முள்ளிவாய்க்கால் செதுக்கிய முகம்.
பி.அமல்ராஜ், இலங்கை.
நாங்களும் கறுப்பாய் இருப்பதனால் எங்களையும் காகங்கள் என்று எண்ணி
விடுகிறார்களோ என எண்ணியபடி மத்தியான சோற்றிற்காய் நிறுவனம் கொடுத்த அந்த
சிவப்பு பிளாஸ்டிக் வாளியோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தான் முகுந்தன்.
மதியம் 12 மணி. அங்கு துரத்தி
துரத்தி சூடு வாங்கியதால் இந்த சுடும் வெயில் கூட முகுந்தனுக்கு பெரிதாய்
சுடவில்லை. எட்டிப்பார்த்ததில் எண்பது பேர் வரை இவனிற்கு முன்னால்
நிற்கிறார்கள் என கணக்க்கிட்டுக்கொண்டான். இது வாக்கு போட நிற்கும்
வரியல்ல, வயிற்றை நிரப்ப நிற்கும் வரி. எனவே, பொறுமையோடு
நின்றுகொண்டிருந்தான் முகுந்தன்.
அது ஒரு அழகற்ற அகதிகள் முகாம். அது சுற்றும் அடைக்கப்பட்டிருந்ததால்
அதற்குள் காற்றும் அவ்வளவு இல்லை கருணையும் அதிகம் இல்லை. அக்கறையின்
மிகுதியில் பாதுகாப்பு என அந்த முழு முகாமையும் அடைத்து நின்றது முள்வேலி.
அந்த முள்வேலிக்கருகில் வெளியில் புதினம் பார்க்க வந்ததற்காகவே பலரை
புத்தி கலங்க அடித்தவர்கள் அந்த பாதுகாப்பாளர்கள். அந்த ஆயிரம் ஆயிரம்
வெள்ளை தோல் குடில்களை (வநவெள) விட அந்த ஜேசு பிரான் பிறந்த வைக்கோல்
குடில் எவ்வளவோ மேல்.
'ராமு ஐயா, கொஞ்சம் கெதியாதான் நடங்கோவன்...' அவசரப்படுத்திய முகுந்தனை
அவசரமாய் பார்த்தார் ராமு.
'முன்னுக்கு நிக்கிற உவன் நடந்தால் தானே மோனே நான் நடக்குறதுக்கு...'
அந்த தள தளத்த குரல் வந்து போனது முகுந்தனிடம்.
அந்த முகாமில் உள்ள பறவைகள் கூட பறப்பதில்லை. காரணம் பறவைகள் வெளியே
சென்றால் அவைகளின் சிறகுகளும் எவ்வாறோ வெட்டப்படலாம் என அந்த
மனிதர்களைப்பார்த்து தங்களுக்கு தாங்களே தீர்க்க தரிசனம் கூறிக்கொண்டன.
இப்பொழுது முகுந்தன் நிற்கும் இந்த வரிசையைப் பற்றியும் சொல்லியே
ஆகவேண்டும். அங்கு வசிக்கும் அனைவரும் தங்கள் மூன்று நேர சாப்பாட்டிற்காய்
மூன்று நேரமும் வரிசையில் நிற்க வேண்டும் என்பது அந்த முகாம் சமையலறை
பொறுப்பாளரின் விருப்பம் ஆசை. ஆக, கௌரவத்தையும் வெட்கத்தையும் வேண்டா
வெறுப்பாய் தங்கள் மனைவிகளிடம் கொடுத்துவிட்டு ஆளுக்கொரு வாளியோடு
இங்குவந்து வரிசையில் நிற்பவர்கள் இங்குள்ள ஆண்கள். அதையும் தாண்டி, 'சும்மாதானே
இங்க படுத்திருக்கீங்க,. ஒரு பத்து மணிபோல போய் அந்த வரில இருந்தீங்க
எண்டா மத்தியான சாப்பாட்ட எல்லாருக்கும் முதல் எடுத்திண்டு வந்திடுவீங்க..'
