ஒப்பீடு

பாடும்மீன் சு . ஸ்ரீகந்தராசா (அவுஸ்திரேலியா)

''என்ன நடக்குது? பதினொரு மணியாகப்போகுது..... ஒரு சுடிதாரப் போட்டுக்கொண்டு வாறத்துக்கு இவ்வளவு நேரமா?''

அரை மணித்தியாலத்துக்கு முன்னர் உடைமாற்றுவதற்காக அறைக்குள் சென்ற மனைவியை நோக்கிக் கத்துகிறேன்.

'நீங்க காரில போய் ஏறுங்க இந்தா ஒரு நிமிசத்தில நான் வந்திர்ரன்' என்று அவள் சொன்ன சொல்லைக் கேட்டு காரில ஏறியிருந்த நான், அவள் தாமதமானதால் காரில் இருந்து இறங்குவதும், பின் அவள் குரல் கேட்டுக் காரில் ஏறுவதுமாக காருக்கும் வீட்டுக்கும் இடையில குட்டிபோட்ட பூனையோல குளிரில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவழியாகப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் வருகிறார் எனது துணைவியார்.

''ஏன் இவ்வளவு நேரம்? என்னது கையில?''

''அது உங்களுக்குத்தான். பிறிஜ்ல இருந்து நாலு வடை எடுத்துச் சூடாக்கிற்று வாறன். அங்க காத்திருக்கிற நேரம் சாப்பிடலாமே. மற்றது தண்ணிப் போத்தல்''

''சரி இந்தா நீ ஓடு,'' என்று சொல்லியவாறே கார்த்திறப்பை அவளிடம் கொடுக்கக் கையை நீட்டுகிறேன்.

'ஏனப்பா என்னவும் எடுத்தனீங்களா?' மது அருந்தியிருக்கிறேனா என்பதை மரியாதையாகக் கேட்கிறாள்.

''சீ.... எனக்கு அலுப்பா இருக்கு..'' பதில் சொல்லியவாறே திறப்பை அவளிடம் கொடுக்கிறேன்.

பெரும்பாலும் கார் ஓட்டுவது நான்தான். எங்காவது பாட்டிக்குச் சென்றால் மட்டும் வரும்போது அவள் ஓட்டுவாள். அவள்தான் ஓட்ட வேண்டும். அப்படியென்றால் என்னால் ஓட்டமுடியாது என்பதில்லை. வழியில் பொலீஸ்காரன் நின்று மறித்து ஊதச்சொன்னால் தண்டப்பணம் கட்டவேண்டி வரும். இரத்தத்தில் கலந்துள்ள மதுவின் அளவைப் பொறுத்துச் சிலவேளை சாரதி அனுமதிப்பத்திரமும் பறிமுதல் செய்யப்படலாம். பாட்டிகளுக்குச் செல்லும்போது கணவன்மார் கார் செலுத்துவதும், திரும்பி வரும்போது மனைவிமார் (பார்த்த)சாரதிகளாவதும் இங்கெல்லாம் நமது பண்பாட்டில் கலந்துவிட்ட சாதாரணமான விடயங்கள்.

நான் வழிசொல்லிக்கொண்டிருக்க, அவள் காரைச் செலுத்திக்கொண்டிருக்கிறாள். அவள் காற்கட்டையும், கழுத்தை மூடிய மேல் சட்டையும் ஜம்பரும் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

''ஏன் ஒரு சுடிதாரைப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாமே?''

''சுடிதாரோ... இந்தக் குளிருக்குள்ளயோ..''

''ஏன் சுடிதாருக்கு மேல குளிருக்கு ஜக்கெற்றப் போடலாந்தானே?''

''சுடிதாருக்கு மேல ஜக்கெற்றப் போடுறதெண்டால் பிறகேன் சுடிதார்? ஜக்கெற்றுக்குள்ள என்னத்தையெண்டாலும் போடலாமே அப்பா!''

''சாறிக்கு மேலயும், சுடிதாருக்கு மேலயும் ஜம்பரோ அல்லது ஜக்கெற்றோ போட்டால் அந்தச் சாறியின்ர கவர்ச்சியும், சுடிதாரின்ர அழகும் வெளியால தெரியாது எண்டுதானே நீ இப்ப சொல்ல வாறாய்?''

