வேட்டை

பவா செல்லதுரை

தெருவில் மூட்டப்பட்ட கல் அடுப்புகளில் எரிந்த சைக்கிள் டயர்களில் சோறு வெந்து கொண்டிருந்தது. சில சட்டிகளில் புனுகுபூனைக் கறி வத்தல். சாராயநெடி தெருவெங்கும் பனிமூட்டமாய் இறங்கி, உற்சாகமூட்டிக் கொண்டிருந்த சாயங்காலத்தில் ஜப்பான் கிழவன் கிழக்குப் பார்த்துக் கும்பிட்டு தெருவிறங்கினான்.

“நானும் வரேன் தாத்தா.” என்ற குரலை அலட்சியப்படுத்தினான். “வேட்டைன்றது எனக்கும் காட்டுக்குமான சண்டை” என்ற குரல் அலட்சியத்திற்குள் புதைந்திருந்தது. இனி அவன் மட்டும்தான். எல்லாமும் அவனுக்கு அலட்சியம்தான். வெகுநாட்களாகவே துயருற்றிருந்தான். துயரம் அவன் பேச்சை உறிஞ்சி விட்டிருந்தது. ஆலமர மைதானத்திலிருந்து மறுக்க, மறுக்க கூட்டிவந்து இந்த ஓட்டுவீட்டில் உட்கார்த்தி வைத்தபோது, அவன் நினைவில் மைதானம் காணாமல் எகிறிப்போயிருந்தது. தூங்கி எழுந்தவுடன் சுவர்களின் முகத்தில் முழிச்சது தாங்கமுடியாமல் இருந்தது. எந்நேரமும் அவன் முன்னால் விரிந்திருந்த மைதான பலியில் அவன் பேச்சை இழந்திருந்தான். எதுவுமே பிடிக்கவில்லைதான். அப்புறம் எதுக்கு வாழ?

காட்டுக்கு... இவனோடு சதா மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது அதுதான். இவன்தான் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு இவனிடம் இழந்து கொண்டிருந்தது தன்னை.

தெருவில் கால் வைத்த நிமிஷம் எதிரில் பெரிய பெரிய வாத்யக் கருவிகளோடு வேதக்காரர்கள் கரேலென்ற அட்டை போட்ட தடிதடியான புத்தகங்களோடு எதிர்ப்பட்டார்கள்.

“இவனுங்க வேற...” முணுமுணுத்தான். “குர்யகாரனுங்க கிட்ட என்னத்த கண்டுட்டானுங்க... ராத்திரில, காட்ட சுத்தற பையனுங்களைக் கூட்டி வச்சிக்கினு பாட்டு பாடி... கத்தி, கூப்பாடு போட்டு... ச்சேய்...”

ரோட்டுக்கு வந்து விட்டிருந்தான். பஸ், லாரி சப்தங்களால் அதிர்வுற்றான். சத்தம் எப்போதுமே பொறுக்க முடியாததுதான். ஆலமர மைதானம்தான் ஒட்டிக்கிடந்தது மனசோடு. மரத்தை விட்டுவிட்டு, இவனை வேரோடு பிடுங்கி வந்து தெருவில் நட்டார்கள். துளுக்காமல், கொள்ளாமல் மரக்கட்டையாய் கணக்குக்கு நின்றுகொண்டிருந்தான் ஜப்பான் கிழவன்.

தோளில் தொங்கிய திட்டுத்திட்டாய் தீட்டுக்கரை போலப் படிந்திருந்த தோல்பையில் புதைந்திருந்த கண்ணிகளின் கனம் கனத்தது. கொஞ்சநேரம்... கொஞ்சமே கொஞ்ச நேரம் கண்ணிகளை அவிழ்த்து, சிக்கெடுத்து காட்டில் பரத்தி... இந்த நினைவுகள் மட்டுமே அவனை ஈரப்படுத்திக்கொண்டிருந்தன. சுத்தி, சுத்தி முகத்தில் நெருப்பள்ளிக் கொட்டின வாழ்வில் முகம் கருகி, நாக்கு வெளித்தள்ளி செத்துப்போயிருப்பான். இந்தக் காடுதான் காப்பாற்றியது.

ரோட்டிலிருந்து ஒத்தையடிப் பாதையில் இறங்கின கால்கள். தார் ரோட்டை மறுத்து மண்ரோட்டில் இறங்குகின்றபோதே ஜப்பான் கிழவன் காட்டோடு மல்லுக்குத் தயாராகின்றான். வெறி ஏறுகிறது ரத்தத்திற்கு... “மாட்டேன்... மாட்டேன்...” என்று கதறக் கதற... இவன் வெளியேறும்போது அதன் குழந்தைகுட்டிகளைக் குத்துயிரும், குலையுயிருமாக இழுத்துக்கொண்டுதான் போகிறான்.