என்கின்ற மனைவிகளின் தொல்லைக்காகவும் அந்த வரிகளில் நேரத்திற்கே போய்
அமர்ந்து அரட்டை அடிப்பவர்கள் இந்த ஆண்கள். இவர்களைப்போலத்தான் இந்த
முகுந்தனும். பல தடவைகள் இப்படி பிச்சை எடுத்தா சாப்பிட வேண்டும் என இவன்
இதயம் கொதிக்கும் பொழுது வயிறு நிராயுத பாணியாய் நிற்கும். இறுதியில்
பலமுறைகள் இதயத்தை சமாளிக்கும் முகுந்தனுக்கு தன் வயிற்றை சமாளிக்க
முடிவதில்லை.
'ஐயா.. அடுத்தது நீங்கதான்...'
'ஓமட மோனே.. இங்க இப்படி சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க வேண்டி வரும் எண்டு
தெரிஞ்சிருந்தா நான் அங்கயே அவங்கள் அடிச்ச செல்லிட்ட ஒரு பிச்ச
கேட்டிருப்பன் மகன்..நிம்மதியா, கௌரவமா போய் சேர்ந்திருப்பன்'
சாமர்த்தியமாக சொல்லிமுடித்த ராமு ஐயாவை சோறு அழைத்தது..
'அடுத்தது ஐயா வாங்க...' வாயில் அரைப் புன்னகையோடு அழைத்தார் உணவு
பரிமாறுபவர்.
'உந்தா தம்பி.. உதுக்குள்ள போடு..'
'என்ன ஐயா.. உங்களுக்கு இன்னும் அந்த நிறுவனம் பிளாஸ்டிக் வாளி தரலையோ...?
இண்டைக்கும் சொப்பின் பையோட வந்திருக்கீங்க..'
'இல்லை மோனே, அவங்கள் கனக்க பிள்ளைகள் இருக்கிற குடும்பங்களுக்குதான்
முன்னுரிமையாம் எண்டு சொல்லுறாங்கோ.. நாளைக்கு சிலநேரம் வாரம் எண்டு
போயினம்... பாத்தீங்களோ தம்பி, அங்க கனக்க பிள்ளைகள் இருந்தாக் கஷ்டம்,
இங்க கனக்க பிள்ளைகள் இல்லாட்டி கஷ்டம்..'
சாமர்த்தியமாக பேசி சொப்பின் பைக்குள் வாங்கிய சாப்பாட்டோடு விடைபெற்றார்
ராமு ஐயா..
'அடுத்த ஆள்...'
'ஆமா அண்ண...'
'என்ன பெயர்..?'
'முகுந்தன்.. K பிளாக்..'
'சரி வாளிய துறங்கோ.. எத்தின பேர்???'
'நான்கு அண்ணே..'
' சரி இந்தாங்கோ போடுறன் பாருங்கோ, எட்டு கரண்டி சோறு, நாலு கரண்டி
பூசணிக்காய் குழம்பு, நாலு கரண்டி பருப்பு குழம்பு... அவ்வளவுதான்!!'
'நன்றி அண்ணே..' என விடை பெற்றான் முகுந்தன்.
தூரத்தில் உணவு வாளியோடு வந்துகொண்டிருக்கும் முகுந்தனை பார்த்த பொழுது
இங்கு முகுந்தன் வீட்டு வெற்று வயிறுகள் புன்னகைத்தன. 'சாமீ என்னா பசி..'
என வியந்தாள் பெரியவள். 'இண்டைக்கும் இந்த நாசமாய் போன பூசணிக்காய்
கறிதானோ தெரியல..' கடுகடுத்தாள் சிறியவள். குடிலுக்குள் வந்த பிளாஸ்டிக்
வாளியை திறந்தாள் முகுந்தனின் அம்மா. சோற்றின் மேல் ஊற்றப்பட்ட பூசணி
குழம்பும் பருப்பு குழம்பும் ஒன்றாய் சேர்ந்ததில் புதிதாய் ஒரு பழுப்பு
மஞ்சள் நிறத்தில் ஒரு குழம்பு தென்பட்டது அந்த வெள்ளை சோறுகளின் மேல்.
'..சீ.. இத சாப்பிடுவானா மனுஷன்.. இண்டைக்கும் அதே கொடுமை தானா.. கடவுளே..
