பிராயச் சித்தம்
அன்புசிவா
‘கிறீச்’
என கேட் திறக்கும் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து
வெளியே வந்தார் முனியாண்டி. எழுபது வயதைக் கடந்த மெலிந்த தேகம். இந்த
வயதிலும் சுறுசுறுப்பாக நடமாடுபவர். ஏம்மா இவ்வளவு நேரம் என்று
கேட்டுக் கொண்டே அவள் கையிலிருந்த இரு பைகளையும் வாங்கி உள்ளே
வைத்தார்.
இல்லப்பா, பஸ் விட்டிறங்கி
அப்படியே கடைத்தெருவுக்கும் போயிட்டு வந்தேனா. அதான் லேட் ஆயிடுச்சு
என்றபடியே அம்மாவைத் தேடினாள்.
என்ன சத்தம்? என்றபடியே
பின்பக்கமிருந்து உள்ளே வந்த மயிலம்மாளுக்கு அவளைக்கண்டதும் ஒரே
சந்தோஷம் ஏம்மா? மாப்பிளை வரலை?
தம்பி நல்லா படிக்குதா?
எனறபடியே வந்தவளுக்கு மோரைக் கொடுத்தாள். வெயிலுக்கு குளிர்ச்சியாக
இருக்க மின்விசிறியைப் போட்டாள்.
அவர் ஆபீஸ் வேலையா சென்னை போயிருக்கார். அதனால வரலை. அருண் நல்லா
படிக்கிறான். அடுத்தவாரம் பரிட்சை முடிஞ்சு லீவுக்கு வருவான்மா
என்றபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் மாலதி.
இங்க இருக்கறதே நாங்க ரெண்டுபேருதானே! எதுக்குமா
இவ்வளவு சாமான், காய்கறி எல்லாம்?
இத்தனையும் வாங்கி சுமந்துட்டு வந்து கஷ்டப்படனுமா நீ?
எனக்கேட்டாள் மயிலம்மாள்.
இதிலென்னம்மா கஷ்டம். வீட்டுக்கு வரவழியில்
வித்திட்டிருந்தாங்க. இப்பவே வாங்கிட்டேன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு
நீங்க கடைக்கு ஏதும் போக வேணாமே, அத நினைச்சு
வாங்கிட்டு வந்தேன். உங்களுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா?
என்று கேட்டபடியே சாமான்களை அலமாரியில் அடுக்கினாள்.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளைப் பார்த்தபடி நின்றாள் மயிலம்மாள்.
அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி. மதிய இடைவேளை
முடிந்து, அடுத்து பனிரெண்டாம் வகுப்பிற்கான
வேதியல் பாடக்குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள் மாலதி. மொபைல்
போன் ஒலிக்கவே யாராக இருக்கும் என்று பார்த்தவள் கணவன் ராகவன் பெயர்
வரவே, இந்த நேரத்தில் கூப்பிட மாட்டாரே என்ற
யோசனையுடன் எடுத்தவள் பேசியபடியே மயங்கி விழுந்தாள்.
சேலத்தில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனை. ஐம்பதுக்கு மேல்
படுக்கை நோயாளிகளைப் பரிசோதிப்பதும்,
புதிதாக வருபவர்களை கவனிப்பதுமாகப் பரபரப்பாக
இயங்கிக்கொண்டிருந்தது.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலில் போடப்பட்டிருந்த சேரில் அழுது
வீங்கிய கண்களுடன்,
மாலதியும், நல்ல சேதியாக
டாக்டர் ஏதும் சொல்லமாட்டாரா? என்ற கவலையில்
ராகவனும் உட்கார்ந்திருந்தனர்.
டாக்டர் சொன்ன
24 மணி நேர கெடு முடிய தவிப்புடன் காத்திருந்தனர்.
