மூங்கில் குருத்து

திலீப்குமார்

 

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ்

கடையிலும் அப்படித்தான்.

வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற

ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக்

கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக்

கறைபடியச் செய்து கெட்டுப்போய்க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப்

போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை

நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின்

அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு

ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு

கிருஷ்ணாஜிராவ் கடையில்.

தறிநெய்கிற தேவாங்கச் செட்டிமார்கள் அதிகமாகப் புழங்குகிற தியாகராஜ

புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைச் செட்டிச்சியின் வீடு.

கட்டடவியலுக்குக் களங்கம் கற்பிக்கிற ஒரு வினோதமான கர்ப்பக்ரஹம் அது. இருளைக்

கிழித்து உள்ளே நுழைந்தால், இருபத்தி நாலு வயதில் அப்பாவை இழந்த அம்மா

வெள்ளையணிந்து கோட்டுருவமாய்ச் சமைந்து காணப்படுவாள். ஆஜானுபாகுவாயிருந்த

அப்பா மூல வியாதி முற்றி ஆசனவாயிலிருந்து ரத்தம் கசியக்கசியக் கதறிய அந்தக்

கடைசிக் கதறல் என் நாலு வயது மனத்தில் வடுவாய்ப் பதிந்துவிட்டது. அந்த

நாட்களில் அம்மாவின் அழுகுரல் கூரையிலிருந்து அடிபட்டுச் சரியும் காகத்தின்

மழுங்கின கரைதலைப் போல் இருக்கும். இன்றும் அக இரைச்சலற்ற அமைதியான இரவுகளில்

அந்தக் குரல் எப்போதாவது உயிர்த்தெழும்.

திரு கிருஷ்ணராஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு நிறைய கெட்ட வார்த்தைகள்

பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே

வெள்ளைக் கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு

காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன்

கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத்

தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர்

காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில்

வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

அந்த நாட்களில் இவர் சம்பாதித்த பணம் ஏராளம்! சினிமா எடுத்துத் தோற்றுப்போனது

போக மிச்சத்தைப் போத்தனூரின் ஆங்கிலோ – இந்தியப் பரத்தைகளிடம்

கரைத்துவிட்டார். இப்போது, காலேஜ் காண்ட்ராக்டிலும், கிழடாய்ப் போய்விட்ட

இவரது இளம் வாடிக்கையாளர்களின் தயவிலும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

சுபிட்சத்திலிருந்து தரித்திரத்திற்குச் சரிந்த திரு ராவின் வீடு, தையற்கடை,

நவாப் ஹகீம் ரோடின் கோடியில் ஒரு சினிமாக் கொட்ட கைக்கு எதிரில் இருந்தது.

மேஜை, நாற்காலிகள், ‘கௌண்டர்கள்’, தையல் இயந்திரங்கள் அனைத்துமே நவீனமற்றுச்

சிதைந்து பழமை பகரும். ஒரு கம்மிய இருள் கடைக்குள், எப்போதும்.

செவ்வகமாயிருந்த கடையின் பின்பகுதியை வீடாக உபயோகித்துக் கொண்டிருந்தார்

திரு,ராவ். ஒரு குமாரனையும் மூன்று குமாரத்திகளையும் திரு ராவுக்காகப்

பெற்றுத்தந்த திருமதி லக்‌ஷ்மிபாய் கொள்ளை அழகாக இல்லாவிட்டாலும் தளராத

உடம்புக்காரி. நல்ல உடம்பு. நாற்பத்து மூன்று வருஷங்களை விழுங்கிவிட்டு

முப்பதாய் காட்டுகிற வசீகரம். திரு ராவ் குடித்து விட்டு இவளை அறைந்தும்

குத்தியும் அவள் இடது காது செவிடாகி இருந்தது. மூத்த பெண் சுமித்ரா பியுசி

படித்துக்கொண்டு, ‘சிமெண்ட்டா’ல் மெழுகின, ‘பாவ’மில்லாத முகத்துடன், மதிய

வேளைகளில் பாவாடை விலகி, கால்கள் தெரியக் கிடப்பாள். (வீட்டுக்குள்ளிருந்த

தொலைபேசி, திரு.ராவ் இல்லாத சமயமொன்றில் கிணுகிணுத்ததனால் கிட்டிய தரிசனம்).

இரண்டாவது பெண் கௌரிக்கு வயது பதின்மூன்று. நீண்ட பெரிய கண்கள். நீண்ட நாக்கு.

அடுத்தது பையன். எட்டு வயதில் சொத்தைப் பற்களுடன் எல்லோரையும் திட்டிக்

கொண்டுத் தாவும் வானரம். கடைசியாய் ’லட்டு’ என்ற சுலோச்சனா. மூணு வயது.ஒரு

நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பவளாக இருந்தாள்.

கோபிநாத்ராவ், பத்மநாத் ராவ் , கோவிந்த ராவ், தேஷ் பாண்டே, ரகுநாத் ராவ்,

பாண்டுரங்க ராவ், மல்லிகார்ஜுன ராவ் என்று ஒரு ஏழை மராட்டியர் பட்டாளத்தையே

வேலைக்கு அமர்த்தியிருந்தார் ராவ். சில்லரை பண்ணுகிற சுகுமாரன் (வயது 10)

மலையாளி. கணக்குப் பார்க்கிற நான் குஜராத்தி. கணக்கு என்றால் ஏதோ பெரியபெரிய

பேரேடுகளைப் புரட்டிப் புரட்டி எழுதுகிற வேலை இல்லை. திரு. ராவ் இல்லாத

சமயங்களில் வசூலாகும் பணத்தைக் கணக்கு வைத்து, அவர் வந்து வெற்றுடம்போடு

அமர்ந்து ‘கத்திரி’ மார்க்கைச் சப்தத்துடன் உறிஞ்சி ஊதிக்கொண்டிருக்கிற

சுமுகமான மனநிலையில் விவேகத்துடன் கொடுத்துவிட வேண்டும். என் சக ராவ்கள் தினம்

ஒன்று இரண்டு என்று வாங்கும் முன்பணத்தைப் பற்று எழுத வேண்டும். அளவு

எடுக்கும் போது குறித்துக்கொள்ள வேண்டும். குறித்ததைத் துணியுடன் ஒரு துண்டுக்

காகிதத்தில் எழுதி கட்டிங் மாஸ்டர் கோபிநாத் ராவிடம் கொடுக்க வேண்டும்.

(கோபிநாத் ராவ் 50 களின் இந்திப்பட வில்லன்களைப் போல மங்கிய முகத்தில் அம்மைத்

தழும்புகளோடு கண்கள் ஜ்வலிக்க, பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துகிற மனிதன். திரு

ராவுக்கும் இவனுக்கும் ஏற்படும் சச்சரவுகளின் போது 32ஐ 22 ஆக வெட்டித்

தள்ளிவிடுவான். தான் எழுதித் தரும் துண்டுச் சீட்டிலும் மாற்றிவிட்டு

என்னையும் மாட்டிவிடுவான். பிறகு என் கற்பும், என் அம்மாவின் கற்பும் திரு

ராவின் நாக்கில் துவண்டு சிதைந்து பறிபோகும்),

கடையில், எத்தனை முறை தட்டினாலும் போகாத தூசியைத் தட்ட வேண்டும். கௌரிக்கு

லீவ் லெட்டர் மற்றும் ‘எக்ஸ்கர்ஷன்” பற்றிய காம்போசிசன் எழுதித்தர வேண்டும்.

‘லட்டு’வைக் கொஞ்ச வேண்டும். மிச்சமிருக்கிற நேரத்தில் ஒரு கணக்குப்

புத்தகத்தை முன்னால் பிரித்துப் போட்டுவிட்டு மேஜைக்கு மேலே தொங்கும் மங்கிப்

போன கண்ணாடியில் கணக்குப் பார்க்கிற பாவனையில், முகத்தை வெறித்துக்

கொண்டிருக்கலாம்.

அன்று சனிக்கிழமை.

