கரிச்சான் குருவி

இரா.
சடகோபன்
 

தொடர்ந்து மூன்று நாட்களாக அடை மழை கொட்டியது வெளியில் தலைகாட்டவே முடியாமலிருந்தது. நான் எனது எழுத்து மேசையில் அமர்ந்து கொண்டு இன்றைக்கு வேலைக்குப் போவதா வேண்டாமா என்று இரண்டுங்கெட்டான் மன நிலையில் யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு ஏதாவது அவசரமாக முடிக்க வேண்டிய வேலை உள்ளதா என்று மனக்கணக்குப் போட்டுப் பார்த்தேன். சில வேலைகள் இன்னும் முடியவில்லையே என சில வாடிக்கையாளர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் உடனடியாக முடிக்கக்கூடிய காரியங்கள் அல்ல.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எஜமான் நான்தான். எனவே நான் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். இன்று வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து ஏதாவது உருப்படியான ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்றுபட்டது. நீண்ட காலமாக மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கருவை வைத்து இன்று ஒரு சிறுகதையை எழுதி விடலாம் என்று மனதுக்குள் தோன்றியது. எனது மேசை பல நாட்களாகவே ஒதுக்கி  வைக்கப்படாமல் குப்பை கூலங்கள் போட்டது போல் அலங்கோலமாகக் கிடந்தது. எனது மகள், “என்னப்பா உங்கள் மேசை இப்படி குப்பையாக உள்ளதே. அடுக்கி வைக்க மாட்டீர்களா?” என்று மிரட்டிக் கொண்டே இருப்பது இடஞ்சல் போல் தோன்றியது. அவளின் கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து மேசையை ஒதுக்கி வைக்கலாம் என்று நினைத்தேன்.

இப்போதும் கூட அந்த மேசைக்கு முன்னால்தான் அமர்ந்திருக்கிறேன். ஜன்னலுக்கு அப்பால் முற்றத்தில் நடப்பட்டிருந்த செடி கொடிகளில் கனதியான மழைத்துளிகள் விழுந்து என் சிந்தனையை திசை திருப்பிக் கொண்டே இருந்தன. அக்கணத்தில் தான் அந்தப்பறவை என் கண்ணில் பட்டது. அது கொஞ்ச நேரமாகவே ஜன்னலுக்குக் குறுக்கும் நெடுக்குமாக பறந்து ஓடிக் கொண்டிருந்தது. மழையில் நன்கு நனைந்து குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்தது. அதற்கு ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றவில்லை. ஏன் ஜன்னலுக்கு அப்பால் இருந்த தாள்வாரத்தின் அடிப்பலகைகளில் கூட அந்த பறவைக்கு நனையாமல் பாதுகாப்பாக இருக்க போதுமான இடமிருந்தது. அந்த பறவையின் முட்டாள் தனத்தை எண்ணி எரிச்சலாக இருந்தது. நான் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அந்தப்பறவையின் செயல்களை அவதானித்தேன்.

அப்போதுதான் என் மண்டையில் ஒரு உண்மை உறைத்தது. அந்தப்பறவை எனக்கு அந்நியமான பறவை அல்ல. அது ஒரு கரிச்சான் குருவி. கறுப்பு வெள்ளை நிறத்தை தன்மேனியில் பூசிக்கொண்ட சின்னப்பறவை. அந்த பறவையை எனக்கு கொஞ்ச காலமாகவே தெரியும். அப்படியானால் அந்தப்பறவைக்கு என்னால் அநீதி ஏதும் இழைக்கப்பட்டு விட்டது போல் மனதில் உறுத்தல் ஏற்பட்டது. ஐயகோ! அந்தப் பறவையை என்னால் சமாதானப்படுத்த முடியுமா அந்தக் கதையை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் போலிருந்தது. அந்தக் கதைதான் இது.

