கோப்பைகள்
அ.முத்துலிங்கம்
'இதுவெல்லாம்
நடந்ததற்கு காரணம் ஒரு மார்க்தான். அந்த ஒரு மார்க் கிடைத்திருந்தால்
என் வாழ்க்கை எங்கேயெல்லாமோ போயிருக்கும். இப்படி நடக்கும் என்று
அப்போது யாருக்கு தெரியும்? நீ இரண்டு மாதம் முன்புதான் இங்கு வேலைக்கு
சேர்ந்தாய். நான் 15 வருடமாக இங்கே
இதே இடத்தில் நின்றபடி கோப்பை கழுவுகிறேன். அப்பொழுதெல்லாம் இது சின்ன
உணவகம். நான் மட்டும்தான் வேலை செய்தேன். இப்போதுபோல நகரும் பெல்ட்
கிடையாது. மெசின் கிடையாது. கையிலே கையுறையை மாட்டிக்கொண்டு அத்தனை
பிளேட்டுகளையும் கழுவிமுடிப்பேன்.'
எந்த ஊர் உங்களுக்கு?
'நான் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் படித்தேன். ஒவ்வொரு
வகுப்பிலும் நான் முதலாவதாக வருவேன். குலசேகரம் இரண்டாவதாக வருவான்.
போட்டி எங்கள் இருவருக்குமிடையில்தான். நான் 98
மார் வாங்கினால் மீதி இரண்டு எங்கே என்று அப்பா கேட்பார். மறதியாக
பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டேன் என்பது அவர் எண்ணம். வருடக் கடைசியில்
பரிசளிப்பு விழா அன்று நான் மேடைக்கு போய் எல்லாப் பரிசுகளையும்
அள்ளிவருவேன். என் அப்பாவின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட
முடியாது. அவர் மந்திகை ஆஸ்பத்திரியில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்தார்.
பரிசு கிடைத்த மறுநாள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று
மருத்துவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து என்னை புகழ்ந்து தள்ளுவார்.
நான் கூச்சத்தில் நெளிவேன்.
'இலங்கை முழுக்க ஒரே சமயத்தில் நடந்த ஓ லெவல் பெரிய சோதனையில் எட்டுப்
பாடத்திலும் எனக்கு அதி உயர் மதிப்பெண் கிடைத்தது. அடுத்தநாள் வந்த
வீரகேசரிப் பேப்பரில் குலசேகரத்தின் படத்தை முதல் பக்கத்தில் பெரிசாகப்
போட்டிருந்தார்கள். வடமாகணத்தில் அவன் முதலாவதாக வந்திருந்தான்.
மதிப்பெண்கள் கூட்டுத்தொகையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் என்னை
வென்றுவிட்டதால் அவனை பாராட்டி எழுதியிருந்தார்கள். இரண்டாவதாக வந்த
என்னைப்பற்றி ஒரு வரியில்லை. அப்பாவால் அந்த ஏமாற்றத்தை தாங்கவே
முடியவில்லை. அன்று வேலைக்குப் போகாமல் வீட்டுக்கும் வராமல்
வீதிவீதியாக அலைந்தார். அப்பொழுதுதான் அப்பாவுக்கு அது எத்தனை பெரிய
இழப்பு என்பது எனக்குப் புரிந்தது.
'குலசேகரம் மேல்படிப்புக்கு கொழும்பு போய்விட்டான். இந்த தோல்வியை
எப்படியும் சரிக்கட்ட வேண்டுமென்று அப்பா தீர்மானித்தார். பல்லியின்
வயிற்று முட்டை வெளியே தெரிவதுபோல அப்பா மூளையிலே ஓடுவது எனக்கு
தெரியும். அவருடைய முடிவைக் கேட்டு அம்மாவுக்கும் எலும்பு
தங்கச்சிக்கும் ஒரே அதிர்ச்சி. 'நீ கனடாவுக்கு போ. அங்கே படிச்சு பெரிய
டொக்டராக திரும்பு. உன்ரை மதிப்பு இங்கே ஒருவருக்கும் தெரியவில்லை'
என்றார் அப்பா. அம்மா அழத் தொடங்கினார். எனக்கு முழங்கால்கள் ஆடின.
எலும்புத் தங்கச்சி நான் படிக்கும் மேசையை பிடித்து தன்னுடைய சாமான்களை
அடுக்க ஆரம்பித்தாள்.
