ரேடியோப்பெட்டி
அகில்
அப்பொழுதுதான்
வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தேன். மாலதி சாப்பாடு
பரிமாறிவிட்டுக் குழந்தைக்கு 'பம்பஸ்' மாத்தவென்று உள்ளே புகுந்தவள்
இன்னும் வெளியே வரவில்லை. அவள் மணக்க மணக்க சமைத்திருந்த மட்டன்கறியைச்
சாப்பிட்டது, நெஞ்சுக்குழிக்குள் பந்தை இறுகிக்கியது போல ஒரு அமுக்க
உணர்வு.
என்னதான் இருந்தாலும் மாதம் ஒருக்காவாவது
மட்டன் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது.
'ஏப்ப்......'
என்னையும் மீறிக்கொண்டு கொஞ்சம் சத்தமாகவே ஏப்பம் ஒன்று வெளிப்பட்டது.
'ஏப்ப்ப்......' மறுபடியும்.
மாலை ஆறுமணி என்று சொல்ல முடியாமல் யன்னல்
கண்ணாடிகளில் சூரிய ஒளிபட்டுக் கண்களைக் கூசச் செய்தது. வெளியில் வெயில்
அடித்தாலும் வீட்டுக்குள் லேசாகக் குளிர்ந்தது. மெல்லிய சேர்ட் ஒன்றை
எடுத்து அணிந்துகொண்டு விறாந்தைக்கு வந்தேன். என் கைகள் இயல்;பாக
ரிமோட்டைத் தேடிப் பட்டனை அழுத்தத் தொலைக்காட்சி உயிர்பெற்றது.
'அப்பாடி.....' என்றபடி சோபாவில் அமர்ந்து, 'கொபி' டேபிளில் கால்களைத்
தூக்கிப் போட்டதுதான் தாமதம். தொலைபேசி மணி கிணுகிணுத்தது.
அலுத்துக்கொண்டே ரிசீவரைத் தூக்கிக் காதில் பொருத்தினேன்.
மறுமுனையில் பூரணம் மாமி.
'தம்பி எப்பிடி இருக்குறீங்க?'
பூரணம் மாமி ஏதாவது அலுவல் இல்லாமல் எனக்கு போன் எடுக்கமாட்டா.
'இருக்கிறன். சொல்லுங்க மாமி.......'
மாமி நேரடியாக விசயத்துக்கு வந்தா.
'தம்பி நான் ஒருக்கா ரேடியோக் கடைக்கு போக வேணும். என்ர ரேடியோ
இன்றைக்கு விடிஞ்சதில இ;ருந்து வேலசெய்யுதில்ல. திருத்தவேணும்.....
குறைநினைக்காமல்.... ஒருக்கா வர ஏலுமே தம்பி......'
'சரி மாமி. நீங்க வெளிக்கிடுங்க. நான் இறங்கேக்க அடிக்கிறன். கீழ்
புளோருக்கு வாங்க..' என்றபடி ரிசீவரை வைத்தேன். எதிரே முகத்தில்
சிடுசிடுப்புடன் மாலதி நின்றுகொண்டிருந்தாள்.
அவள் விசயத்தை ஊகித்திருப்பாள் போல.
'என்னப்பா வரட்டாமோ....?' ஏளனமாக அவள் வார்த்தைகள் உதிர்ந்தன. வந்து
என்னருகில் அமர்ந்துகொண்டாள்.
'ஓம். பாவம் மனுசி. தனிய இருக்கிறது. கூப்பிடுறா ஒருக்கா போயிற்றுவாறன்.
இப்பிடிப்பட்டவைக்கு உதவி செய்தால் எங்களுக்குப் புண்ணியம் தானே..'
என்றேன்.
மாலதியை ஏதாவது சொல்லித் தேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவள்
புறுபுறுக்கத் தொடங்கிவிடுவாள்.
வேலைக்குப் போய் விட்டு வீட்டுக்கு
வந்தால் குறைந்தது இரண்டு மணித்தியாலமாவது ஓய்வு எடுத்துவிட்டுத்தான்
மறுவேலை செய்வேன். ஆனால் பூரணம் மாமி விசயத்தில மட்டும் நான்
விதிவிலக்கு.
