நாங்கள்

தேவமுகுந்தன்


னக்குக் கோபம் கோபமாய் வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாகவிருந்தேன். இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு றமணன், சுரேஸ், ஜெகன், நிக்ஸன், அமலன்....எனப் பல நண்பர்களை நேரடியாகச் சந்திக்கவென சந்தோசத்துடன் கொள்ளுப்பிட்டியில் இருக்கும் இந்தக் ஹொட்டலுக்கு வந்த எனக்கு, இவர்களை ஏன் சந்தித்தேன் என்றாகி விட்டது.

அமலன் தொடக்கிவிட மற்றவர்கள் கேட்டதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.

'ரகுவுக்கு சொந்தக்காரங்கள் கனபேர் வெளிநாட்டிலை இருக்கிறாங்களாம். பிறகு நாங்கள் ஏன் அவனுக்கு உதவி செய்வான்?'

'ரகுவிற்கு செய்தால் வெளியாலை தெரியவராது, ஸ்கூலுக்கு ஏதாவது உதவி செய்தால் எல்லோருக்கும் தெரியவரும்' றமணன் ஒத்துப் பாடினான்.

'அதுதானே நாங்கள் ஏன் ரகுவுக்கு உதவி செய்யவேணும். சொந்தக்காரர் செய்யலாம்தானே?' வேறு யாரோ சொன்னார்கள்.

ஹொட்டலின் மொட்டைமாடியிலிருந்த அந்த மண்டபத்தில் மங்கிய வெளிச்சம்; பரவியிருந்தது. இதமான கடற்காற்று எம்மை வருடிச் சென்றது. எமது மேசையிலிருந்த மதுப்போத்தல்கள் காலியாகிக் கொண்டிருந்தன. ஊழியன் ஒருவன் அடிக்கடி எமது மேசைக்கு வந்து இறைச்சிப் பொரியல், மிக்ஸர், மீன் பொரியல், நண்டு, இறால், கணவாய்.... எனப்பலவற்றை வைத்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் பலரின் கதைகளில் நிதானம் குறையத் தொடங்கியிருந்தது.

லண்டனிலிருந்து றமணனுடன் நால்வரும் கனடாவிலிருந்து அமலனுடன் ஐவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து அன்ரனும் து
ஷியும் வந்திருந்தார்கள். இன்னும் பலர் பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், சிங்கப்பூர், அமெரிக்கா....எனப் பலர் பூமிப் பந்தின் பலபாகங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.

எனக்கு பல்கலைக்கழக, அலுவலக நண்பர்கள் பலரின் போலிநட்பு வெறுத்துப் போய்விட பாடசாலைக்கால பழைய நட்புத்தான் எதிர்பார்ப்பற்ற உண்மையான நட்பென எங்கோ வாசித்தது நினைவில் வர பாடசாலைக் கால நண்பர்களை தேடினேன். பலர் தங்கள் பெயர்களை தாங்கள் வாழும் நாட்டினரின் உச்சரிப்புக்கு ஏற்றபடி மாற்றியிருந்தனர். சிலர் பெயர்களைச் சுருக்கியிருந்தனர். ஊரில் இருந்த தெரிந்தவர்கள், முகநூல் என மாதக் கணக்காய் தேடி முதலில் றமணனை முகநூலில் தேடிப்பிடித்தேன். சண்முகலிங்கம் றமணன் என்ற அவனது முழுப்பெயரை சண் றாம் என மாற்றிருந்தான். ஆனால் அவனது முகம் மாறாதிருந்தது. உள்பெட்டியில் நான்; எழுத றமணன் தொடர்பு கொண்டிருந்தான்.

