தேஜஸ்வி
எஸ்.கண்ணன்
சத்குரு
தேஜஸ்வி மஹராஜ் பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன், கேள்விப்
பட்டிருக்கிறேன்.
அவர் தர்க்க ரீதியாக பலவிஷயங்களைப் பற்றிப் பேசி நமக்கு புரியவைப்பாராம்.
நம்மிடம் பேசும்போது, ஒன்று நாம் அவரது கருத்துக்களைப் புரிந்துகொண்டு
ஒத்துப்போக வேண்டும், அல்லது அவர் நம்முடைய கருத்துக்களை மனமுவந்து
ஏற்றுக் கொள்வாராம். அதனால் ஒரு தெளிவு நமக்குள் ஏற்படுமாம்....அந்த
அனுபவம் ரொம்ப ஏகாந்தமாக இருக்குமாம்.
அவர் ஆந்திராவின் ஹார்ஸ்லி ஹில்ஸ் மலை உச்சியில் இருக்கிறாராம்.
தர்க்கம் பண்ணும்போது கோபமே வராதாம், சிரித்துக்கொண்டே வாதம் புரிவாராம்.
தர்க்கத்தின் முடிவில் பணம் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டாரம். ஆனால்
நம்மால் முடிந்தபோது, முடிந்த அளவுக்கு ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு
உதவிபுரியச் சொல்வாராம்.
எனக்கு அவரை நேரில் சந்தித்து அளவளாவி, நிறையப் புரிந்துகொள்ள வேண்டும்
என்கிற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. அதற்காக அவருடைய தொலைபேசிக்கு தொடர்பு
கொண்டேன்.
அவரது உதவியாளர் இன்றைக்கு பதினோருமணிக்கு வரச்சொன்னார்.
ஹார்ஸ்லி ஹில்ஸ் என்னுடைய வீட்டிலிருந்து நூற்றி அறுபது கிலோமீட்டர்
தூரம். மூன்றுமணி நேரத்தில் காரில் எளிதாகச் சென்றுவிடலாம்.
காலை எட்டுமணிக்கு டிரைவருடன் காரில் கிளம்பி, பத்தரைக்கு ஹார்ஸ்லி
ஹில்ஸ் சென்றடைந்தேன்.
சத்குருவின் இருப்பிடம் சென்று காத்திருந்தேன். அது ஒரு பெரிய வீடு.
சரியாக பதினோரு மணிக்கு என்னை உள்ளே அனுப்பினார்கள்.
வீட்டின் பிரம்மாண்டமான கூடத்தின் நடுவில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில்
சத்குரு அமர்ந்திருந்தார். எழுபது வயது இருக்கும். நீளமான மூக்கு,
தீர்க்கமான கண்களுடன், மின்ஸ்டர்ஒயிட் அரைக்கைசட்டை அணிந்து, முகச்சவரம்
செய்து, தலைமயிர் நேர்த்தியாக வகிடுஎடுத்து வாரி கம்பீரமாக இருந்தார்.
என்னைப் பார்த்ததும் கனிவுடன் புன்னகைத்து எதிரே இருந்த சோபாவில் அமரச்
சொன்னார். அமர்ந்தேன்.
“உன் பெயரென்ன? என்ன செய்கிறாய்? எங்கிருந்து வருகிறாய்?”
“கண்ணன். பெங்களூரிலிருந்து வருகிறேன். சர்வீசிலிருந்து ரிடையர்ட்
ஆகிவிட்டேன். அவ்வப்போது சிறுகதைகள் எழுதுகிறேன். என் பேத்தியுடன்
விளையாடுவேன்.”
“இடத்தைக் கண்டுபிடித்து வருவதில் சிரமம் ஒன்றுமில்லையே!”
“இல்லை...ஆனால் இப்போது ஆந்திராவில் ஏதோ தேர்தல் போலிருக்கிறது. யாரோ
வேங்கடரெட்டி என்பவர் திறந்த ஜீப்பில் ஓட்டுக் கேட்டுப் போனார். ஒரே
கூட்டம். அதனால் ஐந்து நிமிடங்கள் தாமதம்.”
“ஆமாம் உள்ளாட்சி தேர்தல் இப்போது நடக்கிறது... இங்கு ரெட்டிக்கள்
அதிகம். அதனால் எல்லா வேட்பாளர்களுமே ரெட்டிக்கள்தான்.” என்று
சிரித்தார்.