நரைத்துத் துடிக்கும் காவியேறிய மீசையின் பக்கத்தில் வெற்றியின் சிரிப்பு வந்து மறைவதும் அந்த நேரத்தில் மட்டும்தான். மண்தரையில் பட்டவுடன் சனிமூலையில் கும்பிட்டான். வேலிக்காத்தான் முள் இடதுகால் பெருவிரல்பட்டுத் தைத்தது. அனாவசியமாகக் காலை மேல் தூக்கிப் பிடுங்கி எடுத்தான். ரத்தம் கசிந்தது. எச்சிலை மண்ணில் தொட்டு ரத்த வாயில் பூசினான்.

நடந்தான்... எப்போதும் செருப்பு போடறவங்களைப் பாத்தா எகத்தாளம்தான் கெழவனுக்கு. செருப்பு சத்தத்துல ஒரு மொசக்குட்டிக்கூட ஓடிடும். ஆலமர மைதானத்தில் மல்லாந்து கிடந்தபோது. எதுவுமற்று இருந்த மனசிருந்தது. ஒத்தையடிப் பாதையின் கடேசியாய் இவன்முன் சண்டையிட்டு நிற்கப் போகும் காடு பெரும் ஆரவாரமான காற்றோடு பயமுறுத்திக் கொண்டிருந்தது.

இருட்டிக் கொண்டிருந்தது. இவனுள் இவன் மட்டுமே இருந்த நாழிகை அது. எதுவுமற்று அம்மணமாய் இருந்தது மனசு. பார்த்தான். எதிரில் தன் ராட்சதச் சிறகை விரித்து இவனை அப்படியே அலகில் குத்திக் குதறித் தூக்கிப் போக, நின்று கொண்டிருக்கும் அந்தக் காட்டை. இந்தக் கணங்களில்தான் இவன் பயமற்றுப் போகிறான். அச்சங்கள் உதிர்த்து லேசாகிறான். காற்று மாதிரி உரிமையோடும், அந்நியமற்றும் காட்டுக்குள் நுழைகிறான். இருட்டிவிட்டிருந்தது.

குளிர்ந்த காற்று முகத்திலடித்தது. நிதானமாக மடியைப் பிரித்து புகையிலையை எடுத்து வாய்க்குள் அதக்கினான். இது அவன் உலகம். அவசரமற்ற உலகம். அவசரம் சீவனை உசுப்பி விடும். ஒரு நீண்ட இரவு அவனுக்கு மட்டுமே இந்தக் கானகத்தில் காத்திருக்கிறது. எதற்கு அவசரம்?

தாலியறுத்தான் பாறையில் ஏறினான். ஏறும்வழி பழகிவிட்டிருந்தது. அம்மாவாசைக்கு முந்தின ஐந்து நாட்களும் பிந்தின ஐந்து நாட்களும் வேட்டைக்கு உகந்தவை. வெளிச்சமற்ற இரவுகள் ஆள் வருவதை சீவன்களுக்கு உணர்த்தாது. வெளிச்சத்துக்கு எப்போதுமே டார்ச் லைட் கிடையாது. கண்கள்தான் சுற்றிலும் சாம்பல் பூத்து நடுவில் மணி மணியாய் ப்ரவுன் கலரில் மின்னுதே அதைவிடவா செல் அடைத்த டார்ச் லைட்?

போன வாரம் பெய்திருந்த மழைக்கு ஆப்பு சுலபமாகத் தரையிறங்கியது. மெல்ல கண்ணிகளை விடுவித்தான். நிதானம்.. நிதானம்... ஒவ்வொன்றாய் தரையில் நிற்கின்றன. இழுத்துக் கொண்டே நகர்கின்றான். இரும்புச் சங்கிலிகளின் அசைவுகள் கூட அவன் கட்டுப்பாட்டிலிருந்தது. செவடன்குளக் கிழக்குப் படிவரைக்கும் வந்தது கண்ணி.

ஏறி நிதானித்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை அடர்ந்த இருட்டு. அண்ணாந்தான். தூரத்தில் வெளிச்சமற்ற ஒன்றிரண்டு நட்சத்திரங்கள். மழை வரும்போலிருந்தது. வரட்டுமே. அதனாலென்ன? என்ன வேணுமானாலும் வரட்டும். கானகத்தின் தலை உச்சியில் நின்று அதையே வம்புக்கிழுப்பது போல ஒரு பார்வை பார்த்துத் தீர்மானித்தான்.