***

கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் மிகவும் சிரமப்பட்டு கடனை உடனை வாங்கி எங்கள் வீட்டுக்கு கார் ஒன்றை வாங்கினோம். நான் அதில் அதிக ஆர்வம் காட்டா விட்டாலும் மனைவி பிள்ளைகளின் நச்சரித்தல் தாங்க முடியாமல் நானும் உடன்பட்டு விட்டேன். வங்கிக்கடன் கொஞ்சமும் வட்டிக்கடன் கொஞ்சமும் மாதா மாதம் சம்பளத்தில் இருந்து கட்டும் போதுதான் இதனை ஏண்டா வாங்கினோம் என்றிருக்கிறது. அந்தக் கார் வந்த காலத்தில் இருந்தே தொடர்ச்சியான மழை பெய்து கொண்டே இருந்தது. வெளியில் முற்றத்தில் நிற்பாட்டப்பட்டு அது எந்த நாளும் மழையில் நனைந்து கொண்டேதான் இருக்கிறது. அது நனையாமல் இருக்க உறை வாங்கிப் போட்டோம். இருந்தாலும் அந்தக் கார் நனைந்து கொண்டுதான் இருந்தது.

எங்கள் முற்றம் மிக விசாலமானதல்ல. கூட்டிக் கழித்துப் பார்த்தால் முப்பதடிக்குப் பதினைந்தடி நீள அகலத்தைக் கொண்டிருந்தது. இந்தப் பரப்புக்குள்தான் ஒரு முருங்கை மரம், கிறிஸ்மஸ்மரம், கறிவேப்பிலை மரம், றம்புட்டான் மரம் அகத்திமரம், என மரங்கள், செடிகள், பூங்கொடிகள் என இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. மரங்களிலும் செடிகளிலும் காலநிலை, பருவ காலத்துக்கமைய பூக்களும் கனிகளும் பூத்துக் காய்த்து கனிந்து கொண்டிருக்கும். பழம் உண்ணவும் பூக்களில் தேன் பருகவும் பறவைகளின் வரவு எந்த நேரத்திலும் இருந்து கொண்டே இருக்கும்.

எங்கள்  வீடு கொழும்புக்கு சற்று தூரத்தில் முக்கியமான பறவைகள் சரணாலயத்துக்கு அருகாமையில் அமைந்திருந்ததால் பறவைகளுக்கு எப்போதும் பஞ்சமிருப்பதில்லை. அதற்காகத்தான் அந்த வீட்டை வாங்கி குடியிருக்க தீர்மானித்தேன். கிளி, மைனா, மஞ்சக்குருவி, கொண்டைக்குருவி, வீட்டுக்குருவி, தேன் சிட்டு என இப்படி பெயர் சொல்ல முடியாத பல பறவைகளும் வந்து பழம் உண்ணுவது மட்டுமன்றி கொஞ்சிக்குழாவிச் செல்லும். ஒரு முறை பட்டியல் போட்டுப்பார்த்ததில் சுமார் ஐம்பத்தாறு வகையான பறவைகள் வந்து கூடாரமிட்டு கும்மாளமடித்து விட்டுச் செல்வதாக எனது மகள் ஒரு கணிப்பீடு செய்திருந்தாள்.

இங்கு வரும் பறவைகளில் செம்பூத்துப் பறவையைத் தவிர வேறு எந்த பறவைகளையும் நானோ வீட்டில் இருப்போரோ விரட்டியது கிடையாது. இந்த செம்பூத்து என்கிற பறவை பழந்தின்னவோ, தேன் குடிக்கவோ இங்கு வருவதில்லை. அது ஒரு வேட்டைப்பறவை. இங்கே முற்றத்து வேலியில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் செடிகளின் கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்திருக்கும் சிறு பறவைகளின் முட்டைகளையும் குஞ்சுகளையும் களவாடி உண்ணத்தான் இந்தப்பறவை இங்கே வருகிறது. இந்தப்பறவையின் வரவை அவதானித்த உடனேயே ஏனைய பறவைகள் '' வென்று அலறி கூக்குரல் இட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பி 'ஆபத்து' வருகிறது என்பதை ஏனைய பறவைகளுக்கு அறிவித்து விடும். இந்த எச்சரிக்கை ஒலியால் பயந்து நடுங்கிப் போய்விடும் அணில் கூட ''கீச்... கீச்'' என்று பெரும் ஓலம் எழுப்பியவாறு ஓடிச்சென்று தன் குஞ்சுகளை அணைத்துக்கொள்ளும்.

