ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
கென்
சென்ற
மழைக்கால மாதத்தில் சென்னை நகரின் சாக்கடை கலந்த நாற்றமெடுத்த நீரில்
நனைந்து, அலைந்து திரிந்து சாப்பிட ஹோட்டல் தேடி சலித்து அறைக்கு
திரும்பியபின் திடீரென ஞாபகத்திற்கு வந்தது ஒதிய மரங்கள். என் பால்ய
காலத்தின் எல்லா நிகழ்வுகளிலும் சாதிக் இல்லாமல் இருந்ததில்லை. வீட்டில்
பத்து ரூபாய்க்கு மேல பைசா பெயராத காலம் அது. கல்லூரியின் இரண்டாம்
ஆண்டில் அடியெடுத்து வைத்த நாட்கள் அவை. பணத்தேவைக்கு என்ன என்னவோ
வழிகளில் முயற்சிகளும் திருட்டுத்தனங்களுமாய் கழிந்த அந்த மழைக்காலம்
மறக்கவியலாது.
பேய் மழையாய் கொட்டிக்கொண்டிருந்த கும்மிருட்டு நேரம், மணி என்னவோ
சாயங்காலம் ஐந்து தான் ஆனால் பார்ப்பதற்கு எட்டு மணி இருளாய்
மூழ்கிக்கிடந்தது. வழக்கம்போல ஓட்டை சைக்கிளும் திருட்டு இளநீருமாய்
அன்றைக்கும் பொழுது கழிந்திருந்தது.
'டேய் என்னைக்காச்சும் எனக்கு பரோட்டா வாங்கிக்கொடுத்திருக்கியாடா'
என்றான் சாதிக்
ஒரு பரோட்டா ரூ 1.50
காசு (1999-2000
ஆம் ஆண்டு) அவனோ எப்படி பார்த்தாலும் பத்து சாப்பிடுவான்,
என்னிடமிருந்த சில்லறைகளோ இரண்டு டீக்கு மட்டுமே தேறுவதாக இருந்தது.
வீட்டுப்பக்கமே காலையிலிருந்து தலைக்காட்டாமல் சுற்றியலைந்தது
நினைவுக்கு வந்தது, அம்மாவிடம் எதும் காசு கேட்கலாம் கண்டிப்பாய்
கிடைக்காது, பாப்பாவின் உண்டியல் கிடைத்தால் காசு தேற்றிக்கொள்ளலாம்
என்று நினைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தேன்.
அம்மாவும் என் தங்கையுமாய் உண்டியலை உடைத்து சில்லறைக்காசுகளை
எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்னைப்பார்த்த மாத்திரத்தில் 'அங்கேயே
நில்லுடா ' என்று ஒரு எச்சரிக்கை மணி ஒலித்தாள் அம்மா.
நான் பாட்டுக்கு கண்டுக்கொள்ளாமல் உள்நுழைந்தேன், ஒரு இருவது ரூபாயாவது
தேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது. மொத்தமாய் பாயோடு
சுருட்டி வைத்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டாள் என் தங்கை.
நான் பரிதாப முகத்தோடு 'பாப்பா நான் காசு எண்ணித்தரட்டுமா ' என்று
கேட்டேன். வேணாம்பா நானே எண்ணிக்கிறேன். உன் சங்காத்தமே வேணாம் எனக்கு
என்று பதில் கிடைத்தது. தனியே சிக்கிய ஆட்டுக்குட்டியை விட்டிட
மனசில்லாத நரியாய் இருவது ரூபாய்க்கான பிளானை யோசித்தபடி இருந்தேன்.
என்ன செய்யலாம் என்று யோசித்தபடி திரும்பி பார்த்தேன். சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன் என்கிற வாசகத்துடன் ஜீசஸ் ஆட்டுக்குட்டியை
மடியேலேந்திய போட்டோ கண்ணில் பட்டது. கர்த்தர் வழி என்றபடி
பாப்பா உண்டியல் காசுல, சர்ச்சுக்காசு போட்டுட்டியா என்று கேட்டேன்,
சாமிக்காசா நான் ஞாயித்துக்கிழம போட்டுப்பேன் என்றவளை, அய்யோ அவ்வளவு
நாள் ஆனா ஜீசஸ் தப்பா நினைச்சுப்பார் என்கிட்ட கொடு நான் போட்டுட்டு
வரேன் என்றேன்.
ஒரு குழப்ப மனநிலைக்கு ஆளானவளை இன்னும் கொஞ்சம் மிரட்டி 12
ரூபாய் பிடிங்கிக்கொண்டு வெளியேறினேன்.
வெளியில் வெகு பரபரப்போடு இருந்தான் சாதிக். எங்கடா போயி தொலைஞ்ச,
உன்னைத்தேடி தேடி சலிச்சிட்டேன் என்றான். இருந்த சில்லறைகளை சேர்த்து
20 ரூபாயை காட்டினேன். அட அதை விடு
லம்பா 500 ரூபாய்க்கு பிசினஸ்
வச்சிருக்கேன் வா என்றான்.