நானும் றமணனும் சேர்ந்து எமது நண்பர்கள் பலரைத் தேடினோம். ஆறாம் வகுப்பில் பாடசாலையில் இருந்து விலகிப் குடும்பத்துடன் கொழும்புக்குப்போன சுரேஸ் அவுஸ்ரேலியாவில் பொறியியலளானாய் இருந்தான். இயக்கத்தில் நீதிபதியாக இருந்த ஜெகன் பிரான்ஸில் ஹொட்டல் ஒன்றில் சமையல்காரனாயிருந்தான். இந்தியப்படை யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்தவேளையில் பிடிபட்ட சதீசன் கனடாவில் கணக்காளனாயிருந்தான். கோட்டைப் பிரச்சினை தொடங்கிய நேரம் பாடசாலையில் இருந்து விலகி கொழும்புக்குப்போன பிரதீபன் வெள்ளவத்தையில் நான்; வசிக்கின்ற ஒழுங்கையில் உள்ள தொடர்மாடியொன்றில் வசிப்பது ஆச்சரியமாகவிருந்தது. அவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணனாயிருக்கிறான். பாடசாலையில் படிக்கும் காலத்தில் மிக உயர்ந்த, மெல்லிய மாணவனாக இருந்த அவனின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் தென்படவில்லை. மிக அருகில் வாழ்ந்தும் இவ்வளவு காலம் அவனைச் சந்திக்கவில்லையே என்பது வருத்தமாகவிருந்தது. எங்களுடன்; படித்து இயக்கத்துக்குப்போன பலர் மாவீரர்களாகியிருந்தனர். போராளியாகவிருந்த ரகு இறுதிப்போரில் காiலான்றை இழந்து கிளிநொச்சியில் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் வேலை செய்கிறான்.

கொழும்பில் ஒன்றுகூடி பின்பு வாகனமொன்றில் எல்லோருமாக யாழ்ப்பாணத்திலுள்ள எங்களின் பாடசாலைக்குச் செல்வதும் பின்பு எமக்குக் கற்பித்த ஆசிரியர்களைச் சந்திப்பதுவும் எங்களின் திட்டமாக இருந்தது. இதற்காகவே வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் பலர் வந்திருந்தனர். ஊரில் இருப்பவர்கள் அங்கு எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

...

எங்களின் தலைமுடிகள் அப்போது கறுத்திருந்தன. நாங்கள் வெள்ளைச் சேட்டும் நீல அரைக் காற்சட்டையும் எனச் சீருடைகள் அணிந்திருந்தோம். அன்ரன், ரகு, அமலன், துஷி...என எங்கள் வகுப்பிலிருந்த பெரும்பாலானவர்களிடம் சைக்கிள்கள் இருந்தன. சிலர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கற்றனர்.

வகுப்பறையில் கதைத்தவர்களின் பெயர்களை மொனிட்டர் கரும்பலகையில் எழுதி அவர்களை வகுப்புக்கு வெளியில் நிற்க வைத்தான். வகுப்பறைகளைச் சுற்றி அடிக்கொரு தரம் வலம்வரும் பாதர் விமலேந்திரனின் பிரம்பு எங்களின் பின்பக்கங்களை தினமும் பதம்பார்த்தது. பாதரின் முகம் எப்போதும் இறுக்கமாயிருக்கும். அவரைக் காணும்போதே பலருக்கு நடுக்கம் ஏற்படும். பாதருக்கு அடிப்பது ஒரு விருப்பத்திற்குரிய செயலாக இருந்திருக்க வேண்டும். அவர் எங்களை அடிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருந்தன. சைக்கிள்களை ஒழுங்காக வரிசையில் நிறுத்தாவிட்டால், அவற்றினைப் பூட்டி வைக்காவிட்டால், தவணைப் பரீட்சையில் பாடங்களுக்கு 50 புள்ளிகளுக்கு குறைவாக எடுத்தால், பாடசாலைக்கு பிந்தி வந்தால், பாடசாலைக்கு வராது விட்டு பெற்றோரின் கடிதம் கொண்டு வராது விட்டால், ஏதாவது தவறிழைத்ததென ஆசிரியர்கள் மாணவர்களை அவரிடம் அனுப்பினால்.....

அல்போன்ஸ் சேர் எங்களுக்கு கணிதம் கற்பித்தார். அதுவரை வட்டங்கள், முக்கோணிகள், இணைகரங்கள் என எங்களைப் பயங்காட்டிக் கொண்டிருந்த கேத்திர கணிதம,; அல்போன்ஸ் சேர் கற்பித்தபோது மகுடிக்கு அடங்கிய பாம்புபோல் எங்களுக்குக் கட்டுப்பட்டது. ஆங்கில எழுத்தக்களில் பயங்காட்டிக் கொண்டிருந்த சமன்பாடுகளை எங்களால் இலகுவாகத் தீர்த்து விடை காண முடிந்தது. அதுவரை சிக்கலாகத் தோன்றிய மடக்கைக் கணக்குகள் அல்போன்ஸ் சேர் கற்பித்ததன் பின்னர் எங்களுக்கு மடக்கமாயின.

