ஆயுள்தண்டனை

நோர்வே நக்கீரா
 

'பெரியவள்....எடியே பெரியவள்.....கூப்பிடுறது கேக்கேல்லையே....." என் அம்மம்மா 

'என்னம்மா அவலமா கத்துறியள். என்ன இடியே விழுந்து போச்சு" என்னம்மா 

'பின்னை இடிவிளாமல்...... உன்னை புரிசன் கொழும்பிலை இருந்து வந்தால் மாட்டிலை பால் குறையுது. இண்டைக்கு இதுக்கு ஒருமுடிவு எடுக்கவேணும்." 

'என்ன?... என்ரைமனிசம் பாலைக்கறந்து முழுவதையும் குடிக்கிறது போலை எல்லோ இருக்கு உங்கடை கதை

'அப்ப எப்படியடி பால் காணமல் போகுது. இதை நான் நேரை பாத்துப் போட்டு வந்துதான் உன்னோடை கதைக்கிறன்

'அப்படி என்னத்தைக் கண்டியள்

'இரவு ஏதோ சத்தம் கேட்குது என்று வெளியிலைபோய் பாத்தால் உன்ரை மனிசன் கண்டுகளை அவிழ்த்து விட்டு பாலைகுடிக்க விட்டுப்போட்டு போய் ஒண்டுக்கு இருந்துவிட்டு வந்து கண்டுகளைப் பிடிச்சுக்கட்டினதை என்ரை இரண்டு கண்ணாலை யும் பாத்தனான்."  

அம்மம்மா ஆத்திரத்தில் பதறிக் கொண்டிருந்தார்

'சரி உன்ரை புரிசனைக் கூப்பிட்டு இல்லை எண்டு சொல்லச் சொல்லு பாப்பம். பால்ரீ இல்லை என்றார் அவருக்கு நாளே விடியாது. ஒருநாளைக்கு இரண்டு மணித்தியாலத்து க்கு ஒருக்கா பால்ரீ வேணும். கண்டுகள் பாலைக்குடிச்சா ரீக்கு எங்கையிருந்து பால்வாறதாம்

'இஞ்சருங்கோ ஒருக்கா வந்து இந்தப்பிணக்கைத் தீத்துவிட்டுப்போங்கோ" அம்மா அப்பாவை அழைத்தார். 

அப்பா எப்போதும் தியானம் செய்வதும் ஏதோ டாக்டர் பட்டம் பெறுவதற்கு படிப்பது போல் எதோ ஒருபுத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதும் யாழ்பாணம் வந்தால் அவர் செய்யும் தொழில். அம்மாவின் குரல் கேட்டு 'ஏனப்பா கத்துகிறாய். மெதுவாய் கூப்பிட்டால் கேக்கும் தானே?" 

'இராத்திரி நீங்கள் கன்றுகளை அவிழ்துப் பால்குடிக்க விட்டனீங்களே?" 

'ஓம் அதுக்கென்ன

அப்பா வந்ததும் பெட்டிப்பாம்பாய் அடங்கி மறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா திரும்பி அம்மாவை பார்த்தார் தான் சொன்னது சரிதானே என்பதுபோல் 

'உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? உங்களுக்கு 100தரம் பால்ரீ வேணும் பினேன் ரீ இறங்காது. பிள்ளைகளுக்கு பாலுக்கு எங்கை போறது." 

'நான் வேணும் என்றால் பால் குடிக்கிறதையும் பால்ரீ குடிக்கிறதையும் நிப்பாட்டுகிறன்

'உங்களை யாரும் பால்குடிக்கிறதை நிப்பாட்டச் சொல்லவில்லை. ஏன் கன்றுகளை அவழ்த்துவிட்டீர்கள் என்று தான் கேக்கிறன்

அம்மா அப்பாவிடையே வாக்குவாதம் ஏற்படும் போது கண்டும் காணாதது போல் அம்மம்மா அப்பப்பா அங்கிருந்து போய்விடுவார்கள். அதை அம்மம்மாவும் செய்தார்

அப்பா தொடர்ந்தார்

'நான் சொல்லுறதைக் கொஞ்சம் கவனமாகக் கேள். பசுவினுடைய பால் அதன் கன்று க்கொன்றே கடவுளாலை கொடுக்கப்பட்டது, சரி இயற்கையாலை கொடுக்கப்பட்டது எண்டு சொல்லன். அதை மனிதன் களவெடுத்துத்தான் குடிக்கிறான். இது முழுக்களவு. உன்ரை பாலை பக்கத்துவீட்டுப்பிள்ளைக்கு கறந்து கொண்டுபோய் கொடுத்தால் நீ அனுமதிப்பாயா

'அது எப்படி முடியும். என்ன கடவுள் கடல் கணக்கிலா பால் தந்திருக்கிறார்

'அப்பிடி வளிக்குவா. அதைமாதிரித்தான் இதுவும். கன்று குடித்த மிச்சம் தான் உங்களுக்கு. உங்களுடைய மிச்சப்பால் இல்லை கன்றுக்கு. எமக்காக வாழ்ந்து பயன்தரும் ஒரே ஒருயீவன் பசு. அது வாய்பேசாது எண்டதாலை நீங்கள் நினைச்சமா திரி நடத்த ஏலாது. அதுக்கும் பிறப்புரிமையும் வாழ்வுரிமையும் உண்டு

வாயடைத்துப் போனார் அம்மா. ஆனாலும் விட்டுக்கொடுக்க மனமில்லை.

