கொழந்தே...

ஆனந்த் ராகவ்

 ''கொழந்தை மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் வந்துட்டுப் போங்க''- ஒரு கை மாத்திரையும் இன்னொரு கை தண்ணீர் கூஜாவுமாக என் மனைவி, கொஞ்சம் கெஞ்சலாகவும் கொஞ்சம் கவலையோடும் கூப்பிடுகிறாள். நான், அடுத்த சில நிமிடங்களுக்கு எங்கள் வீட்டில் நிகழப்போகும் அமர்க்களத்துக்கு மனதளவில் தயாராகிக்கொண்டு, சலிப்புடன் எழுந்திருக்கிறேன்.

 குழந்தை என்று குறிப்பிடப்பட்டது எங்கள் பெண் சௌம்யா. அந்த வார்த்தையின் அகராதி அர்த்தத்தை மீறிய, தமிழ் இலக்கணப் பிரிவின்படி, 11 வயதுப் பெதும்பை. என் 90 வயதுப் பாட்டி, 72 வயது அம்மா, 40 வயது மனைவி என்று மூன்று இதர பேரிளம் பெண்கள் இருக்கும் வீட்டில், 11 வயதுப் பெண்ணைக் குழந்தை என்று அழைப்பதில் தப்பு இல்லைதானே? மேலும், ஒரே பெண் என்பதால், குழந்தையில் இருந்து இது வரைக்கும்இன்னும் அவள் ஆயுசுக் காலம் வரையும், எங்களுக்கு 'கொழந்தேவாய் இருக்கப்போகிற சௌம்யா.

 சௌம்யா வரவேற்பறை சோபாவில் வெட்டப்படப் போகிற ஆடு போல மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருக்கிறாள். மாத்திரை சாப்பிடப் பயம். அவள் உணவுக் குழாய் சராசரிக்கும் குறைவான அளவில் இருப்பதாலோ என்னவோ, பெரும்பாலும் மாத்திரை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிக்கொண்டு வெறுமனே தண்ணீரை விழுங்கி விழுங்கி, மாத்திரையின் சர்க்கரைத் தடவல் கரைந்து, கசப்பு நாக்கில் ஏறி, அதைத்  துப்பி, மாத்திரையை அவள் வாயில் அடைத்து, மறுபடி விழுங்கவைத்து... ஒவ்வொரு முறை வீட்டில் நடக்கிற களேபரம் சொல்லி மாளாது.

 சோபாவில் அவள் அருகே நான் உட்கார்ந்துகொள்கிறேன். அந்தப் பக்கம் அவள் கையைப் பிடித்துக்கொண்டு என் அம்மா. அருகே பெரிய பாட்டி. எதிர்ப் பக்கம் என் மனைவி, சாம, பேத, தான, தண்ட என்று வியூகம் அமைத்துக் கொண்டோம். என் வாஞ்சையான பேச்சில் ஆரம்பித்து, அம்மாவின் நைச்சியமான ஊக்கங்களைச் செவிமடுத்து, 'இந்தாடி... ஒழுங்கா முழுங்கறியா இல்ல, அடி குடுக்கட்டுமாஎன்று என் மனைவி  தரப்பில் போய் நிற்கும். மாத்திரை அதுக்கெல்லாம் மசியாது. 10 நிமிடப் போராட்டத்துக்குப் பின்னே, சொதசொதவென்று தயிர் சாதத்தில் ஊறிய வடாம் பதத்தில் வெளியே வந்துவிழும். குழந்தை அழும்.

 ''ஒரு மாத்திரை முழுங்க ஏன்டி எல்லார் பிராணனையும் வாங்கற'' என்று மனைவி கத்துவதில் போய் முடியும். வாழைப் பழத்தில் வைத்து முழுங்குவது, தேனில் கலந்து கொடுப்பது என்று எல்லா வழிமுறைகளும் தோற்றுப்போன சங்கதி.

