறுபிள்;ளையைப் போல நெஞ்சு, வயிறு எல்லாம் தண்ணீர் சிந்த குடித்துவிட்டு தாகம் தணிந்ததென 'ஆங்...'என ஓசை எழுப்பினார். தண்ணீர் கொண்டு வந்த கிழவி திண்ணையை ஒட்டிய பைப்பில் பிளாஸ்டிக் வாளியை நன்கு கழுவி விட்டு உள்ளே கொண்டு சென்றாள். கருப்பு திண்ணைக் கிழவருக்கு 'சாமி...கும்புடுறங்க..' என்று இரு கைகளால் கும்பிடு போட்டார். அந்தக் கிழவரோ ஆங்கில தினசரிக்குள் புதைந்த முகத்தை எடுக்காமல் வேண்டா வெறுப்பாய் 'ஆங்...'என்றார்.

மொக்கைக்கு ஆத்திரம பொங்கியது. கொஞ்ச தூரம் நடந்தவுடன் எத்தன நாளக்கி தான் தண்ணிய பாத்திரத்திலயும் கையிலயும் வாங்கிக் குடிக்கிறது, அதுவூம் அந்தக் கிழவி பிளாஸ்டிக் வாளியில் தண்ணீ ஊத்திச்சு. வீட்டுக்குப் போயீ தண்ணி குடிக்காட்டி சாவு வந்துருமோ...?' கருப்பு விடுல. எல்லாம் பழகியாச்சு...! மொக்க, அப்பங்காரன் வெட்டுன கிணறு என்பதற்காக உப்பு தண்ணியவா குடிக்க முடியும்! கருப்பு மௌனமாக நடந்தார். தங்கள் சேரியை நெருங்கினார்கள். எதிரே முனியாண்டி வீட்டில் ஒரே கூட்டம். இடையில் நுழைந்து எட்டிப்பார்த்தார்கள். வெள்ளையுஞ் சொல்லையுமாக ஒரு குண்டு மனிதன் நின்று கொண்டு 'இன்னா.. நெஞ்சு கொழுப்பிருந்தா செருப்பு தைக்கிறவனுக்குச் செவத்த தோலு பொண்ணு கேக்குது. ஒம்ப பையனோட ஓடிப்போன எம் பொண்ணு விடியறதுக்குள்ள வராட்டி தைக்கிறதுக்கும் திங்கறதுக்கும் கயிருக்காது. கவருமண்டு கொடுத்த சலுகையில படிச்சு வேலக்கிப் போயிட்டா மே சாதிக்காரப் பொம்பள கேக்குதா? ஓம்ப பையன் மட்டும் எங்கையில கெடச்சான்னு வச்சுக்க கண்டதுண்டமா வெட்டிப் போட்டுருவேன். என் பொண்ணு எனக்கு வந்து சேரணும். இல்ல, சேரியைக் கொளுத்துப்புடுவேன். என்று வீச்சரிவாளை ஓங்கியபடி கூவிவிட்டு, தன் கூலிப் பட்டாளங்களுடன் காரில் ஏறிச்சென்றார் அந்த மனிதர். முனியாண்டியும், அவன் மனைவியும் நடுங்கியபடி நின்றிருந்தார்கள். ஊரார் யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டார்கள். ஊரார் பலவிதமாகப் பேசிக்கொண்டே கலயத் தொடங்கினார்கள். மொக்கயோ முனியாண்டி வீட்டுக் கதவைத் திறக்க முயன்றான். கருப்புவோ நெலம சரியில்ல. பாவம் மனசு ஒடிஞ்சு கிடக்கிறான். பிறகு விசாரிப்போம், என்றபடி தங்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள். மாரியம்மன் கோவில் முன்பு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. கருப்பு, மொக்க ஆகிய இருவரின் பங்காளிகள், மாமன் மச்சான் முறையினர் சிலர் இடுப்பில் துண்டைக் கட்டியக் கோலத்தில் நின்றிருந்தார்கள். விபூதி, நாமம் போட்ட தடிமமான ஆட்கள் சிலர் ஜமுக்காளத்தின் நடுவில் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். கூட்டத்தில் சலசலப்புக்குப் பஞ்சமில்லை. ஆச்சாரமான மனிதர் கைகளைத் தட்டியபட, கூட்டத்தை அமைதிபடுத்தி, 'ஏய் கவனிங்கப்பா! போன வாரம் தோட்டி மூக்கன் பாடிய எங்க ஜாதி சனம் அதிகமா இருக்கிற வீதிவழியா எங்களோட அனுமதியில்லாம கொண்டு போயிட்டீங்க, காலம் காலமாக உங்க ஆளுக பாடியை குளக்கரையை ஒட்டுனாப்புல உள்ள ஒத்தயடிப் பாதையில் கொண்டுபோவீங்க! அன்னிக்கு மட்டும் ஏன் வழக்கம் மாறிச்சுன்னுகேட்டா? ஒத்தயடிப் பாதையை அகலப்படுத்தி ரோடு போட மிசுனுங்க வழிமறிச்சி நிக்குதுன்னு புதுக்காரணம் சொல்றீங்க. எங்க வீதி வழியா பாடிய கொண்டு போனதால எங்க சாமிக்கு கோவம் வந்திருச்சு. தீட்டு பட்டிருச்சு. எங்க ஆளுகளுக்கு நோய் நொடிவேற. எங்க சாதியில பெரிய தல சேந்தாப்புல ரெண்டு பேர் செத்துட்டாங்க! சரி போனது போகட்டும். இனிமே இப்படி செய்ய மாட்டோம்னு மூணு தடவ சொல்லி பஞ்சாயத்துல மன்னிப்புக் கேட்டு, 1001 ரூபாய் அபராதத்தைக் கோயிலுக்குக் கட்டிப்போங்கலே! இது தான் பஞ்சாயத்து தீர்ப்பு.' என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்து, அருகிலிருந்த, அய்யரிடம் சாமியின் தீட்டுக் கோபத்தைத் தணிக்க நாள் பார்க்கச் சொன்னார். மூக்கனின் உடம்பைச் சுமந்து சென்ற மகன்கள், உறவினர்கள் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே மூன்று முறை சொல்லி மன்னிப்புக் வேண்டி தடாலென சபை நடுவே விழுந்து எழுந்து கும்பிட்டார்கள். மூக்கனின் மகன் உள்ளிட்டோர் தீhப்பு சொன்ன பெரிய உருவத்திடம் அருகில் சென்று அடுத்த மாதத்துக்குள், வசூல் பண்ணிக் கட்டிவிடுவதாக ஒப்புக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள். கூட்டத்தினர் கலைகின்றனர். கருப்பு சாமி வாயைப் பிளந்த படி ஆடாமல் அசையாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.