ரகு கணிதத்தில் புலியாயிருந்தான். அல்போன்ஸ் சேர் தரும் கணக்குகளையெல்லாம் அவன் விரைவாகச் செய்தான். சேர் பெரிய கரும்பலகை முழுதும் எழுதி விளங்கப்படுத்திய கணக்குகளை ரகு தனது சதுர றூள் கொப்பியில் நான்கு வரிகளில் செய்து

'சேர் இப்படிச் செய்யலாமா? ' என அடிக்கடி கேட்டான். அல்போன்ஸ் சேர் அவனைப் பாராட்டி

'ரகு நீ அதை செய்துகாட்டடா பார்ப்பம்' என்று அவனைக் கொண்டு கரும்பலகையில் செய்வித்துப் பாராட்டினார்.

எங்களுக்கு சித்திரம் கற்பித்த வயதான, வேட்டி-நஷனல் அணியும் அந்தோணிப்பிள்ளை சேர் ஓய்வு பெற்றுச் சென்றார். அதன் பின்னர் சித்திரம் கற்பிக்க புதிதாக வந்த ஜஸ்மின் மிஸ்க்கு எங்களிலும் பார்க்க கொஞ்ச வயதுதான் அதிகமாயிருந்து. அவர் அழகாய் இருந்தார். கர்நாடக சங்கீதம் கற்று வந்த சுரேஸ், றொபேட்... எனச்; சிலர் அந்த வகுப்புக்குச் செல்லாமல் எங்களுடனேயே இருந்து சித்திரம் வரைந்தனர். தினமும் இரண்டொருவர் கர்நாடக சங்கீதத்த்pலிருந்து சித்திரத்திற்கு மாறிவரத் தொடங்கினர். இறுதியாக கர்நாடக வகுப்பில் இரண்டொருவரே எஞ்சியிருந்தனர். வயதான கர்நாடக சங்கீத ஆசிரியை சங்கீதபூஷணம் திருமதி எஸ்.பரமநாதன் ஒன்றும் புரியாமல்; சங்கீத வகுப்பில் ஏன் ஆட்கள் குறைகிறதென அவரது வகுப்பில் இறுதியாக எஞ்சியிருந்தவர்களிடம் அடிக்கடி கேட்க ஆரம்பித்தார்.

குணரட்ணம் சேர் எங்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தார். அவருக்கு பாடசாலையின் முகாமைத்துவம் சம்பந்தமான வேலைகள் அதிகம். பாதர் விமலேந்திரன் அலுவலகத்தில் இல்லாத நாட்களில் அவர்தான் பகுதித் தலைவர். சிலநாட்களில் வகுப்புக்கு பிந்தி வந்தார். சில நாட்கள் வகுப்புக்கு வராதும் விட்டார். வகுப்புக்கு வரும் நாட்களில் அவரைப் படிப்பிக்கவிடாமல் நாங்கள் அவருக்கு கதை கொடுத்து அவர் சுவைபடக்கூறும் ஆக்கிமீடிஸ் அடர்த்தியைக் கண்டு பிடித்து வீதியில் நிர்வாணமாக ஓடிய கதை, பறக்கும் தட்டு மனிதர்கள் பூமிக்கு வந்த கதை...... எனப் பல கதைகளை இரசித்தோம். தலை மொட்டையரான அவர் கரும்பலகையில் ஒளிக்கதிர்களை வரைந்து ஒளித்தெறிப்பு விதிகளைக் விளக்கிக் கொண்டிரந்தபோது, றொபேட், 'சேர் உங்கடை தலையிலும் ஒளிபட்டால் தெறிக்குமா' எனக் கேட்டான். அது அவருக்கு கேட்கவில்லையோ அல்லது கேட்டுத்தான் கேட்காதமாதிரி இருந்தாரோ தெரியவில்லை. அவர் தொடர்ந்து கற்பித்தக் கொண்டு போனார்.

