அமுதே...! தமிழே...!
மணிமாலா மதியழகன்
“முருகா
நீ தமிழகத்திற்குச்சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே
கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி...?”
“அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல் குழப்பங்களென்று
பிரச்சினைகள் விசுவரூபமெடுத்துள்ளதால் பயணத்தைச் சிங்கப்பூரை நோக்கித்
திருப்பினேன் தந்தையே. அதற்கடுத்ததாக நாமனைவரும் அருகிலிருக்கும்
பத்துமலைக்கும் சென்றுவருவோம்!”
“அதுசரி, எங்களை அழைத்ததின் நோக்கத்தை இன்னும் நீ சொல்லவில்லையே?”
“எனக்கு இந்த ஊர் மிகவும் புதுமையாக இருந்தது, அதனால்தான் உங்களை இங்கு
வரவழைத்தேன்.
இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது, அதைப் பிறகு சொல்கிறேன்,
அதையறிந்தால் நீங்கள் அனைவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவீர்கள்!”
என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர்.
“அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?” வினா தொடுத்தார் சிவபெருமான்.
“வேகம்... வேகம்....! எங்கும் வேகம்...! எதிலும் வேகம்....! இதுவே நான்
கண்ட புதுமை தந்தையே!”
“சற்று புரியும்படிச் சொல் கதிர்வேலா” குழப்பத்துடன் சிவன்.
“இங்கு நேரத்தைக் கையாள்வதில் சிறியவர் பெரியவரென்ற பாகுபாடெல்லாம்
கிடையாது தந்தையே. நித்தமும் அனைவருடைய பொழுதுகளும்
தீப்பிடித்தார்போன்று ஆரம்பித்து பரபரப்புடனேயே கழிகிறது.”
“கார்த்திகேயா! நீ சொல்வதை கேட்கும்போது புதுமையாகத்தான் உள்ளது.
எதற்காக அவ்வளவு பரபரப்பு? எதை நாடி மக்கள் அப்படி
ஓடுகின்றனர்?சிறுவர்களும் ஏன் அவ்வளவு அவசம் காட்டுகின்றனர்?”
கேள்விகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கினார் அன்னையார்.
“அதுதான் எனக்கும் விந்தையாக உள்ளது அன்னையே! அதை அறிந்துகொள்ளத்தான்
தங்களை இங்கு வரவழைத்தேன்.”
குடும்பத்தினர் சுற்றிலும் நோட்டமிட, அது ராபிள்ஸ் பிளேஸ் ரயில்நிலையம்
என்பது தெரிந்தது. மக்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். யாரும்
யாருடனும் பேசிக்கொண்டோ அல்லது நிதானமாகவோ செல்வோர் எவருமில்லை.
“குமரா! இன்றுமட்டுந்தான் இப்படியா? அல்லது எப்போதுமே இப்படியா?” தனது
ஐயத்தை வெளியிட்டார் அன்னையார்.
“எப்போதுமே இப்படித்தான் அன்னையே. இது பகல் பொழுதாக இருப்பதால் மக்கள்
கூட்டமும், அவர்களது ஓட்டமும் சற்றுக் குறைவாக உள்ளது.”
“என்னது இதுவே குறைவாக உள்ளதா? என்ன சொல்கிறாய் நீ? இதைவிட பரபரப்பாக
இயங்க முடியுமா என்ன?”
“ஆம் அன்னையே! காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும் தாங்கள் பார்க்க
வேண்டும். ராக்கெட் வேகத்தில் செல்லும் அவர்களைக் கண்டால் தாங்கள்
பயந்தே போய்விடுவீர்கள்!”
“பிராண நாதா! ஏன் இந்த நாட்டில் மட்டும் மக்கள் இப்படி தலைதெறிக்க
ஓடுகின்றனர்? எனக்கு இது மிகவும் விசித்திரமாக உள்ளதே!”
“தேவி, இதன் காரணம் உனக்கு விளங்க வேண்டுமென்றால் நீ சற்றுப் பின்னே
திரும்பிப் பார்க்க வேண்டும்!”
