டென்மார்க்

வி. ஜீவகுமாரன்

வெளிநாட்டுக்குப் போனால் எங்கடை கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்திடும்'

'மூலைவீட்டு கணபதிப்பிள்ளையின்ரை பேரன் போய் மூண்டு வருசத்துக்கிடையிலை மூண்டு சகோதரிகளையும் கரையேத்திப் போட்டான்'

'இதொரு வாழ்வோ. . . இயக்கப் பொடியெளோடை நிண்டு கதைச்சால் ஆமிக்காரன்களுக்குப் பயம். . .ஆமிக்காரன்களோடை கதைத்தால் இயக்கத்துக்குப் பயம்'

இந்த கனவுகள் அல்லது தப்பித்தல்களுக்குரிய காரணங்கங்களுடன் நாட்டை விட்டு அகதி என்ற அவப்பெயரிலும்.... புலம் பெயர்ந்தவர்கள் என்ற கௌரவப் பெயரிலும்... இங்கு நாம் உண்ணல், உறங்கள்கள், பொருளாதாரத் தேடல்கள், போட்டிகள், பொறாமைகள் அத்தனையுடனும் வாழ்ந்து (?) கொண்டு இருக்கின்றோம்.

இந்த தேடல்களினால் டென்மார்க்கில் என்ன என்ன சட்டப்பிரிவில் என்ன என்ன சலுகைகள் பெறலாம், எந்த எந்த சட்டப்பிரிவில் என்ன என்ன விதிவிலக்குப் பெறலாம் என அறிந்து அதற்கேற்ப வசதிகளைப் பெருக்குவதில் இங்குள்ள டெனிஷ்காரரை விட இலங்கைத் தமிழர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாக விளங்குகின்றார்கள்.

இல்லாவிட்டால் பரம்பரையாக எத்தனையோ டெனிஷ்காரர்கள் வாடகை வீடுகளில் வசித்திருக்க வந்து இருபது வருட காலத்துள் சொந்தவீடு, சொகுசுக் கார்கள், சம்மர் விடுமுறைக்கு ஏதோ ஒரு நாட்டுக்கு விமானத்தில் பறப்பு என வசதிகளைப் பெருப்பித்துக் கொண்டதிலும் அதைத் தப்பிக்க வைக்க ஓடி ஓடி உழைப்பதிலும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிகர் இலங்கைத் தமிழ் மக்களே தான்.

சரி..... இனிக் கதைக்கு வருவோம்!

ஆறுமுகம்!. . . .சென்ரல் காம்பில் அகதி அந்தஸ்த்துக்காக காத்திருந்த பொழுது அங்கு மூன்று ஆறுமுகங்கள் இருந்ததால் அவரின் ஊர்ப்பெயருடன் சேர்ந்து அளவெட்டி ஆறுமுகமாகி. . . . பின் கையில் கொஞ்சம் காசு சேர சீட்டுப் பிடித்தும் வட்டிக்கு காசு கொடுத்தும். . . . அந்த வட்டிக்காசை வேண்டுவதில் அறாப்பிடியாக இருந்ததால். . . .அளவெட்டி ஆறுமுகம் அறாவட்டி ஆறுமுகமானார்.

ஊர் என்னதான் அவரைத் திட்டினாலும் அந்தர அவசரத்துக்கு அவர் வீட்டுக் கதவையே தட்ட வேண்டிய நிலையில்; தான் அதிகமானோரின் நிலை இருந்தது. அதனால் இந்த சிற்றி அவரை ஏற்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது தவித்தது.

பணவிசயத்தைத் தவிர்த்துப் பார்த்தாலும் டென்மார்க்கின் பல சட்ட திட்டங்களை அறிந்து வைத்திருந்ததால் கறுப்புக் கோட்டு போடாத அப்புக்காத்தாக அறாவட்டி ஆறுமுகம் விளங்கினார். வயதுக்கு முந்திய வயோதிபப் பென்ஷன் எப்படி எடுப்பது? பிள்ளைப்பராமரிப்பு காசு கூட எடுப்பதற்கு கள்ள விவாவரத்து எப்படிக் கோருவது? வேலை இழந்தவர் நிதியை எடுத்துக் கொண்டு எப்படி மனைவியின் வரிச்சலுகை அட்டையைப் பயன்படுத்தி எப்படி கள்ள வேலை செய்வது? என்று எந்த விடயத்தையும் நன்கு ஆராய்ந்து அறிந்து வைத்திருந்தார்.

