பல்லி விழுந்த பலன்

இந்திரா அலங்காரம்

முதன் முதலில் அந்த பல்லி என்னைப் பார்த்த போது திடுக்கிட்டு நின்றது.  இது வரையில் இப்படியொரு பூச்சியைப் பார்த்த தில்லையே என்று நினைத்திருக்குமோ!   மனிதன் என்ற சொல்லும் பொருளும் அதற்கெப்படி தெரியும் என்று நினைத்துக் கொண்டே சுவற்றைத் தட்டினேன்.  கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி டியூப் லைட்டின் பிரேமிற்கடியில் ஒளிந்து கொண்டது.  நானும் அம்மாவும் சண்டை போட்டு முடித்த பின் எங்கள் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் மௌனத்தை அது தான் எப்பொழுதும் தின்று தீர்க்கும்.

இன்று நான் மட்டும் இருந்தேன்.  வழக்கம் போல டியூப் லைட் வெளிச்சத்திற்கு வரும் சிறு சிறு பூச்சிகளை பிடித்துக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு முறை பூச்சியை பிடிக்கும் முன்பும் அந்த பிரேமின் இருட்டில் மறைந்து, பதுங்கி நின்று கொண்டிருக்கும்.  கண நேரத்தில் அதன் நாக்கு பூச்சியைத் தொட்டு உள்ளிழுத்துக் கொள்ளும்.  பூச்சிகள் ஒவ்வொன்றாய் மறையும்.  அதை சுவைத்துத் தின்னுமா ஒவ்வொரு பூச்சிக்கும் ஒவ்வொரு ருசி இருக்குமா அதை வேறுபடுத்தி கண்டறிந்து விடுமா என்று தெரியவில்லை.  பூச்சியைப் பிடிக்கும் போதே அது செத்து விடுமா வாயினுள் வைத்து மெல்லுமா என அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பல கேள்விகள் எழும்.  எனக்கென்னவோ அந்தப் பல்லி ஒவ்வொரு முறை பூச்சியை பிடிக்கும் போதும், தெரிந்தே குற்றம் புரியும் கயமையுடன் நடந்து கொள்வது போலவே தோன்றும்.  நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு பல்லிகள் வந்தன.  ஒன்றின் உடம்பினுள் முட்டை இருப்பது வெளியில் தெரிந்தது.  அவைகளுக்குள், அங்கு இருக்கின்ற பூச்சிகளை பிடித்து தின்பதில் சண்டை வருமா என்று பார்த்தேன்.  வரவேயில்லை.  அவைகளுக்குள் சண்டை வர வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு பூச்சிகள் குவிந்து கொண்டிருந்தன.  ஒவ்வொன்றும் அதனதன் பாணியில் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருந்தன.  ஒவ்வொரு பல்லியின் அசைவும், விரைவாக இருந்தது.  அது நம் கண் பார்வையின் வேகத்தில் பார்க்க இயலாததாய் இருந்தது.  எனக்கு ஒரு கணம், ஒரு சந்தேகம் மின்னலாய் வந்து போனது.  ஒருவேளை அந்த பல்லிகள் வெறுமே அந்தப் பூச்சிகளை நாவால் தொட்டுத் தொட்டு, விட்டு விடுகின்றனவோ என்று தோன்றியது.  ஆனால் அப்படி நினைப்பதற்கும் வாய்ப்பேயில்லாமல்  பூச்சிகள் மறைந்து கொண்டேயிருந்தன.