திரு ராவ் காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டிருந்தார். எதிர்க் கொட்டகையில்

திலகங்களில் ஒருவர் நடித்த புதிய திரைப்படம். இரண்டரை மணிக் காட்சிக்கு

டிக்கெட் கிடைக்காதவர்கள் மாலைக் காட்சிக்கு இப்போதே நிற்க

ஆரம்பித்திருந்தார்கள்.

இரட்டை வேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும், கந்தல் துணியுமாக வெறிக்க,

இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில்

கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள்போல் பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில்

காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு,

அவள் நிஜ மூக்கை விட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் –

தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும், தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக

இருக்கக் கூடாது என்று அறிந்த – புத்திசாலி, மூக்கில் கோட்டை விட்டதை முலையில்

சரிக்கட்டி இருந்தான்.

கோபிநாத்ராவ் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கடைக்குள்

அமைதியாக இருந்தது.

பொதுவாக இந்த நேரத்தில் ‘ராவ்’கள் எல்லோரும் உற்சாகமாகப் பேசிக்கொள்வார்கள்.

தையலைப் பற்றி, தையல் இயந்திரங்களைப் பற்றி, அங்கே இல்லாத ‘காஜா’ எடுக்கும்

இயந்திரங்களைப் பற்றி… இந்தப் பேச்சுகள் எங்கிருந்து துவங்கினாலும் அநேகமாக

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே சென்று

முற்றுப்பெறும். – எல்லா இந்திய சர்ச்சைகளையும் போல். அன்று அது பற்றிக்கூட

பேச ஒன்றுமில்லாததுபோல மௌனமாக இருந்தார்கள் எல்லோரும்.

அன்று வசூல் பிரமாதம் இல்லை. பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட

வரவில்லை. இதற்குள் எல்லோரும் என்னிடம் ஓரிரு முறை வசூல் எவ்வளவு என்று

தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார்கள். மாலைக்குள் இருநூறு

ரூபாயாவது ஆனால்தான் அனைவருக்கும் கூலி தர முடியும். ஆகும் என்ற நம்பிக்கை

யாருக்கும் இல்லை.

திரு ராவின் ஊழியர்களுக்கு இம்மாதிரியான இக்கட்டுகள் புதியவை அல்ல. மாதத்தின்

கடைசி வாரத்தில், அநேகமாக எல்லா மாதங்களிலும், இப்படி நடந்துவிடும். சென்ற

மாதம் திரு ராவ் பெங்களூர் சென்றிருந்தபோது வசூலே ஆகாத ஒரு சனிக்கிழமையன்று

திருமதி லக்ஷ்மிபாய் எல்லோருக்கும் இரண்டுலிட்டர் அரிசி கொடுத்தனுப்பினாள்.

ஆனால் திரு ராவ் இம்மாதிரியான அதீதச் செயல்களில் இறங்கமாட்டார். இன்று பணம்

வராவிட்டால் அரிசி கூட இல்லாமல் வெறும் கையோடு செல்லவேண்டியது நிச்சயம்.

எல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனத்துடன் வேலை செய்து

கொண்டிருந்தார்கள்.

புதிதாய்க் கல்யாணமானவன் பத்மநாத் ராவ், தாய்வீட்டிலிருந்த தன் மனைவியை

அழைத்து வர, கூலியைத் தவிர இருபது ரூபாயை முன்பணமாக எதிர்பார்த்தவன். உற்சாகம்

குன்றி அடிக்கடி எழுந்துசென்று பீடிகுடித்துக்கொண்டிருந்தான்.

எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அவள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்.

இன்றோடு அரிசி தீர்ந்தது என்று மதியமே அறிக்கைவிட்டிருந்தாள். மறுநாள்

அப்பாவின் ’திவசம்’ வேறு.திவசத்தன்று பிராமணனுக்குப் போடுகிற சாப்பாடு

அப்பாவைச் சென்றடைகிறதோ இல்லையோ, இப்படி மாதக் கடைசியில் செத்துப் போய்

கழுத்தறுத்திற்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். பின் அதற்காக

வருத்தப்பட்டேன். தொடர்ந்து, நான் பெரியவனான பின் அப்பாவின் திவசத்திற்கு

ஊரையே கூட்டி சாப்பாடு போடவேண்டும் என்று லஜ்ஜையன்று மனது உறுதி பூண்டது.

அண்ணாவும் கருணாநிதியும் கொடி கட்டி ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழக

லாட்டரிக்கு மக்கள் நாயாக அலைந்துகொண்டிருந்தார்கள். அரிசி மட்டும் மலிவாய்க்

கிடைத்தது. வாடையடிக்கிற பழுப்பு நிறத்தில், ரூபாய்க்கு இரண்டு படி!. அம்மா

அதற்குச் செல்லமாக பெயர் கூடச் சூட்டியிருந்தாள், ‘ரப்பர் சம்பா’ என்று.

இல்லாத வேலைக்காரியையும் சேர்த்து நாலு பேருக்கு 12 கிலோ, கோதுமை 4 கிலோ,

எல்லாம் சேர்த்து பதின்மூன்று ரூபாய் சொச்சம். தம்பியின் முதலாளி முன்பணம்

தராத ராட்சசன். என் வாரக்கூலியில் ரேஷன் வாங்க வேண்டும் என்பது தான் வழக்கமான

திட்டம். நான் வாசலைநோக்கியபடியே அமர்ந்திருந்தேன் நிறைவேற.

பாண்டுரங்கராவ் சுகுமாரோடு பேச ஆரம்பித்தான்.

எதிர்த் திசையிலிருந்து தெருவைக் கடந்து திரு ராவ் வருவது தெரிந்தது. நன்றாக

வெயிலில் அலைந்ததால் முகம் கிழடு தட்டிய ஆப்பிள் பழம் போல் சிவந்திருந்தது.

அவர் ஒவ்வொரு அடியை வைத்த போதும் அவர் தொந்தி குலுங்கி குலுங்கி ஆடியது. திரு

ராவின் தொந்தியானது மற்றெல்லா தொந்திகளைவிடவும் பிரத்தியேகமானது.

ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய்

முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின் ‘வெடுக்’கென்று இறங்கிச்

சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண

வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத்

தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக்

குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை.

இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக்

குலுங்கிக் கொண்டிருந்தது.

மற்ற ராவ்கள் கவனிக்கும் முன் திரு ராவ் கையிலிருந்த துணிப்பொட்டலத்தை

மேஜைமேல் போட்டபடி உள்ளே நுழைந்தார். நான் ஏற்கனவே எழுந்துவிட்டிருந்தேன்.

திரு ராவ் வந்ததை அறியாத பாண்டுரங்க ராவ் தனக்குத் தெரிந்த ஒரு மலையாளக் கெட்ட

வார்த்தைக்குச் சுகுமாரிடம் அர்த்தம் கேட்டு அவனைச் சீண்டிக்கொண்டிருந்தான்.

திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார்.

மற்ற ராவ்கள் எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள்.

நாணிச் சிணுங்கிச் சிரித்தபடித் தலைநிமிர்ந்த சுகுமாரன் திரு ராவைக் கண்டதும்

திகைத்து மிரண்டு போனான். திரு ராவுக்குக் கோபம் பீறிட்டது. மேஜைமேல் வைத்த

துணிப் பொட்டலத்தை அவன் முகத்தை நோக்கி வீசிக் கொண்டே “என்னடா லௌடே கா பால்

சிரிக்கிறே?” என்று பாய்ந்தார். துணிப் பொட்டலம் சுகுமாரனின் பிடரியில் பட்டு

சிதறியது. அவன் நடுங்கிக் குனிந்தபோது அவன் காதில் பாதியும் கன்னத்தில்

பாதியும் சேர்த்து ஒரு அறை விழுந்தது. “மாதர் சோத்! வேலையெ பாப்பானா

சிரிச்சிட்டிருக்கான்… லௌடே கா பால்” தொடர்ந்து திட்டியபடி திரு ராவ்,

பாண்டுரங்க ராவ் பக்கம் திரும்பினார். அவர் திரும்புவதற்காகவே காத்திருந்தவன்

போல சட்டென்றுத் தலையைக் கவிழ்த்து வேலையில் ஆழ்கிற பாவனை செய்தான் இவன்.