''ஓம்.. அப்பிடித்தான்!''

''அது மற்றவைக்கு. ஆனால். எங்களுக்கு, எங்கட பெண்பிளைகள் காற்சட்டை சேட்டுக்குள்ள இருக்கிறதைவிட சாறிக்குள்ள, சட்டைக்குள்ள அல்லது சுடிதாருக்குள்ள இருக்கிறபோது மனதுக்கள்ள ஒரு இதமான உணர்வு வரும். வெளியில நீங்கள் ஜக்கெற்றப் போட்டாலும் அதுக்குள்ள இருக்கிறது சாறி அல்லது சுடிதார் எண்றது எங்களுக்குத் தெரியுந்தானே. அந்த எண்ணமே சுகமானது. அதை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது.''

''என்னவோ சொல்லுங்க.... நீங்க இப்ப வரவரச் சரியான மோசம்...''

''இது மோசம் இல்ல.. நம்மட மண்ணின்ர வாசம் எண்டு சொல்லு. இப்ப பார்.. இந்தியாவில இருந்து நிறைய இளம்பிள்ளைகள் இங்க படிக்க வந்திருக்கிறாங்கள். எங்க பார்த்தாலும் அவங்களைக் காணலாம். அப்பிடி வந்த பெண்பிள்ளைகள் பெரும்பாலும் சுடிதாரோடதான் திரியுதுகள். அதைப் பார்க்கேக்குள்ள மனதுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குது தெரியுமா?''

''என்ன.. அந்தப் பெண்கள் சுடிதாரோட இருக்கிறதப் பாரக்கிறது சந்தோசமாக இருக்குதா? அல்லது, சுடிதார் போட்ட அந்தப் பெண்களைப் பார்க்கிறது சந்தோசமாக இருக்குதா?''

''நீ என்னத்தை எண்டாலும் சொல்லு. ஆனால் நான் என்னத்தைச் சொல்லுறன் எண்டு உனக்குத் தெரியும். சரி இந்த றோட்டில றயிற்ல திருப்பு. அந்தா அதுதான் ஹோட்டல். இதுதான் அவங்களின்ர கார் பாக். உள்ளுக்கிள்ள விடு.''

''இஞ்சாருங்க அப்பா. நீங்க ஒருக்கா திருப்பிப் பாக் பண்ணுங்க''

''இதெப்பிடி பாக் பண்ணியிருக்கிறாய்? முன் டயர் ஒண்டு வெளியால சரிஞ்சிகொண்டு நிக்கிது பின் டயர் ஒண்டு அடுத்த ஸ்பொட்டுக்குள்ள கிடக்குது''

''அதுதான் சொன்னனே.. ஒருக்கா நீங்க பாக் பண்ணுங்க எண்டு!''

''ம்.... சாறி கட்டேக்குள்ள ஊசி குத்தி விடுறதைப் போல, கார் பாக்பண்ணிவிடறதும் இப்ப கணவன்மாரின்ர கடமைகளில ஒண்டாப் போச்சுது.... என்ன செய்வம்..''

''சும்மா சத்தம் போடாமல் இங்கால வந்து காரைச் சரியாப் பாக் பண்ணுங்க.''