வர்த்தகமும் கணக்கியலும் சுந்தா சேர் படிப்பித்தார். நாங்கள் முதலாம,; இரண்டாம் வகுப்புக்கள் படித்த காலங்களில் எங்கள் பாடசாலை கிரிக்கெட், உதைபந்து அணிகளில் தலைவராக விளையாடிய அவர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பட்டதாரியாகி எங்களுக்கு ஆசிரியராகியிருந்தார். அவர் தனியுடைமை, பங்குடைமை, இரட்டைப் பதிவு, ஐந்தொகை... என்று பாடத்தை நன்றாகப் படிப்பித்தார்தான். ஆனால் தேவையில்லாமல் மாணவரில் வரிந்து பிழைகளைக் கண்டுபிடித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு கன்னம் கன்னமாய் அடித்தபடியிருந்தார். அவரிடம் மாட்டுப்பட்டு அடிவாங்கக் கூடாதென நாங்கள் அவரின் பாடவேளைகளில் வெகுஅமைதியாக வகுப்பில் இருந்தோம். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை பெரிய பெரிய உளவியல் கொள்கைகளையெல்லாம் கற்றவர்களுக்கே புரிந்து கொள்ளவது கடினமாக இருக்கும்..

காலச்சக்கரம் வேகமாய்ச் சுழன்றது. கல்லூரிக்கு அண்மையில் கொய்யாத்தோட்டத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்கியளிக்ப்பட்டது. பின்பு குருநகர் ஐந்து மாடியில் முகாம் அமைக்கப்பட்டது. பின்பு அது மூடப்பட்டது. யாழ்ப்பாணக்கோட்டையிலும் மண்டைதீவிலும் இராணுவம் முடக்கப்பட்டது. அவ்விடங்களில் இருந்து ஏவப்பட்ட செல்கள் நகரெங்கும் விழுந்து தெறித்தன. கல்லூரிக்கு அருகில் வசித்த சனங்கள் அகதிகளாக வந்து எமது கல்லூரியின்; சில வகுப்பறைகளில் தங்கினர். சில செல்கள் கல்லூரி வளாகத்துள்ளும் விழத் தொடங்கின.

விமானப்படை நகரெங்கும் குண்டு மழை பொழிந்தது. இராணுவம் தரையிறங்கக் கூடுமென்பதால் வெளிகள், மைதானங்கள் எங்கனும் மரக்குற்றிகள் நாட்டப்பட்டன. கடற்கரைப் பக்கமிருந்து குபுகுபுவென குளிர்மையான காற்று வீச, பச்சைப் பசேலென புற்கள் வளர்ந்திருந்த , எங்களின் அழகான விளையாட்டு மைதானத்திலும் மரக்குற்றிகள் நாட்டப்பட்டன. மைதானம் ஒரு அழிவடைந்த காடுபோலக் காட்சியளித்து எம்மைக் கவலையிலாத்தியது. பல விளையாட்டுக்களில் சாதனைகள் நிகழ்த்தப்பட்ட மைதானம் எம் கண்முன்னே அழிவடைந்தது.

எங்களுடன் படித்த ரகுவின் வீட்டில் நள்ளிரவில் செல் விழுந்து அவனது அக்கா செத்துப் போனார். அவனின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் காயம் ஏற்பட்டிருந்தது. எங்கள் வகுப்பாசிரியர் எங்களை செத்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார். எங்களின் வகுப்பு சார்பிலே மலர்வளையம் வைத்தோம். கொண்வென்டில் படித்த ரகுவின் அக்காவின் உடல் சிதறியிருந்தால் பெட்டி மூடப்பட்டே இருந்தது. செத்த வீட்டில் ரகு அறிவில்லாமல் விழுந்து கிடந்தான். அவனது வீட்டின் பெரும் பகுதி உடைந்து போயிருந்தது.

அதன் பிறகு ரகுவில்; முந்தைய கலகலப்பு இல்லாது போயிருந்தது. அதிகம் யோசித்தபடியிருந்தான். அல்போன்ஸ் சேர் போட்ட இலகுவான கணக்குகளுக்கே விடையளிக்கவியலாது அவன் தடுமாறினான்
.

காலைவேளையில் பிரார்த்தனை நடக்கும் கல்லூரியின் அழகான சிற்றாலயத்தின் மீதும் செல் விழுந்து சிதறியது. அன்று பிரார்த்தனை சற்று முன்னதாகவே முடிவடைந்திருந்ததால் ஆயிரக் கணக்கான உயிர்கள் தப்பின.

