நாயகன்!

க.ரவீந்திரநாதன்
 

 தொலைக்காட்சியில் பார்வை இருந்தாலும், சிந்தனையை எங்கோ விட்டிருந்தாள் கண்மணி. யாரையோ கூட்டிவரப்போவதாக மகள் தீபா சொல்லியிருந்தாள். 'யாரடி அது...?' என்று கேட்டதற்கு, 'வந்த பிறகு பாக்கத்தானே போறியள்...!' – என்று அவள் சொன்ன விதம் கண்மணிக்கு வித்தியாசமாகப் பட்டது. கூட வருவது அவள் சினேகிதியாகக்கூட இருக்கலாம். ஆனால், சொல்லிவிட்டு யாரையும் கூட்டிவரும் வழக்கம் தீபாவுக்குக் கிடையாது. திடுதிப்பென வந்து நிற்பார்கள். வழமைக்கு மாறாக இன்று அவள் தகவல் சொல்லியதுதான் கண்மணிக்கு நெருடலாக இருந்தது.

'யாரது சொல்லு... அப்பாவும் வீட்டிலை இல்லை, வில்லங்கம் எதையும் கொண்டு வராதை...!' என்றாள்.

'அப்பா பயணம் போனது எனக்குத் தெரியும் அம்மா...! அதுதான் இண்டைக்குக் கூட்டிவாறன்... எதுக்கும் நேரே வந்து சொல்லுறன்...!' என்றதோடு தொலைபேசியை வைத்துவிட்டாள் தீபா. அவள் சொல்லிய வார்த்தைகள்தான் கண்மணியின் பதற்றத்தை அதிகரித்திருந்தது. மூத்த மகள் கூட இப்படித்தான் ஒருநாள், 'இவர்தான் நான் கட்டிக்கப் போறவர்...!' என்று கூட்டிவந்த மாதிரி, இவளும் ஏதாவது அதிர்ச்சியைத் தரப்போறாளோ...!' என்று கண்மணியின் மனம் அங்கலாய்த்தது.

வாசல் மணி அடித்ததும் தயக்கத்தோடு எழுந்து சென்று கதவைத் திறந்தாள் கண்மணி. எதிரே நின்ற தீபாவையும் கடந்து அவள் பார்வை சென்றது. வேறு யாரையும் அங்கே காணவில்லை.

'யாரையோ கூட்டி வரப்போறதா சொன்னே... ஒருத்தரையும் காணேல்லை?' என்று அவள் சொல்லும்போதே, 'வள்...!' என்று சத்தம் கேட்டது. தடுமாறிப் பின்வாங்கினாள் கண்மணி. அவளது பாதங்களை முகர முற்பட்டபடி குட்டி நாய் ஒன்று காலடியில் நின்றது. தாயின் பதற்றத்தை கண்டதும்,

'றியோ...கம்!' என்று அதட்டினாள் தீபா. அவன் திரும்பி அவள் மேல் தாவினான். கண்மணி திகைப்போடு நின்றாள். நாய்க்குட்டி கால்களை நக்கியது அவளை வெறுப்பேற்றியிருந்தது. சினத்தோடு மகளைப் பார்த்தாள்.

'என்னடி இதெல்லாம்... வீட்டுக்குள்ள இதுகளை கொண்டு வரக்கூடாதெண்டு சொல்லியிருக்கிற மெல்லோ.... சொன்னால் கேக்கமாட்டியா....!' என்று எரிந்து விழுந்தாள்.

'அம்மா... றியே என்னோடை படிக்கிற றோசியின்ர நாய்க்குட்டி அம்மா...! அவள் விடுமுறையில இந்தியா போயிருக்கிறாள். திரும்பி வர ஒரு மாதமாகும். அதுவரை இவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கெஞ்சிக் கேட்டாள். மறுக்க முடியேல்ல. எனக்கும் இப்ப பரீட்சை விடுமுறை. அதனாலதான் இங்கயே கூட்டி வந்திட்டன். ஒரு மாதம்தானம்மா... றோசி கனடா திரும்பியதும் கூட்டிப் போயிடுவாள். அதுவரைக்கும் இவன் இங்கயே இருக்கட்டும் அம்மா, பிளீஸ்... அப்பாவை சம்மதிக்க வையுங்கோ...!' என்று தாயின் நாடியைப் பிடித்து கெஞ்சினாள் தீபா.

'என்னடி இதெல்லாம்.... வீட்டுக்குள்ளை எப்பிடி இதை வைச்சிருக்கிறது...? எவ்வளவு அருவருப்பான விசயம். இதை பராமரிக்கிறது எவ்வளவு உவத்திரவம் எண்டு தெரியாதா...? இதை எங்களோட விட்டுட்டு உன்ர அலுவலைப் பார்க்க நீ போயிடுவாய்.... இந்தக் குளிருக்குள்ள வெளியிலை விட்டு, சாப்பாடு போட்டு, தண்ணி வைச்சு, நோய் நொடி எண்டு வந்தால் கொண்டோடி...வீட்டையும் நாசமாக்கி... எங்களாலை இதை அனுமதிக்க முடியாது. உன்ர அப்பாவுக்கு எப்பவுமே இதுகளை கண்ணிலை காட்டக் கூடாது. உதிர்ந்து கொட்டுற மயிரால அவருக்கு இழுப்புப் பிரச்சனை வேற...! சுகயீனமா இருக்கிற அம்மம்மாவுக்கு அதுக்கும் மேல பிரச்சனை வரும். ஏற்கனவே நீ இதுகளை வளர்க்கக் கேட்டு முடியாதெண்டு பிடிவாதமா நிண்டவர் உன்னுடைய அப்பா. இப்ப மட்டும் ஒத்துக்கொள்வார் எண்டு நினைக்கிறியா...? எனக்கும் இதிலை உடன்பாடு கிடையாது. பயணத்தால அப்பா வாறதுக்கிடையிலை எங்கேயாவது கொண்டுபோய் விட்டுட்டு வா...!' என்று சொல்லிவிட்டாள் தாய் கண்மணி.