மற்றவர்கள் எல்லாம் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் மனைவி என்ற ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் அவருக்கு இரண்டு தான்.

இரண்டு வீடு.
இரண்டு கார்.
இரண்டு கடை.
இரண்டு அழகான பெண்கள்.
மூத்தவள் டென்ஷி. இளையவள் டியானா.

இந்த நாட்டுக்கு வந்து நல்லாய் இருப்பதற்கு நன்றிக் கடனாக பெண்பிள்ளைகளுக்கு டென்ஷி, டெனிசியா, டனுசியா என்றும் ஆண்பிள்ளைகளுக்கு டென், டெல்சன், டன், டனுசன் என்றும் பெயர் வைத்தமை ஆயிரத்து தௌளாயிரத்து எண்பது தொண்;னூறுகளில் ஓர் நாகரீகமாய் இருந்தது.

அவ்வகையில் டென்மார்க்கில் பிறந்ததால் மூத்த மகளுக்கு டென்ஷி என்றும் டென்மார்க்கில் டியனலுண்ட் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்ததால் இளைய மகளுக்கு டியானா என்றும் பெயர் சூட்டி தான் புலம் பெயர்ந்து வந்த நாட்டுக்கும் புலம் பெயர்ந்த அந்தக் கிராமத்துக்கும் தனது நன்றிக்கடனை ஆறுமுகத்தார் செலுத்தியிருந்தார்.

இதற்காக வடலியடைப்பில் பிறந்ததால் வடலியன் என்றோ... கொடிகாமத்தில் பிறந்ததால் காமக் கொடியாள் என்றும் ஏன் பெயர் வைக்கவில்லை என்று வாசகர்கள் யாரும் குறுக்கு மறுக்காக கேள்விகள் கேட்கக்கூடாது.

தொடர்ந்து கதைக்குள் செல்வோம்.....

மூத்த மகள் டன்ஷி பெரியவளாகிய போது யாருமே நினைத்திராதளவிற்கு அந்தச் சாமத்தியத்தை செய்ய வேண்டும் என்று ஒன்றைக் காலில் நிற்க இந்தியா, சிங்கப்பூர் என்று குடும்பமே ஓர் சுற்றுப் பயணம் போய் வந்தது. வந்தபின்பு தான் தெரியும் கொழும்புக்கும் போய் மூன்று நாட்கள் நின்றவர்கள் என்று.

அழைப்பிதழ் தொடக்கம் விழாவுக்கு வந்து போவோருக்கு குடுத்தனுப்பும் குத்து விளக்கு, குங்குமச்சிமிழ் வரை தாங்களே பார்த்து வேண்டி தம் கைகளிலேயே எடுத்து வந்திருந்தார்கள்.

(குறிப்பு: இந்த இடத்தில் இலங்கை, இந்திய வாசகர்கள் திகைக்க வேண்டாம். இந்த குத்துவிளக்குக் கலாச்சாரம் என்பது இங்கு புதிதாய் புகுத்தப்பட்ட ஒன்று. கலியாண வீடுகளில் பெயின்ற் மணம் மாறாத ஓர் பிளாஸ்ரிப் பையுள் மூன்று காய்ந்து போன வெத்திலையும்...... கொஞ்சம் பாக்கு சீவலும்..... சில வேளைகளில்.... ஒரு தேசிக்காய்....... அதையும் தாண்டினால் ஓர் வாழைப்பழம் அல்லது தேங்காய் முடி என்றும் கிடைத்திருக்குமே..... அந்தப் பைக்குப் பதிலாக வந்தது தான் இந்தக் குத்து விளக்கு! ஒவ்வொருவரின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப இந்தக் குத்துவிளக்குகளின் அளவு சிறிதாகலாம்....... அல்லது பெரிதாகலாம்........ )

இனிச் சாமத்திய வீட்டிற்குச் செல்வோம்.......

