முடிவு

பொன் குலேந்திரன்



'அம்மா நான் இண்டைக்கு ஸ்கூலிலை இருந்து சுணங்கித்தான் வருவன். என்னைத் தேடவேண்டாம்' தாயுக்குச் சாந்தன் சொன்னான்

'ஏன்டா ராசா அப்படி என்ன விசேசம் ஸ்கூலிலை நடக்குது? செல்லம்மா மகனை கேட்டாள்

'இண்டைக்கு எண்டை ஏ லெவல் பௌதிக பாடத்தில் பரீட்சைக்கு வரக்கூடிய கேள்விகளையும்' அதற்கான விடைகளையும் ஸ்டுடன்சுக்கு சொல்லப் போறார் எங்கடை பௌதிக மாஸ்டர் நாதன். போன வருஷம் அவர் சொன்ன கேள்விகள் பல வந்தது. நான் அந்த கிளாசை மிஸ் பண்ணக்கூடாது. பௌதிக படத்திலை நல்ல மார்க்கஸ் நான் எடுத்தால் நிட்சயம் மெடிக்கல் கல்லூரிக்கு போக எனக்கு இடம் கிடைக்கும். மற்றைய பாடங்களில் எனக்குப் பிரச்சனை இல்லை' சாந்தன் திடமாகச் சொன்னான்.

'அப்ப சரி ராசா. உனக்கு பிடித்த புட்டும், கோழி இறச்சிக் கறியும், முட்டை பொரியலும் செய்து வைக்கிறன். போகக்கை டோர்ச் லைட்டையும் கொண்டு போ. உண்டை சைக்கில் டைனமோ வேலை செய்யுதில்லை என்று உன் அப்பா சொன்னார்'

'சரி அம்மா' என்று அறைக்குள் போய் டோர்ச் லைட்டையும் நோட் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு தன் சைக்கிளில் சாந்தன் எறிப்போனான்.

சாந்தன், மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரன். மாணிக்கம் வைத்திய சாலையில் மருந்து தயாரிக்கும் கொம்பௌன்டர் வேலை செய்பவர். செல்லம்மா அரச வைத்தியசாலையில் நேர்ஸ். மருத்துவர் முதலில் மருந்துகளை பரிந்துரைக்கிறார், அதன் பின்னர் கொம்பௌன்டர் அவசியமான பொருட்கள், கலவைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார், மேலும் முழுமையான டாக்டரின் ஆலோசனையின் பேரில் நோயாளிக்கு மருந்தை வழங்குகிறார்.

மாணிக்கம் தம்பதிகளுக்கு டாக்டர்களோடு நெருங்கிய தொடர்புண்டு. இருவரும் தங்கள் மகன் வெள்ளை யுனிபோர்ம் அணிந்து, கழுத்தில் ஸ்டேதஸ்கோப் தொங்க நடந்து வரும் காட்சியை எப்போது காணலாம் எனக் கனவு கண்டனர். அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யவோ என்னவோ சாந்தன் படிப்பில் கெட்டிக்காரனாக திகழ்ந்தான். தனது தாய் மாமன் தன் மகன் சுகுமார் ஒரு டாக்டர் என்பதை அடிக்கடி பெருமையாக பலருக்கு சொல்வதை சாந்தன் .கேட்டபோது தானும் படித்து டாக்டராக வேண்டும் என் முழு மூச்சாக படித்தான். தாயும் தகப்பனும் அவனுக்குத் தேவையான புத்தகங்களை செலவு பாராது வாங்கிக் கொடுத்தார்கள். சாந்தனும் தன் அறையில் மருத்துவம்இ படிப்பு.. இலக்கியம் சம்பந்தப்பட்ட நூல்களை அழகாக பிரோவில் அடுக்கி வைத்திருந்தான்.