 ''இந்த மாத்திரை இல்லாம சிரப், மிக்ஸர்னு கொழந்தைகள் சாப்பிடற மாதிரி இனிப்பா தரக் கூடாதா'' என்று அம்மா நூறாவது முறையாகச் சொல்கிறாள். டாக்டரிடம் கேட்டாயிற்று. அவர் அதெல்லாம் கைக் குழந்தைகளுக்குத்தான் என்றும் 10 வயதான பெண்களுக்கு சிரப் எல்லாம் சிறப்பாக வேலை செய்யாது என்று சொல்லி, கூடவே, ''இதெல்லாம் பழகிக்கணும்'' என்று அவர் துறைக்கே உரிய கருணை இன்மையோடு  அலட்சியமாகச் சொல்லி அனுப்பிவிட்டார்.

''கொழந்தே... போன தடவை சொல்லித் தந்தேனில்லையா? மாத்திரையை நீள வாக்குல நாக்குக்குப் பின்புறம் வெச்சி தண்ணியை ஊத்திண்டு, தலையைச் சாச்சிண்டு முழுங்கிடணும். தண்ணியை முழுங்கும்போது மாத்திரையை முழுங்கறம்னு பயப்படக் கூடாது. தண்ணி குடிக்கிற மாதிரி நினைச்சிக்கணும். அது அப்படியே நேரா தொண்டை வழியா தொப்பைக்குப் போயிடும். ரொம்ப ஈசி'' - சுளுவானது என்று இந்த வழிமுறையைச்  சொல்லி முடிப்பதற்குள் எனக்கு மூச்சு வாங்குகிறது. அவளுக்கு கணக்குப் பாடம்கூட இத்தனை சிரத்தையாக நான் சொல்லிக்கொடுத்து இருக்க மாட்டேன்.

 மாத்திரையை மனைவி என் கையில் கொடுத்து, நான் கொழந்தை கையில் தர, பாட்டி கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்று என் அம்மா கைக்கு மாறி, ''எங்கே நான் பாக்கட்டும்'' என்று என் பாட்டி ஆராய்ந்து, முகூர்த்த நேரத்துத் தாலி மாதிரி எல்லாராலும் ஆசீர்வதிக்கப்பட்டு, மறுபடி குழந்தை கைக்கே வந்தது.

எங்கள் வீட்டின் 'பேதடிபார்ட்மென்ட் கொஞ்சம் உபத்திரவம். ''கட்டைல போறவன், அவன் மண்டையாட்டம் இவ்வளவு பெரிசாவா கொழந்தைக்கு மாத்திரை குடுப்பான்'' என்று பாட்டிதான் முதலில் சர்ச்சை உண்டு பண்ணினாள். இப்படித்தான் தேவை இல்லாத நேரங்களில் சொல்லக் கூடாததைச் சொல்லி, எங்களை இம்சிப்பாள். திட்ட முடியாது. திட்டினாலும் காது கேட்காது. அந்த சௌகர்யத்தில், யார் என்ன  சொல்கிறார்கள் என்று தெரியாமல், அவள்பாட்டுக்கு யாருமே கேட்காத அகால வேளை வானொலி மாதிரி என்னவாவது ஒலிபரப்பிக்கொண்டு இருப்பாள். அவள் வாயை மூட வேண்டுமானால், அவள் முன்னே நின்றுகொண்டு, கண்ணைப் பார்த்து, கையை வாயில்வைத்து வாயை மூடும்படி ஆக்ரோஷமாக அபிநயம் செய்ய வேண்டும். அப்போது கூடப் பேசுவதை நிறுத்துவாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது நீராவி முட்டுகிற  குக்கர் பாத்திரம். மனதில் தோன்றியதைப் பேசியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்.