----------------------------------------------------------------------------


பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் எங்கள் மகன் குமரனுக்கு அன்றைக்கு போமல். உயர் வகுப்பு மாணவர்களும் மாணவிகளும் கலந்து உறவாடும் ஓர் இராப்போசனக் களியாட்ட நிகழ்ச்சி என்று சொல்லலாம். மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அது முடிவதற்கு நள்ளிரவு பன்னிரண்டு மணி ஆகும். முடிந்ததும் அவனைக் கூட்டிக்கொண்டு போவதற்காகத்தான் நாங்கள் வந்து காத்துக்கொண்டிருக்கிறோம். நான் மட்டுந்தான் வருவதாக இருந்தேன். வீட்டிலிருந்து நாற்பது நிமிடம் கார் ஓடவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சி முடிந்துவிடும். வெள்ளைக்காரன் அதில் தவறமாட்டான். ஆனால், இந்தப் பிள்ளைகள்தான் அவனுக்குச் சொல்லி, இவனுக்குச் சொல்லி, அவளைத்தொட்டு, இவளைத் தொட்டு, கட்டிப்பிடித்து, கன்னம் உராய்ந்து... இப்படியெல்லாம் நேரம் போகலாம். அதனால் சிலவேளை குமரன் வருவதற்குத் தாமதமானால் அங்கே எவ்வளவு நேரம் காத்திருக்கவெண்டுமோ தெரியாது. நள்ளிரவு நேரம். அதனால் பேச்சுத் துணைக்காக மனைவியையும் வரும்படி அழைத்தேன். மறுப்புச் சொல்லாமல் அவளும் வந்துவிட்டாள். வாழ்க்கைத் துணை அல்லவா? என்ன இருந்தாலும் குளிர்காலத்தில், இரவு நேரத்தில் மனைவியுடன் தனிமையாக நீண்டநேரம் காரில் செல்வதும், ஏகாந்தமான ஓரிடத்தில் காருக்குள் இருந்து கதைத்துக்கொண்டிருப்பதும் தெவிட்டாததோர் இன்பம்தான். அதுவும் நாற்பது வயதைத் தாண்டியபின்னர் அந்தச் சுகானுபவத்தின் சுவையே தனிதான்.

குமரன் படிப்பது ஆண்கள் பாடசாலை. என்றாலும் போமலுக்கு ஒவ்வொரு மாணவனும் தங்களுடன் ஒரு பெண்ணைச் சோடியாகக் கூட்டிக்கொண்டு செல்லலாம். கூட்டிக்கொண்டு செல்லலாம் என்பதைவிட செல்லவேண்டும் என்பதுதான் இங்கே மரபாக இருந்து வருகின்றது. குமரனும் ஒரு வெள்ளைக்காரப் பெட்டையைக் கூட்டிக்கொண்டு போயிருந்தான்.

அன்று பிற்பகல் நான்குமணியளவில் குமரனை நான்தான் காரில் ஏற்றிக்கொண்டு அவளின் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். அவளின் வீட்டுக்கு முன்னால் கார் நின்றதும் இவனின் வரவைக் காத்திருந்ததுபோல அவளின் வீட்டுக் கதவு திறந்தது. ஓர் அழகான பிள்ளை வெளியே எட்டிப்பார்த்து விட்டு வாசலுக்கு வந்து இவனைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தோடு கன்னத்தை உராய்ந்து விட்டுக் கலகலவென்ற சிரிப்பையும், இரண்டு மூன்று வார்த்தைகளையும் ஒன்றாகக் கலந்து உதிர்த்தாள். பின்னர் இருவரும் கைகோர்த்தபடி உள்நோக்கி நடந்தார்கள். திடீரென அவள் திரும்பிப் பார்த்து எனக்குக் கையசைத்துப் புன்னகைத்தாள். அவனும், 'சரி நீங்கள் போகலாம்' என்பதுபோல எனக்குக் கைகாட்டினான். அவள் போட்டிருந்த வெள்ளை உடுப்பு அவளின் உடம்பில் அரைவாசியையே மறைத்திருந்தது. அதுகூட இருப்போமா விழுவோமா என்பதுபோல உடலில் தொங்கிக்கொண்டிருந்தது. இதெல்லாம் மனைவிக்குத் தெரியாது. நான் சொல்லவில்லை. ஏதோ மகனை இறக்கிவிடப் போய்வந்தேன் என்பது மட்டுந்தான் தெரியும். பல பிள்ளைகள் ஒருவீட்டில் வந்து கூடி அதற்குப்பின் அங்கிருந்து ஒன்றாகக் ஹோட்டலுக்குச் செல்வது என்பது அவர்களின் ஒழுங்கு என்ற அளவில்தான் மனைவிக்குத் தெரியும்.

