உறுத்தல்
அகில்
அன்று
சனிக்கிழமை.
மதியத் தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராகச் சமையலறைக்கு
வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.
'என்ன சுமதி! எல்லாம் ரெடியா?'
'நாங்க எல்லோரும் ரெடியுங்க. நீங்க தான்......'
'இன்னும் பத்து நிமிஷத்தில் நான் ரெடியாயிடுவன்' சொல்லி விட்டுப் போன
இளங்கோ,
சொன்னதை விட விரைவாகவே ரெடியாகி வந்தான்.
விறாந்தையில் கிடந்த கதிரையில் இளங்கோவின் அம்மா காமாட்சி சோகமாக
உட்காந்திருந்தாள்.
அப்பொழுது தேனீர்க்கப்புகளோடு வந்த சுமதியைப் பார்த்து இளங்கோ கேட்டான்,
'அம்மாவின்ர உடுப்புகள் எல்லாம் எடுத்து பெட்டியில வைச்சிட்டியா?'
'ஒண்டும் மிச்சம் இல்லை. எல்லாம் எடுத்து 'பக்' பண்ணியாச்சு'
விறாந்தையில்; இருந்த பெட்டிகளைக் காட்டினாள் சுமதி.
விளையாட்டுப் பொருட்களில் மனம் லயித்திருந்த இளங்கோ, சுமதியின்; ஓரே
வாரிசு பிரியா, தாயின் பேச்சில் அரண்டு போனாள். எழுந்து வந்து தகப்பனின்
கால்களைக் கட்டிக்கொண்டு,
'அப்பா அப்பம்மா எங்க போறா?' என்றாள்.
'பிறகு சொல்றுறன் முதல்ல அப்பம்மாவுக்கு ஒரு கிஸ் குடு. போ...' என்று
மகளை விரட்டினான் இளங்கோ.
குழந்தை ஒடிச் சென்று அப்பம்மாவை இறுக அணைத்து முத்தம் கொடுத்தது.
எந்த வித பிரதிபலிப்புமின்றி யன்னலினூடாக வெறுமையாக இருந்த தனது அறையை
வெறித்துப் பார்த்தபடியிருந்தாள் காமாட்சி. அப்பம்மாவிடம் வேறுபாட்டை
உணர்ந்த பிரியா தாய், தந்தை இருவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.
'சரி சரி காரில போய் ஏறு பிரியா' நிலைமையைச் சமாளிக்க முயன்றான்; இளங்கோ.
வுழமையாகப் பிரயாணம் செய்கின்றபோது 'அப்பாவுக்குப் பக்கத்திலதான்
இருப்பன்' என்று அடம்பிடிக்கும் பிரியா, காரின் பின்கதவைத் திறந்து
அப்பம்மாவின் பக்தத்தில் அமர்ந்திருந்தது மட்டுமல்லாமல் அப்பம்மாவின்
தோளில் தனது தலையை சாய்த்து அமர்ந்திருந்தாள். அவள் பிஞ்சு முகத்தில்
குழப்பத்தின் சாயல்;.
துடுக்குத்தனம் நிரம்பிய சுட்டிப் பெண் அவள். வாயை மூடிக்கொண்டு பேசாமல்
இருக்க அவளால் முடியவில்லை. அப்பம்மாவின் கையை மெதுவாகச் சுரண்டினாள்.
தன் குண்டு விழிகளை மலர்த்தி,
'அப்பம்மா நீங்க எங்க போறீங்க?' அண்ணாந்து அவள் முகத்தை பார்த்தபடி
கேட்டாள் பிரியா.
'முதியோர் இல்லத்துக்கு' உணர்ச்சிகள் வடிந்த குரலில் கற்பகம் பதில்
சொன்னாள்.
'முதியோருன்னா யாரு அப்பம்மா.......' ஐந்து வயதுச் சிறுமி புரியாமல்
கேட்டாள்.
'என்னைப் போல வயது போனவை' வேதனையையும், துக்கத்தையும் தன் குரலில்
மறைத்தபடி தன் பேர்த்திக்கு பதில் சொன்னாள் கற்பகம்.
'எனக்கு முன்னம் போல ஓடியாடி வேலை செய்ய முடியாது. இந்த 'மிசின்'
யாருக்கும் இனிப் பயன்படாது. அதுதான் என்னை தூக்கிப் போடுகினம்'.