 மாத்திரை, மருந்து போன்ற சமாசாரங்களில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவள் பாட்டி. எல்லாப் பிரச்னைகளுக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்றவற்றிலே விடை இருக்கிறது என்று நம்புகிறவள். அவள் வாழ ஆரம்பித்த களப்பிரர் காலத்தில் இருந்து, வெறும் கஷாயம் மூலமாகவே சர்வ ரோகங்களையும் சமாளித்தவள். 'புது மேனேஜர் ரொம்பப் படுத்தறான்என்கிற என் அலுவலகப்  பிரச்னைகளுக்குக்கூட, 'ஒரு சிராய் லவங்கம், கொஞ்சம் கடுக்காய் இரண்டையும் கசகசா போட்டு அரைச்சுஎன்று ஏதாவது நிவாரணி சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை. இந்த 90 வயதிலும் தானாகவே நடமாடிக்கொண்டு காலை மூன்றரை மணிக்கு எழுந்து, சமையல் அறையில் அவளின் பிரத்யேக கரி அடுப்பில் தளிகை செய்துகொண்டு, அவள் அறையைப் பெருக்கித் துடைத்து, அவள் துணிகளைத் துவைத்து, சாப்பிட்ட  பாத்திரங்களைக் குனிந்து நின்று அலம்புகிறாள். எனக்கு 48 வயதில் பர்ஸில் இருந்து விழுந்த பைசாவைக் குனிந்து எடுத்தால், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் வியாபித்த உடம்பு இரண்டு நிமிஷம் சொக்கட்டான் சுற்றிவிட்டுத்தான் அடங்குகிறது.

எந்த வியாதிக்கும் பயந்தவள் இல்லை. வியாதி, வியாதியின் நிவாரணம் இரண்டுக்கும் உணவுதான் காரணம் என்று 'சரக சம்ஹிதாவை மேற்கோள் காட்டி... குளிர் காலத்துக்கு, கோடை காலத்துக்கு என்று விதவிதமாக மருத்துவம் சொல்பவள். எங்களைக் கடிக்கும் அதே கொசு  தான் அவளையும் கடிக்கிறது. இருந்தாலும், ஒரு குளிர் ஜுரம், ஆஸ்துமா, இருமல் என்று ஒன்றுமே பாதிக்காமல் நார் மடிக்குள்ளே நலமாக  வாழ்ந்து வருபவள். அசுவத்தாமன், மாபலி, வியாசன், விபீஷணன், அனுமன், கிருபாசாரி, பரசுராமன் என்கிற ஏழு சிரஞ்சீவிகளின் பட்டியலின் இறுதியில் என் பாட்டியையும் தயக்கம் இல்லாமல் சேர்த்துக்கொள்ளலாம். பகவான் கல்கி அவதாரம் எடுக்கிறபோது, எஞ்சி இருக்கிற ஒரு ஜீவன் என் பாட்டியாகத்தான் இருக்கும்.

 ''கொழந்தைக்கு என்ன ஆச்சுன்னு இப்படி மண்டை மண்டையா மாத்திரையைக் கொடுத்துப் படுத்தறேள்'' - பாட்டி ஆரம்பித்துவிட்டாள். அம்மா அவளுக்கு வைரஸ் காய்ச்சல் என்பதையும், அதற்கான வீரியம் மிக்க மாத்திரை அது என்பதையும் விவரமாக, சத்தமாகச் சொன்னாள். பாட்டி இருக்கும் சூழலில் அம்மா ரொம்ப இங்கிதமானவளாகத் தெரிந்தாள்.

 வைரஸ், பாக்டீரியா, டெங்கு, குனியா போன்ற நம் சம காலப் பிரத்யேக வியாதிகளின் பரிச்சயம் கொஞ்சம்கூட இல்லாமல், 'ஜுரம்தானே... கஷாயம் பண்ணிக் குடுத்தா சரியாயிடறதுஎன்று 'அக்னிவேஷ ரிஷிமாதிரி சுலபமாகச் சொன்னாள் பாட்டி. கூடவே, 'அதுதான் மூணு நாளா சாப்டுண்டு இருக்காளே... இன்னிக்கும் ஏன் கொடுக்கறேள்?’ என்று கேட்க, பதில் தெரியாத என் அம்மா என் மனைவியைப் பார்க்க, ''அது  ஆன்ட்டிபயாட்டிக். சரியானாலும் ஒரு கோர்ஸ் ஃபுல்லா சாப்பிடணும். இல்லாட்டா, அடுத்த தடவை ஜுரம் வந்து மாத்திரை சாப்பிட்டாக் கேக்காது'' என்று மனைவி, மருத்துவரும் அவருக்கு மருந்து கம்பெனிக்காரனும் சொன்னதைத் திரும்பச் சொன்னாள். அம்மாவும் பாட்டியும் சுத்தமாகப் புரிந்துகொள்ளாமல், ''என்ன கண்றாவியோ?'' என்று பொதுவாகச் சொல்லி சலித்துக்கொண்டார்கள்.

 முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. சௌம்யா, ரொம்ப முயற்சி செய்யாமல் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, உடனே மாத்திரையைத் துப்பினாள். இயலாமையால் நிகழ்வது இல்லை அது. மாத்திரை விழுங்குவதில் இருக்கும் வெறுப்பால். நாங்கள் அதற்கு இணையாக, 'மாத்திரை சாப்பிடுவதுதான் பெரியவளானதற்கு அடையாளம் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் அக்கம்பக்கம் உற்றார் உறவினர் எல்லோரும்  பெங்களூரு ரமணி அம்மாள் குரலில் கை கொட்டிச் சிரிப்பார்கள்என்றெல்லாம் அவளை உசுப்பேற்றி, மாத்திரை சாப்பிடுவது எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை எடுத்துரைத்து அவளைச் சாப்பிடவைப்போம்.

 ''அவதான் முடியலைங்கறாளே... அந்தச் சனியனைப் பேசாம தேன்ல கரைச்சுக் குடுக்கறதுதானே'' - மறுபடி பாட்டி. அது மாத்திரை இல்லை, கேப்சூல் என்பதையும் அதை எதில் கரைத்துச் சாப்பிடாலும் அது ஆயுசுக்கும் கசக்கும் என்பதையும் விளக்கப் பொறுமை இல்லாமல், ''உங்கம்மாவை வாயை மூடிண்டு இருக்கச் சொல்றியா?'' என்றேன் எங்க அம்மாவிடம். என் அம்மாவின் மருத்துவ உலகம் ரெண்டுங்கெட்டான் உலகம்.

 பாட்டியின் மூலிகை வைத்தியத்திலேயே பிறந்து வளர்ந்து, அவ்வப்போது எங்கள் இங்கிலீஷ் வைத்தியத்துக்கும் ஆட்படுகிற அவஸ்தை நிலையில் இருப்பவள். ஒழுங்காக மருந்து சாப்பிடாமல் இருப்பதற்காக எங்களிடமும், மருந்து சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வதற்காகப் பாட்டியிடமும் என்று இரு தரப்பிலும் திட்டு வாங்குகிறவள்.

 நான் அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகள் கோடி கோடியாகப் பணம் கொட்டி ஆராய்ச்சி செய்து, எலிகள், முயல்கள் மேல் பிரயோகித்து, இறுதியில் மனிதர்களை வந்தடையும் அலோபதி மருந்து முறைகளுக்கு பழக்கப்பட்டுப்போனவன். ஆரவாரமான மருத்துவமனை அறைகளில் வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் அணிந்தபடி அலட்சியமாக ஆங்கிலம் பேசும் மருத்துவர்களிடம் அசாத்திய நம்பிக்கை வைத்திருப்பவன். அவ்வளவு  படித்தவர்களுக்குத் தெரியாத விஷயமா அறிவியல் முன்னேறாத பாட்டன், முப்பாட்டன்கள் காலத்து வழக்கங்களில் ஊறிய தாத்தா பாட்டிகளுக்குத் தெரியப்போகிறது என்ற நியாயமான சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு இருப்பவன். நம் அவசரகதி வாழ்க்கையில் இந்த மருந்து மாத்திரைகள் தரும் உடனடி நிவாரணத்துக்கு அடிமையானவன். இருந்தாலும், பாட்டி எப்படி எந்த வியாதியும் தாக்காமல், எந்த  மருந்தும் சாப்பிடாமல் இவ்வளவு காலமாக ஆரோக்கியமாக இருக்கிறாள் என்று அவ்வப்போது வியந்தது உண்டு. அவள் பரிந்துரைப்பதை முயன்று பார்த்தால் என்ன என்று அவ்வப்போது சந்தேகம் என்னை ஆட்கொண்டுவிடும்.