ஊரில பூரணம் மாமி வீடு எங்கட வீட்டுக்கு பக்கத்து வீடுதான். அதோட எனக்கு
அவ அப்பாவின்ர வழியில தூரத்து சொந்தம் வேற.
நான்.... விசாகன், வனஜா, கிருபாகரன்..........
நாங்கள் எல்லாரும் ஒருதாய் பிள்ளையள் போலத்தான் பழகுவோம். பூரணம் மாமி
வீட்டபோனால் அவா என்னைச் சாப்பிடாமல் போகவே விடமாட்டா. அம்மாவின்ர
சமையலை விடவும் பூரணம் மாமிதான் நல்லாச் சமைப்பா. அங்க குழம்பு
கொதிக்கிற வாசனையைப் பிடிச்சே எனக்கு பசி வந்திரும். ஏதாவது சாட்டுச்
சொல்லிவிட்டு பூரணம் மாமி வீட்டுக்கு ஓடீருவன்.
இரவு, பகல் எந்தநேரமும் நான் அங்கதான்.
வனஜா அக்கா எனக்கும், கிருபாவுக்கும் கணக்குப் பாடமும், விஞ்ஞானமும்
சொல்லித்தருவா. படிச்சுக்கொண்டு இருக்கேக்க பூரணம் மாமி தேத்தண்ணி
போட்டுக்கொண்டு வந்து தருவா. அதோட பனங்காப் பணியாரமோ, முறுக்கோ, வடையோ
ஏதாவது ஒண்டு இருக்கும். அதுக்காகவே நான் நாள்தவறாமல் படிக்கப்போவன்.
வளர்ந்த பிறகும் மனுசி என்னைத் தன்ர பிள்ளையளைக் கவனிக்கிற மாதிரித்தான்
கவனிச்சா.
நாங்கள் அளவெட்டியில இருந்து இடம்பெயர்ந்த பிறகு அவை யாழ்ப்பாணத்தில
சொந்தக்காரர் வீட்ட இருந்தவை. நாங்க எங்களுக்குத் தெரிஞ்ச ஆட்கள்
கோண்டாவிலில இருந்தவை, அவையளோட நாங்கள் தங்கீட்டம். அப்பவும் ஏ. லெவல்
படிக்க யாழ்ப்பாணத்துக்கு டியூசனுக்கு வரேக்க கிருபா தன்னோட என்னையும்
வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போவான். அங்கதான் சனி, ஞாயிற்றுக்கிழமையள்ள
மத்தியானச் சாப்பாடு.
அவ்வளவு கஸ்டத்திலயும் மனுசி முகம்கோணாமல் எனக்கும் சாப்பாடு தரும்.
இடம்பெயர்ந்த நேரம் வீட்டில nஷல்
விழுந்தப்போ அப்பாவும் இறந்ததினால எங்களுக்குக் கொஞ்சம் கஸ்டம்தான்.
சில நேரங்களில டியூசன் காசு கட்டவும் வசதியிருக்காது. பூரணம் மாமி
இரண்டொரு தடவை எனக்கு டியூசன் பீஸ் கட்ட காசும் தந்திருக்கிறா.
பழைய நினைவுகளுடன் பூரணம் மாமியை ஏற்றிக்கொண்டு என் கார் ரேடியோக் கடையை
நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.
எனக்கு வலப்புறமாக அமர்ந்திருந்த பூரணம் மாமி ஒரு குழந்தையை
அணைத்திருப்பது போல ரேடியோவை மடியில் வைத்திருந்தார். என் முகத்தில்
லேசாகப் புன்னகை அரும்பியது.
'வயது போகப் போகப் பூரணம் மாமி
குழந்தையாகவே மாறிவிட்டா'
'அதைத் தாங்களென் மாமி. பின் சீட்டில
வைக்கிறன்' என்றபடி ரேடியோவுக்காகக் கையை நீட்டினேன்.
'வேண்டாம் தம்பி நான் வைச்சிருக்கிறன்' என்றபடி முன்னிலும் அதிகமாக
ரேடியோவை அணைத்துக்கொண்டா.
ஒரு பிள்ளையை வருடுவது போல அந்த
ரேடியோவைத் தன் மெல்லிய விரல்களால் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தா.
'தனிய இருக்கிற மனுசிக்கு இந்த ரேடியோ தானே பொழுதுபோக்கு.....' என்னுள்
நினைத்துக்கொண்டேன்.
