வால்காவிலிருந்து கனடாவரை

.முத்துலிங்கம்

15 வயதுக்கு பிறகு நான் சந்தித்த பரீட்சைகளில் எல்லாம் பரீட்சையே வென்றது. புத்தகத்தை தூக்கி அலுத்துவிட்டது. பக்கத்து வீட்டு சுதாகரன் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். இயக்கத்தில் சேர்ந்தால் துப்பாக்கியை தூக்கலாம், குறிபார்த்து சுடலாம், இடுப்பிலே குத்தலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். 1981ல் குட்டிமணியையும் தங்கத்துரையையும் கைது செய்தவுடன் இயக்கத்தில் சேரும் ஆட்களின் அளவு சட்டென்று கூடியது. அந்த அலையின் வேகத்தில் நானும் சேர்ந்தேன். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் 8 இயக்கங்கள் செயலாற்றின. நான் சேர்ந்த இயக்கத்தில் புத்தகப் படிப்பு முக்கியமானது. காலையில் உடல் பயிற்சி. மதிய நேரத்தில் இயக்க வேலைகள். மாலை தொடங்கி இரவுவரை புத்தகப் படிப்பு. பாம்புக்கு பயந்து கிணற்றில் குதித்த கதைதான்.

இயக்கவியல், வர்க்கம், உற்பத்தி சக்திகள், பொருள்முதல் வாதம் போன்ற வார்த்தைகளை முதல் நாளே நான் கற்றுக்கொண்டேன். அந்த இயக்கத்தில் ஆயுதங்களிலிலும் பார்க்க புத்தகங்களே அதிகமாக காணப்பட்டன. எங்கள் பொறுப்பாளர் எப்பொழுதும் கையில் ஒரு புத்தகத்தோடுதான் திரிவார். வெளியே புறப்படும்போது மாத்திரம் நீளக்கோடுபோட்ட சேர்ட்டை முழங்கைவரைக்கும் மடித்துவிட்டுக்கொண்டு சாரத்துக்குள் துப்பாக்கியை செருகியிருப்பார். சேர்ட் கடைசி பட்டனை திறந்துவிடுவதால் கைப்பிடி கொஞ்சம் வெளியே தெரியும். நான் ஏக்கத்தொடு பார்ப்பேன். இப்படி ஆறுமாதம் ஓடிய பின்னர்தான் ஒருநாள் பொறுப்பாளர் என்னைக் கூப்பிட்டு 'நீ இந்தியாவுக்கு உடனே புறப்படு. வேலையிருக்கு' என்றார். என் மனம் துள்ளி முதலிலேயே அங்கே போய்விட்டது. திரும்பும்போது என் கையில் ஏகே 47 துப்பாக்கி இருப்பதாக கற்பனை செய்தேன்.

நாங்கள் நாலு பேர் புறப்பட்டோம். மற்றவர்கள் சீனியர்கள், பலமுறை இந்தியா போய் பழக்கப்பட்டவர்கள். இம்முறை எதற்காகப் போகிறார்கள் என்ற ரகஸ்யம் என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததுஎன்னை ஓர் எடுபிடி போலவே நடத்தினார்கள்நெடுந்தீவு கடல் கரையில் வெகுநேரம் காத்திருந்தோம். இரவு 10 மணிக்கு வரவேண்டிய வள்ளம் இரண்டு மணிக்கு வந்தது. வள்ளத்திலிருந்து தீக்குச்சியை கிழித்து மூன்று முறை பற்ற வைத்தார்கள். அதுதான் சைகை. நாங்களும் அப்படியே செய்தோம். வள்ளம் கரைக்கு வந்தது. முழங்கால் அளவு தண்ணீரில் இவர்கள் பாய்ந்து ஏறினார்கள். அவர்களிடம் சின்னச் சின்ன கைப்பைகள் இருந்தன. என்னிடம் மட்டும் பெரிய பெட்டி கொடுக்கப்பட்டிருந்தது. நான் அதை தலையிலே காவி, வள்ளத்தில் ஏற்றி நானும் ஏறிக்கொண்டேன்.

வள்ளத்தை ஓட்டி வந்தது இரண்டு பேர். எங்கள் பாரத்தில் வள்ளம் தத்தளித்தது. எட்டு குதிரை சக்தி எஞ்சின் டுப்டுப்பென்று சத்தமிட வள்ளம் அசைந்து அசைந்து புறப்பட்டது. ஒரு கோழி தீன் பொறுக்க நடப்பதுபோல மெதுவான நகர்வு. வழக்கமாக நாலு மணி நேரத்தில் ராமேஸ்வரம் கரையை அடைந்துவிடலாம் என்று சொன்னார்கள். ஆனால் விடிந்துகொண்டு வந்தது. வள்ளம் டுப்டுப்பென்று சத்தம் போட்டு ஒரு கட்டத்தில் அதையும் நிறுத்திவிட்டு சட்டென்று நின்றது. ஒரு திசையைக் காட்டி கச்சத்தீவு அந்தப் பக்கம் இருக்கிறது என்றார்கள். 'எல்லோரும் கைலியை கழற்றுங்கள்' என்றான் வள்ளக்காரன். நான் தயங்கினேன். மற்றவர்கள் கடகடவென்று கழற்றினார்கள். ஒரு புது தொழில்நுட்பம் அங்கே உருவானது. அனைத்து கைலிகளையும் விரித்து பாய்போல பிடிக்க வள்ளம் மெள்ள மெள்ள அசைந்து கச்சத்தீவு கரையை அடைந்தது.