இப்போதெல்லாம் குமரன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவான். பத்தாம் வகுப்பிலேயே தொடங்கிவிட்ட பழக்கம் அது. அடிக்கடி அவனின் கைத்தொலைபேசியில் அழைப்பிசை கேட்கும். போதாததற்கு இணையத் தளத்தில் 'சட்டிங்' வேறு. தினமும் மனைவியின் குறுக்கீடு நடக்கும். 'யாரது போனில?', 'எவ்வளவு நேரமாய்க் கதைக்கிறாய்?', 'என்ன ஹோம் வேர்க் எல்லாம் செய்தாச்சோ?', 'ஏன்ரா இப்பிடி நேரத்தை அனியாயமாக்கிறியள்?' என்ற கேள்விகள் அவ்வப்போது வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல மனைவியின் சொல்லிலிருந்து சூடாகக் குமரனை நோக்கிப் பாயும். எல்லாவற்றுக்கும் எப்போதும் போல அவனிடம் தக்க பதில் ஒன்று இருக்கும். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது சர்வதேசத்திற்கும் பொதுவான பதில், 'ஐ டோன்ட் நோ'.

.............................................................................................



''என்னப்பா பன்னிரண்டு மணிக்கு முடிஞ்சிரும் எண்டு சொன்னான். இன்னும்வரக்காணேல்ல'' – மனைவி என்னிடம் கேட்டாள். அவளது கேள்வியில் தொனித்த உணர்வு பதற்றமா அல்லது அலுப்பா அல்லது இரண்டும் கலந்ததா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.

''கொஞ்சம் பொறு. இப்பதானே பன்னிரண்டு மணியாகுது. போமல் முடிஞ்சாலும், அவங்களுக்கு அங்க வேலை இருக்கும். டீச்சஸ்மாரிட்டச் சொல்லிப்போடுத்தானே வரவேணும். இனி, எத்தினையாவது மாடியில நடக்குதோ... கொஞ்சக் கொஞ்சப் பேராத்தானே லிப்ற்இல வரலாம்.... இரண்டு மூன்று லிப்ற்தானே இருக்கும்..''

''இதென்னப்பா புதினமான பழக்கம். போமல் எண்டா பள்ளிக்கூடத்தில வைக்கலாந்தானே. சரி ஹோட்டல்ல எண்டாலும் ஆம்பிளைப் பிள்ளையளும் பொம்பிளைப் பிள்ளையளும் ஒவ்வொரு சோடியாப் போகவேணும் எண்றது... என்னப்பா... இது?... இதுகளாலதான் இந்தப் பிள்ளைகள் கெட்டுப்போறதுகள்..'' மனைவிக்குப் பொறுமையில்லை, உளறத் தொடங்கிவிட்டாள்.

''இஞ்ச பார்.... போமல் எண்டா அப்பிடித்தான். ஏன் நம்மட நாட்டிலயும் பள்ளிக்கூடத்தில நாங்கள் படிக்கிற காலத்திலேயே போமல் நடக்கிறதுதானே சோசல் எண்ட பெயரில, உனக்குத் தெரியாதா?''

''அங்க இப்பிடியா? நல்லா உடுத்தி வெளிக்கிட்டுப் போவம். ஆண்கள் பெண்கள் எல்லாம் கலந்து இருப்பம். ஆனா ரீச்சேஸ் எல்லாரையும் கவனிச்சுக்கொண்டுதான் இருப்பினம். பாட்டு, டான்ஸ் எண்டு நடக்கும். பிறகு சாப்பாடு.... அவ்வளவுதானே....''

''இங்கயும் அப்பிடித்தான். ரீச்சேஸ் கவனிச்சுக் கொண்டுதான் இருப்பாங்கள். என்ன.. விரலுக்குத் தகுந்த வீக்கம் எண்றது போல.. அங்கத்தைய லிமிட் வேற.... இங்கத்தைய லிமிட் வேற.... அவ்வளவுதான்.''

''அங்க ஒரு பள்ளிக்கூடத்தில படிக்கிற மேல்வகுப்புப் பிள்ளையள் மட்டுந்தான் சோசலுக்கு வரலாம். சிலவேளை நாலைஞ்சு பள்ளிக்கூடங்கள் சேர்ந்தும் ஒழுங்கு பண்ணுறதுதான். ஆனால் சோடி கூடிக்கொண்டு வாறதில்ல..''