 போன வருடம்கூட அப்படித்தான் நடந்தது. குளிர் ஜுரம், வாந்தி, மூட்டு வலி என்று உடம்பே சுமையாகிப்போய், மலேரியாவா, டெங்குவா, சிக்குன் குன்யாவா என்று மர்மமான மனநிலையில் வைத்து ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, மாத்திரை என்று மாற்றி மாற்றி மருத்துவர்கள் என்னைப் பந்தாடிய ஒரு மாதத்தின் இறுதியில், அவர்களைக் கை கழுவிவிட்டு,பாட்டி காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, கஷாயம்  சாப்பிடலாமா என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பாட்டியின் மருத்துவமா... இல்லை வியாதிக்கே சலிப்பாகி என்னை விட்டுவிட்டதா தெரியவில்லை. ஒரு வழியாகக் குணமாகிவிட்டேன். பாட்டி, தன் மருந்தின் பக்குவம்தான் என்னைக் குணமாக்கியதாக திரும்பத் திரும்பச் சொல்லி, என்னைத் தன் கஷாய உலகத்துக்கு இழுக்கப் பார்த்தாள்.

''வியாதியில் இருந்து மனுஷாளைக் குணப்படுத்தறத்துக்கு மட்டுமில்லை; ஆளையே மேல அனுப்பறதுக்குக்கூட மூலிகை இருக்கு தெரியுமா உனக்கு?'' என்று என்னிடம் சவால்விடும் தோரணையில் சொல்வாள் பாட்டி. சமீப காலம் வரை திடமாக இருந்து வளைய வந்த என் தாத்தா திடீரென்று மரணம் அடைந்ததற்கு, பாட்டி எந்த விதத்திலேயாவது சம்பந்தப்பட்டு இருப்பாளோ என்று எனக்குச் சந்தேகம் இருக்கத்தான்  செய்கிறது.

 இரண்டாவது முயற்சியும் தோல்வியுற்று, கேப்சூல் நனைந்துபோனது. இதை எதிர்பார்த்துத் தயாராக உபரி மாத்திரைகள் வைத்திருந்த என் மனைவி, இன்னொரு கையில் இருந்து புது மாத்திரை எடுத்து நீட்டினாள். முன்பெல்லாம் மாத்திரை வீணாகிவிட்டால், சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்று குழந்தை சாமர்த்தியமாக ஒரு கணக்கு வைத்திருந்தது. ஆனால், என் மனைவி அதை மிஞ்சும்  விதத்தில், மருத்துவர் ஒரு நாளைக்கு இரண்டு என்று, 10 நாளைக்கு 20 மாத்திரை எழுதினால், எங்கள் வீட்டுக் கணக்கில் 30 வாங்குவாள்.

- டாக்டருக்குப் படிக்க வேண்டிய மிடில் கிளாஸ் ஆசை பணப் பற்றாக்குறையால் நிறைவேறாமல் பி.எஸ்ஸியில் போய் நின்று, மருத்துவக் கட்டுரைகள், மருத்துவ வாரப் பத்திரிகைகள் எல்லாம் படித்துத் தேர்ந்த எங்கள் வீட்டு அரைகுறை மருத்துவர் அவள். அவளின் பெரியப்பா நியூஜெர்ஸியில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக இருப்பதையும், அவரின் வெள்ளை மாளிகைக்கு ஒப்பான ஆடம்பர வீட்டையும்  அடிக்கடி நினைவுகூர்ந்து குழந்தையை டாக்டருக்குப் படிக்கவைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறவள். 'மாத்திரையே சாப்பிடப் பயப்படுறா... இவ டாக்டராகப் போறாளாஎன்று நான் செய்யும் பரிகாசத்துக்கு ரொம்பக் கோபப்படுபவள்.

