பள்ளிப்பருவ பிறந்தநாள் போட்டி....
சிந்தன்
கோடைவிடுமுறை
முடிந்து புதிய வகுப்பில் நுழைந்தபோது, சில புதிய முகங்களும் எனது
வகுப்பில் சேரத்துவங்கியிருந்தன. இராகவனும் அப்படிச்சேர்ந்தவந்தான். அதிக
நாட்கள் எடுத்துக்கொள்ளாமல், அன்றே எங்களுடைய நட்புவட்டத்திற்குள்
வந்துவிட்டான்.
"எங்க பழைய ஸ்கூல்ல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணுவேன் தெரியுமா....
பாக்கெட்ல வேர்க்கடலய வெச்சிக்கிட்டு மிஸ்சுக்கே தெரியாம க்ளாஸ்லையே
சாப்புடுவேன்... ஆபிஸ் ரூம்ல இருந்து நாலு சாக்பீஸ் கேட்டுவாங்கிட்டு
வந்து அதுல ரெண்டதான் எங்க மிஸ்கிட்ட குடுப்பேன். மீதிய நான் பாக்கெட்ல
போட்டுப்பேன். இந்த மாதிரி ஏகப்பட்ட வேலை பண்ணிருக்கேன் தெரிஞ்சுக்கோங்க....
நாந்தான் அங்க கிளாஸ் லீடராவும் இருந்தேன்" - இப்படி அள்ளிவீசிக்கொண்டே
போனான்.
"எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?"
என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.
"அது என்னடா ஹாப்பி பர்த்டே போட்டி?" என்று கோரஸ் கேள்வி வேறு...
"அது ஒன்னும் இல்லடா... யாரோட ஹாப்பி பர்த்டே அன்னிக்கி அதிகமா 'ஹாப்பி
பர்த்டே' விஷ் கெடைக்கிதோ, அவங்கதான் அந்த போட்டில ஜெயிப்பாங்க. அடுத்ததா
வேற யாராவது அதவிட அதிகமா விஷ் வாங்குறவரைக்கும் அவன்தான் வின்னர்...
அதுல எப்பவுமே நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா!" என்றான்.
கேட்பதற்கே இப்போட்டி சுவாரசியமாக இருக்க, நாங்களும் அதனைத்துவங்க
முடிவெடுத்தோம்.
"நீ எப்படிடா எப்பவுமே ஜெயிச்ச? எங்களுக்கு ஏதாவது ஐடியா குடேன்." என்று
எங்களில் ஒருவன் கேட்டான்.
"எல்லாருக்கும் பைஸ்டார் சாக்லேட் குடுப்பேன். எங்க கிளாஸ் மட்டுமில்ல...
தெரியாத பக்கத்துக்கிளாஸ் பசங்களுக்கும் குடுப்பேன். அப்போ எனக்குதான
நெறைய விஷ் கெடைக்கும். அப்புடித்தான் நான் ஜெயிச்சிக்கிட்டே இருந்தேன்..."
என்றபோது எனக்கு கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டது.
"என்னோட பொறந்தநாள் ஆகஸ்ட் 2 . அவங்கவங்க பொறந்தநாள்ல யாரு எவ்ளோ விஷ்
வாங்குறாங்கன்னு எழுதி வெச்சிக்கலாம்" என்றான்.
நானும் அதே ஆகஸ்ட் 2 இல்தான் பிறந்தேன் என்பதால் உள்ளுக்குள் பயம்
பலமடங்காக அதிகரித்தது. அன்று வீட்டிற்குச்சென்றதும் முதல்வேலையாக
நாட்காட்டியை எடுத்துப்பார்த்தேன். ஆகஸ்ட் 2 - செவ்வாய்க்கிழமை.
ஞாயிற்றுக்கிழமை என்றால்கூட தப்பித்துவிடலாம், செவ்வாய்க்கிழமை என்ன
செய்வது என்று நாட்காட்டியிடம் கோபத்தைக்காட்டினேன். அப்பாவிடம் நாலணா 'ஆசை
சாக்லேட்'டுக்கு மேல எதிர்பாக்கமுடியாது என்றெல்லாம் மனதுக்குள் எதையெதையோ
நினைத்துக்குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு யோசனை தோன்றியது. பிறந்தநாளன்று
வயிறுவலி, காய்ச்சல் என்று எதையாவது சொல்லி விடுமுறை
எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.
நாட்கள் நகர நகர ஒவ்வொருவர் பிறந்தநாளாக வந்துசென்றுகொண்டிருந்தன. 38 ,
43 , 62 இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் வாழ்த்து
கிடைத்துக்கொண்டிருந்தது. நான் தப்பித்துக்கொள்வேன் என்கிற தைரியத்திலேயே
இருந்தேன், மாதாந்திரத்தேர்வின் அட்டவணை வரும்வரை. ஆகஸ்ட் 2 இலும் ஒரு
பாடத்திற்கான தேர்வு இருந்தது அட்டவணையில். தேர்விற்கும் படிக்கமுடியாமல்,
எப்போதும் பிறந்தநாள்குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆகஸ்ட் 2 காலையில் எழுந்திருக்கையில், அப்பா வாங்கிவைத்திருந்த 50 'ஆசை
சாக்லெட்டுகளும்' என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. அப்பாவின்
சக்திக்கு இதுவே அதிகமென்று எனக்குப்புரிந்தாலும், என்னால்தான்
மகிழ்ச்சியை வரவைக்க இயலவில்லை.
