உழவே தலை
முனைவர் கிட்டு முருகேசன்
அன்று என்னவோ!
வானம் கருத்திருந்தது. மேற்கு திசையில் அடிவானம் சற்றே மின்னலுடன்
காணப்படது. சரியாக மாலை ஐந்து மணி இருக்கும். இருள் சூழ்ந்து கொண்டது.
சற்று காற்றும் வீசத் தொடங்கியது. அதில் ஈரப்பதம் தெரிந்தது. கோணிச்
சாக்கை தலையில் போட்டுக்கொண்டு மிக வேகமாக நடந்தார் கார்மேகம். அருகில்
இருந்த டீக்கடைக்குச் சென்று மூன்று வரிக்கியும் இரண்டு டீயும்
வாங்கிக் கொண்டு,
அருகே இருந்த வரப்பில் இறங்கி தடதடவென நடக்க ஆரம்பித்தார். அப்போதே மழை
சிறு சிறு துளிகளாக விழ ஆரம்பித்தது. உடனே வாய்க்காலுக்குள் இறங்கி
வேகமாக நடந்தார். அதில் கிடந்த நீர் சலசலவென்று சத்தம் எழுப்பியது.
கடலை ஆய்ந்து கொண்டிருந்த அஞ்சலை சத்தம் கேட்டு,
தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். அங்கு கார்மேகம் வருவதை தெரிந்து
கொண்டு,
அருகே இருந்தவர்களிடம் மேகம் கருத்துக்கிட்டு வர்ரதப் பாத்தா இன்னைக்கு
மழை விடாது போல என்று சத்தமாகச் சொன்னாள். அது,
அருகே வந்த கார்மேகத்தின் காதில் விழுந்தது.
பொண்டாட்டிக்கிட்ட சண்டையா போடமுடியும். அவருக்கு எங்கே?
அதுக்கெல்லாம் நேரம்.
என்ன அஞ்சலை வானம் இடி இடிக்கிர மாதிரி பல்லக்காட்டிக்கிட்டு இருக்க.
இந்தா டீயை ஊத்திக் குடி என்று சொல்லிவிட்டு. கடலை மூட்டைகளை தூக்கி
கொட்டகைக்குள் வைத்துக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து
தோட்டத்துக்காரர்,
குப்புசாமி வருவதைப் பார்த்தார்.
வாங்க குப்புசாமி;
உங்க வயல்ல நெல்லு
போட்டிருந்தீங்களே அருவடைக்கு ரெடியா இருக்கும் போல?
ஆமாம் கார்மேகம். அறுவடைக்கு ரெடியா இருக்கு;
இப்பன்னு பாத்து இந்த பாவிப்பய வானம் இப்புடி இருட்டிக்கிட்டு வருது,
என்றபடியே அந்த வெத்தலைப் பையை கொடு என்று வாங்கிக் கொண்டு
உக்காந்தார்.
காற்று பலமாக வீசியது. நெற்கதிர்கள் வரப்பில் சாய்ந்தன. மழைத் துளி
குப்புசாமியின் கன்னத்தில் விழுந்து வழிந்தோடியது.
ஆம்! வரப்பு உயர மழை நீர் தேங்கி விட்டது. மறுநாள் காலையில்
தண்ணீருக்குள் இருந்த நெற்கதிர்களை அள்ளி எடுத்து மேட்டிற்கு கொண்டு
வந்தனர்.
குப்புசாமியின் உடல் முழுதும் சேறும் சகதியுமாக
இருந்தது. மேட்டிற்கு கொண்டு
வந்த பிறகு தலையில் கை வைத்தபடி உக்கார்ந்திருந்தார்.
அருகே வந்த கார்மேகம்,
எப்படி உனக்கு ஆறுதல் சொல்லுறதுன்னே தெரியல. விவசாயியாப் பொறந்த நமக்கு
ஆண்டவன் கொடுக்குர சோதனைய பாத்தியா;
அடுத்த நடவுல பாத்துக்கலாம் வருத்தப்படாத.
என்னால இதைத்தான் சொல்ல முடியும். என்னோட நிலத்தைக் கூட நல்ல
விலைக்கு வந்தா விக்கலாம்ன்னு பாக்குறேன்.
என்ன சொல்லுரிங்க கார்மேகம். நல்லபடியா விவசாயம் பண்ணுரிங்க அப்புறம்
ஏன் இப்ப விலைக்கு கேட்ட விக்கலாம்ன்னு சொல்லுரிங்க.