அப்போதுதான் அருணின் விடுதி நண்பர்கள் அவர்கள் அருகில் வரவே,
துள்ளி எழுந்தபடி ‘என்னப்பா
ஆச்சு? லீவுக்கு வீட்டுக்கு வந்துடுவேன்னு
சொன்னவன், விஷத்தைக் குடிச்சிட்டு,
ஆஸ்பிட்டல்ல சீரியசா இருக்கான்னு தகவல் வந்தா
எங்களுக்கு எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு
அவனுக்கு இங்கு என்ன பிரச்சனை? ப்ளீஸ்
சொல்லுங்கப்பா என்று கெஞ்சினார் இராகவன்.
அதில் ஒருவன்,
‘எங்களுக்கும் புரியவே இல்ல அங்கிள். அருணுக்கு
எந்தப் பிரச்சனையும் இருக்கற மாதிரி எங்களுக்கும் தெரியல. எல்லாம்
முடிஞ்சுது. லீவு விட்டாச்சு. இனி ஊருக்குக் கிளம்பனும்னு சொன்னவன்
ஏன் இப்படி செஞ்சான்னே புரியல. ஹாஸ்டல் கிரவுண்டுல
விழுந்துகிடக்கறான்னு பக்கத்து ரூம் பஸங்க சொல்லி தான் விஷயம்
தெரிந்தது. பதறிப்போய் வார்டன்கிட்ட விஷயத்தை சொல்லி இங்க அட்மிட்
பண்ணிட்டுத்தான் உங்ககிட்ட விஷயத்த சொன்னோம். இப்ப கூட இவன் கிளாஸ்
மெட்டஸ் யாருக்கும் ஏதாவது விஷயம் தெரியுமான்னு விசாரிக்கத்தான் வெளிய
போயிருந்தோம். எனச் சொல்லச் சொல்லவே,
ஐ.சி.யு-விலிருந்த வந்த டாக்டர் ஒருவர் ‘இங்க
அருண்கூட வந்தவங்க யாரு? எனக் கேட்க எல்லோரும்
அங்கு ஓடினார்கள்.
பையன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டான். இப்பதான் மயக்கம் தெளிந்து
கண் முழிச்சிருக்கான். யாராவது ரெண்டுபேர் மட்டும் அவனைத் தொந்தரவு
பண்ணாம போய் பார்த்துட்டு வாங்க என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
ராகவனும் அவர் கையைப் பிடித்தபடி மாலதியும் உள்ளே சென்றனர்.
உடல்நிலை சற்று சீரடையவே,
அருணை வார்டுக்கு மாற்றினர்.
ஒரு சங்கடமான சூழ்நிலையை இராகவன் தான் கலைத்தார். அருண்,
எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க உனக்காகவே நாங்க
ரெண்டு பேர் இருக்கோம். அப்படி இருக்க ஏன் இந்த மாதிரி செஞ்சே?
இப்பவாவது எங்ககிட்ட சொல்லு’
என்று கேட்டார்.
மாலதி அவனது தலைமுடியைக் கோதியபடியே கண்ணில் பொங்கும் நீரோடு அருகில்
உட்கார்ந்திருந்தாள்.
அப்பேதுதான் அருண் அந்த வருடம் புதிதாகச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணைக்
காதலித்ததையும்,
ஜாதகப்படி அவளுக்கு உடனே கல்யாணம் செய்யணும்னு அவளுடைய
பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையும் சொல்லத் தொடங்கினான்.
ரெண்டு பேரும் மெஜர்ங்கறதால கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு
சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணி,
காலேஜ் பிரண்ட்ஸ் சிலரோட கோயிலுக்குப் போனோம். ஆனால்
அங்கிருந்தவங்க, நாலஞ்சு பசங்க ஒரு பொண்ணைக்
கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு சொல்லி எங்களைப் பிடிச்சி வெச்சுட்டு
கல்ப்பனா வீட்டுக்குப் போன் பண்ணிட்டாங்க. பிரச்சனை பெரிசாயிடுமோன்னு
எங்ககூட வந்தவங்களும் நழுவிட்டாங்க. அங்க வந்த அவளோட வீட்டைச்
சோந்தவங்களும் என்ன எதுன்னு கூட விசாரிக்காம என்னையும் அவளையும் போட்டு
அடிச்சிட்டாங்க. நானும் ஒவ்வவொருத்தர் கால்லயும் விழுந்து கெஞ்சியும்
பாhத்தேன். அங்க என்ன நடந்தது?