இப்படிச் செய்ததும் திரு ராவுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.

“ஏய் காய் கொஸ்டியே, புத்தி நஹி பெஹ்ன் சோத்” (ஏய் என்ன பேச்சு இது! புத்தி

இல்லையா பெஹ்ன் சோத்) என்று உரத்த குரலில் சத்தம் போட்டார் திரு ராவ்.

பாண்டுரங்கராவ் ஏதோ சமாதானம் சொல்ல வாயெடுத்தான். உடனே திரு ராவ் அவனை

மறித்து, “அமி விட்சார்த்தோ (த்) கசாலா? கசாலா ரே மா….தர் சோத்?” (நான்

கேட்கிறேன் எதற்கு? எதற்கடா மாதர்சோத்?) என்று முன்பை விட வேகமாகக் கத்தினார்.

பின் ஓரிரு வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் முனகிவிட்டு மீண்டும் குரலை

உயர்த்தி “புட்டா மாதர் சோத்!… புட்டா மாதர் சோத்!” (கிழட்டு மாதர்

சோத்! கிழட்டு மாதர் சோத்) என்று தீர்மானமான குரலில் கூறிவிட்டு வேகமாகத் தன்

நாற்காலியை அடைந்து அமர்ந்தார்.

பாண்டுரங்க ராவ் குறுகி, மடியிலிருந்த கோட்டின் கைக்குப் பட்டன் வைக்க

ஆரம்பித்தான். பாண்டுரங்கராவுக்கு அறுபது வயதிருக்கும், வழுக்கைத் தலை. சென்ற

மாதம் தான் பருவமடைந்த அவன் பேத்தி இறந்துபோயிருந்தாள்.

திரு ராவ் கோபம் தணியாமல் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.

கௌரி, அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சூப்பியிடமிருந்து அந்த வாரத்து ‘ராணி’யை

இரவல் வாங்கிக்கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தன் மகளைப் பார்த்ததும்

திரு ராவின் கோபம் சட்டென்று அவள் பக்கம் திரும்பியது. கடுமையான மராத்தியில்

அவளை அழைத்தார். திரு ராவ் வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம்

தயங்கி நின்றாள். பின், மெல்ல, பயந்துகொண்டே அவரருகில் சென்றாள். காட்டமான

ஐந்து மராத்திக் கேள்விகளுக்கு அச்சம் கலந்த நான்கு பதில்களே வந்தன. பின்

திடீரென்று ஐந்தாம் கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை

விழுந்தது. அவள் அழுதுகொண்டே விலகினாள். திரு ராவ் அவளைப் பிடிக்க முயன்றார்.

கௌரியின் பின்னல் திரு ராவின் கையில் சிக்கி நழுவியது. கௌரி உள்ளே ஓடினாள்.

திரு ராவும் அவளைத் துரத்திக்கொண்டு உள்ளே சென்றார். தொடர்ந்து கௌரியின்

கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம்

கேட்டது.

ஒன்றுமே நடக்காதது போல் உள்ளே வந்தான் கோபிநாத்ராவ். தன் மேஜையின்

மையத்திலிருந்த கத்தரிக் கோலை ஓசைபட நகர்த்தி வைத்துவிட்டு, அடுத்து வெட்ட

வேண்டிய துணியை விரித்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து ஃபோன் கிணுகிணுத்தது.

ஃபோன் செய்தவரோடு நெடுநேரம் ஒருமையில் சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்தபோது

திரு ராவின் கோபம் கணிசமாய் மறைந்துவிட்டிருந்தது.

இயங்கிக் கொண்டிருந்த தையல் இயந்திரங்களைத் தாண்டி அங்கொரு நிசப்தம் நிலவியது.

நான் தயங்கித் தயங்கி திரு ராவிடம் டீ குடிக்க வெளியே செல்ல அனுமதி கேட்பதற்கு

மணி ஏழாகிவிட்டது. இரவுக் காட்சிக்காக நின்ற கும்பலை விலக்கித் தெருவுக்குள்

இறங்கியதும் திடீரென்று ஒரு விடுதலையுணர்வு ஏற்பட்டது.

சிறிது தூரம் சென்றதும் இஸ்திரி போடுகிற நடராஜன் தலைப்பாகையோடு

எதிர்ப்பட்டான். நடராஜன் படுசோம்பேறி. மனைவி, பகலெல்லாம் தோள்கள் வலிக்கத்

துவைத்து சம்பாதிக்கிற பணத்தை மாலையில் இவன் குடித்துத் தீர்த்துவிடுவான்.

என்னைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே அருகே வந்து, “ராவ் இருக்கானா?”என்று

கேட்டான். திரு ராவ் எதிரில் இல்லாத சமயங்களில் அவரை ஒருமையில் அழைப்பது தான்

வழக்கம். பதிலாக, நான் தலையை ஆட்டியதும் உற்சாகத்துடன் “வரட்டுமா” என்று

வேகத்தைக் கூட்டி நடந்து சென்றான்.

நம்பியார் கடை ரேடியோ விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சுவையில்லாத ஆனால் சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் சிறிது தெம்பாக

இருந்தது. கடைக்குள் நிறைய பேர்களிருந்தனர். சிக்கனம் பார்க்கிற பதினெட்டு

வயதுட்குட்பட்ட கடைப்பையன்களும், ஐம்பதைத் தாண்டிய கஞ்சத்தனம் பிடித்த ஜவுளிக்

கடை குமாஸ்தாக்களுமே அதிகம் இருந்தனர். காரணம், மற்ற இடங்களில் பதினைந்து

காசுக்கு விற்கும் டீ நம்பியார் கடையில் பன்னிரெண்டு காசு!

டீக் கடையிலிருந்து வெளியே வந்து ‘டவுன் ஹால்’ பக்கமாக நடக்க ஆரம்பித்தேன்.

டவுன் ஹால் அருகே ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பது தெரிந்தது. கூட்டத்தின்

நடுவிலிருந்து அடர்த்தியான கரிய புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது. நான்

வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும்

துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன். வழக்கம்போல், நரிக்குறவர்கள் டயர்

துண்டுகளை எரித்துச் சோறு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அரை வட்டமாகச் சுற்றி நின்ற கூட்டத்தின் நடுவே இரண்டு போலிஸ்காரர்கள்

குறவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பிரம்பால்

அடித்துக்கொண்டிருந்தார்கள். குறவர்கள் அடிக்குப் பயந்து பதறிப் பதறி

இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சாக்கடை விளிம்பிலிருந்து சற்று விலகி, காய்ந்த மலங்களினூடே மூன்று கற்களாலான

அடுப்புகளின் மேல் சிறிய சிறிய சட்டிகளில் சோறு வெந்துகொண்டிருந்தது. இதுவரை

எப்படியோ அவற்றைக் கவனிக்கத் தவறிய போலிஸ்காரன் ஒருவன் அதைக்

கவனித்துவிட்டான். மறுகணம் சட்டிகளை எட்டி உதைத்தான் அவன். ஒரு குரூரமான

உற்சாகத்துடன் அவன் அதைச் செய்தான். சட்டிகள் உருண்டு சாக்கடைகளில் விழுந்தன.

உடைந்த ஒரு சட்டியின் பகுதி மட்டும், சோறு வழிய சாக்கடை விளிம்பிலேயே

நின்றுவிட்டது. அதைக் கண்ட மற்றவன் அதையும் எட்டி உதைத்துச் சாக்கடையில்

தள்ளினான். கூட்டம் நிதானமாக வேடிக்கை பார்த்தது.

குறவர்களைக் குறித்த சில அடிகள் தப்பி அவர்களின் சிறிய குழந்தைகளின் மீதும்

விழுந்துகொண்டிருந்தன. கதறிக்கொண்டிருந்த குழந்தைகளுடன் குறத்திப் பெண்களும்

ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்.