என்னத்த சொல்ல குப்புசாமி;
நானும் உழவு மாடு வைச்சு ஏதோ என்னால முடிஞ்ச கடலை,
உளுந்து,
தட்டப்பயறு,
பாசிப்பயறுன்னு விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்பல்லாம் உரம்,
பூச்சி மருந்துன்னு எதையாவது போட்டாத்தான் ஏதோ;
கொஞ்சம் மகசூல் கிடைக்குது. அதுக்கு பணம் வேணும்ல?.
நான் எங்கே போவேன். வீட்டுல இருந்த பசுமாடு போனவாரம் அம்மை நோய்
வந்ததுல செத்துப்போச்சு,
வீட்டுப் பொம்பளக்கிட்ட இருந்த நகைநட்டெல்லாம் வித்துப்புட்டுதான்,
டிராக்டர் வாங்குனேன். அதுவும் தொடர்ந்து செலவு வைச்சுக்கிட்டே
இருந்தது. அப்புறம் அதைப் பாதி விலைக்கு வித்தேன்.
ஆமாம் கார்மேகம்,
நானும் இந்த இழவு பூச்சிமருந்துகளைப் போட்டுப் போட்டுத்தான் என்னோட
வயலும் ஊனமாகிப்போச்சு. இப்பத்தான் பாத்தியல்ல உரத்தைப் போட்டவுடனே
நல்லா வளந்து வந்துச்சு,
ஆனா கதிரோட வேர் திடமில்லாமல் உடனே சாஞ்சுபோச்சு. இப்புடி நாம அதிக
மகசூழுக்கு ஆசைப்பட்டு கண்ட கண்ட பூச்சி மருந்துகளை தெளிக்கிறதுனால
மண்ணும் மலடாப் போச்சு. இதே;
நம்ம பழைய முறைப்படி இயற்கை முறையிலான விவசாயத்தை முன்னெடுத்துருந்தா
நம்ம நிலம் நாம சொல்லுரதக் கேக்கும். அது மட்டுமா விவசாயிகளுக்கு
கொடுக்குர கடன்களையும் பெரிய பெரிய முதலாளிங்க வாங்கிக்கிட்டு
போயிடுறாங்க. நம்மை போல சின்னச் சின்ன விவசாயிங்க கடன் வாங்குனா
மட்டும் அதிகாரிங்க நம்ம உடைமைகளை எடுக்குரதும் தற்கொலைக்குத்
தூண்டுறது மாதிரியான வேலைகளைச் செய்யிறங்க. வீட்டுல சாப்புடுர
அரிசிக்கு நாமதான் சொந்தக்காரங்கன்னு நெனச்சுக்கிராங்க,
அவங்களுக்கும் ஒருநாள் புரியும் விவசாயிகள் யாருன்னு?
அப்போ நினைப்பாங்க.
நிலத்தை வித்துடிங்கன்னா
மறுபடி வாங்குரது ரொம்ப கஷ்டம் கார்மேகம். கொஞ்சம் யோசிங்க;
உங்க பசங்கதான் டவுன்ல இருந்து நல்லா சம்பாரிக்குராங்களே. அவங்ககிட்ட
பணம் கேக்கலாமே?
ஒன்னுக்கு ரெண்டு மகனுங்கள பெத்தும் என்ன பிரயோசனம்.
‘தென்னையை
வச்சா இளநீரு;
பிள்ளயைப் பெத்தா கண்ணீருன்னு’
சும்மாவா சொல்லிருக்காங்க. நானும் பொம்பளையும்தான் கெடந்து
கஷ்டப்படுறோம். அவனுங்களா இனிமே வந்து விவசாயம் பார்க்கப் போரானுங்க;
அவன் அவனும் கல்யாணம் முடிச்சு டவுன்லயே தங்கிட்டாங்க. இங்கே வந்து
கொஞ்சம் பாருங்கடான்னா கேக்கமாட்டேங்கிராங்க. லீவு இல்லை,
என்னால வரமுடியாது. நீங்க வேணும்னா,
அங்கே இருக்க நிலத்தை வித்துட்டு எங்கக்கூட வந்து தங்கிக்கோங்கன்னு
சொல்லுரானுங்க.
எங்க ரெண்டு பேருக்கும் இங்கே இருந்தா ஏதோ பொழுது போகும். இருக்க
நிலத்தையும் வித்துட்டு பசங்க கூட போயி,
எத்தனை நாளைக்குத்தான் சும்மா உக்கார வச்சு சோறுபோடுவாங்க. முடியாத
காலத்துல,
அங்கே ஏதாவது அனாதை இல்லத்துல கொண்டு விட்டுட்டாங்கன்னா என்ன பன்றது.