திடீரென ஒரு பல்லி அதன் சம நிலை தடுமாறி கீழே விழுந்தது.  அது பல்லி விழும் பலனின் அடிப்படையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நாய்க்குட்டியாக மாறிவிட்டது.  என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள் என்னை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டே ஓடி வந்தது.  எனக்கு நாய்கள் என்றால் அலாதிப் பிரியம்.  நாய்க்குட்டி என்றால் அதைவிட பிடிக்கும்.  என்னை பார்த்து செல்லமாய் வாலாட்டிக் கொண்டே குரைத்தது.  மடியில் ஏறி படுத்துக் கொண்டது.  கை, விரல்கள் எல்லாவற்றையும் மோந்து மோந்து பார்த்தது.  நாவால் நக்கி விட்டது.  கையெல்லாம் எச்சில் ஈரம்.  நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவில் நாய் தன் நன்றியை, புன்முறுவலை வாலை ஆட்டுவதன் மூலம் தெரிவிக்கிறது என்கிறது விஞ்ஞானம்.  ஆனால் பல்லியாய் இருந்து நாயாய் மாறிய நாய்க்குட்டி எதை கூற என்னிடம் வாலை ஆட்டுகிறது என்று புரியவில்லை.  அதன் வயிறு, கால்கள், தலை, வால் எல்லாவற்றையும் தடவிப் பார்த்தேன்.  அதனிடம் பல்லியின் எந்த வொரு உடற்கூறும் இல்லை.  வாலையாவது பல்லி போல் ஆட்டுமா என்று உற்றுப் பார்த்தேன்.  வாலில் அடிபட்டால் பல்லி போல் வாலை உதிர்த்து விடுமோ என்று அச்சமாய் இருந்தது.  வாலில்லா விட்டால் அந்த நாய்க்குட்டி என்னிடம் தன் உணர்வுகளை எப்படி காண்பிக்க முடியும்?

பசித்து முனகுவது போல் அழுதது.  இவ்வளவு நேரம் பிடித்து தின்ற பூச்சிகள் இந்த நாய் வயிற்றுக்குப் போதாதுதான்.  நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கேக்கை அதற்கும் கொடுத்தேன்.  நாயாக மாறியபின் அது சாப்பிடும் முதல் உணவு.  சாப்பிட்ட தெம்பில் வீடு முழுக்க ஓடியது.  மூலை மூலைக்கு நின்று மோப்பம் பிடித்த து.  கம்ப்யூட்ட ரின் டேபிளுக்கு அடியில் போய், அதன் வயர்களை கடித்து இழுத்தது.  என்னைப் பார்த்து குரைத்து, விளையாட கூப்பிட்டது.  நாய்க்குட்டிகள், ஏன் விளையாடுவதை ஒரு பொழுது போக்காக வைத்துக் கொள்ளாமல், தினசரி சாப்பாடு போல் வழக்கமாகிக் கொண்டுள்ளன என்று தெரியவில்லை.  புத்தக கட்டை சரித்துவிட்டது.  அன்றைய நாளிதழை கடித்துக் குதறியது.  எனது சுடிதார் பேண்டின் நுனியை பிடித்துக் கொண்டு இழுத்தது.  அது செல்லும் திசையில் நானும் நடந்தேன்.  அதற்கு  அவ்வளவு ஒரு பெருமிதம்! அதன் சொல்படி நான் அதை பின் தொடர்கிறேன் என்று.  சட்டென்று கட்டிலுக்கடியில் போய் நின்று கொண்டு என்னையும் இழுத்தது.  அதற்குள் என்னால் நுழைய முடியாது என்று அதற்கு தெரியாததால் இழுத்து, இழுத்து பேண்ட் துணி கிழிந்து போனது.  அந்த நாய்க்குட்டியை கண்டித்து கட்டுப்படுத்த எனக்கு விருப்பமில்லை.  அது அப்பொழுதுதான் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த பட்டாம் பூச்சி போல் அறை முழுக்க பறந்து கொண்டிருந்தது.  என்னால் தான் அதன் விளையாட்டுடன் ஈடு கொடுக்க முடியவில்லை.  மாடியில் நாங்கள் ஏற்கனவே வளர்த்துக் கொண்டிருந்த ஜிம்மி வீட்டிற்குள், வேறு ஏதோ ஒரு நாய்க்குட்டியை கொண்டு வைத்து, விளையாட வேறு செய்கிறாள் என்பதை உள்ளுணர்ந்து பொறாமையில் புகைந்து கொண்டிருந்தது.  அதன் குரைப்பை இந்த நாய்க்குட்டி சட்டை செய்யவேயில்லை.