சிலவேளை நான் வீட்டுக்குள் ஏதோ வேலையாக இருக்கும் போது பறவைகளின் அவலக்குரல் ஆர்வக்கோளாறால் என் காதுகளில் விழாமல் இருந்திருக்கும். அப்போது என் மனைவியும் பிள்ளைகளும், ''அப்பா வெளியே குருவிகள் கத்துது.... செண்பகமோ பாம்போ வந்திருக்கும். போய் பாருங்க'' என்று கத்துவார்கள். நான் வழக்கமாக இதற்கென வைத்திருக்கும் நீண்ட கம்பையும் எடுத்துக் கொண்டு வெளியில் பாயும் போது எங்கள் வீட்டு நாயும் தன் உடலை சிலிர்த்துக் கொண்டு குலைத்துக் கொண்டு பாயும். உண்மையில் அங்கே ஒரு செண்பகமோ ஒரு சாரைப்பாம்போ வெளியில் நெளிந்து கொண்டுதான் இருக்கும். எனினும் அவை ஒருபோதும் என் கம்புக்கு அகப்பட்டதேயில்லை. எனது நோக்கமும் அவற்றை விரட்டுவதாக மட்டுமே இருந்ததன்றி காயப்படுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை.

முதன் முதலாக காரை முற்றத்துக்குள் கொண்டு வர முற்பட்ட போது தான் அது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது. முதல் பிரச்சினை நுழைவாயில் கேட் குறுகலாக இருந்தது. அதனை இடித்து அகலமாக்க வேண்டும். அடுத்த பிரச்சினை காரை உள்நோக்கி திருப்ப முடியாதபடி கறிவேப்பிலை மரமும் றம்புட்டான் மரமும் நந்தியென நின்றிருந்தன. றம்புட்டான் காய்ப்பதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருந்தன. காரா? றம்புட்டானா? கறிவேப்பிலையா? என்ற பலப்பரீட்சையில் றம்புட்டானும் கறிவேப்பிலையும் தோற்றுப்போக அவை மரணத்தைத் தழுவிக் கொண்டன. அவை பிடுங்கி எறியப்பட்டு சமதரையாக்கப்பட்டன. அடுத்ததாக கார் நிறுத்த இடைஞ்சலாக  அங்கிருந்த பூமரங்களும் அப்போதுதான் பூத்துக் கொண்டிருந்த அம்பரெல்லா மரமும் சிறுசெடிகளும் வெட்டி அகற்றப்பட்டன. இப்போது பல மரங்களையும் செடிகளையும் கபளீகரம் செய்துவிட்ட அந்தக் கார் கம்பீரமாக யுத்தத்தில் வென்ற வீரன்போல் முற்றத்தில் நின்றிருந்தது.