'அம்மா... நீங்கள் இந்தளவு பிடிவாதமாக இருந்தால், நானும் இவனோடை சேர்ந்து வீட்டை விட்டே போகவேண்டி வரும். சரியோ பிழையோ, றோசிக்கு நான் வாக்குக் கொடுத்திட்டன். தங்கியிருந்து படித்த அறையையும் நான் காலி பண்ணிப்போட்டு வந்திட்டன். இப்ப எனக்குப் போக்கிடமில்லை. நீங்களும் மறுத்தால், நான் எங்க போவன்...?' என்று அவள் கலங்கி நின்றபோது பெற்ற தாயால் எதுவுமே செய்ய முடியவில்லை. விருப்பமில்லை என்றாலும், சம்மதிக்க வேண்டிய நிலை.

'என்னவோ செய்...! பேஸ்மன்ரிலையே வைச்சுக்கொள்... மேலை விடக்கூடாது. எல்லா அலுவலும் நீயே பார்த்துக்கொள்ள வேணும். அசிங்கம் பண்ண விடக்கூடாது. ஒரு மாதம்தான், றோசி வந்ததுமே கொண்டுபோய் விட்டுட்டு வந்திடவேணும். உன்ர அப்பர் என்ன சொல்வாரோ எண்ட பயம்தான் எனக்கு. என்ன செய்யிறது... எதையாவது சொல்லி சமாளிக்கப் பாக்கிறன்....!' என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டாள் கண்மணி. 'முதல் வெற்றி...!' என்று மகிழ்ந்தபடி றியோவை கீழ்புறம் அழைத்துச் சென்றாள் தீபா.

யாரோ ஒருத்தனைக் கூட்டிவந்து 'இவர்தான் அவர்...!' என்று காட்டப் போறாளோ...! என பயந்துபோய் இருந்த கண்மணிக்கு, 'அட நாய்தானா...!' என்பதுபோல் ஆகிவிட்டது. மனதில் ஏற்பட்ட நிம்மதியை அவள் காட்டிக் கொள்ளவில்லை.

'றியோ' நாலு வயதை எட்டியிருந்தான். சிறிய தோற்றம். கட்டையானவன் என்றாலும், நீளமான உடம்பு. அழகான வாலும், வெழுத்த செம்மண் நிறமும், அடர்த்தியான முடியுமே அவனது கவர்ச்சிக்குக் காரணம். புதிதாக எவரையும் பார்த்துவிட்டால் குரைப்பான். ஒருமுறை தடவிக் கொடுத்துவிட்டால் போதும், எப்போ கண்டாலும் தாவிக் குதிப்பான்.

பரீட்சைக்கு தனியே இருந்து படிப்பதற்கு வசதியாக வீட்டு பேஸ்மன்ரிலேயே தங்கிய தீபாவுக்கு, றியோவை தன்னோடு வைத்திருப்பதற்கும் அதுவே வசதியாக இருந்தது. பயணத்தால் வந்த கணவரிடம் மகள் பேஸ்மன்ரில் இருந்துதான் படிக்கப் போகிறாளாம் என்று சொல்லிய கண்மணி, சமயம் பார்த்து 'றியோ' பற்றிய தகவலையும் தயங்கித் தயங்கிச் சொன்னாள். முதலில் கோபப்பட்டுப் பேசினாலும், வீட்டுக்குள் நாயை அனுமதித்தபின் என்னதான் செய்வது என்று அமைதியாகிவிட்டார். பரீட்சைக்குப் படிக்கும் மகளிடம் கோபத்தைக் காட்ட அவர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ஒரு மாதம்தானே என்றளவில், றியோ பற்றிக் கதைப்பதை தவிர்த்தே வந்தார்.

அண்மைக் காலமாக கண்மணி வேலைக்குச் செல்வதில்லை. வயதான அவளது தாய் மிகவும் சுகயீன முற்றிருந்தாள். குடலில் பிரச்சனை. ஒப்பறேசன் செய்தார்கள். ஆனாலும் குணமில்லை. அடிக்கடி வலியால் துடிப்பாள். நடமாடவும் சிரமப்பட்டா. யாராவது ஒருவர் துணைக்கு இருக்க வேண்டிய நிலை. அதனால் தானே கூட இருந்து தாயைப் பார்த்துக் கொண்டாள் கண்மணி.