நான் என்ன சொல்ல வந்தேன்னும் கேட்கக் கூட யாருமில்லை.
அவள் எனக்குக் கிடைக்கலைங்கற வருத்தமும்,
உங்க முகத்தை எப்படிப் பார்க்கப் போகிறேங்கிற பயமும்
தான் என்ன இப்படி பண்ண வெச்சது. என்ன மன்னிச்சிடுங்கம்மா. இனிமே
இதுமாதிரி பண்ணமாட்டேம்பா என்று அழுகைக்கிடையே சொல்லி முடித்தான்
அருண்.
ஆயிரம் இடி மின்னல் தலையில் இறங்கியதைப் போன்று சடாரென திரும்பிய மாலதி,
25 வருடங்களுக்கு முன்னாடி நான் அவங்களுக்கு கொடுத்த
தண்டனையை எனக்கு இப்பத் தரப்பாத்தியே அருண் என்று குமுறிக்குமுறி
அழத்தொடங்கினாள்.
கள்ளிப்பட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அங்கே தான்
மாலதி பிறந்தது வளர்ந்தது எல்லாமே. அப்போதுது தான் பன்னிரெண்டாம்
வகுப்பு முடிந்து,
அடுத்து என்ன செய்வது? என்ற
முடிவெடுக்காமல் வீட்டில் இருந்தவளிடம் மணி அறிமுகமானான்.
மாலதி ரெண்டு வருஷமா உன்னைக் கவனிச்சுட்டேதான் இருக்கேன். உன்னோட அழகு,
அமைதி, மத்தவங்ககிட்ட
தன்மையாப் பழகறது இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. கல்யாணம்னு
பண்ணிட்டா அது உன்னைத்தான். என்னை மறந்துடாதே’
என்று பேசி படிப்படியாக அவள் மனதில் இடம்பிடித்தான்.
ஊரார் பேச்சுக்கு முதலில் பயந்தாலும்,
தங்களைப் பிரிந்து சென்ற தாயும்,
தனக்கு அடுத்த துணை தேடுவதிலேயே குறியாயிருந்த
தந்தையும் அதிகம் விபரம் இல்லாத தந்தையைப் பெற்றவர்களும் இருந்ததால்
மணியின் பேச்சுக்கு மாலதி தன் மனதைப் பறிகொடுத்தாள்.
சரியாக
18 வயது நிரம்பிய ஒரே வாரத்தில் அவனோடு ஒடிப்போனாள்.
அதன் பின் அவர்களை சட்டப்படி யாராலும் பிரிக்கமுடியாது என்ற எண்ணம்
அவளுக்கு. காவல் நிலையத்தில் இருந்து தகவல் வரவே இரு வீட்டினரும்
பதறியடித்து வந்தார்கள். வீட்டார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
பிடிவாதமாக மணியோடு அவன் வீட்டிற்கு சென்று வாழத்தாடங்கினாள். அவன்
வீட்டார் முதலில் தயங்கினாலும் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க
வேண்டுமே என்று அவளை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள்.
எண்ணி மூன்றே மாதங்கள் மணியுடைய ஒவ்வொரு செய்கையும்,
மாற்றங்களும் அவளுக்குப் புதியதாகவும்,
அதிர்ச்சியாகவும் இருந்தன. எந்த ஒரு வேலைக்கும்
சரியாகப் போகாமல், நண்பர்களுடன் சேர்ந்து
குடியும், புகையுமாக வீட்டுக்கு வந்தான் மணி.
மாலதி முதலில் பயந்தாலும்,
பினனர் எதிர்த்துக் கேள்வி கேட்ட,
அவளுக்கு அடி உதைதான். தடுக்க வந்த பெற்றோர்களையும்
வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தான். அதையெல்லாம் பொறுக்க முடியாமல்
மாலதி பிறந்த வீட்டிற்கே திரும்பினாள்.