ஓரிரு நிமிடங்களுக்குப் பின் சட்டிகளை எட்டி உதைத்தவன் எதையோ சாதித்து விட்ட

களைப்பில் திரும்பினான். கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் கோபம் வர

ஆரம்பித்தது. அவன் திட்ட ஆரம்பிப்பதற்கு முன் நான் விலகி நடந்தேன்.

கடைக்குத் திரும்பியபோது திரு ராவ் உற்சாகமாக ஒரு வாடிக்கையாளரிடம்

சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். தவிர, இன்னும் பல வாடிக்கையாளர்கள் வந்து

போனதற்கான தடயங்கள் காணப்பட்டன. பத்மநாத் ராவ் ஒரு சட்டை காலரின் உட்பக்க

தையலை முடித்து விட்டு அதை வெளிப்பக்கம் உதறலுடன் திருப்பி நிமிர்ந்தான்.

என்னைப்பார்த்ததும் பற்களைக் காட்டிச் சிரித்தான். கூலிக்கான பணம்

வசூலியாகியிருக்க வேண்டும்.

எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

மணி ஒன்பதரை.

தரையில் அமர்ந்து வேலை செய்வதற்காக காலையில் விரித்த ‘காடா’ துணியை பாண்டுரங்க

ராவ் உதறி மடிக்க ஆரம்பித்தான். நான் என் மேஜைக்குச் சென்றமர்ந்து ஒவ்வொருவார்

கணக்கையும் சரிபார்த்து வைத்துக் கொண்டேன். பின் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கம்

போல கூலி பட்டுவாடா நடைபெற்றது.

திரு ராவ் ஒவ்வொரு முறையும் பாக்கெட்டிலிருந்துப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக

எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தன் பாக்கெட்டில் எத்தனை ரூபாய் இருக்கிறது

என்று யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிக நாட்டம். அனாவசியமாக

இக்கூலிப்பட்டாளத்தின் முன்னே பணத்தைப் பிரஸ்தாபித்து அதன் விளைவாக இவர்கள்

முன்பணம் கேட்கத்தூண்டப்பட்டு, கேட்டுப் பின் ஏமாந்து, (தன்னை) சபித்துச்

சோர்ந்து திரும்புகிற அவஸ்தையில் ஆழ்வதைத் திரு ராவ் என்றுமே விரும்புவதில்லை.

ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் கூலியைப் பெற்று கிளம்பினார்கள்.

அதிர்ஷ்டவசமாக பத்மநாத் ராவ் மட்டும் இருபது ரூபாய் முன்பணத்தை எப்படியோ

பெற்றுக் கொண்டான்.

நானும் திரு ராவும் தனிமையில் விடப்பட்டோம்.

ஒரு சில கணங்களின் யோசனைக்குப் பின் திரு ராவ் என்னைப் பார்த்து “நீ

திங்கட்கிழமை வாங்கிக் கொள்கிறாயா?” என்று இந்தியில் கேட்டார். அம்மாவின்

சிவந்த மூக்கு ஞாபகம் வர எனக்கு வயிற்றைக் கலக்கியது. நான் தாழ்ந்த குரலில்

”நாளை ரேஷன் வாங்க வேண்டும்” என்றேன். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார் திரு

ராவ். சிறிது நேரத்துக்குப் பின் தன் பாக்கெட்டிலிருந்த மொத்தப் பணத்தை வெளியே

எடுத்தபடியே கறாரும் அலட்சியமும் கலந்த குரலில் “வீட்டில் ஏதாவது பணம் தேவையா

என்று கேட்கிறேன். தேவையில்லை என்றால் உனக்குத் தருகிறேன். அல்லது நீ

திங்கட்கிழமைதான் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறி லக்ஷ்மிபாய்க்குக்

குரல் கொடுத்தார்.

லக்ஷ்மிபாய்க்கு நூறு ரூபாய் தேவைப்பட்டது. திரு ராவ் பணத்தை

எண்ணிப்பார்த்தபோது அதில் எழுபத்தைந்துரூபாய்தான் இருந்தது. அறுபது ரூபாயை

லக்ஷ்மிபாயிடம் கொடுத்து பின் மராத்தியில் ஏதோ கூறினார். “பதினைந்து ரூபாய்

தான் இருக்கிறது. நாளை எனக்கு செலவுக்கு வேண்டும். நீ திங்கட்கிழமை

வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறிவிட்டு நாற்காலியில் சென்று

அமர்ந்தார். நான் நிராசையுடன், கடைசியாக மூட வேண்டிய கதவை மூட முனைந்தேன்.

என்னையே வெறித்துக்கொண்டிருந்த திரு ராவுக்குத் திடீரென்று ஒரு யோசனை

தோன்றியது. “நாளைக் காலை ஏன் நீ காலேஜுக்குச் சென்று கோட்டுகளை டெலிவரி செய்து

விட்டு வரக்கூடாது? பணம் வந்தால் நீயும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கும்

உபயோகமாக இருக்கும்”. இதைக் கூறியவுடன் என் மனத்திற்குள் நம்பிக்கை,

பொறியாய்த் துவங்கித் தீயாய் வியாபித்தது. நான் ஆர்வத்துடன் பலமாகத் தலை ஆட்டி

அதை ஏற்றுக் கொண்டேன். “நேரமாகிவிட்டது. கோட்டுகளை நாளைக் காலை வந்து ‘பாக்’

செய்துகொள்ளலாம்” என்று திரு ராவ் கூறிக்கொண்டிருக்கும்போது “என்னா…..ராவ்”

என்று உற்சாகத்துடன் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார் எதிர்க் கொட்டகை மானேஜர்

ராமநாதன். ராமநாதன் வந்தால் அன்று விசேஷம் தான்.

விரல்களிலிருந்த மோதிரம் மின்ன வெள்ளை வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்த

கொட்டகை மானேஜர் ராமநாதன் சொகுசு மாப்பிள்ளை! கொட்டகை, நகைக்கடை

வைத்திருக்கும் அவர் மாமனாருக்குச் சொந்தமானது. தன் சொத்தை முழுவதும்

கிண்டியில் ஓடிய நத்தைகளாய்ப்பார்த்து பந்தயம் கட்டித் தீர்த்துவிட்டு, இருபது

வருஷமாய் இந்தப் புளியங்கொம்பைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்

ராமநாதன். அவர் மனைவிக்கு உடம்பெல்லாம் வெண்குஷ்டம்.

திரு ராவும் ராமநாதனும் நெடுநாள் ஸ்நேகம். ஒரே தம்ளரில் பட்டை அடிப்பார்கள்.

ஒரே பொம்பளையுடன் படுத்துக் கொள்வார்கள். கொட்டகையில் புதிய திரைப்படங்கள்

வெளியாகும் சந்தர்ப்பங்களில், திரு ராவ் கடையில் தொழில் மந்தமாக இருந்தால்

முதல் வாரம் முழுதும் காட்சிக்கு 25 டிக்கெட்டுகளைத் தந்துவிடுவார் ராமநாதன்.

நானும் நடராஜனும்தான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, ஒன்று தொண்ணூறை ஒன்பது

ரூபாய்க்கு விற்றுவிட்டு வருவோம். நடராஜன் எம்டன்! அடிக்கிற சுங்கிடியைத் தவிர

திரு ராவிடம் டிக்கெட் ஒன்றுக்கு எட்டணா வாங்கிவிடுவான்.

விடைபெற்றுக்கொள்ள திரு ராவின் முன் சென்று நின்ற போது ராமநாதன் என்னைப்

பார்த்து லேசாக முறுவலித்தார்.

“போகிற வழியில் அப்படியே கொஞ்சம் நடராஜனை வரச் சொல்லிவிட்டுப் போ” என்று கூறிய

திரு ராவ் “மாணவர்கள் சினிமா பார்க்க, அங்கே இங்கே கிளம்பிவிடுவார்கள். காலை

ஆறு மணிக்கே புறப்பட்டால்தான் அவர்களைப் பிடிக்க முடியும்” என்று

எச்சரித்தார். நான் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.