இப்பொழுதுதான் வள்ளக்காரர்களைப் பார்த்தேன். ஒருத்தனுக்கு என் வயதிருக்கும். பெயர் ரமேசு என்றான். மற்றவனுக்கு 40 மதிக்கலாம். தினமும் இப்படி நடப்பதுபோல ஒருவித பதற்றமும் இல்லாமல் எஞ்சினை பழுது பார்த்தார்கள். என்னுடன் பயணித்த சீனியர்கள் மாதாகோவிலுக்கு தொழப் போய்விட்டார்கள். என்னை விட்டுவிட்டு வள்ளம் போய்விடுமோ என்ற பயத்தில் நான் அன்று முழுக்க அங்கேயே காத்திருந்தேன். இரவு வள்ளம் புறப்பட்டு ராமேஸ்வரம் கரையை அடைந்தது. சீனியர்கள் என்னைத் திரும்பி பாராமல் தங்கள் தங்கள் சாமான்களை தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். ரமேசுதான் என் பெட்டியை தூக்க உதவிசெய்தான். அதில் இருந்தது அத்தனையும் சுவிட்ச் குடைகள். பட்டனை அமர்த்தியதும் குடை இரண்டு மடங்கு நீண்டு பின் விரியும். அதை வாங்குவதற்கு ஒருத்தன் ஏற்கனவே அங்கே காத்திருந்தான். அவன் தந்த காசுக்கட்டை எண்ணி சேர்ட்டின் உள்பக்கத்தில் இருந்த பொக்கற்றுள் வைத்தேன்.

ரமேசு சொன்னான். 'இங்கே பொலீஸ் நடமாட்டம் அதிகம். உடனே குளித்து உடைமாற்று. அவர்கள் உன்னைப் பிடித்தால் நக்கிப் பார்ப்பார்கள். உப்பு கரித்தால் கைதுசெய்துவிடுவார்கள்.' அப்படியே செய்தேன். தங்குவதற்கு இடமில்லை. இரண்டாம் காட்சி சினிமாவுக்கு ரமேசு கூட்டிப்போனான். சூடம் காட்டிய பிறகு எம் ஜி ஆரின் படம் போட்டார்கள். படத்தின் பெயர் நினைவில் இல்லை. சரோஜாதேவியும் அவரும் காதல் சீனில் 'குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேணும்' என்று பாடியபோது தூங்கிவிட்டேன். அந்தப் பெரிய ராமேஸ்வரத்தில் அன்றைய இரவு குடியிருக்க எனக்கு ஒரு அறை கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலை ரமேசு என்னை மதுரைக்கு ரயில் ஏற்றிவிட்டான்.

ஸ்டேசனுக்கு போகும் வழியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு இடத்தில் சனங்கள் தள்ளுப்பட்டபடி கூட்டமாக நின்று எதையோ வேடிக்கை பார்த்தார்கள்இடையிடையே கைதட்டலும் பெரிய சத்தமும் கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தேன். ரமேசு  என்னை தடுத்தபடி அவசரப்படுத்தினான். அப்படியே உறைந்துபோனேன். நான் கொண்டு வந்த சுவிட்ச் குடைகள் படுவேகமாக விற்பனையாகின. ஆட்கள் இரண்டு குடை, மூன்று குடை என்று அடித்துப் பிடித்து வாங்கிக்கொண்டு போனார்கள். 'இந்தக் குடை பற்றறியில் இயங்குகிறது. சுவிட்சை அமத்தியவுடன் பற்றறி மேலே போய் குடை விரியும். மழைபெய்தால் உள்ளே பல்பு எரியும். இருட்டிலே வெளிச்சம் இருக்கும். மழையில் நனையாமலும் போகலாம்' என்று கத்தினான் விற்பனைக்காரன். நான் ஸ்டேசன் போய்ச் சேருவதற்குள் குடை முழுவதும் விற்றுத் தீர்ந்துவிடும்போல இருந்தது. என்னால் அவனுடைய எக்கச்சக்கமான கற்பனையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

