கேப்பிரியல்

பொன் குலேந்திரன்

வாழ்க்கையில் நட்புகள் உருவாகுவதற்கு சம்பவங்களே மூல காரணமாக அமைகிறது. பள்ளிக்கூட வாழ்க்கை, இரயில்,  பஸ் பயணத்திலோ அல்லது விமானப் பயணத்தின் போதோ நட்பு ஆரம்பிக்கிறது. அனேகமான சிநேகிதங்கள் பள்ளிக் கூட காலங்களில் ஆரம்பிக்கிறது. ஒருவர் கணக்குப் பாடத்தில் சற்றுக் குறைவாக இருந்தால் அவருக்கு உதவப் போய் நட்பு வளருகிறது. நாடகத்தில் இணைந்து நடிக்கும் போதோ அல்லது இசைக் குழுவில் ஒன்றாக இயங்கும் போதோ அல்லது விளையாட்டுத் துறையில் ஈடுபடும் போதோ ஒருவர்  முகத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேலான சிநேகிதம் பல காலம் தொடர்வதினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய நிலையை அடைந்து, பின்னர் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிவதுமுண்டு. கனடாவில் இளம் சமுதாயத்தினரிடையே இப்படி திருமணத்தில் முடிந்த பல தம்பதிகளைப் பற்றி அறிந்துள்ளோம். இனம்> மதம்> சாதிக்கு அப்பாற்பட்டது இத்திருமணங்கள். ஒரு தமிழ் இளைஞன் சீக்கிய பெண்ணையோ அல்லது வெள்ளையினத்துப் பெண்ணையோ காதல் செய்து திருமணம் முடிப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. காரணம் தற்காலத்து இளைஞர்களும் யுவதிகளும் திருமணத்துக்கு முன்னர் தமக்கு வரப்போகும் துணையைப் பற்றி  நன்கு அறிந்து அவர்களின் மனநிலையைப் புரிந்தபின்னரே திருமணத்திற்கு ஒப்புதல் வழங்குவர். இதை இரசாயனப் பொருத்தம் என்பர். பெற்றோர்கள் ஆரம்பத்தில் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் இறுதியில் மகன் அல்லது மகளின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மதங்கள் வேறுபடின் திருமணம் இரு மதத்தினரது ஆலயங்களில் இரு கலாச்சார முறைகளிலும் நடைபெறுவதுண்டு. வாழப் போகிறவர்கள் அவர்கள் நாம் அதற்கு ஏன் முட்டுக்கட்டையாக இருப்பான் என்று நினைக்கும் பெற்றோர்கள் காலத்தோடு ஒத்துப்போகிறவர்கள்.

எனது மகள் சாந்தி கொழும்பில் பிறந்தவள். அவளுக்கு ஏழு வயதாக இருக்கும் போது நான் கனடாவுக்கு புலம் பெயர்ந்தேன். கனடாவில் படிப்பை அவள் தொடர்ந்த போதும் அவள் தனது தாய் மொழியை மறக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் என் மனைவி. எனது மகளின் பெயர் சாந்தி, முழுப்பெயர் சாந்தலஷ்மி. அவள் பிறந்த பிறகு தான் எனக்கு பதவி உயர்வு எல்லாம் கிட்டியது. 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு பின்னர் கொழும்பு வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. எனது நல்ல காலம் சம்பியாவில் வேலை கிடைத்துப் போனேன். அப்போது சாந்திக்கு மூன்று வயது. நான்கு வருடங்கள் சம்பியாவில் உலக வங்கிக்கான ஒரு திட்டத்தில் வேலை செய்து, சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்துச் சேகரித்துக்கு கொண்டு, மேலும் இரு வருடங்கள் தன்சேனியாவிலும்  வேலை செய்துவிட்டுக் கனடாவுக்கு வந்து சேர்ந்தேன்.