அது என்னவோ உண்மைதான் கார்மேகம். எம் புள்ளைங்களும் விவசாயத்தப் பத்தி
எங்கே நினைக்குராங்க. ஆனா அவங்களுக்குப் புரியல சாப்புடுர சாப்பாட
நாமதான் உற்பத்தி பண்ணுறோம். பணம் காசு இருக்கு அதை வச்சு
எல்லாத்தையும் வாங்கியரலாம்னு நினைக்கிறாங்க. அதுதான் இல்லை. பசின்னு
ஒன்னு இருக்குற வரைக்கும் விவாசாயம்ன்னு ஒன்னு இருக்கும் கார்மேகம்.
நான் சொல்லுரத கொஞ்சம் கேளுங்க குப்புசாமி. என்னதான் மாடா உழைச்சாலும்
நம்ம விளைவிக்கிர பொருளுக்கு நாம விலையை நிர்ணயம் பண்ண முடியுத?
எங்கேயோ இருந்து வந்த கார்பிரேட் கம்பனிக்காரன்;
சொல்லுர விலை கொடுத்து வாங்குறோம். உடல் ஆரோக்கியத்த தர்ர உணவை விட உடல
அலங்கரிக்கிர தங்கத்துக்கு முக்கியத்துவம் தர்ர நாட்டுல நாம
வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். விவசாயப் பொருளை ரோட்டுலையும் கால்ல போடுர
செருப்ப கண்ணாடி ஜோக்கெஜ்லயும் வச்சு அழகு பாக்குற சமூகத்துல வழுறோம்.
அரசு அதிகாரிகளுக்கு ஒன்னுன்னா சங்கம் வச்சு போராடுறாங்க,
விவசாயிக்கு ஒன்னுன்னா தற்கொலைப் பண்ணிக்கிரத விட வேற வழியில்ல.
விதையை மண்ணுல போட்டுட்டு
எப்ப அருவடைக்கு வரும்,
எப்ப அருவடைக்கு வரும்னு காத்துக்கிட்டு கிடக்குற விவசாயிகல விட;
நம்ம தலைவர் படம் எப்ப வரும்,
எப்ப வரும்னு காத்துக்கிட்டு கிடக்குற இளைஞர்கள் நிறைந்த சமுதாயத்துல
நாம இருக்குறோம். இதுல என்ன ஒரு வேடிக்கைன்ன,
அந்த
நடிகனை முதலமைச்சர்னு சொல்லிக்கிட்டு திரியுர கூட்டம் வேற நிறைய
இருக்கு. இவங்களுக்கு
மத்தியில விவசாயம் கொஞ்சமா பண்ணுனா போதும்னு சொல்லுற அரசாங்கம் ஒரு
பக்கம். விவசாய நிலங்களை பிளாட் போட்டு கட்டிடமாக்க நினைக்கும் ஒரு
கூட்டம்,
இன்னும் ஒருபடி மேலே போயி விவசாயிங்களின் உடல் அழுப்புக்கு மாலை
நேரத்து டாஸ்மர்க் வேற,
என்ன ஒரு கொடுமை குப்புசாமி.
என்னங்க கார்மேகம். கடும் கோபத்துல இருப்பிங்க போல?
தேச விரோதின்னு கைது பன்னிரப் போறாங்க.
யாருக்குமே விவசாயிங்க மேல அக்கறை இல்லைன்னா! விவசாயி எப்புடி வாழுறது
குப்புசாமி. எல்லாருமே டவுன்ல இருக்குர தங்களோட மகனுக்கிட்ட போயிட்டா;
கிராமத்துல இருந்து உணவு உற்பத்தி செய்யுறது யாரு?
ஆரோக்கியமா இருந்த உணவு முறையை அதிவேக உணவுமுறையா மாத்திட்டாங்க. பயறு
வகைகளை வாயில போட்ட நிலைமாறி;
மாத்திரைகளை வாயில போடுர நிலை உருவாகிருச்சு. என்னோட நிலத்த விலை
பேசுரத்துக்கு முக்கிய காரணம் சரியான வேளாண் அணுகுமுறை இல்லாததுதான்.
உலகத்துக்கே உணவு கொடுக்குர நம்மை எல்லோரும் ஒருநாள் இறைவனுக்கு சமமா
பாப்பாங்க அப்போதான் நம்ம நிலை உயரும். ஏர்முனைக்கு நேர் எதுவும்
இல்லை.
