பிள்ளைபிடிகாரரும் பணக்கார அகதிகளும் அண்ணாவாகிய நானும். . .  

வி. ஜீவகுமாரன்

கண்ணன். வயது
6. முதலாம் ஆண்டு.

கார்த்திகா. வயது
12. ஆறாம் ஆண்டு.

'சமூகசேவை அமைச்சின் குழந்தைகள் நலன்காப்புத் திட்டத்தின் கீழ் கண்ணனுக்கும் கார்த்திகாக்கும் தமது சொந்த வீட்டிலே தம் பெற்றோர்களுடன் வாழ்வுதற்கு போதியளவு பாதுகாப்புச் சூழல் இல்லாத காரணத்தாலும், தொடர்ந்தும் அவர்கள் அங்கு வாழ்ந்தால் எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக வளரமாட்டார்கள் என நகரசபை கருதுவதாலும் அவர்கள் இருவரையும் இன்றிலிருந்து இந்த நகரசபை பொறுப்பேற்று குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கின்றது.

அவர்களின்; பெற்றோர்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை சென்று அவர்களைப் பார்வையிடலாம். அச்சமயம் சமூகசேவை பணியாளர் ஒருவரும் உடன் இருப்பார்'

தீர்ப்புச் சொன்னதும் சிவமதி, 'ஐயோ என்ரை பிள்ளையள் இல்லாமல் நான் செத்துப் போவன் அண்ணை. இனிமேல் நாங்கள் வீட்டிலை சண்டை பிடிக்க மாட்டம் என்று சொல்லுங்கோ. . . . பாவி. . பாவி. . .சொன்னனான் தானே. . .குடியாதையுங்கோ. . .எனக்குப் போட்டு அடிக்காதையுங்கோ எண்டு. . .இப்ப பார்த்தியளே. . . .' என தங்கராஜனையும்; என்னையும் நீதிபதியையும் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

கண்ணனையும் கார்த்திகாவையும் சமூகசேவைப் பிரிவின் உயர்அதிகாரி அணைத்து வைத்திருந்தாள்.

சிவமதியை பரிதாபமாக பார்த்தபடி நீதிபதி எழுந்து போய் விட்டார்.

என்னால் எதுவும் செய்ய முடியாது.

எனது மொழிபெயர்ப்பு பணி முடிந்து விட்டது.

சிவமதியின் அழுகைக் குரல் காதில் கேட்டபடியே இருக்க காரில் போய் ஏறினேன்.

நகரசபைக் கட்டடத்திற்கு வெளியே தங்கராஜன் தலையைக் குனிந்தபடி சிகரட்டின் அடிக்கட்டையை உறிஞ்சிக் கொண்டு நின்றான்.

தங்கராஜனைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.

தங்கராஜான் என்னளவில் பத்தோடு பதினொன்று இல்லை. மிக மதிப்பு வைத்து இருந்தேன். எந்த விழாக்களில் கண்டாலும் அண்ணா, அண்ணா என்று நன்றாக கதைப்பான். இவனுக்குள் எப்படி இன்னொரு தங்கராஜன்? என்னால் நம்ப முடியவில்லை.

எங்களை வைத்து தானே நாம் சக மனிதர்களை அளக்கின்றோம். என்னைப் போன்ற ஒரு ஆளாகாத்தான் நான் மற்றவர்களை நான் நம்புவதும். . .பின்பு ஏமாறுவதும். . .இது ஒன்றும் புதிதில்லை. . .
2010வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. . . என்னதான் அலேட்டாக இருந்தாலும் அது நடந்து விடுகிறது. . .
இப்பொழுதெல்லாம் யாராவது அண்ணா என்று அழைத்துக் கொண்டு என்னருகில் நெருங்கினால் ஒன்றில் பயமாக இருக்கிறது. . அல்லது அருவருப்பாக இருக்கிறது.