எனக்கு வேணாம்..' என முடிவோடு எழுந்த சிறியவளை பார்த்து 'அம்மா உங்களுக்கு
தெரியாதா நாம முள்ளி வாய்க்காலில எத்தன நாள் பட்டினியா கிடந்தம் எண்டு...?
அதால இப்பிடி எல்லாம் சொல்லகூடாது.. இந்தா..' என கண்கள் இரண்டையும்
இறுக்கி மூடிய சிறியவளின் வாய்களுக்குள் திணித்தாள் முகுந்தனின் தாய்.
'தம்பி சாப்பிட்டு, முன்னுக்கு ஒருக்கா போயிட்டு வா... இண்டைக்கு இன்னும்
கொஞ்ச ஆக்கள இங்க கொண்டுவாறாங்களாம்.. போய் பாரு. தெரிஞ்ச ஆக்கள் யாரும்
வந்தா கேட்டுப்பாரு நம்ம அப்பாவ எங்கையாவது கண்டனீங்களோ எண்டு..'
இதைக்கேட்டதுதான் தாமதம். உடனே எழுந்த முகுந்தன் கைகளை வேகமாக கழுவிவிட்டு
முகாமின் வாசல் நோக்கி பறந்தான். அவன் விட்டு வந்த அப்பாவின் ஞாபகங்களோடு
தினம் தினம் செத்துப் பிழைத்து போராட்டம் நடத்துபவன் அவன். வேகமாய் வாசல்
வரை ஓடினான்.
'டேய், எங்க மச்சான் போறாய்??' இடைமறித்தான் ஒரு நண்பன்.
'இல்ல மச்சான்... இண்டைக்கு புதுசா கொஞ்சபேர கொண்டுவாறாங்களாமே...'
'அடே, அவங்க காலமையே வந்திட்டாங்கடா.. M
பிளாக் ல விட்டிருக்காங்கடா..'
'அப்படியெண்டா வாவன் ஒருக்கா அங்க போட்டு வருவம்...' என முகுந்தன்
கூறிமுடிப்பதற்குள்ளேயே நகர ஆரம்பித்தான் முகுந்தனின் நண்பன்.
இம்முறையாவது அப்பாவை வழிகளில் யாராவது கண்டிருக்க மாட்டார்களா? என்கின்ற
ஏக்கத்தோடு M பிளாக் நோக்கி நண்பனோடு
பயணித்தான் முகுந்தன். ஆமாம். போரின் இறுதிக் கட்டத்தில்
புதுமாத்தளனிலிருந்து வருகின்ற பொழுது இடையில் தன் குடும்பத்தை தவறியவர்
முகுந்தனின் தந்தை. இன்று வரை அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது
முகுந்தன் வீட்டாட்களின் வழமையான கண்ணீரிற்கு முதல் காரணம். இன்றாவது
யாராவது ஒருவர் என் அப்பாவை எங்காவது கண்டிருக்க வேண்டும் என தனது இஷ்ட
தெய்வமாகிய முருகனை வணங்கியபடி நடந்துகொண்டிருந்தான் முகுந்தன்.
'மச்சான், இதுதாண்டா M பிளாக்..!!'
'அப்பிடியா.. சரி சரி வா, போய் பாப்பம்...'
'டேய் நாம சும்மா போற மாதிரி எல்லா ரென்ட் டையும் பாப்பம்.. யாரும்
தெரிஞ்சவங்க இருந்தா கேப்பம்..'
'ஆமாடா...' என தனது நண்பன் பின்னால் மெது மெதுவாய் ஒவ்வொரு காலடிகளை
எடுத்துவைத்தபடி நடந்தான் முகுந்தான். ஒவ்வொரு ரென்ட் பக்கமும் போய்
மேலோட்டமாய் பார்த்து வர வர தன் தந்தை பற்றி தெரிந்தவர்களை சந்திக்க
இருக்கும் சந்தர்ப்பம் குறைந்துகொண்டே போனது. காரணம் அதுவரை தெரிந்த
முகங்கள் இவர்கள் கண்களில் படவே இல்லை.
இறுதி ரென்ட் !! கடைசி நம்பிக்கை!!