கனடா வந்த சாந்தி கல்லூரிப் படிப்பின் பின்னர் யோர்க் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் அரசியல் துறையில் படித்துக்கொண்டிருந்தாள். சற்று என்னைப் போல் முற்போக்குவாதி. ஆண் ஆதிக்கத்தை முற்றாக வெறுப்பவள். படிப்பில் அவள் கெட்டிக்காரி என்று சொல்விட்டாலும் பாடுவதில் திறமைசாலி. தமிழிலும் ஆங்கிலத்திலும் இனிமையாகப் பாடுவாள். அதோடு கீ போர்ட்டும் ஓரளவுக்கு வாசிக்கக் கூடியவள். பல்கலைக் கழக் கலை நிகழ்ச்சிகளில் அவள் பங்குகொள்வது எனக்கு பெருமையாக இருந்தது. பல இன  மாணவர்களுடன் பேசிப் பழகுவதிலும்; அவர்களின் கலாச்சாரம் பற்றி அறிவதிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். கிணற்றுத் தவளைகள் போல் நாம் நம் இன மக்களுடன் மட்டுமே உறவாடக் கூடாது என்பது அவளது கொள்கை. இவ்வாறு பல இன மக்களுடன் பழகியதில்; அவளுக்கும்; கறுப்பு இனத்தைச் சோந்த கேப்ரியல் ஜோசப் என்ற பல்கலைக் கழக மாணவனுக்கும் நெருங்கிய நட்பு உருவாகியது. கேப்ரியலும்; அரசியல் துறையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அதோடு மட்டுமல்லாமல் கிட்டார் வாசிப்பதில் திறமைசாலி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து வாசித்து பராட்டுகளைப் பெற்றவர்கள். கேப்ரியலை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து வந்து எனக்கு சாந்தி அறிமுகப்படுத்திய போது நான் சற்று திகைத்து விட்டேன். எங்கையோ கண்ட முகம் போல் இருக்கிறதே என்றது என் மனம். பேச வார்த்தைகள் வராது சற்று திகைத்து நின்றேன். கையில் கிட்டார் உடன் வந்த அவன் அதை சோபாவில் வைத்துவிட்டு  என் முகத்தில் ஏற்பட்ட திகைப்பினைக் கண்டு பேசாது நின்றான்.

என்ன அங்கிள்!. என்னைக் கண்டவுடன் திகைத்து நிற்கிறீர்கள்? உங்களின் படத்தை சாந்தியின் அல்பத்தில் பார்த்திருக்கிறேன். இது தான் எனது முதல் சந்திப்பு. உங்களை பற்றி சாந்தி எவ்வளவோ சொல்லியிருக்கிறாள். நீங்கள் சம்பியாவிலும் தன்சேனியாவிலும் வேலை செய்தீர்களாமே உண்மையா?

ஆமாம்!.. சாந்தி உமக்கு ஏற்கனவே முழு விபரத்தையும்; சொல்லிவிட்டாளா?

ஆமாம் அங்கிள்;!.. எனது மூதாதையரின பூர்வீகம் தன்சேனியா. அங்கிருந்து தான் டச்சுக் காலத்தில் எனது முதாதையர்கள் வீரர்களாக இலங்கைக்கு போனார்களாம். இது எனது மாமன் எனக்குச் சொன்ன கதை

அப்போ நீரும் இலங்கையில் வாழ்ந்தவரா?..

ஆமாம் அங்கிள்!.. எனது மாமாவின் பராமரிப்பில் எனது பெற்றோரின் பிரிவுக்குப் பின் கொழும்பில் உள்ள சிலேவ் ஐலண்டில் வாழ்ந்தனான்.

அப்போ கனடா வந்து அதிக காலமோ?..

எனது மாமா கனேடிய ஹைகொமிசனில் பல வருடங்கள் வேலை செய்தவர். அவர் கனடாவுக்கு வந்த போது என்னையும் கூட்டிவந்தார். இங்கு வந்துதான் என் படிப்பை தொடர்ந்தேன் என்றான் கேப்ரியல்;. அவனது முகம், சுருட்டை தலைமயிர், தடித்த உதடுகள், துரு துருத்த பார்வை, ஆறடி உயரம், என் பழைய நினைவுகளை மீட்டின.