எனது கார் புறப்பட்டது.

அடுத்த அரைமணித்தியாலத்துள் மற்ற சிற்றியில் உள்ள ஆஸ்பத்திரியின் அவசர நோயாளர் பிரிவில் நிற்க வேண்டும் - மொழிபெயர்புக்காக அழைத்திருந்தார்கள் - ரமணனுக்கு நெஞ்சிலை அடைப்பாம். ரமணனை பொது இடங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் பெரிய பழக்கம் ஏதுமில்லை.

------------------

'எனக்கு உன்னைப் பிடிக்கேல்லை சிவமதி. . .நாங்கள் பிரிஞ்சு போயிடலாம்'

ஆறு வருடத்திற்கு முதல் தங்கராஜன் சிவமதியைப் பார்த்து சொன்னது. அதுவும் .கண்ணன் பிறந்து நாலாம் நாள் ஆஸ்பத்திரியில் இருந்து துண்டு வெட்டிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்த பொழுது தங்கராஜன் சொன்னது.

தங்கராஜன் சொன்ன பொழுது அவன் விளையாட்டுக்கு சொல்லுகின்றான் என்று தான் சிவமதி நினைத்தாள்.

'பகிடிக்கு சொல்லுறியளோ'

'இல்லை உண்மையாய்த் தான் சொல்லுறன்'

'நான் என்ன பிழை விட்டனான்'

'எந்தப் பிழையும் விடேல்லை. . .ஆனால் எனக்குப் பிடிக்கேல்லை'

'அப்பா. . விளையாடாதையுங்கோ. . .பிள்ளை பிறந்த வயிற்றுப்புண் எனக்கு இன்னமும் மாறேல்லை'

'நான் விளையாடேல்லை. . . ஆனால் எனக்கு உம்மோடை வாழவிருப்பம் இல்லாமல் இருக்கு'

'என்னப்பா சொல்லுறியள். . . உங்களுக்கு என்ன குறை விட்டனான்'

'எந்தக் குறையும் விடேல்லை. . . ஆனால் வாழவிருப்பம் இல்லாமல் இருக்கு'

'ஐயோ தயவு செய்து சொல்லுங்கோ. . . நான் இல்லாத ஒரு கிழமையுள் என்ன நடந்தது?'

தங்கராஜா மௌனமாக இருந்தான்.

நேரம் போய்க் கொண்டு இருந்தது.

அவன் இளகுவதாய் காணவில்லை.

'தயவு செய்து சொல்லுங்கோ. . . எனக்கு நெஞ்சுக்கை அடைக்குது. . .இந்த பச்சை மண்ணுக்கு பால் குடுக்கேலாமல் இருக்கு. . .'

'இனிமேல் நீர் வேலைக்கு போக வேண்டாம் . . . வீட்டிலை இருந்து கார்த்திகாக்கு படிப்பீச்சா போதும். . .'

'நான் வேலைக்குப் போறதுக்கும் . .கார்த்திகாக்கு படிப்பிக்கிறதுக்கும் என்ன தொடர்பு'

'நீர் ஆஸ்பத்திரியிலை இருக்கேக்கை பள்ளிக்கூடத்திலை இருந்து கதைக்க கூப்பிட்டவை'

'அதுக்கென்னப்பா. . .அது வழமையாய் நடக்கிறது தானே'

'இந்த முறை அப்பிடி இல்லை'

சிவமதி நிமிர்ந்து பார்த்தாள்.