'மச்சான் வாஇ இதுதான் கடைசி ரென்ட். இதுக்குள்ள கடசியா பாப்பம்...'
என்கின்ற தனது நண்பனின் வார்த்தைகளின் படி அந்த ரென்ட் இனுள்ளும்
முகுந்தன் பார்த்தபொழுது அங்கும் எதிர்பார்த்த முகங்கள் இருக்கவில்லை.
அன்றும் அப்பா ஏமாற்றினார். இன்றும் அப்பாவைக் கண்டவர்கள் எவரும் இல்லை.
அப்பா இருக்கின்றாரா இல்லையா என்பதை கூட யாரும் சொல்கிறார்கள் இல்லையே அனா
கண் கலங்கினான் முகுந்தன். ஓடிக்கறுத்த முகம், சீ.. அப்பாவ நாங்க எங்கதான்
தேடுறது என்கின்ற கேள்விக்குறியோடு அந்த ஆ ப்ளோக்கை விட்டு வெளியேற
ஆரம்பித்தார்கள்.
'முகுந்தன் !!..'
முன்னே போன முகுந்தனையும் அவன் நண்பனையும் பின்னே வந்த குரல் இடை மறித்தது.
யாரோ என்னை எனது பெயர் சொல்லி கூப்பிடுகிறார்களே, என உணர்ந்த முகுந்தன் 'கடவுளே,
என்னை அழைக்கிற இந்த மனிதர் எனது அப்பா பற்றி தகவல் சொல்வதற்காகவேண்டியே
என்னை அழைத்திருக்க வேண்டும்' என மனதிற்குள் எண்ணியபடி, ஒரு பக்கம்
சந்தோசம், ஒரு பக்கம் ஆவல், ஒரு பக்கம் எதிர்பார்ப்பு என பல உணர்வுகளை
கண்களுக்குள் ஒழித்து வைத்தபடி, மெதுவாக கண்களை மூடிக்கொண்டு வலப்பக்கமாக
குரல் வந்த பின் திசை நோக்கு 'கடவுளே கடவுளே..' என திரும்பினான் முகுந்தன்.
'முகுந்தன்..!!'
என்றவாறு பின்னாலே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும்
திடீரென முகத்தை திருப்பிக்கொண்டான் முகுந்தன். காரணம் அவள் முகம்
பார்க்கக் கூடியதாய் இல்லை. வலப்புற காதும் வலப்புற கண் மணியும் முகத்தில்
இல்லை. மூக்கின் ஒரு துவாரம் மட்டுமே இருக்கிறது. வலப்புற கன்னம் ஒரு
பயங்கர குழி போன்று அதனூடாக வலப்புற பல்தாடை கொஞ்சம் வெளியே தெரிகிறது.
ஆக வலப்புற முகம் சிதைந்திருக்கிறது. வலப்புற வலக்கையில் அரைவாசி இல்லை.
ஒரு செம்மஞ்சள் நிற சட்டை அணிந்திருக்கிறாள். கால்களில் ஒரு தேய்ந்த
செருப்பு. கூந்தல் வாரி ஒரு வாரம் இருக்கும். இதுவே அந்த பெண்ணின் தோற்றம்.
'கடவுளே.. இது என்ன அலங்கோலமான முகம்.. சிதைக்கப்பட்ட உருவம்.. இவளது
வலப்பக்கத்தில் துப்பாக்கி ரவைகள் அல்லது செல் துகள்கள் கண்டபடி
பாய்ந்திருக்க வேண்டும். வலப்பக்கமாக வந்த குண்டு இவள் வலப்பக்க முகத்தை
சிதைத்து போய் இருக்குறது..இவள் வைத்திய சாலையிலேயே
இறந்திருக்கலாமே..இப்படி எப்படி இந்த சமூகத்தில் வாழும் இந்த பெண்...??
ஏன் இவளை வைத்தியர்கள் காப்பாற்றினார்கள்?!!!'
ஆச்சரியத்தில் உறைந்து போன முகுந்தனையும் அவன் நண்பனையும் அடுத்து அவள்
வாயிலிருந்து வந்த 'முகுந்தன்..' என்கின்ற தள தளத்த வார்த்தை வழமைக்கு
கொண்டுவந்தது.