பேஸ்மன்ரில் இருந்து படிக்கும் மகளுக்கு ஜூஸ், கோப்பி, சாப்பாடு என்று கண்மணி கொண்டு போய்க் கொடுப்பாள். அப்போதெல்லாம் அவளையே சுற்றிச் சுற்றி வருவான் றியோ. முதலில் சினப்பைக் காட்டிய கண்மணி, சில நாட்களிலேயே அவனிடம் அனுதாபம் கட்ட ஆரம்பித்தாள். அவள் வருவதை கண்டதும் ஓடிவந்து தன் சின்னஞ்சிறு வாலை ஆட்டித் தாவிக்குதிப்பான். ஆரம்பத்தில் விலக முற்பட்டாலும், நாட்கள் செல்லச் செல்ல அவனது குறும்புத்தனத்தை ரசிக்க ஆரம்பித்தாள். ஏதாவது ஒரு சாட்டோடு அவனை பார்ப்பதற்கென்றே பேஸ்மன்ருக்கு வந்து போக ஆரம்பித்தாள். அவளைக் கண்டதும் தாவிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான் றியோ. திரும்பிப் போகும்போது அவளைப் பின்தொடர்ந்து மேலே வர முயற்சிப்பான். ஆரம்பத்தில் அவனை வரவிடாமல் கதவை மூடிவிடும் கண்மணி, இப்போதெல்லாம் அவனை தடுப்பதில்லை. ஆனாலும் கணவன் வேலையிலிருந்து வருவதற்கு முன் அவனை கீழே விரட்டிவிடுவாள். தன்னையே சுற்றிச் சுற்றி வரும் றியோவின் மேல் இனம் புரியாத பாசம் ஏற்படுவதை கண்மணி உணர்ந்தாள். தன் தாய்க்கு றியோவுடன் ஏற்பட்ட நெருக்கத்தை அவதானித்த தீபா மனதுக்குள் புன்னகைத்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல தாயை மட்டுமல்ல, அம்மம்மாவையும் றியோ கவர்ந்துகொண்டான். சுகயீனமுற்றிருக்கும் அம்மம்மா, றியோ தன்னுடன் இருப்பதை விரும்புறா என்பது தெரிந்தது. அம்மம்மாவின் அறைக் கதவு திறந்து கிடந்தால், நேரே சென்று அவவின் கால்களை முகர்ந்து தன் மகிழ்சியை வெளிப்படுத்துவான். சில சமயங்களில் அவவின் காலடியிலேயே படுத்துக் கொள்வான். பசி வந்தால் கண்மணியை சுற்றிச் சுற்றி வருவான். அவனுக்கென்று வாங்கி வைத்திருக்கும் சாப்பாட்டை அவனது தட்டில் போடுவாள் கண்மணி. அதை போடுவதற்கிடையில் அவள்மேல் தாவிக் குதித்து அவன் படுத்தும் பாடு, பசித்த குழந்தை தாயின் மார்பை கண்டதும் காட்டும் துடிப்பைப்போல் இருக்கும்.

தகப்பன் வேலைக்குப் போகாமல் வீட்டில் நிற்கும் வேளைகளில், றியோவை தன்னுடனேயே வைத்துக் கொள்வாள் தீபா. அவனும் மேலே போகத் தயங்குவான். எதனாலோ தந்தையிடம் ஒருவித பயம் அவனுக்கு. தாயுடனோ, அம்மம்மாவுடனோ அவன் கூட நிற்கும் வேளைகளில் தந்தை வெளியிலிருந்து வந்துவிட்டால், அவனே பதுங்கிப் பதுங்கி கீழே வந்துவிடுவான். அவனது அந்த நடிப்பு நன்றாகவே வேலை செய்தது. இப்போதெல்லாம் அப்பாவுக்கே அவனிடம் பிரியம் ஏற்பட்டு வருவதாக தீபா உணர்ந்தாள். மாலையில் மலசலம் கழிப்பதற்காக தீபா அவனை வெளியில் கூட்டிச் செல்வாள். அப்போது தந்தை யன்னலடியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை அவள் அவதானித்தாள். அவர் மனதிலும் இடம் பிடித்துவிடுவான் என்ற நம்பிக்கை தீபாவுக்கு பிறந்தது.

றியோவின் மேல் தன் குடும்பம் பாசமாக இருக்க வேண்டும் என்று தீபா எதிர்பார்த்ததற்கு காரணம் இருந்தது. உண்மையிலேயே ஒரு பொய்யான நாடகத்தை அவள் அரங்கேற்றிக் கொண்டிருந்தாள். றியோ தனக்கே சொந்தமானவன் என்பதை தன் குடும்பததுக்கே மறைத்துவிட்டாள் தீபா. நாய்க்குட்டி வளர்க்கவேண்டும் என்ற ஆவல் தீபாவுக்கு சின்னஞ்சிறு வயதிலிருந்தே இருந்தது. ஆனால் தாய் தந்தை அதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் பெற்றோரின் மேல் கோபமாக இருந்தாள் தீபா. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் பல்கலைக்கழக உயர் கல்விக்காக மூன்று வருடம் பெற்றோரை விட்டுப் பிரிந்திருக்கவேண்டி வந்தது. அதையே தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தீபா, கடன்பட்டு றியோவை தனதாக்கி, தனது அறையிலேயே வைத்துக்கொண்டாள்.