''அதுதான் சொன்னேனே...... விரலுக்குத் தகுந்த வீக்கம் எண்டு. அந்த நாட்டில அப்பிடி.... இந்த நாட்டில இப்பிடி.... அங்க சோடியக் கூட்டிக்கொண்டு வாறதில்லை எண்டு சொல்லுறது சரிதான் ஆனால், அதுக்குப் பிறகு எத்தினபேர் சோடியாகிறவை எண்டு தெரியுந்தானே. ஏற்கனவே அப்பிடி இப்பிடி எண்டு கண்ணால எறிஞ்சி கொண்டு திரிஞ்சதுகள் சோசல் அன்றைக்குக் கொஞ்சம் நெருங்கி அதுவே காதலாக மாறின கதையெல்லாம் நடந்திருக்குதுதானே.''

''அப்பிடியெல்லாம் சொல்லேலாது. அதெல்லாம் காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை மாதிரித்தான். நீங்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறியள்.''

''நான் ஒண்டும் முடிச்சுப் போடயில்ல. அங்க சோசலுக்குப் பிறகு கனக்கப் பேர் மூண்டு முடிசுக்கனவில மிதக்கிறவங்கள் எண்டதும், அதில சிலர் முடிச்சுப் போட்டவங்கள் எண்டதும் எனக்குத் தெரியும். அதால, சோசலில அதுகளுக்கெல்லாம் சான்ஸ் இருக்கு எண்டுதான் சொல்றன். ஏன் எண்டு தெரியுமே? படிக்கத் தொடங்கின நாளில இருந்து பெட்டையள அந்த வெள்ளை யூனிபோமோடையே பார்த்துப் பார்த்து அலுத்துப்போன பெடியங்களுக்கு அதுகள் சாறியோடையும், தாவணியோடையும், தலையில பூச்சரம் தொங்க கொஞ்சம் மினுமினுப்பா மேக் அப் எல்லாம் போட்டுக் கொண்டு வாறதப் பார்க்கேக்குள்ள தேவதைகளப் பார்க்கிற மாதிரித்தான் இருக்கும். அதிலையும் ஏற்கனவே அவங்களின்ர மனதுக்குள்ள அற்பசொற்பம் எண்ணங்களை எழுப்பிவிட்ட பெட்டையள் ஆரும் இருந்து, அவளவைய அந்த அழகான கோலத்தில பாக்கேக்குள்ள ஒவ்வொருத்தனுக்கும் மனதுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். அதே மாதிரித்தான் பெட்டையளுக்கும்.... ஆனால் இங்க அப்பிடி இல்ல.''

''ஓ... உங்களுக்கும் கனக்கப் பட்டாம்பூச்சியள் பறந்திருக்குப்போல. அப்பிடியே அனுபவிச்ச மாதிரிச் சொல்லறீங்கள்''

''சும்மா இரு. அப்பிடியெல்லாம் நினைச்சி நீ இப்ப இங்க கானல்வரி பாடவேண்டாம். அது எல்லாருக்கும் இருக்கிறதுதான்..... அதை விடு... அந்தா பார்.... சத்தியமூர்த்தியும் வந்து நிக்கிறார். அவரோட கதைச்சுக்கொண்டு நிக்கிறது சண்முகம் எல்லோ....''

''ஓம் சண்முகமும், சத்தியமூர்த்தியுந்தான்...''

''அவங்களும் நம்மளைப்போலத்தான் பிள்ளையளப் பிக் அப் பண்ண வந்திருக்கிறாங்கள்..''

''என்னப்பா.... சத்திய மூர்த்திக்கும் ஆம்பிளைப் பிள்ளையள் இல்ல. சண்முகத்துக்கும் இல்லை. இரண்டுபேருக்கும் பெண்பிளைப் பிள்ளையள்தானே.... அவங்கள் வேற யாரையோ பிக் அப் பண்ண வந்திருக்கிறாங்கள் போல..''