என்ற போதும் அந்தக்கார் தொடர்ந்தும் மழையில் நனைந்து கொண்டுதான் இருந்தது. அப்போதுதான் ஒருநாள் காரின் பின்புறம் இடது கதவின் கீழ் ஒரு நெல்லிக்கனியளவில் ஓரிடத்தில் கறுப்பாக துருப்பிடித்திருந்ததை எனது மகன் அவதானித்து என்னிடம் தெரிவித்தான். அதனை அப்படியே விட்டால் அது வேறு இடத்துக்கும் பரவும் அபாயமும் இருந்தது. உடனடியாக வீட்டில் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடந்தது. காரை நனையவிடாமல் பாதுகாக்க வேண்டுமானால் கூரை ஒன்று முற்றத்தில் கட்ட வேண்டும். இன்னும் மிச்சமிருக்கின்ற முற்றத்துக்கு மேல் கூரை போட்டால் இப்போது மரஞ்செடி கொடிகள் வளர்ந்திருக்கின்ற எங்கள் சிறு தோட்டம் மேலும் அரைவாசியாக குறைந்து போய்விடும். ஆனால் காரைக்காப்பாற்ற வேறு மார்க்கங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த சில தினங்களில் முற்றத்துக்கு மேல் வீட்டுக் கூரையையும் வேலி மதிலையும் இணைத்து கூரை போடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூரைக்கு ஒளி உட்புகக்கூடிய இலகு கூரைத்தகடுகளை பயன்படுத்துவதென்றும் அதனால் வீடு இருளடையாதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இனி எஞ்சியிருக்கும் மரங்களில் எவற்றுக்கு மரண தண்டனை வழங்குவது  என்று ஆலோசிக்கப்பட்ட போது கிறிஸ்மஸ் மரத்தை மட்டும் வெட்டக்கூடாதென எல்லோரும் ஏகோபித்த குரலில் கூறினார்கள். பல காலங்களாக கிறிஸ்மஸ் காலங்களில் வர்ண மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்த மரம் அது. அதனை வெட்டுவதென்றால் இதயத்தை கசக்கிப் பிழியும் சோகமான காரியம்தான். ஆனால் அதனை கார் வாங்குவதற்கு முன்னர் யோசித்திருக்க வேண்டும். மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எதனை விட்டுக் கொடுப்பது என்று முடிவெடுத்துதான் ஆக வேண்டும்.

இறுதியில் நவீன தொழில்நுட்பம், நவீன வசதி என்ற வாதத்தின் பின் கார் வென்றது. கிறிஸ்மஸ் மரம் தன் இன்னுயிரை அர்ப்பணித்து காருக்கு இடம் கொடுப்பதைத்தவிர மாற்று வழியில்லை. கூரை அமைப்பதற்கான பொருட்கள் தருவிக்கப்பட்டன. பாஸ் ஒருவர் அழைக்கப்பட்டு சம்பளம் பேசி கொந்தராத்தும் வழங்கப்பட்டது. எனது மனைவி மனதைக் கல்லாக்கிக் கொண்டு கிறிஸ்மஸ் மரம் வெட்டப்படுவதை அவதானித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரின் கண்களிலும் சோகம் அப்பிக்கிடந்தது. எனக்கும் அந்தச் செயல் மனதைக்குடைந்த போதும் அதனை வெளிக்காட்ட முடியாமல் அமுக்குணி என அமுக்கிக் கொண்டேன்.

ஒருவாறு கார் நனையாமல் இருக்க முற்றத்தில் கூரை அமைக்கப்பட்டு விட்டது. இந்த காரியம் முடிந்த போதுதான் தலையில் இருந்து ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. காரில் துளியளவு எங்கேயாவது துருப்பிடித்து இருந்தாலும் அதன் மதிப்பு குறைந்து போய்விடும் என்று நண்பர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இது போதாதென்று எலி ஒன்று காரின் இயந்திரப் பகுதியில் போய் கூடு கட்டி வாழப்பழகிக் கொண்டிருந்தது. அது உள்ளே வயரை கியரை ஏதும் கடித்து விட்டால் என்ன செய்வதென்ற பயம் வேறு. இப்போது கூரை போட்ட கையுடன் எலிப்பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கண்டாக வேண்டும். வீடுகளில் பொதுவாக குடும்பப் பிரச்சினைகளே அதிகம் ஏற்படும் என்று கருதியவர்களுக்கு இப்படியும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது புதிய விடயமாகும்.