'அப்பொழுது கனடா ரேட் 80,000
ரூபாய். அப்பா நாலு பேரிடம் அநியாய வட்டிக்கு காசு கடன் வாங்கி
ஏஜண்டுக்கு கட்டினார். நான் கொழும்பிலிருந்து புறப்பட்ட வருடம்
1984. இந்திராகாந்தி கொலைசெய்யப்பட்ட அதே
வருடம்; அதே மாதம். எனக்கு 18 வயது.
கட்டுநாயக்கா விமானநிலையத்தை அடைந்தபோது அப்பாவின் கண்களில் நீர்
வழிந்ததை முதல் தடவையாகப் பார்த்தேன். ஒரு மார்க் வித்தியாசத்தில் நான்
தோற்றது அப்பாவை அப்படி பைத்தியமாக்கிவிட்டது.'
எந்தப் பாதையில் வந்தனீங்கள்?
'எல்லோரும் வந்ததுபோல கிழக்கு பெர்லின, மேற்கு பெர்லின், ஸ்பெயின்,
மெக்சிக்கோஇ பின்னர் கனடா. எரிபொருள் நிரப்ப விமானம் மொன்ரியோலில்
தரையிறங்கியபோது ஏஜெண்ட் சொல்லித்தந்தமாதிரி நான் குடிவரவு அதிகாரியிடம்
போய் அகதிக்கோரிக்கை வைக்க அவரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். விமானக்
காப்டனுக்கு கோபம் உச்சிக்கு போனது. விசா இல்லாமல் என்னைக்
கொண்டுவந்ததால் காப்டன் 1500 டொலர்
தண்டக்காசு கட்டவேண்டி நேர்ந்தது. ஒரு நவம்பர் மாதத்து நடுங்கும்
குளிரில் மெல்லிய சேர்ட், மலிவான பாட்டா சப்பாத்து அணிந்தபடி நான்
கனடாவுக்குள் நுழைந்தேன்.
'எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. என்னிடம் சொந்தமாக இருந்தது
10 ஆங்கில வார்த்தைகள்தான். வேலை
தேடுவதற்கு எனக்கு ஆங்கில வார்த்தைகள் போதாது. இதே உணவகத்தில் கோப்பைகள்
கழுவும் வேலை கிடைத்தது. நான் உடனே சம்மதித்தேன். ஏனென்றால் அதற்கு மொழி
தேவையில்லை. கோப்பைகளுடன் எந்த மொழியிலும் பேசலாம். ஓர் இத்தாலியன்
இந்த உணவகத்தை நடத்தினார். இரவு 11
மணிவரை களைப்பில்லாமல் வேலை செய்வேன். முதலாளிக்கு என்னைப்
பிடித்துக்கொண்டது. அங்கே வேலை செய்த ஒரே தமிழ் ஆள் நான்தான்.
கோப்பைகளில் அத்தனை வகை இருந்தது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. சாலட்
கோப்பை அகலமாக இருக்கும். சூப் கோப்பை கொஞ்சம் ஆழமாக இருக்கும்.
உணவுக்கோப்பை தட்டையாக விளிம்பில் தங்கரேகை வரைந்திருக்கும். சிறிய அளவு
சைட் கோப்பை. இது தவிர காப்பி, தேநீர் கோப்பைகள். வைன் கோப்பைகள் என
விதம் விதமாக என்னிடம் கழுவுவதற்கு வரும். அவற்றை ஆசையுடன் தடவித்
தடவிக் கழுவுவேன்.
'சமையல் பாத்திரங்களைக் கழுவும்போது எனக்கு வீட்டு நினைப்பு
வந்துவிட்டும். கண் கலங்கும். சில பாத்திரங்களை என்னால் தூக்கவே
முடியாது. கையுறையை போட்டுக்கொண்டு தேய்த்து தேய்த்து கழுவவேண்டும்.
சகல வேலைகளையும் நான் இழுத்துப்போட்டு செய்வேன். எனக்கு 19
வயது நடந்துகொண்டிருந்தது. நிறைய அகதிகள் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம்
வேலை தேடிக்கொடுத்தேன். நண்பர்கள் சேர்ந்தார்கள். விருந்துகள்,
கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், மதுக்கடைகள் என என் சுதந்திரத்தை
பெருக்கிக்கொண்டேன்.'
