எல்லாம் வெல்லும்

அ.முத்துலிங்கம்

பிரிகேடியர துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்தார். முந்தைய நாள் போரில் மிஞ்சிய புகை மணம் காற்றிலே நிறைந்துகிடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததை நினைத்துப் பார்த்தார். இத்தனை அழிவு இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.

முள்ளிவாய்க்காலில் காலையில் எழும்பியதும் துர்க்காவின் கண்ணில் படுவது அகிலா என்ற சிறுமிதான். வழக்கம்போல் அரை மணி நேரம் யோகாசனம் செய்த பின்னர், மேஜர் சோதியாவின் படத்துக்கு மெழுகுத் திரி கொளுத்தி வணங்குவார். ஒரு சுற்று நடந்து கூடாரங்களைப் பார்வையிடுவார். சிலர் இன்னமும் தூக்கத்தில் இருப்பார்கள். சிலர் எழுந்து தேநீர் தயாரிப்பார்கள். அகிலாவுக்குக் குண்டு விழுந்து ஒரு கை போய்விட்டது. அதிலே கட்டுப் போட்டு இருந்தார்கள். அவள் ஒருவிதக் கவலையும் இல்லாமல், குனிந்து புற்களுக்கு இடையில் ஏதோ ஒரு பூச்சியைத் துரத்திக்கொண்டு இருந்தாள். துர்க்காவைக் கண்டதும் விறைப்பாக நின்று, 'துர்க்காக்காஎன்று மகிழ்ச்சி பொங்கக் கத்தி, மிஞ்சி இருந்த இடது கையால் ஒரு சல்யூட் அடித்தாள். 'இங்கே நிற்கக் கூடாது. ஓடு ஓடுஎன்றார். 'எல்லாம் வெல்லும், அக்காஎன்றாள் உற்சாகமாக. 'எல்லாம் வெல்லும்என்று துர்க்காவும் ஒரு சல்யூட் வைத்தார்.

அகிலா, நித்தியா, அபிராமி, சுகன்யா, கன்னிகா, குழலி எல்லோரும் காயம் பட்டவர்கள். கை இல்லாமலும், கால் இல்லாமலும், கண் போயும் கட்டுக்களோடு வாழப் பழகிய சிறுமியர். அவர்கள் போர் முனையில் தங்கக் கூடாது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அங்கே இருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. குண்டு வீச்சில் பெற்றோரை இழந்தவர்கள். உறவு என்று சொல்ல ஒருவருமே இல்லை அவர்களுக்கு. நித்தியாவுக்கு இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டு இருந்தது. குண்டு வீச்சும், எறிகணையும், துப்பாக்கிச் சூடும் ஆறு மணித் தியாலங்கள் தொடர்ந்து நடந்து அப்போது தான் ஓய்வுக்கு வந்திருந்தது. தினம் இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் போடப்பட்டு, அந்த நேரம் சனங்கள் அத்தியாவசியமான காரியங்களைச் செய்யப் பழகிக் கொண்டார்கள்.

சில வேளைகளில் துர்க்கா நினைப்பது உண்டு, குண்டுகள் விழும்போது நேராகப் பதுங்கு குழிகள் மேல் விழுந்தால் நல்லாஇருக்கும் என்று. ஒரு பிரச்னையும் இன்றி இறந்துபோகலாம். அந்தப் பதுங்கு குழியைச் சிறுமியர்தான் நிறைத்திருந்தனர். இரண்டு கைகள் போன மேனகாவும் அங்கேதான் இருந்தாள். ஒரு முறை கிபீர் இரைந்துகொண்டு தாழப் பறந்து வந்தது. மூன்று வயதுக் குழந்தைகூட அது கிபீர் விமானம் என்று சத்தத்தை வைத்தே சொல்லிவிடும். அதனுடைய வேகம் ஒலியின் வேகத்தைப்போல இரண்டு மடங்கு. விமானம் போன பின்னரே அதன் ஒலி வந்து சேரும். விமானத்தின் பேரிரைச்சலில் கத்திப் பேசினாலும், கேட்காது. சிறுமிகள் பதுங்கு குழிகளுக்குள் நீச்சல் குளத்துக்குள் குதிப்பதுபோலப் பாய்ந்துவிட்டார்கள். பக்கத்தில் குண்டு விழுந்து மண் எல்லாம் சரிந்து மூடிவிட்டது. ஆழமான குழி அது. நாலு பேர் அவசர அவசரமாகக் கிண்டியதில் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அப்படியும் சுவர்ணலதா மூச்சுத் திணறி இறந்துவிட்டாள். எப்பவும் திருநீறு பூசி, பொட்டுவைத்து, இரட்டைப் பின்னலுடன் சிரித்தபடி இருக்கும் சிறுமி அவள். காலையில் எழுந்தவுடனேயே சீப்பைத் தூக்கிக்கொண்டு, 'அக்கா... அக்காஎன்று யாராவது பெரிய பெண்ணைத் தேடித் திரிவாள், தலையை இழுத்துவிடச் சொல்லி.