இறுதிப் படிப்பு முடியும்வரை றியோவைப் பற்றி பெற்றோருக்கு தெரியாமலே பார்த்துக் கொண்டாள். இவர்கள் வீட்டிலிருந்து அவள் கல்வி கற்கும் இடத்துக்கு பல மைல்கள் தூரம் பயணிக்க வேண்டும். தனியே இருக்கும் மகளுக்கு இடையிடையே கணவனிடம் சாப்பாடு கொடுத்துவிடுவாள் கண்மணி. தகப்பன் தன்னிடம் வருகிறாரென்றால், றியோவை றோசியின் அறையில் விட்டுவிடுவாள் தீபா. ஆனால், இறுதிப் பரீட்சைக்குப் படிப்பதற்காக வீடு திரும்பவேண்டிய நிலை வந்தபோதுதான் றியோவை என்ன செய்வது என்ற கவலை ஏற்பட்டது. வேறு வழியில்லை. சின்னதாக ஒரு பொய்யைச் சொல்லி, பெற்றோரிடமே அடைக்கலம் தேடினாள் தீபா. றியோவை எல்லாருக்கும் பிடித்துக்கொண்டால், உண்மையை சொல்லிவிடுவது என்ற நோக்கத்தோடுதான் வீட்டுக்குள் கொண்டுவந்தாள். அவளது திட்டம் ஓரளவுக்கு பலன் தந்தது. தந்தை மட்டுமே எஞ்சியிருந்தார். வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவர் மனதிலும் அவன்மேல் கரிசனை இருப்பதை அவள் அவதானித்தாள்.

பரீட்சை நெருங்கிக்கொண்;டிருந்த ஒருநாளில், ரிம் ஹோட்டனில் இருந்து படித்துவிட்டு சோர்வோடு வீடு திரும்பிய தீபா, அலுப்பையும் பாராமல் றியோவின் கழுத்தில் பட்டியை மாட்டி, மலசலம் கழிக்கவென வெளிப்புறம் கூட்டிச் சென்றாள். பனிப் பொழிவு அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. குளிரும் அதிகமாக இருந்தது. றியோ கக்காவுக்குப் போகாமல் அங்கும் இங்கும் போக்குக் காட்டியபடி இருந்தான். பனியில் நடுங்கிக்கொண்டு மகள் நிற்பதையும், குளிரில் பலமாகத் தும்முவதையும் தந்தை கண்டார். அவரால் பொறுக்க முடியவில்லை. 'சோதனைக்குப் படிக்கிற பிள்ளை, குளிரிலை நடுங்கிக் கொண்டு நிக்கிறாளே...!' என்ற தவிப்போடு கதவை திறந்து வெளியே வந்தார். றியோவின் கழுத்தை சுற்றியிருந்த பட்டியை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

'நீ உள்ள போ பிள்ளை... நான் அவனை விட்டுட்டு கொண்டு வாறன்...!' என்று அவளை அனுப்பிவிட்டார். தீபா ஆச்சரியத்தோடு தயங்கியபடி உள்ளே சென்றாள். ஆனாலும், யன்னலடியில் நின்று நடப்பதைப் பார்த்தபடி இருந்தாள். கழுத்துப் பட்டியை தந்தை பற்றியபோதே அவரை ஏறிட்டுப் பார்த்தான் றியோ. அவர் முகத்தில் கடுமை இல்லை என்பதை கண்டுகொண்டான் போலும், துணிந்து அவர் கால்களை முகர்ந்தான். அவர் சினக்கவில்லை என்றதும் எட்டி அவர்மேல் தாவினான். ஆனாலும் தந்தை விலகாமல், அவன் தலையை தடவி விடுவதைக் கண்டு மனதுக்குள் புன்னகைத்தாள் தீபா. அப்போது, மரத்திலிருந்து குதித்து ஓடிய ஒரு கறுத்த அணிலை கண்டதும் அவரை இழுத்துக்கொண்டு தாவ முற்பட்டான் றியோ.

'வாடா இஞ்ச...!' என்று அவர் உரிமையோடு அதட்டியதும் திரும்பி வந்தான். ஆனாலும், கக்காவுக்குப் போகாமல் சருகுகளை முகர்ந்தபடி போக்குக் காட்டியபடி இருந்தான். பின் இரண்டு மூன்று முறை தரையை மணந்து மணந்து சுற்றி வந்தவன், பின் கால்களை மடித்து கக்காவுக்குப் போனான். முடிந்த கையோடு அவரைப் பார்க்காமலே வாசல் கதவை நோக்கி ஓடினான். கழுத்துப் பட்டியை கைவிட்டார் தந்தை. கதவைத் திறந்து றியோவை உள்ளே வரவிட்டாள் தீபா. ஆனாலும், தந்தை உள்ளே வரவில்லை என்றதும் வெளிப்புறம் நோக்கினாள். அவர் றியோ இருந்த கக்காவை அதற்குரிய பையில் அள்ளிச் சென்று உணவுக் கழிவில் எறிவதைக் கண்டதும் நெகிழ்ந்துவிட்டாள். அவள் மனதில் நிம்மதி பிறந்தது. வீட்டில் எல்லோருமே றியோவை ஏற்றுக்கொண்டுவிட்டதை தனக்கு கிடைத்த வெற்றியாகவே அவள் நினைத்தாள்.