தனக்குத்தானே சொல்வது போல முணுமுணுத்தாள் காமாட்சி.
பிரியா அப்பம்மாவின்; முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது
முணுமுணுப்பு பிரியாவுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது.
திரும்பித் தாயின் முகத்தைப் பார்த்த இளங்கோவின் கால்கள் 'ஆக்சிலேட்டரை'
வேகமாக அழுத்தின.
'ஏன் அப்பம்மா ....................' என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள்
பிரியா.
'ஏய் பிரியா, சும்மா இருக்கமாட்டியா? பேசாம வாயை மூடிக்கொண்டு வா'
அடக்கியது சுமதியின்; குரல். தொடர்ந்து, காரினுள்; அமைதி நிலவியது.
அந்த இறுக்கத்தை தளர்த்தக் கார்க்கண்ணாடியை சற்று கீழே இறக்கினான்
இளங்கோ. ஈரப்பதன் இல்லாத சூடான காற்று அவன் முகத்தில் அறைந்தது.
'என்னப்பா இளங்கோ? இன்னும் கன தூரம் போகவேணுமா?, எனக்கு இப்பிடியே
இருந்து இருந்து முதுகு நோகுதுதடா' நடுங்கும் விரல்களால்
கோடிட்டுக்காட்டிய முதுகுத் தண்டை முனகியபடி வருடினாள் காமாட்சி.
குழந்தை பிரியா தன் பிஞ்சு விரல்களால் அப்பம்மாவின் முதுகை லேசாகத்
தடவினாள். சுருங்கிப்போயிருந்த அந்தத் தோல் கரகரவென்று இருந்தது.
'இல்லையம்மா இந்த 'ஜங்சன்ல' திரும்பினால் சரி. கிட்டத்தான்.'
நெடுஞ்சாலையில்; திரும்பிய கார் சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு, மூன்று
தொடர் மாடிகள் கொண்ட ஒரு சிறிய தெருவிற்குள் நுளைந்தது. மூன்றாவதாக
இருந்த தொடர்மாடிக் கட்டடத்தின் முன்பகுதியில் 'சீனியர் ஹோம்' என்று
ஆங்கிலத்தில் போடப்பட்டிருந்தது தெரிந்தது. வட்டவடிவான அந்தத்
தார்ப்பாதையில் தனது காரை மெதுவாகத் திருப்பினான் இளங்கோ. பெரியவர்கள்
மத்தியில் பேரமைதி நிலவியது. என்ன தோன்றியதோ அப்பம்மாவைப் பார்த்து
பிரியா கேட்டாள்.
'அப்பம்மா அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உங்களை மாதிரி வயசானபிறகு
நானும் அவையள இங்க தான் கொண்டு வந்து சேர்க்க வேணும் என்ன?'
சுருக்கென்றது இளங்கோவுக்கு.
கணவன், மனைவி இருவர்களது கண்களும் ஒருமுறை சந்தித்து மீண்டன.
இளங்கோ வட்டவடிவான அந்த ரவுண்டபோட்டில் காரை மறுபடி திரும்பி ஒரு சுற்று
சுற்றிவிட்டு வந்த வழியே காரைத் திரும்பினான். பிரியா ஆச்சரியமாய்
முன்சீட்டுக்களில் உட்கார்ந்திருந்த தாயையும், தந்தையையும்
உற்றுப்பார்த்தாள். அப்பம்மாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அப்படியே கல்லில் வடித்ததுமாதிரி உட்கார்ந்திருந்தா.
'ஏனப்பா அப்பம்மாவ முதியோர் இல்லத்தில விட இல்லையா?;' ஆச்சரியமாய்
கண்களை விரித்தாள் பிரியா. அவள் முகத்தில் மெல்லியதாய் சந்தோசக்
கீறல்கள்.
'அப்பம்மா இனி எங்களோடதான்; இருப்பா. எங்கயும் போகமாட்டா' என்ற
இளங்கோவின் குரலில் ஒரு உறுதி தெரிந்தது.
பிரியா அப்பம்மாவின் கையை எடுத்து அவள் புறங்கையில் முத்தமிட்டாள்.
பிறகு அந்தக் கையை அவள் விடவே இல்லை. காமாட்சியிடமிருந்து 'ஷஷ_ம்......'
என்று நீண்ட ஒரு பெருமூச்சு வந்தது.
....................................................
உதயன்(கனடா), 27
யூன் 2008
ahil.writer@gmail.com
|