தினம் மின்சாரம் வேலை செய்யும் இரண்டு மணி நேரத்தில் முக்கியமான செய்திகளை மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். வெளி நாடுகளுக்குச் செய்திகளும், தகவல்களும், படங்களும் அனுப்பப்பட்டன. பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த 'சிவகாசிபடத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ... அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், 'அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்!’

துர்க்கா வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சூரியன் அன்றைய நாளைத் தயக்கத்துடன் துவங்கினான். மரங்கள் புகைமூட்டமாகத் தெரிந்தன. கால நிலை, பகல் மப்பாகவும், பின்நேரம் மழையாகவும் இருக்கும் என்று அவருக் குப் பட்டது. முழங்காலை மடித்து சப்பாத்துக் கயிற்றை இழுத்துக் கட்டினார். இடைப்பட்டியை மூன்றாவது ஓட்டை மட்டும் இறுக்கிய பின்னர் தொப்பியைத் தலை மேல் அணிந்தார். கைத் துப்பாக்கியை உறையினுள் செருகினார். 'ரெடியாக இருஎன்று சொல்வதுபோல, செக்கண்டுக்கு 700 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய ஷி97 யப்பான் துப்பாக்கியை ஆதரவாகத் தொட்டுத் தன் இருப்பை உணர்த்தினார்.

குறி சுட்டுத் திறனில் அவர் பல முறை பரிசு பெற்றவர். தீச் சுவாலை நடவடிக்கையின்போது வயிற்றிலே குண்டுபட்ட பிறகும் அந்தத் துப்பாக்கி அவரைக் கைவிடவில்லை. அந்த நிலையிலும் 1,500 மீட்டர் தூரத்தில் அவருடைய துப்பாக்கி பல தடவை குறி தப்பாமல் சுட்டது. இரண்டு வார காலமாக அரிசிக் கஞ்சியை மாத்திரம் சாப்பிட்டு வந்ததில், அவர் உடல் மெலிந்து போய் இருந்தது. ஆனால், வலிமை குன்றவில்லை. அண்ணாந்து பார்த்தபோது, ஒரு பறவையைக்கூடக் காண முடியவில்லை. ஒரு பறவையின் சத்தமாவது கேட்கிறதா என்று காது கூர்ந்து கேட்டார். போர் தொடங்குவதற்கு முன்னால் அந்த நேரம் எத்தனை பறவைகளின் ஒலி வானத்தை நிரப்பியிருக்கும்! எல்லாமே இடம் பெயர்ந்துவிட்டன என எண்ணினார். முதலில் இடம்பெயர்வது பறவைகள், பின்னர் மிருகங்கள், கடைசியில்தான் மனிதர்கள்.

அவரிடம் இருந்த நைக்கான் கேமராவினால் துர்க்கா நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளைப் படம் பிடித்திருந்தார். தன்னுடைய மடிக் கணினி யில் படங்களைச் சேமித்து, அவற்றைப்பற்றிய விவரமான குறிப்புகளையும் எழுதியிருந்தார். பறவைகளின் நிறங்கள், ஒலிகள், பழக்கவழக்கங் கள், உணவு என அவர் அவதானித்த அத்தனை தகவல்களையும் எழுதிப் பாதுகாத்தார். இந்தத் தகவல்களையும், படங்களையும், ஒலிகளையும், ஒரு நாளைக்கு காணொளித் தகடாக வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவ்வப் போது கம்ப்யூட்டரில் பதிந்துவைத்தவற்றை வெளிநாட்டுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பவும் அவர் தவறவில்லை.

