என்னவளே...!

மணிமாலா மதியழகன்

ன்னாச்சி?ஏன் இஞ்சி தின்ன எதுவோ போல உட்கார்ந்திருக்கீங்க?”

மனைவியின் குரல் என் சிந்தனைக்குப் பிரேக்கிட்டது.

“எதுவோ என்ன குரங்குன்னே சொல்லேன்”

“அந்த இனத்தை ஏன் கேவலப்படுத்தணும்னு நினைக்கிறேன்.” என்று மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டுப் போனவளை பல்லைக் கடித்தபடி முறைக்கத்தான் முடிந்தது. அதைக்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லைஎன்பது வேறு விஷயம்.

கிடக்கட்டும் அவளை விட்டுத் தள்ளுவோம். இப்ப இதுக்கு என்ன சொல்லி அவன் வாயை அடைப்பது? என்று நினைத்தபடியே அவன் போட்ட பதிவை திரும்பவும் பார்த்தேன். உச்சந்தலை சூடேறியது.

“என்ன நடந்ததுன்னுதான் சொல்லுங்களேன்?”

‘ராட்சசி...ராட்சசி...கொஞ்ச நேரம் மனுஷனை யோசிக்க விடறாளா’

“அந்த மூஞ்சியை பார்த்தாலே சம்திங் ராங்கா தெரியுது.”

‘பேஸ் ரீடிங் கோர்ஸ் எதாவது படிச்சிருப்பாளோ! இவ கண்ணுலயிருந்து எதுவும் தப்ப மாட்டுதே’

“இங்க ஒருத்தி கரடியா கத்திக்கிட்டிருக்கேன், வாயைத் திறக்கக்கூட முடியலையா?”

இனியும் அமைதியா இருந்தா அதனோட பக்கவிளைவுகள் மோசமாக இருக்கும்.

“என்ன கேட்டே?” அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக்கொண்டு நான்.

“உலகமகா நடிப்பு” என்ற முணுமுணுப்புடன் “ஸின்க்லயிருந்து தண்ணி சொட்டிக்கொண்டே இருக்குன்னு நூறுதடவைக்கு மேல சொல்லிட்டேன்.”

“தண்ணி சொட்டுவதற்குதானே ஸின்க்கு.”

என் ஜோக்கை அவள் ரசிக்கமாட்டாள் என்பது எனக்குத் தெரிஞ்ச ஒண்ணுதானே.

“வெட்டிப்பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. போய் அதைச் சரி பண்ணுங்க”

‘இனி இவள் நிறுத்த மாட்டாள். ஸின்க்கை அடைக்கணுமா? இவள் வாயை அடைக்கணுமா? பின்னது முடியாத காரியம். நம்மால் முடிந்ததை செய்வோமே’ என நினைத்து ஸ்பேனருடன் கிளம்பினேன்.

‘என் தலைவரை வாய்க்கு வந்தபடி சொன்னவனை என்ன பண்ணுவது? எல்லோரையும் போல சாதாரணமா இவனுக்குப் பதில் சொல்லிட முடியாது. இவன் சரியான வில்லங்கப் பேர்வழி. என் பதிலை வைச்சே மடக்கி மடக்கி ஆயிரம் கதை பண்ணிடுவான் ஏறக்குறைய என் பொண்டாட்டி மாதிரி.’

“... அவள் அப்படி சொன்னா தெரியுமா?”

‘எவள் எப்படி சொன்னாள்?’ கேட்டால் போதும். அப்ப இவ்ளோநேரம் நான் சொன்னதை நீங்க காதுல வாங்கலைன்னு பிலுபிலுன்னு பிடிச்சுக்குவா, எதுக்கு வம்புன்னு,’ “அப்படியா!” என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“என்ன அப்படியா, இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?”

‘எத்தனை முறைதான் இவகிட்ட பல்பு வாங்குறது.’

இனிமே உங்க வீட்டுக்கு பல்பு வேணும்னா என்னை தொடர்பு கொள்ளவும்னு போர்டே வைக்குமளவிற்கு வாங்கி வைச்சிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.