பூரணம் மாமியின் முகத்தில் ஏதோ ஒருவித சோகம் அப்பிக்கிடந்தது....!
பாவம் அவவும். மூன்று பிள்ளைகளை
கஷ;டப்பட்டு, பெத்து வளர்த்தும் இண்டைக்கு ஆரும் இல்லாத அனாதை போல
தனியக் கிடந்து கஸ்டப்படுகிறா.
கார் ரேடியோ கடை இருக்கும் பக்கமாக
வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது.
பூரணம் மாமியின்ர மூன்று பிள்ளையளும் கனடாவிலதான் இருக்கினம். ஆனால்
அவையளுக்குத் தாயைக் கவனிக்க நேரமில்ல.
திருமணம் முடிந்துக் கொடுத்த பின்னர் பெத்த பிள்ளைகள் எல்லாம் மூன்றாம்
மனிதர்களாகிப் போனார்கள். அவர்களும், அவர்களது தேவைகளுமே
பிள்ளைகளுக்குப் பெரிதாகப் பட்டது. பெற்றவர்களைக் கவனிக்க அவர்களுக்கு
நேரம் போதவில்லை. கடைசி மகன் கிருபாவுடன் அவர்களால் தொடர்ந்து
வசிக்கமுடியவில்லை. அவ்வப்போது வீட்டுக்கு காவலாளியாகவும், பிள்ளைகளைப்
பராமரிக்கும் ஆயாவாகவும் மட்டுமே அவர்களுக்கு பெற்றோர் பயன்பட்டனர்.
அங்கிளால் பொறுக்கமுடியவில்லை.
அதுவும் அவர் ஆஸ்துமா வந்து இழுத்துக்கொண்டு கிடக்கும்போதும், பூரணம்
மாமி காய்ச்சல் வந்து இருமி, வாந்தியெடுக்கும்போதும் பிள்ளைகளும்,
பேரப்பிள்ளைகளும் அவர்களை வேண்டாப் பொருளாகவே பார்த்தனர்.
'பிள்ளைகளுக்கு எங்களால எந்த இடைஞ்சலும் வரக்கூடாது' என்றபடி அவர்கள்
மனங்கோணாமல் அங்கிள் பூரணம் மாமியையும் கூட்டிக்கொண்டு தனிக்குடித்தனம்
வந்துவிட்டார்.
பெற்றோர்கள் தாங்களாகவே விலகிக்கொண்டதில் பிள்ளைகளுக்கும் திருப்திதான்.
எப்போதாவது பெற்றோரின் நினைவு வரும்போது வந்து பார்த்துவிட்டு போவதோடு
அவர்கள் உறவு முடிந்துவிடும்.
அங்கிள் இருக்கும் வரை பூரணம் மாமிக்குத் தனிமை பெரிதாகத் தெரியவில்லை.
போன வருஷம்தான் அங்கிள் திடீரென்று நெஞ்சை வலிக்கிறதென்று படுக்கையில்
சாய்ந்தவர் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்துவிட்டது.
தகப்பனின் காரியங்கள் முடிந்தபிற்பாடு பிள்ளைகள் அடியோடு தாயை
மறந்துவிட்டார்கள். பூரணம் மாமியும் திடீரென்று பத்துவருடங்களைக் கடந்து
விட்டவா போல தளர்ந்துபோனா.
வயதின் முதிர்ச்சியை விட, பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட தனிமை வாழ்வே அவவை
இன்னும் ஒடுக்கி விட்டது.
நானும் கிருபாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். இப்போதெல்லாம் அவன்
என்னைக் கண்டாலே ஓடி ஒழித்துக்கொள்கிறான்.
ஏதோ என்னால் முடிந்தது என்று அப்பப்போ பூரணம் மாமி கூப்பிடும் குரலுக்கு
உதவியாய் இருக்கிறன்.
ஒரு மணி நேரமாகியும் ரேடியோ திருத்திய பாடில்லை. கடைக்காரர் எவ்வளவோ
சொல்லியும் பூரணம் மாமியும் கேட்பதாக இல்லை.
'அம்மா இந்த ரேடியோ பழசாய் போட்டுது. திருத்துறது கஸ்டம். பேசாமல்
புதுசா ஒரு ரேடியோ வாங்குங்களேன்' என்ற கடைக்காரரைக் கெஞ்சுவது போல
பார்த்தாள் பூரணம் மாமி.