என்னவாக இருக்கும் எனும் ஆவலில் விநாயகரும், முருகரும் திரும்பிப்
பார்க்க, “ஹா.... ஹா....” எம்ஆர்டி நிலையமே அதிர்வதுபோலச் சிரித்தார்
சிவபெருமான்.
அங்கு நடந்துகொண்டிருந்த ஒருசிலர் அவர்களை ஒருகணம் திரும்பிப்
பார்த்துவிட்டு, தங்கள் வழியில் செல்ல தலைப்பட்டனர்.
“நாதா.... இதொன்றும் தேவலோகமில்லை. தாங்கள் இஷ்டப்படி வெடிச் சிரிப்பு
சிரித்து பூமியை அதிர வைத்துவிடாதீர்கள்” தாழ்ந்த குரலில்
சிடுசிடுத்தார் பார்வதி தேவியார்.
“உனக்கு அந்தப் பயமே வேண்டாம் தேவி! இங்கு இதையெல்லாம் ஒரு பொருட்டாக
யாருமே எண்ணமாட்டார்கள். அவரவர்களுக்கு ஆயிரம் வேலையிருக்கும், அதைத்
தேடித்தான் ஓடுவார்களே தவிர அடுத்தவர்களைப்பற்றி நினைத்துப்பார்க்க
அவர்களுக்கு நேரமே கிடையாது என்பதை முதலில் நீ புரிந்துகொள்!”
“ஒங்க ஒறவுல வேகுறதுக்கு ஒரு கட்டு வெறகுல வேகலாம்!” கடுகடுத்தார் அகில
மாதா.
“பூலோகத்திற்கு வந்தபிறகு சொலவடைகளைக்கூட அருமையாக பயன்படுத்துகிறாயே
தேவி! என்ன ஒண்ணு, சூடுதான் பொறுக்க முடியவில்லை!”
“வக்கணையான பேச்சுக்கு ஒன்றும் குறைச்சலில்லை” முணுமுணுத்தார்
அன்னையார்.
“பூமிக்கு வந்தும் உங்கள் பிரச்சினையா?”
“என்ன செய்வது விநாயகா? கணவன் மனைவி கலகமானது எங்கு போனாலும் விடாது
என்பதை நீ அறிந்திருக்கவில்லை!”
“அது சரி, நாங்கள் திரும்பிப் பார்த்ததும் தாங்கள் ஏன் அப்படிச்
சிரித்தீர்கள்?” காரியத்தில் கண்ணாய் முருகர்.
“சற்றுப் பின்னோக்கி பார்க்கவேண்டுமென நான் சொன்னது காலத்தை மகனே.
ஐம்பது வருடங்களைப் பின்னோக்கி பார்த்தால் தெரியும்.இந்த நகரமானது
அதற்குமுன் மிகச் சிறிய கிராமம்போலதான் இருந்தது. அதை முன்னோக்கி
கொண்டுவரவேண்டுமென்று இந்நாட்டு மக்கள் கடும் முயற்சி எடுத்ததால்தான்,
அகிலத்திலேயே அழகு நிறைந்த நகராக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது!”
“அப்படியா தந்தையே! ஐம்பது வருடங்களில் இவ்வளவு பெரிய மாற்றங்களா?
நம்புவதற்குச் சிரமமாக உள்ளது தந்தையே!”
“அதுதான் உண்மை மகனே! எங்கும் வேகம்... எதிலும் வேகமென்று
வியந்துபோனாயே! அப்படிச் சுறுசுறுப்பாக மக்கள் உழைத்ததால்தான் இந்தச்
சொர்க்கபுரி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.”
“உழைப்புக்குதான் நல்ல பலன் கிட்டிவிட்டதே தந்தையே! அதன்பின்னும்
இப்படியே,யாரோ துரத்துகிறார்போல ஓடிக்கொண்டிருப்பதால் ஏதும் பயனுண்டா
என்ன?”
“இருக்கிறது தனயனே! இவர்கள் கடினமாக உழைத்து வெற்றியைப்
பெற்றுவிட்டார்கள். பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் இவ்வளவு
பாடு படுகிறார்கள்.”
மக்களது ஓட்டத்திற்கான காரணம் விளங்க அனைவரது முகத்திலும் குழப்பம்
நீங்கியது.