மதுரையிலே பொறுப்பாளர் இருக்கும் இடத்துக்கு வழிவழியாக விசாரித்தபடி போய்ச் சேர்ந்தேன். அவர் ஒரு கட்டிலிலே படுத்திருந்தார். பிள்ளை பெறப்போகும் பெண்கள் முழங்கால்களை உயரமாக மடித்து படுத்திருப்பார்களே, அப்படி. பின்னர்தான் தெரிய வந்தது அவர் படுப்பது அப்படித்தான் என்று. காசுக்கட்டை வாங்கி உதவியாளரிடம் கொடுத்தார். பிறகு படுத்தபடியே கட்டளைகள் பிறப்பித்தார். இரண்டு மாத காலம் அவரிடம் வேலைசெய்தேன். படுத்தபடி புத்தகம் படிப்பார்; பற்றறி முடிந்துவிட்டது போலத்தான் இயங்குவார். அவர் கொடுக்கும் வேலைகளைச் செய்தேன். அனைவரும் என்னை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். என் கடமைகளில் நான் வெற்றிபெற்றால்தான் அடுத்த கட்டத்துக்கு தயாராவேன். ஆயுதப் பயிற்சி. அதற்குப் பின்னர் என் வளர்ச்சி எங்கோ போய்விடும்.

நான் கற்பனை செய்தது ஒன்றுமே அங்கே நடக்கவில்லை. நான் வெறும் வேலைக்காரனாகவும் அவ்வப்போது தூதுவனாகவும் செயல்பட்டேன். 'இந்தக் கடிதத்தை மட்ராஸ் கொண்டுபோய்க்கொடு' என்பார்கள். எனக்கு தொடைகள் ஆடத் தொடங்கும். 'அங்கே என்ன பாஷை பேசுகிறார்கள்?' என்று கேட்பேன். 'பயப்படாதே, தமிழ்தான். தண்ணீருக்கு அடியில் நின்று பேசினால் எப்படி ஒலிக்குமோ அப்படி ஒலிக்கும். பழகிவிடும்' என்றார்கள். பழகவேயில்லை. 'இந்தப் பார்சலை வேதாரண்யத்தில் சேர்க்க வேண்டும்.' நான் உடனே துள்ளிக்கொண்டு புறப்படுவேன். வேதாரண்யம் எனக்கு பிடிக்கும். அங்கே இரண்டு மாத காலம் வேலை பார்த்தேன். பொறுப்பாளர் பெயர் சிவா. அரும்பு மீசை வைத்து, பாதி பழுத்த தக்காளிபோல சிவப்பாயிருப்பார். அவரிடம் ஒரு வசீகரம் இருந்தது. டீ சேர்ட்டை தலைக்கு மேலால் கழற்றும் அதே நேரத்தில் முகச் சவரம் செய்வார். ஒருநாள் அவரிடம் நேரிலே கேட்டுவிட்டேன். 'சிவா அண்ணை. நான் பெரிய எதிர்பார்ப்போடு வந்தேன். என்னை பயிற்சிக்கு அனுப்பவே இல்லை.' அவர் வெள்ளைப் பற்களைக் காட்டி கடகடவென்று சிரித்தார். 'நீர் பயிற்சியில்தான் இருக்கிறீர்.' 'அப்படியா?' என்றேன் திகைத்துப்போய். 'எங்கள் வேலை ஒருவருடைய திறமையை கண்டுபிடிப்பது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது. அது அவர்களுக்கே தெரியாது. இங்கே அடிக்கடி வருவானே ராஜீவ், அவனுடைய திறமை என்ன தெரியுமா? இலக்குத் தவறாமல் சுடுவது. இருட்டிலே குரல் வரும் திசையை ஊகித்து சரியாகச் சுடுவான். பலமுறை அவனை பரீட்சித்திருக்கிறேன். ஒருதடவையேனும் குண்டு தவறவில்லை. அந்தத் திறமை அவனிடம் இருப்பது அவனுக்கே தெரியாது. அதைக் கண்டுபிடித்தது நாங்கள்தான்.'