 ருள்மதி போராளியாக விருப்பப்பட்டு, ஒருநாள் தானாக வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அவளைப் பார்த்தபோது துர்க்காவுக்குச் சிரிப்பாக வந்தது. 20 வயது இருக்கும். உருண்டையாக இருந்தாள். உடம்பில் எந்தப் பாகத்தை எவ்வளவு ஆழமாகக் கிள்ளினாலும், அவள் எலும்பைத் தொட முடியாது. மூன்று மாதக் கடும் பயிற்சியில் தசைகள் கரைந்து உடம்பு முறுகிவிட்டது. அவளைப் போர்க்களத்துக்கு துர்க்கா அனுப்பியது இல்லை. அருள்மதியின் அம்மா ஆங்கில ஆசிரியை. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அருள்மதிக்கு நல்ல புலமை. கணினியில் பயிற்சி இருந்ததால், அவளைத் தகவல் தொழில்நுட்பத்தில் துர்க்கா பயன்படுத்தினார். கணினி மூடியில் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தின் ஒரு வசனத்தை வெட்டி ஒட்டி இருப்பாள் அருள்மதி. தாய்க்கு அவள் ஒரே ஆசை மகள். 'Please come home. There is only one you!’ கணினியைத் திறக்கும்போது எல்லாம் தாயின் ஞாபகம் வரும். தாயைப் பிரிந்த கடைசி நாள், தாயின் வயிற்றில் குறுக்காகத் தலைவைத்துப் படுத்து இருந்ததை நினைப்பாள். தாய் அவளைக் கொஞ்சுவது இல்லை. கழுத்தை ஆழமாக முகர்ந்து பார்ப்பதோடு சரி. போர்ச் செய்திகளைத் தினமும் கணினி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகையில், தாயின் நினைவு வந்து விடும். அத்துடன், வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அன்றாடம் திரட்டித் தருவது அவள் பொறுப்பு. ஒரு வாரத்திலேயே காட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள். நடக்கும்போது ஒரு சருகு அசையாது, சுள்ளி முறியாது. துர்க்கா ஓய்வாக இருக்கும் சமயங்களில், முக்கிய மான மொழிபெயர்ப்புகளை அருள்மதி எடுத்து வருவது உண்டு. பின்னர், அதுபற்றிப் பேசுவார்கள். முடிந்ததும் பாம்பு சுருள் அவிழ்ப்பதுபோல, ஓசையின்றி எழுந்து அருள்மதி செல்வாள்.

சிறு வயதிலேயே துர்க்காவுக்கு, மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையில் ஓர் ஈர்ப்பு. தாவரவியல் பாடங்களை முதலிலேயே படித்து, ஆசிரியையிடம் வகுப்பில் கேள்விகளாகக் கேட்டபடி இருப்பாள். பறவைகளில், அவளுக்கு ஆர்வம் அப்போதே தொடங்கிவிட்டது. மருத்துவம் படிப்பது என்று தீர்மானித்தாள். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது, பஸ்ஸில் இருந்து இறங்கியவள் வீட்டுக்கு வரவில்லை. எல்லோரும் தேடினார்கள். அடுத்த நாள் என்ன பாடம் என்று ஆசிரியையிடம் கேட்டு அதைப் படிப்பதற்கான புத்தகங்களுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டவள், என்னஆனாள் என்பது தெரியவில்லை. பிறகுதான் செய்தி பரவியது. அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள் என்று! யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா?’

கிளிநொச்சி விழுந்த அன்று, துர்க்கா, அருள்மதிக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீ ஆயுதத்தைத் தொடக் கூடாது. வரலாற்றைச் சொல்வதற்கு எங்களுக்கு ஒருவர் வேண்டும்!’ அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்?’ என்றாள். ஒரு பாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்!’

போரிலே பங்கு பெறக் கூடாது என்று துர்க்கா சொன்னது அருள்மதிக்குப் பெரிய ஏமாற்றதைத் தந்தது. 'சரி, ஆனந்தபுரம் போர் திட்டத்தையாவது சொல்லுங்கள். விவரம் எனக்குத் தெரிய வேண்டாமா?’ என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே’. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்?’ என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்!’

அந்த நேரம் பார்த்து கை ரேடியோ சடசடவென ஒலித்தது. சங்கேத வார்த்தைகள். அருள்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்கா கோபமானது மட்டும் தெரிந்தது. பின் பக்கத்தைக் காட்டிக்கொண்டு துர்க்காவிடை பெறாமல் நடந்தார். அதுவே கடைசிச் சந்திப்பு!