ஒரு வாரத்திற்கு மேல் மணியால் தனியாக இருக்க முடியவில்லை. எப்படியோ
சமாதானம் சொல்லி அவளை தன் வீட்டிற்கு அழைத்துப் போக வந்தான். ஆனால்
அவளோ பிடிவாதமாக வரவே முடியாது என்று சொல்லிவிட்டாள். அதுவுமில்லாமல்
அவளுடைய அப்பா,
தாத்தா, பாட்டி என எல்லேலார்
காலிலும் விழுந்து கெஞ்சிப்பார்த்தான். அவர்களும் கைவிரிக்கவே,
உடைந்துபோனான். மறுநாள் ஊருக்கு வெளியே வாய்க்கால்
ஓரம் விஷம் குடித்து இறந்த நிலையில் மணியின் சடலம் மட்டுமே கிடைத்தது.
எத்தனை கதறி என்ன பண்ணுவது? 19 வயது
முடியறதுக்குள்ளயே மாலதி இளம் விதவையானாள்”
என்று சொல்லி முடித்தான் ராகவன்.
அதிர்ச்சியோடு அருண் பார்க்க பின்னர் நடந்ததை மாலதி தொடாந்தாள்.
என்னாலே,
என்னோட பிடிவாதத்தினாலே ஒரு உயிர் பறிபோச்சுங்கற குற்ற
உணர்வு இன்னைக்கு வரைக்கும் என் மனசுல இருந்துக்கிட்டே தான் இருக்கு.
அன்னிக்கு நடந்த சம்பவத்தால என்னால 2 வருஷம்
அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியல. வெளியில எங்கும் போகாம,
யாரோடையும் பேசாம, சந்தோஷமா
சிரிக்காம வீடே கதின்னு அடைஞ்சு கிடந்தேன். அதுக்கப்புறம் என்
பெரியப்பா தான் கொஞ்சம் கொஞ்சமா ஆறுதல் சொல்லி என்னை டீச்சர்
டிரெயினிங் படிக்க வெச்சு வேலையும் வாங்கித் தந்தார். அதுக்கப்புறம்
கரஸ்ல படிச்சு படிப்படியா இந்த நிலைமைக்கு வந்தேன். அப்போதான் வேலை
விஷயமா ஊருக்கு வந்த உங்கப்பாவை சந்தித்தேன். முதல் தடவையிலேயே
அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தது. ஆனால்,
நான்தான் என் நிலைமையைச் சொல்லி விலகியே இருந்தேன். அப்புறம் அவர்
இரண்டுபேர் வீட்டுலயும் பேசி, சம்மதம் வாங்கி
ஊரறிய எங்க கல்யாணம் நடந்தது. அதுக்குப் பின்னாடி தான் வாழ்ககையில்
ஒரு பிடிப்பு வந்தது. எங்களுக்குன்னு வாரிசா நீயும் பிறந்தே.
இதுல இன்னொரு கொடுமை என்னான்னா,
அவங்க பையன் செத்ததுக்கு வருத்பட்டு,
கதறி அழுதாங்களே தவிர,
அதுக்குக் காரணம் நான்தான்னு தெரிஞ்சும், என்னை
ஒரு வார்த்தைக்கூடத் திட்டவேயில்லை. எங்க பையனோட விதி முடிஞ்சது. நீ
என்னமா பண்ணுவ. உன்னோட இடத்துல யாரா இருந்தாலும்,
இப்படித்தான் நடந்திருப்பாங்க. உனக்கு நாங்க
இருக்கோம். நீ தைரியமா இருன்னு என்னை சமாதானப் படுத்தினாங்க.
அதுக்குப் பிராயச்சித்தமாதான், இன்னைக்கு
வரைக்கும் என்னை பெத்தவங்களுக்கும் ஒரு படி மேலேயே,
அவங்களை கவனிச்சிட்டு வரேன். பையன் உயிரோட
இல்லையேங்கிற குறை தெரியாம பார்த்துக்கறேன் என்றாள் மாலதி.