மணி என்று கூப்பிட்டார். அவன் வந்தான். அவனும் பயிற்சியில் இருப்பவன்தான். அன்றைய தினசரியை விரித்து ஏதேனும் ஒரு பாராவை என்னை சுட்டிக்காட்டச் சொன்னார். செய்தேன். மணி அதை ஒருமுறை படித்தான். பின்னர் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒப்புவித்தான். 'இவனுடைய திறமை ஞாபகசக்தி. பலவித தகவல்கள், சங்கேத வார்த்தைகள், செயல் எண்கள் அனைத்தையும் மனனம் செய்துள்ளான். 1000 தொலைபேசி இலக்கங்களுக்கு இவன் அதிபதி' என்றார். நான் ஆச்சரியத்தோடு அவனையே பார்த்தேன். 'இந்த அறையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்?' என்றார். நான் 'மூன்று' என்றேன். அவர் 'தவறு, நாலு' என்றார். எனக்கு பின்னாலிருந்து ஒருவன் வெளிப்பட்டான். அவன் அங்கே நுழைந்ததையோ என் பின்னால் போய் நின்றதையோ நான் கவனிக்கத் தவறிவிட்டேன். 'எந்தக் கூட்டத்தினுள்ளும் இவன் கலந்துவிடுவான். இவன் முகத்தை ஒருவரும் ஞாபகம் வைப்பதில்லை. பச்சைத்தண்ணி முகம். இதுதான் இவனுடைய திறமை.' அவர் பேசப்பேச எனக்குள் வியப்பு அதிகமாகியது. 'சிவா அண்ணை, என்னுடைய திறமை என்ன?' என்றேன். 'உன்னுடைய திறமையா? ஒரு திறமையும் இல்லை. அதுதான் உன்னுடைய சிறப்பு' என்றுவிட்டு வாய் திறந்து சிரித்தார். பின்னுக்கு அவர் வளைந்து நின்றபோது எனக்கு கோபம் வந்தாலும் உடனே மறந்துவிட்டேன். காரணம் அன்று மதியம் என்னை ஒரு முக்கியமான வேலையாக வெளியே கூட்டிப்போவதாகச் சொல்லியிருந்தார்.

சிவா அண்ணையின் பிரதம உதவியாள் நான்தான். அவர் நடந்தால் அவருடன் நான் நடக்க வேண்டும். அவர் நின்றால் நான் நிற்கவேண்டும். அவர் உட்கார்ந்தால் நான் நிற்கவேண்டும். அவர் படுத்தால் நான் நிற்கவேண்டும். ஒரு துப்பாக்கி விற்பனைக்கு இருப்பதாக மன்னார்குடியிலிருந்து தகவல் வந்தது. அதை வாங்குவதற்கு அவர் புறப்பட்டபோது நானும் போனேன். அன்று முழுக்க பல இடங்களில் அலைந்து கடைசியில் துப்பாக்கிக்காரரை கண்டு பிடித்தோம். அவரிடம் ஒரு 3.8 கைத்துப்பாக்கி விற்பனைக்கு இருந்தது. உடம்பில் மறைத்து எடுத்துப் போவதற்கு இலகுவானது. அதன் குழாயின் நீளம் 3.8 அங்குலம் மட்டுமே. விலையாக 1500 ரூபா கேட்டார். துப்பாக்கியை சோதனை செய்ய ஒரு குண்டுகூட அவரிடம் கிடையாது. இருந்தாலும் 800 ரூபா கொடுத்து சிவா அண்ணை அதை வாங்கினார். குண்டுகளை எப்படியும் வாங்கிவிடலாம் என்பது அவர் எண்ணமாயிருக்கும்.

சிவா அண்ணை ஒரு முக்கியமான விசயமாக என்னை யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு தயாராக இருக்கும்படி சொன்னார். இந்தப் பயணத்தில் என்னுடைய முழுத்திறமை வெளிப்பட்டால் என்னை அவர் ஆயுதப் பயிற்சிக்கு அனுப்பக்கூடும். அன்று மதியம் அவர் மேசையில் உட்கார்ந்து எழுதினார். நான் பக்கத்தில் விசுவாசமான காவல்காரன் நிற்பதுபோல விறைப்பாக நின்றேன். உள்ளே மீன் பொரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கார் வந்து சட்டென்று நின்றது. அதிலிருந்து பிரேமானந்தா சுவாமி இறங்கினார். அவருடைய பிரபலம் அனைவரும் அறிந்தது. இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர், புதுக்கோட்டையில் 150 ஏக்கரில் ஆச்சிரமம் அமைத்து நடத்தினார். உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள். இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும், பெல்ஜியத்திலும் அவருடைய ஆச்சிரமக் கிளைகள் இருந்தன. தாடியும் சடையுமாக நெற்றியிலே நீறணிந்து பார்த்தவுடனேயே மதிப்பு கொடுக்கக்கக்கூடியவராக தென்பட்டார். 'வாங்கோ சுவாமி' என்றார் சிவா அண்ணை. அவர் மரியாதை காட்டினாரே ஒழிய நாற்காலியை விட்டு எழும்பவில்லை. சுவாமி மீன் பொரியல் மணத்துக்கு மூக்கை சுளித்தபடி நாற்காலியில் அமர்ந்தார். சிவா அண்ணைக்கு சுவாமி ஏமாற்றுக்காரர் என்ற அபிப்பிராயம் இருந்தது. ஆனால் ஒன்றையும் வெளிக்காட்டவில்லை.