நீங்கள் டொக்டருக்கு படிக்க அல்லவோ வந்தனீங்கள்?
''அதைத்தான் சொல்ல வாறன். எனக்கு கிடைத்த அளப்பரிய சுதந்திரத்தை முதல்
முறையாக அனுபவித்தேன். நானே எனக்கு முதலாளி. ஒருவரிடமும் அனுமதி
கேட்கவேண்டிய அவசியமில்லை. கையிலே காசு வந்தபடியே இருந்தது.
நண்பர்களுடன் தினம் தினம் கேளிக்கைகளையே மனம் நாடியது. உணவகம் மூடிய
பின்னர்தான் எங்கள் நாள் ஆரம்பமாகும். இரவு இரண்டு மூன்று மணிவரை
கூத்தடிப்போம். மிக மகிழ்ச்சியாக இருந்த காலகட்டம்.
'ஒரு விசயம் சொல்ல மறந்துவிட்டேன். கிராமத்தில் வந்தனா என்று எனக்கு ஒரு
சிநேகிதி இருந்தாள். எங்கள் கிராமத்தில் அவளைத் தாண்டி வேறு அழகி
கிடையாது. ஆயிரம் பறவைகள் சிறகடித்து எழும்புவதுபோல அடிவயிற்றில்
இருந்து குரலெடுத்து சிரிப்பாள். எலும்புத் தங்கச்சியுடன் படித்தாள்.
16 வயதுதான். அடிக்கடி வீட்டுக்கு
வந்ததில் பழக்கம். என்மேல் உண்மையான நேசம் வைத்திருந்தாள். அவளைக்
கைவிடமாட்டேன் என்றேல்லாம் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டுத்தான்
புறப்பட்டேன். அவளிடமிருந்து வந்த முதல் கடிதத்துக்கு பதிலெழுதினேன்.
அடுத்த கடிதத்துக்கு இரண்டு வாரம் கழித்து பதில் போனது. அதன் பின்னர்
உதாசீனம் செய்தேன். உணவகத்துக்கு அடிக்கடி வந்த ஒரு பெண்ணுடன் நட்பு
ஏற்பட்டு மோதிரம்கூட மாற்றியிருக்கிறேன். பின்னர் அது உடைந்துவிட்டது.'
என்ன மோதிரமா?
'முட்டாள்இ இல்லை எங்கள் காதல். என்னுடைய நண்பர்கள் ஒரு கோரிக்கை
வைத்தார்கள். 'நீ சீட்டுப்போடு. உனக்கு நல்ல மதிப்பிருக்கு.' அப்படி
தூண்டினார்கள். என் வாழ்க்கையின் பாதையை மாற்றப் போகும் சங்கதி அது.
நான் சம்மதித்தேன். இரண்டு சீட்டு ஆரம்பித்தேன். நான் நீ என்று
போட்டிபோட்டுக்கொண்டு 50 பேர் சேர்ந்தார்கள். எல்லோருமே அகதிகள். சீட்டு
வழக்கப்படி முதல் சீட்டு எனக்கு கிடைத்தது. என் கையில் 24இ000 டொலர்.
நினைத்துப் பார்க்க முடியாத தொகை. நண்பர்கள் கார் வாங்கச் சொன்னார்கள்.
புத்தம் புது செவர்லே நோவா 18,000
டொலர் காசு கொடுத்து வாங்கினேன். 20 வயது தமிழ் அகதி ஒருத்தன் கனடாவில்
புதிய கார் வாங்கியது சரித்திர நிகழ்வு.
'புதுக்காருடன் வேறு புதிய நண்பர்களும் சேர்ந்தார்கள். ஆடம்பரமான
கேளிக்கைகளில் நாட்கள் ஓடின. அந்த வாழ்க்கை நிரந்தரமானது என்று என் மூளை
நினைத்ததுதான் ஆச்சரியம். எறும்புக்கு செட்டை முளைத்ததும் சுதந்திரம்
கிடைத்துவிட்டதென்று எம்பிப் பறக்கும். அதுதான் சாவு என்பது அதற்கு
தெரியாது. நண்பர்களுடன் காரை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்கும்
சுற்றினேன். நான் வந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. ஒருநாள்
அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. 'உன்னுடைய நண்பன் குலசேகரம்
டொக்டருக்கு படிக்கிறான். நீ எப்பொழுது டொக்டராகப் போகிறாய்?'