நீ ஏன் வாரா வாரம் ஊருக்குப் போறேன்னு இப்ப புரிஞ்சதும்மா என்றான்
அருண்.
இதெல்லாம் ஏன் உங்கிட்ட இப்ப சொல்றோம்னா,
காதலிக்கவோ, கல்யாணம்
பண்ணிக்கவோ உனக்கு இப்ப பக்குவம் இல்லை. இந்த வயசு உனக்கு இப்ப படிக்க
வேண்டிய வயசு. அதுவும் கவனத்தை எதிலேயும் சிதற விடாம,
நல்லா படிச்சு நிறைய ஆராய்ச்சி பண்ணி பல புதிய
கண்டுபிடிப்புகளை உருவாக்கணும். அதுக்காகத் தான் உனக்குப் பிடிச்ச
என்ஜினியரிங் படிப்பை எடுக்கச் சொன்னோம். அத விட்டுட்டு இந்த மாதிரி
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாமா கோழை மாதிரி உயிரை விடறது?
இன்னொண்ணும் புரிஞ்சிக்கோ அருண். எல்லா பெற்றோரும் காதலை
எதிர்க்கிறவங்க இல்ல. நீங்க உங்க கடமையை சரிவர செஞ்சு உங்க காதல்ல
உறுதியா இருந்தாலே,
எந்த ஒரு தடையையும் மீறி வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.
அப்பாவும்,
அம்மாவும் மாறி மாறி பேச அவர்களது முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு தான் அவன் முகத்தில் ஒரு
தெளிவும் நம்பிக்கையும் வந்தது.
பயப்படாத அருண். கல்பனா வீட்டில் நாங்க போய் பேசறோம். அவசரப்பட்டு
அவள் வாழ்க்கையையும் வீணாக்கக் கூடாது. நாங்க பாத்துக்கறோம். என
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே,
அதுக்கு அவசியமே இல்லைங்க’
என்ற படியே, உள்ளே வந்தனர் கல்பனாவின்
பெற்றோர். முதல்ல கோவில்ல இவங்களை ஒண்ணா பார்த்த ஆத்திரத்திலேதான்
இவளை அடிச்சி இழுத்திட்டுப் போனோம். ஆனா வீட்டுக்குப் போய்,
இவ ஒவ்வொண்ணா பொறுமையா சொல்லச் சொல்லதான் உண்மை
புரிஞ்சது. அந்த சமயத்துல தான் தம்பி இப்படி பண்ணிருச்சுன்னு தகவல்
தெரிய இங்க ஓடி வந்தோம். எல்லோரும் எங்கள மன்னிச்சுடுங்க என்றபடி
கண்ணில் நீரோடு அவர்கள் கை கூப்பிய படி நிற்க,
மாலதியும் ராகவனும் பதறிப்போய்த் தடுத்தனர்.
என்னங்க,
மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம்
பேசிக்கிட்டு, சின்னப்பசங்க ஏதோ பக்குவமில்லாம
விளையாட்டுத்தனமா பண்ணிட்டாங்க. அதை பேசி சரிபண்ணாம நாமளும் ஏன்
கண்ணீர் விடணும்? என்றார் ராகவன்.
‘அருண், கல்பனா’
ரெண்டுபேரும் இனி நல்லா படிங்க. நல்ல நண்பர்களாக
படிப்புல ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருங்க. நல்ல
வேலைக்குப் போகணும். அதுக்கப்புறம் உங்க காதல்ல உறுதியிருந்தா உங்க
கல்யாணத்தை ஊரறிய சிறப்பா நடத்த நாங்க ரெடி. நீங்க என்ன சொல்றீங்க?
என்று கல்பனாவின் அப்பா கேட்க,
இருவருமே சந்தோஷத்துடன் ‘சம்மதம்’
என தலையாட்டினர்.
இது கண்டிப்பாக நடக்குமென தொலைவிலுள்ள ஆலய மணியும் ஒலித்தது.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|