'முகுந்தன்.. என்னை தெரிகிறதா??'
'இல்லை..யே..'
என அருகில் சென்று கொஞ்சம் அவளை உற்றுப் பார்த்த முகுந்தன். 'டேய்...
கவிதாவா...ஐயோ...' என அவளை கட்டி அணைத்தபடி சத்தமிட்டு அழ ஆரம்பித்தான்
முகுந்தன்.
ஆமாம். அவள் கவிதா. இவன் காதலி. ஆறுமாதத்திற்கு முதல் கடைசியாக முள்ளி
வாய்க்காலில் வைத்து கதைத்தவர்கள் மறு நாளே முள்ளி வாய்க்காலிலிருந்து
வெளியேற்றப் பட்டார்கள் அனைவரையும் போன்று. அன்று பிரிக்கப்பட்ட இந்த
காதலர்கள் இன்றுதான் மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள். தன முழு நிலா
இப்பொழுது தேய்ந்து போய் இருப்பதை இவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
'கவிதா... உன்னிடமிருந்த எனது கண்களை யார் பறித்தார்கள்? என் முகத்தை எனது
கைகளை விட உனது விரல்கள்தானே அதிகம் தாங்கின.. அவை எங்கே இப்பொழுது?? உனது
முகத்தில் இருந்த அந்த அழகிய பௌர்ணமி எங்கே?? உன்னை யார் சிதைத்தார்கள்..
சொல் கவிதா??? உனது கரத்தை எங்கே விட்டு விட்டு வந்தாய்?? அது என்னுடையது
அல்லவா? உன் முகத்தை சிதைத்தவர்களை சொல்.. இன்றே வதைத்து கொல்கிறேன்.. இது
என்ன கவிதா... உன்னை நான் இப்படி பார்ப்பதை விட இருவரும் இறுதியாக ஒன்றாக
நாம் இருந்த அந்த முள்ளி வாய்க்கால் பங்கருக்குள்ளே இறந்திருக்கலாம்.. ஐயோ..
கடவுளே... நீ ஏன் இவ்வளவு வன்மைக்காரன்?? எனது பூவிற்கு நான் இங்கு கொடி
வைத்திருக்கிறேன், நீ ஏன் அதை இப்படி கசக்கி வைத்திருக்கிறாய்..??? கடவுளே..
நீ ஒரு வன்மைக்காரன் தான்.. இவளை பார்.. இவள் உடலை சிதைத்து யார் உனக்கு
பலிகொடுத்தார்...??
தனது இரு கைகளாலும் கவிதாவை இறுக்கி அணைத்தபடி புலம்பிக்கொண்டிருந்த
முகுந்தன் அவள் முகத்தை நிமிர்த்தி, இவன் விரல்களால் தடவி, காணாமல் போன
அவள் வலக் கண்ணிலும், வலக் காதிலும், வலக் கன்னத்திலும் இவன் உதடு பரப்பி,
எச்சில் படிய ஆசை ஆசையாய் முத்தமிட்டு தனது வீடு நோக்கி அழைத்துச்சென்றான்
முகுந்தன்.
'கவிஇ உன்னை உயிரில் சுமந்தேன். முள்ளி வாய்க்கால் உன்னை சிதைத்தாலும்
உன்னை நான் மீண்டும் சிற்பம் ஆக்குவேன், எனது வாழ்க்கைத் தோட்டத்தில்.
வா.. உனது ஒற்றைக் கண் களவாடப் பட்டதிலிருந்து உனது கண்ணீர் அரைவாசியாய்
குறைக்கப் பட்டாயிற்று.. இனி, அந்த இடக்கண்ணில் கூட நான் அதை பார்க்க
மாட்டேன். நீயும்தான். இந்த உலகமும்தான்..வா கவிதா.. நாம் வாழ்ந்துவிடலாம்
அழகிய கவிதைகளாக..' என கவிதாவை அணைத்துக்கொண்டு தனது வீடு நோக்கி
பயணித்தான் முகுந்தன்.
முற்றும்.
a_mal22@yahoo.com
|