பெண்
என்பவள்
எஸ்.கண்ணன்
அன்று
ஞாயிற்றுக்கிழமை.
ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும்
அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர்.
பாஸ்கருக்கு படபடப்பாக இருந்தது.
தன் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்
பொருட்டு பார்க்கப் போகிறான். இது எவ்வளவு பெரிய தருணம் ! என்று
எண்ணிக்கொண்டான்.
பாஸ்கர் சென்னையின் ஒரு பிரபல மல்டிநேஷனல் கம்பெனியில் ப்ராடெக்ட்
ஹெட். அதுதவிர அவனுடைய அப்பாவின் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள்
தயாரிக்கும் கம்பெனியில் ஒரு டைரக்டர். சென்னை அடையாறில் மிகப்பெரிய
பணக்கார குடும்பம். இரண்டு தங்கைகளும் கல்லூரியில் படிக்கிறார்கள்.
ராதிகாவின் வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்தது.
டென்டல் மருத்துவம் படித்துவிட்டு, சொந்தமாக வீட்டிற்கு அடுத்த
கட்டிடத்தில் க்ளீனிக் வைத்திருந்தாள். சென்னையின் பிரபல பல்
டாக்டர். அடிக்கடி பேப்பர் ப்ரசன்டேஷன் செய்வதற்கும், பெரிய
கான்பரன்ஸ்களுக்கும் ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர்
என்று பறப்பவள். வீட்டின் ஒரே வாரிசு. பாஸ்கருக்கு இணையான
செல்வந்தள்.
காரிலிருந்து இறங்கியவர்களை ராதிகாவின் தந்தை வரவேற்றார். யூனிபார்ம்
அணிந்திருந்த செக்யூரிட்டி சலாம் வைத்தான். போர்டிகோவில்
வெள்ளைநிறத்தில் ஆடியும், பென்ஸும் நின்றிருந்தன.
வீடு விஸ்தாரமாக இருந்தது. கூடத்தில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட
ஊஞ்சல் அழகுடன் காட்சியளித்தது. ஒரு பெரிய ஆன்டிக் கடிகாரம் அதன்
பழமையை பறைசாற்றியது.
அனைவரும் கூடத்தில் அமர்ந்துகொள்ள, சற்று நேரத்தில் ராதிகா அங்கு
பிரசன்னாமானாள். நல்ல சிவந்த நிறம். பிஸ்தாகலர் காட்டன் ஸாரியில்,
நகைகள் எதுவும் அணியாமல் சிரித்த முகத்துடன் மிக பொலிவுடன்
காணப்பட்டாள்.
பாஸ்கருக்கு அவளைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது.
ராதிகாவுக்கும் பாஸ்கரை பார்த்த மாத்திரத்திலேயே ‘இவன்தான் இவன்தான்’
என்று மனம் துள்ளியது. முகத்தில் நாணமும், வெட்கமும் இயல்பாக
ஒட்டிக்கொண்டது. ஒரு வித்தியாசமான இன்பம் அவள் உடலில் பரவியது.
இருவரும் மொட்டை மாடிக்கு சென்று அரைமணிநேரம் பேசிக்
கொண்டிருந்துவிட்டு திரும்பினார்கள். தங்களது பெற்றோர்களிடம்
சம்மதத்தைச் சொல்ல, அங்கு உடனே ஒரு கலகலப்பான, சந்தோஷமான சூழ்நிலை
உண்டானது.
பாஸ்கரின் சகோதரிகள் ராதிகாவின் அருகில் சென்று, அவளுடன் ஈஷிக்
கொண்டனர். வரப்போகும் மன்னியை பெருமையுடன் பார்த்தனர்.
உடனடியாக லெளகீக விஷயங்கள் பேசப்பட்டு அடுத்த ஆறு மாதத்தில் திருமணம்
என பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. தாம்பூலம் மாற்றிக்
கொண்டார்கள்.
ராதிகாவின் அப்பா உடனே உற்சாகத்துடன் சென்னையின் பிரபல கல்யாண
மண்டபங்களை பட்டியலிட்டார். அடுத்த இரண்டு நாட்களில் சிறந்த
மண்டபத்தை தேர்வுசெய்துவிடுவதாகச் சொன்னார்.