றியோ வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கடந்த நிலையில் ஒருநாள், தீபாவிடம் தாய் கண்மணி கேட்டாள்.

'உன்னுடைய சினேகிதி எப்ப திரும்பி வாறாள் பிள்ளை...?' என்று
 
'எந்தச் சினேகிதி அம்மா...!' என்றாள் தீபா. அவளுக்குத் தெரியும் தாய் யாரை கேட்கிறாள், எதற்காக கேட்கிறாள் என்று.

'அதுதான்... அந்த றோசி...!' என்ற கண்மணியின் குரலில் தயக்கம் இருந்தது.

'இந்தக் கிழமை வந்திடுவாள் அம்மா...!' என்றவள், தாயை ஓரக் கண்ணால் பார்த்தாள். தாயின் முகம் வாடிப் போனதை அவதானித்தாள். உணர்வுகளை வெளிக்காட்ட விரும்பாமல் மறுபுறம் திரும்பிக் கொண்ட தாயை நெருங்கிவந்த தீபா, அவள் தோள்களைப் பற்றி தன்புறம் திருப்பினாள்.

'றோசி திரும்பி வந்தாலும், றியோ போகமாட்டான் அம்மா... அவன் என்னுடைய செல்லப் பிள்ளை... எங்கட வீட்டு நாயகன்!' என்று புன்னகையோடு சொல்லிய தீபா, தாயை விட்டுவிட்டு றியோவைத் தூக்கிக் கொஞ்சியபடி கீழிறங்கிச் சென்றாள். உண்மையிலேயே கண்மணி திகைத்து விட்டாள். ஆரம்பத்தில் மகள் பொய்தான் சொல்லியிருக்கிறாள் என்று மனம் ஏமாந்து போனாலும், தங்களோடுதான் றியோ இருப்பான் என்று தெரிந்ததும் மனமகிழ்ந்து போனாள்.

எப்படியோ, றியோ அந்த வீட்டின் ஒரு அங்கமாக மாறியிருந்தான். எல்லா சுதந்திரமும் அவனுக்கு இருந்தது. ஆனால், வீட்டுச் சோபாவில் ஏறி அமர்ந்தானென்றால் மாத்திரம் 'இறங்கடா...!' என்று கண்மணியிடம் திட்டு வாங்கி ஓடுவான். மற்றும்படி எங்கும் உலாவுவதும், எல்லோர்மீதும் தாவுவதும், செல்லப் பிள்ளை போல் அவர்கள் தடவிக் கொடுப்பதும் சாதாரணமாகி விட்டது.

இந்த நிலையில்தான், ஒருநாள் வயிற்று வலி அதிகமாகி அம்மம்மா துடிக்க ஆரம்பித்தாள். அடிக்கடி வந்துபோகும் நோ என்றபோதும், அன்று அதிகம் வலியால் துடித்தாள். உடனடியாகவே அன்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றாள் கண்மணி. மயங்குவதும், நோ அதிகமானால் விழிப்பதுமாக வலி அவளைப் பாடாய் படுத்தியது. வெளியே படிக்கச் சென்றிருந்த தீபா, தகவல் அறிந்து பதறியடித்து ஓடிவந்தாள். தாயை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானே ஆஸ்பத்திரியில் நின்று கொண்டாள். மயக்கம் தெளிந்து கண்விழித்த அம்மம்மாவை தடவிக்கொடுத்தாள் தீபா. அவள் கைகளை பற்றிக் கொண்ட அம்மம்மாவின் கண்களில் கண்ணீரை கண்டதும் பதறிவிட்டாள்.

'ஏன் அம்மம்மா, இப்பவும் நோகுதா... டாக்ரரை கூப்பிடவா...?' என்று தவிப்போடு கேட்டாள்.

'இல்லை...வேண்டாம் பிள்ளை, இப்ப குறைஞ்சிருக்கு. உன்னட்டை ஒரு உதவி கேப்பன், எனக்காகச் செய்வியா...?' என்று இயலாமையோடு கேட்டாள் அம்மம்மா.

'என்ன சொல்லுங்கோ அம்மம்மா...!'

'பிள்ளை... நீ நேர்ஸ்க்கு படிக்கிறாய்...! வருத்த துன்பத்தைப் பற்றி உனக்கு நல்லாத் தெரியும். என்னால இந்த வலியை இனிமேலும் தாங்க முடியாது பிள்ளை. இது சுகமாகிற வருத்தமா தெரியேல்லை. எண்பது வயதாகுது எனக்கு. இனி நான் வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப்போறன். எல்லா நன்மை தீமைகளையும் கண்டுட்டன். இந்த நோவையும் வலியையும் தாங்கிக் கொண்டு இனிமேலும் என்னாலை வாழமுடியாது. நான் அனுபவிக்கிற சித்திரவதை உனக்கு விளங்கும். ஏதாவது ஒரு வழிசெய்து என்னை நிம்மதியா போகவிடு பிள்ளை. சட்டத்திலையும் இப்ப இதுக்கு வழி இருக்காமே...!' என்று தீபாவின் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டாள் அம்மம்மா.