இங்கிலாந்துச் சோடனை, பரீஸ் மேளம், ஜேர்மன் வீ. டீ. யோ என்று ஐரோப்பாவில் எங்கு எங்கு எவையெல்லாம் பிரபல்யமோ அது எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கனடாவில் இருந்து சொக்கிலேற் பீடா என்ற ஓர் ஸ்பெசல் பீடாவை தங்கமணியின் தமையனார் எடுத்து வந்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தவிரவும் கிட்டடிச் சொந்தம், தூரத்துச் சொந்தம் என்று ஆறுமுகத்தார்க்கு சொந்தமான அளவெட்டி ஆட்களும் தங்கமணிக்கு சொந்தமான அச்சுவேலி ஆட்களுமாய் டென்மார்க்கின் தலைநகரமான கொப்பனேகன் களைகட்டியது.

சாமத்தியவீடு முடிய ஊர் போலை ஆடு அடிச்சு பார்ட்டி வைக்க வேண்டும் என்று இத்தாலிச் சித்தப்பா சொல்ல இரவோடு இரவாக ஆட்டுக்கார ஜென்ஸை எழும்பி ஆடு அடித்து விடிய விடிய பார்ட்டி வேறு...... குறைந்தது பதினைந்து விஸ்கிப் போத்தலாவது காலியாய் இருக்கும்.

இவ்வாறு ஊரும் உலகமும் சந்தோஷப்பட்டும் பொறாமைப்பட்டும் நடைபெற்ற சாமத்தியவீடு முடிந்து இப்போ சுமார் ஓர் வருடமாகி விட்டது.

டென்ஷியும் எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விட்டாள். இவ்வருடம் இறுதித் தேர்வு வேறு. கடுமையாக படிக்காவிட்டால் தேர்வில் சித்தியடைவது மிகக்கஷ்டம். அதைவிட வேறு மாணவர்களும் மாணவிகளும் கூட்டாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இத்தனைக்கும் இடையே அனைத்து மாணவ மாணவிகளுடன் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும் என்றால் அவர்களுடைய வீட்டுப் பிறந்த நாட்கள்..... வெள்ளிக் கிழமை இரவுகளில் பாடசாலைகளில் நடைபெறும் பார்ட்டிகள் என்பனவற்றிற்கு விரும்பியோ விரும்பாமலோ போய்வர வேண்டும்.

ஆறுமுகமும் தங்கமணியும் இந்த பார்ட்டிகள் விழாக்களினால் டன்;ஷி வழி தவறிப் போகாமல் எந்த விழா என்றாலும் பத்து மணிக்குள் வந்து விட வேண்டும் என்று கட்டளை போட்டு விழா மண்டபங்களுக்கு வெளியில் காரில் போய் நின்று கூட்டி வந்த பின்பு தான் ஆறுமுகம் நித்திரைக்குப் போவார்.

கிறிஸ்மஸ் லீவும் முடிந்து தை போய் மாசி வந்தது.

மாசி மாதத்தில் வரும் வின்ரர் லீவில் டென்ஷியின் வகுப்பினர் தமது ஆசிரியை ஆசிரியர்களுடன் பனிமலையில் சறுக்குவதற்கு நோர்வே நாட்டிற்க்கு செல்வதாக ஏற்பாடாகி இருந்தது.

இப்படி ஒவ்வோர் வகுப்பினரும் வின்ரர் லீவுக்கு ஒவ்வோர் நாட்டுக்குப் போவது வழமையாய் இருந்தது. சென்ற ஆண்டு கிறீன்லாந்துக்கு மீன் பிடிக்கப் போயிருந்தார்கள்.

பனிமலையில் சறுக்கி விளையாடுவதற்கான உடுப்புகள், சறுக்கும் பலகைகள் என்பனவற்றை பல பிள்ளைகள் இரவலாயும் வாடகைக்கு எடுத்துச் சென்ற போதிலும் என்ரை பிள்ளை ஏன் இரவல் சாமான்கள் பாவிக்க வேண்டும் எனக்கூறி அனைத்தையும் புதிதாகவே வேண்டிக் கொடுத்து வழியனுப்பினார்.

மற்றப் பிள்ளைகளுடன் சந்தோஷமாய் போய்வரட்டும் என வழி அனுப்பி வைத்திருந்தாலும் குமர்ப் பிள்ளையை தனியே அனுப்பிப் போட்டம் என மனம் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது.