நடராஜனின் வீடு டோபி-கானாவில் இருந்தது. சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது

சிம்னி விளக்கின் ஒளியில் பெரிய நிழலோடு கிடந்தான் அவன். என்னைப் பார்த்ததும்

எழுந்து வரவேற்றான். நல்ல வேளை! சுவாதீனமாகவே இருந்தான். நான் விஷயத்தைக்

கூறிவிட்டுத் திரும்பி நடந்தேன்.

தியாகராஜ புதுவீதியை அடைந்ததும் “பாவா கெண்ட என்த்த” என்ற தெலுங்குக் குரல்

வரவேற்றது. யாருக்காகவோ தெருவில் காத்திருந்த பெண்தான் யாரிடமோ கேட்டாள். மணி

பத்தரை ஆகிவிட்டிருந்தது.

கதவு வெறுமனே சாத்திக் கிடந்தது. அம்மா ‘அகண்ட் ஆனந்த்’ (மத சம்பந்தமான

குஜராத்திப் பத்திரிக்கை) படித்தபடியே கண்ணாடியுடன் உறங்கிப் போயிருந்தாள்.

நான் குனிந்து கண்ணாடியைக் கழற்றி ஓரமாக வைத்தேன். அம்மா குழந்தையைப் போல்

படுத்துக் கிடந்தாள். கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப் போய், சதை

தளர்ந்து சிதைவுற்றுப் போயிருந்தது முகம். நெற்றியில் மெலிதான ரேகைகளாய்ச்

சுருக்கங்கள் விழுந்துகொண்டிருந்தன. இளம் வயதில் அடர்த்தியாய்

சுருள்சுருளாய்த் ததும்பி வழிந்த கேசம், இப்போது களைத்துப்

படிந்துவிட்டிருந்தது. காதோரங்களில் நரை கண்டுவிட்டது. வயதாகிவிட்டது. ஆமாம்.

அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எத்தனை நாட்கள்; எத்தனை வருடங்கள். வருடங்களை அவள்

தின்றுவிட்டிருந்தாள்; வருடங்கள் அவளைத் தின்றுவிட்டன.

முகம் கழுவிவிட்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்தபோது ஆவேசமாய், திரு ராவின்

குடும்பத்திற்கே சாபம் கொடுத்தாள் அம்மா. பின் குழம்பிப் போய் மௌனமானாள்.

அம்மாவின் சீற்றம் இப்படி ஒரே வரியில் வெளிப்பட்டு அடங்கிவிட்டது எனக்கு

நிம்மதியாயிருந்தது. ஓரிரு கணங்கள் நிசப்தத்தில் கழிந்தன. ஒருவேளை விஷயம்

இன்னும் உறைக்கத் துவங்கவில்லையோ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே

“ராஸ்கல், நாளை உன் அப்பாவுக்கு திவசத்தை வைத்துக் கொண்டு வெறும் கையோடு

வந்திருக்கிறாயே! வெட்கமாக இல்லையா நாயே” என்று நான் கூறிய செய்தியை நம்ப

மாட்டாவளாய் பரபரப்போடு எழுந்து கையை ஓங்கிக் கொண்டே என்னை நோக்கி திடீரென்று

ஓடி வந்தாள் அம்மா. பிறகு, ஓங்கிய கையை மடக்க மறந்து தமிழும் குஜராத்தியும்

கலந்த மணிப்பிரவாளத்தில் திட்ட ஆரம்பித்தாள். ஒவ்வொரு வாக்கியத்திற்குமிடையே

ஓரிரு கணங்கள் இடைவெளி விட்டு விட்டுக் குரலை உயர்த்தி உயர்த்தித் திட்டினாள்.

வசவுகளை மட்டுமே மனத்தில் கொண்டு ஆத்திரத்தில் ஆரம்பித்துவிட்ட அநேக

வாக்கியங்களை முடிக்க முடியாமல் திணறிய போதெல்லாம் என்னையும் சபித்தாள். நான்

பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.

அம்மாவின் வசைப்பாட்டில் உள்ளடக்கமாய்த் திரு ராவ் இருந்தாலும் உருவாக நாளை வர

இருந்த பிராமணரே திகழ்ந்தார். பிராமணர் தமிழர்தான். குஜராத்தி பிராமணர்களை

அழைப்பது கைக்கு மீறிய காரியம். சோறு போட்டு ரூ 5.25 தட்சிணை தவிர ஒரு மேல்

துண்டாவது தர வேண்டும். சலவன் வீதியில் வியர்வை வழியும் கறுத்த வெற்றுடம்புடன்

திண்ணையில் அமர்ந்து மலிவான பேச்சுப்பேசி மகிழும் தரித்திரம் பிடித்த தமிழ்

பிராமணனே போதும் என்று முடிவுசெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த வீட்டில்.

வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த பிராமணர் நாளை வந்து எப்படி இந்த நிலைமையை

எதிர்கொள்வார் என்று கற்பனை செய்த போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும்

இருந்தது.

ஒரு சில நிமிடங்களுக்குப் பின் கடை சைக்கிளை ஓசைப்படாமல் சாத்தி

வைத்துவிட்டுத் திடீரென்று உள்ளே நுழைந்தான் தம்பி. அவன் வந்ததும் ஒரு கணம்

மௌனமாய் இருந்துவிட்டு, அவனுக்கும் விஷயம் தெரியட்டும் என்று, கோபத்துடன்

“நாளைக்கு நீங்களும் மண்ணைத் தின்னுங்கள்! வருகிறவனுக்கும் மண்ணைப் போடுங்கள்”

என்றாள்.

தம்பியின் முகத்தில் திடீரென்று படர்ந்த திகைப்பையும் உற்சாகமின்மையையும்

பார்த்த அம்மா தனது ஆற்றாமை குறைந்தவளாய் சீரான மூச்சு விட்டுக் கொண்டு,

அர்த்த புஷ்டியான மௌனம் அனுஷ்டித்துக் காத்திருந்தாள்.

விஷயத்தை ஓரளவு புரிந்துகொண்ட தம்பி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள என்னைக்

கலவரத்துடன் பார்த்தான். பின் தயங்கி “உன் முதலாளி பணம் தரவில்லையா?” என்று

கேட்டான். நான் தலையை ஆட்டிப் பதிலைச் சொன்னதும் அவன் முகம் வாட ஆரம்பித்தது.

அம்மா தன் கோபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நியாயப்படுத்தவும் இன்னுமொரு ஆள்

கிடைத்தான் என்று சில கணங்களாகத் தேக்கி வைத்த குரோதத்துடன் மீண்டும்

வெளிப்பட்டாள். “அவன் எப்படி வாங்கிக்கொண்டு வருவான்? அந்த பாழாய்ப்போன

ராவுக்குப் பாடை கட்டிய பிறகுதான் வாங்கிக்கொண்டு வருவான். சூதாடி நாய்!

குடிகார நாய்!” அம்மா பேசிக்கொண்டே இருந்தாள்.

அவனையே உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த தம்பி திடீரென்று, “லெக்சர் போதும்,

நிறுத்து இனி” என்று உறக்கக் கத்தி அவளை அடக்க முயன்றான். அம்மா அடங்கவில்லை.

மாறாக, “நான் பேசுவதை லெக்சர் என்றா சொல்கிறாய் நாயே” என்று அவன் பக்கம்

பாய்ந்தாள். தம்பி சும்மா இருக்கப் பழகி இருந்தான்.

ஒருவாறாக அம்மாவின் ஓலம் அடங்கி கீழ்ஸ்தாயியில் அவள் பொரும ஆரம்பித்த

பிறகுதான் வெகுநேரமாய் ஒரே இடத்தில் நின்றுவிட்டிருந்ததை நான் உணர்ந்தேன்.

லுங்கியை உடுத்திக்கொண்டு சமையற்கட்டின் விளக்கைப் போட்டான் தம்பி.