“கார்த்திகேயா, எங்கே உமது வாகனம்?” ஐயமுடன் வினவினார் விநாயகர்.
“அதையேன் கேட்கிறீர்கள் தமயனே, ஜூரோங் பறவைப்பூங்காவைக் கண்டுகளிக்கச்
சென்றிருந்தேன். தனது இனத்தைக்கண்ட மயிலோ தாயைப் பிரிந்திருந்து
கண்டுவிட்டக் கன்றுக்குட்டியைப் போலானது. அதன் களிப்பைக் கெடுக்க
மனமின்றி, வானுலகம் செல்லும்வரை அங்கேயே இருக்குமாறு சொல்லி
வந்துள்ளேன்”.
“அப்படியானால் உனது பயணத்திற்குச் சிரமமாக இருக்குமே குழந்தாய்?”
“பயணம் செய்ய சிரமமா...? அதுவும் சிங்கப்பூரிலா...? அந்தப்பேச்சுக்கு
இங்கு இடமேயில்லை அன்னையே!”
“தந்தையே, மக்களின் நலன்கருதி, தங்களின் ஆடைக்குள் ஒளித்து
வைத்திருக்கும் பாம்பைக்கூட, தேவலோகம் திரும்பும்வரை
விலங்கியல்தோட்டத்தில் விட்டுவைக்கலாம்!”
“உசிதமான யோசனை” ஏற்றுக்கொண்டார் பரமசிவன்.
“முருகா, இதென்ன உனது காதுகளில் நூலைப்போல ஏதோ தொங்கிக்கொண்டுள்ளது?”
ஆச்சரியத்துடன் அன்னையார்.
“வானொலியெனும் இக்கருவியிலிருந்து எந்நேரமும் மிகவும் சுவாரசியமாக
நிகழ்ச்சிகளை வழங்குவதால் மலரை நாடும் வண்டுகள்போல மக்கள் ‘ஒலி96.8’ஐ
நாடுகின்றனர். யானும் அவ்வண்டுகளில் ஒருவனாகிவிட்டேன் அன்னையே!”
“பூலோகவாசிகள் வைத்திருப்பதுபோல கைத்தொலைபேசி எனும் கருவியோ என
பயந்துவிட்டேன் தனயனே!”
“இது கைத்தொலைபேசிதான் அன்னையே, இதிலிருந்துதான் வானொலியை
செவிமடுத்துக்கொண்டுள்ளேன்.”
“இக்கருவியால்தான் பெரும் இன்னல்கள் விளைவதாகச் சொல்கிறார்களே
குழந்தாய்?”
“பக்குவமற்ற சிலர் செய்யும் தவறுதானே தவிர, இக்கருவிமேல் தவறில்லை
தாயே.”
“அப்படியென்றால் சரிதான். வேலின்றி நீ எங்கும் செல்ல மாட்டாயே
கதிர்வேலா, எங்கே உமது வேல்?”
“இங்கு பாதுகாப்பிற்குப் பஞ்சமேயில்லை அன்னையே, தாங்கள் அணிந்துள்ள
விலைமதிப்பற்ற அணிகலன்களுடன் தன்னந்தனியாக இரவில்கூட பயணிக்கலாம்.”
“அப்படியா!” அவரது கவலை நீங்கியதைக் காட்டிக்கொடுத்தது குரல்.
“முருகா ஏதோ உவகையளிக்கும் செய்தி என்றாயே, அதுகுறித்து நீ இன்னும்
உரைக்கவில்லையே?”
“சொல்கிறேன் தமயனே! உடனடியாகச் சொல்லிவிட்டால் சுவாரசியம்
போய்விடுமல்லவா?”
“அதுவும் சரிதான்! நாங்கள் காத்திருக்கிறோம்! அந்த அரிய செய்தியை நீயாக
கூறும்வரை!”
தந்தையை நோக்கிய முருகர் “இங்குள்ள கல்விமுறையானது சற்றுக்கடினமாக
உள்ளதால் என்போன்ற சிறுவர்கள்தான் சிரமப்படுகின்றனர் தந்தையே!” அவரது
குரலில் துன்பம் தொனித்தது.