'இல்லத் தம்பி. இந்த ரேடியோவை எப்பிடியாவது திருத்தித் தாங்க. இது
அவ்வளவு பழைய ரேடியோ இல்ல. இப்பத்தான் வாங்கி ஒரு வருஷமாகுது';
'அம்மா போன வருஷம் திருத்த வரேக்கயும் இதையேதான் சொன்னீங்க' என்று
கடைக்காரர் சொன்னது காதில் விழாதவள் போலத் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
'வேற கடையில குடுத்திருக்கலாம் தம்பி...' என்னருகே வந்து காதில்
கிசுகிசுத்தாள்.
'இல்ல மாமி. அவர் சொல்லுறது உண்மைதான். உதைத் திருத்திற காசுக்கு வேற
புது ரேடியோவே வாங்கீரலாம். அதுவும் அவர் திருத்த ஏலாது எண்டு
புறுபுறுத்துக்கொண்டு இருக்கிறார்.'
நான் இரண்டாவது தடவையாகச் சொல்லிவிட்டேன் மாமியும் அசைவதாக இல்லை.
எனக்கு எரிச்சலாக வந்தது.
'பழைய ரேடியோவைத் தூக்கி எறிஞ்சுட்டு ஒரு புது ரேடியோ வாங்கக் கூடாதா?......
பென்சன் காசு நல்லா வருகுதுதானே. கிருபா சொல்லுறதும் சரி போலத்தான்
இருக்கிறது. வயது போகப் போக மனுசிக்கு பிடிவாதமும் கூடிக்கொண்டு போகுது.
மனுசி இனிக் காசை மிச்சம் பிடிச்சு ஆருக்குக் குடுக்கப் போகுதோ......?'
என் சிந்தனையைக் கலைத்தது மாமியின் கனிவான குரல்.
'தம்பி நீங்கள் அந்த ரிம்கொட்டனில ஏதாவது சாப்பிட்டுட்டு, கோப்பியும்
குடிச்சுட்டு வாங்களேன். அதுக்கிடையில அவர் ரேடியோவை திருத்தீருவார்.'
'பூரணம் மாமி என்ர முகத்தில இருந்து என் மனநிலையை ஊகித்திருப்பாவோ'
சங்கடத்துடன் எனது மேவாயைத் தடவினேன்.
'மாமி உங்களுக்கு ஏதாவது......'
'எனக்கு ஒண்டும் வேண்டாம் தம்பி. இந்த ரேடியோ பாடும்வரைக்கும் என்ர
வாயில பச்சைத் தண்ணியும் படாது' ஏதோ விரதம் பூண்டவள் போலப் பூரணம் மாமி
சொன்னது மேலும் எரிச்சலைத்தர எழுந்து ரிம்கொட்டனை நோக்கி நடந்தேன்.
நான் திரும்பி வந்தபோது பூரணம் மாமி ஒரு ஓரமாகக் கிடந்த கதிரையில்
அமர்ந்து நிலத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தா. கடைக்காரர் என்னைக்
கண்டதும் புன்னகைத்தார். அவர் கைகள் வேறு ஒரு ரேடியோவை
சரிபார்த்துக்கொண்டிருந்தன.
'அண்ண, நீங்களாவது அந்த அம்மாவுக்கு சொல்லக்கூடாதா. நான் ஏற்கனவே ரெண்டு
மூன்று தடவை இந்த ரேடியோவைத் திருத்திப் போட்டன். போனமுறை அந்த
அம்மாட்ட சொன்னனான். இனி உதைத் திருத்த ஏலாது. புதுசா ஒரு ரேடியோவை
வாங்குங்கோ எண்டு.'
எங்கள் சந்தடிகேட்டு பூரணம் மாமி எழுந்து என்னருகில் வந்து விட்டா.
எனக்கு அவவைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாக வந்தது.
'வேலைக்களைப்போட பாவம் மனுசியெண்டு நான் பார்த்தால்....... மனுசி காசு
செலவழிக்க இந்தப் பாடுபடுகுது. இதுக்கு நானே பேசாமல் ஒரு புது ரேடியோவை
வாங்கிக் குடுத்திடலாம் போல இருக்குது'.