                                                                                                 ♥♥♥♥♥

எனக்கும் காப்ரி (Kaffir) இனத்தைச் சேர்ந்த சுருட்டைத்  தலைமயிர் உள்ள ஜோசப்; என்ற மாணவனுக்கும் புத்தளத்தில் ஆரம்பித்த நட்பு பல காலங்கள் குலையாது  வளர்ந்து வந்தது. நல்ல நட்புக்கு சாதி> மதம் கிடையாது. ஜோசப்  என்னை விட மூன்று வயது மூத்தவன். சற்று கோபக்காரன் என்றாலும் நல்ல மனம் படைத்தவன். அவனது தகப்பன் கச்சேரியில பியோனாக வேலை பார்த்தவர். அதே கச்சேரியில் எனது தந்தை உயர்பதவியில் இருந்தவர். அவர் கூட ஜோசப்பின் நற்குணத்தைப் பற்றி அடிக்கடி சொல்லுவார். தந்தையைப்போல் மைந்தன் என்பார். ஜோசப்பின் தந்தை பீட்டரை என் தந்தைக்கு நல்லா தெரியும். ஜோசப்புக்கு மூன்று சகோதரிகள். சிறுவயதிலேயே அவர்களை தவிக்கவிட்டு அவனது தாய் இறந்துவிட்டாள். பாவம் ஜோசப்பையும் சகோதரிகளையும் அவனது தந்தையின் தாயார் தான் வளர்த்தாள். ஜோசப்புக்கும்; எனக்கும் ஏற்பட்ட நட்புக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்துக்கும் தொடர்புண்டு.

காதர் என்ற முஸ்லீம் மாணவன் ஒரு பெரிய தென்னந்தோட்ட முதலாளியான காசீம் மரைக்காயரின் ஒரே மகன். தந்தை பணக்காரன் என்றபடியால் அவனுக்கு செருக்கு வேறு. படிப்போ ஓடாது. கணக்கில் குறைந்த புள்ளிகளே வாங்குவான். ஜோசப்புக்கு நான் கணக்குச் சொல்லிக் கொடுப்பதைக் கண்ட அவன் தனது வீட்டுக் கணக்கை போட்;டுத்தரும்படி என்னை வற்புறுத்தினான். நான் சொன்னேன்.

கொஞ்சம் பொறு காதர் ஜோசப்புக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு உனக்கு சொல்லி தருகிறேன் என்றேன். அவனுக்குப் பொறுமை கிடையாது.

யாழ்ப்பாணத்து பனங்கொட்டை. உனக்கு என்ன திமிரா?.. என்றான் ஏளனமாக காதர்.

அவன் பேசிய இனத் துவேசம் கலந்த வார்த்தைகள் எங்களைத் திகைக்க வைத்தது.

அந்த கறுப்பு காப்பிரி பயலுக்கு சொல்லி கொடுக்கிறது உனக்கு அவ்வளவு முக்கியமோ?. அவன் அப்படி என்ன படித்துக் கிழிக்கப் போகிறான்?... எனக்கு முதலில் சொல்லி கொடு என்று அடம் பிடித்தான். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. கோபத்தில் என் தலையில் ஓங்கிக் குட்டி> எனது கையைப் பிடித்துத் திருகினாhன். நோவினால் எனக்கு அழுகை வந்துவிட்டது. பார்த்துக் கொண்டிருந்த ஜோசப் அவனைப் பிடித்த தள்ளிய வேகத்தில் காதர் நிலை தடுமாறி போய் சுருண்டு விழுந்தான்.

கறுப்புக் காப்பரி பயலே!... உனக்கு அவ்வளவு தைரியமா?.. என்னை யார் என்று நினைத்தாய்?.. என் வாப்பாவைக் கொண்டு உனக்கு பாடம் படிப்பிக்கிறேன் என்று  மண்ணை அவன் மேல் வாரி வீசிவிட்டு ஓடிவிட்டான் காதர். அந்த சம்பவத்தினால் மலர்ந்தது தான் எங்கள் நட்பு. மற்றைய காப்பிரிகள் போல் அழகாக கப்பிரிஞ்சான் (Caprinjan) என்ற போர்த்துக்கேயச் சிங்களம் கலந்த  பைலா பாடலை ஜோசப் கிட்டாரில்; வாசித்துப் பாடுவான்;. அவனது குரலை மணிக்கணக்கில் கேட்டபடி இருக்கலாம். நத்தார் பண்டிகைக்கு அவனது அழைப்பை ஏற்று  சிராம்பியடி பகுதியில் உள்ள அவன் குடிசைக்குப் போவேன். சிறு குடிசையானாலும் சிறு தென்னந்தோப்புக்குள் அழகாக தோற்றமளித்தது. நாலைந்து வாழை மரங்களும் ஒரு மாமரமும் இருந்தன. அவன் வீட்டு கொய்யா மரத்தின காய்களுக்கு தனி ருசி.