“சனி மூலைக்கும் செவடன் குளத்துக்கும் நடுவுல...”

என்னைக்கு தப்பியது அவன் கணக்கு? ஞாபகமாய் மடியில் வைத்திருந்த கற்பூரம் பற்ற வைத்து, சனிமூலையைப் பார்த்து மீண்டும் ஒரு கும்பிடு. கண்ணிக்கும் அவனுக்குமான உறவு சட்டென அறுந்து போனது மாதிரி ஒரு உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. தற்காலிகம்தான். மண் முழுவதும் வெற்றுடம்பில் ஒட்ட குளக்கரையின் மேல் படுத்து கண்ணிமேல் கண்வைத்து நேர்பார்த்தான். எதுவும் தவறவில்லை. நடந்தான்.

இனி நடைதான். நடை மட்டும்தான். கிழக்கிலிருந்து தெற்காகக் கால்களைத் தள்ளிப்போட்டான். கால் எலும்புகளுக்கு உடும்பு வத்தல் வலுவேற்றியிருந்தது. தேய்ந்த பாதை வழிகாட்ட இரட்டைச் சலங்கை கட்டிய கம்பை ஊனியும், விசிறியும் நடந்தான். இரண்டு பக்கத்துப் புதர்களும் மரங்களும் அவனுக்கு அத்துப்படி.

காட்டில் சமீபமாக, குழிவெட்டிப் புளியங்கன்றுகள் நட்டிருந்தது கோபமூட்டியது அவனுக்கு. “வேலையத்த... வேலை...” என்று காவியேறிய மீசை துடித்தது. “ஆண்டவனுக்குத் தெரியாதா... இந்தக் காட்டு சீவன்களுக்கு என்ன என்ன மரம்?... என்ன என்ன தழைன்னு?... புளியங்கண்ணு வைக்கறானுங்க... புளியங்கண்ணு... மசுருல...” கோபத்தில் ஒரு மரக்கன்றைக் குழியிலிருந்து பிடுங்கினான். வரவில்லை.

வலுவாய் பூமியில் ஊனிவிட்டிருந்தன வேர்கள். ஆத்திரத்தோடு கைகளை விடுவித்து, கையிலிருந்த கம்பால் மேல் நுனியில் அறுத்தான். நுனிக்கிளை துளிரோடு வீழ்ந்தது. பாதி வெற்றியும், மீதித் தோல்வியுமாய் நடந்தான். நுணாத் தழையைக் கொத்தாய்ப் பறித்து முகர்ந்தான். காட்டுவாசம் மூளைக்கேறியது. சின்ன சின்ன டூம் லைட்டுகளாய் பழுத்திருந்த நுணாப் பழத்தைக் கொத்தாய்ப் பறித்து வாயில் போட்ட மறுநிமிஷமே துப்பினான். கொட்டைகளாய் வந்து விழுந்தன.

இன்று, நேற்றல்ல அம்பது அறுபது வருசமா நடக்கின்றான் இந்த திப்பக் காட்டுல. தெக்கால போயி மேக்கால திரும்பி மீண்டும் அவன் கண்ணிக்கு சமீபிக்கும்போது விடிந்துவிட வேண்டும். இது கணக்கு? இது தப்பக்கூடாது. கடவுளே இதில் தப்பு பண்ண முடியாது. சுத்தி, சுத்தி சேத்து வைக்கும் காசில் எருமைக்கடா வெட்டுவதெல்லாம் இந்தக் கணக்கு தப்பாமலிருக்கத்தான். அதைப்போய் வேண்டான்றானுங்க... புடிக்கலை... காட்டை வுட்ருன்றானுங்க முடியுமா? கடை வச்சி தராங்களாம் கடை...

தனித்த நடையில் பழைய நினைவுகள் வரிசையிட்டன. இப்படித்தான் சித்திரை மாத இருட்டு. எதிர்பார்க்காத மழை. திமிற முடியலை. திரும்பி ஓடி தாலியறுத்தான் பாறைக்கு கீழேயே குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். வெள்ளம் புரள மழை நின்றதும், பாறை மீதேறி நின்று பார்த்தான். எங்கும் இருள் அப்பிக் கிடந்தது. இவன் டார்ச் லைட் கண்கள் அடைந்து போயிருந்தது. எதன் மீதும் ஊடுருவமுடியாமல், தூறலினூடே நடந்தான். சில்லிப்பான விடியல், அவன் கண்ணிகளில் நாலைஞ்சு காட்டுப்பன்னி. நம்ப முடியாமல் கண்களை அழுத்தித் துடைத்து பார்த்தான். அந்த இடமே துவம்சமாகி இருந்தது. அரையடி, ஒருஅடிக்கு குழி விழுந்து கிடந்தது. பன்றிகளின் மூர்க்கத்தனம் குழிகளின் ஆழத்தில் தெரிந்தது. மர திம்மைக்குப் பின்புறம் மறைந்து நிதானித்தான். ஒண்ணும் வழியில்லை. திரும்பி ஊர்ந்தான். புதருக்குப் புதர் நிமிர்ந்து பார்த்தான். பன்னிகளின் உறுமல் கானகத்தை நடுங்கச் செய்து கொண்டிருந்தது.