“சிரமத்தைக் கடந்தால்தான் சிகரத்தையடைய முடியுமென்பது நீ அறிந்ததுதானே
முருகா!” என்ற தந்தையின் கூற்றைத் தொடர்ந்தார் பிள்ளையார்.
“கொழுக்கட்டையின் மேலிருக்கும் கடினமானப்பகுதியை கடித்தபின்தான்
உள்ளிருக்கும் பூரணத்தைச் சுவைக்கமுடியும், அதுபோலத்தானே தந்தையே!”
“அப்படியேதான்!” ஆமோதித்தார் சிவபெருமான்.
‘உதாரணத்திற்குக்கூட உண்பதைப்பற்றித்தானா சொல்லவேண்டும்!’ மனதில்
பொருமினார் முருகர்.
“தரமான பொருளாக வாங்கவேண்டுமெனில் விலை அதிகம் கொடுத்தால்தான்
கிடைக்கும். அதுபோலதான் இதுவும். சிங்கப்பூர் கல்வியானது உலகத்தரம்
வாய்ந்ததாக இருப்பதால், அதைப் பெற்றுக்கொள்வதற்கு சற்றுச் சிரமபடத்தான்
வேண்டிவரும்.”
“நீங்கள் கூறுதைப் பார்த்தால் ‘அருமை மருமகன் தலை போனாலும் பரவாயில்லை,
ஆதிகாலத்து உரல் போகக்கூடாது’ என்பதுபோலல்லவா இருக்கிறது”
“ஏன் தேவி இவ்வளவு கோபப்படுகிறாய்? நான் மக்களை பலம் பொருந்தியவர்களாக
ஆக்க அவ்வப்போது சோதனைகளைச் செய்வதில்லையா! அதுபோலதான் இந்த நாடும்
வருங்கால மன்னர்களை திடமாக்க கொஞ்சம் கடினமாக சோதிக்கின்றது, இதை
எப்படி நீ தவறென்று சொல்லலாம்?”
“அதற்காக குழந்தைகளை இப்படி கஷ்டப்படுத்தலாமா?” அன்னையின் அக்கறை
குரலில் பொங்கியது.
“குழந்தைப்பருவம் என்பது மலையையும் புரட்டிப்போடும் வலிமையுள்ளப்
பருவமாகும், அதைச் சரிவரப் பயன்படுத்திக்கொண்டால் பின்னாளில் அவர்கள்
சக்கைப்போடு போடுவார்கள்.”
“துள்ளித் திரிந்து விளையாடி மகிழும் பருவத்தில், எந்நேரமும்
புத்தகமும் கையுமாக, எதையோ தொலைத்துவிட்டார்போன்று அலையும் அவர்களைக்
காண்கையில் என் நெஞ்சம் பதறுகிறது ஐயனே!”
“தங்கத்தை உருக்கினால்தான் அழகிய ஆபரணங்களாக வடிவமைக்க முடியுமென்பது
நீ அறிந்ததுதானே?”
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..... எனும் வள்ளுவன் வாக்கை
தாங்கள் மறக்கலாகாது!”
“நீ தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய் தேவி! மாணவர்களை முன்னேற்றப்பாதைக்கு
கொண்டு செல்லும் முயற்சிதான் இது. இதைச்சரிவர அவர்கள் கடந்துவிட்டால்
இவ்வுலகில் மேலும் பல சாதனைகளைப் புரிந்து வளம்பெறுவார்கள்.”
“இளவயதிலேயே இயந்திரம்போன்ற இவர்களது வாழ்க்கைமுறை எனக்குத்
துன்பத்தையே தருகிறது. அகிலத்தைக் காக்கும் ஐயன், மக்கள் நலன்மீது
அக்கறையுடன் தாங்கள் இருந்தால் சரிதான்.”
“ஆம் தந்தையே! அன்னையின் வாதத்தில் நியாயம் இருப்பதாகத்தான் நான்
உணருகிறேன், நீ என்ன சொல்கிறாய் முருகா?” என்று விநாயகர்
வினாதொடுத்தார்.