அப்போது ஏறக்குறைய தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த அம்மா பேச்சோடு பேச்சாகக்

குரலை உயர்த்தி, “இந்த லட்சணத்தில் உன் அக்கா மூங்கில் குருத்தையும்

வாங்கிக்கொண்டு வந்து போட்டு விட்டாள், நாளை குழம்பு வைக்க!” என்ற

செய்தியையும் சொல்லி வைத்தாள்.

சட்டென்று எங்கள் இருவரின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த பைக்குள்

ஒளிந்துகொண்டிருந்த மூங்கில் குருத்துகளின் மேல் விழுந்தது. நான் உடனே போய்

அதை எடுத்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தன. பசுமையாய்!.

மூங்கில் குருத்துகள் அப்பாவின் நண்பர் நாயகத்தின் எஸ்டேட்டில் நிறைய

விளைந்தன. கத்தரிக்காயின் மழமழப்போடு, வாழைக்காயின் மதர்ப்போடு, தாவரங்களின்

முரட்டு மனம் கமழ, ஊறிய குழம்பு பீறிட்டு, அவை மொளுக் மொளுக் என்று

தொண்டைக்குள் இறங்கும் போகமே அலாதி தான். பருப்புச் செலவு இல்லாமல் குழம்பு

வைத்துவிடலாம் என்பதோடு சாப்பிடும்போது ஏதோ ஒரு வித்தியாசமான உணவைச்

சாப்பிடுகிறோம் என்கிற பெருமிதம் உபரி. மூங்கி குருத்துக் குழம்பு

எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும்.

எதேச்சையாக அப்பா இறந்த தினத்தன்றும் அம்மா மூங்கில் குருத்தையே

சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாட்களில் அம்மா அதைச்

சாப்பிட மாட்டாள்.

அம்மா சுவரையே வெறித்துக் கொண்டிருந்தால். அவளது மூக்கிலும் காதுகளிலும்

லேசாகச் செம்மை படர்ந்திருந்தது. அவள் மூச்சிலும் ஒரு தீவிரம் தலைப்பட்டது.

இன்னும் ஓரிரு கணங்களில் அவள் அழக்கூடும். அம்மா செருமி, திடீரென்று அதிகம்

சப்திக்காத, வதைக்கும் விசும்பல்களுடன் அழுதாள்.

மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிட மாட்டாள் என்று நினைத்தபோது

ரொம்பவும் அபத்தமாகப் பட்டது.

சிறிதுநேரம் அழுதபின்பு சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தீர்மானமாக

எழுந்தாள். முகத்தில் படிந்த கலவரத்தை விழுங்கித் தின்றுவிட்டு, கண்களில் ஒரு

விவேகமிக்க சோகத்தைத் தேக்கிக்கொண்டிருந்தாள் அவள்.

நான் பையை மாட்டிவிட்டுச் சமையல் கட்டிற்குள் நுழைந்தேன். அம்மா அந்த

வாரத்தின் கடைசிச் சோற்றைப் பரிமாறினாள்.

இரவு வெகுநேரம் கழித்துத் தம்பி இருட்டிலிருந்து ஏதோ பேசினான். அம்மா

தூக்கமும் களைப்பும் பாரித்த குரலில், “வீட்டுக்காரியிடம் இரண்டு ரூபாய்

கைமாத்து வாங்கித் தருகிறேன். காலையில் பிராமணன் வந்ததும் ‘கிருஷ்ணா

மந்தி’ரில் அளவுச் சாப்பாடும் ஒரு ஸ்வீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு

வந்துவிடு, அடுத்த வருஷம் வீட்டிலேயே சாப்பிட வைக்கலாம்” என்று கூறிவிட்டுத்

திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

தெருவில் இருளையும் அமைதியையும் நேர்க் கோட்டில் கிழிக்கிற மாதிரி நீளமாய்

‘விசில்’ ஊதிச் சென்றான் பாராக்காரன்.

மறுநாள் காலை வீட்டைவிட்டுக் கிளம்பிய போதே ஆறேகால் ஆகிவிட்டது. வீட்டுக்காரச்

செட்டிச்சி மஹா கறார்க்காரி! வாங்கப் போகும் இரண்டு ரூபாயை மதியம் வந்ததும்

கொடுத்துவிட வேண்டும் என்ற ஷரத்து விதித்து அனுப்பினாள் அம்மா.

நவாப் ஹகீம் ரோடு வழக்கத்தை விட ரொம்பவும் அமைதியாய் இருந்தது. ‘முபாரக் டீ

ஸ்டாலி’ன் முன்பெஞ்சில் அமர்ந்து ‘டீ’யைச் சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக்

கொண்டிருந்த தாடிக்கார சாயபுகள், டீக்கடை ரேடியோவின் சன்னமான நாதஸ்வர முனகல்,

பின்னால் குறுகி நீள்கிற தெரு, மூடிய கடைகள், அப்பால் கிழக்கில் உதித்த

சூரியனின் சாயலில் நீலம் மின்ன ஆரம்பித்திருந்த வானம். வெண்மையான மேகங்கள்.

ஒலியெழுப்பி மறையும் காகங்கள், குருவிகள். எல்லாம் ரம்மியமாகத்தான் இருந்தன.

இரைச்சல் மிக்க கசப்பான யதார்த்தங்களிலிருந்து இன்று தெருவுக்கே விடுமுறை.

டீக்கடையைப் பார்த்ததும் டீ குடிக்கவேண்டும் போல தோன்றியது. பாக்கெட்டிலிருந்த

பதினைந்து பைசாவுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு சிகரெட்டா அல்லது சிங்கிள்

டீயா என்ற சின்ன மனப் போராட்டத்தில் ஈடுபட்டு, கடைசியில், ஜெயித்த சிகரெட்டைப்

பற்றவைத்துக் கொண்டு நகர்ந்தேன்.

‘ஐந்துமுக்கு’ சந்திப்பை அடைந்தபோது ஓரிரு கசாப்புக் கடைகள் திறந்திருந்தன.

உயிரும் தோலும் உரிக்கப்பட்ட ஆடுகள் மாமிசப் பிண்டங்களாகக் கால்களுடன் வெளியே

தொங்கிக் கொண்டிருந்தன. உள்ளே சிறிய சிவப்பு விளக்கு பதிக்கப் பெற்ற கடவுள்

படத்தின் கீழ் ஊதுபத்திகள் எரிந்துகொண்டிருந்தன. குருதியின் பச்சை நெடி அந்த

இடமெங்கும் படர்ந்திருந்தது.

கொட்டகை வாசலில் தரை, பெஞ்சு டிக்கட்களுக்காக இப்போதே மனிதர்கள்

குழுமிவிட்டார்கள். அநேகமாக எல்லோரும், கண் விழித்துக் களைத்துப் போய்

அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு வரிசைகளாகத் தவளைகள் போல் நெருக்கமாக

அணிவகுத்து அமர்ந்திருந்தார்கள்.

தெருஇவிலிருந்து பார்த்தபோது கடையின் ஒரு கதவு திறந்திருப்பது தெரிந்தது.

லக்‌ஷ்மிபாய் விழித்திருக்க வேண்டும். நான் அவசர அவசரமாக மாடிப்படிகளில்

ஏறினேன். இரண்டாவது படியில் வலது காலை வைத்ததும் பாதத்தில் ஏதோ குறுகுறுத்துக்

குழைவது போல் தோன்றியது. மலம்! நான் உணர்ந்து குனிவதற்குள்

விரலிடுக்களிலிருந்து பிதுங்கி காலெங்கும் அசிங்கமாகிவிட்டது. ஒரு கணம்

தயங்கி, பின் மேலே ஏறினேன். மற்ற படிகளும் அசிங்கமாவதைத் தவிர்க்க

முன்பாதத்தைத் தரையில் படாமல் உயர்த்திக் குதியை மட்டும் பதித்துப் பதித்து

நடந்து கதவை அடைந்தேன். உள்ளே “லட்டு” வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தாள்.

மலம் கழித்ததற்கான அடையாளங்கள் அவள் புட்டத்தில் இருக்கின்றனவா என்று

தேடினேன். நிறைய இருந்தன.