'மாமி இந்த பழைய ரேடியோவைத் தூக்கிப்போட்டுட்டு, ஒரு புதுரேடியோவை
வாங்குங்களேன். வேணுமெண்டால் நானே ஒரு நல்ல ரேடியோவொன்டு உங்களுக்கு
வாங்கித்தாறன்'
நான் இப்படிக் கேட்பேன் என்று மாமி கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லைப்
போலும். சில நிமிடங்கள் மௌனமாக என் முகத்தை பார்த்தா. பின்னர்
புன்னகைத்தபடியே பதில் சொன்னார்.
'நீ போ. உனக்கு என்ன தெரியும் இந்த ரேடியோவைப் பற்றி...' என்ற பூரணம்
மாமி, கடைக்காரரைப் பார்த்து,
'தம்பி இந்த ரேடியோவை எப்பிடியெண்டாலும் திருத்தித்தாங்க. நான் காசு
எவ்வளவு எண்டாலும் தாறன்' என்றாள்.
என்னை அர்த்தபுஷ;டியுடன் பார்த்த கடைக்காரர், 'அம்மா, இப்ப போயிற்று
நாளைக்கு வாங்க. நான் நாளைக்கு ஏதாவது திருத்த ஏலுமா என்று பார்க்கிறன்'
என்றார் கடைக்காரர்.
வழிநெடுக பூரணம் மாமி அமைதியாகவே வந்தா. நானும் அவவைத் தொல்லைப் படுத்த
விரும்பவில்லை. அவவின் குழந்தைத்தனமான செய்கைக்காகக் கோபப்படுவதா,
சிரிப்பதா என்று எனக்குப் புரியவில்லை.
மறுநாள் காலை நான் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிக்
கொண்டிருந்தேன்.
கேன்போன் தன் அதிர்வலைகளை எழுப்பியது. அப்போதுதான் எனக்கு பூரணம்
மாமியின் ஞாபகம் வந்தது. வேலை இடைவேளையின் போது பார்த்தேன். நான்கைந்து
மிஸ்கோல்கள். எல்லாம் பூரணம் மாமிதான். 'மாமிக்கு அந்த ரேடியோ இல்லாமல்
இருக்கேலாது போல...' என் உதடுகள் முணுமுணுத்தன.
இப்பவும் அவதான். என்னுள் சிரித்துக்கொண்டேன்.
'மன்னிக்க வேணும் தம்பி உங்களுக்கு கரைச்சல் குடுக்கிறதுக்கு. என்ர
ரேடியோவை எனக்கு ஒருக்கா கடையில இருந்து எடுத்துவந்து தாங்க தம்பி.
அந்த ரேடியோ இல்லாதது எனக்கு என்னவோ போல இருக்குது. ரேடியோவை திருத்த
ஏலாட்டியும் பரவாயில்ல. அதையொருக்கா வாங்கிக்;கொண்டு வந்து தாங்க தம்பி'
என்ற மாமி திரும்பவும் சொல்லத்தொடங்கினா.
'அந்த ரேடியோ எனக்கு வேணும் தம்பி. அது வேலைசெய்யாட்டிலும் பரவாயில்ல.
அவர் உயிரோட இருக்கேக்க எனக்கு வாங்கித்தந்த ரேடியோ அது. ரேடியோவை
கட்டில் தலைமாட்டில வைச்சு கேட்டுக்கொண்டிருந்தால் அவரே என்ர பக்கத்தில
இருந்து பேசுகிறாப்போல ஆறுதலா இருக்கும். எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல்
அதுதான் தம்பி.' என்ற மாமி அத்தோடு தொடர்பை துண்டித்துக்கொண்டா.
அப்போதுதான் மாமியின் தவிப்பின் காரணம் புரிந்தது. என்னுள் இனம்புரியாத
வேதனை. வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்த காரை ரேடியோ திருத்தும் கடையை
நோக்கித் திருப்பினேன்.
மாமி முதல்நாள் சொன்ன வார்த்தைகள் என் காதில் மறுபடி வந்து ஒலித்தன.
'இந்த ரேடியோ பாடும்வரைக்கும் என்ர வாயில பச்சைத் தண்ணியும் படாது'
மாமியின் குரல் ஈனஸ்வரத்தில் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.
இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுந்து ஒலித்த வேதனைக் குரலாகவே அது
எனக்குத் தோன்றியது.