“என் விருப்பமும் அதுதான் அண்ணா!” பவ்யமாகப் பதிலளித்தார் முருகர்.
“அப்படியே ஆகும், கவலை வேண்டாம்” உறுதியளித்தார் சிவா.
உரையாடியபடியே மெரினாபேயை அடைந்தவர்கள் அவ்வட்டார நேர்த்தியில்
ஒருகணம் சொக்கிப்போயினர்.
“செந்தோசாவில் யுனிவர்சல் ஸ்டுடியோ என்றொரு இடமிருக்கிறதண்ணா. எங்கு
திரும்பினும் சாகசப்பயணம்தான், எனினும் மிகப்பெரிய ரோலர்கோஸ்டர்கள்
இரண்டுள்ளன. அதில் பயணித்த சில நிமிடங்களில்நான் உறைந்துபோனேன்!”
“இதென்ன பிரமாதம், நீ சிறுவனென்பதால் உனக்குப் பீதியாகவுள்ளது.
உலகத்தையே ஒரு கணத்தில் சுற்றிவந்தவனல்லவா? எனக்கு அதெல்லாம் ஒன்றும்
பெரிதில்லை!” பெருமிதத்துடன் பதிலளித்தார் பிள்ளையார்.
“போதும் அண்ணா தங்கள் சுயபுராணம், தாங்கள் உலகத்தைச் சுற்றிவந்த
கதைதான் இவ்வுலகிற்கே தெரியுமே? அங்கு வந்து பார்த்துவிட்டுச்
சொல்லுங்கள்!” ஞானப்பழம் கிடைக்காத வெறுப்பு குரலில்,காலம் கடந்தும்
பிரதிபலித்தது.
“இப்போது இவர்கள் பிரச்சினையா...?” சிரித்துக்கொண்டே கேட்டார் சிவன்.
தீயைப்போல அவரை திரும்பிப் பார்த்துவிட்டு, சகோதரர்களுக்குள் கலகம்
வேண்டாமெனும் நோக்கில், “கந்தா, விட்டால் நீ சிங்கையின் சிறப்புகளை
நூலாகவே வடிப்பாய் போலுள்ளதே!” பேச்சை இலாவகமாக திசைதிருப்பினார்
அன்னையார்.
“மக்களிடம் எழுத்தாற்றலை வளர்க்கும்,எழுத்தாளர் கழகத்தில் இணைந்தால்
அதுவும் சாத்தியமே, செந்தமிழ் இங்குச் சிறப்புடன் வாழ்கிறது தாயே!”
“அப்படியா, கடல் கடந்தும் தமிழ் தழைத்து வளருகிறதா?”
“ஆம் அன்னையே, தமிழை வளர்க்க சிங்கப்பூரில் பல்வேறு அமைப்புகள் மிகுந்த
ஆர்வத்துடன் தொண்டாற்றுகின்றன.”
“அப்படியா! இந்த தேசத்தில் கேட்பவைகளெல்லாம் ஆச்சரியமாகத்தான் உள்ளன!”
“இன்னும் ஆச்சரியங்கள் நிறைந்திருக்கின்றன அன்னையே, சிங்கப்பூரில்
ஏப்ரல் மாதத்தை தமிழ்மொழி மாதம் என்றே அழைக்கின்றனர். திரும்பிய
திசையெல்லாம் தேமதுர தமிழின் அருமை பெருமைகளை செவியுற முடியுமாம்.
அந்தபேறு நமக்கு கிட்ட வேண்டுமென்றுதான் நான் உங்கள் அனைவரையும்
சிங்கைக்கு வரவழைத்ததற்கான முக்கியமான காரணம்!”
“நற்காரியம் புரிந்துள்ளாய் கந்தா!” மகனை தட்டிக்கொடுத்தார் பெருமான்.
“கேட்கவே இனிமையாய் இருக்கிறதே கார்த்திகேயா, ‘மெல்லத் தமிழினிச்
சாகும்....’ என்ற கவிஞரின் கூற்று மெய்யாகிவிடுமோ என்று நான்கூட
கலக்கத்தில் இருந்தேன் புதல்வா, இனி அதற்கெல்லாம் தேவையிருக்காது
போலல்லவா உள்ளது!”