பதறிவிட்ட தீபா, அம்மம்மாவை அணைத்துக் கொண்டாள்.

 'அம்மம்மா... என்னாலை இப்பிடி ஒரு ஏற்பாட்டை உங்களுக்குச் செய்ய முடியும் எண்டு நினைக்கிறியளே....! எங்களுக்கு நீங்கள் வேணும் அம்மம்மா. நீங்கள் சீக்கிரம் பழைய நிலைக்கு வருவியள். வயிற்றுப் புண் மாறினால் உங்களுக்கு சுகம் வரும். எங்களோடை கனகாலம் இருப்பியள். உங்களுக்கு துணையா நாங்கள் இருப்பம் அம்மம்மா...'

'அதிகம் நடமாட முடியாத இந்த உடம்போட, நோவையும் வலியையும் தாங்கிக் கொண்டு எவ்வளவு காலம் இருக்கிறது பிள்ளை...? என்னால எல்லாருக்குமே சிரமம். ஏதாவது ஒரு வழி பண்ணு...!' வயிற்றை தடவியபடி மன்றாடினாள் அம்மம்மா.

'அம்மம்மா... எல்லாருமே ஒருநாள் போகத்தான் போறம்! அதுக்காக வில்லங்கத்துக்கு போகவேணுமா...? உங்கட இயலாமை எனக்கு விளங்குது அம்மம்மா...! கடைசிவரை முயற்சித்துப் பார்ப்பம். எப்பிடியும் உங்களுக்கு சுகம் வரும். நாங்கள் இருக்கிறம். உங்களாலை எங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை....!'
'உனக்குமா என்னுடைய வலியும் வேதனையும் புரியேல்லை பிள்ளை....?' ஆற்றாமையோடு கேட்டாள் அம்மம்மா.

'எனக்கு எல்லாமே புரியுது அம்மம்மா, இந்த நாட்டிலை எல்லா மருத்துவ வசதியும் இருக்கு. முடிஞ்சவரை முயற்சித்துப் பாப்பம் எண்டுதான் சொல்லுறன். அதுவரைக்கும் சகித்துக் கொள்ளுங்கோ. அதுசரி... பூட்டப் பிள்ளைகள் எண்டு அக்காவின்ர பிள்ளைகளை பார்த்திட்டியள். என்னுடைய கலியாணத்தையோ, எனக்குப் பிறக்கிற உங்கட பூட்டப் பிள்ளையளையோ பார்க்காமல் போக நினைக்கிறது நியாயமா சொல்லுங்கோ அம்மம்மா...?' என்று தீபா சொன்னபோது,

'நல்லாத்தான் நீ பேச்சை மாத்திறாய்...அந்த ஆசை எப்பதான் நிறைவேறப்போகுதோ...!' என்று தன் வலியை மறந்து புன்னகைத்தாள் அம்மம்மா. அம்மம்மாவின் முகத்தில் மலர்ச்சியை கண்டபோது தீபாவின் மனதில் நி;ம்மதி பிறந்தது.

இரண்டு நாள் கழித்து அம்மம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்தார்கள். அவவைக் காணாமல் றியோ தவித்துப் போனான் போலும். திடீரெனக் கண்ட மகிழ்ச்சியில் அவமேல் தாவ முற்பட்டான். தீபா அவனை அதட்டி அமரவைத்தாள்.

நாட்கள் நகர்ந்தன. றியோ அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வீட்டில் ஒரு குழந்தை துள்ளி விளையாடுவது போன்ற உணர்வை றியோ அவர்களுக்குக் கொடுத்தான். வீட்டுக்குள் நுளையும்போது அவன் குரலே அவர்களை வரவேற்கும். அவர்கள் எல்லோரும் வெளியே போய்விட்டால், அம்மம்மாவின் பொழுதுபோக்குத் துணையாக அவனே மாறிவிட்டான்.

சில சந்தோசங்கள் நெடுங்காலம் நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு துயரம் வந்து இயல்பு வாழ்வை குலைப்பதுண்டு. தீராத நோயினால் அம்மம்மா படும் துன்பம் குடும்பத்தையே கவலைக்குள்ளாகியது போன்ற ஒரு சோகத்தை அவர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும்கூட, அதை செல்லமாக வளர்த்தபின் நோயினால் ஏற்படும் துன்பம் தாங்க முடியாத ஒன்றாகவே இருப்பதுண்டு.

திடீரென றியோ சுகயீனமுற்றான். அவன் சோர்வோடு முடங்கிக் கிடப்பதை அம்மம்மாதான் அவதானித்தாள். சினேகிதிகளோடு வெளியூர் சென்றுவிட்டு வந்த தீபாவிடம் றியோ சோர்வோடு இருப்பதைச் சொன்னாள். தன்னைக் காணாத ஏக்கமாக இருக்கும் என்றே தீபா நினைத்தாள். ஆனால், ஒரு வாரம் கழித்து தன்னைக் கண்டபோதும், முன்னைய உற்சாகம் றியோவிடம் இல்லை என்பதை கண்டுகொண்டாள் தீபா. சாப்பாட்டில் விருப்பம் இல்லாதவனாக இருந்தான். எப்போதும் சோர்ந்து சோர்ந்து படுத்தான். அவனுக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று புரிந்தது. வைத்தியரிடம் அழைத்துச் சென்றாள். பரிசோதனைகள் செய்தார்கள்.