'கார்த்திகா வகுப்பில் உற்சாகமாக இல்லையாம். . .மாக்ஸ்களும் நல்லாய் இல்லையாம் . . மேலாக பிள்ளை தனிச்சுப் போனமாதிரி இருக்கிறாளாம். . . பள்ளிக்கூட மனோதத்துவர் கூப்பிட்டு அவளோடை கதைத்தவராம். . . அது தான் இனி நீர் வேலைக்குப் போக வேண்டாம். . . '

'பிள்ளையோடை கொஞ்சம் கூட இருக்க வேணும் எண்டது சரியாய் இருக்கலாம். . . ஆனால் அதுக்காக வேலைக்குப் போகாமல். . . யோசிச்சுப் பாருங்கோ . . ஊரிலை இருந்தால் தம்பியை இழுத்துக் கொண்டு போயிடுவங்கள் எண்டு தானே அதுகள் இந்தியாக்கு வந்ததுகள். . அதுவும் .என்னை நம்பித் தானே'

' நீ உன்ரை குடும்பத்தை பார்க்கிறதுக்கு என்ரை பிள்ளை பலி ஆக வேணுமோ'

அவளுக்கு சுள் என்றது.

வாழ்க்கையில் முதல் தடவை 'நீர்' என்பது 'நீ' ஆனது.

மடியில் கிடந்த குழந்தை மார்பை முட்டியது.

கண்கள் தன்பாட்டில் கொட்டியது.

'அப்பா நான் பின்னேரத்திலை ஆக நாலு மணித்தியாலம் வேலைக்குப் போறன். அந்த நேரம் தான் நீங்கள் வொலிபோல் எண்டும், கிறி;கட் எண்டும், புட்போல் எண்டும் திரியுறனிங்குள் . . .'

'நிற்பாட்டு கதையை... நீ எங்கை வாறாய் எண்டு எனக்குத் தெரியுது. ..நான் சந்தோஷமாக இருக்கிறதே
அந்த நேரங்களிலை தான். . .'

இரண்டாது தடவையும் 'நீர்' என்பது 'நீ' ஆனது.

'அப்பா நீங்கள் விளையாட்டைப் பற்றிக் கதைக்கிறியள். . . நான் இந்தியாவிலை றோட்டிலை நிக்கிறதுகளை பற்றிக் கதைக்கிறன்'

'வந்தவை மண்டபத்திலை இருக்கிறது தானே. . . அதுக்கு நானோ பொறுப்பு. . . அதுகள் வந்தது தொடக்கம் இந்த ஒரு வருஷமும் நீ நீயாக இல்லை. எப்பவும் அவையின்ரை யோசினையும். . . அவைக்கு ரெலியோன் எடுத்து அலட்டிக் கொண்டு. . . அவை சந்தோஷமாய் இருந்தால் தான் நீ இங்கை சந்தோஷமாய் இருக்கிறாய்... எனக்கு என்னவோ இரண்டு வீடு நடக்கிற மாதிரி இருக்கு'

சிவமதி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

ஆனால் முடியவில்லை.

இரண்டு வீடு!

'இதுக்காகத் தானா என்னைப் பிடிக்கேல்லை' சிவமதி தனக்குள் தான்.

அது அவளை உலுக்கி எடுத்தது.

அவருக்கு மட்டும் இரண்டு வீடு இல்லையா?

தனது தங்கச்சிக்கு கலியாணம் என்றதும் ஐந்து வீத வட்டிக்கு காசு புரட்டி அனுப்பினவர் தானே?
நானும் இளைய மச்சாளின் கலியாணம் நல்லாய் நடக்கட்டும் என்று சேர்ந்து தானே செய்தனான்.

பெரிய தமக்கையின் மகனை கூப்பிட பாங்கில் கடன் எடுக்க நானும் தானே கையெழுத்துப் போட்டனான்.
பெரிய மச்சாளின் மகன் நல்லாய் வரட்டும் என்று தானே செய்தனான்.

இப்போ இது இரண்டாவது வீட்டுப் பிரச்சனையாய் போய் விட்டது.

பிரச்சனை சிவமதி வீட்டுக்கு காசு அனுப்புவதா? . . . இல்லை கார்த்திகா படிக்காமல் இருப்பதா?

திருப்பிக் கதை என மனது சொன்னது.

வேண்டாம் என அறிவு சொன்னது.