“சொல்றதை ஒழுங்கா கேட்கணும்.”

‘மனுஷனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினை, இதுல இவள் பிடுங்கல் வேற. “ஸ்...அப்பா...”

“என்ன அதுக்குள்ளே சலிப்பு?”

‘மைன்ட் வாய்ஸ்னு நினைச்சி பேசிட்டமோ! தப்பாச்சே.’

“இல்லையில்லை... உன்னை சொல்லலை. வேலையை முடிச்சிட்டேன், அதுக்கு சொன்னேன்”.

அவள் என்னை நம்பலைங்கிறதை அவள் பார்த்த விதமே கட்டியங்கூறியது. இருந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அவள் நச்சரிக்க மாட்டாள். ஒரு வேலையை முடிச்சிட்டோம் எனும் திருப்தியுடன் போனை கையிலெடுத்தேன். வேறு யாரெல்லாம் அவனது பதிவிற்கு பதில் சொல்லியிருக்காங்க என்று பார்த்தால்... யாருமே ஒண்ணும் சொல்லலை. யாருக்குமே தலைவரெனும் அபிமானமே கிடையாதா? இப்படில்லாம் சும்மாயிருந்துட்டா அவன் அட்டகாசம் எல்லை மீறிப்போகுமே. இப்படி பல்வேறு சிந்தனை என்னை பிய்க்க...

“நான் கூப்பிடறது காதுல விழுதா?இல்லையா?”

‘ராட்சசி... சும்மா விடமாட்டாளே ஆளை. காதுல விழாம எங்கே போகும்? கல்யாணமான புதுசுல “என்னங்க”ன்னு எவ்ளோ இனிமையா கூப்பிடுவா. கேக்கவே ஆசையா இருக்கும். ம்... என்ன பண்றது. அதெல்லாம் ஒரு கனாக்காலமா ஆயிட்டது. இப்பல்லாம் ஏதோ விழாக்கால தள்ளுபடி மாதிரி வீட்டுக்கு யாராவது வந்தாலோ அல்லது கூட யாராவது வெளியாட்கள் இருக்கும்போது மட்டுமே அந்த அழைப்பைக் கேக்க முடியுது.’

“பொங்கல் வருது தெரியுமா? தெரியாதா உங்களுக்கு?”

“அதுதான் வருஷா வருஷம் வரும்னுதான் ஊருக்கேத் தெரியுமா?”

“ஜோக்கடிக்கிறேன்னு நினைச்சிக் கடுப்பேத்தாதீங்க. இந்த கர்ட்டன்லாம் கழற்றி ஊற வச்சிட்டு, வேற மாத்துங்க.”

‘அதுக்குள்ள மறு வேலையா?’

“என்ன கேக்குதா?’

“இப்பதான துவைச்சி மாட்டினோம். ஏன் மறுபடி?”

‘இதை நான் கேக்காமலே இருந்திருக்கலாம்.’

“இப்பதான் என்ன இப்பதான்... தீபாவளிக்கு மாத்தினோம். இப்ப பொங்கல் வருது. வீட்டையே சுத்தம் பண்ணனும்னு தெரியாதா உங்களுக்கு? என்ன புள்ளை வளத்து வைச்சிருக்காங்க உங்கம்மா?”

‘போதும். இனியும் நான் எழுந்திருக்காவிடில் என் பரம்பரையே இங்கு அல்லோகல்லல்படும். நான் ஒருத்தன் இவகிட்ட படறது போதாதா?’

மெசேஜ் வந்த ஒலி கேட்டு போனை திரும்பிப் பார்த்தேன். அவளது பார்வை போனை தொட முடியாதபடி என்னைச் செயலிழக்கவைக்க என் கைகள் தானாக கர்ட்டனைப் பிடித்தன.

