பதவி உயர்வு.....!

அகில்

(இச்சிறுகதை அண்மையில் 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்த (2009) சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)


அரசாங்கம் கொடுத்த புதிய ஜீப்பில் வீட்டுக்குத் திரும்பினார் பிரிகேடியர் சில்வா. திறந்த ஜீப்பில் வந்த அவரைக் கண்ட ஊர் மக்கள் கை அசைத்து வரவேற்றார்கள்.

கடற்படையில் முக்கிய பதவியில் இருக்கும் பிரிகேடியர் சில்வா வீடு வருவது மிகவும் குறைவுதான். இம்முறை இரண்டு நாள் விடுப்பில் வந்திருந்தார். ஜீப் சத்தம் கேட்டு வெளியே வந்த சுமனா அவரைக் கண்டதும் முகமெல்லாம் பல்லாக வரவேற்றாள். பல நாட்கள் காணாத கணவனை கண்ட சந்தோசத்தில் முகம் சிவந்து போனது அவளுக்கு.

பிரிகேடியர் சில்வாவின் கண்கள் மனைவியை அணைத்தபடி நாலாபுறமும் சுழன்றது. கணவனின் தேடலைப் புரிந்துகொண்ட சுமனா பதிலளித்தாள்.

''அசோக வெளிய பொயிட்டான். இந்த முறை அவன்ர பிறந்த நாளுக்கு நீங்கள் பீ. ஏம். டப்ளியூ கார் வாங்கிக் குடுத்தாலும் குடுத்தீங்க. மகன் வீட்டில தங்கிற நேரம் குறைஞ்சு போச்சுது........''

'இந்த வயதில பொடியல் அப்பிடித்தான். எங்களுக்கு கிடைக்காத வசதியல் எல்லாம் எங்கட பிள்ளைகளுக்கு கிடைக்குது. அனுபவிக்கட்டும்.'

'அவன் வேற யாரோடயும் ஊர் சுத்தினாலும் நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு அந்த ராஜாதான் இப்ப நல்ல கூட்டாளி. அவனையும் ஏத்திக்கொண்டு தான் மகன் இப்ப திரியுறார்.' கணவன் வந்துவிட்ட சந்தோசத்தில் ஏதேதோ பேசி விட்டதை நினைத்து நாக்கைக் கடித்தாள் சுமனா.

அந்தத் தமிழ் பொடியனுடன் மகன் சுற்றுவதை அறிந்ததும் சில்வாவின் உடல் விரைத்தது. கோபத்தில் உஷ;ணமானார் அவர்.

'அவனுக்கு சொல்லுறனான் அவங்கட சினோகிதம் கூடாதென்று. சொன்னால் கேட்கிறான் இல்லை..... அவங்கள நம்ப ஏலாது. நாளைக்கு என்னென்ன பிரச்சனையலை அசோகா தேடப்போகிறானோ தெரியாது.' கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டியபடி நீண்டு கிடந்த சோபாவில் வந்து அமர்ந்தார் சில்வா.

பேச்சை மாற்ற விரும்பிய சுமனா அவசரமாக வேலைக்காரன் வேலுவை அழைத்தாள். கூனிக்குறுகி மாத்தையாவைப் பார்த்து ஒரு கூழைக் கும்பிடு போட்டுவிட்டு கைகட்டி நின்ற வேலுவிடம் உத்தரவிட்டாள்.
'மாத்தையா குடிக்கிறதுக்கு ரெண்டு இளநீர் பிடுங்கிக்கொண்டு வா.' தலையசைத்துவிட்டு விடுவிடென்று தோட்டத்தை நோக்கி விரைந்தான் வேலு.

''சரியான வெய்யிலுக்குள்ளால வந்திருக்குறீங்க. செவ்விளநியைக் குடிச்சுப் போட்டு கொஞ்சம் இளைப்பாறின பிறகு குளிச்சிட்டு சாப்பிடலாம் என்ன.....''  என்றாள் சுமனா தேனொழுகும் குரலில்.

சுமனாவுக்காக தலையை ஆட்டிய சில்வாவின் பார்வை கண்ணாடி பிரேமிற்குள் அடைபட்டிருந்த மகனின் புகைப்படத்தின் மீது படிந்தது.