அதைவிட பனியில் சறுக்கும்பொழுது கால் கை உடைஞ்சால் என்ன செய்வது என்று மனக்கிலேசமாயும் இருந்தது.

எப்படியும் ஒவ்வொரு நாளும் குறைந்தது
3, 4 தடவைகள் தங்கமணி கைத்தொலைபேசியில் டென்ஷியைக் கூப்பிடுவதும்...... அம்மா வையுங்கோ....... நெடுக தமிழிலை கதைக்க எல்லாப் பிள்ளைகளும் பார்க்குதுகள்' என டென்ஷி கெஞ்சி தாயிடம் இருந்து விடுபடுவதாயும் அந்த ஓர் கிழமை ஓடிப் போனது.

அடுத்து வந்த சனிக்கிழமை பின்னேரத்தில் எல்லாப் பெற்றோரும் கைகளில் சிறிய டெனிஷ்கொடிகளை வைத்து தூரத்தில் வரும் கப்பலை நோக்கிக் கை அசைத்துக் கொண்டும் பாட்டுப் பாடிக்கொண்டும் இருக்க அந்த இராட்சத பயணிக் கப்பல் கடற்கரையை நோக்கி அசைந்து அசைந்து கொண்டு வந்தது.

கப்பல்கரைக்கு கிட்டவாக வந்த பொழுது எல்லாப் பிள்ளைகளும் முதலாவது தளத்தில் நின்று கை அசைத்துக் கொண்டு நின்றார்கள்.

ஆறுமுகத்தாருக்கும் தங்கமணிக்கும் திக் என்றிருந்தது. மற்றைய சக மாணவிகள் போல் டென்ஷியும் தலைமுடியைக் கட்டையாக வெட்டி தலைக்கு மெல்லிய மண்நிறமும் வெண்நிறமும் கொண்ட கலர் பூசியிருந்தாள்.

கப்பல் தரையைத் தொட்டதும் எல்லாப் பிள்ளைகளும் இறங்கி ஓடிவந்து தம் பெற்றோரைத் தழுவி தம் சந்தேஷங்களைத் தெரிவித்தும் தாம் அனுபவித்தவற்றைச் சொல்லியும் மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள்.

தங்கமணி உது என்னடி வேலை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறாய்' எனத் திட்டினாலும் ஆறுமுகத்தார் சுற்ற நின்ற டெனிஸ்காரர் இடையே தனது கோபத்தைக் காட்டாமல் அடக்கி வைத்திருந்தார்.

பின் ஒருவாறாக எல்லாப் பெற்றோரும் ஒருவருக்கொருவர் ; பாய் சொல்லிக் கொண்டு விடைபெற்றுக் கொண்டார்கள்.

டென்ஷி மௌனமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள். தாய் தகப்பனுக்கு தான் தலைமுடி வெட்டியது சரி...... டை அடித்தது சரி பிடிக்கவில்லை என்பது நன்கு புரிந்தது.

வீட்டுக்கு வரும் வழியிலும் தாய் தங்கமணிதான் டென்ஷியை ஏசிக்கொண்டு வந்தாளே தவிர ஆறுமுகம் ஏதும் பேசவில்லை. அவர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு வந்தார்.

'நான் என்ன செய்யுறதம்மா? எல்லாப் பொம்பிளை பிள்ளையளும் தான் தலைக்கு டை அடிச்சதுகள். நான் தனிய எப்பிடி மாட்டன் என்று சொல்லுறது.'

இத்துடன் தங்கமணி மௌனமானாள்.

ஆறுமுகமோ பாம்பு தின்னுற ஊருக்கு போனால் நடுத்துண்டு நமக்கு வேண்டும்; என்று யாரோ கேட்டது இங்கு உண்மையாகிக் கொண்டிருப்பதை நினைத்துக் கொண்டு காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.

இப்போ வின்ரர் லீவும் முடிந்து பாடசாலை தொடங்கி ஓர் மாதமாகி விட்டது.

ஓர் நாள் இரவு டென்ஷி சாப்பாட்டு மேசையில் இருந்து சீக்கிரமே எழுந்து போனாள்.

தங்கமணிக்கு அது நல்லதாய் படவில்லை.