ஜெயதீசனை, துர்க்காவால் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். காலையில் முதல் வேலையாக ஒரு கையால் கீழே நழுவும் கால் சட்டையைப் பிடித்தபடி, மறு கையில் பனம் பழங்களை எங்கேயோ போய் பொறுக்கிக்கொண்டு வருவார். அவை சிறுமிகளுக்கு. ஜெயதீசனுடன் யாருமே கோபிக்க முடியாது. எங்கே எல்லாம் போகக் கூடாதோ, அங்கே எல்லாம் போவார். அவருடைய நாடு ஆஸ்திரேலியா. தன்னுடைய நாட்டைவிட்டு வந்து, அநாதைக் குழந்தைகளுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். எல்லோரும் கழித்துவிட்ட ஒரு பழைய காரில் மாற்றங்கள் செய்து, அதை ஆமணக்கு விதை எண்ணெயில் ஓடுகிற மாதிரி தயாரித்து இருந்தார். அதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு செடிகளைப் பயிரிட்டு வளர்த்தார். அவர் பெரிய விஞ்ஞானி, சேவையாளர், பரோபகாரி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நேரம் ஒதுக்கி, ஆடல் பாடல் என்று அவர்களைச் சந்தோசப்படுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முள்ளிவாய்க்காலை விட்டு நகர்ந்தாரா என்பது தெரியவில்லை.

நாலு வருடங்களுக்கு முன்னர் தலைவரு டைய 51-வது பிறந்த நாள் வந்தபோது, துர்க்கா ஆச்சர்யமான ஒரு பரிசு தந்தார். 16 வருடங்களாகக் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த 100 விதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டி, அதன் கீழே பறவைகளின் பெயர்களை எழுதி, 'ஈழத்துப் பறவைகள்என்று தலைப்பிட்டு தலைவரிடம் நேரே கொடுத்தார். அந்தத் தடவை தலைவர் துர்க்காவையும் விசேடப் பயிற்சியில் இருந்த சில பெண் போராளிகளையும், சந்திப்புக்கு அழைத்திருந்தார். பயிற்சியில் இருந்த ஓர் இளம் பெண், அவளுடைய பெயர் மாலதியோ என்னவோ, வெகுவான கூச்சத்துடன் அமர்ந்திருந்தாள். ஒரு பூனை வந்து, அவ்வளவு பேர் இருக்க, மாலதியின் மடியில் ஏறி உட்கார்ந்தது. மாலதி பயத்தில் நெளிந்துகொண்டு இருந்தாள். தலைவர் பார்த்துச் சிரித்துவிட்டு, 'புலி பூனைக்குப் பயப்பிடுவதா?’ என்று சொன்னார். பின்னர், பூனையை வாங்கி கூட்டம் முடிவுக்கு வரும் வரை, தன் மடியில் வைத்துத் தடவியபடியே இருந்தார்.

துர்க்கா கொடுத்த பரிசைத் திறந்து பார்த்ததும் திடுக்கிட்டார். 'நன்றி... நன்றி. இத்தனை பறவைகளா? எனக்குத் தெரியவில்லையே?’ என்று தலைவர் வியந்தார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் உரத்துச் சொன்னார். மைனா, வாலாட்டி, தையல்காரி, பிலாக்கொட்டை, சிட்டுக்குருவி, தகைவிலான், புளினி, வானம்பாடி, புறா, குயில், மரங் கொத்தி, கரிக்குருவி, குக்குறுப்பான், செண்பகம், நாகணவாய் என்று அவர் சொல்லிக்கொண்டே வர... எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். '100 பறவைகளை மாத்திரம்தான் நான் படம் பிடித்துஇருக்கிறேன். ஆனால், 240 பறவை வகைகள் இருக்கின்றனஎன்றார் துர்க்கா. தலைவர், 'இவை எல்லாம் எங்கள் பறவைகள். சுதந்திரமானவை. தடையின்றி அவை எங்கேயும் பறக்கலாம்என்று பெருமையோடு சொன்னார். சிரிதேவி குறுக்கிட்டு ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி, 'இது என்ன பறவை? புதுசாக இருக்கிறதேஎன்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிரிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா? 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிரிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும்!’ என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்து அந்த இடம் கலகலப்பானது. எத்தனையோ சந்திப்புகள். ஆனால், அந்தச் சம்பவத்தை மாத்திரம் துர்க்காவினால் மறக்க முடிய வில்லை.