'அப்ப பிள்ளைகளுக்கு பால் வேணுமே என்ன செய்கிறது? அப்ப நீங்கள் பால் குடிக்கிறதை நிப்பாட்டுகிறீர்களா

'ஓம் அதைப்பிள்ளைகளுக்குக் கொடு. கன்று குடித்தமீதி தான் உங்களுக்கு"

பதிலை எதிர்பாக்காமல் போய்விடுகிறார்.அன்றில் இருந்து அப்பா பால்குடிப்பதே

இல்லை 

மூலையில் ஒருமேசையில் எட்டாம்வகுப்பு இறுதிப்பரீட்சைக்காகப்; படித்துக் கொண்டிருந்த எனக்கு குபீர் என்று இருந்தது. அப்பாமேல் ஆத்திரமாக வந்;தது பாவம் அம்மா எமக்காக பாடுபடுகிறார். எங்களுக்கென்று அப்பா என்ன செய்தார்? இந்துசமயப் புத்தகங்களையும்> தத்துவப்புத்தகங்களையும் படித்துவிட்டு தியானம் செய்வதும்தானே அவர் வேலை. தோட்டம் (கமம்) எங்குள்ளது என்பது கூட அவருக் குத் தெரியாது. கோழி மேச்சாலும் கேறுனல்லை (அரசாங்கம். கவுண்மென்ட்) மேய்க்க வேண்டும் என்பார். அவர் வந்ததோ விவசாய பெருவியாபாரி குடும்பத்திலை இருந்து. தோட்டம் என்றால் வெறுப்பு

எனக்குப் பால் என்றால் உயிர்> அதிலும் ஆடையை எடுத்து சப்புவதில் தனிப்பிரியம். இதிலும் மண்விழுந்திடுமோ என்ற ஏக்கம் தொட்டது. அம்மா அருகில் சென்று

'அப்பாவுக்கு பால்வேண்டாம் எண்டால் விடட்டும் எனக்குப் பால்வேணும் அம்மா

அம்மா என்தலையைத்தடவிவிட்டு 'பயப்படாதை உனக்கு என்றும் பால்கிடைக்கும்" என்று கூறி எழுந்து போய்விட்டார்

அன்றிலிருந்து அப்பருக்கு வெறும் தேனீர்தான். பார்க்கப் பாவமாக இருந்தது. நான் அப்பாவின் முன் சீனிபோட்ட பாலை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக் கொள்வேன்  

அடுத்தமுறை கொழும்பில் இருந்து அப்பா வந்தார். எனக்கென்று மாஸ்மலோஸ் அப்பிள் றம்புட்டான் மங்குஸ்தான் என்று ஒருதொகை பண்டங்கள். இவற்றுக்காகவே அப்பா அடிக்கடி யாழ்பாணம் வரவேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பேன்.  

இந்தமுறையும் வந்தார் அதே குதுகலம்தான். ஆனால் தேனீருக்குப் பால் இல்லை. பிளேன் ரீதான்.  

அப்பாவந்து இரண்டாம் நாள் எமது கிளட்டு கேப்பை மாட்டை வாங்க ஒரு சோனகன் வந்திருந்தான்.அம்மம்மா விலைபேசிக்கொண்டிருக்கும் போது அம்மா கேப்பைச்சி யை இழுந்து வந்தார். அதைக்கண்ட அப்பா ஓடிப்போய் அம்மா கையிலிருந்த மாட்டின் கயிற்றைப் பிடுங்கு எறிந்து விட்டார். மாடு வளவினுள் ஓடிமறைந்தது. ஆத்திரத்துடன் அப்பா நேரே சோனகனிடம்

'இங்சை மாடு ஒன்றும் விக்கிறதுக்கு இல்லை. நீ போகலாம்." 

அவனுக்கு என்செய்வான் பாவம். விழிபிதுங்க நின்று கொண்டிருந்தான். அம்மம்மா தலையாட்ட அவன் திருப்பிச் சென்றான். அம்மம்மா என்றுமே அப்பாவை எதிர்த்துப் பேசியது கிடையாது. எல்லோரும் இடத்தை விட்டு நகர்ந்தார்கள் எனக்கு மனதில் ஆணியடித்தது போல் ஒருவேதனை ஏனப்பா இப்படி நடந்து கொள்கிறார்? இந்த இந்துமதப்புத்தகங்களையும்> தத்துவப்புத்தகங்களையும் வாசித்து வாசித்து  கெட்டு ப்போனார். இப்படிப் பார்த்தால் உலகத்திலை மனிதரே சீவிக்க இயலாது. எங்கடை தேவைக்குத்தானே மாடு வளர்க்கிறோம். அப்பாவின் நடவடிக்கை ஒன்றும் எனக்குச் சரியாப்புரியவில்லை. அம்மா அன்று யாருடனும் பேசவில்லை. இது எனக்கு மிகக் கஸ்டமாகவே இருந்து.  