வேலைத்தளத்தில் தான் சில்வா கண்டிப்பும், கடுமையுமாக இருப்பார். வீட்டுக்கு வந்துவிட்டால் ஒரே மகன் அசோகாவுடன் குழந்தையாகவே மாறிவிடுவார். அவன் சிறுவனாக இருக்கும்போது அவனைத் தூக்கி தோள்களில் போட்டுக்கொண்டு விளையாடுவார். மகனுடன் கிரிக்கெட் அடிப்பது, கடற்கரை மணலில் பட்டம்விடுவது, பந்தடிப்பது என்று அசோகாவுடன் சகதோழனைப் போல மாறிவிடுவார். மகன் வளர வளர பொறுப்புக்கள், பதவிகளும் உயர்ந்துகொண்டே போனது. வீட்டுக்கும் அடிக்கடி வரமுடியாமல் போனது. வேலை மும்முரத்தில் தன் குடும்ப மகிழ்ச்சியை தொலைத்துவிடுவது அவருக்கு வேதனைதான். மகனை படிப்பித்து ஒரு வைத்தியனாக்க வேண்டும் என்பது அவரது கனவு.

வெளியே ஜீப் நிற்பதைக் கண்டதும் துள்ளிக்கொண்டு வந்தான் அசோக். ஏற்கனவே தாய் இன்று தகப்பனார் வரப்போவதாகக் கூறி எச்சரித்திருந்ததால் அவன் அன்று வேளைக்கே வீட்டிற்கு வந்துவிட்டான்.

''அப்பா.............''

மகனின் அழைப்பில் நெகிழ்ந்துபோனார் பிரிகேடியர் சில்வா. அவர் கோபம் எல்லாம் எங்கோ பறந்தோடிவிட்டது. அவனை அணைத்து உச்சிமுகர்ந்தார் சில்வா. மகனுக்கு ஆசையாக கொழும்பிலிருந்து வாங்கிவந்திருந்த லப்டப்பை கொடுத்து மகனின் முகத்தில் தெரிந்த ஆனந்தத்தை பெருமையுடன் கண்ணசைத்து மனைவிக்கு ஜாடை காட்டினார்.

''நீங்கள் தான் அசோகாவைப் பழுதாக்குறீங்க...''  செல்லமாகக் கடிந்துகொண்டாள் சுமனா.

சிறிதுநேரம் மகனிடமும் மனைவியுடனும் அளவளாவி விட்டு யூனிபோர்ம் பட்டனைத் தளர்த்தியபடி குளியலறைக்குள் நுளைந்தார் சில்வா.

விடுமுறையில் வந்த பிரிகேடியருக்கு இரண்டாம் நாளே தலைமையகத்திலிருந்து மறுபடி அழைப்பு வந்துவிட்டது. உடனேயே கிளம்பி விட்டார். இம்முறை அவருக்கு வழங்கப்பட்டிருந்த பணி மிகப்பெரியது. எப்படியாவது காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் புறப்பட்டார் பிரிகேடியர் சில்வா.  அவரது வயதோ ஓய்வுக்கான எல்லையைத் தொட்டிருந்தது.

ராணுவப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டிருந்த சில்வா நாற்பது வயதில்தான் சுமனாவைப் பார்த்ததும் காதலில் விழுந்தார். அதன்பலன் இன்று அவர் அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தார். மகனோ இப்போதுதான் அரும்பு மீசையுடன் குறும்பு விளையாட்டில் பொழுதுபோக்கிக் கொண்டு இருந்தான்.

இந்த ராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும்போது நல்ல ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. பதவி உயர உயர சமூகத்தில் அவருக்கு மதிப்பும் உயர்ந்தது. வசதி வாய்ப்புக்கள், சலுகைகள் அதிகரித்துக்கொண்டே போனது. எல்லோரும் அவரை பயமும் மரியாதையும் கலந்த குரலில் பிரிகேடியர் என்றுதான் அழைப்பார்கள். அவரது பெயரைக் கூட யாரும்; மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள்.