நானோ ஒரு கத்தோலிக்கன். அதோடு புத்தள வாசிகளால்  ஒதுக்கிவைக்கப்பட்ட காப்பிரி இனத்தைச் சேர்ந்தவன். என்று தனது இனத்தின் வரலாற்றினை அவன் எனக்கு சொன்னான்;. கேட்க ஆச்சரியமாக இருந்தது. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலும் பிரித்தானியர் காலத்திலும் கிழக்கு ஆபரிக்;காவில் இருந்து காப்பிரிகளை இலங்கைக்கு அவர்களது திடகாத்திரமான உடலமைப்பின் காரணத்தால் போர்வீரர்களாக கொண்டுவரப்பட்டனர்;;.  பின்னர் கோட்டையைக் காவல் செய்யும் காவலாளிகளாக நியமித்தனர். அவர்களில் பலர் புத்தளத்திலும் மட்டக்களப்பு> திருகோணமலை> கொழும்பு பகுதிகளில் குடி யேறி> கத்தோலிக்க மதத்தைத் தழுவினார்கள். கொழும்புக்கு அருகேயுள்ள சிலேவ் ஐலண்ட் ( Salve Island) என்ற பகுதியில் காப்ரிகளின் ஒழுக்கமற்ற நடத்தை காரணமாக அவர்களை அடிமைகளாக சிறைவைக்கப்பட்ட கதையுண்டு.

புத்தளத்தை விட்டு மாற்றலாகி என் தந்தை யாழ்ப்பாணம் கச்சேரி சென்ற போது எனக்கும் ஜோசப்புக்கும் உள்ள நட்பு நீண்ட காலம் இல்லாமல் போய்விட்டது. அதன் பின்> 18 வருடங்கள் கழித்து ஒரு நாள் நான் தபாற் தந்தி திணைக்களத்தில் அத்தியட்சகராக கடமையாற்றியபோது ஒரு விசாரணைக்காக புத்தளம் தபால் நிலையத்துக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. அப்போது தபால் அதிபர் தம்பிராஜா என்னை அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு மூலையில் அமைதியாக தபால்களைப் பிரித்துக் கொண்டிருந்த ஜோசப்பைக் கண்டபோது எனது பசுமை நிறைந்த நினைவுகள் பின்நோக்கி ஓடியது.

அவன் முதுகு மேல் கைவத்தபடி ஜோசப் என்னைத் தெரியுமா? என்றேன் என்னையும் அறியாமல். அவன் திரும்பிப் பாhத்தான்.

சேர் நீங்களா என்னைக் கூப்பிட்டீர்கள்?... என்றான். அவனது இனிமையான குரல் பதினெட்டு வருடங்களாகியும் மாறவில்லை.

ஜோசப் நான் தான் விஸ்வா!.. நினைவிருக்கா? நீ பைலா பாடும் ஜோசப் தானே?.. எங்களோடு படித்த காதரை உனக்கு நினைவு இருக்கிறதா?... என்று பழைய நினைவுகளைக் கிண்டினேன்.

அவன் சில நிமிடங்கள் என்னை உற்று நோக்கினாhன். அதன் பின் என்னை அடையாளம் கண்டு கொண்ட ஆனந்தத்தில் அவனது கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல வென்று கொட்டியது.

என்ன ஜோசப்!.. 18 வருடங்களுக்கு பின் உன்னை சந்திக்கிறன். இதென்ன சின்ன தாடியோடு தோற்றமளிக்கிறாய்?..