மொக்க மெதுவாக வாய் திறந்து,
'அஞ்ச அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே'

'கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி பெரிதாமோ.'

'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்டமனிதரை நினைத்துவிட்டடால்' என்று பாரதியார் பாட்ட மென்று கொண்டார். கருப்பு சில வினாடிகளுக்குப் பிறகு மொக்கயிடம் பேச்சுக்கொடுத்தார்.

'மொக்க எனக்கு தெரிஞ்ச மொழி பொணம, சுடுகாடு,சாவுன்னா இன்னான்னு எனக்குத் தெரியும். இருக்கும் போதுதான் இழிவா பாக்குறான். இறந்த பின்னாலும் இழிவா பாக்குறான். சிச்சீ... செத்த பொணம் ஏதேச்சையாகூட மேல் சாதிக்காரன் வீதியில் போகக் கூடாதாம். த்தூ தேறி... மேல் சாதிக்காரன் செத்தா கீழ் சாதிக்காரன் தான் எரிக்கிறான். புதைக்கிறான். கொலப்பமான பேதம். கருமாந்தரம் புடிச்ச சாதி... ஏழை, பணக்காரன், படிச்சவன், படிக்காதவன், எல்லாப் பயலுகளும் சாதி உணர்வுலத்தான் பஞ்சாயத்து பேசுறான். வெட்டியாங்கிறான். செருப்புதெக்கிறவங்கறான். தோட்டிங்கிறான். தப்படிக்கிறவங்கிறான்... பொலப்ப வெச்சு மனுசன அசிங்கமா பாக்குறானே! அப்படிப்பட்ட பொலப்ப இனிமே நான் பாக்குல! என்னோட வெட்டியா பொலப்புல புண்ணியம், சடங்கு, சம்பிரதாயம், கடம என்னா எலவு போட்டு அடிக்குது! ஏலே மொக்க சாதி இழிவு போக்கணும். புனிதம், சாமி, சாஸ்த்திரம் ஒரு விளக்குமாறு வேணாம். கரண்டுல மின்சார சுடுகாடு வந்தா, பொத்தான மட்டும்தான அமுக்கணும். வேட்டி சட்ட அழுக்கு ஆவாது. பேண்டு சட்ட தான் யூனிபார்ம். மிஷின் இயக்குறவனுக்கு மேஸ்த்திரிஇ ஆபரேட்டருன்னு தான் பேரு வரும். கவருமண்டுல பணம் கட்டுன ரசீது இருந்தா எரிக்கலாம். தேவ இல்லாம எலவு வீட்டுக்காரங்களோட மல்லுக்கு நிக்க வேணாம். மேல இருக்குறவன் எந்த பொலப்பெல்லாம், இழிவு அசிங்கம்னு சொல்றானோ, அதையெல்லாம் கீழ்சாதிக்காரன் செய்யக்கூடாது. ஏலே மொக்க நான் இனி பொணம் எரிக்கப் போவமாட்டேன். மிசுனு வெச்சே பொணத்த எரிக்கலாம். அந்த மெசினால பொணம் மட்டும் எரிஞ்சு சாம்பலாப் போகப் போறதில்ல. வெட்டியான் என்கிற ஜாதியும் எரிஞ்சு சாம்பலாப் போவப்போவது. கரண்டப்பத்தி படிச்சவந்தான் மிஷின் ஓட்டப்போறான். கவர்மண்டு எனக்கு மாத்து வேல கொடுக்கும். ஒரு வேலை கொடுக்கலன்னா நாண்டுக்கிட்டு சாவறேன். கீழ்சாதிக்காரன் செய்யுற எல்லா பொலப்புக்கும் மிசினு வேணும்! எரிஞ்சு வற சூரியனே சத்தியுள்ள சாமியே எஞ்சாதி சனத்துக்கு நல்ல புத்திய குடு! ரோசம், மானம், சூடு, சொரண வரணும். என்று கருப்பு ஆதங்கத்தோடு கண்ணீர் ததும்ப புலம்பி ஆர்பரித்ததை மொக்க ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தான்.



anbushiva2005@gmail.com