 இரண்டாவது, மூன்றாவது முயற்சி தோல்வியுறும் சமயத்தில்தான் அம்மா நுழைவாள். என்னை, என் மனைவியை எல்லாரையும் பாசாங்காகத் திட்டி விரட்டிவிடுகிற மாதிரி பாவனை செய்வாள். எங்களுக்கு எல்லாம் ஒன்றுமே தெரியவில்லை என்றும், குழந்தை அவளிடம்தான் பிரியமாக இருக்கிறதென்றும், தான் சொன்னால் மட்டுமே மாத்திரையைச் சாப்பிடுவாள் என்றும் சொல்லி, மாத்திரையை ஓரமாக வைத்துவிட்டுஅவளிடம் வேறு சங்கதிகள் பேசுவாள். குணமான அடுத்த வாரம் சாப்பிடப் போகும் ஐஸ்க்ரீம்களையும், தின் பண்டங்களையும், பார்க்கப்போகிற சினிமாக்களையும்பற்றிப் பேசுவாள். வாழ்க்கையில் அவள் அனுபவிக்கப்போகிற அத்தனை அம்சங்களும் அந்த மாத்திரையை விழுங்குவதில்தான் இருக்கிறது என்று அவள் ஸ்தாபித்த பிறகு, ''எங்கேடா அந்த மாத்திரை... குடு என் செல்லம் மடக்குனு ஒரே முழுங்கு  முழுங்கிடுவா பாரு'' என்று உற்சாகம் கிளப்பி, எல்லாரையும் கை தட்டவைத்து, பதினைந்து நிமிடங்களாகப் போராடியதைப் பதினைந்து நொடிகளில் சாதித்துவிடுவாள்.

சில சமயம், பாட்டி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளாமல், காரியம் கைகூடி வருகிற நேரத்தில் ''அவா கிடக்கறா... மாத்திரை கீத்திரை எல்லாம் முழுங்க வேணாம். நான் கஷாயம் வெச்சித் தரேன், சாப்பிடறியா கொழந்தே'' என்று என்னவாவது சொல்லி, காரியத்தைக் கெடுப்பாள். குழந்தை உடனே, அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். ''மாத்திரை வேண்டாம்... பெரிய பாட்டி வெச்சுத் தர்ற மருந்தே  சாப்பிடறேன்'' என்று சண்டித்தனம் பண்ணும். எனக்கு, ஆளுயர அண்டாவில் கஷாயம் செய்து, பாட்டியை அதில் முக்கிக் கொன்றுவிடலாம்போல ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

 அன்றைய நான்காவது முயற்சியில் குழந்தை வெற்றிகரமாக மாத்திரையை முழுங்கி நாங்கள் எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்ததில், பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து ''என்ன, சௌம்யா மாத்திரை சாப்டுட்டாளா'' என்று அவள் பூப்படைந்த செய்தி கேட்டவர்கள்போல வந்து விசாரித்தார்கள். குழந்தையை ஆளாளுக்கு ''சமத்து சக்கரக்கட்டி'' என்று கன்னத்தைக் கிள்ளி, அவள் சாதித்ததைப் பாராட்டினார்கள்.

  அந்த பதினைந்து நிமிடங்கள் வரை ''ராட்சஸி, அடங்காப்பிடாரி'' என்றெல்லாம் அவளைத் திட்டிக்கொண்டு இருந்த என் மனைவி, மறுபடி அவள் மருத்துவராகும் எதிர்காலத் திட்டத்தில் ஒருபடி எடுத்துவைத்த தெம்பில் இழுத்து அணைத்துக்கொண்டாள். நான் தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்யனாக அன்றைய படலம் முடிந்த திருப்தியுடன் என் கணினிக்குத் திரும்புவேன். பாட்டி எங்களை உரக்கத் திட்டியபடி அவள் அறைக்குத் திரும்புவாள். சௌம்யா மாத்திரை சாப்பிடுவதற்கு நிகழ்கிற போராட்டம்தான் எங்கள் வீட்டு நிகழ்ச்சி நிரலில் நிச்சயமான ஓர் அம்சம்.