தான் திருமணம் செய்து சில வருடங்களில் தனது மனைவி நோய்வாய்பட்டு இறந்ததையும் தனக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருப்பதையும்  சொன்னான். அவன் கதையைக் கேட்க பரிதாபமாக இருந்தது. இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம். அன்று பின்னேரம் அவன் வீட்டுக்குச் சென்றேன். அதே மண் குடிசை> அதே தென்னந்தோப்பு. மாமரத்தைக் காணவில்லை. உங்கள் அபிமான கோய்யா மரம் பட்டுவிட்டது என்றான். ஆனால் குடிசையின் ஒரு சுவர் இடிந்த நிலையில் இருந்தது. அவனது ஐந்து வயது மகன் என்னைக் கண்டு; ஓடி வந்து என் மடியில் ஏறிக் கொண்டான். நான் தந்தையின் பழைய நண்பன் என்பதை உணாந்துவிட்டானோ என்னவோ? அவனது பெயரைக் கேட்டேன்; தனது பாட்டனாரின் பெயரான கேப்ரியல் என்ற பெயரை வைத்ததாகச் சொன்னான் ஜோசப். ஒரு மூலையில் தூசி படர்ந்து கிடந்த கிட்டாரைக் கண்டவுடன் அவனது பைலா பாடலைக் கேட்க வேண்டும் போல இருந்தது எனக்கு. எனது வேண்டுகோளை அவனால் மறுக்க முடியவில்லை. அவனது பைலா பாடலுக்கு கேப்ரியல் தனது உடலை நெலித்து நெலித்து ஆடியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அவன் வீட்டை விட்டு புறப்பட்ட போது ஜோசப்பின் கையுக்குள் ஐந்து 100 ரூபாய் நோட்டுகளைத் திணித்து இதை உனது மகனின் பாஸ் புத்தகத்தில் போடு. கொழும்புக்கு போனதும் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன். அதையும் போடு. பிறகு அவன் வளர்ந்து படிக்க உதவும் என்றேன். அவனோ பணத்தை வாங்க மறுத்தான். எங்கள் நட்பின் நினைவாக இருக்கட்டும் என்று வற்புறுத்தி கொடுத்து விட்டு  விடை பெற்றேன்.

கொழும்பு சென்றதும் இன்னும் ஆயிரம் ரூபாயை அவனது பெயருக்கு மணியோடரில் அனுப்பினேன். பல காலத்துக்குப் பின்னர் நான் திரும்பவும் வேலை விஷயமாக புத்தளம் போன போது ஜோசப்பைத் தேடினேன் காணவில்லை. தீடிரென ஒரு நாள் அலுவலகத்தில் இருதைய நோயின் காரணமாக இறந்துவிட்டதாகத் தபால் அதிபர் தம்பிராஜா சொன்னார். அவனது சிராம்பியடி வீட்டுக்குப் போனேன். வேறு யாரோ சிங்களக் குடும்பம் ஒன்று அங்கிருந்தது. ஜோசப்பின் மகனைப் பற்றி அவரிடம் விசாரித்தேன். அச்சிறுவன் எங்கே போனான் என்று தனக்குத் தெரியாது என்றார் வீட்டுக்காரர். அதோடு முடிந்தது ஜோசப்பின் உறவு. ஆனால் கேப்பிரியலை கனடாவில் முதலில் சந்தித்த போது ஏதோ  திரும்பவும ஜோசப்பை; சந்தித்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதே தோற்றம். அதே பார்வை. நீ ஜோசப்பின்; மகன் கேப்ரியலா? என்று கேட்டு விடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது

என்ன அங்கிள்! அப்படியே யோசனையில் இருக்கிறீர்கள் நான் உங்கள் வீட்டுக்கு வந்ததில் ஏதாவதும் பிரச்சனையா? கேப்ரியல் கேட்டான்.

அப்படி ஒன்றுமில்லை! என் யோசனைகள் பின்நோக்கி போய்விட்டது. அது சரி நீர் கிட்டார் திறமையாக வாசிப்பீர் என்று சாந்தி சொன்னாள். எங்கே ஒரு பாட்டை எனக்கு வாசித்துக்காட்டுமேன். எனக்கு பைலா என்றால் பிடிக்கும்.

பைலாவா. அதுக்கென்ன இதோ! இப்பவே உங்களுக்கு வாசித்துக் காட்டவா? என்று பெட்டிக்குள் இருந்து கிட்டாரை எடுத்தான்.

சாந்தி ஒன்றும் பேசாமல் அதிர்ச்சியில் எங்களைப் பார்த்தபடியே இருந்தாள்.

கேப்ரியல் கிட்டாரில் இசையை மீட்கத் தொடங்கியதும் எனக்கு திரும்பவும் சிராம்பியடியில் ஜோசப் நத்தாருக்கு கிட்டார் வாசித்த ஞாபகம் தான் என் நினைவில் வந்து நின்றது. இப்போது அவனின் மகன் கேப்ரியல் வாசிக்கிறான். அவன் சிறுவனாக இருக்கும் போது பார்த்தது.