“நம் ஜனநாயகத்தில் ஜாதி, மதம் தலை விரித்தாடுகிறதே...இவைகள் அழியவே
அழியாதா?”
“ஆமாம் கண்டிப்பாக அழியவே அழியாது.”
“ஏன் சத்குரு?”
“அது இருந்தாத்தான அழியறதுக்கு! என்னை தேஜஸ்வி என்று பெயர்சொல்லிக்
கூப்பிடு. இந்த சத்குரு என்பதெல்லாம் வேண்டாம்.”
“ஆனால் உங்களைப்பற்றி சத்குரு என்றுதானே எழுதுகிறார்கள்?”
“அதெல்லாம் சும்மா இஷ்டத்துக்கு எதையாவது எழுதுவான்கள். இன்றைக்கு
சத்குரு என்பான். நாளைக்கு பிடிக்கலேன்னா சத்ரு என்று சொல்வான்.
என்னுடைய பெயர் தேஜஸ்வி. அப்படியே நீயும் கூப்பிடலாம்.”
“சரி. ஜாதி, மதம் என்பதெல்லாம் இருந்தாத்தானே அழியறதுக்கு என்று
சொன்னீர்கள்....”
“ஆமாம்...இருக்கிறதுதானே அழியும். இல்லாத ஒன்றைப்பற்றி அழியுமான்னு
கேட்டா? ஜாதி எங்கேயிருக்கு, காமி. நானும் பார்க்கிறேன்.”
“ஒரு பொருளை காண்பிப்பதுபோல் அதை காண்பிக்க முடியாதுதான். ஆனால் ஜாதிகள்
நம் மனசில் ஊறிக் கிடக்கிறதே!”
“கரெக்ட்...என்னிக்குமே மனசு இல்லாத ஒன்றைத்தான் நினைக்கும். அதை
வைத்துதான் சொன்னேன் ஜாதி அழியாதுன்னு. நீ சொன்னாப்ல ஜாதி மனசுல
இருக்கிறதால, உண்மையில் அது இல்லாத ஒண்ணுதான். இருக்கிறத என்னிக்குமே
மனசு நினைக்காது. இல்லாத ஒன்றைத்தான் நினைக்கும். அதுசரி, மனசு மனசுன்னு
எப்பபார்த்தாலும் சொல்றோமே, அந்த மனசுன்னா என்னன்னு சொல்லு பார்ப்போம்
!”
“மனசுன்னா, மனசுதான் அதை வேற எப்படி விளக்க முடியும்?”
“சரி, முதல்ல மனசு எங்க இருக்குன்னு காட்ட முடியுமா!”
“ஜாதியைக் காட்ட முடியாதது மாதிரி மனசையும் காட்ட முடியாதே.”
“ஜாதிங்கறது இல்லாதது. அதனால காட்ட முடியல. மனசும் அதே மாதிரியா?”
வலது காலால் ஒருமுறை ஊஞ்சலை உந்தி வேகமாக ஆட்டினார்.
“................................”
“சரி...உனக்கு பெங்களூரை நன்றாகத் தெரியும். நானும் நிறையதடவை
போயிருக்கேன். பெங்களூரில் என்னவெல்லாம் இருக்கு?”
“அழகிய விதான் செளதா, லால்பாக், கப்பன்பாக், மெட்ரோரயில், ஏராளமாக
கார்ப்பரேட் கம்பெனிகள், பீர்பப்கள், எலிவேட்டட் ஹைவே, ஏர்போர்ட்”
“இதெல்லாம் பெங்களூரில் இருக்கு. சப்போஸ் இதெல்லாம் பெங்களூரில்
இல்லேன்னா, பெங்களூர்னு ஒண்ணு இருக்கா இல்லையா?”
“எனக்கு குழப்பமா இருக்கு.”
“பெங்களூர் என்பது நீ நிறைய சொன்னியே, அதெல்லாம் சேர்ந்துதான்.
அதெல்லாம் இல்லன்னா பெங்களூரும் இல்லை. சரியா நான் சொல்லுவது?”
“சரின்னுதான் தோணுது...”
“என்னுடைய முதல் கேள்விக்கே மறுபடியும் வரேன். மனசுன்னா என்ன?”
“பதில் சொல்லத் தெரியலை.”
“எப்படி பெங்களுர் என்று சொன்னால், அதுக்குள்ள அடங்கிய இடங்களால அது
அடையாளப்படுதோ, அதே மாதிரிதான் மனசும். அதற்குள்ள அடங்கியிருக்கிற ஆசை,
பயம், வெட்கம், கோபம், பொறாமை, வேட்கை எல்லாம் சேர்ந்துதான் நம் மனசு.