மனது சொல்லதைக் கேட்பதா. . . அறிவு சொல்வதைக் கேட்பதா. . என்று போராட்டம் முடிய முதல். . . கார்த்திகா பந்தை எடுத்துக் கொண்டு வெளியில் போகப் புறப்பட்டாள்.

'எங்கையடி போறாய்?' தங்கராஜன் முறுகினான்.

குழந்தை திகைத்து நின்றது

சிவமதியால் மேலும் அடக்க முடியவில்லை.

'என்னிலை உள்ள கோபத்தை ஏன் பிள்ளையிடம் காட்டுறியள்'

'பொத்தடி வாயை. . .' என்றவன் மகளின் பக்கம் திரும்பி ' போயிருந்து படியடி. . . '

'ஸ்ரீனா கீழை எனக்காக. . . .' கார்த்திகா சொல்லி முடிக்கவில்லை, தங்கராஜன் பளார் என பிள்ளையின் கன்னத்தில் அறைந்தான்.

கார்த்திகா போய் சோபாவின் கரையில் விழுந்தாள்.

இது இவர்தானா? இவருக்கு என்ன நடந்தது. சிவமதிக்கு எதுவுமே புரியவில்லை.

'கொம்மா மாதிரி நீயும் வாய் காட்டத் தொடங்கீட்டாய். . . . துலைச்சுப் போடுவன்'

கார்த்திகா நடுங்கினாள் - கடைவாயில் இருந்து இரத்தம் கொஞ்சம் கசிந்தது.

'என்ரை கோபத்தை ஏன் அவளிலை காட்டுறியள்?' சிவமதி பலத்துக் கத்தினாள்.

'ஏனடி இப்ப கத்துறாய். . . ' என திரும்பியவனின் புறங்கை சிவமதியின் கன்னத்தை விளாசியது.

கார்த்திகா ஓடி வந்து தாயைக் கட்டிக் கொண்டாள்.

'வீட்டை இருக்கிற எண்டால் ஒழுங்காய் இருங்கோ. . . இல்லாட்டி எங்கையாலும் போய்த் துலையுங்கோ' என்றவாறு சேட்டைப் போட்டுக் கொண்டு வெளியே போய்விட்டான்.

ஒரு சின்னத் தீக்குச்சி. . .ஒரு சின்ன உரசல் . . .கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தங்கராஜனும் சிவமதியும் அன்று முழக்க தூங்கவே இல்லை.


------------------------------------------
 

அடுத்தநாள் பின்நேரம் கார்த்திகாவின் வகுப்பாசிரியர், அந்த நகரசபையின் சமூகசேவை உத்தியோகஸ்தர் ஒருவர் கார்த்திகாவுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

கார்த்திகா முதன் நாள் வீட்டில் நடந்ததை தானாக சொல்லியிருக்க வேண்டும். . . அல்லது கடைவாயின் கண்டலைப் பார்த்து வகுப்பாசிரியர் கேட்டிருக்க வேண்டும்.

வீட்டுக்குள் வந்தவர்கள் சிவமதியின் கன்னத்தில் இருந்த கண்டலைப் பார்த்த பொழுது விக்கித்து நின்றார்கள்.
தங்கராஜன் தலையைக் குனிந்து கொண்டான்.

சிவமதி தங்கராஜனைக் காப்பாற்ற எவ்வளவோ கதைகளைச் சோடித்துப் பார்த்தாள் - எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.

எதுவுமோ பிரயோசப்படவில்லை.

கார்த்திகாவின் வார்த்தைகளைத் தான் அவர்கள் நம்பினார்கள்.

அதன் பின்பு என்ன?