அனைவரும் மிக சந்தோஷத்துடன் புறப்பட்டனர்.
காரில் வீட்டிற்கு திரும்புகையில் பாஸ்கரின் சகோதரிகள் ராதிகாவை
மிகவும் புகழந்தனர். அண்ணாவுக்குத்தான் அதிர்ஷ்டம் என்றனர். “என்
பிள்ளைக்கு என்னடி குறைச்சல்?” என்று பொய்யாக சண்டைபோட்டாள் பாஸ்கரின்
அம்மா.
வீட்டிற்கு வந்தவுடன் பாஸ்கர், ராதிகாவுடன் மொபைலில் தொடர்பு
கொண்டான். இருவரும் பேசி முடிந்தவுடன் மூத்த சகோதரி, “அண்ணாவுக்கு
அடுத்த ஆறு மாசத்துக்கு போனில் கடலைபோட ஆள் கிடைச்சாச்சு” என்றாள்.
அனைவரும் சிரித்தனர்.
பாஸ்கரின் அப்பா அவசர அவசரமாக கலிபோர்னியாவுக்கு ஸ்கைப்பில்
தொடர்புகொண்டு, தன் அம்மாவிடம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
லேப்டாப்பில் ராதிகாவின் படங்களை அனுப்பி வைத்தார். அவருடைய அம்மா,
கலிபோர்னியாவிற்கு தன் மகள் வீட்டிற்கு, பாஸ்கரின் அத்தை வீட்டிற்கு,
சென்றிருந்தாள். ராதிகாவை லேப்டாப்பில் பார்த்த பாட்டி, “துடைச்சு
விட்டமாதிரி பளிச்சுன்னு அழகா இருக்கா!” என்றாள்.
அந்த வீட்டின் எல்லா நல்ல விஷயங்களும் பாட்டியின் விருப்பப்படிதான்
நடக்கும், நடக்கவும் வேண்டும். ராதிகாவை நேரில் பார்க்க பாஸ்கரின்
பாட்டியும், அத்தையும் டிக்கெட் கிடைத்தவுடன் வருவதாகச்
சொன்னார்கள்.
அன்று இரவு பாஸ்கருக்கும், ராதிகாவுக்கும் கிளுகிளுப்பான நினைவுகளில்
தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தனர். வெப்பமான ஏக்கப்
பெருமூச்சு விட்டனர்.
இரண்டு நாட்களில் ராதிகாவின் அப்பா போன் செய்தார். “கல்யாணத்துக்கு
விஜயசேஷ மஹால் புக் பண்ணியாச்சு” என்றார்.
அடுத்தவாரம் புதன்கிழமை பாட்டியும், அத்தையும் அமெரிக்காவிலிருந்து
வந்தனர். அந்தவார இறுதியில் அனைவரும் மறுபடியும் ராதிகாவைப் பார்க்க
கிளம்பிச் சென்றனர், பாஸ்கரைத் தவிர. பாஸ்கர்தான் அடிக்கடி ரகசியமாக
ராதிகாவை பாலவாக்கம் பீச்சில் சந்திக்கிறானே!
பாட்டியை ராதிகா நமஸ்கரித்தாள். பாஸ்கரின் பாட்டிக்கும் அத்தைக்கும்
ராதிகாவை மிகவும் பிடித்துவிட்டது. பாட்டி ராதிகாவின் அருகில்
அமர்ந்து அவளை உற்றுப்பார்த்து, “ஏண்டீம்மா நீ இன்னும் மூக்கு
குத்திக்கலியா?”
என்றாள். இந்தக் கேள்வியை ராதிகா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ராதிகாவின் அம்மா “ஆமா குத்திக்கலை” என்று மையமாக பதில் சொல்லி,
சாமர்த்தியமாக வேறு டாப்பிக்குக்கு பேச்சை மாற்றிக் கொண்டு
சென்றுவிட்டாள்.