‘இந்த சனி, ஞாயிறுல்லாம் ஏன்தான் வருதோ? இப்படில்லாம் போட்டு படுத்தி எடுக்குங்குறதாலதான் இந்த நாளுக்கு சனின்னு பேர் வைச்சாங்களோ. நல்லாதான் சொல்லியிருக்காங்க சனி பொணம் தனியா போகாதுன்னு. சனிவிட்டாலும் ஞாயிறிலும் தொல்லை விடமாட்டுதே... இந்த ரெண்டு நாளிலும் இவ படுத்துறபாட்டை எப்படி தாங்குறது?’

“குழந்தை முழிச்சுட்டான் பாருங்க. அவனைக் குளிக்கவைச்சிடுங்க.”

‘இன்னைக்கு ரொம்பத்தான் சோதிக்கிறாள். மனுஷனுக்கு கொஞ்சங்கூட நிம்மதியில்லை. சே... காதுல வாங்காத மாதிரியே இருந்துட வேண்டியதுதான்.’

“போதும் ஆக்டிங், அவனைக் கூட்டிக்கிட்டுப் போங்க.”

“நீ என்ன பண்றே?”

என்னையும் மீறி தெரியாத்தனமா வார்த்தை வெளியே வந்துவிட்டது.

“ம்... என்ன பண்றேனா? தெரியலை... காலை நீட்டிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துகிட்டிருக்கேன்... வெறுப்புடன் வார்த்தையை உமிழ்ந்துவிட்டு கையிலிருந்த பாத்திரத்தை தடாலென்று ஸின்க்கில் போட்டாள். இந்த சத்தம் எப்படியும் இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கும். கீழ்வீட்டுக்காரங்கதான் பாவம். நாங்க வந்த புதுசுல எதேச்சையா ஒருநாள் கீழ்வீட்டுக்காரரைப் பார்க்க நேரிட்டது. ரெனவேஷன் இன்னும் முடியலையான்னு கேட்டாருன்னா பார்த்துக்கோங்க. தெரிஞ்சி கேட்டாரா, தெரியாம கேட்டாரான்னு அவருக்குதான் வெளிச்சம். நான் பதிலுக்கு மையமா சிரிச்சி வைச்சிட்டு வந்தேன்.

பயத்தில் குழந்தை வீரிட்டழுதது. சின்க்கில் விழுந்த பாத்திரத்தின் எதிரொலி அடங்கிய பின்னும் என் பிள்ளை வாயிலிருந்து வரும் ஒலி மட்டும் அடங்கவேயில்லை. எப்படியும் அவள் வந்து சமாதானப்படுத்த மாட்டாள். நானும் கண்டுக்காம விட்டா புள்ளைய வந்து ரெண்டு மொத்து மொத்தி, இன்னும் கர்ண கடூரமா கதற வைப்பா.

‘இப்ப இது வாயை வேற மூடணுமா’அது அதைவிட கஷ்டமாச்சே. வேறு வழியில்லை. என் போனையெடுத்துக் கொடுக்கவும் சைலன்ட்டானது குழந்தை. ஸ்விட்ச் போட்டார்போன்று அழுகை நிற்கவும், “போனையெடுத்துக் கொடுத்திட்டீங்களா?” சமையலறையிலிருந்து சாத்தானின் குரல் மட்டும் கேட்டது.

“கொஞ்சம் அவன் சமாதானமாகட்டும்.”

“அப்புறம் அதுவே பழக்கமாய்டும்.”

கொடுடா என்று போனை பிடுங்கியவள், “போய்க் குளி” என்றதும் குழந்தை சத்தங்காட்டாமல் பாத்ரூமை நோக்கிப் போனது. இதுவே நான் வாங்கியிருந்தால் இந்நேரம் ஊரையே கூட்டியிருப்பான் குட்டிப்பிசாசு.

“பிள்ளை குளிக்கப் போயாச்சி, இன்னும் ஏன் இங்க நிக்குறீங்க?”

தலைதெறிக்க ஓடினேன் பாத்ரூமை நோக்கி. கண்ணிமைக்கும் நேரத்தில் நூறு வேலை செய்து அம்மாவுக்கு மேல் எனக்கு வேலை கொடுப்பான் என் ஒருவயதே நிரம்பிய குட்டி ராட்சசன்.