ஒரு அரை மணித்தியாலமாக தங்கராஜனுக்க ஆயிரம் புத்திமதிகள் . . அந்தப் புத்திமதிகளுக்குப் பின்னால் ஆயிரம் மிரட்டல்கள். . .உடலையோ. . . அன்றில் மனத்தையோ. . . தாக்கும் எந்த வன்முறையையும் இந்த நாட்டில் பாவிக்க கூடாது என்பதுதான் தொனிப்பொருளாய் இருந்தது. அதை மீறினால் பிள்ளையை நகரசபை எடுத்துவிடும் என்ற மிரட்டல் இருந்தது.

சனியன் வீடு மாறுவதற்கும் நகரசபை வீட்டுக்குள் கால் வைப்பதற்;க்கும்; இங்கு பெரிய வித்தியாசம் இல்லை.
முதலாவதை எள் எண்ணை எரித்தும் விரதங்கள் இருந்தும் அகற்றலாம். ஆனால் மற்றதை அகற்றுவது மிகவும் கடினம். சோரம் போன மனைவியை கணவன் ஏற்றுக் கொண்டாலும், திருந்தி விட்டேன் என்று சொல்லும் இந்த கிழக்காசிய, ஆபிரிக்க நாட்டு ஆண்களை டென்மார்க் நம்புவதற்கு அதிக காலம் எடுக்கும்.

அவர்கள் போகும்வரை தங்கராஜன் தலை நிமிரவே இல்லை.

அவர்கள் போன பின்பு அவன் சிவமதியைப் பார்த்துக் கேட்டது,

'இப்ப திருப்தி தானே. . .'

ஆனால் சிவமதி எதுவும் கதைக்கவில்லை.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தவன், பின் என்ன நினைத்தானோ சேட்டை மாற்றிக் கொண்டு வெளியே
போனான்.

போனவன் திரும்பி வந்த போது அவனில் ஒரு புது வாடை வீசியது.

நடையிலும் தள்ளாட்டம் இருந்தது.

கெட்ட காலம் தொடங்கி விட்டது என சிவமதி மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள்.


------------------------------------------------

பின்பென்ன?

கார்த்திகாவிற்கு பாடசாலையில் விசாரணைகள். . . வீட்டில் அவர்கள் வந்து சம்பாஷணைகள். . .பின் நகரசபையில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆராய்வுகள். . .கூட்டங்கள். . . இடைக்கிடை நானும் மொழிபெயர்ப்பாளராக.

தங்கராஜன் தனக்குள்ளே ஒரு உலகத்தை வரிந்து கொண்டு. . . பிள்ளை படியாது போனதற்கு தனது தவறுகளுக்கு எல்லாம் சிவமதியே காரணம் என்று சொல்லிக் கொண்டும். . .குடித்துக் கொண்டும். . . அடித்துக் கொண்டும். . .சிவமதியும் தனக்குள் புளுங்கிக் கொண்டும். . .அழுது கொண்டும். . . . சிவமதியின் பெற்றார்கள் இலங்கைக்கு திரும்ப முடியாமலும். . . சிவமதி களவாக அனுப்பும் சின்னத் தொகை பணத்தடன் இந்தியாவில் நிம்மதியாக வாழமுடியாமலும். . . சிவமதிக்காக கோயில்களுக்கு விரதம் இருப்பதும். . .சாத்திரம் கேட்பதும் என வாழ்க்கை தன் வழியில் . . .விதியை சொந்தபடி . . .

கார்த்திகாவும் தாயின் கெஞ்சல்களுக்கு இரங்கி பாடசாலையில் பொய் சொல்லப் பழகியிருந்தாள் - எதுவும் வீட்டில் நடப்பதில்லை என்று.

உச்சி மரத்தில் இருக்கும் கழுகு எப்போ கோழிக்குஞ்சைத் தூக்குவோம் என்று பார்த்துக் கொண்டிருப்பது போல தங்கராஜனின் குடும்பத்தின் மீது குறிபார்த்துக் கொண்டிருந்த நகரசபையின் பக்கம் பலம் கூடிக்கொண்டே வந்தது.