பாட்டிக்கு மட்டும் இந்த விஷயம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
அனைவரும் வீடு திரும்பியதும் பாட்டி, “எல்லாம் சரிதான்....ஆனா அவள
கல்யாணத்துக்கு முன்னால மூக்க குத்திக்கச் சொல்லு” என்றாள். அதற்கு
உடனே பாஸ்கரின் அத்தையும் ஒத்துப் பாடினாள். வீட்டில் அப்போது பாஸ்கர்
இல்லை.
பாஸ்கரின் அப்பா, “அதனாலென்ன நான் இப்பவே அவளோட அப்பாகிட்ட சொல்லி ஒரு
நல்ல நாளில் மூக்கை குத்திக்க சொல்றேன்” என்றார்.
உடனடியாக ராதிகாவின் அப்பாவிடம், தன் அம்மாவின் விருப்பத்தை சொன்னார்.
அவர் உடனே இதை தன் மனைவி, மகளிடம் சொல்ல, அந்த வீட்டில் இது ஒரு பெரிய
விஷயமாக விவாதிக்கப்பட்டது. ராதிகா, தான் மூக்கு குத்திக் கொள்ளப்
போவதில்லை என்று அறிவித்துவிட்டாள். அவளுடைய பெற்றோர்களும் “சரி உன்
இஷ்டம்” என்று சொல்லிவிட்டனர்.
மறுநாள் பாலவாக்கம் பீச்சில் சந்தித்தபோது பாஸ்கரிடம் இதை ராதிகா
சொல்லி, “தனக்கு மூக்கு குத்திக் கொள்வதில் நம்பிக்கை இல்லை” என்றாள்.
பாஸ்கரும் “இது ஒரு பெரிய விஷயமா ராது” என்றான்.
ஆனால் அவன் வீட்டிற்கு வந்தவுடன், இரவு சாப்பாட்டின்போது, பாட்டி
மறுபடியும் ராதிகா மூக்கு குத்திக்கொள்ளும் விஷயத்தை ஆரம்பித்தாள்.
அதற்கு பாஸ்கர் மிக இயல்பாக, “அவளுக்கு அதுல இஷ்டம் இல்ல பாட்டி”
என்றான்.
“போடா பைத்தியக்காரா, மூக்கு குத்திக் கொண்டால்தான் ஒரு பெண்ணிற்கு
அழகும், லட்சணமும்....உனக்கு தெரியுமா மதுரை மீனாட்சியம்மனின்
மூக்குத்தி ரொம்பப் பிரபலம். கன்னியாகுமரி பகவதியம்மன் மூக்குத்தியின்
ஒளியால்தான் கடலில் கப்பல் ஓட்டியவர்கள் கரை சேர்ந்ததாக
வரலாறு...அவகிட்ட நீ பேசி பொண்ணா லட்சணமா அவள இருக்கச்சொல்லு.”
அன்று இரவு மொபைலில் ராதிகாவை தொடர்புகொண்டு, தன் வீட்டில் பாட்டியின்
முக்கியத்துவத்தையும், அவளின் பிடிவாதத்தையும் எடுத்துச் சொன்னான்.
ராதிகா மிகவும் பொறுமையுடன், “ பாட்டிமீது எனக்கும் மிகுந்த மரியாதை
உண்டு பாஸ்கர். பட் ஐயாம் ஸாரி, இது என் உடம்பு, என் விருப்பம்,
மூக்கில் ஓட்டை போட்டுக் கொள்வது எனது தனிப்பட்ட விருப்பத்துக்கு
எதிரானது. எனக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்யமாட்டேன். இதை
உன் பாட்டிக்கு புரிய வைப்பது உன்னுடைய பொறுப்பு” என்றாள்.
ஆனால் இது ஒரு பெரிய விஷயமாகி, பாட்டி “அவள் மூக்கை குத்திக்
கொள்ளவில்லை என்றால், நான் இந்தக் கல்யாணத்திற்கு வரவில்லை...அப்புறம்
உங்க இஷ்டம்” என்று விடைத்துக் கொண்டாள். பாஸ்கரின் அப்பாவும்,
அத்தையும் பாட்டிக்கு ஒத்துப்பாடி, “அவளுக்கென்ன அவ்வளவு
அழிசாட்டியம்.. ஒரு அடக்கம் வேணாம்?” என்றார்கள். .