ரேடியோவில் அறிவிப்பாளராகச் செயல்பட்டவர் இறைவன். தினம் அவருக்குக் கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில், செய்தி வாசிப்பதோடு சுவையான தகவல்களையும் கூறி, அந்த ரேடியோ நேரத்தை உபயோகம் உள்ளதாக மாற்றிவிடுவார். அவருக்கு இஸ்ரேல் நாட்டு முன்னாள் போர்த் தளபதி மோசே தயான் மீது அளவற்ற பற்று. அவரைப்பற்றிய ஏதாவது கதை ஒன்றைச் சொன்ன பிற்பாடுதான், இறைவன் அன்றைய நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவார். மோசே தயான், ஓர் இளைஞனாக பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றியபோது, ஒரு கண்ணை இழந்தவர். ஒருநாள் விதிக்கப்பட்ட வேகத்துக்கு மேலாக கார் ஓட்டிக்கொண்டு போனபோது, போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. அவர் சொன்ன பதில், 'எனக்கு ஒரு கண்தான் இருக்கிறது. நான் எதைப் பார்ப்பது ரோட்டையா அல்லது வேகம் காட்டும் கருவி யையா?’ போலீஸ் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. இப்படி சின்னச் சின்ன தகவல்களைத் தருவார்.

சில போராளிகள் இறைவனைப் பரிகசிப் பார்கள். 'இஸ்ரேல் தளபதி பற்றி புகழ் பாடுகிறீர்கள். இஸ்ரேலின் கிபீர் விமானம்தான் இரண்டு மடங்கு ஒலி வேகத்தில் பறந்து குண்டுகளைப் போட்டு எங்கள் மக்களைக் கொல்கிறது. கிபீர் என்றால், இளம் சிங்கம் என்று பொருள். சிங்கக் கொடி ராணுவம் இளஞ் சிங்கங்களை எங்கள் மீது ஏவிவிடுகிறது. நீங்கள் அவரைப் போற்றுகிறீர்கள்!’ அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்!’

முள்ளிவாய்க்காலில் அன்று மறுபடியும் அகிலாவைப் பார்த்ததும் துர்க்கா திடுக்கிட்டார். அவள் சொல்வழி கேட்காதவள். எவ்வளவு சொல்லியும், அவள் கூடாரத்துக்குத் திரும்பிப் போகவில்லை.

'அக்கா, 6 மணிக் குருவியைப் பார்த்தேன்என்றாள். 'பொய் சொல்லாதே. அது வலசை போற

குருவி. இந்த மாதம் அது இங்கே இருக்க முடியாது!’

'இல்லை அக்கா. எனக்குத் தெரியும் வாருங்கோஎன்று கூட்டிப்போனாள். அவள் சொன்னது உண்மைதான். கட்டையான நீல வால் குருவி. மேலுக்கு பச்சை, கீழுக்கு சிவப்பு உடம்பு. வெள்ளைக் கழுத்து, சப்பாத்து லேஸ் துளைபோல சின்னக் கண்கள். அத்தனை அழகான குருவியை மரத்திலே கண்டதுதான். நிலத்திலே அவ்வளவு சமீபத்தில் துர்க்கா பார்த்தது இல்லை. அது இலைகளைத் தள்ளி புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டு இருந்தது.

'ஏன் அக்கா திகைச்சுப்போய் நிற்கிறீங்கள்?’

'பாவம் இது. தவறிப்போய்விட்டது. இதன் ஆங்கிலப் பெயர் Indian Pitta. ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குப் பறந்து, அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின்னர் பனிக் காலம் ஆரம்பிக்கும்போது, இங்கே வந்துவிடும். இந்த வருடம் எப்படியோ அது தனித்துவிட்டது.’ 'கூட்டத்தோடு பறக்கவில்லையா? அப்ப என்ன நடக்கும்?’

'இந்த நிலத்தில் அப்படி ஒரு பற்று ஆக்கும். பார், எங்களைவிட்டுப் போக விருப்பம் இல்லை. ஓடிப் போய் என்னுடைய கேமராவை எடுத்து வாறியா?’- துர்க்கா பேசி முடிக்கு முன்னர், அகிலா எடுத்தாள் ஓட்டம். அவள் திரும்பி வந்தபோது குருவி பறந்துவிட்டது.

'எங்கே அக்கா குருவி?’

'இங்கேதான் எங்கேயோ... அது தனியா மாட்டிவிட்டது. இந்த வெயில் சூட்டில் அது நிச்சயம் செத்துப்போகும். ஐயோ பாவம்என்றார். இரண்டு இமைகளும் சந்திக்கும் இடம் ஈரமாகியது. 'அது தப்பிவிடும் அக்கா. பயப்பிடாதையுங்கோஎன்றாள் அகிலா, எதோ பெரிய ஆள்போல.