லக்‌ஷ்மிபாய் உள்ளே உட்கார்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருந்தாள். மலம் அப்பிய என்

காலைப் பார்த்துக்கொண்டே அவளை அழைத்தேன். அவள் காதில் அது விழவில்லை. நான்

மீண்டும் அழைத்தேன். அதுவும் அவள் காதில் விழவில்லை. நான்காவது முறை அவளைக்

கூவி அழைத்தபோது தான் அவள் ஒருபக்கச் செவிடு என்பது எனக்கே ஞாபகம் வந்தது.

உடனே எனக்கு திரு ராவின் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் தோன்றியது.

எதற்காகவோ கதவுப் பக்கம் திரும்பிய லக்‌ஷ்மிபாய் என்னைப் பார்த்ததும் தலையை

ஆட்டி பற்கள் தெரிய சிரித்தாள். பின் மீண்டும் அடுப்பு ஊத திரும்பிக்கொண்டாள்.

‘லட்டு’ என்னையும் தன் தாயாரையும் மாறிமாறிப் பார்த்து வியந்து

சிரித்துக்கொண்டு நின்றாள். நான் காலைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து ஒருவாறாக விறகு எடுக்க வெளியே வந்தபோது லக்‌ஷ்மிபாய்

கால் கழுவ தண்ணீர் கொடுத்தாள். ‘லட்டு’வை ஒரு கிள்ளும் கிள்ளி வைத்தாள்

கோபத்துடன்.

திரு ராவ் ‘கட்டிங் டேபி’ளின் மேல் உறங்கிப் போய்விட்டிருந்தார். அருகே பட்டை

அடித்ததின் ருசுக்களாக சோடா பாட்டில்கள் இருந்தன.

நான் வேகமாகக் கோட்டுகளை மடித்துக் காகித உறைகளில் போட்டுக்கொண்டேன். மொத்தம்

ஒன்பது தேறின. எல்லாம் கம்பெனிக் கோட்டுகள். அதிகம் இல்லாவிட்டாலும் நல்ல

கணம். லக்‌ஷ்மிபாயிடம் ஒரு ரூபாயை பஸ்ஸூக்காக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.

நான் வாசற்படிகளைக் கடந்ததும் அவள் கழுவ ஆரம்பித்தாள்.

வழக்கமாக இந்தக் கோட்டுகளுக்கான முழுப் பணத்தைக் கல்லூரி நிர்வாகமே

வசூலித்துவிடும். ஆனால் இந்தத் தொகைக்கு ஏற்றார்போல் தையல் தரமும் சுமாராகவே

இருக்கும். கோட்டுகளின் உள்ளே இடப்படும் உள்துணி மலிவானதாய் இருக்கும். இதை

விரும்பாத மாணவர்கள் தனியே பத்து ரூபாய் கொடுத்து உயர்ந்த ரக உள்-துணையைப்

போட்டுக்கொள்ளலாம். இந்தக் கோட்டுகள் அனைத்தும் ‘சாட்டினை’ உள்-துணியாகக்

கொண்டவை. மொத்தம் தொண்ணூறு ரூபாய் வசூலாகும். நான் எனது பதினைந்து ரூபாயை

அசைபோட்டுக்கொண்டு நடந்தேன்.

கல்லூரி, நகரத்திலிருந்து சுமார் நான்கு மைல்கள் தள்ளியிருந்தது. ஊரின்

மையத்தைக் கடந்ததும் சாலையோரங்களில் பசுமை காண ஆரம்பித்தது. பசுக்கள் பின்

தொடர வெற்றுடம்போடு நடந்த பால்காரர்கள், சிறுவர்கள், வயலில் வேலை செய்த

பெண்கள்… எல்லாம் ரொம்பவும் இயல்பாக இயங்குவது போல் இருந்தது. பஸ்ஸில்

டிரைவரும் கண்டக்டரும் கூட பரபரப்பற்று நிதானமாகவே காணப்பட்டார்கள். முழுதாய்

விடிந்துவிட்டால் எல்லோரும் மாறிவிடுவார்கள்!

அந்தப் பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதி. பின் கட்டில் இருந்தது.

கல்லூரியின் முன்புறக் கட்டடத்தை ஒட்டி நீண்ட பாதை தெருவிலிருந்து சுமார்

இரண்டு பர்லாங்கு இருக்கும். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நான் பாக்கெட்டிலிருந்த

மற்ற சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கல்லூரி அரவமற்று

அமைதியாய்க் கிடந்தது.

பாதித்தூரம் சென்றபின் காக்கிச் சட்டையணிந்த தோட்டக்காரன் பதறியபடி

“சிகரெட்டைக் கீழே போடுய்யா” என்று கோபமாக என்னை நோக்கி சிறிய அடிகள் எடுத்து

ஓடிவந்தான். நான் பயந்து போய் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன். நான் கடந்து

செல்லும் வரை இடையில் கைகளை வைத்து என்னையே வெறித்துக்கொண்டு அசையாமல்

நின்றான் அவன். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவன் மீண்டும்

குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான்.

விடுதி, ஒரு பெரிய மைதானத்தைச் சுற்றி, நான்கு பிரம்மாண்டமான கட்டடங்களாக

நின்றது. ஒவ்வொரு கட்டடத்திலும் நூற்றியெண்பது விசாலமான அறைகள் இருந்தன.

மைதானத்தின் மையத்தில் நாலைந்து மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி

செய்துகொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்ததால் அவர்கள் கீழ்ஸ்தாயியில்

பேசுவதைக் கூட கேட்க முடிந்தது. வேறு சில மாணவர்கள் மைதானத்தைச் சுற்றி

ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு

மாணவன் மட்டும் ஆழ்ந்த சுயபிரக்ஞையோடு, கோபித்துக்கொண்டு ஓடிப்போன நாயகியைத்

துரத்தி ஓடும் தமிழ்ப் படக் கதாநாயகனைப் போல் கால்களை உதறி உதறி

ஓடிக்கொண்டிருந்தான்.

‘ஏ’ ப்ளாக்கில் சீதாராமனும் ஹரிஹர கிருஷ்ணனும் இருந்தார்கள். சீதாராமன் அறை

பூட்டி இருந்தது. இரண்டாவது மாடியிலிருந்த 132இல் இருந்த ஹரிஹர

கிருஷ்ணனுக்குப் பதிலாக, கண்ணாடியுடன் பனியன் வேட்டி அணிந்துகொண்டு ஒரு மாணவன்

மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். ஹரிஹர கிருஷ்ணன் ஊருக்குப்

போயிருந்தான்.

‘சி’யில் யாருமில்லை. ‘டி’யில் மூன்று பேர். ‘பி’யில் கிருஷ்ணகிரி என்ற

ஒருவன், மற்றவர்கள் இந்தக் கட்டடங்களுக்குப் பின்னாலிருந்த ‘பழைய விடுதி’யில்

இருந்தார்கள். ‘டி’ பிளாக் சலனமற்று இருந்தது. இரண்டு மாடிகளை ஏறி

இறங்கியதுதான் மிச்சம். எல்லோரும் டவுனுக்குப் போய்விட்டிருந்தார்கள்.

படிகளில் இறங்கும்போது இரண்டு மாணவர்கள் கையில் ‘குமுதம்’ சகிதமாக

எதிர்ப்பட்டார்கள். என் கையிலிருந்த பாக்கெட்டுகளைப் பார்த்து ஒருவன்,

“என்னப்பா டிரை கிளீனர்ஸா” என்று அசிரத்தையாய்க் கேட்டான். நான் பதில்

சொன்னதும், மற்றவன் சம்பந்தமில்லாமல் விசில் அடிக்க, இருவரும் என்னைக் கடந்து

சென்றார்கள்.