‘அப்பாடா, நல்ல வேளை இன்னைக்கி இவன் ஏதும் வேலை கொடுக்கலை’ என்று நினைப்பதற்குள் கதவை டப்பென்று மூடி பூட்டிவிட்டான். கதவைத் திறடா செல்லமே” என்று நான் கெஞ்சுறேன். பூட்டை அழுத்தத் தெரிந்தவனுக்குத் திறக்கத் தெரியவில்லை. ‘அவன் கூடவே ஏன் போகலைன்னு வேற கத்தித் தொலைவாளே’.

“ப்ளீஸ்...செல்லம்... கதவைத் திறடா...”

‘சாவி எங்கேன்னு கேட்டு அதற்கு வேறு அவளிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாமே’ என்று கெஞ்சினேன் அவனிடம்.

அதற்குள் மோப்பம் பிடித்து வந்தவள் எதுவும் பேசாமல் கடுகடுவென்ற முகத்துடன் சாவிபோட்டுக் கதவைத் திறந்தாள்.

என் மகனோ பச்சைத் தண்ணீரில் தலையைக் கொடுத்தபடி குழாயின் கீழே நின்று சந்தோஷமாக சிரித்தபடி இருந்தான்.

“சீக்கிரம், குழந்தைக்கு ஜுரம் வந்துடப்போகுது”

‘அவ்ளோ அக்கறை இருக்கிறவள் குளிக்கவைத்து அழைத்துப் போகவேண்டியதுதானே. அவளானால் பத்து நிமிடத்திற்குள் வேலையை முடித்திடுவாள். ஆனால் என்னிடம் மட்டும் இவன் பண்ற அட்டகாசம் இருக்கே, அவனை குளிக்க வைச்சி முடிப்பதற்குள் அவன் என்னை குளிப்பாட்டியிருப்பான். அன்பா சொன்னால் சிரித்துக்கொண்டே என் மேலே தண்ணி தெளிப்பான். கோபமா சொன்னால் கதறிக்கொண்டே தெளிப்பான். அவ்வளவுதான் வித்தியாசம். ஒருவழியா குளிக்க வைச்சி அழைச்சிப் போனால், “இதென்ன அவன் குளிச்சானா? நீங்க குளிச்சீங்களா? போங்க... ஈரம் சொட்ட சொட்ட வந்து நிக்குறீங்க. ஒரு வேலை செய்ய துப்பில்லை... என்ன பிள்ளையப் பெத்து வளத்து வைச்சிருக்காங்க... சே”.

எல்லாத்தையும் கேட்டுக்கிற எனக்கு எங்கம்மாவைப் பத்தி அவ பேசறப்ப மட்டும் தன்மானம் சிலிர்த்துக்கொண்டு எழும். அவகிட்ட வாயைக் கொடுத்து என் அம்மாவை மேலும் அவமானப்பட வைக்க வேண்டாமே என இப்பல்லாம் அதுக்கும் அமைதியாயிடுறேன்.

‘ம்... என்ன பண்றது... நமக்குன்னு எழுதி வைச்சிருக்கு.’

‘சே, என்ன இது... இவ்ளோ நேரம் போனை பாக்காம கண்டதை நினைச்சி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேனே’ என்று என்னையே கடிந்தபடி போனை எடுத்தேன்.வாட்சப்பில் இருந்த பச்சை வட்டங்கள் என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தன. அலட்சியப்படுத்திவிட்டு ஒவ்வொன்றாகத் தட்டினேன்.

