கந்தசாமி வெட்கப்படுகிறான்....!

அ .யேசுராசா

அந்தப் பாணந்துறை ஸ்லோ ட்றெயின் 'சிலேவ் ஐலன்டி'ல் நின்றபோது, அவன் அந்தப்பெட்டிக்குள் ஏறினான்.
கிலுக்.... கிலுக்....
வலதுகைப் பேணியைக் குலுக்கிக்கொண்டு, தடியினால் தட்டித் தடவியபடி சீற்றோரமாக அவன்இ நடந்துகொண்டிருந்தான்.
அந்தச் சிந்தெற்றிக் ட்றவுஷர் இளைஞனுக்கு இவன் வந்தது சங்கடத்தைக் கொடுத்திருக்க வேண்டும்; அவன், யன்னலுக்கு வெளியே தலையைநீட்டி எட்டிப் பார்த்தான்.
சிறிய குலுக்கலுடன் ட்றெயின் ஓடத் தொடங்கியது.
இடைநேரமானதால் கூட்டமிருக்காத அந்தப் பெட்டிக்குள், ஐந்தோ ஆறுபேர்களோதான் இருந்தார்கள்.
கிலுக்.... கிலுக்....
பெட்டிமுடிவில் தடிநுனியில் பலகை தட்டுப்பட, அவன் இடப்பக்கந் திரும்பி நடந்தான். அந்தக் கடற்பக்கக் கதவருகில் நடுத்தரவயதுப் பெண்ணொருத்தி கால்மேல் கால்போட்டபடி இருந்துகொண்டிருந்தாள்.
அவள் கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்ததினால், இவனது வருகை அவளைப் பதற்றமடையச் செய்ததாகத் தெரியவில்லை; அவள, நிமிர்ந்தபடி நேரே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கிலுக்.... கிலுக்....
திறக்கப்பட்டிருந்த கதவோரத்தில் – வெளிக்கம்பியைப் பிடித்தபடி எதையோ தேடுகிறவனைப்போலஇகடலையே உற்றுப் பார்த்தபடி அந்தக்
காற்சட்டைக்காரப் பெடியன் நின்றுகொண்டிருந்தான்.
குலுக்குகிற ட்றெயினின் ஓட்டத்தில் அந்தக் கதவிடைவெளிய, பழகிவிட்ட ஒரு இலாவகத்தோடு தடியை ஊன்றியபடி கடந்து மற்றச் சீற்றருகே, அந்தக் குருட்டுப் பிச் சைக்காரன்போனான்.
கிலுக்.... கிலுக்....
அந்தப் பக்கத்திலிருந்த இரண்டுபேரும் அவனது வருகையைக் காணா தவர்களேபோல, விரிக்கப்பட்ட 'சவஸ' பேப்பருக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டார்கள்.
கண்தெரியாததால் அவர்களுக்குப் பக்கத்தில் வெறுமையாயிருந்த சீற்றுக்குமுன்னாலும்,  குலுக்கியபடி அவன் மெல்லமாக நடந்துகொண் டிருந்தபோது....,
அந்தச் சீற்று முடிந்து திரும்புகிற மறுபக்கச் சீற்றின் நடுவிலிருந்த கந்தசாமி, இயல்பாகவே தன் பையைக் கையினால் தட்டிப்பார்த்தான்; கையில் சில்லறைகள்தட்டுப்பட்டபடி....
ஆனால் அந்தப் பிச்சைக்காரன் தனது பக்கமாகத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அவனுக்குத் தயக்கம்.
'ஒருத்தரும்போட இல்ல....'
அந்தப் பெட்டியில் ஒருவருமே ஒன்றும் போடாமல் இருந்தபோது தான்மட்டும் போட, அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. ஏதோ செய்யத்தகாததைத் தனிமையாகவே செய்ய நேர்ந்ததைப்போல், கூச்சத்தில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தான்.
கிலுக்.... கிலுக்....
பேணியைக் குலுக்கியபடி தனக்குப் பக்கமாக அந்தப் பிச்சைக்காரன் வந்தபோது அவனை நேரேபார்க்கவும் சங்கடப்பட்டு, எதிரே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, சாமான்பலகைக்குக் கீழே எழுதப்பட்டிருந்த சிங்கள எழுத்துக்கள் தட்டுப்பட்டன.
'மெய லாங்கிக ஜனதாவ சத்துபவின் எய ஆரக்ஷாகிரீம ஒபகே பரம யுத்துகமய'
மௌனமாக அதை வாசித்து முடித்தபோது, சிறிய குலுக்கலோடு கொள்ளுப்பிட்டியில், ட்றெயின் நின்றது. கந்தசாமி திரும்பிக் கதவடியைப் பார்த்தான்.
அவன் – அந்தப் பிச்சைக்காரன் இறங்கி, அடுத்தபெட்டிக்குப் போய்க்கொண்டிருந்தான்.




நன்றி : மல்லிகை - (கார்த்திகை 1970)