இரண்டு நாட்கள் கடந்து அவர்களிடமிருந்து அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது. அவனுக்கு வயிற்றில் 'ரியூமர்' என்று சொன்னதும் கதறி அழுதுவிட்டாள் தீபா. வீடே சோகமயமானது. அவன் வாழக்கூடிய காலத்தை வைத்தியர்கள் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால், இயலாமையோடு அவனது வாழும் காலம் நீண்டதாகவும் இருக்கலாம் என்று சொன்னார்கள். எதுவென்றாலும் தன்னுடன் வைத்திருந்தே அவனைப் பராமரிப்பது என்று தீர்மானித்தாள் தீபா.

வருத்தம் என்று வந்த நிலையிலும், மெதுமெதுவாக படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த றியோ, இப்போதெல்லாம் கீழேயே படுத்துக்கொண்டான். அவனால் படி ஏற முடியவில்லை. நெருங்க முடியாதபடி அவனிடத்தில் சீற்றம் அதிகரிந்திருந்தது. ஒரு கூண்டிலேயே அவனை விட்டிருந்தாள் தீபா. அவளை மட்டுமே தொடுவதற்கு அனுமதித்தான். அவனது நிலைமை கண்டு கண்மணியும், தகப்பனும்கூட தவித்துப் போனார்கள். இருந்தாலும் தேறிவிடுவான் என்றே நம்பினார்கள். அவனுக்கு ஏதோ சுகமில்லை என்று மட்டுமே நினைத்திருந்த அம்மம்மா, தன்னிடம் அவன் வரவில்லை என்றதும் தீபாவிடம் விசாரித்தாள். அம்மம்மா தவிப்பாளே என்று நினைத்தாலும், கவலையை மறைக்க முடியவில்லை தீபாவால். றியோவின் உண்மை நிலையை சொல்லி கலங்கி அழுதாள். தவித்துப்போன அம்மம்மா, மிகுந்த வேதனையோடு அவளை அணைத்து ஆறுதல்படுத்த முனைந்தாள்.

'பிள்ளை... அவன் வாயில்லாத ஜீவன், எதையுமே வாயால் வெளிப்படுத்த முடியாதவன். அவனுடைய விகாரமான போக்குக்குக் காரணமும் அதுதான். மனிதரோ மிருகமோ யாரெண்டாலும் வலி, கொதியை தாங்கிக் கொண்டு நெடுங்காலம் சீவிக்க முடியாது. பாசத்தோட இருந்ததுகளுக்கு வருத்த துன்பம் எண்டு வந்தால் மனம் தவிக்கத்தான் செய்யும். ஆனாலும், பாவப்பட்ட இந்த ஜீவன் இதுக்கு மேலையும் சித்திரவதை அனுபவிக்கக் கூடாது. அவன் அனுபவிக்கிறதைப் போல வலியை தாங்கமுடியாமல்தானே என்னை அமைதியாகப் போகவிடு எண்டு கேட்டனான்... நீ மறுத்திட்டாய். அனால், எனக்கு செய்ய மறுத்ததை இந்த வாயில்லா ஜீவனுக்கு நீ செய்ய வேணும். இது பாவமில்லை. அவன் அனுபவிக்கிற வலியை உன்னுடைய பாசத்தால தணிக்க முடியாது. காலம் தாழ்த்தாமல் அமைதியான முறையிலை அவன் கண்மூட வழிசெய் பிள்ளை... உனக்குப் புண்ணியமாகும்....!' என்று வேதனையோடு பேத்தியை சமாதானப்படுத்த முற்பட்டாள் அம்மம்மா.

அம்மம்மா சொல்லியவை தீபாவை சிந்திக்க வைத்தது. பாசமாக வளர்த்தவனை பிரிவதென்பது நெஞ்சை பிழிவதுபோலிருந்தது. இயற்கை மரணமாக இருந்தால், இந்தளவு தூரம் மனம் தவிக்காது என்றே நினைக்கத் தோன்றியது அவளுக்கு. தூக்கி வளர்த்த கையாலேயே அவனை தூக்கிச் சென்று சாகடிப்பது என்பது அவளை வதைத்தது. அடுத்து வந்த சிலநாட்கள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தாள் தீபா. வீட்டில் அம்மா அப்பாகூட எதையோ பறிகொடுக்கும் மனநிலையில் நடமாடினார்கள்.

றியோவிடம் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. வலி ஏற்படும்போது அவனது போக்கு விகாரமாக இருக்கும். தீபாவைத் தவிர வேறு எவரும் அவனை நெருங்க முடியவில்லை. அவன் படும் அவஸ்தையை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனது முடிவை அவளே விரைந்து தீர்மானிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருந்தாள். மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டாள் தீபா. றியோவை ஒரு பெட்டியில் படுக்க வைத்துவிட்டு, அவன் விளையாட வாங்கிய அத்தனை பொருட்களையும் கூடவே எடுத்துக் கொண்டாள். அவனுடைய ஒரு அழகான படத்தை பெரிதாக்கி வைத்திருந்தாள். அதை எடுத்து சுவரில் மாட்டினாள். பின் அம்மம்மாவிடம் வந்தாள். அவனுக்கு விடை கொடுக்கும் முடிவை அழுதழுது சொன்னாள். கவலையோடு அவளை அணைத்துக் கொண்ட அம்மம்மா எதுவும் சொல்ல முடியாமல் தவித்தாள்.