மற்றவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுத்திருந்து விட்டு அவர்கள் கதிரையில் இருந்து எழுந்து போனதும் தங்கமணி டென்ஷியின் அறைக்குப் போனாள்.

'ஏன் டென்ஷி. . . வடிவாய் சாப்பிடேல்லை'

'வயுத்துக்கை பிரட்டுதம்மா'

தங்கமணிக்கு திக் என்றது.

தான் தன் பிள்ளையிடம் கேட்பது சரியோ பிழையோ என்று எந்த வித ஆராய்ச்சிகளும் இல்லாது நேரடியாகவே கேட்டாள்

'பிள்ளை..... இந்த மாதம் வீட்டுக்கு விலக்கு வந்ததோ. . .'

'இல்லை' எனத் தலையாட்டினாள்

'என்ன சொல்லுறாய்....'

தங்கமணிக்கு பெத்த வயிறு நொந்தது.

'ஏதும் அசம்பாவிதம் நடந்ததோ'

டென்ஷி ஏதும் சொல்லவில்லை. கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டேயிருந்தது.

தங்கமணி எத்தனையோ தடவைகள் அதட்டிக் கேட்டும் பிரமை பிடித்தவள் போல் இருந்தாளே தவிர டென்ஷி எதுவும் சொல்லவில்லை.

தங்கமணி அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஆறுமுகத்தார் வட்டிக் கொப்பியுடன் ஹோலில் இருந்து வட்டிப் பாக்கி தரவேண்டியவர்களை நெருக்கிக் கொண்டிருந்தார்.

அன்று இரவு முழுக்க தங்கமணி தூங்கவேயில்லை. ஆறுமுகத்தாருக்கும் இது பற்றி மூச்சு விடவி;ல்லை.

காலையில் தங்கமணி டென்ஷியுடன் டாக்டர் வீட்டுக்குப் போனாள்.

உள்ளே அழைத்து சோதித்த டாக்டர் ஐந்தாவது நிமிடத்தில் கர்ப்பம் என உறுதியளித்தார்.

சாமத்திய வீட்டு மண்டபமே தங்கமணியின் தலையில் இடிந்து விழுந்தது போல் இருந்தது.

'என்ன செய்யப் போறீங்கள்' அந்த வயோதிப டெனிஸ் டாக்டர் கேட்டார்.

'என்ன கேக்கிறீங்கள்' தங்கமணி பதறினாள்.

'அபோர்ஷன் செய்யப் போகின்றீர்களா?...... அல்லது உங்கள் மகள் பிள்ளையை பெற்று வளர்க்கப் போகின்றாவா'

தங்கமணியின் கைகள் நடுங்கின.

டாக்டர் நிலைமையை புரிந்து கொண்டார்.

'இதுக்கு நீங்கள் இப்போது பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை....... இதில் இரண்டு போர்ம் இருக்கு. வீட்டை எடுத்துக் கொண்டு போங்கோ....... அபோர்ஷன் செய்வதாய் இருந்தால் சிவத்த போர்மை நிரப்பிக் கொண்டு வாங்கோ....... பெற்று வளர்ப்பதாய் இருந்தால் பச்சை போர்மை நிரப்பிக் கொண்டு வாங்கோ'

இரண்டையும் வேண்டிக் கொண்டு ஓர் கையினால் தன் கண்களைத் துடைத்தபடி மறுகையினால் டென்ஷியை பிடித்தபடி டாக்டரின் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

டாக்டருக்காக வெளியே காத்திருந்த அனைவரும் ஏதோ விபரீதம் நடந்து விட்டாதாக உணர்ந்தார்கள்.

தங்கமணிக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆறுமுகத்தாருக்கு இனியும் மறைத்தால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும் என்பதால் உடனே ரெயில்வே ஸ்டேசனுக்கு வரச் சொல்லி விட்டு அங்குள்ள வெயிற்றிங் கோலில் இருவருமே காத்திருந்தார்கள்.

டென்ஷி தாயைப் பார்க்கப் பயந்தோ...... தன் நிலைக்கு வெட்கித்தோ...... அல்லது இன்னும் கொஞ்ச நேரத்தில் தந்தையார் செய்யப் போகின்ற அட்டகாசத்துக்கு முகம் கொடுக்க முடியாமலோ தனக்குள் தானே குமைந்து கொண்டு இருந்தாள்....... அல்லது தனக்குள் தான் தன்னை மூடிக் கொண்டு இருந்தாள்......