கிருஷ்ணகிரியின் அறையில் நாலைந்து மாணவர்கள் லுங்கி அணிந்து கட்டிலில்

உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை இருமுறை தட்டி உள்ளே

நுழைந்ததும் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நான் சுபாவமாகத் தோன்றிய ஒரு

மாணவனின் முகத்தைப் பார்த்து விஷயத்தைக் கூறினேன். அவன் நான் சொல்லி

முடித்ததும் ஒரு கணம் யோசித்தான். பின், “அவன் தூங்கறாம்பா” என்று தயங்கினான்.

நான் அப்போது தான் கவனித்தேன். கட்டிலின் சுவரோரப் பகுதியில் நீள மூட்டையாய்

உறங்கிக்கொண்டிருந்தான் கிருஷ்ணகிரி. ஒரு மாணவன் கிருஷ்ணகிரியை எழுப்ப யோசனை

கூறினான். மற்றவன் அதை மறுத்தான். நான் அமைதியாக யோசித்துக்கொண்டு நின்றேன்.

அதற்குள் ஒருவன் கிருஷ்ணகிரியை இடைக்குக் கீழே பக்கவாட்டில் அடித்து

எழுப்பினான். கிருஷ்ணகிரி முனகிக்கொண்டு திரும்பிப் படுக்க ஆரம்பித்தான்.

எழுப்பிக்கொண்டிருந்தவனோடு மற்ற இரண்டு பேர்களும் சேர்ந்து உற்சாகத்துடன்

கிருஷ்ணகிரியின் துயில் கலைப்பதில் முனைந்தார்கள்.

இவர்கள் அவனது போர்வையை இழுத்தவுடன் கிருஷ்ணகிரி பதறிக்கொண்டு எழுந்தான்.

நழுவியிருந்த லுங்கியைக் கட்டிக்கொண்டே மற்றவர்களைத் திட்ட வாயெடுத்தவன்

என்னைப் பார்த்ததும் மௌனமாகித் திகைத்தான். கிருஷ்ணகிரி ரொம்பவும் மெலிந்து

காணப்பட்டான். முதல் சவரம்கூடப் பண்ணாத முகத்துடன், ஒரு குழந்தையைப் போல

இருந்தான். துறுதுறுவென்று நேசிக்கும் சிறிய கண்கள். நான் ‘குட்மார்னிங் சார்’

என்று பேச்சைத் துவங்கினேன். நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன்னிடம்

பணம் இல்லை என்றும் புதன்கிழமை தானே வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறினான்.

பழைய விடுதியின் முற்றத்திலேயே பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள்,

குருமூர்த்தியும் கருணாகரனும். நான் தனித்தனியாய் அவர்களை அணுகிக் கேட்டபோது,

இரண்டு வித்தியாசமான பற்பசைகளின் மணங்கள் கமழ கிருஷ்ணகிரி சொன்ன பதிலையே

அவர்களும் சொன்னார்கள். கடைசியாய், நான் ரமேஷ்பாபுவின் அறைக்கு நடந்தேன்.

ரமேஷ்பாபு என்ற பெயர் அவன் வட இந்தியனாக இருக்கக் கூடும் என்பதாகப் பட்டது.

அப்படியிருந்தால் அவனிடம் இந்தியிலேயே பேசலாம் என்று தீர்மானித்தேன். என்

கொச்சையான இந்தியைத் தவிர்த்து எவ்வாறு செறிவாகப் பேசலாம் என்ற என் வார்த்தை

வாக்கியங்களை மனதிற்குள் அமைத்துக்கொண்டே சென்றேன். அறைக்கதவு பாதி

மூடியிருந்தது. நான் தட்டித் திறந்தேன்.

யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்தது போல் தோன்றிய ரமேஷ்பாபு, தாடியும் கண்ணாடியும்

அணிந்து என் கற்பனை வரம்பிற்குள் அடங்காத அளவு அகலமாகவும் உயரமாகவும்

இருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு கணம் பயமாகக் கூட இருந்தது. என்னைக்

கண்டதும் ‘விருட்’டென்று எழுந்துகொண்டான். பின் பரபரப்புடன் என்னை நோக்கி

வந்தான். ஒரு கணம் அப்படியே நின்றவன் நெற்றியின் நரம்புகள் புடைக்கக்

கண்களாலேயே அலட்சியமாக என்னை விசாரித்தான். நான் தடுமாறித் தடுமாறி உடைந்த

ஆங்கிலத்தில் அவனிடம் விஷயத்தைக் கூறி முடித்தேன். அடுத்த கணம் அவனை ரௌத்ரம்

கொண்டாண்டது. “நான் உன்னைக் கொண்டுவரச் சொன்னேனா?” என்று கோபத்துடன் துண்டாகக்

கேட்டான். நான் மீண்டும் தயங்கி “இல்லை” என்றேன். “பின் போ! வந்து

வாங்கிக்கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுக் கதவைப் படாரென்று

சாத்திக் கொண்டான்.

நான் அசடு வழிய கோட்டுகளைச் சுமந்து வெளியே வந்தேன்.

விடுதியின் பிரதான வாசலைக் கடக்கும்போது சுமார் இருபது இருபத்தைந்து

ஆட்டுக்குட்டிகள் அன்றைய மதியப் புலால் உணவுக்காக உள்ளே

இழுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்தன. சில சின்னக் குட்டிகள் உற்சாகத்துடன்

கத்தியும் துள்ளியும் ஓடின.

கடையில், திரு ராவ் இல்லை என்பதை உணர்ந்தேன். கோட்டுகளைத் திரும்பவும் மாட்டி

வைத்துவிட்டு லக்‌ஷ்மிபாயிடம் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.

வழக்கம்போல் கொட்டகைவாசலில் கூட்டம். குறவர்கள் மறுபடியும் பாதையோரத்தில்

கிளைத்துவிட்டிருந்தார்கள். வெள்ளைப் பூண்டையும், பின்னூசிகளையும் வினோதக்

கலவையாக வைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு குறத்தி குழந்தைக்குப் பால்

கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு குறவன் தலையைக் குனிந்து காது குடைவதில்

முனைந்திருந்தான். அவர்களருகே நேற்று சிதறிய சோற்றுப்பருக்கைகள் மண்ணில்

தோய்ந்து இறைந்துகிடந்தன. நல்ல வெயில். நல்ல பசி. நான் நடையைத் தளர்த்திக்

கொண்டு நடக்கத் துவங்கினேன்.

வீட்டுக்குள் தம்பி ‘மதர்-இந்தியா’வின் பழைய இதழ் ஒன்றிலிருந்து கேள்வி-பதில்

பகுதியைப் படித்துக்கொண்டிருந்தான். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள்.

உடையை மாற்றிக்கொண்டு நானும் ஒரு பாயை விரித்துக்கொண்டேன். யாருமே பேசவில்லை.

மறுநாள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அம்மா என்னையே

வெறித்துக்கொண்டிருந்தாள். சுத்தமாகக் குளித்துவிட்டுப் பளிச்சென்று

காணப்பட்டாலும் அவள் முகம் பட்டினியால் வாடித்தான் போயிருந்தது. நான்

தலைவாரிக் கொண்டிருந்தேன். தலைவார நேரம் பிடித்தது. அம்மா கவனித்துக்

கொண்டிருந்ததால் ஒரு வேளை நானே வேண்டுமென்று அதிக நேரம் எடுத்துக்கொண்டேனோ!

நான் வாசற்கதவை அடைந்ததும் தன்னருகே இதற்காகவே வைத்திருந்த பையை, “இதைக்

குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ” என்று வன்மத்துடன் என்னை நோக்கி வீசி

எறிந்தாள் அம்மா. பை என் காலில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்த மூங்கில்

குருத்துகள் தரையெங்கும் சிதறின. அவை வாடிப்போயிருந்தன.

நான் அம்மாவுக்கு முதுகைக்காட்டியவாறே ஒரு கணம் நின்றேன். திரும்பி அவளை

நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை. மனம் குழம்பி, நிறையக் கோபம்

எங்கிருந்துமில்லாமல் வந்தது. “நீயே போய்ப் போட்டுக்கொள்” என்று கூறிவிட்டு

நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது.

தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய்

ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.

வெயில் அறைந்து தாக்கியது.