சந்தடி சாக்கில் என் தர்மபத்தினியையும் நோட்டமிட்டேன். குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள். அப்பாடா... கொஞ்ச நேரம் பிடுங்கல் இல்லை. நல்ல வேளையா இதுல என் மகனோட ஆதரவு எனக்குக் கிடைச்சிட்டதால நிம்மதி. இல்லைன்னா அதையும் என்னையே செய்ய வைத்திருப்பாள் சதிகாரி. ஆரம்பத்தில் என்னை ஊட்ட சொல்லி வற்புறுத்தியவள்தான். நான் பிள்ளையுடன் சாப்பாட்டு தட்டை எடுத்துக்கிட்டு வீடு முழுக்க சுற்றிவந்து, சாப்பாடெல்லாம் தரையெல்லாம் சிந்தினதுதான் மிச்சமே தவிர, ஒரு வாய் கூட அவன் வாங்கவேயில்லை. எரிச்சலடைந்தவள், “இங்க கொடுங்க, ஒருவேலைக்கும் லாயக்கில்லை. எப்படித்தான் ஆபீஸ்ல உங்களை வேலைக்கு வைச்சிருக்காங்களோ” என்றுவேறு தன் சந்தேகத்தை எழுப்பி என்னை சாகடித்திருக்கிறாள்.

‘எந்த ஆபீஸ்லயாவது புள்ளைக்குச் சோறு ஊட்ட சொல்றாங்களா என்ன? என்ன பண்றது? எல்லாம் என் தலையெழுத்து...’

“ஷாப்பிங் போலாமா?”

அடிவயிற்றில் சில்லிட்டது எனக்கு. ஷாப்பிங்கா...அதைவிட கொடுமையான ஒண்ணு உலகத்துல இருக்கா என்ன? சே.... மனுஷனை பைத்தியமா ஆக்கிடுவாளே.

“நான் கிளம்புறேன், நீங்க அவனை கிளப்பிட்டு, வாங்க”

‘நான் எப்ப போலாம்னு சொன்னேன். ம்... முடிவெடுக்குற அதிகாரம்லாம் இப்ப எனக்கு ஏது?’

“இப்ப எதுக்கு ஷாப்பிங்?” துணிந்து கேட்ட கேள்வி.

“பொங்கல் நேரத்துல நெரிசல்ல போய் அரக்கபறக்கன்னு வாங்க முடியுமா? இப்பன்னா நிதானமா பார்த்து வாங்கலாம்.”

என்னவோ அதிகம் பேசிவிட்ட தோரணையில் என்னை பார்த்தாள்.

‘இவள் என்றைக்கு சீக்கிரமா வாங்கியிருக்காள்? எப்பவுமே கடையில இருக்குற அத்தனை துணிகளையும் கலைச்சிப் பார்த்துட்டுதானே ஒண்ணு ரெண்டோட வருவா.’ சரி, முடிஞ்சதுன்னு பார்த்தா... இந்தக் கடையில இது போதும்னு ஒரு இக்கு வைத்து ஆளைக் கொல்லுவாளே.இந்தத் துணிக் கடைகாரங்களுந்தான் இருக்காங்களே கொஞ்சங்கூட ஈவிரக்கமே இல்லாதவங்க, மனுஷன் உட்கார ஒரு ஸ்டூலைக் கூடவா போட்டு வைக்க மாட்டாங்க? ஒருவேளை கடை வைச்சிருப்பவங்களெல்லாம் பெண்களாவே இருப்பாங்களோ? அதனால ஆம்பிளைங்க படற கஷ்டம் இவங்களுக்குப் புரியமாட்டுதோ? எத்தனை கேள்விகள் என்னுள் முளைத்து என்ன பயன்? இவளுடன் ஷாப்பிங் என்ற பெயரில் நான் படும் வேதனைக்கு தீர்வு கிட்டப் போகிறதா என்ன? ஒவ்வொரு முறை போறப்பவும், ‘இந்த துணிக்கடயையெல்லாம் தீ வைச்சிக் கொழுத்தினால் என்ன?’ என்ற நினைவு வருவதைத் தடுக்க முடிவதில்லையே. என்ன அப்படி பார்க்குறீங்க? அப்ப உங்களுக்கு இன்னும் கல்யாணமாகாமலோ அல்லது பிள்ளைன்னு ஒரு தொல்லை இன்னும் வராமலோ இருக்கணும். தோளில் அழும் பிள்ளையை சமாதானப் படுத்தியவாறு கால்கடுக்க நின்னு பாருங்க உங்களுக்கு அப்ப தெரியும்!