வ்வொருவராகத் தன் அணியில் இருந்தவர்களை, துர்க்கா இழந்துகொண்டு வந்தார். ஒரு கணினி செய்ய வேண்டியதை அகல்மதி செய்வாள். கழுத்து எலும்பு தெரியும் ஒல்லி யான தேகம். அதிவேகமாக ஓடக்கூடியவள். சொற்களைக் கையினால் மறைத்துக்கொண்டு தான் பேசுவாள். அந்தக் காலத்து விதூஷகன் போல துர்க்காவுக்கு சிரிப்பு மூட்டுவதுதான் அவள் வேலை. அவள் சிரித்தால் போதும், விடிவதைப்போல அந்த இடத்தில் ஒளி உண்டாகும். திட்டத்தை துர்க்கா விளக்கியதும், போராளிகள் தங்கள் தங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்துக்கொண்டார்கள். ஒரு ரகசியப் பொறியை நோக்கி ராணுவக் கவச வாகனங்களைத் திருப்பிவிடுவதுதான் உத்தி. பீரங்கிக் குண்டுகள் வந்து விழும் திசையையும், அவற்றின் இரைச்சலையும், வேகத்தையும் வைத்து எவ்வளவு தூரத்தில் ராணுவம் நகருகிறது. எந்தத் திசை நோக்கிச் செல்கிறது, இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் போன்ற விவரங்களைக் கணிப்பதில் அகல்மதி தேர்ச்சி பெற்றவள். அன்று இரண்டு கவச வாகனங்களை அழித்து இருந்தார்கள். எந்த நேரமும் உற்சாகமாக இருப்பவள் அன்று என்னவோ மாதிரி இருந்தாள். 'அக்கா, வெற்றி கிட்டுமா?’ என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்!’ துர்க்கா வாய் திறந்து பேசி முடிந்ததும், கிபீர் விமானத்தில் இருந்து குண்டு வெளிச்சமாக வந்து விழுந்தது. ஒரு கணத்துக்கு முன்னர் அகல்மதி கையில் .கே 47 துப்பாக்கியுடனும், தூரக் கண்ணாடியுடனும் நின்றாள். அடுத்த கணம் பெரும் குழிதான்கிடந்தது. அவள் இருந்த சுவடு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சூழ்ந்த புகை மூட்டத்தில் சதை எரியும் மணம் ஒன்றே துர்க்காவுக்கு மிஞ்சியது.

 டுத்த பெரிய இழப்பு, செவ்வானம். அவளும் மற்றவர்களைப்போல வெளிநாட்டுக்குப் போயிருந்தால், இன்றைக்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி, நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பாள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் போக மறுத்து, போரிலே காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டாள். அவளுக்கு மிஞ்சிப்போனால், 27 வயதுதான் இருக்கும். கெக்கரிக்காய் போன்ற நேரான உடம்பு. ஒரு வளைவுகளும் இல்லை. காதிலே ஓட்டை உண்டு, தோடு கிடையாது. மூக்கிலே துளை உண்டு. மூக்குத்தி கிடையாது. விரலிலே நகம் உண்டு. பூச்சு பூச மாட்டாள். ஒரு நாளில் 18 மணித் தியாலத்துக்குக் குறையாமல் வேலை செய்தாள். நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பி அவளுக்கு ஒரு மடிக்கணினி அனுப்பி இருந்தான். ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அதைத் தூக்கிக்கொண்டு, இரண்டு நாட்களாக அலைந்தாள். எப்படித் திறப்பது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. ஒருநாள் அருள் மதியிடம் இரவு 10 மணிக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்தாள். எல்லா விசயங்களை யும் ஒரே நாளில் கற்றுவிட வேண்டும் என்ற அவா. கம்ப்யூட்டரில் அவள் எழுதிய முதல் கடிதத்துக்கு இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. ஜெனரேட்டர் நேரம் முடிந்து விட்டபடியால், கடிதத்தை அடுத்த நாள் அனுப்பலாம் என்று மூடிவைத்தாள். அவள் அடித்த கடிதம் கம்ப்யூட்டரில் கிடந்தது. அதிகாலை ஆஸ்பத்திரிக்கு உடுத்திப் போனாள். போன சிறிது நேரத்திலேயே கொத்துக் குண்டு ஒன்று ஆஸ்பத்திரியின் மேலே விழுந்து 40 பேர் பலியானார்கள். அதில் செவ்வானமும் ஒருத்தி. ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை. இறந்தவர்களில் 20 பேர் குண்டு விழாவிட்டா லும், இறந்துபோயிருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். செவ்வானம் இறந்த செய்தியைத் தொலைபேசியில் நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பிக்கு அறிவித்தார்கள். இரண்டு நாள் கழித்து அவள் எழுதி கம்ப்யூட்டரில் சேமித்துவைத்த கடிதத்தை மின்னஞ்சலில் அவனுக்கு அனுப்பிவைத்தாள் அருள்மதி.

பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றி அதி உயர் விருதுகளைப் பெற்றவர் ஆண்டி மக்நாப். அவருடைய இரண்டு புத்தகங் களை மொழிபெயர்ப்பில் தலைமைப் பீடம் படித்திருந்தது. ஒன்று, Bravo Two Zero. அடுத்தது, Immediate Action. துர்க்காவும் இயன்ற மட்டும் அவற்றை இரவிரவாகப் படித்து முடித்து விடுவார். ஆண்டி மக்நாபில் பற்று அப்படித்தான் ஏற்பட்டது. அருள்மதி பகுதி பகுதியாக மொழிபெயர்த்ததுCol. James Mrazek என்ற அமெரிக்கர் எழுதிய The Art of Winning Wars என்ற புத்த கத்தைத்தான். அதன் 5-வது அதிகாரத்தை மொழிபெயர்க்கச் சொல்லி, அவசர கட்டளை ஒரு நடு இரவில் வந்தது. அருள்மதி இரவிரவாக மொழிபெயர்த்து, கையினால் எழுதி அதை கம்ப்யூட்டரில் அச்சடிக்கக்கூட நேரம் இன்றி அப்படியே சுரேஷ் மாஸ்ரரிடம் கொடுத்து அனுப்பினாள். அந்த மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்ட ஒரு வசனம் துர்க்காவினால் மறக்க முடியாது. 'போர்கள், ஆயுத பலத்தினால் அல்ல, புத்தியினால் வெல்லப்படுகின்றன!’

 20 வருடப் போர் வாழ்க்கையில் துர்க்கா பல போராளிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் லெப். கேர்ணல் மொழியரசி போன்ற ஒரு போராளியைக் கண்டது கிடையாது. அபூர்வமானவர். அழகான தோற்றம்கொண்ட அவருக்கு ஒரு கால் கிடையாது. பதிலுக்கு கரடுமுரடான ஒரு மரக்கால் பொருத்தி இருந்தது. போர்க்களத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ தான் எந்த விதத்திலும் குறைவுபட்டதாக அவர் உணர்ந்தது இல்லை. குளிக்கப் போனால், ஒரு மணித்தியாலம் மற்றவர்கள் அவருக்காக ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது. ஒட்டி வெட்டி மிச்சமாய் இருந்த கூந்தலை எண்ணெய்வைத்து ஊறவிட்டு, சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களையும் அரைத்துப் பூசி ஒரு பாட்டம் முழுகிவிட்டு, பின்னர் வாசனை சோப் போட்டு மீண்டும் ஒரு தடவை குளிப்பார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல முகத்தை ஒப்பனை செய்வார். 'சாம்பிராணிப் புகை வேண்டுமா, அக்காஎன்று யாராவது இளம் பெண் சீண்டினால், மரக்காலைக் காட்டுவார். மற்றவர் கள் ஞாபகப்படுத்தினால் ஒழிய, அவருக்கு தான் போராளி என்பது மறந்துபோகும். விடிந்து, அன்றைய நாள் தொடங்கிய பிறகு ஒரு தடவையாவது தன் அம்மாவின் றால் குழம்பைப்பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது.

ஒருநாள் துர்க்கா கேட்டார், 'மொழி, என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா?’

'பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே

துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.’

'அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்?’

'எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன!’

போர் என்றதும் அங்கே ஏதோ றால் குழம்பு பரிமாறுகிறார்கள் என்ற நினைப்புதான். பாதி துள்ளுவார். மற்றவர்களைத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்பது மொழியரசிதான். போர் முடிவதற்கு முன்னர் இரவு தொடங்கிவிடக் கூடும் என்பதுபோலச் செயலாற்றுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சுடும் அந்த நேரத்திலும் விரலால் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்க மறக்க மாட்டார். எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுத்தான் மூளையைப் பாவிப்பார்.

'மொழி, எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்?’ என்று துர்க்கா கோபிப்பார்.