இவ்வளவெல்லாம் நடந்துவிட்ட நிலையில் தான் அந்த கரிச்சான்குருவியை ஏன் மறந்தோம் என்பது மனதுக்குள் சுருக்கென்று தைத்தது. அந்தக் கரிச்சாங்குருவி சிறு குஞ்சாக இருக்கும் போது கொஞ்சம் சிறகு முளைத்ததும் அதனை அதன் அம்மாக் குருவி எங்கள் வீட்டுக்கு கிறிஸ்மஸ் மரத்துக்கு கூட்டி வந்தது. அங்கு வைத்துதான் இரைதேடி தன் குஞ்சுக்கு ஊட்டியது. ஒருமுறை அம்மாக்குருவி இரைதேடச் சென்ற போது குஞ்சு குருவி மரக்கிளையில் இருந்து நழுவி விழுந்துவிட்டது. அதற்கு திரும்பவும் மரக்கிளைக்கு பறந்து செல்லும் அளவுக்கு சிறகுகளில் பலமிருக்கவில்லை. திரும்பிவந்து பார்த்த அம்மா குருவி   தன் குஞ்சைக்காணாது ''காச்சு மூச்சென்று'' கத்த ஆரம்பித்து விட்டது. அன்றுங்கூட நான் இந்த எனது எழுத்து மேசையில் இருந்துதான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன்.

ஏற்கனவே அம்மா குருவியும் குஞ்சு குருவியும் கொஞ்சிக் கொண்டிருந்ததை நான் அவதானித்திருந்தேன். இது முற்றத்து நிகழ்வுகளில் வழமையானது என்பதால் அதன் குலாவல் பெரிதாக என் கவனத்தைக் கவரவில்லை. ஆனால் இப்போது அம்மாக்குருவியின் கதறல் என் கவனத்தைக் கவர்ந்தது. நான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ என்று பார்க்க விரைந்து மரத்தடிக்குச் சென்றேன். அங்கே நிலத்தில் குருவிக் குஞ்சு தவித்துக் கொண்டிருந்தது. அது என்னைப் பார்த்து மேலும் பயப்பட்டது. நான் சந்தடி செய்யாமல் அமைதியாக மெல்ல அதனை அணுகி தூக்கி எடுத்து அது முன்பிருந்த கிளையிலேயே வைத்துவிட்டேன். அதன் பின் அம்மாவும் குஞ்சும் அங்கேதான் இருந்தார்கள். இரண்டு மூன்று நாட்களிலேயே குஞ்சு குருவி சிறகு முளைத்து நன்றாகப் பறக்கத் தொடங்கி விட்டது. குஞ்சுக்குருவி தானாகவே உணவு தேடி உண்ணும் தகுதி வரும் வரையில் தாய்க்குருவி அதனோடு உடன் இருந்தது. அதன் பின் தாய்க்குருவியை நான் காணவில்லை. ஆனால் குஞ்சுக்குருவி தொடர்ந்தும் கிறிஸ்மஸ் மரத்தையே தன் வீடாக்கிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தது.

நாங்கள் காருக்குக் கூரை போடும் பிரச்சினையில் அந்த கரிச்சான் குருவியைப் பற்றி சிந்திக்கவேயில்லை. இப்போது எனக்கு கிறிஸ்மஸ் மரத்தை இழந்த சோகத்துக்கு மேல் கரிச்சான் குருவியின் வாசஸ் தலத்தை பறிந்து விட்டோமே என்ற சோகமும் சேர்ந்து கொண்டது. அந்த மழை நாளுக்குப் பின் அந்தக்குருவியையும் நான் காணவில்லை. அது என் போன்ற மனிதர்களின் செயல்களை சபித்துவிட்டு வேறொரு மரத்தை தனது வாசஸ்த்தலமாக்கிக் கொண்டிருக்குமோ?

 

(யாவும் கற்பனையல்ல)