 இதெல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மூன்று வருடங்களில் கொழந்தை மாத்திரை முழுங்குவதில் அசாத்தியமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாள். மாத்திரை சாப்பிடும்போது எங்கள் யாருடைய உதவியும் தேவைப்படாதபடி வளர்ந்துவிட்டாள். ஒன்றல்ல இரண்டல்ல, ஒரே நேரத்தில் உள்ளங்கையில் விதவிதமான வண்ணங்களில் நான்கைந்து மாத்திரைகளைக் குவித்து வாயில் கவிழ்த்துக்கொண்டு, மடக்கென்று  ஒரு வாய் தண்ணீரில் அத்தனையையும் விழுங்கக்கூடிய திறன் அடைந்துவிட்டாள். மூன்று வேளைகளும் இப்படி உணவுக்கு நிகராக மாத்திரை சாப்பிடும் வழக்கம் ஓர் அத்தியாவசியமாகிவிட்டது அவளுக்கு.

 அவளுக்கு விநோதமான ஒரு நோய் வந்திருந்தது. அந்த வியாதியின் விவரங்களையும் அது என் குழந்தையைத் தாக்கியதன் காரணத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை. 'ஆட்டோ இம்யூனிட்டிஎன்று படாடோபமாக நவீன மருத்துவமனையின் பிரபலமான மருத்துவர்கள் அதற்குப் பெயர் சொன்னார்கள். வியாதிக்கு எதிராகச் செயல்பட வேண்டிய செல்கள், உடம்பின் ஆரோக்கியமான செல்களையே தாக்கி அழிக்கும்  விநோதமான மருத்துவ நிலை. லட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த நோய் பீடிக்குமாம். ஒன்றே ஒன்றாக இருந்த எங்கள் மகள், லட்சத்தில் ஒருத்தியாகி விட்டாள். மாத்திரை பழகிய அவளது உடலை எக்ஸ்ரே எடுத்தார்கள். ஸ்கேனினால் வருடினார்கள். ஊசி போட்டார்கள். எதற்கும் மசியவில்லை அவள் உடம்பு. இறுதியில், மருந்தினால் குணப்படுத்துகிற வியாதி இல்லை என்று கை விரித்துவிட்டார்கள்.

வியாதி காரணமோ... மருந்து காரணமோ, ஊரெல்லாம் கொண்டாட்டமாக கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்த பிரகாசமான கடந்த வார இரவில், அவள் உடம்பே அவளை நிராகரித்த பரிதாப நிலையில், உடம்பு எல்லாம் குழாய்கள் நுழைத்த பொம்மையாக மருத்துவமனையில் .சி.யு தனிமையில் எங்கள் குழந்தை இறந்துபோனாள்.

மருந்து அரித்த உடலை எரித்து, அஸ்தி கரைத்து, அழுது ஓய்ந்தாலும் ஓலமிடும் மனசு அடங்கவில்லை. என் சர்க்கரை வியாதிக்கு மாத்திரையைப் போட்டு தண்ணீர் முழுங்கும் ஒவ்வொரு நேரமும், துக்கத்தில் தொண்டை அடைத்து முழுங்க இயலாமல் என் குழந்தை மாதிரி நானும் மாத்திரையைத் துப்பிக்கொண்டு இருந்தேன். மனைவி பேச்சு அடங்கிப்போனாள். வயதான நாங்கள் எல்லோரும் திடமாக இருக்க, அந்த  வீட்டின் குழந்தை இறந்துபோனதன் குற்ற உணர்ச்சியை ஜீரணிக்க எங்களுக்கு இன்னும் நிறைய வருடங்களாகும் என்று தோன்றுகிறது.

ஆட்டோ இம்யூஷன் டிஸார்டர், ஆட்டோ ஆன்ட்டிபயாடீஸ் போன்ற எந்த அறிவுபூர்வமான சங்கதிகளும் புரியாத, வாழ்க்கையின் துக்கங்கள் மரத்துப்போன பாட்டிதான் கொஞ்சம் தெளிவாக இருந்தாள். விசாரிக்க வருபவர்கள் எல்லோரிடமும் ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

''கொழந்தை நன்னாத்தான் இருந்தா. இல்லாத வியாதியெல்லாம் கற்பனை பண்ணிண்டு, கண்டகண்ட மாத்திரை எல்லாம் குடுத்துக் குடுத்து, எல்லாருமா கொழந்தையைக் கொன்னுட்டா''-எனக்கு அவள் சொன்னதில் நிறைய உண்மை இருப்பதாகத்தான் தோன்றியது!

 

anandraghav@yahoo.com