வேண்டாவெறுப்பாக மிட்டாய்களையும், தேர்வட்டையையும், பையினில்
வைத்துக்கொண்டு புறப்பட்டேன் பள்ளிக்கு. உள்ளே நுழையும்போதே சன்னலோரத்தில்
அமர்ந்திருந்த இராகவன் தான் கொண்டுவந்திருந்த பைஸ்டார் மிட்டாய்களை வெளியே
எடுத்துவைத்துக்கொண்டிருந்தான்.
மதியம்தான் தேர்வென்பதால், காலையில் பாடமெடுக்க வகுப்பிற்கு வந்தார்
வகுப்பாசிரியை. வருகைப்பதிவேட்டினை எடுத்து மாணவர்களின் வருகையை பதிவு
செய்துகொண்டிருந்த ஆசிரியை இருண்டு மூன்று முறை என் பெயரைச்சொல்லியும்கூட
என் கவனம் முழுக்க பளபளவென மின்னிகொண்டிருந்த இராகவனின்
மிட்டாய்கள்மீதுதான் இருந்தது.
"கவனமெல்லாம் எங்க இருக்கு?" என சற்றே அதட்டிக்கேட்ட ஆசிரியையிடம் "சாரி
மிஸ்" என்று மன்னிப்புக்கேட்டுமுடிப்பதற்குள், "மிஸ்! சிந்தனை ஹெச்.எம்
சார் கூப்புட்றாரு" என்று சொல்லிவிட்டுச்சென்றார் பள்ளித்தலைமையாசிரியரின்
உதவியாளர்.
"சிந்தன்! ஹெச்.எம். கூப்புட்றாராம். போயி பாத்துட்டு வா..." என்ற
வகுப்பாசிரியையிடம் சரியென்று தலையாட்டிவிட்டு தலைமையாசிரியரின் அறையை
நோக்கி நடந்தேன்.
உள்ளே போகலாமா அல்லது அவரே என்னை அழைப்பாரா என்றெல்லாம் யோசித்துக்கொண்டே
அரைமணி நேரத்திற்கும் மேலாக அறையின் வெளியே நின்றுகொண்டிருந்தேன்.
அறையைவிட்டு அவர் வெளியே வந்து, என்னை கவனிக்காமல் ஏதோ வகுப்பினை நோக்கி
சென்றுகொண்டிருந்தார். சிறிதளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "சார்....
சார்..." என்று மெல்லியகுரலில் விடாமல் அழைத்துக்கொண்டே அவர் பின்னாலேயே
சென்றேன்.
சற்றுதூரத்தில் குரலைக்கேட்டு திரும்பியவர் என்முகத்தைக் கண்டதுமே,
"ஸ்கூல் தொறந்து 2 மாசமாச்சி. இன்னும் டேர்ம் பீஸ் கட்டல. புக் பீஸ்லயும்
பாதி பேலன்ஸ் இருக்கு. எப்பதான் பீஸ் கட்டுவாரு உங்கப்பா? இப்பவே
கிளாசுக்குப்போயி உன்னோட பையை எடுத்துட்டு வீட்டுக்கு கெளம்பு. பீஸ்
கட்டினப்புரம் நீ ஸ்கூலுக்கு வந்தாப்போதும். இல்லனா உங்கப்பாவ வந்து
உனக்கு டி.சி. வாங்கிட்டு போகச்சொல்லு..." என்று என்னிடத்திலிருந்து
எவ்வித பதிலையும் எதிர்பாக்காமல் அவருடைய வேலையைத்தொடரச்சென்றுவிட்டார்.
அடக்கமுடியாமல் அழுகை பீரிட்டு வரத்துவங்கியது. என்னுடைய கண்ணீரே
என்கால்களை கழுவிக்கொண்டிருந்தது. எனது சட்டையின் இடக்கை நனையும்வரை,
நிற்காமல் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத்துடைத்தேன். யார் முகத்தினையும்
பார்க்காமல் தலையை குனிந்தவாறே வகுப்பினில் நுழைந்து என்னுடைய
இருக்கையிலிருந்த புத்தகத்தையும் சேர்த்து பையினில் எடுத்து
வைத்துக்கொண்டு, "ஹெச்.எம். என்னைய பேக் எடுத்துட்டு வரச்சொன்னார் மிஸ்"
என என் வகுப்பாசிரியையிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
வகுப்பின் வாசலைக்கடக்கிறபோது எனது வகுப்பினை மெதுவாக
தலையுயர்த்திப்பார்த்தேன். எல்லோரும், 'சிந்தா, எங்கடா போற? எதுக்குடா
போற?' என்ற கேள்விகளை கைகளாலும் கண்களாலும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
பார்வையை வகுப்பிலிருந்து விலக்கமுற்படுகையில், சன்னலோரத்தில்
உட்கார்ந்திருந்த இராகவன் என் கண்களில் பட்டுவிட்டான். போட்டியில்
தோற்கவில்லை என்கிற எண்ணம் மெல்ல மேலெழ, கண்ணீர் சிந்துவதை
குறைத்துக்கொள்ளத்துவங்கிய கண்களோடும்... சிறிதளவு அசைவுகளோடு சிரிக்கவும்
முயற்சிசெய்துகொண்டிருந்த உதடுகளோடும் பள்ளியைவிட்டு வெளியேறலானேன்...
chinthanep@gmail.com
|