இந்த விஷயத்தினால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பெரிய மனஸ்தாபம்
ஏற்பட்டது. ராதிகா மிகவும் பிடிவாதமாக இருப்பது பாஸ்கருக்கும் ரொம்ப
வருத்தமாக இருந்தது. ராதிகாவிடம், “உன் பிடிவாதத்தை நீ தளர்த்திக்
கொள்ளவில்லை என்றால் நம் கல்யாணம் நடப்பது சந்தேகம்” என்றான்.
அதற்கு ராதிகா, “த பால் இஸ் இன் யுவர் கோர்ட்” என்றாள்.
அதைத் தொடர்ந்து இரு குடும்பத்தினரும் சிறிதுகாலம் அமைதி காத்தார்கள்.
இரண்டு வாரத்தில் பாட்டி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் மண்டையில்
அடிபட்டு நான்கு நாட்கள் ஹாஸ்பிடலில் போராடி, பிறகு இறந்துவிட்டாள்.
அவளது உடம்பிற்கு ராதிகாவின் அம்மா, அப்பா வந்திருந்து மரியாதை
செலுத்தினார்கள். பாஸ்கர் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார்கள்.
ஒருவிதத்தில் பாட்டியின் இறப்பு பாஸ்கருக்கு நிம்மதியைத் தந்தது.
அத்தை ஒத்து ஊதுவதில் மட்டும்தான் கெட்டிக்காரி. அவளை எளிதாகச்
சமாளித்துவிடலாம் என்று நினைத்தான்.
பாட்டிக்கு பத்து முடிந்ததும், அன்றுகாலை ராதிகாவை தொடர்பு கொண்டான்.
குரலில் குழைவுடன், “ராது இன்னிக்கி சாயங்காலம் பீச்சில்
சந்திக்கலாம்.” என்றான்.
“நான் மறுபடியும் உங்களைக் கூப்பிடுகிறேன் பாஸ்கர்.”
அடுத்த ஒரு மணி நேரத்தில் பாஸ்கரின் இன்பாக்சுக்கு ஒரு மெயில் வந்து
விழுந்தது. பாஸ்கர் பரபரப்புடன் படித்தான் :
பாஸ்கர்,
கல்யாணம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு
இன்பச் சிலிர்ப்பு. அதே சிலிர்ப்பு தன் வாழ்நாள் முழுதும் அவளுக்கு
தொடர்ந்து அமைவதில்தான் தாம்பத்யம் முற்றுப் பெறுகிறது.
குடும்பம் என்கிற வண்டியின் இரு சக்கரங்கள்தான் பெண்ணும், ஆணும்.
இதில் பெண் அன்பும், பாசமும்; ஆண் பாதுகாப்பும், வீரமும். கல்யாணம்
என்பதே ஒருபெண் தன்னை சந்தோஷத்துடன் ஒரு ஆணிடம் ஒப்படைப்பதுதான். அந்த
ஒப்படைத்தல் என்பது ஒரு நிபந்தனையற்ற தஞ்சம்.
தேவைப்படின், இயற்கையான பற்களை புடுங்கிவிட்டு வேறு செயற்கைப் பற்கள்
பொருத்திக் கொள்வது ஒரு சிகிச்சைமுறை. பெண்கள் மனசு அப்படியல்ல
பாஸ்கர்.
பெண்கள் மென்மையானவர்கள், உணர்ச்சிகளுடன், சுயமரியாதையுடன் வலம்
வருபவர்கள். இதில் சுயமரியாதை எனக்கு சற்று அதிகம். ஒருவேளை என்
தன்னம்பிக்கையும் படிப்பும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
உங்களைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட புளகாங்கிதம், இந்த மூக்குத்தி
விஷயத்தில் முற்றிலும் அடிபட்டுப் போய்விட்டது என்பதுதான் உண்மை.
இனி நாம் சந்திப்பதோ, தொடர்பில் இருப்பதோ வேண்டாம். உங்கள்
புரிதலுக்கு நன்றி.
மரியாதையுடன்,
ராதிகா.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|