'அடுத்த நாள் காலை சாவதானமாக அமர்ந்து கணக்குகள் பார்த்தேன். நான்
கொடுக்கவேண்டிய சீட்டுக் கடன் 15,000
டொலராக உயர்ந்திருந்தது. என்னுடைய பெயரைக் காப்பாற்ற இன்னொரு சீட்டு
தொடங்கினேன். புது சீட்டில் காசு எடுத்து பழைய கடனை அடைத்தேன். பழைய
குழியை மூடுவதற்கு புதிய குழியை தோண்டுவதுபோலத்தான். அப்படியே கடனில்
மூழ்கிக்கொண்டிருந்தேன். என் காரை விற்றேன். கடன்காரர்கள் என்னை
நெருக்க ஆரம்பித்தார்கள். தொலைபேசி அழைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து
எரிச்சலூட்டின. இரவு தூங்க முடியவில்லை. இரவோடு இரவாக இடம் மாறினேன்.
உணவகத்துக்கு சிலர் வந்து முதலாளிக்கு தொல்லை கொடுத்தார்கள். நிலைமை
கட்டுமீறி போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் என் வாழ்க்கையை
மாற்றப்போகும் இரண்டாவது முடிவு எடுத்தேன்.
'1988ம் வருடம் நடந்துகொண்டிருந்தது. அகதி வழக்கு முடிந்து நான்
நிரந்தர வதிவிடவுரிமை பெற்றிருந்தேன். உலகத்தின் எந்தப் பாகத்துக்கும்
நான் தயக்கமில்லாமல் பிரயாணப்படலாம். ஒரு நண்பன் ஆலோசனை சொன்னான். 'நீ
ஒரேயொருமுறை இந்தியாவுக்கு போய் திரும்பி வரும்போது ஒரு பார்சல்
கொண்டுவா. உன் கஷ்டமெல்லாம் ஒழிந்துபோகும்.' நான் கோப்பைகள் மட்டும்
கழுவி என் கஷ்டத்தை தீர்க்க முடியாது. அது எனக்கு புரிந்தது.
'நண்பன் பயணத்துக்கு பொறுப்பேற்றான். டிக்கட், பொருள் வாங்கக் காசு
என்று மற்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்தார்கள். பார்சலைக்
கொண்டுவந்து ஒப்படைத்ததும் கையில் 50,000
டொலர் கிடைக்கும். பிரச்சினை தீர்ந்தது. பம்பாயில் ஒரு சின்ன ஹொட்டலில்
என்னை ஒரு பெண் வந்து சந்தித்தாள். பாதி அவித்த பன்றி இறைச்சிபோல வெள்ளை
நிறம். மூஞ்சூறுபோல முகம். கண்களைப் பார்க்காமல் குனிந்து என் கால்களைப்
பார்த்து பேசினாள். அவளிடம் 20,000
இந்திய ரூபாய் கொடுத்ததும் 'பொருள் வந்து
சேரும்' என்று ரகஸ்யக் குரலில் சொல்லிவிட்டு திரும்பி பாராமல் போனாள்.
நான் காத்திருந்தேன். இரண்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்த ஹெரோயினும்,
இரண்டு சமமான சைஸ் புது சூட்கேசுகளும் வந்தன. அதைத் தூக்கிக்கொண்டு
வந்தவன் உறுமால் கட்டி, அழுக்கான உடையில் ஒல்லியாக தேநீர்க் கடையில்
வேலை செய்பவன்போல காட்சியளித்தான். அவன் செய்த காரியம் ஆச்சரியமானது.
1000 தடவை ஒன்றைச் செய்து
பழக்கப்பட்டவன்போல மளமளவென்று காரியத்தில் இறங்கினான். கூரிய கத்தியை
உருவி எடுத்து சூட்கேஸின் உள்பாகத்தை துப்புரவாக வழித்து எடுத்தான்.
சூட்கேஸின் கோதுதான் எஞ்சியது. அடுத்த சூட்கேஸை எடுத்து வெளிப்பாகத்தை
வெட்டித் தள்ளினான். அதன் உள்பக்கத்தை கோதுபோல இருந்த அடுத்த
சூட்கேசுக்குள் நுழைத்தபோது அது கச்சிதமாகப் பொருந்தியது. பிளாஸ்டிக்
பைகளை இடைவெளிகளில் செருகி ஒருவித பசையால் மூடி மெழுகினான். பளபளவென்ற
புது சூட்கேஸ். உள்ளே போதைப்பொருள் அடைக்கப்பட்டிருக்கிறது என்ற
சந்தேகம் எவருக்கும் எழாது.