சாந்தன் படித்த கல்லூரி பிரின்சிபால் சிவலிங்கம், மாணிக்கத்தை சந்தித்த போது 'மாணிக்கம் எங்கடை கல்லூரில் இந்த முறை மருத்துவக் கல்லுரிக்கு தேர்வாகும் மாணவர்கள் மூவர் என்பதை ஆசிரியர்கள் எதிர்பாக்கினம். அந்த இருவரில் உம்முடைய மகன் சாந்தனும் ஒருவன். ஆனால் ஓன்று மட்டும் உமக்கு சொள்ளவிரும்புகிறன்;'

'என்ன சேர் அந்த விஷயம்' மாணிக்கம்

'எவ்வளவு கடுமையாகப் படித்தாலும் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகுவது அவ்வளவு இலேசு இல்லை. போட்டி அதிகம். அதோடு புதிதாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப் பட்ட தரப்படுத்தல் கொள்கையால் பல கெட்டிக்கார தமிழ் மாணவர்கள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். அதை உமக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்'

'அதென்ன அரசாங்கத்தின் கொள்கை சேர்'

'ஒரு காலத்தில் இந்த தரப்படுத்தல் கொள்கை இல்லாதபோது படித்து மருதுவக்கல்லூரிக்கும், போறியியல் கல்லூரிக்கும் எடுபட்டவர்கள் பெரும்பாலோர். தமிழ் மாணவர்கள். அதோடு பரீட்சைகுப்பின் பௌதிகம். இரசாயனம்இ விலங்கியல். தாவரவியல் ஆகிய பாடங்களில் பரிசோதனை பரீட்சைகள் நடப்பதுண்டு. அது இப்பொது அரசால் நிறுத்தப்பட்டு விட்டது.. காரணம் நல்ல கல்லூரிகள் தமிழ் பகுதிகளில் மிஷனேரிகள் உருவாக்கியதே. கிராமத்துக் கல்லூரிகளில் லப் வசதி குறைவு. இதை காரணம் காட்டி பின் தங்கிய பகுதிகளில் வாழும் சிங்கள மாணவர்கள் டாக்டராரக வேண்டும் என்பதால் அப் பகுதிகளில் படிக்கும் சிங்கள மாணவர்களுக்காக சிங்கள அரசியல் வாதிகள் கொண்டுவந்தது தரப் படுத்தல் சட்டம். இதனால் குறைந்த புள்ளிகள் எடுத்த கிராமப்புற சிங்கள மாணவர்கள் டாக்டர் அகும் வாய்புண்டு'

'இது சிங்களம் மட்டும் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசாங்க ஊழியர்களைப் போல் அல்லவா இருகிறது. நானும் அதனால் பாதிக்கபட்ட அரசாங்க ஊழியன் சேர்' மாணிக்கம் சொன்னான்

'சரியாகச் சொன்னீர் மாணிக்கம். அனால் சாந்தன் கெட்டிக்காரன். அவன் உமது கனவை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. நீர் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்' பிரின்சிபால் சொன்னார்.
...................

மனிதன் நினைப்பது ஓன்று கடவுள் தீர்மானிப்பது வேறோண்டு. பரீட்சை முடிவுகள் வந்தவுடன் சாந்தன் கல்லூரியில் முதல் மாணவனாக சித்திடைந்திருந்தான். ஆசரியர்கள் எல்லோரும் சாந்தன் கல்லூரியில் இருந்து நிட்சயம் மருத்துவக் கலூரிக்கு தேர்வாகுவான் என எதிர்பார்த்தனர். ஈழத்து போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அரச விமனபடை ஈவிரக்கம் பாராது குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது.

கல்லூரி பிரின்சிபால் சாந்தனை தன் ஒபீசுக்கு அழைத்தார். எதோ நல்ல செய்தி பிரின்சிபால் சொல்லப்போகிற' என்ற ஆர்வத்தில் சாந்தன் . ஒபீசுக்கு போனபோது பிரின்சிபால் சொன்னது அவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்த்து