அவன் இசைக்கு ஏற்றவாறு முதலாவதாக நான் முன்பு எப்போதுமே கேட்ரிராத பைலா பாடல் ஒன்றைப் பாடினான். அப்பாடலை நான் அவ்வளவுக்கு இரசிக்கவில்லை என்பதை அவன் அவதானித்துவிட்டான்.

அங்கிள்! இது ஒரு போர்த்துக்கேயப் பாடல். உங்களுக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. என் தந்தையார் எனக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுத்த பாடல் ஒன்றை இப்போது பாடப்போகிறேன் என்று திரும்பவும் இசையை மீட்டினான்.

இசையைக் கேட்டவுடன்; சிங்கிலி நோனா. சிங்கிலி நோனா சீப்புக் கொண்டைக்காரி என்ற பாடலைப் பாடலைத் தொடங்க அது காப்பிரிஞ்ஞா பாடல் என்று அடையாளம் கண்டுவிட்டேன். இதே பாடலைத் தான் எனது விருப்பத்திற்கு ஏற்ப ஜோசப் அடிக்கடி பாடி என்னை மகிழ்விப்பான். நானும் அவனோடு சேர்ந்து ஆடுவேன். கேப்ரியல் அப்பாடலை பாடத் தொடங்கியதும் என் கால்களும் கைகளும் அவ்விசைக்கு ஏற்றவாறு தாளம் போட்டன. என்னையறியாமலே நான் காலச்சக்கரத்தில் பின்நோக்கிச் சென்று ஜோசப்போடு;; இணைந்துவிட்டேன். என் முன்னே> மறுபிறவி எடுத்து வந்து ஜேசப் கிட்டார் வாசிப்பது போன்ற ஒரு சிந்தனை. பாடல் முடிந்தவுடன்>

பைலா மிகவும் நன்றாக இருந்தது இது எனக்கு பிடித்தமான பாடல். பல ஆண்டுகளுக்கு முன்னர் புத்தளத்தில் உள்ள சிறாம்பியடியில் என் நண்பன் ஜோசப் என்னை மகிழ்விக்கப் பாடுவான். அவன் பாடுவது போலவே உமது குரல் இருந்தது என்றேன் மகிழ்ச்சி பொங்க.

சிறாம்பியடி ஜோசப்பா?!... தீடீரென அதிசயத்துடன் கேட்டான்.

ஆமாம் என்னோடு புத்தளம் சென் அண்ரூஸ் கல்லூரியில் படித்தவன். தபால் கந்தோரில் வேலை பார்த்தவன். அவனுக்கு உன் பெயரில் ஒரு மகன் இருந்தான். வேறு பிள்ளைகள் இல்லை

நான் சொன்னதைக் கேட்டவுடன் அங்கிள் நான் தான் உங்கள் நண்பர் ஜோசப்பின் மகன் கேப்ரியல்;. என்று ஓடிவந்து என்னை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்டான் கேப்ரியல்

உறவுகள் மறைவதில்லை!.. சமயம் வரும் போது புதுப்பிக்கப்படுகின்றன.

நீர் ஜோசப்பின் மகன் கேப்பிரியலா?. உம்மைக் கண்டவுடனே எனக்கு ஜோசப்பின்; நினைவு தான் என் மனதில் தோன்றியது. நீர் ஐந்து வயதாக இருந்த போது கண்டது தான்> அதன் பிறகு எவ்வளவு காலத்துக்குப் பின்னர் உம்மை சந்திக்கிறேன் தெரியுமா?... விதி எப்படி எம்மை பாடல் மூலம் திரும்பவும் ஒன்று சேர்த்துவிட்டது பார்த்தீரா?!... நான் என் மகள் சாந்திக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றேன் கலங்கிய கண்களுடன். அதைக்கேட்ட கேப்ரியல் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

தனக்கு தந்தையின் ஸ்தானத்தில் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று கேப்பரியல் நினைத்து விட்டானோ என்னவோ? நிறங்கள், மதங்கள், மொழிகள் நல்ல உறவுக்குத் தடையாக இருக்கவேண்டியதில்லை. எல்லாம் அவரவரின் மனதைப் பொறுத்தது.