“உண்மைதான் தாயே, ‘தமிழை வாசிப்போம்; தமிழை நேசிப்போம்!’ எனும்
கருப்பொருளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஒரு மாதத்தில்
தமிழை நகரெங்கும் பொழியச் செய்யக் காத்திருக்கின்றன!”
“இரட்டிப்பு மகிழ்ச்சியென்று நீ குறைத்து சொல்லிவிட்டாய், இப்பேறு பெற
வழி செய்த உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும். நற்றமிழைச் செவிமடுத்து
எவ்வளவு காலமாகிவிட்டது?” தன் ஆதங்கத்தை வெளியிட்டார் விநாயகர்.
“ஆம் சகோதரரே! இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழையும்
நாம் பருகி நீண்ட காலமாகிவிட்டதுதான், அந்தக்குறையைப் போக்கி
குடும்பத்துடன் இன்பத்தமிழில் மூழ்குவோம் வாருங்கள்!”
“மகிழ்ச்சி!” குடும்பத்தினர் கோரசாகக் குரல்கொடுத்தபடி திரும்பியவர்கள்
திகைத்துப்போயினர்!
பெருங்கூட்டமே அங்கு சேர்ந்திருந்தது. எப்படி இதுவென்று சிவபெருமான்
யோசித்த வேளையில், “நீங்கள்நகைத்ததை வைத்தே நாம் யாரென்று இவர்கள்
புரிந்துகொண்டார்களென்று நினைக்கிறேன்” தாழ்ந்த குரலில் உரைத்தார்
சக்தி.
“எப்போது சமயம் கிடைக்கும் காலை வாரிவிடலாமென்று காத்திருப்பாயே!”
புன்னகை மாறாத முகத்துடன், ஆற்றாமையை அவிழ்த்துவிட்டார் சிவா.
“அம்மா சொன்னது சரிதான் தந்தையே! இதோ பாருங்கள், தங்களது
வெடிச்சிரிப்பு வைரலாக வலம் வருவதை” தன்னுடைய கைத்தொலைபேசியை
எடுத்துக்காட்டினார் முருகர்.
வியப்புடன் மற்ற மூவரும் நோக்க “பூலோகத்திற்கு வந்து, உமது தந்தை
நம்மைப் பார்த்து மற்றவர்கள் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி
பண்ணிவிட்டாரே!” சக்தியின் அழகிய வதனம் அனலாகியது.
“என்னவோ சொன்னாயே தேவி! எதன்மீதும் அக்கறையின்றி இயந்திரம்போல
ஓடுகிறார்கள் என்று. அவர்களுள் ஒருவர் புரிந்த காரியம்தான் இது. கணநேர
விஷயத்தைக்கூட கச்சிதமாகப் பிடித்துக் கொள்கிறார்களே!”
“இதைத்தான்,‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பார்கள்,
பிரச்சினையை பூசிமெழுக உங்களுக்குக் கற்றுத்தர வேண்டுமா என்ன?”
என்றவரது குரலில் வெறுப்பு மண்டிக்கிடந்தது.
நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு, “இதுகுறித்து பிறகு தர்க்கம்
பண்ணலாம், நமைக்காண ஆவலோடு வந்து இருக்கும் மக்களை காண்போம்
வாருங்கள்!” என்று பிரச்சினையிலிருந்து தற்காலிகமாகத் தன்னைக்
காத்துக்கொண்டார் பரமன்.
தம்பதி சமேதராக பிள்ளைகளுடன் மக்களை நோக்கிச் செல்ல, அனைவரும் சிரம்
தாழ்த்தி, கரம் கூப்பினர்.
“எங்கள் திருநாட்டில் நடக்கும் தமிழ்மொழி விழாவிற்கு தாங்கள்தான்
தலைமையேற்று நடத்த வேண்டும்!” மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
“அப்படியே ஆகட்டும்! தேனைச் சுவைக்க வண்டுகளுக்குக் கசக்குமா என்ன?”
மகிழ்வுடன் சிவன் மனையாளை நோக்க, இன்முகத்துடன் அதை ஆமோதித்தார்
தேவியார்!.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|