நான் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அப்பாவின் அறைக்குப் போனேன். அவர் டாக்டர் உதயமூர்த்தியின் 'எண்ணங்கள்" என்ற தத்துவப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். இந்தப்புத்தகங்களும் இந்துமதமும் தான் அப்பாவைப் மாற்றி இருக்கின்றன என்று என்னுள் உறுமிக்கொண்டேன்

'அப்பா நீங்கள் செய்கிறது ஒன்றும் எங்களுக்குச் சரியாகப்படேல்லை அப்பா. எதுக்காக மாட்டை விக்கவிடாமல் தடுத்தீர்கள்? எங்களுக்குக் காசு வேணும்தானே? நீங்கள் கிம்பளமும் வாங்கமாட்டீர்கள். உங்கடை சம்பளம் எங்களுக்குப் போதவும் மாட்டுது அம்மா எங்களை வளக்கப்படுகிற கஸ்டம் உங்களுக்குத் தெரியாது. தோட்டம் துரவு என்று இருக்கிறபடியாலை கொஞ்சம் கௌரவமாய் வாழ்கிறோம்." 

'இப்ப உனக்கு மாட்டை இறைச்சிக்கு விக்கவிடாதது பிரச்சனை. அப்பசரி முதலிலை உன்ரை அம்மாவை வில். அதுக்குப்பிறகு மாட்டை விற்காலாம்

'என்னப்பா மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடுச்சுப் போட்டுப் பேசுகிறியள்

'நீ எத்தனை வருசம் அம்மாவில் பால் குடித்தாய் அம்மாவைக் கேள்

'ஒருவருசம்' இது அம்மா 

'இப்ப உனக்குப் 14வயசு. மீதி 13வருசமும் யாரின் பால்குடித்து வளர்ந்தாய் அம்மா வில் பால்வற்றிவிட்டது என்று கொல்லுறத்துக்கு அம்மாவை விற்பாயா?" 

பகீர் என்று இருந்தது. மொழியைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தேன். விவாதிக்க முடியவில்லை. என்ன சொல்வது என்று தெரியாது தலைகுனிந்தேன்

அப்பா தொடர்ந்தார். 'இன்னும் சொல்லுகிறன் கேள். ஒருமனிதனுடைய உயிர்போகாது தவிக்கும் போதும் வாயிலூற்றுவது பசுவின் பால்தான். திருமணத்திலும் மாப்பிளை பொம்பிளை தலையில் பாலறுகு வைத்துத்தான் வாழ்த்தப்படுகிறார்கள். திருமணத்தி லும் கோவில்களிலும் தீர்த்தமாகத் தரப்படுவது பசுவின் பால்தான். எமது கலாசாரத் தில் அனைத்து நல்நிகழ்சிகளிலும் பசுவின்பாலே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் கட்டையிலை ஏத்தமுன்னம் பிணத்தில் வாயில் ஊற்றுவதும் பசுவின் பால்தான். இந்துக்களின் வாழ்வில் மட்டுமில்லை உழவனின் வாழ்விலும் ஒன்றாக இன்றியமையாது இருப்பது பசுவும் அதன் கன்று எருதுவும் தான். பிரதி உபகாரமாக நீங்கள் செய்வது என்ன? குடிக்குமட்மும் கன்றின் பாலைக் களவெடுத்துக் குடித்து விட்டு பால்வத்தியதும் அடிமாடாய் இறைச்சிக்கு வித்துவிட்டு சில்லறைக்தனமாக சில்லறையை எண்ணுகிறீர்கள். உங்களிடம் மனிதாபிமானம் தான் இல்லை என்றாலும் மிருக அபிமானமாவது இருக்கட்டும். போய் வேறு ஏதாவது வேலையைப் பாருங்கோ

ஐயோ ஒரு பிரசங்கமே நடந்து முடிந்தது போல் இருந்தது. அம்மாவையும் அழைத்துக் கொண்டு அப்பாவின் அறையில் இருந்து வெளியே வந்தேன் ஞானம் பெற்ற புத்தனமாக. ஆம் அவர் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. செத்த மாட்டின் தோலை கூடவிடாது மேளமாக வாத்தியக்கருவிகளாக எம்காதுக்கு இசை யாக்குகிறோம். அன்று என்அப்பாவிதைத்த விதை செடியாக என்னுள் துளிர்விட ஆரம்பித்தது.  

பிரசங்கத்தின் புழுக்கம் தாங்காது வெளியே போனேன் வளவினுள் நின்ற கேப்பைச்சி இல்லை இல்லை என்வளர்ப்புத்தாய் மோ மோ என்று கத்தியபடி ஒடிவந்து என்கையை நக்கிக்கொண்டாள். மனச்சாட்சி எனக்கு விதித்தது ஆயுள்தண்டனை.