சரியா சொன்னிங்க கார்மேகம். ஒருநாள் இன்னைக்கு இருக்குற இயற்கை விதைகளை
மியூசியத்துல காட்சிப் பொருளா வச்சிருப்பாங்க. அப்போ நம்ம
பேரப்பிள்ளைங்க அதிசயமா பாப்பாங்க அந்த நிலை வராம இருக்கணும்னா இயற்கை
விவசாயம் செய்யுர உழவனுக்கு ஊக்கம் கொடுக்குற
இளைய தலைமுறைப் பிள்ளைகள்
உருவாகனும்.
சரிங்க குப்புசாமி. நேரமாகுது,
மூத்த பையன் வரச் சொன்னான்;
வீட்டுல இந்நேரம் கெளம்பி இருப்பா. அந்த கலத்து மேட்டுல எல்லா
நெல்கதிர்களையும் பரப்பி போட்டு வெய்யில்ல நல்லா காய வச்சிருங்க. ஏதோ
மூனு மாசம்
சாப்பாட்டுக்காவது ஆகும்.
நான் சொல்லுறேன்னு தப்பா நெனைச்சிக்காதீங்க கார்மேகம். உங்களையே நம்பி
வந்தவ அஞ்சலை அவளுக்குன்னு நீங்க எதுவும் செய்யல;
இதுவரைக்கும் உங்க பசங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து,
அவனுங்களுக்காகவே இந்த வயக்காட்டுல கெடந்து கஷ்டப் பட்டுரிக்கிங்க.
அஞ்சலையும் உங்க கூடவே கெடந்து உழைச்சி,
ஊழிச்சு ஆரோக்கியம் இல்லாம இருக்காங்க போல;
என்னோட மனைவிக்கிட்டா ஏதோ வயித்துல வலி இருந்த்துக்கிட்டே இருக்குன்னு
சொல்லிருக்காங்க. கொஞ்சம் அதையும் கவனிங்க. அதான் மூத்த பையன பாக்கப்
போறேன்னு சொல்லுரிங்களே அவனுக்கிட்டே சொல்லி ஆஸ்பத்திரில கொண்டு
காமிச்சுக்கிட்டு வாங்க.
என்னத்த சொல்ல குப்புசாமி. உடம்புக்கு ஏதாவதுன்னா சொன்னாத்தானே
தெரியும். அவளும் கலியாணம் முடிச்சு வந்த நாள்ளே இருந்து எனக்கு எந்த
தொந்தரவும் கொடுத்தது இல்லை. நம்மளோட பிள்ளைங்க நல்ல நெலைமைக்கு வரனும்
அப்புடி இப்புடின்னு எல்லதையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சுக்குவா.
நம்ம விவசாயம் செஞ்சு வர்ர வருமானத்துல எங்க போயி வையித்தியம்
பாக்குறது,
டவுன்ல இருக்குற பசங்ககிட்ட போயிதான் நிக்கணும். விவசாயிங்க ஒருநாள்
முதலாளியா ஆவங்க அப்போதான் நமக்கு நல்ல காலம் வரும். இந்த நிலையும்
மாறும். உலகத்துக்கே உழவுதான் உயர்ந்தது,
உழவன்தான் சிறந்தவன் என்ற நிலை வரும் என்று சொல்லிவிட்டு கார்மேகம்,
வயலைக் கடந்து வீட்டிற்கு சென்றார்.
மகன்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். என்னடா ஒன்னுமே சொல்லாமே இப்புடி
திடீர்னு வந்து இருக்கீங்க.
அதான்... அப்பா... அதான்... என்றவாறு மூத்தவன் அலத்தொடங்கினான்.
ஏண்டா அலுவுர என்ன ஆச்சு என்றபடி கார்மேகம் அருகே சென்றார்.
கம்பனியில வேல இல்லைன்னு சொல்லிட்டாங்க. நாங்களும் மூனு மாசம் கடன ஒடன
வங்கி சாமலிச்சோம் முடியல அப்பா;
அதான் ஊருக்கே போயிரலாம்னு வந்துட்டோம்.
சரிடா அதுக்கு ஏன் அலுவுரே;
நீ விவசாயி மகன்டா நமக்கு நிலம் இருக்கு;
உழுதுண்டு வாழலாம்டா. மற்ற எல்லோரும் நம்மைத் தொழுது பின்னாலே வருவாங்க
என்று நம்பிக்கை கொடுத்தார்.
கண்ணீரைத் துடைத்தவன் கலப்பையைத் தோளில் ஏந்தி நிலம் நோக்கிப்
புறப்பட்டான்.
முனைவர் கிட்டு முருகேசன்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி
காளப்பட்டி சாலை,
கோயாம்புத்தூர் - 641 048
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|