'எதுக்குப் பயப்பட வேணும்? கடவுளுக்குத்தான் என்னைக் கூப்பிட வேண்டிய நேரம் தெரியும்!’

'அது சரி, நீர் ஏன் கடவுளுக்கு உதவி செய்கிறீர்?’ என்று துர்க்கா கடிந்துகொள்வார்.

'எல்லாம் வெல்லும், அக்கா.’

'எல்லாம் வெல்லும்!’

லெப். கேர்ணல் மொழியரசி டக்டக்கென்று மரக்காலை நிலத்திலே உதைத்து நடந்து போவார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.

னந்தபுரம் போர் யுக்தியை இரண்டு வாரகாலமாகத் திட்டமிட்டார்கள். 1,000 போராளிகள் பங்கு பெற்ற இந்த நகர்வில், இடப்புற அணியின் பொறுப்பை பிரிகேடியர் துர்க்கா ஏற்றிருந்தார். அவருக்குத் துணையாக வாகை ஒன்று, வாகை இரண்டு போரணிகள் இருந்தன. இணைப் படையாக அவருக்குப் பின்னால் பிரிகேடியர் விதூஷாவின் படை நின்றது. வலப் பக்கத்து நுனியில் பிரிகேடியர் மணிவண்ண னும், பிரிகேடியர் தீபனும் இருந்தனர். நடுவில் பொறுப்பாக நின்றது கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும். போர் தொடங்கிய சிறிது நேரத்தில், கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும் உள்வாங்கும் அதே சமயம், இடம் வல அணிகள் மடிந்து எதிரியை வளைத்துப் பிடித்து விட வேண்டும். 2,200 வருடங்களுக்கு முன்னர் ஹனிபால் பயன்படுத்திய அதே யுத்தி. போர்த் தளவாடங்கள், 50 கலிபர்கள், உந்து கணை செலுத்திகள், ஆர்ட்டிலறிகள், மோர்ட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள் எனச் சகலதும் தயார் நிலையில் இருந்தன.

துர்க்கா இடப்புறத்து முனையில் முன்னேறினார். அவருடைய துணைப்படை கள் அவரை ஒட்டியபடி நகர்ந்து பாரியத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுக்காகக் காத்து நின்றபோது, ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கின. ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுந்து அணியைச் சிதறடிக்க முயன்றன. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல், துர்க்கா முன்னேறிக்கொண்டு இருந்தார். திடீரென்று சடசடவென இடப்புறம் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தபோது, துர்க்கா துணுக்குற்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. லெப். கேர்ணல் மோகனா, இடது புறத்தில் நின்றார். உடம்பின் ஓர் அங்கம் போலாகிவிட்ட மோகனாவின் துப்பாக்கி இலக்கில் அசையாமல் நேராக நின்றது. துர்க்கா திரும்பிப் பார்த்தபோது, மோகனாவின் பாதி தலையைக் காணவில்லை. இலங்கை ராணுவமும் பெரிய போர் திட்டத்தை வகுத்திருந்தது. இரவிரவாக நடர்ந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அது பெட்டியடித்திருந்தது. போராளிகளின் படை அதற்குள் சிறைபட்டிருப்பது அப்போது தான் துர்க்காவுக்குத் தெரிய வந்தது.

அருள்மதி 10 நாட்களுக்கு முன்னர் மொழிபெயர்த்து கையினால் எழுதி அனுப்பிய அமெரிக்க கேர்ணல் ரசேக்கின் ஐந்தாவது அதிகாரத்தை தலைமைப் பீடத்திடம் சுரேஷ் மாஸ்ரர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது முக்கியமான மொழிபெயர்ப்பு. மோகனாவின் சிவப்பு ரத்தம் ஊர்ந்து வந்து துர்க்காவின் சப்பாத்தை நனைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தார். திசைகாட்டி பொருத்தப்பட்ட அந்தக் கஸியோ கைக்கடிகாரம், தலைமைப் பீடம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தது. இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் தீர்மானித்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அந்தத் திடல் 100 அடி உயரம்தான் இருக்கும். இரண்டே நிமிடங்களில் அதன் மீது ஏறிவிடலாம். 20 வருடப் பயிற்சி இந்தத் தருணத்துக்காகத்தான். ஒரேயரு கட்டளைதான் தேவை. எல்லோரும் பின்வாங்கி இன்னொரு சமருக்குத் தயார் செய்யலாம். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவை எதிரிகளுக்கு உண்டாக்கலாம்.

 

amuttu@gmail.com