இது மாடியில் இருக்கும் ஜிம்மியை போலன்றி வெள்ளை நிறம், புசு புசு வென்று முடி, மின்னும் கருப்பு நிறக் கண்கள் என ஒரு குட்டி நாய் பொம்மை உயிரோடு உலாவுவது போல் இருந்ததால், வெள்ளை மோகம் அறிவை மயக்க என்னையும் அறியாது இதை வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

கட்டிலுக்கு அடியிலிருக்கும் இடம் அதற்கு மிகவும் பிடித்துப் போயிற்று.  நான் சாப்பிடுவதற்கு எதை கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு கட்டிலுக்கு அடியில் ஓடிப் போய் படுத்துக் கொண்டு சாப்பிடும்.  அது  கட்டிலுக்கு அடியில் உச்சா, அல்லது கக்கா போய்விடுமே என்றுதான் எனது சுகாதார மனம் அவ்வப்போது தவித்துக் கொண்டிருந்தது.  எதிர்பார்த்தது போலவே பாத்ரூமை நோக்கி ஓடியது அந்த நாய்க்குட்டி.  உள்ளே விட்டு கதவை பூட்டினேன்.  கதவிடுக்கின் வழியாக குட்டி குட்டி பூச்சிகள் பறந்து வந்தன.  பல்லி நாய்க்குட்டியாக மாறியதால் பூச்சி தொல்லை அதிகரித்து விட்டதென நினைத்துக் கொண்டேன்.  இது பல்லியாயிருந்து நாய்க்குட்டியாய் மாறியது என்ற நினைவின்றி நிஜ நாயாகவே என் மனம் அதை ஏற்றிருந்தது.   ஹைடி சீரியலில் வரும் அந்த குட்டிப் பெண் போல துருதுருவென பறந்து கொண்டிருந்த தால், அதற்கு ஹைதி என்று பெயரிட்டு, ஹைதி என்றழைத்தேன்.

இப்பொழுதுதான் அது முதல் முறையாக என் குரலை கேட்டிருக்க வேண்டும்.  சட்டென என்னை நிமிர்ந்து பார்த்தது.  நாயின் கண்களில் இப்படியொரு உணர்வை நான் இதுவரை பார்த்த தேயில்லை.  என் கண்களை உற்றுப் பார்த்தது.  அதன் வாய் அசைவது போல இருந்தது.  குரைக்கப் போகிறது என நினைத்தால் என்ன சொன்னே?’ என்றது.

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.  என்னால் உடனடியாக அதற்கு பதிலளிக்க முடியவில்லை.  சற்று சுதாரித்து, பல்லி நாய் தானே, நிஜ நாய் இல்லையே என்று நினைத்தாலும் பல்லிகள் எப்போது பேசின என்று குழப்பத்தில் வியர்த்துப் போனேன்.  அது என்னைப் பார்த்து உனக்குப் பேச தெரியாது என்று நினைத்துதான் நான் இவ்வளவு நேரம் பேசாமல் இருந்தேன், மனித மொழி எல்லாமே எனக்கும் தெரியும் என்றது. 

அது பேச ஆரம்பித்த பின் நான் பேசித்தானே ஆக வேண்டும்.  நீ நாய்க்குட்டி  என்றால் உன்னால் பேச முடியாதே என்றேன்.  என்னை நாய்க்குட்டி என்று நீ தான்  சொல்கிறாய்.  என் மொழியில் எனக்கு வேறு பெயருண்டு என்றது.

என்ன பெயர்?’ என்று கேட்டேன், ‘நீங்கள் வழக்கத்தில்  வைத்திருக்கிறீர்களே அது போல் உமா, ரமா, என்று சொல்வேன் என்று நினைத்தாயா? அந்த வழக்கமெல்லாம் எங்களிடம் இல்லை. எங்கள் எல்லோருக்கும் ஒரே பெயர்தான். ஆனாலும் நாங்கள் தனித் தனி தான். உங்களைப்போல் பெயரால் மட்டும் தனித்தனியாக அடையாளம் வைத்தக் கொள்ள மாட்டோம் என்றது.  எனக்கு அவமானமாய் இருந்த து.  சரி... ஹைதி என்று உனக்குப் பெயரிட்டு  உன்னைக் கூப்பிட்டேனே அது உனக்குப் பிடித்திருக்கிறதா?’