காலமும் கணனி வேகத்தில் ஓடிக் கொண்டு போக கைக்குழந்தையாய் இருந்த கண்ணன் பாலர் வகுப்புக்கு போன இரண்டாம் நாள் உச்சக் கட்ட நாடகம் நடந்தது.

எல்லாப் பிள்ளைகளும் சாப்பாட்டு மேசையை சுற்றி இருந்திருக்கிறார்கள்.

எல்லோருக்கும் அருந்துவதற்காக தண்ணீரும் சோடாவும் யூசும் கொடுக்கப்பட்ட பொழுது, கண்ணன் தனக்கு முன்னால் பியர் போத்தல் கொண்டு வந்து வைக்கும்படி சொல்லியிருக்கிறான். அனைத்துப் பிள்ளைகளும் 'கொல்' எனச் சிரிக்க, முகம் சிவந்த அவன் முன்னால் இருந்த சோடாப் போத்தலை தூக்கி எறிந்திருக்கின்றான்.
முன்னே இருந்த பெண் பிள்ளையின் நெற்றி கண்டியது.

போதாததுக்கு இப்பிடித்தான் அப்பா அம்மாக்கும் அக்காக்கும் எறிகிறவர் எனச் சொல்லியிருக்கிறது குழந்தை.

இது போதுமே. . . .

உச்சி மரத்தில் இருந்த கழுகு நேராக கீழே வந்து அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில் அமர்ந்தது.

மிகுதி எதுவும் வெள்ளித் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


-------------------------------------


ரமணன் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப்பிரிவை அடையும் வரை என் மனம் முழுக்க தத்துவ விசாரணைகள் தான்.

தங்கராஜனில் பிழையா? சிவமதியில் பிழையா? வன்னியில் இருந்தால் தம் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போவார்கள் என்ற பயத்தில் கட்டிக் கொடுத்த மகளின் காசில் வாழ இந்தியாவுக்கு வந்த அவளின் பெற்றோர்களின் பிழையா? எது சரி?. . .எது பிழை?

எல்லாமே நாங்கள் போட்ட வேலிகள். . . காலத்திற்கு காலம் புதுக்கதியால்களை நாங்கள் தானே போடுகின்றோம்.. .கிலுவை வேலி பூவரசு வேலியாகிறது. . .வெங்காயம் போட்ட இடத்தில் புகையிலை போடுகின்றோம். . .அச்சுவேலியானின் நியாயங்கள் ஐரோப்பாவில் தோற்கிறது. . .ஐரோப்பாவின் அரசியல் அமெரிக்காவில் நசுங்கிப் போகிறது. ஏல்லாமே அரசியல். . .பொய்களை நியாயமாக்கும் அரசியல். . . உண்மை உண்மை என்று கூறி பொய்களை விற்கும் அரசியல். தப்பித்து வாழ தன் மனைவியையே சோரம் போக வைக்கும் அரசியல். பாங்ஸ்பலன்ஸ் மட்டும் வைத்து வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியல்.

இந்த சாக்கடைக்குள் சிவமதியின் குடும்பம் நசுங்கிப் போனதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. . அங்கும் கழுகுகள். . .இங்கும் கழுகுகள். . .அங்குள்ளவர்களின் சிரிப்பிலும் அழுகையிலும் தான் இங்குள்ளவர்களின் காலை சந்தோஷத்துடன் அல்லது துக்கத்துடன் விடிகிறது என அண்மையில் நான் தமிழ்ச் சங்கத்தில்; பேசியது நினைவுக்கு வந்தது.

அவசரப் சிகிச்சைப் பிரிவு வாசலை முழுக்க எங்களின் சனம் நிறைத்திருந்தது.

பெரிய டாக்டர் வந்து ரமணணின் மனைவியையும் என்னையும் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

ரமணன் மயக்க நிலையில் இருந்தான்.

