ஆசை முகம் மறந்து போமோ?
குரு
அரவிந்தன்
இவன்
விளக்கை அணைத்துவிட்டு கட்டிலை நோக்கி வந்தபோது அவள் கண்களை இறுக மூடிக்
கொண்டாள். உணர்வுபூர்வமாய் அவள் தன்னைத் தருவதற்குத் தயாராக இருந்தாலும்,
மனசும் உடம்பும் முதலில் ஒத்துழைக்க மறுத்ததென்னவோ உண்மைதான். இவனது
மெல்லிய வருடலில் எழுந்த அந்த ஸ்பரிசம், அது தந்த உணர்வுகள் எல்லாமே அவளை
ஒரு கணம் உறைய வைத்தன. கற்பனையில் இதுவரை கண்டதெல்லாம் கண்முன்னால்
காட்சியான போது, பட்டும் படாமலும் விலகி இருக்கவே மனசு நினைத்தாலும்,
இவனிடம் தன்னைத் தந்துவிடவே அவள் விரும்பினாள்.
என்னாச்சு என்று புரியவில்லை. ஏல்லாமே புதுமையாக இருந்தன. அதிகாலை
விழித்தபோது யன்னலுக்கால் தெரிந்த வானம், ஜில்லென்று வீசும் காற்று,
புள்ளினங்களின் கீதம் எல்லாமே அவளுக்குப் புதுமையாக இருந்தன. ஏன் அவளது
படுக்கையில் பட்டு வெள்ளிச் சிதறலாய் தெறித்த காலைக் கதிர்கள்கூடக் கதைகள்
பல சொல்லி அவளுக்குக் கிளுகிளுப்பூட்டின.
மூடிய கண்ணுக்குள் யார் இருந்தார்கள் என்பது தான் அவளுக்கும் புரியாத
புதிராக இருந்தது. மங்கிய நினைவுபோல அடிக்கடி அது வந்து வந்து போனது.
வெறுக்கிற மனசு அவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாலும், அவனை
மறந்துவிடுவதில் இவள் பிடிவாதமாய் இருந்தாள்.
'நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும்'
இவளுக்குக் கவிதையில் இருந்த ஈடுபாட்டை அவன் தனக்குச் சாதகமாக்கிக்
கொண்டான். தெரிந்த தெரியாத கவிகளிடம் எல்லாம் யாசித்து அவன் அள்ளியள்ளி
வீசிய வார்த்தைகள் அவளை நிலைகுலைய வைத்ததென்னவோ உண்மைதான்.
வேண்டாம், எதுவுமே வேண்டாம் என்று ஏல்லாவற்றையுமே அவள் மறந்து விட்டாள்.
புதிய இடம், புதிய வாழ்க்கை, புதிய முகம் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்ளப் பழகிக் கொண்டாள்.
இவன் எழுந்து குளியலறை நோக்கிச் செல்லும் சத்தம் காதில் பட்டுத் தெறித்தது.
இனி என்ன, இவனைக் கைப்பிடித்த நாளில் இருந்து தினம் தினம் நடக்கும் ஒரு
சம்பவம்போல இதுவும் தொடரும். இவன் கிளம்பி விடுவான். இரவு மீண்டும்
வருவான். மீண்டும் இதே படுக்கை அணைப்பில் தினந்தினம் வித்தியாசமான கதைகள்
சொன்னாலும் அவள் அதற்காக ஏங்கியதில்லை. இனி அவளுக்கு இதுதான் வாழ்க்கை,
பெரியோர் நிச்சயித்த வாழ்க்கை, இதுதான் சமுதாயம் அவளுக்காக அங்கீகரித்த
வாழ்க்கை என்றாகி விட்டது.
இதற்காகவா, இந்த வாழ்க்கைக்காகவா அவள் இத்தனை துன்பங்கள் துயரங்கள்
எல்லாம் தாண்டி வந்தாள். தெரியவில்லை. ஆனால் மனதிலே அவன்மீது கொண்ட
வெறுப்பு தீராத வெறியாக நிலைத்து நின்றது. தான் தோற்றுப் போய்விடவில்லை
என்பதை நிரூபிக்க அவளுக்கு இவனுடனான இந்த வாழ்க்கை தேவையாயிருந்தது. அதையே
அவள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள்.