சுத்தமாகப் பிடிக்கவில்லை

ஏன்

அந்த சப்பை மூக்கு கார்ட்டூன் பெண்ணின் பெயர்தானே அது’  என்றது.

அது உனக்கு எப்படித்  தெரியும்?’

நான் பல்லியாயிருந்த போது நீ பார்க்கும் எல்லா டிவி  சேனல்களையும் நானும் பார்ப்பேன் என்றது.

சரி, ஹைதி   என்ற பெயர்  பிடிக்கலையா? பெயர் வைக்கும் முறையே பிடிக்கலையா?’ என்றேன்.

நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், வெறுமே பெயரால் என் தனித்தன்மை அமைந்து விட முடியாது

 ‘அதனால்தான் என் பெயர் என்னவென்று  நீ கேட்கவேயில்லையா?’

அதனாலில்லை, உன்னை உன் வீட்டிலிருக்கும் எல்லோரும் கூப்பிடும் போது கேட்டிருக்கிறேனே

எனக்கு பகீரென்றது.  இது பல்லியாய் இருந்த போது நான் தினசரி என்ன என்ன செய்வேன், பேசுவேன், படிப்பேன், எப்படி தூங்குவேன் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்குமோ என்னுடைய நடவடிக்கைகளை உளவு பார்த்துக் கொண்டே இருந்திருக்குமோ, என்று பதட்டமாகி, ‘உனக்கு பகலில் கண் தெரியுமா இரவில் நன்றாக கண் தெரியுமா?’ எனக் கேட்டேன்.

பல்லியாயிருந்த போது பகலில் தூங்கி  விடுவேன்.  டியூப் லைட்டிற்கு அடியில் விழித்திருந்தாலும் கண் தெரியாது.  இரவானவுடன் டியூப் லைட் வெளிச்சத்தில் கண் நன்றாகத் தெரியும்.  ஆனால் அது பூச்சிகளைப் பிடிக்க மட்டுந்தான் உதவும்.  காது மட்டும் லேசாக கேட்கும்.  நீ உன் அம்மாவை, தங்கைகளைச் சத்தம் போட்டு திட்டும் போது சன்ன ஒலியில் என் காதில்  ரீங்கரிக்கும் என்றது.  எனக்கு சற்றே நிம்மதியானது.  எனக்கு கோபத்தின் போது மட்டுமே சத்தம் கூடும்.  நான் பேசிய எல்லாவற்றையுமே அது கேட்டிருக்க வாய்ப்பில்லை.

சரி... அப்போது கேக்  கொடுத்தேனே.  அது பிடித்ததா? உண்மையில் உனக்கு என்ன பிடிக்கும்?’

விளையாட்டு பிடிக்கும், விதவிதமான விளையாட்டு விளையாட பிடிக்கும்

நாய்க்குட்டியாக  சொல்கிறாயா? இல்லை பல்லியாக இருந்த சொல்கிறாயா?’

நான் பல்லியாய் இருந்த போது, விளையாடிய  விளையாட்டு பயங்கரமானது.  ஒளிந்து பிடித்தல் அது.  பூச்சிக்குத் தெரியாமல், அதற்கு வலியே தெரியாமல் கொன்று தின்று விடுவேன்.  பூச்சியை கடைசி வரை மகிழ்ச்சியாக இருக்க விடுவேன்.  அப்பாவி பூச்சிகளை கொன்று தின்பது என்பது இயற்கையின் ஓர் அம்சம் என்று கூறிக் கொண்டே நாக்கை சரேலென நீளமாய் நீட்டி என் நெற்றியைத் தொட வந்தது.  சுதாரித்துத் தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டு சட்டென அதை ஓங்கி அடித்ததில் பின்பக்க வாசலில் போய் விழுந்த து.  பல்லியாய் இருந்த நாய்க்குட்டி மீது என் அடி விழுந்த்தின் பலனாய், அது மண் புழுவாய் மாறி பின்கட்டு தோட்டத்தில் இருந்த வாழை மரத்தடி மண்ணுக்குள் ஓடி மறைந்தது.  புழுக்கள் பூச்சிகளைக் கொன்று தின்பதில்லை.

 

indira.alangaram@gmail.com