இதுவரைக்கும் நான் சொன்னது புரியுதா?”
“புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.”
“இந்தக் கோபம் என்கிறது அடிப்படையா என்னன்னு சொல்லு பார்க்கலாம்.”
“தேஜஸ்வி, சத்தியமா நான் இதெல்லாம் சிந்தித்துப் பார்த்ததில்லை. நீங்க
சொல்லிகிட்டே போங்க, நான் கேட்டுக்கொள்கிறேன்.”
“சரி, உனக்கு சற்று விவரமாக சொல்கிறேன். நீ ஒரு ரைட்டர். உனக்கு
பிடித்த ரைட்டர் யார்?”
“சுஜாதா.”
“ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம். சுஜாதாவின் ஒவ்வொரு கதைகளையும்
படிக்க, படிக்க உனக்கும் அவரைமாதிரி ஒருபெரிய ரைட்டரா வரணும் என்கிற
எண்ணம் வந்திருது. இந்த எண்ணத்தை நாம் ஆசைன்னு சொல்கிறோம். அதாவது
கண்ணன் என்கிறவன் தனக்குப் பிடித்த ஒரு ரைட்டரோடு தன்னை ஒப்பிட்டுப்
பார்த்து தானும் அந்த ரைட்டர் மாதிரி உயரணும் என்கிற ஒரு எண்ணம்.
உடனே நீ நிறைய கதைகள் எழுதி நிறைய பத்திரிக்கைகளுக்கு அனுப்புவ. ஆனா நீ
எதிர்பார்த்தமாதிரி உன் கதைகளை எவனும் பப்ளிஷ் பண்ணல. உன் கதைகளை எந்த
ஆசிரியரும், பப்ளிஷரும் சீண்டவில்லை. சிறிது காலத்தில் நாம் சுஜாதா
மாதிரி ஒரு சிறந்த ரைட்டராக முடியாதோ என்கிற எண்ணம் அதிகம் வருது.
இதுதான் பயம். அதாவது தான் ஒரு பெரிய ரைட்டராக முடியாதோ என்கிற பயம்.
இருந்தும் நீ தொடர்ந்து விடாமுயற்சியுடன் எழுதுவ. அப்பவும் ஒண்ணும்
தேரல. சுஜாதா மாதிரி தானும் ஒருபெரிய ரைட்டரா ஆகமுடியலையே என்கிற எண்ணம்
அதிகம் ஏற்படுது. இதுதான் கண்ணன் கவலை. அப்புறம் வரிசையாக சுஜாதாமீது
பொறாமை, தனக்கு சான்ஸ் தரமறுத்த ஆசிரியர்மீது கோபம்... இப்படியாக
உன்னுடைய எண்ணத்துக்கு ஒவ்வொரு சமயத்துலயும் ஒவ்வொரு பேர்.
இதுலர்ந்து என்ன தெரியுதுன்னா, உன்னுடைய ஆசை, பயம், கவலை, கோபம், பொறாமை,
வெறுப்பு எல்லாத்துக்கும் அடிப்படை உன்னுடைய எண்ணம்தான். தாட் ப்ராஸஸ்.
எண்ணம்தான் மனுஷனுக்கு கிடைச்ச மிகப்பெரிய வரம். அதே சமயத்துல
எண்ணம்தான் மனுஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய சாபமும். எப்படி அவன் எண்ணம்
என்கிற சொல்லுக்கு ஆசை, பயம், கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு என பல
பெயர்களை பிரிச்சு, பிரிச்சு வச்சானோ அதேமாதிரி தன்னுடைய எண்ணத்திற்கு
பலலட்சம் பெயர்களை வைத்துக் கொண்டான். அதுல ஒரு பெயர்தான் ஜாதி. அது
மாதிரிதான் மதம், இனம், தமிழன், மலையாளி, கொல்டி...அதுக்கும்மேல
கடவுள்னு பொத்தாம் பொதுவா ஒரு பெரிய பேரு.”
“என்ன தேஜஸ்வி கடவுளையும் திடீர்ன்னு ஒரு எண்ணம்னு சொல்றீங்க!”
“ஆமாம் கடவுள் என்பது நாம் வைத்த பெயர். அதுவும் மனித எண்ணம்தான்.”
“அப்ப கடவுள் இல்லையா!”