'தம்பி, யாழ் நூலகத்தை ராணுவம் எரித்துவிட்டது. இலங்கையில் போர் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கேயுள்ள அனாதை ஆச்சிரமத்தில்  சிறுமிகளும் பெண்களும் மாட்டிக் கொண்டு புகலிடம் தேடித் தவிக்கிறார்கள். நீர் அவர்களை எப்படியும் இங்கே கொண்டு வந்தால் என் ஆச்சிரமத்தில் சேர்க்கலாம். பெரிய உதவியாயிருக்கும்' இப்படி பேசினார். சிவா அண்ணை பல கேள்விகள் கேட்டு, இறுதியில் சரியென்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு என்னிடம் சொன்னார். 'அற்புதம் செய்யும் மனிதர் என்று கொண்டாடப்படுபவர் என்னிடம் உதவிக்கு வந்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் நான் சம்மதம் தெரிவித்திருக்கிறேன். அவரால் ஒரு சிறு நன்மையும் நடக்கட்டுமே.' 

அன்று மீன் பொரியல் சாப்பிட்டபோது அண்ணையின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து காணப்பட்டது. 'நீ என்ன நினைக்கிறாய்?' என்றார். நான் 'மன்னிக்கவேண்டும். தவறான முடிவு' என்றேன். 'பெண்களை இவரிடம் ஒப்படைப்பது நம்பிக்கைத் துரோகம் என்று நீ நினைக்கிறாய். அவர்களோ கதியில்லாமல் தத்தளிக்கிறார்கள். இங்கே வந்தால் எங்கள் பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்குமல்லவா?' நான் ஒன்றும் பேசவில்லை. தலையை குனிந்தேன். அவர் தொடர்ந்தார் 'நீ அதீத எச்சரிக்கைக்காரனாக இருக்கிறாய். காரை ஓட்டுபோது அடிக்கடி கண்ணாடியில் பின்னுக்கு பார்க்கவேண்டும். ஆனால் முழுநேர வேலையாக பின்னுக்கு பார்த்துக்கொண்டே ஓட்டினால் விபத்து ஏற்பட்டுவிடும்.'

அன்று கொஞ்சம் அதிகமாகக் கதைத்துவிட்டேனோ என்ற பயம் எனக்கிருந்தது. ஒரு முக்கியமான பார்சலை பத்திரமாகக் கொண்டுபோய் யாழ்ப்பாணத்தில் ஒப்படைப்பதுதான் எனக்கு இடப்பட்ட கட்டளை. கையில் தூக்கக்கூடிய அளவில் பார்சல் சின்னதாக இருக்கும் என்று நினைத்தேன். அதன் சைஸைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பெரிய அட்டைப்பெட்டியில் கனமாக இருந்தது. இரண்டுபேர் சேர்ந்து தூக்கினால்தான் முடியும்அன்று இரவே படகு வரும் என்று சொல்லியிருந்தார்கள். ராமேஸ்வரம் கடற்கரைக்கு பெட்டியை எடுத்துப்போக குதிரைக்காரனை தேடினேன். அவன் 300 ரூபா கூலி கேட்டான். வழமையான கூலி 35 ரூபா என்பது எனக்குத் தெரியும். அவனோ ரவுடிபோல சண்டைக்கு தயாராய் வந்திருந்தான். நான் சைக்கிள் ரிக்சாக்காரனை அழைத்து வந்தபோது குதிரைக்காரன் அவனை அடித்தான். எனக்கு கோபம் வந்துவிட்டது. என்னிடம் இருந்த வில்லுக்கத்தியை விரித்தபடி குதிரைக்காரன்மேல் பாய்ந்தேன். 'என்னிடம் கத்தி இருக்கிறது. உன்னிடம் கழுத்து இருக்கிறது. அன்னப் பறவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? அதுதான் எங்கள் சின்னம். இறக்கும்போது பாடும் பறவைமரணத்தை ஒரு சகோதரன்போல பக்கத்திலே வைத்திருப்பதுதான் என்னுடைய பயிற்சி.' என்று கழுத்தில் கத்தியை வைத்தேன். குதிரைக்காரன் பயந்துவிட்டான். வேறு பேச்சு இல்லாமல் 35 ரூபாய்க்கு பெட்டியை கொண்டுவந்து கடற்கரையில் இறக்கினான்.

பயிற்சி முடிந்து திரும்பும் சிலர் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். படகு தூரத்தில் நின்றது. அவர்கள் ஆளுக்கொரு கைப்பை காவினார்கள். என்னுடைய பெட்டிதான் எங்களிடம் இருந்த ஒரே முக்கியமான பொருள். ஒரு வள்ளத்தில் சாமான்களை ஏற்றி படகுக்கு கொண்டுபோனோம். குதிரைக்காரன் இன்னும் கரையிலேதான் நின்றான். வள்ளம் நகர நகர அவன் ஏதோ தண்ணீரில் மூழ்கிறவன்போல துள்ளித் துள்ளி கைகாட்டினான். சில நிமிடங்களுக்கு முன்னர் அவன் கழுத்தில் கத்தி இருந்தது. இப்பொழுது என்னை பிரியமுடியாமல் விடைகொடுத்தான். பெட்டியில் ஆயுதம்தான் இருக்கிறது என்று சீனியர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். ஒருவிதப் பயிற்சியும் இல்லாத என்னிடம் இத்தனை பெரிய பொறுப்பை நம்பி ஒப்படைத்திருந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.