எனக்கோ ஒன்றும் புரியவில்லை, எதைக்கேட்டாலும் பதில் சொல்லாமல் மாங்கு,
மாங்கென சைக்கிள் மிதித்துக்கொண்டிருந்தான். என்னடா சொல்லுடா என்றால்
இரு, பேசாமல் வாடா என்றான்.
நெடுங்காடு வந்தவுடன் என்னை சைக்கிளோடு நிற்க வைத்து விட்டு தனியாக ஒரு
போட்டோ ஸ்டியோவுக்குள் போனான். கொஞ்ச நேரத்தில் முகம்கொள்ளா சிரிப்போடு
வந்தவன், சட்டைப்பாக்கெட்டுக்குள் கை விட்டு இரண்டு ஐம்பது ரூபாய்
தாள்களை எடுத்துக்காட்டினான். எனக்கோ சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை.
எதுக்குடா பணம் வாங்கின என்றால் எதுவும் சொல்லாமல், வா போயிட்டே பேசலாம்
என்றவன் ஊர் வந்து சேரும் வரை எதுவுமே பேசவில்லை.
அது
மழைக்காலம் என்பதால் வேலைக்குப்போகும் ஆட்கள் வேலை வெட்டி
எதுவுமில்லாமல் டீக்கடைகளில் குவிந்து கிடந்தார்கள். நீ என்ன பண்ற உன்
வீட்டு அருவா, மம்புட்டி ரெண்டும் எடுத்து தந்திடு என்றான்.
டேய் அதை எல்லாம் எடுத்தா எங்க அப்பா பேசியே கொன்னுடுவார்டா என்கையில்
அதெல்லாம் ஆகாது உனக்கு நல்ல பேரு வாங்கித்தரேன் பாரு என்றபடி
வீட்டுக்குள் வந்தவன், அப்பா வேலில பெருத்துப்போயிட்ட ஒதிய மரத்தை
வெட்டி எடுத்துக்கவா என்றான்,
என்னடா சோழியன் குடுமி சும்மா ஆடாதே, அருவாள வித்திடப்போறீங்க என்றபடி
வெளியில் வந்தவர், சரி வெட்டித்தொலைங்க அதுல மொசுக்கட்ட பெருத்து
வீட்டுக்குள்ள எல்லாம் வருது என்றார்.
அடுத்த இரு நாட்களுக்குள் வெறும் டீ வாங்கிக்கொடுத்தே ஊரிலுள்ள பெரிய
ஒதிய மரங்களை எல்லாம் வெட்டி சேகரித்திருந்தோம். எதுக்குடா ஒதிய மரத்தை
வெட்டி குமிக்கீறிங்க, வேலையத்த அம்பட்டன் பூனையக்கட்டி செரைச்சக்
கதையான்னு பார்க்கிறவன் எல்லாம் வாயப்பிடுங்கிட்டு இருந்தாங்க. என்ன
கேட்டாலும் பதில் சொல்லாமல் சிரிச்சிட்டே இருந்தான்.மொத்த மரங்களும்
வெட்டி முடிச்சிட்ட அப்பறமா , வண்டி வச்சி ஏத்தி மரவாடிக்கு எடுத்திட்டு
போயிட்டோம். தினமும் காலையில இருந்து டீ வடை டிபன்னு சட புடலா காசு
செலவு பண்ணிட்டு இருந்தான். மரவாடில தனியா பேசிட்டு மரத்தை அறுக்க
வச்சான், அதும் வேலையில்லாத நாளாகிட்டதால பாதி ரேட்டுக்கு ஒத்துக்க
வச்சி எல்லாம் முடிச்சி நெடுங்காட்டுக்கு ஆளனுப்பி சின்ன லாரில
ஏத்திக்க வச்சப்போதான்
ஊர்ல பாதி பேருக்கு மேல தூக்கத்தில முழிச்சிட்ட மாதிரி அடிச்சிட்டு அலற
ஆரம்பிச்சாங்க.
அடப்பாவிகளா, சின்ன பயலுவ எதோ கிறுக்குத்தனமா ஒதிய மரத்தை
வெட்டிக்குவிக்கிறாங்கன்னு வெறும் டீக்கு கொடுத்திட்டோம், இவனுங்க அதை
போட்டோ ப்ரேம்க்கு பெரிய ஆர்டரா மாத்தி வித்திட்டாங்கன்னு வாயிலேயும்,
வயித்திலேயும் அடிச்சிட்டானுங்க.
அந்த பிசினஸ்ல மட்டும் ஆளுக்கு எல்லா செலவும் போக முதல் இல்லாத லாபமா
1200 ரூபாய் கிடைச்சிது. வரவன்
போறவனுக்கெல்லாம் வடையும் டீயுமா தை மாசம் வரைக்கும் கொண்டாடினோம்.
எங்களை சும்மா சின்னப்பயலுவன்னு கிண்டலடிச்ச கிழங்கட்டையெல்லாம்
வாங்கித்தின்னுட்டு பல்லக்காட்டிட்டு இருந்தாங்க.
அடுத்த மழைக்கு ஊர்ல ஒரு வீட்டிலேயும் ஒதிய மரத்தை ஓசில தரல, வாங்க
நெடுங்காட்டு காரனும் வரல.
நன்றி:உயிரோசை
|