'இந்த நிலையில என்னாலை அவனைப் பார்க்க முடியாது பிள்ளை....நல்லபடியா வழியனுப்பிப் போட்டு வாங்கோ...!' என்று சொல்லியபடி ஆற்றாமையோடு திரும்பிப் படுத்துக்கொண்டாள். பதட்டத்தில் அவள் கைகள் நடுங்கின. அம்மம்மாவை தடவிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள் தீபா. மனதை கல்லாக்கிக் கொண்டு, றியோவை பெட்டியோடு தூக்கிவந்து காரின் பின் இருக்கையில் ஏற்றினாள். தானும் அதன் அருகில் அமர்ந்துகொண்டாள். கண்ணிரும் வேதனையும் அவளை ஆட்கொண்டது. சோர்ந்துபோய் துவண்டு கிடக்கும் றியோவை அவள் கைகள் தடவிக் கொடுத்தன. உறுமலோடு தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்தவன், மீண்டும் படுத்துக் கொண்டான். தகப்பன் காரை எடுத்தபோது, தாயும் வந்து ஏறிக்கொண்டாள். வழிநெடுக அவள் கண்ணீரும் ஓயவில்லை. தந்தையின் மௌனத்தில் கவலையை அடக்கி வைத்திருக்கிறார் என்பது புலனானது.

எல்லாம் முடிந்துவிட்டது. ஊசி ஏற்றியதோடு, றியோ அமைதியாக கண்களை மூடினான். இறுதியாக அவனைப் பார்க்க அனுமதித்தார்கள். தீபா தாங்கமுடியாமல் கதறி அழுதாள். அடக்கத்துக்கு அவனை எடுத்துச் சென்றபின் கண்ணீரோடும், வேதனையோடும் வீடு திரும்பினார்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. வீடு வந்ததும் கதவை திறந்து உள்ளே விரைந்த தீபா, சோபாவில் தொப்பென விழுந்தாள். முகத்தை அதில் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். உள்ளே வந்த கண்மணிக்கு வீட்டின் அமைதி ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. றியோவின் குரல் இனி ஒலிக்காது என்ற உண்மை மனதில் உறைத்தாலும், ஏதோ ஒரு உறுத்தலில் தாய் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்ததாள். மனம் 'திக்...' என்றது. தாய் அங்கு இல்லை. தவிப்போடு அறைகள், குளியலறை எங்கும் தேடினாள். இல்லை என்றதும் பதறிவிட்டாள். 'அம்மா ...அம்மா...!' என்று உரக்கக் குரல் கொடுத்தாள். பதில் இல்லை. தாயின் குரல்கேட்டு பதறிப்போய் எழுந்த தீபா. 'என்னம்மா...?' என்றாள்.

'அம்மம்மாவைக் காணேல்லைப் பிள்ளை...!' என்றதும் பதற்றமானாள். தானும் விரைந்து தேடினாள். எங்கும் இல்லை என்றதும் தவித்துவிட்டாள். வெளியே போயிருக்க முடியாது, அந்தளவுக்கு நடமாட முடிவதில்லை அம்மம்மாவால். வயிற்று வலி வந்து அம்புலன்ஸ்க்கு அடித்துப் போயிருப்பாளோ..? என்றெல்லாம்; நினைக்கத் தோன்றியது தீபாவுக்கு. அப்படி இருக்காது என்றே மனம் சொல்லியது. அப்போ எங்கே...? மனதைப் பிசைந்தாள். திடீரென ஒரு எண்ணம்... பேஸ்மன்ருக்கு விரைந்தாள் தீபா. படிக்கட்டில் வேகமாக இறங்கியவள், இறுதிப் படியில் கால் பதித்தபோது கண்ட காட்சியால் தவித்து நின்றாள். எப்படித்தான் தனியாக கீழிறங்கி வந்தாவோ தெரியவில்லை, றியோவின் படத்துக்கு முன்னால் அமர்ந்திருந்தாள் அம்மம்மா. மூடித் திறந்த கண்களில் கண்ணீர். படத்திலிருந்து பார்வை விலகவில்லை. குத்துவிளக்கு ஒன்று றியோவின் படத்தின் முன்னால் எரிந்துகொண்டிருந்தது. அருகில் அமர்ந்த தீபா அம்மம்மாவின் தோழில் சாய்ந்து கொண்டாள்.

'கவலைப்படாத பிள்ளை.... தாங்க முடியாதுதான்.... றியோ எங்கேயும் போகமாட்டான். எங்ககூடத்தான் இருப்பான். சீக்கிரமா நீயொரு கலியாணத்தைச் செய்... உனக்குப் பிள்ளையா வந்து பிறப்பான்....!' என்றபடி பேத்தியை அணைத்துக் கொண்டாள் அம்மம்மா.


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்