பெரிய படகு என்பதால் வேகமாகப் போனது. நடுநிசி தாண்டியதும் நெடுந்தீவுக் கரையை நெருங்கினோம். அரைமைல் தூரத்திலேயே ஓட்டியவன் படகை நிறுத்திவிட்டான். மேற்கொண்டு அது உள்ளே போக முடியாதுதீப்பெட்டி சைகை கொடுத்தபோது பதில் வரவேயில்லை. வள்ளமோ கட்டுமரமோ வந்து எங்களையும் பெட்டியையும் ஏற்றிப்போனால்தான் உண்டு. படகுக்காரன் ஒரு மணிநேரம் காத்திருந்துவிட்டு 'சிலோன் நேவி வரும் நேரம்; நான் திரும்பவேண்டும்' என்று அவசரப்படுத்தினான். பெயர் மாறி 10 வருடமாகியும் அவன் 'சிலோன் நேவி, சிலோன் நேவி' என்றே சொன்னான். எங்களில் தலைவன்போல காணப்பட்டவன் 'திரும்பிப்போய் இன்னொரு நாள் வரலாம்' என்றான். நெடுந்தீவுக் கடற்கரை எனக்குப் பழக்கமானது. மூன்று மைல்தூரம் என்னால் நீந்த முடியும். சாரத்தை உருவி தலையிலே தலைப்பாபோல கட்டிக்கொண்டு கடலில் பாய்ந்தேன். தூரத்திலே மீன்காரர்களின் குடிசை தெரிந்தது. கரை வந்ததும் தலைப்பாவில் மறைத்துவைத்த தீக்குச்சியை பற்றவைத்து சைகை கொடுத்தேன். அவர்களிடமிருந்து உடனே பதில் சைகை கிடைத்தது.

கரையிலே கிடந்த கட்டுமரங்களில் ஒன்றை எடுத்து வலித்துக்கொண்டு மறுபடியும் படகுக்கு போனேன். ஆட்களையும் பெட்டியையும் விரைவில் மீட்கவேண்டும். காலிலே ஏதோ ஊர்வதுபோல இருந்தது. தொட்டுப் பார்த்தேன். ரத்தம். பாறை ஒன்றிலிலே இடித்தோ என்னவோ கணுக்காலில் இருந்து ரத்தம் கொட்டியதுவலியோ தாங்கமுடியாமல் நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டே போனது. படகிலே இருந்து சமான்களையும் ஆட்களையும் ஏற்றிக்கொண்டு திரும்பவும் குடிசைக்கு வந்தேன். குடிசையிலே என் பெட்டியை வைத்து அதன்மேல் நான் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சீனியர்கள் தங்கள் தங்கள் கைப்பைகளை தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள். 'உடனேயே உனக்கு உதவி வரும். தைரியமாய் இரு' என்று அவர்கள் உறுதி சொல்லிவிட்டு போனது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இரவு முழுவதையும் தூங்குவதும் விழிப்பதுமாகக் கழித்தேன். இடது கணுக்கால் வீங்கி உருண்டு கிரிக்கெட் பந்து அளவு சைசுக்கு வந்துவிட்டது. காலை அசைக்க முடியவில்லை. அது பாட்டுக்கு கைக்குழந்தைபோல ஒரு பக்கத்தில் கிடந்தது. பகல் பத்து மணியாகிவிட்டது. பசியும் இப்போது சேர்ந்துவிட்டது. நடக்கமுடியாது, முடிந்தாலும் பெட்டியை விட்டு நகரமுடியாது. ஏதாவது சாப்பிடக் கிடைக்கலாம் என நினைத்து பார்சலை உடைத்தேன். 800 ரூபாவுக்கு வாங்கிய 3.8 கைத்துப்பாக்கி மேலே கிடந்தது. மீதி எல்லாமே புத்தகங்கள். நான் ஏதோ ஆயுதங்கள் என்று நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். கையை அடியிலே விட்டுக் கிண்டி எடுத்தேன். பெட்டி முழுக்க ஒரே புத்தகத்தைத்தான் நெருக்கமாக அடுக்கியிருந்தார்கள். புத்தகத்தின் பெயர் 'வால்காவிலிருந்து கங்கைவரை.' எழுதியவர் பெயர் ராகுல சங்கிருத்தியாயன். 368 பக்கங்கள். ஏமாற்றமாகிவிட்டது. எனினும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.