துணையின் அவசியம் ஒரு நிமிடம் புரிந்தது. மறுநிமிடம் மனதால் நிராகரித்தான். ஒத்தையடிப் பாதை பிடித்து ஓடிக்கொண்டிருந்தான், மூச்சிரைத்தது. அப்பொதெல்லாம் நாலு சுவரற்ற ஆலமர மைதானம்தான். சத்தம் போட்டு பேரம் பேசி மதுரையோடு துப்பாக்கி சகிதம் ஓடலான நேரம், சூரியன் சுர்ரீரென உறைக்க ஆரம்பித்து விட்டிருந்தான்.

தூரத்திலிருந்தே அடையாளம் காட்டினபோது இரண்டு தப்பித்திருந்தது. அறுந்த கண்ணிகள் இவனைக் கலவரமூட்டியது. வெடிச்சத்தத்திற்கு மீதி இரண்டும் சாய்ந்தது. கூட்டமே கறி தின்று குடித்தது. வந்தவிலைக்கு கவுண்டர்களுக்கு வாரிக் கொடுத்தான். மல்லாட்டைக் கூடைக்கு ஒரு கூறு வாரி வைத்தான். அந்த மாதிரி நாட்களின் தெம்புதான் இந்த நடை.

மேற்கால திரும்பிவிட்டிருந்தான். கம்பின்மேல் எகிறி கொத்துகிறது. நல்லது இல்லை. விரியன்... நிதானித்தான். உடம்பெல்லாம் கண்ணாடி கண்ணாடியாய்... கண்ணாடி விரியன். நாலடி பின் நகர்ந்து ஓடிப்போய் நடுமுதுகில் எட்டி உதைத்தான். பொத்தென்ற சத்தத்தோடு புதரில் விழுந்தது கேட்டது. திரும்பிப் பார்த்து நடந்தான்.

சத்தம் போட்டு ஜீவன்களைத் துரத்தினான். எந்த அரவமும் இல்லை. சலங்கைக் கோல், காற்றில் விளையாடிக்கொண்டு வந்தது. புதரின் அசைவுக்கு நின்றான். மரம் மாதிரி நின்று, புதருக்குள் கண்களால் நுழைந்தான்.

அஞ்சாறு காட்டுப் பன்னிக்குட்டிகள். நேத்து ராத்திரி அல்லது இன்னிக்கு முன்னேரம். ரத்தப் பிசுபிசுப்பு கையிலெடுத்த குட்டியில் தெரிந்தது. சகிக்கமுடியாத சத்தம் போட்டுக்கொண்டேயிருந்தது. இவைகளைக்கூட வாரிக் கொண்டு போன நாட்கள் உண்டு. அது காசிம்மாவுக்குமுன். தாய்ப் பன்னியின் மூர்க்கத்திற்குப் பயந்து சட்டென சகல ஜாக்கிரதையோடும் நடந்தான்.

ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து... ஜன்னி வந்து செத்து போனதுக்கு அப்புறம்... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக. கண்ணியைச் சமீபத்தபோது விடிந்து கொண்டிருந்தது. பரபரப்பு அடைந்து சுற்றிய கண்களுக்கு, வெறுமைதான் மிஞ்சியது. ஒண்ணுமேயில்லை. ஒரு புனுகுப்பூனைகூட இல்லை. நாலஞ்சு தடவை கண்ணியின் தூரத்திற்கு நடந்து பார்த்தான். எந்த ஜீவனின் காலடியும்கூடத் தெரியலை. வாழ்வின் முதல் தோல்வி. ஆடிப்போனான்.

கால்நீட்டி தரையில் உட்கார்ந்தான். பிருஷ்டத்தில் சுரீரென முள்குத்தியது. துடித்துப் பிடுங்கினான். காரமுள். மலைக்க மலைக்கப் பார்த்தான். காடு வெற்றிக்களிப்பில் காற்றில் கூத்தாடிக்கொண்டிருந்தது.