“உண்மையைத்தான் நான் உனக்கு உணர்த்துகிறேன். கடவுள் என்கிற பெயர் மனித
எண்ணம் என்கிறதால, இந்தக் கடவுள் என்கிற பெயர் கடவுள் இல்லை. நம்
எண்ணங்களின் இயல்பு என்னவென்றால், பிரிப்பது.
எண்ணம் என்கிற அந்த நகர்வு இருந்துகிட்டே இருக்கிறவரைக்கும் பிரிவுகளும்
ஏற்பட்டுகிட்டேதான் இருக்கும். அதாவது ஆயிரம் ஜாதி இருக்கும்; மதம்
இருக்கும்; குலம், கோத்ரம் இருக்கும்...இன்னும் ஆயிரமாயிரம் ஊரு
இருக்கும்; பேரு இருக்கும்.
“நல்லா யோசி உனக்குப் புரியும். கிறிஸ்தவமதம் முதலில் தோன்றியபோது,
சிலரின் எண்ணங்கள் அந்த மதத்தை ப்ரோட்டேஸ்ட் பண்ணியதால் அவர்கள்
ப்ரோட்டஸ்டென்ட் என்று அழைக்கப்படார்கள். அதே மாதிரிதான் ஐயங்கார்களும்.
வடகலை, தென்கலை என்று பிரிந்து கிடக்கிறார்கள். ஐயர்களில் எத்தனை
பிரிவுகள்! முதலியார்களில் செங்குந்த முதலியார், கவர முதலியார்;
தேவர்களில் கள்ளர்கள்; இதுமாதிரி கோடானுகோடி ஜாதிகள், எண்ணங்கள்,
பெயர்கள், பிரிவுகள்...
“இது அரசியலையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்துல தி.க., திமுக.,
அதிமுக, அம்மா திமுக, அப்பா திமுக என பிரிந்ததற்கு காரணம் மனித
எண்ணங்களே.
“கடவுள்களிலும் எத்தனை கடவுள்கள்! அதில் ஆண் கடவுள்கள் எத்தனை! பெண்
அம்மன்கள் எத்தனை! உலகத்தில் உள்ள அத்தனை பிரிவுகளுக்கும் காரணம்
மனிதனின் ‘நான்’ என்கிற அகந்தை.
இந்த ‘நான்’ என்கிற அகந்தை ஊசிமுனையளவும் இல்லாம நிர்மூலம்
ஆயிருச்சின்னு வச்சுக்க, அதுபோதும். பிரிவே இல்லாத முழுமை இருக்கும்;
துண்டுபட்டுப் போகாத சக்தி இருக்கும்; இருளின் சுவடே அற்ற பேரொளி
இருக்கும். அந்த முழுமையான பேரொளிதான்....”
“கடவுளா !?”
“எதற்கும் பேர் வைக்காதே...அந்தப்பேர் நீ தான். உன் எண்ணம்தான்; உன்
கடவுள்தான்; உன் ஜாதி, மதம்தான். இன்னும் நீ வைத்த பேரால் கோடானுகோடி
பிரிவுகள்தான். நிஜம் போலவே தோன்றுகிற ஒரு மாயபிம்பம்தான் ‘நான்’.
“எத்தனை கண்ணாடிகளை சூரியன் முன்னால் வைத்தாலும், அத்தனையிலும் பல
சூரியன்கள் தெரியும். கண்ணாடியில் பிரதிபலிக்கும் அத்தனை சூரியன்களையும்
நம்மால் அழிக்கமுடியாது. ஏனென்றால் அவைகள் நிஜம் கிடையாது. இந்த
அர்த்தத்துலதான் நான் முதல்லயே சொன்னேன் ஜாதி மதங்களை நம்மால் அழிக்க
முடியாதுன்னு. ஏனென்றால் அவைகள் ‘நான்’ என்கிற கண்ணாடியில் தோன்றிய
பிம்பங்கள். பிம்பங்கள் இல்லாமப் போகணும்னா ‘நான்’ என்கிற கண்ணாடி
இல்லாமப் போகணும். இது சாத்தியமான்னு நீயே யோசிச்சு முடிவு பண்ணு.”
“தேஜஸ்வி அப்படின்னா ஒரு சராசரி மனிதன் எப்படி தன் வாழ்க்கையை சிறப்பாக
அமைத்துக்கொள்ள முடியும்?”
“அவனவன் தனக்கு இடப்பட்ட கடமைகளை முனைப்புடன் செய்தால் அதுவே போதும்.