மதியமாகிவிட்டது. ஒருவருமே என்னைத் தேடி வரவில்லை. தூரத்தில் பேச்சுக்குரலும் காலடி ஓசையும் கேட்டது. நான் சேர்ட் கையை அவசரமாக மடித்து முழங்கைக்கு மேலே விட்டேன். இடுப்பிலே 3.8 கைத்துப்பாக்கியை செருகினேன். சேர்ட்டின் கடைசி பட்டனைத் திறந்து துப்பாக்கியின் கைப்பிடி தெரிகிறமாதிரி இழுத்துவிட்டேன். பெட்டியில் சாய்ந்தபடி கிடந்தேன். 19, 20 வயது மதிக்கக்கூடிய இரண்டு இளைஞர்கள் குடிசையை அவசரமாகக் கடந்தார்கள். 'டேய் இஞ்ச வாங்கடா' என்றேன். இருவரும் பயந்து நடுநடுங்கி கிட்டவந்து 'அண்ணை' என்றார்கள். 'பார்த்தும் பார்க்காததுபோல போறீங்களோடா' என்றேன்.  'இல்லை, அண்ணை, உங்களைத் தெரியாதா? என்ன செய்ய வேணும்?' முதல்தடவையாக யாரோ என்னை அண்ணை என்று அழைத்தார்கள். இளையவனை என்னுடன் வைத்துக்கொண்டு மற்றவனை அனுப்பினேன். 'நீ போய் எனக்குச் சாப்பாடும், வலிமருந்தும், தள்ளுவண்டியும் கொண்டுவா. ரகஸ்யம்' என்றேன். அவன் பறந்தான். அவன் திரும்பி வருவதற்குள் நான் முதல் அத்தியாயத்தை படித்து முடித்தேன். என்னுடன் நின்ற இளையவன் 'அண்ணை, இந்தப் புத்தகத்தை நானும் படிக்கலாமோ' என்று கேட்டான். 'வாசிக்கும்போது உனக்கு உதடு அசைவது நின்றுவிட்டது என்றால் நீ இந்தப் புத்தகத்திற்கு தயாராகிவிட்டாய் என்று அர்த்தம்' என்றேன்.

பெரியவனுடைய பெயர் கமலக்கண்ணன். அவன் கொண்டுவந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தேன். அதன் அடி துல்லியமாகத் தெரிந்தது. 'இது தண்ணிபோல இருக்கே? உங்கட ஊரில இதற்கு கஞ்சியாடா பெயர்?' அவன் பேசாமல் கூனிக்குறுகி நின்றான். ரொட்டியை திருகிப் பிய்த்து  சாப்பிட்டேன். எத்தனை பசி முன்பு இருந்ததோ அத்தனை பசி சாப்பிட்ட பின்பும் அளவு குறையாமல் இருந்தது. 'பார்த்துக்கொண்டு நிற்க வேண்டாம். என்னை ஊருக்குள் கொண்டு போங்கோ' என்றேன். 33 வயதில் நெப்போலியன் அவுஸ்திரியாவை வென்ற பின்னர் பிரான்சுக்குள் எப்படி ஆடம்பரமாகவும், படாடோபமாகவும் நுழைந்தான் என்று படித்திருக்கிறேன். பெண்கள் எல்லோரும் வழிவழியாக நின்று பூச்சரம் எறிந்து வரவேற்றார்களாம். சாரத்தை இறுக்கி கட்டி துப்பாக்கியை இடுப்பில் செருகினேன்நானும், கமலக்கண்ணனும், நீளக்கோடுபோட்ட சேர்ட்டும், துப்பாக்கியும் கிராமத்தினுள் நுழைந்தோம். தள்ளுவண்டியில், புத்தகப் பெட்டியின் மேல் என்னை இருத்தி தள்ளி வந்ததுதான் அந்தச் சம்பவத்தின் மகத்துவத்தை சற்று குறைத்தது.

ஒருவாரமாக நான் ஓய்வெடுத்தேன். காலுக்கு மருந்து வைத்துக் கட்டி அது ஒருமாதிரி ஆறி நொண்டி நொண்டி நடக்கக் கூடிய அளவுக்கு தேறிவிட்டேன். துப்பாக்கியை மறுபடியும் பெட்டிக்குள் அடைத்து பழையமாதிரி கட்டிவிட்டேன். புத்தகத்தை திரும்பவும் வைக்கவில்லை. இத்தனை புத்தகங்கள் இருக்கும்போது அதை எண்ணிப் பார்க்கமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். கடந்த ஒருவாரமாக புத்தகத்தைப் படித்து முடித்தேன். இதை எழுதிய ராகுல சங்கிருத்தியாயன் 32 மொழிகளில் வல்லுநர். முதுமையில் அவருக்கு மறதி வியாதி வந்து இறக்கும்போது அவர் தன் பெயரைக்கூட மறந்துவிட்டாராம். இது பின்னர்தான் எனக்கு தெரிந்தது. 8000 வருட மனித வரலாற்றை அவர் கதையாக எழுதினார். கி.மு 6000 ல் தொடங்கி 20ம் நூற்றாண்டில் முடிந்தது. 20 அதிகாரங்கள், 20 கதைகள். மனித வரலாறு என்பது என்ன? அடிமைப் படுத்தப்பட்டவர்களின் போராட்டம்தானே. இதிலே என் பங்கு என்ன? இனி வரப்போகும் மனித வரலாற்று சமுத்திரத்தில் என் செயல்களின் ஒரு துளிப் பதிவாவது இருக்குமா?