பாடசாலையில் அடிக்கடி பிரசாரக் கூட்டங்கள் நடந்தன. மாணவர்கள் பலர் இயக்கத்தில் இணைந்தனர். எங்கள் வகுப்பிலிருந்து ரகுவுட்பட் பலர் போயினர். கணக்கில் புலியாயிருந்த ரகு நிஜ வாழ்விலும் புலியானான். வகுப்பிலிருந்த சிலர் வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் போயினர். சிலர் வவுனியாவுக்குச் சென்று அங்குள்ள பாடசாலைகளில் கற்றனர். சிலர் கடலால் இந்தியாவுக்குப் போயினர்.

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அமைதி வந்து விட்டதாக பலரும் மகிழ்ந்திருந்தனர். தடைப்பட்டிருந்த யாழ்தேவி மீண்டும் ஓடியது. கொழும்புக்கும் வவுனியாவிற்கும் போன சிலர் மீண்டும் திரும்பி வந்தனர். நகரெங்கும் இந்திய அமைதி காக்கும் படைகள் திரிந்தன. மரக்கறி எண்ணெய் மணத்துடன் அவர்களின் வாகனங்கள் வீதிகளில் உறுமின. சனங்கள் அவர்களுக்கு கை அசைத்தனர்;.

பாடசாலை முடிவடையும் நேரம் ரகு ஒருநாள் பாடசாலை வாசலடியில் நின்று எங்களுடன் கதைத்தான். அவன் கறுத்துப் பருத்திருந்தான். அவனது கதைகளில் முதிர்ச்சி தெரிந்தது. இந்தியாப் படைகளுடன் விரைவில் சண்டை தொடங்கும் என அவன் சொன்னதை அப்போது எம்மால் நம்ப முடியாதிருந்தது.

நல்லூரில் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். நாங்கள் அடிக்கடி நல்லூருக்குப் போனோம். திலீபன் உண்ணாவிரதமிருந்த மேடைக்கு முன்பாகவிருந்த பந்தலில் நாங்களும் ஒருநாள் உண்ணாவிரதமிருந்தோம். எமது பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்ற ஒரு சனிக்கிழமை திலீபன் செத்துப் போனார்.

இந்திய இராணுவத்துடனும் போர் தொடங்கியது. எங்கள் பாடசாலை பெரிய அகதி முகாமாகியது. பாடசாலையில் படித்த பலர் இறந்து போயினர். நாங்கள் வௌ;வேறு இடங்களுக்கு அகதிகளாகச் சென்றோம்.

மூன்று மாதங்களாகக் மூடப்பட்டுக் கிடந்த பாடசாலை தை மாதத்தில் ஆரம்பமாகியது. எங்கள் வகுப்பில் மாணவர் தொகை குறைந்திருந்தது. மாணவர் பலரிடமும் இழப்புக்கள் நேர்ந்திருந்தன.

து
ஷியின் குடும்பம் மிருசுவில்லுக்கு அகதியாகச் சென்றிருந்தது. அங்கு இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் துஷpயின் தந்கை கொல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் துஷியின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. சிறுசத்தம் கேட்டபோதும் பயந்து நடுங்கினான். தன்பாட்டில் கதைத்தான. பாடசாலை இடைவேளை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குப் போகத் தொடங்கினான்.

கொக்குவில்லில் இருந்த எமது நண்பன் றமணனின் வீட்டை இராணுவ செயின்புளக் தரை மட்டமாக்கியிருந்தது. பாiஷயூரில் இருந்த அன்ரனின் வீடு எரிக்கப்பட்டிருந்தது. கோப்பாயிலிருந்த றூபனின் வீடும் எரிக்கப்பட்டிருந்தது. றமணன், அன்ரன், றூபன் ஆட்கள் பாடசாலைக்கு அணிந்து வர சீருடை இல்லாது சிறிது காலம் நிற ஆடைகளையே அணிந்து வந்தனர்.