ஆப்பு பிடுங்கி கண்ணிகளை அவிழ்த்தான். அதன் மீதான தொடலே அருவறுப்பாய் இருந்தது. இதுவரை ஏமாற்றினதில்லை. ஒரு மொசக்குட்டியாவது மாட்டியிருக்கும். என்ன ஆச்சினே யோசிக்க முடியல.

எப்படி வெறுங்கையோட போவ? “இன்னா தாத்தா கொண்ணாந்தே...”ன்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்?

ரத்தக்கறை படிந்த பையிலிருந்து சிறுங்கண்ணி வலையெடுத்தான். எப்போதும் பையில்தான் கிடக்கும். ராத்திரி முடிஞ்சு அப்படியே பகலுக்கும். இதை இதுவரை எடுத்ததில்லை. எப்பனா... பகல்ல... மைனா,காடை, கௌதாரி குஞ்சு புடிக்கத்தான். இந்த வெறுமை, இதை எடுக்க வெச்சிருச்சி... சிறுங்கண்ணிக்குப் பறவைகளை அழைத்து, அழைத்து சோர்ந்தான். முடிச்சிலிருந்த கேவுரும், கம்பும் கண்ணிக்கருகில் கேட்பாரற்றுக் கிடந்தன. காடை கத்தல், கௌதாரிக் கத்தல் எல்லாமும் அன்று எதன் காதுக்கும் கேட்காமல் போனது.

காடு, காற்றின் சத்தத்துக்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறிகொள்ள வைத்துக்கொண்டிருந்தது.

கண் இருட்டிக்கொண்டு வந்தது. செவடன்குளத்துத் தண்ணி எத்தனை வேளை பசியாற்றும். உடும்பு வத்தல் குழம்பும், சுடுகளியும் நேத்து சாயங்காலம் சாப்பிட்டது. வெய்யில் வேறு. சகல வித்தைகளும் பிரயோகிக்கப்பட்டு தோற்றுக் கொண்டிருந்தன. கண்ணியைச் சுருட்டக்கூட மனமின்றி நடந்தான்.

காட்டோடு அவனுக்கிருந்த பந்தம், பாசம், உரிமை எல்லாம் விடப்பட்ட மாதிரி இருந்தது. காவி மீசைக்கருகில் இருந்த புன்னகை செத்துத் தொங்கிக் கொண்டிருக்க, மண்ணுக் கோனார் பம்புசெட் வழியே ரோடேறினான்.

எட்டிப்போட்ட நடை தளர்ந்திருந்தது. யாராவது ஒரு டீத்தண்ணி வாங்கித்தர மாட்டார்களா... என்றிருந்தது. வெற்று பை தோளில் தொங்க, எதிர்ப்பட்ட பழக்கதாரர்களின் ““இன்னாடா இருக்கு...”“ என்ற கேள்விகளை முற்றாக நிராகரித்து கைவிரித்துக் காட்டிப் பேச மனமின்றி நடந்தான்.

அவன் தெரு அவனைப் பழித்துக் காட்டுவது மாதிரி நின்றுகொண்டிருந்தது. விளக்குகள் ஏற்றிவைத்துக் கொண்டிருந்தார்கள். வேதக்காரர்களின் மேடையில், ஒரே பாட்டும், சத்தமுமாய் இருந்தது. இவன் வீட்டைச் சமீபித்திருந்தான்.

மருமகக்காரியும், பேரனும் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்துவிட்டிருந்தார்கள். தளர்ந்து போயிருந்தான். தூரத்திலிருந்த பாட்டு தெருவெங்கும் நிரம்பியிருந்தது. மெர்க்குரி வெளிச்சத்தில் ஆறேழு பெண்கள் பாடிக் கொண்டிருப்பது தெளிவாய்த் தெரிந்தது.

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து - இந்நாள்வரை
அன்புவைத்தா தரித்த உன் ஆண்டவரைத்
தொழுதேத்து.

எப்போதும் இல்லாமல், இப்போது அவன் மனதில் கசிந்திறங்குகிறது பாட்டு. அடிபட்ட காயங்களுக்குத் தவிட்டு ஒத்தடம் தருகிறமாதிரி, வலியெல்லாம் கரைந்து போகிறது, சீவனைப் பற்றியிழுத்துக் கொண்டிருந்தது பாட்டு. இவன் வீட்டின்முன் நிற்காமல், தாண்டி, மேடையை நோக்கி போய்க் கொண்டேயிருந்தான். கண்ணிகள் இவன் பையில் பத்திரமாக இருந்தன.
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்