புத்தகப் பெட்டியை கொடுக்கவேண்டியவரின் முகவரி என்னிடம் இருந்தது. வாடகை வண்டி ஒன்றில் பெட்டியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். சரியான முகவரியை தேடிக் கண்டுபிடித்து வாசலில் பெட்டியை இறக்கினேன். சபாபதி என்றவுடன் என்னை ஒருவர் எதிர்பார்த்திருந்தவர்போல வெளியே வந்தார். அவர் கையில் ஒரு புத்தகம் விரித்தபடி காணப்பட்டது. அவர் தோற்றம் பள்ளிக்கூட தலைமையாசிரியர்போல இருந்தது. சோப் நுரைபோல தலை. கைவைத்த பனியன். பார்த்தவுடனேயே ஏதோ பெரிய பொறுப்பில் இருப்பவர் என்று தெரிந்தது. உள்ளே அழைப்பார் என்று நினைத்தேன். என் சாகசத்தில் ஒன்றிரண்டை சொல்லியிருக்கலாம். வருகிறேன் என்றேன். அவர் பேசவே இல்லை. அவர் தலை சற்று குனிந்து மீண்டும் நிமிர்ந்தது. அதுதான் அவர் விடை கொடுக்கும் முறை.

எத்தனை பாடுபட்டேன். குதிரைக்காரனை கத்தியால் குத்தப்போவதாக வெருட்டினேன். அரை மைல் தூரம் இருட்டிலே கடலில் நீந்தினேன். காலுடைந்து ரத்தம் ஒழுக கட்டுமரம் களவெடுத்து புத்தகங்களை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தேன். துப்பாக்கியை காட்டி மிரட்டி கஞ்சி வாங்கிக் குடித்தேன். எல்லாம் இந்தப் புத்தகங்களுக்காகத்தான். அது இந்தப் பெரியவருக்கு ஒரு நாளும் தெரிய வரப்போவதில்லை என்று நினைத்தபோது துக்கமாக இருந்தது. சரித்திர வரலாறுகள் பூரணமாவதில்லை. சில வீரச்செயல்கள் இப்படித்தான் சரித்திரத்தில் இடம்பிடிக்க தவறி விடுகின்றன.

2011, பிப்ரவரி மாதம் கனடாவின் கடும் குளிர் வீசிய இரவு ஒன்றில் நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். செய்திகளின்போது பிரேமானந்தாவின் படத்தைக் காட்டி அவன் இறந்துபோனதை அறிவித்தார்கள். நான் வேதாரண்யத்தில் பொறுப்பாளருக்கு பக்கத்தில் நிற்க பிரேமானந்தா வெள்ளை வேட்டி, வெள்ளை சேர்ட்டு அணிந்து, செருப்புச் சத்தமிட மீன் பொரியல் மணத்துக்கு முகத்தை சுளித்தபடி நடந்து வந்ததை நினைத்துப் பார்த்தேன். 13 பெண்களை வல்லுறவு செய்தவன். கொலைகாரன், கடலூரில் 32 வருட சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது இறந்துவிட்டான்.  'இவனா?' என்று என்னுடைய அறை நண்பன் எழுந்து நின்றான். 'இவனை உனக்குத் தெரியுமா? என்று கேட்டேன். 'தெரியுமாவா? 38 பெண்களை, சிறுமிகளை, குழந்தைகளை இலங்கை அனாதை ஆச்சிரமத்திலிருந்து இந்தியாவுக்கு மூன்று வள்ளங்களில் கடத்திச் சென்று இவனுடைய ஆச்சிரமத்தில் சேர்த்தது நான்தான்.'

'நீயும் இயக்கத்தில் இருந்தாயா?'

'நாலு வருடங்கள். குற்றங்களுக்கு அவர்கள் கொடுக்கும் தண்டனை பிடிக்காமல் விலகி ஓடினேன்.'

'என்ன குற்றம்?'

'பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு முட்டையை களவெடுத்துவிட்டேன். அவ்வளவுதான். அதற்கு அவர்கள் விதித்த தண்டனைதான் மோசமானது.'

'என்ன தண்டனை?'

'மற்ற இயக்கங்கள் துப்பாக்கியை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு மைதானத்தை சுற்றி நாலு தடவை ஓடச் சொல்லும். அது மதிப்பாக இருக்கும்.'

'இங்கே?'

'ஒரு முழுப் புத்தகத்தை கொடுத்து படித்து முடிக்கச் சொன்னார்கள்.'

'என்ன புத்தகம்?'

'வால்காவிலிருந்து கங்கைவரை.'