நாங்கள் வெள்ளை நீளக் காற்சட்டை அணியத் தொடங்கினோம். சித்திர பாடத்தில் ஜஸ்மின் மிஸ் சோகக் காட்சியொன்று வரையச் சொன்னார். கறுப்பு-வெள்ளை-சாம்பல் வர்ணங்களைப் பயன்படுத்தி மரண ஊர்வலங்களை நாங்கள் வரைந்தோம். அவர் மறக்க முடியாத மனிதர்களை வரையச் சொன்னார். நாங்கள் திலீபனின் உண்ணாவிரதத்தை வரைந்தோம்.

நாட்கள் நகர்ந்தன. எங்களுக்கு விஞ்ஞானம்; கற்பித்த குணரட்ணம் சேர் தனது பழைய மாணவனொருவனுடன் வீதியில் கதைத்தக் கொண்டிருந்தபோது இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டார். அவரது உடல் கல்லூரி சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு சவக்காலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாங்கள் விம்மி விம்மி அழுதோம். எங்கள் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு ஒருநாளும் அடிக்காத ஆசிரியர் அவர்தான். நாங்கள் வகுப்பில் காசு சேர்த்துக் கண்ணீரஞ்சலிப் பிரசுரம் அடித்து ஒட்டினோம்.

எமக்கு விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியரில்லாது விஞ்ஞான பாடவேளைகளில் நாங்கள் இரண்டு மூன்று மாதங்களாக வகுப்பறையில் கதைத்தபடியிருந்தோம்.

ஒருநாள் அதிகாலையில் கல்லூரி விடுதிக்குள் இந்திய இராணுவமும் துணைக் குழுவும் நுழைந்தன. மாணவரின் அலுமாரி, மேசை இலாச்சிகள் எல்லாவற்றையும் கொட்டிச் சோதித்தார்கள். விடுதியில் இருந்த நெல்சனுக்கு வெடித்த ரவைக் கோதுகளைச் சேகரிக்கும் பழக்கமிருந்தது. நெல்சனுக்கு அடி விழுந்தது. அவனுக்கு அருகில் சென்ற விடுதிக்காப்பாளரான பாதர் விமலேந்திரனுக்கு பயங்கர அடி. பாதருக்கு அடித்த துணைக்குழு உறுப்பினன் பாடசாலையின் பழைய மாணவனெனவும் பாதரிடம் முன்பு வாங்கிய அடிகளை திருப்பிக் கொடுத்து பழி வாங்கி விட்டதாக விடுதி மாணவர்கள் சிலர் பின்பு கதைத்தனர். பாடசாலையில் மாணவர்களுக்கு தினமும் அடித்துக் கொண்டிருந்த பாதர் அதன் பிறகு அடிப்பதையே கைவிட்டுச் சாதுவானார். சில மறக்கமுடியாத சம்பவங்கள் மனித வாழ்வில் நிரந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா? படையினர் கல்லூரி விடுதியிலிருந்த நெல்சன் உட்பட நான்கைந்து மாணவர்களை பிடித்துக் கொண்டுபோய் காங்கேசன்துறை முகாமில் அடைத்து வைத்தனர்.

எங்கள் வகுப்பிலிருந்து மாணவர் பலர் கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றனர். தமிழ்த் தேசிய இராணுவத்த்pற்கென இளைஞர்களை வீதிகளில் பிடித்தனர். எங்கள் வகுப்பு மாணவன் சதீசனை யாழ்ப்பாணம் அசோக ஹொட்டலில் முகாமிட்டிருந்த துணைப்படைகள்; பாடசாலை வாசலில் வைத்துபிடித்துக் கொண்டு போனார்கள்.

பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டன. மீண்டும் பாடசாலை தொடங்கியபோது ஒவ்வொரு வகுப்பிலும் நான்கைந்து மாணவரே எஞ்சியிருந்தனர்.

...

யாழ்ப்பாண நகரின் மையத்திலிருந்த அந்தக் ஹொட்டலின் மண்டபம் கலகலப்பாகவிருந்தது. கல்லூரியின் வர்ணங்களைக் கொண்ட சோடனைகள் மண்டபத்தை அலங்கரித்தன. மெல்லிய இசை காற்றில் தவழ்ந்தது. மண்டபத்தின் ஓரமாக இருந்த மேசைகளில் அடுக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களின் வாசனை மூக்கைத் துளைத்தது.