நமக்கு சிறிய வயதிலேயே பொறுப்புகள், கடமைகள் இயல்பாக ஏற்பட்டு
விடுகின்றன. நான்கு அல்லது ஐந்து வயதுமுதலே படிப்பு என்கிற கடமை நம்மேல்
திணிக்கப்படுகிறது. நிறைய கற்றுக்கொள்ள பெற்றோர்களால் நிர்பந்திக்கப்
படுகிறோம். கல்லூரி முடியும்வரை இது தொடர்கிறது. அப்புறம் வேலை,
வியாபாரம் அல்லது தொழில் என்று எதிலாவது நம் கடமை தொடர்கிறது. அதன்பிறகு
திருமணம். நல்ல கணவனாக, பொறுப்புள்ள அப்பாவாக, பொறுப்புள்ள தாத்தாவாக
என நம் கடமைகள் நாம் இறக்கும்வரை தொடர்கிறது. நாம் நம் கடமைகளை
செய்யும்போது நம்மிடமிருந்து திறமைமிக்க எதிர்பார்ப்பும் உண்டாகிறது.
அதாவது சிறந்த மாணவனாக, சிறந்த வேலைக்காரனாக, சிறந்த முதலாளியாக,
சிறந்த கணவனாக.....இப்படி நிறைய. தன் கடமையை எவன் ஒழுங்காக செய்கிறானோ
அவனே சிறந்த மனிதனாவான். இப்படியாக நான்கு வயதுமுதல் இறக்கும்வரை நமக்கு
ஏராளமான கடமைகள் தொடர்கின்றன.”
“நம் கடமைக்கு நடுவே இந்த ஜாதி, மதம், கடவுள்கள், கோவில்கள், சகுனங்கள்,
வாஸ்துகள், ஜாதகம், ஜோஸ்யம், சாமியார்கள், பூஜைகள், புனஸ்காரங்கள்,
சம்பிரதாயங்கள் எல்லாமே நம்மை சலனப்படுத்தும் தேவையற்ற விஷயங்கள்.
இவைகள் மனித சோம்பேறிகளால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள். அவர்களால்
உண்டாக்கப்பட பிரிவுகள். இவை அவர்களின் வியாபாரம். இவைகளை நாம்
முற்றிலுமாக தவிர்த்தால் நம் நேரம், பணம், அலைச்சல், எதிர்பார்ப்பு
எல்லாம் மிச்சம். நம் மன ஆரோக்கியம் மேம்படும்.”
“தவிர, நம் கடமைகளை செய்துகொண்டே, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் முன்னேற
ஏதாவது உதவி செய்தால் அது நமக்கு ஒரு ஆத்ம திருப்தியை தரும்.”
“எந்த மாதிரி உதவி?”
“ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்தாலே போதும். நம் வீட்டிலிருந்தே அதை
ஆரம்பிக்கலாம். நம் டிரைவரின், வேலைக்காரியின், செக்யூரிட்டியின்
குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தலாம். யூனிபார்ம், ஷூ எடுத்துக்
கொடுக்கலாம். நன்கு படிக்க அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
“புரிகிறது தேஜஸ்வி.”
உதவி மட்டுமல்ல... பரஸ்பர அன்பு, மரியாதை, பிறரை குத்திப் பேசாத கவனம்,
அடுத்தவர்களிடம் குறையைக் கண்டுபிடிக்காத குணம், எரிந்து விழாமல்
நிதானமாகப் பேசும் பண்பு என்று நம் சுற்றுப்புற மனிதர்களிடம்
மனிதநேயத்துடன் நம் நாட்களை நகர்த்தினால் அதுதான் அடிப்படை ஏகாந்தம்.”
மணி ஒன்று.
நான் கிளம்பலாம் என்கிற மாதிரி, தேஜஸ்வி தன் கைக்கடியாரத்தைப்
பார்த்தார். நானும் எழுந்துகொண்டேன்.
“தேஜஸ்வி, நம் சந்திப்பை நான் ஒரு சிறுகதையாக எழுதலாமா?”
“ஓ தாராளமாக....அது உன் எண்ணம், உன் பிரிவு” பெரிதாகச் சிரித்தார்.
திரும்பி காரில் வரும்போது, “கிரிஷ்ரெட்டி வாழ்க” என்று கோஷமிட்டபடி ஒரு
ஊர்வலம் என்னை கடந்து சென்றது.
நான் தேஜஸ்வியை நினைத்துக் கொண்டேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|