'சாந்தன் நீ மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்து எடுகப்படவில்லை'
'என்ன சேர் சொல்லுறியல்'
'எங்கடை கல்லூரியில் இருந்து ஒருவரும் மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்து எடுக்கப்படவில்லை'
'ஏன் சேர்'
'இது அரசின் தரப்படுத்தல் கொள்கையின் பாதிப்பு. உம்மிலும்; பார்க்க குறைந்த மார்க்ஸ் எடுத்த சிங்கள கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு எடுபட்டிருக்கலாம். அடுத்த முறையும் முயற்கித்துப் பாரும்'
சாந்தன் அதை கேட்டு அதிர்ந்து போனான். ஓன்று பேசாமல் வீட்டுக்கு சென்ற போது விமான குண்டு வீச்சின் சத்தம் கேட்ட படி இருந்தது. சனங்கள் பதறி அடித்து ஓடுவதைக் கண்டான். அந்தக் கூட்டத்தோடு தன் தாயும் தகப்பனும் சேர்ந்து ஓடுவதைக் கண்டான்

'அப்பா எங்கை இப்படி ஓடுகிறீர்கள்' சாந்தன் அவர்களைப் பார்த்துப் பதறியபடி கேட்டான்.
'சாந்தன் இங்கை நிற்காதே. குண்டு உன் தலையில் எபோது விழும் என்று தெரியாது. எங்கள் வீட்டில் விழுந்து வீடு எரிகிறது. இங்கை நிற்காதே வா பாதுகாப்பான ஊருக்குப் போவோம்' என்றான் மாணிக்கம்.
'அப்பா என் புத்தகங்களுக்கு என்ன நடந்தது'?
'அதை பற்றி யோசிக்க இப்ப நேரமில்லை. அவையும் வீட்டோடு எங்கள் மத்திய நூலகத்தைப் போல் தீயுக்கு இரையாகி இருக்கலாம். பேசிக் கொண்டிருக்காமல் வா எங்களோடை' என்றார் மாணிக்கம்.
'அப்ப நான் படித்து டாக்டர்ராக முடியதா'?
'அதைப்பற்றி பிறகு யோசிப்பம்.' என்றாள் தாய்.

மாணிக்கம் குடும்பம் உயிரைக் காப்பாற்ற மக்களோடு மக்களாய் பாதுகாப்பு தேடி ஓடினார்கள்

'கொழும்பிலை சிங்களவனிடம் அடி வாங்கி கப்பலில் இங்கை சொந்த
ஊருக்கு வந்தோம் இங்கையும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?.. இந்த அடுக்குமுறையை நிருத்த வழியில்லையா. அடிமைகளாக நாம் வாழ வேண்டுமா அப்பா' விசனத்தோடு சாந்தன் கேட்டான். அவனது பேச்சில் விரக்தி தெரிந்தது

' நீ இப்ப அதிகம் பேசாமல் வரப்போகிறாயா இல்லையா'? மகனை மாணிக்கம் அதட்டினார்.
.......................

பல மாதங்கள் சென்றன. வெளிநாடுகளின் அழுத்தம் காரணாக குண்டுவீச்சு நிறுத்தப்பட்டாலும் இராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. சாந்தனோடு ஒரே வகுப்பில் படித்த இரு மாணவிகள் இராணுவத்தால் கடத்தப்பட்டனர். ஊர் மக்கள் பலர் வன்னி நோக்கி புலம் பெயர்ந்தனர்.

.ஒரு நாள் சாந்தனின் கல்லூரி பிரின்சிபால் மாணிகத்தை சந்தித்தார்.
'என்ன மாணிக்கம் இப்ப ஏன் உமது கெட்டிக்கார மகன் சாந்தன் ஸ்கூளுக்கு வருவதில்லை'? பிரின்சிபால் மாணிக்கத்தை கேட்டார்

'அதை ஏன் சேர் கேட்குறீர்கள். சாந்தன் மேலும் படிப்பை தொடர விருபவில்லை. சாந்தனும்அவனோடு படித்த மூன்று நண்பர்களும் இனி படித்து பிரயோசனம் இல்லை. எமது தமிழ் இனத்தைப் பாதுகாக்க வேண்டும். எமது உரிமைகளைப் பெற வேண்டும். பேனாவல்ல துவக்கு தான் தனக்கு என்று முடிவு செய்து தமிழர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எங்களுக்குச் சொல்லாமல் தன்னோடு படித்த நண்பர்களோடு சேர்ந்து விட்டான் சேர். அவன் முடிவு சரியென நான் நினைக்கிறன்' என்றார் அமைதியாக.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்