இவன் வேற கொஞ்ச நேரந்தான் ஸ்டோலார்ல இருப்பான். அப்புறம் அம்மா... அம்மான்னு ஆரம்பிச்சிடுவான். ரொம்பத்தான் படுத்தரானேன்னு அவகிட்ட கூட்டிக்கிட்டுப் போய்ட்டா போதும். அவ பாக்குற பார்வையில கண்ணகியே பயந்துதான் போகணும். அது யாருன்னா கேக்குறீங்க? அதான் அந்த மதுரையை எரிச்சாங்களே அந்தம்மாதாம்பா. அவ்ளோ நேரம் கடுப்பா துணியெடுத்துப் போட்டுக்காட்டிக்கொண்டிருந்த பையன் வேற அதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பான் பாருங்க. அப்படியேக் கொலைவெறி வரும். என்ன பண்றது? யாருகிட்ட காட்ட முடியும்? போனையெடுத்து பிள்ளைகிட்டக் கொடுக்குறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்?  ஒருவழியா அவ கடையைவிட்டு வர்றதுக்குள்ள பிள்ளை நொந்து துவண்டுபோய் தூங்கியிருக்கும்.

என்னவோ இவ கடையைவிட்டு வெளிவந்த அடுத்த கணமே துணிக்கடையெல்லாம் அழிஞ்சிடுற மாதிரி அவ்ளோ துணிகளை எதுக்கு வாங்குறான்னு மட்டும் எனக்குப் புரியவே மாட்டுது. வீட்டில எப்பவுமே ஒரு உறையோடுதான் அலைந்துகொண்டிருப்பாள். என்ன உறையா? அதான் அந்த நைட்டின்னு சொல்றாங்களே அதான். எப்பவாவது போடறதுக்கு இவ்ளோ துணிகளா! திறக்கிற கப்போர்டெல்லாம் அவள் துணியாய்க் காட்சியளிக்கும். என்னது ஏதோ ஒரு சின்ன மூலையில் இடம் பிடித்திருக்கும்.அதை நினைச்சி நான் கவலைப்பட்டதெல்லாம் கிடையாது. இவள் கூட ஷாப்பிங்குன்னு போனதிலிருந்து துணிகளைக் கண்டாலே வெறுப்புதான் வருது.ஆதாம் காலத்திலேயே இருந்திருக்கக்கூடாதாங்குற ஏக்கமே வரும் போங்க!

இந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவாதான் இப்பல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் வந்திருக்கே இவகிட்ட சொன்னா எடுபடுமா? நான் சொல்லி அவள் இதுவரை எதுவும் கேட்டதில்லையென்பது தெரிந்த ஒன்றாக இருந்தபோதிலும் முயற்சிப்போமே என்று, “அதான் இப்ப எல்லாவிதமான பொருட்களையும் ஆன்லைன்லயே வாங்கிடலாமே? எதுக்கு கடைக்குப் போகணும்னு சொல்றே?” அதுதான், அவ்வளவுதான் நான் கேட்டது.

அவகிட்ட நான் வாங்கிய பல்பை வைச்சி ஒரு கடையே வைக்கலாம். நான் கேட்டதுல எதாவது தப்பு இருக்கா என்ன நீங்களே சொல்லுங்க?

கண்ணுக்கு கண்ணாய் என்னைக் கவனித்துக்கொண்ட மனைவியை சந்தேகக் கண்கொண்டு நான் நோக்க, மணவிலக்கைப் பெற்றுக்கொண்டு பிரிந்துபோனாள் அந்த மகராசி. அப்புறமா பொண்ணு தேடியலைந்ததில் பலர் என்னை நிராகரிக்க, கிடைத்தவள்தான் இதோ தீயின்றி என்னை வறுத்தெடுப்பவள். விதைச்சதை அறுவடை பண்ணணுமோ?

“இன்னுமா நீங்க கிளம்பலை?”

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்