''உனக்கென்ன விசரே? ஆம்பிளைப் பிள்ளையளமட்டுந்தானா பிக் அப் பண்ணுறது? அவங்களின்ர பொம்பிளைப் பிள்ளையளும் வந்திருக்கும்.''

''அப்ப... தம்பியின்ர பள்ளிக்கூடத்துப் பெடியனுகளுக்கு அந்தப் பிள்ளையள் சோடியாக வந்திருக்கிறாங்கள் எண்டு சொல்றீங்களோ... குமரனோட இந்த வெள்ளைக்காரப் பெட்டை வந்ததைப் போல''

'வேறென்ன சொல்றன். அப்பம் எண்டா உனக்குப் புட்டுக்காட்ட வேணுமே? அங்க பார் இவ்வளவு நேரமும் குளிருக்காகக் காருக்குள்ள இருந்திட்டு இப்ப வெளிய இறங்கிவாறா சண்முகத்தின்ர மாலினி.'

''அப்ப எங்கட பெண்பிள்ளையளும் இப்பிடிச் சோடியாப் போகுதுகளோ... நல்ல வேளை நமக்குப் பொம்பிளைப் பிள்ளை இல்ல''

''என்ன கதை கதைக்கிறாய் நீ? உன்ர மகன் ஒருத்தியக் கூட்டிக்கொண்டு போகலாம் எண்டால்... ஒரு பெட்டை ஒருத்தனோட சோடியாகப் போகக் கூடாதோ. பெட்டையள் சோடியாகப் போகாட்டிப் பெடியங்களுக்குச் சோடி எங்க இருந்தப்பா கிடைக்கிறது?''

''இல்ல.... நம்மட தமிழ்ப் பிள்ளையளும்...''

''இஞ்சபார்.... இதில நம்மட பிள்ளைகள், வெள்ளைக்காரப் பிள்ளைகள் எண்ட வேறுபாடு இல்ல. இந்த வேறு பாடெல்லாம் நமக்குள்ளதான். அந்தப் பிள்ளையளுக்கு இல்ல. அதுகளுக்குத் தெரியும் நாட்டுக்கேத்தமாதிரியும் நமக்கேத்த மாதிரியும் எப்படி நடக்கவேணும் எண்டு. உன்னைப்போல இரண்டுங்கெட்டானா இருந்து சும்மா மனதக் குளப்பிக்கொண்டிருக்கிற தாய்மாருக்கு இந்த உலகத்தில மருந்தே இல்ல.''

''இல்லயப்பா. இப்ப எனக்கொரு குளப்பமும் இல்ல. நான் தெளிவடைஞ்சிற்றன்.''

''அதெப்பிடி இவ்வளவு நாளும் இல்லாத தெளிவு இப்ப திடீரெண்டு வந்தது?''

'ஓமப்பா. பொம்பிளைப் பிள்ளைகளைத்தானே பொத்திப்பொத்தி வளர்க்கிற நாங்கள். கலியாணம் செய்து குடுக்கும் வரைக்கும் பெற்றவங்கள் வயிற்றில நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறதெண்டு சொல்லுறதெல்லே? இப்ப பொம்பிளைப் பிள்ளைகளே இப்பிடி இருக்கேக்குள்ள ஆம்பிளைப் பிள்ளைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துறதும், அவங்களைப் பற்றி வீணாகக் கவலைப்படுறதும் மடத்தனம் எண்டு எனக்கு இப்ப நல்லா விளங்கிற்றுது..'

''அப்ப.. மற்றவையின்ர பெண்பிள்ளைகளின்ர சமத்துவத்தைக் கண்ணாரக்கண்ட பிறகுதான் உனக்குத் தெளிவு வந்திருக்குது. இனி உன்ர மகனுக்குச் சுதந்திரம் கிடைச்ச மாதிரித்தான். நானும் வீட்டில கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்''

''அந்தா குமரன் வாரறான்.... கையக் காட்டுங்க.... நாங்க இங்க நிக்கிறம் எண்டு''.



(யாவும் கற்பனை)




srisuppiah@hotmail.com