காலையில் பாடசாலைக்குப்போய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எங்களுக்கு வந்தது மகிழ்வாகவிருந்தது. எங்களுக்குக் கற்பித்த நான்கைந்து ஆசிரியர்கள் தற்போதும் கற்பித்துக் கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்களும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் போல. எவ்வளவுதான் சிறுவர் உரிமை, மாணவருக்கு உடலியல் ரீதியான தண்டனை வழங்கத் தடை எனப் பல சட்டங்கள் அமுலில் இருந்தாலும் சுந்தா சேர் தற்போதும் மாணவருக்கு கன்னம் கன்னமாய் அடித்தபடியே இருந்தார். கல்லூரியின் சிற்றாலயம் உடைந்த சுவடே தெரியாமல் திருத்தப்பட்டிருந்தது. சிறிய மைதானத்தினுள் கட்டடங்களும் தென்னைகளும் பனைகளும் முளைத்திருந்தன. பெரிய மைதானம் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தது.

அல்போன்ஸ் சேர், சுந்தா சேர், குணரட்ணம் சேர், பாதர் விமலேந்திரன், பரமநாதன் மிஸ்.. என்று எங்களுக்குப் அந்தக் காலத்தில் படிப்பித்த ஆசிரியர்களை தேடிப் பிடித்து இங்கு அழைத்து வந்தது பெரிய விடமாகப்பட்டது.
அல்போன்ஸ் சேருக்கு வயது எண்பதைத் தாண்டியிருந்தது. எங்களில் அவரால் ரகுவை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.

எங்களுக்கு பாதருக்குக் கிட்டப்போக உண்மையாகவே பயமாகவிருந்தது. ஆனால் அவர் நரைவிழுந்து சாதுவாக இருந்தார். முகத்தில் சாந்தம் தவழ்ந்தது. சுந்தா சேர் எல்லோரிடமும் கலகலப்பாகக் கதைத்தார். சித்திர ரீச்சர் ஜஸ்மின் மிஸ் திருமணமாகி எங்கோ வெளிநாடு போயிருந்தார்.

எல்லோரும் சாப்பிட்ட பின்பு ரகு ஊன்றுகோலுடன் முன்னால் வந்து பேசினான்.

'கன காலத்துக்குப் பிறகு எல்லோரையும் பார்க்கச் சந்தோசமாயிருக்கு. எனக்குத் தெரியும் நீங்கள் எனக்கு உதவி செய்ய போகிறீர்கள்; என்று. நல்லது. எனக்கு உதவியொன்றும் தேவையில்லை. எனக்கு ஒரு கால் ஏலாதுதான். ஆனால் என்னாலை உழைத்து குடும்பத்தை பார்க்க முடியும். எனக்கு சொந்தக்காரர் கனபேர் வெளிநாடுகளிலை இருக்கினம். அவையள் கூட எனக்கு உதவி செய்ய வேண்டுமென நினைக்கேலை. ஆனால் எனது நண்பர்கள் நீங்கள் நினைத்திருப்து சந்தோசமாயிருக்கு. அந்தக் காசை நீங்கள் பாடசாலைக்கோ வேறு ஆக்களுகோ கொடுங்கோ.... எங்களுடன் படித்த றொபேட் கடைசிச் சண்டையிலை செத்தப்போனான். அவனின்டை குடும்பம் எங்கையிருக்கு என்று தேடிப்பிடித்து அவைக்கு உதவலாம். றொபேட் சாகேக்கை நான் பக்கத்திலை நிண்டனான்......'

ரகு குரல் தளுதளுக்க தொடர்ந்து பல விசயங்களைக் பேசிக்கொண்டு போகிறான்.

நான் முகத்தை திருப்பி மண்டபத்தில் உள்ளவர்களைப் பார்க்கிறேன். றமணன், சுரேஸ், ஜெகன், அமலன்.. எனப் பலரும் தலை குனிந்தபடியிருக்கின்றனர. அல்போன்ஸ் சேர் ரகுவின் பேச்சை அவதானமாகக் செவிமடுத்துக் கொண்டிருக்கின்றார். சுந்தா சேர் நாடியில் கைவைத்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர்களின் முகங்களில் துயரத்தின் ரேகைகள் தெரிகின்றன.

எனக்குப் பின்னாலிருந்து இலேசான விசும்பல் ஒலி கேட்கிறது. அது யாருடையதென எனக்குப் புரியவில்லை. பலருமே கைக்குட்டைகளால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்