இவ்வளவு நெருக்கமாய்ப் பழகிவிட்டு சட்டென்று பிரிந்து செல்ல அவனால் எப்படி
முடிந்தது. அதைத்தான் அவளாலும் நம்பமுடியாமல் இருந்தது. அவர்களது காதல்
வாழ்க்கையில் அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பாக இருக்கும் என்று
அப்போது அவள் நினைத்ததில்லை. எதிரெதிரே அமர்ந்திருந்தாலும், நீண்ட
மௌனத்தின்பின் அவன்தான் வாய் திறந்தான்.
'காலையில நான் ஊருக்குப் போகிறேன்' என்றான்.
எப்போ திரும்பி வருவாய்?' என்றாள் சாதாரணமாக.
அதற்கு அவன் பதில் சொல்லாது மௌனமாக இருந்தான்.
கலகலப்பாக எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் அவனது மௌனம் அவளுக்குள்
பயத்தைத் தந்தது. எதையோ அவன் சொல்லத் தயங்குவதும் புரிந்தது.
'சீக்கிரம் வந்திடுவேன்' என்றான்.
'சீக்கிரம் என்றால்..'
'தெரியாது!' என்றான்
'பிளீஸ், சீக்கிரம் வந்திடு, காத்திருப்பேன்!' என்றாள்.
அவனது தயக்கம் அவளை அச்சமுற வைத்தாலும், அவள் அவனது வார்த்தைகளை நம்பினாள்.
அப்படியான ஒரு நம்பிக்கையில்தான் அவள் அவனோடு இதுவரை நெருங்கிப் பழகினாள்.
வழமைபோலவே அவனுக்காக அவளும் காத்திருந்தாள். சொன்ன சொல்லைக் காப்பவன்போல,
சொன்னபடியே அவனும் திரும்பி வந்தான், ஆனால் தன்னோடு ஒரு துணையையும் கொண்டு
வந்தான். அவளோ அதிர்ந்து போய் நின்றாள். அதற்காக ஆயிரம் காரணங்கள் அவன்
சொல்ல நினைத்திருக்கலாம், ஆனாலும் அவள் கேட்கிற நிலையில் இருக்கவில்லை.
எல்லாமே இடிந்து சரிந்து கண்முன்னால் சிதறிவிட்டது போல... வாழ்க்கையே
அஸ்தமித்து விட்டது போலத் தவித்தாள்.
'கோழைகளுக்கு ஏன்டா காதல்' என்பது போன்ற பாவனையோடு ஒரு புழுவைப்
பார்ப்பதுபோல அவனைப் பார்த்தாள். அவன் எதுவுமே நடக்காததுபோல முடிவாக ஒரு
சொறி சொல்லிவிட்டு, இதெல்லாம் சகஜம் என்பதுபோல நகர்ந்தான்.
இவ்வளவுதானா, இவ்வளவுதானா? ஒரு சொறியோடு எல்லாமே முடிந்து போயிற்றா?
அவள் பதற்றத்தோடு நின்றாள். அதன் பிறகு சொறி என்ற சொல்லைக் கேட்டாலே
அவளுக்கு எரிச்சல்தான் வந்தது. செய்வதெல்லாம் செய்துவிட்டு எவ்வளவு
இலகுவாகச் சொல்லி விட்டு நழுவி விடுகிறார்கள்.
அந்த நிலையில் அவளால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. நம்பிக்கை என்ற
கோட்டை உடைந்து சரிந்தபோது அவளும் மனமுடைந்து போனாள். அவளோ தன்னால்
முடிந்த மட்டும் அவனை மறந்துவிட முயற்சி செய்தாள்.
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
வீட்டிலே பிரளயம் நடந்தது. அவள் எதிபார்க்காத கோணத்தில் இருந்தெல்லாம்
தாக்குதல் தொடுத்தார்கள். தப்பான ஒருவனைக் காதலித்த பாவத்திற்காக
எல்லாவற்றையும் இடிதாங்கிபோலத் தாங்கிக் கொண்டாள். மனமுடைந்து போனபோது,
ஆற்றாமையால் தற்கொலை செய்து விடுவோமோ என்றுகூடப் பயந்தாள்.
'காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்'
காதல் என்ற சொல்லுக்கு அவனுக்கு அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. இடையே எது
அவனது கண்ணை மறைத்தது என்பதும் இவளுக்குப் புரியவில்லை. எல்லாமே சட்டென்று
அடங்கிப்போன உணர்வில் நாட்கள் மாதங்களாய்க் கழிந்தபோது அவள் மீண்டும்
விழித்துக் கொண்டாள். எவ்வளவு முட்டாள் தனமாக நடக்கவிருந்தேன் என்று
தன்னைத் தானே நொந்து கொண்டாள். அவன் மட்டும் சந்தோஷமாய் இல்லற
வாழ்க்கையில் ஈடுபட, நான்மட்டும் ஏன் ஏங்கித் தவிக்க வேண்டும் என்று
தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அதுவே ஒரு வெறியாக உருவெடுத்தது.
எவ்வளவு காலத்திற்குத்தான் காத்திருப்பது. தந்தை தயங்கித் தயங்கிக்
கேட்டபோது சம்மதம் என்று சட்டென்று ஒத்துக் கொண்டாள். அவர் ஆச்சரியத்தோடு
அவளைப் பார்த்துவிட்டு நகர்ந்தார்.
வந்தவனுக்குக் தனது கடந்த காலத்தை எடுத்துச் சொன்னாள். அவன்
சிரித்துவிட்டு,
'இதெல்லாம் சகஜம். மனசாலகூட விரும்பாதவங்கள் யாராவது இருப்பாங்களா, அப்படி
இருந்தால் ஒருத்தரைக் காட்டுங்க பார்க்கலாம்' என்று திருப்பிக் கேட்டான்.
இப்படியும் ஒருவனா? என்று அவள் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
'இல்லை, நான் சொல்ல வந்தது..!'
'தெரியும்! உன்னுடைய கடந்தகாலம் எனக்குத் தேவையில்லை. என்னோடு வாழப்போகிற
வாழ்க்கைதான் எனக்கு முக்கியம். அதிலே நீ தெளிவாக இருந்தால் அதுவே
எனக்குப் போதும்!' என்றான்.
அவளை அவன் அதிகம் பேசவிடவில்லை. புரிந்துணர்வு உள்ளவனாகப் பெருந்தன்மையோடு
அவன் நடந்து கொண்டான். பெரியதொரு சுமையை இறக்கிவைத்ததுபோல அவள் உணர்ந்தாள்.
கடந்த காலத்தைப் பற்றி அவனோ அவளோ அலட்டிக் கொள்ளவில்லை. இதுதான் வாழ்க்கை
என்று ஆனபிறகு அதைப்பற்றி எல்லாம் அலசி ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை.
அவனுக்குக்கூட அவளைப் போன்ற காதல் அனுபவம் இருந்திருக்கலாம். அதை
வெளிக்காட்டுவதாலோ அல்லது அதைப்பற்றி அறிய முயல்வதாலோ எந்தப் பலனும்
கிடைக்கப் போவதில்லை. கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதுதான் மனித இயல்பு
என்றாலும் அந்த நினைவுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிடவே அவள்
விரும்பினாள். எதைஎதையோ நினைத்து, இருப்பதை இழந்துவிடாமல் இருப்பதுதான்
வாழ்க்கைக்கு அழகு என்பதைப் புரிந்து கொண்டாள். இன்றைய அவளது இந்த
வாழ்க்கை நிஜம். அதிலே மாற்றாரின் தலையீட்டைத் தவிர்த்துக் கொண்டால்
எல்லாமே சுகமானதுதான் என்பதை உணர்ந்து கொண்டாள். வாழ்க்கை வாழ்வதற்கே
என்பதை உணர்ந்து கொண்டதால் யதார்த்தத்தை ஏற்று அவளும் வாழப்பழகிக்
கொண்டாள்.
kuruaravinthan@hotmail.com
|