என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கடைக்காரர், என் கைகளில்
அந்த ரேடியோவைத் திணித்தார்.
'தம்பி இனி இதைத் தூக்கி காபேஜூக்க போட்டுட்டு, அந்த அம்மாவைப் புதுசா
ஒரு ரேடியோ வாங்கச் சொல்லுங்க. மனுசிக்கு எத்தினை தரம் சொன்னாலும்
விளங்காது.......'
புறுபுறுத்தார் கடைக்காரர். ஒரு ஏளனப் புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு,
பூரணம் மாமி இருக்கும் வயோதிப விடுதியை நோக்கி புறப்பட்டேன்.
ரேடியோவை அணைத்தபடி என் கால்கள் காரை விட்டு இறங்கின. ஒரு குழந்தையைத்
தூக்குவது போல அந்த ரேடியோவை இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டு
எலிவேட்டருக்குள் நுளைந்தேன்.
'இந்த ரேடியோ வேலைசெய்யாவிட்டாலும் இது பூரணம் மாமிக்கு எவ்வளவு
ஆறுதலைக் கொடுக்கும்......!!!'
அந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்.
பதினாறு மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் நான்காவது புளோரின் மூன்றாவது
அறைதான் பூரணம் மாமியின் வசந்த மாளிகை.
என் கால்கள் அறையை நெருங்கியதும் தயங்கி நிற்கின்றன. அறைக்கதவுகள்
ஏற்கனவே பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. உள்ளேயிருந்து மெல்லிய
விசும்பல் ஒலி.....
என் மனதில் ஒரு செய்தி ஆழமாக உறைக்க பதட்டமானேன். தாதிப்பெண் ஒருவரும்,
வைத்தியர் ஒருவரும் அவசரமாக அறையை விட்டு வெளியேறுகின்றனர். அறைக்குள்
வனஜா, கிருபா..... வாயைப் பொத்தியபடி, கண்கள் குளமாக.... அவர்களை
விலக்கிக்கொண்டு மாமியை எட்டிப்பார்க்கிறேன்.
பூரணம் மாமி கட்டிலில் சாய்ந்து படுத்தபடி..... கண்கள் விரிந்தபடி......
மேலே சொருகிக்கிடந்தன.
'ஐயோ.....' என் மனம் ஓலமிடுகிறது.
மாமியின் கண்கள் தலைமாட்டுப் பக்கமாகவே பார்த்திருக்கிறது.
'ரேடியோவை கட்டில் தலைமாட்டில வைச்சு கேட்டுக்கொண்டிருந்தால் அவரே என்ர
பக்கத்தில இருந்து பேசுகிறாப்போல ஆறுதலா இருக்கும். எனக்கு இருக்கிற ஒரே
ஆறுதல் அதுதான் தம்பி....' மாமியின் குரல் மறுபடி என் காதுகளில் வந்து
மோதுகிறது.
என் கைகள் நடுங்க ரேடியோவை இறுக அணைத்துக்கொள்கிறேன்.
கிருபா ஓடிவந்து என் கையைப்; பற்றினான். 'அம்மா எங்கள விட்டுட்டுப்
போயிட்டா.....' என்றான் கண்கலங்கியபடி.
விசாகன், வனஜா, கிருபா.......
எல்லோரும் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்கள்.
என்னையும் மறந்து என் விரல்கள் ரேடியோப் பெட்டியின் பட்டனை
அழுத்துகின்றன.
ரேடியோப்பெட்டியும் பூரணம் மாமியைப் போலவே அமைதியில்
ஆழ்ந்துவிட்டிருந்தது. நிசப்தம்....!!!
பூரணம் மாமியின் தலை மாட்டில் அந்த ரேடியோப் பெட்டியை வைத்துவிட்டு
சொருகிப் போயிருந்த பூரணம் மாமியின் கண் இமைகளை மெல்ல அழுத்தி
மூடிவிட்டு என் கால்கள் வாசல்ப்பக்கம் விரைகின்றன. ஒரு பெருமூச்சுடன்
என் இதயம் வெடித்து கண்ணீர் ததும்பக் காரை ஸ்டாட் செய்தேன்.
....................................................
ஞானம், ஒக்டோபர் 2009
செந்தாமரை, 2009
ahil.writer@gmail.com
|