ஓர் பத்து நிமிடத்துள் ஆறுமுகம் அவசர அவசரமாக ஸ்டேசனுக்குள் நுழைந்தார்

டென்ஷியை இருக்கச் சொல்லி விட்டு....... தங்கமணி ஆறுமுகத்தாரை ஓர் மூலைக்கு கூட்டிப் போனார்.

அவரால் எதையுமே நம்பவோ....... ஜீரணிக்கவோ முடியவில்லை......

டென்மார்க்கில் வெற்றி என்பதைத் தவிர எந்த தோல்வியையுமே சந்தித்திராதவருக்கு, இது தோல்வி மட்டுமில்லை. யாரோ தன் குடும்பத்தை பாதாளக்கிணற்றில் தள்ளி விட்டது போல.

இயலாமையில் எழுந்த கோபத்துடன்,

'அவளையும் கூட்;டிக் கொண்டு வந்து காருக்கை ஏறு.... பள்ளிக்கூடத்தை உண்டு அல்லது இல்லை எண்டு ஆக்கிறன்'

கார் பள்ளிக்கூடத்தை நோக்கிப் பறந்தது.

இவர்கள் காரில் இருந்து இறங்கவும் வகுப்பாசிரியை பாடசாலைக்கு வெளியே வரவும் சரியாக இருந்தது.

'ரீச்சர் உங்களோடை ஒரு விடயம் அவசரமாய் கதைக்க வேணும்'

அவர்கள் மூவரைப் பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டார்.

'வாங்கோ..... ஒவ்வீசுக்கு போவம்'

ஒவ்வீசுக்குள் போனதும் மூவருக்கும் கதிரைகளை எடுத்துக் கொடுத்து விட்டு கோப்பி அல்லது தேனீர் குடிக்கிறீர்களா என வகுப்பாசிரியை கேட்டார்.

எதுவுமே வேண்டாம் என்று விட்டு டென்ஷி நோர்வேக்கு போனது...... அங்கு கர்ப்பம் ஆனது..... அதற்கு பள்ளிக்கூடம் என்ன பதில் சொல்லப் போகிறது என தனது ஆவேசத்தை எல்லாம் ஆறுமுகத்தார் கொட்டிக் கேட்டார்.

வகுப்பாசிரியர் கவலையுடன் டென்ஷியைப் பார்த்தார்.

'யு ஆர் எ அன்லக்கி கேர்ள்..... டென்ஷி உன்னை யாராவது உன்ரை விருப்பத்துக்கு மாறாக கெடுத்தார்களா?'

'இல்லை....... 'எனத் தலையாட்டினாள்.

'அப்ப ஸ்கூலாக நாங்கள் எதுவுமே செய்ய முடியாது..... பெற்றோர் என்ற முறையிலை நீங்கள் தான் அவளுக்குப் முன்கூட்டியே கருத்தடை மாத்திரை கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும்.'

தங்கமணிக்கும் ஆறுமுகத்திற்கும் இதை ஜீரணிக்க முடியேல்லை.

வகுப்பாசிரியை தொடர்ந்தார்.

'என்ரை மகளும் டென்ஷின்ரை வகுப்புத் தான் படிக்கிறா. பயணத்துக் சாமான் அடுக்கேக்கை அந்த குளிசைகளை நானே தான் எடுத்து கவனமாக குடுத்து விட்டனான்'.

அதுக்குப் பிறகு ரீச்சர் ஏதோ ஏதோ எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆறுமுகத்தாருக்கு எதுவுமே விளங்கவில்லை.

டென்ஷி அழுது கொண்டு இருந்தாள்.

'அழாதை டென்ஷி......' தங்கமணி அவளை தன் நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

டென்ஷி என்ற பெயர் இப்போ ஆறுமுகத்தாருக்கு அருவருப்பாகப்பட்டது

- - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - -- --
புலம் பெயர் தமிழர்கள்..... புலம் பெயர் தமிழர்கள் என்று பூரிப்படைகின்றீர்களே இது தான் டென்மார்க் ஐயா. (புதுமைப் பித்தன் மன்னிக்க)

 

jeevakumaran5@yahoo.com