'ரொறொன்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கி, ஒரு வாடகைக்காரை எடுத்து
செலுத்திக்கொண்டு நேரே நண்பனின் வீட்டுக்கு போனேன். அவன் தயாராக
இருந்தான். அவனையும் காரில் ஏற்றிக்கொண்டு லோரன்ஸ் வீதி போர்ட்யூனியன்
சந்தியில் இருக்கும் வீட்டுக்குப் போனோம். அதுதான் முகவரி. சூட்கேசைப்
பிளந்து பொருளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஆட்டிக்கொண்டு
நண்பன் இரண்டாம் மாடிக்கு போனான். சிறிது நேரத்தில் திரும்பிவந்தான்.
அவன் கையில் ஒரு கட்டுக் காசு; 50,000
டொலர்கள். அதைத் தொட்ட கணம் எனக்கு
நம்பமுடியாத பரவசம் ஏற்பட்டது. நான் வாகனத்தை பின்னுக்கு எடுத்து
வளைத்து திருப்பிக்கொண்டு புறப்பட்டேன். சதி இன்பத்துக்கு நிகர் இல்லை.
மனது பறந்து பறந்து பிளான் போட்டது. திடீரென்று மூன்று பொலீஸ்கார்கள்,
சைரன் ஒலி காதைப் பிளக்க, சிவப்பு நீல விளக்குகள் சுழல, எங்களை
சூழ்ந்துகொண்டன. ஒன்று முன்னால் மறித்தது. ஒன்று பின்னால்; இன்னொன்று
பக்கவாட்டில். எங்கே எப்படி சடுதியாக வந்தன என்பது புரியவில்லை.
'பக்கவாட்டு காரிலிருந்து இரண்டு பொலீஸ்காரர்கள் உரத்துக் கத்தியபடியே
துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டு குதித்தார்கள். 'பணத்தை எடு? பணத்தை எடு?'
எத்தனை ஹொலிவுட் படங்களில் பார்த்திருக்கிறேன். நான் அப்பாவிபோல
பர்ஸிலிருந்து 40 டொலரை எடுத்து
நீட்டினேன். அவர்கள் பணக்கட்டை பறித்தெடுத்து கையிலே விலங்கு மாட்டி
என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். 50,000
டொலர் பணக்கட்டு என் கையிலே இருந்தது 40
செக்கண்டுகள்தான். இத்தனையும் கண்மூடித் திறப்பதற்குள் நடந்து
முடிந்துவிட்டது.
'அடுத்த நாள் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ரொறொன்ரோ ஸ்டார்
பத்திரிகை செய்தி வெளியிட்டது. 'ஜெயில் உடைப்பு திட்டம் முறியடிப்பு.
சண்முகம் சபாநாதன் கைது. பொலீஸ் வலையில் சிக்கியது கள்ளக் கடத்தல்
கும்பல். 7.5 மில்லியன்
மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.' ஜெயில் உடைப்புக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம்? போகப்போக எனக்கு உண்மை விளங்கத் தொடங்கியது.
வெறும் 20,000 ரூபாய்க்கு
பம்பாயில் வாங்கிய போதைப்பொருளின் உண்மையான வீதி மதிப்பு ரொறொன்ரோவில்
7.5 மில்லியன் டொலர். ஜெயிலில்
இருந்த மாஃபியா கும்பலுக்கு போதைப் பொருளைக் கடத்த ஒரு ஏமாளி
தேவைப்பட்டான். அது நான்தான். எனக்கு 50,000
டொலர்; மீதிப் பணம் ஜெயிலை உடைத்து வெளியே வர அவர்களுக்கு தேவைப்பட்டது.
ஆனால் பொலீஸ் அவர்கள் சம்பாசணையை டெலிபோனில் ஒட்டுக்கேட்டு எங்கள்
வருகைக்காக காத்திருந்தது. அப்படித்தான் நாங்கள் மாட்டினோம்.'
வழக்கு முடிவு என்ன மாதிரி?
'ஏழுவருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார்கள். அதி உயர் பாதுகாப்புச்
சிறை. கிங்ஸ்டன் மில்ஹாவென் புளொக் சியில் என்னை அடைத்தார்கள். ஒரு
சிறைக்கூடத்தில் இரண்டு பேர். என்னைக் கண்டதும் அங்கேயிருந்த கைதி 'என்
பெயர் மார்ட்டின். நீ மேலே படு' என்றான். அவ்வளவுதான். அதிகம்
பேசமாட்டான். நெஞ்சிலே மண்டை ஓடு படம் பச்சை குத்தியிருந்தான். கூடைப்
பந்து விளையாட்டுக்காரன் போல உயரமான கறுப்பு மனிதன். தலைமுடி
விழுதுகள்போல தொங்கின. பல மாதங்கள் சென்று கேள்விப்பட்டேன் அவன் ஒரு
பள்ளி மாணவியை கொலை செய்தான் என்று.
'அறையில் சுவருடன் பொருத்திய ரிவியும், ரேடியோவும் இருந்தன. கண்ணாடி
கிடையாது. மினுக்கிய உலோகத்தகடு ஒன்று தண்ணீர் குழாய்க்கு மேலே
பொருத்தப்பட்டிருந்தது. மார்ட்டினுக்கு பிடிக்காத ஏதாவதை செய்தால்
உறுமுவான். நான் செய்துகொண்டிருக்கும் காரியத்தை நிறுத்திவிடுவேன்.
நீள்சதுர ஓட்டை ஒன்று கதவிலே இருக்கும். மூன்று நேரச் சாப்பாடும்
அந்தந்த நேரம் உலோக பிளேட்டில் உள்ளே தள்ளப்படும். நான் உடனே
சாப்பிடாவிட்டால் அவனே சாப்பிட்டுவிடுவான். 'நான் காலை எழும்புவதற்கு
5 நிமிடம் முன்பே வயிறு
எழும்பிவிட்டது. பசி மோசமானது. அதற்கு எதிர்ப்பதம்கூட இல்லை. யோசித்தாயா?'
என்பான். காலை உணவுக்குப் பின் 'தூங்குஇ தூங்கு. தூக்கம் கண்களைப்
பழுதாக்காது' என்று அறிவுரை பகர்வான்.
'ஒருநாள் அறை ரேடியோவை மார்ட்டின் திருகினான். எதோ ஸ்டேசனை தேடியபோது
திடீரென்று தமிழ் பாட்டு கேட்டது. நான் எழுந்து ஓடிப்போய் ரேடியோவின்
முன் நின்றேன். ஒரு சாதாரண பாட்டு அன்று என்னை எங்கேயோ தூக்கிப் போனது.
பாடாதபாட்டெல்லாம்பாடவந்தாள்
காணாதகண்களைகாணவந்தாள்
பேசாதமொழியெலாம்பேசவந்தாள்
பெண்பாவைநெஞ்சிலேஆடவந்தாள்.
அவ்வளவுதான். ரேடியோவை வேறு ஸ்டேசனுக்கு மாற்றிவிட்டான். வந்தனாவுக்கு
பிடித்த பாட்டு. வீட்டு வேலை செய்யும்போதெல்லாம் அந்தப் பாட்டை
முணுமுணுத்தபடியே இருப்பாள். அன்று முழுக்க அவளை நினைத்தேன். சுகமாக
இருந்தது. அவளை எதற்காக நிராகரித்தேன் என்ற காரணத்தை கண்டுபிடிக்கவே
முடியவில்லை.
'பழகப் பழக மார்ட்டினை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. இரவு படுக்க
முன்னர் முழங்காலில் நெடுநேரம் உட்கார்ந்திருப்பான். 'என்ன செய்கிறாய்?'
என்று கேட்பேன். 'உலகத்து உடமைக்காரருடன் பேசுகிறேன்' என்பான். ஒரு
சிறுமியை அவன் கொலை செய்தான் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. நன்னடத்தை
காரணமாக என்னை 4 வருடத்தில் வெளியே விட்டபோது எனக்கு அவனைப் பிரிவது
கஷ்டமாகவிருந்தது. விடைபெறும்போது 'சபா' என்று என்னை முதல்தடவையாக
பெயர்சொல்லி அழைத்தான். அதற்குமேல் அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.'