கணனித்திரை அவன் உயிருடன் இருக்கின்றான் எனக் காட்டிக் கொண்டு இருந்தது.

அடுத்து ரமணனுக்கு நடக்க இருப்பவைகளை டாக்டர் விளக்கமாக சொல்லத் தொடங்கினார்.

நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

மொழிபெயர்ப்பு முடிந்த பொழுது ரமணனின் மனைவி தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு என்னையும் டாக்டரையும் இரண்டு கைகளாலும் கும்பிட்டாள்.

வெளியே நான் வந்த பொழுது எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

நான் சொன்ன தகவல் அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும் - அவர்களின் முகங்களில் அது தெரிந்தது.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த பொழுது யாரோ தொடர்ந்து வருவது போல இருந்தது.

திரும்பிப் பார்த்தேன்.

'அண்ணா உங்களோடை ஒருக்கா கதைக்க வேணும்'

ரமணனின் தங்கச்சியார்.

'சின்ன அடைப்பு எண்டாலும் டென்மார்க் அரசாங்கம் கொஞ்சக் காசு ஆவது கொடுக்கும் தானே. . . எங்கடை அண்ணைக்கு எவ்வளவு காசு குடுப்பினம் எண்டு சொன்னவை?'

'ஏன் கேக்கிறியள். . .'

'இல்லை. . . அண்ணி உண்மையை சொல்லமாட்டா. . .தங்கடை ஆட்களுக்கு குடுத்துப் போடுவா. . .அண்ணைக்கும்
2 பொம்பிளைப் பிள்ளையள் இருக்குதுகள். . . 3ம் வகுப்பும், 5ம் வகுப்பு படிக்குதுகள். . .
அதுகளுக்கும் நாளைக்கு நாலு காசு தேவை தானே'

பெண் என்றும் பார்க்காமல் அவள் மீது காறித் துப்ப வேண்டும் போல் இருந்தது.

எனக்குள் எழுந்த கோபத்தை காரின் கியரிலும் பின் சக்கரங்களிலும் காட்டியபடி அங்கிருந்து புறப்பட்டேன்.
இவ்வளவு வேகமாக என்றும் நான் கார் ஓட்டியது இல்லை.

திடீரென மேகம் இருள்வது போல இருந்தது.

வானம் முழவதையும் நிறைத்தபடி ஒரு கருடன்.

வட துருவத்தில் அதன் தலை. தென் துருவத்தில் கால்கள். கிழக்கும் மேற்குமாக அதன் விரிந்த இரண்டு இறகுகள்.

அந்த இறகுகளின் மேல் ஆண்களும் பெண்களுமாக ஆயிரம் ஆயிரம் சின்னப் பிள்ளைகள். சிலரின் கைகளில் துப்பாக்கிகள்.

கூரிய நகங்கள் கொண்ட அதன் ஒரு காலில் தங்கராஜனின் இரண்டு பிள்ளைகள் தொங்கியபடி.

மறுகாலில் ரமணின் இரண்டு பிள்ளைகள் போலத் தெரிகிறது.

நெஞ்சு பதைக்க பிறேக் போட்டு காரை வீதியின் ஓரத்தில் இழுத்து நிறுத்தி விட்டு மீண்டும் வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

அங்கு எதையும் காணவில்லை.

நான் தீடீரென பிறேக் போட்டதால் பின்னால் வந்த கார்கள் என்னைத் திட்டியபடியும் நடுவிரலைத் தூக்கி காட்டியபடியும் போய்க் கொண்டு இருந்தார்கள்.

நான் தலையை குனிந்து கொண்டேன்.

மனத்தின் படபடப்பு கொஞ்சம் இறங்க மீண்டும் காரை ஸ்ராட் செய்தேன்.

ரமணனின் பிள்ளைகளுக்காக மனம் கடவுளை மன்றாடியது.

 

jeevakumaran5@yahoo.com