வெளியே வந்து என்ன செய்தீர்கள்?
'நாலுவருட காலம் ஒலி மூலமே வாழ்க்கையை அறிந்தேன். இரும்புக்கதவுகள்
பூட்டும் சத்தம். காவல்காரர்களின் அதட்டல்கள்; பூட்ஸ் ஒலிகள். உணவுப்
பிளேட்டுகள் உராயும் ஓசை. கைதிகளின் அலறல். பூமி அமைதியாக இருந்தது.
நண்பர்கள் மறைந்துவிட்டார்கள். என்னுடைய நிழல்கூட எனக்கு எதிரியாக
மாறிவிட்ட சமயம் என் பழைய முதலாளி என்னை மறக்கவில்லை. கோப்பைகள்
எனக்காக காத்திருந்தன. நாலு வருடமாக உலோகப் பிளேட்டுகளை பார்த்த எனக்கு
பீங்கான் கோப்பைகளைக் கண்டபோது ஏற்பட்ட உற்சாகம் சொல்ல முடியாது. 'நாளை
தொடங்குவேன்' என்றேன். என் முதலாளி 'நாளை உன் அறிவு இரண்டு
மடங்காகிவிடுமா? இன்றே தொடங்கு' என்றார். இதுவரை 2
மில்லியன் கோப்பைகள் கழுவி என் கடன்களை தீர்த்திருக்கிறேன்.'
நீங்கள் வேறு வேலைக்கு மாறலாமே?
'எதற்கு? திமிங்கிலம் செத்தாலும் அதன் எடை அதேதான். 35
வயதுக்கு பின்னர் மனிதனுக்கு ஒன்றுக்குமே அதிர்ச்சி தருவதில்லை.
வகுப்பிலே எனக்கு போட்டியாக இருந்த குலசேகரம் இப்ப லண்டனில் நரம்பியல்
நிபுணராக இருக்கிறான். உலகத்திலுள்ள அதி உயர் 10 நரம்பியல் நிபுணர்களில்
அவனும் ஒருவன். நானும் ஒருவகையில் அப்படித்தான். உலகத்து கோப்பை கழுவும்
நிபுணர்களை வரிசைப் படுத்தினால் 2
மில்லியன் கோப்பைகள் கழுவிய நான் முன் வரிசையில் முதலில் நிற்பேன்.'
உங்களுக்கு ஏதாவது துக்கம் உண்டா?
'என் விதியை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன். முடிவு என்று நாங்கள்
நினைப்பது உண்மையில் ஒரு துடக்கம்தான். உண்மை விதவைக்கோலம்
பூண்டிருக்கும, பொய்யோ மணப்பெண்போல அலங்காரத்துடன் காட்சியளிக்கும்.
என்னை பொலீஸ் பிடித்த மறுநாள் வீரகேசரிப் பேப்பர் என் படத்தை
முன்பக்கத்தில் போட்டு இப்படி எழுதியது. 'இலங்கைத் தமிழர் சண்முகம்
சபாநாதனின் கனடா ஜெயில் உடைப்பு தோல்வி. 7.5
மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.' அதைப்
பார்த்த என் அப்பாவின் மனம் என்ன பாடு பட்டிருக்கும். ஒரு மார்க்
தவறியதால் கனடாவுக்கு புறப்பட்ட மகனா இவன் என்று எப்படியெல்லாம்
தவித்திருப்பார். செய்தியை நம்ப முடியாமல் பத்திரிகையை கையில்
பிடித்தபடி, குழந்தையில் என்னைக் கூப்பிடும் 'சபுக்குட்டி, சபுக்குட்டி'
என்ற பெயரை உச்சரித்துக்கொண்டு ரோட்டு ரோட்டாக அலைந்து திரிந்தார் என்று
பின்னர் கேள்விப்பட்டேன். அவரை சமாதானம் செய்யவோ அவரிடம் மன்னிப்பு
கேட்கவோ எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு மாதத்தில் இறந்துபோனார்.'
நகரும் பெல்ட்டில் சூப் பிளேட, சாலட் பிளேட், சைட் பிளேட், உணவுப்
பிளேட் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு இருந்தன. நான் ஒரு சூப்
கோப்பையை எடுத்தேன். அவர் சாலட் கோப்பையை எடுத்தார். மேலும் நூற்றுக்
கணக்கான கோப்பைகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன.
|