விடுமுறையை ரத்துச்செய்துகொண்டு கிளம்பும்போது அசோகவின் முகம் வாடிப்போயிருந்தது.

'அப்பா பென்சனுக்கு போகவேண்டிய வயதில இதெல்லாம் தேவையா. அம்மாவுக்கு ஆறுதலா வீட்டோட இருக்கலாம்தானே. இந்த வயதில் உங்களுக்கு யுத்தமுனையில் அவ்வளவு ஈடுபாடோ..... எங்களைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட சிந்திக்கிறதில்லை' அசோக தந்தையுடன் கோபித்துக்கொண்டான்.

'அரசாங்கத்திடம் இருந்து எனக்கு மிக முக்கியமான உத்தரவு கிடைச்சிருக்குது. அதை மட்டும் வெற்றிகரமாக முடிச்சிட்டேன் என்றால் பிறகு இந்த பிரிகேடியர் சில்வா மேஜர் ஜெனரல் சில்வாதான். அதுக்குப் பிறகு நான் என்ர பிள்ளையோடயும், மனைவியோடயும் சந்தோசமாக இருப்பன். போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது எங்கட மண்ணுக்கான யுத்தம்..' புன்னகைத்தபடி அசோகவின் முதுகைத் தடவினார் மேஜர் ஜெனரல்.

''ஓமோம் மண்ணுக்கான யுத்தம் என்று சொல்லிக்கொண்டு எத்தனை அப்பாவி சனங்கள் அநியாயமா உங்கட குண்டுகளுக்கு பலியாகீனம். பாவம் அந்தச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்படுகுதுகள்.'' மகனின் பேச்சு கடுப்பேற்ற எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறினார். சுமனாதான் மகனை லேசாக கடிந்துகொண்டாள்.

சில்வா திரும்பிப் போன மறுநாளே மறுபடியும் யுத்தம் ஆரம்பித்து விட்டிருந்தது. அந்த யுத்தம் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது. அதுவரை சில்வாவை அவர்களால் சந்திக்கக் கூட முடியவில்லை. சுமனா வானொலி, தொலைக்காட்சி செய்திகளை தவறாமல் கேட்கத்தொடங்கினாள். தாயைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது அசோகவிற்கு. அவனுக்கு தந்தையை நினைக்கும்போது அச்சமாகத் தான் இருந்தது. ஏனோ அவனுக்கு போர் என்றாலே மிகவும் வெறுப்பாக இருந்தது. யுத்தத்தில் காயமடைவோர், இறப்பவர்கள் குடும்பங்கள் பற்றி நினைத்து வேதனைப்படுவான்.

கடற்சமரில் தமது இலக்கை சில்வா வெற்றிகரமாக அடைந்து விட்டதாக செய்தி வந்தபோது சுமனாவால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. கூடவே சில்வாவுக்கு மேஜர்ஜெனரல் பதவியும் வழங்கப்படவிருந்தது. அவரது வெற்றியைக் கொண்டாட மறுபடியும் இரண்டுவார விடுமுறையில் வந்துவிட்டார் சில்வா.

அசோகவிற்குத்தான் உள்ளூர ஒரு கவலை. இந்த வெற்றிக்குப் பின்னால் எத்தனை இழப்புக்கள்........, மனித அவலங்கள்........ அவனால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அசோகவிற்கு பாடசாலையில் பரீட்சையிருந்த காரணத்தினால் இரண்டு நாட்கள் கழித்து தாயும் மகனும் பதவியேற்பு விழாவின்று வந்து சேர்வதற்கான ஒழுங்குகளை செய்துவிட்டு பிரிகேடியர் சில்வா கொழும்புக்கு பயணமானார்.

பத்திரிகைகளில் எல்லாம் பிரிகேடியர் சில்வாவின் நெறியாள்கையையும், தலைமைத்துவ பண்புகளையும் பற்றி பந்தி பந்தியாக கட்டுரைகள் வெளியாகின. நண்பர்களின் விருந்துபசாரங்களில் மூச்சுத் திணரிப் போனார் பிரிகேடியர். மறுநாள் பதவியேற்பு வைபவம் நடக்க இருந்தது. முதல்நாள் அதிகாரிகள் கலந்துகொண்ட பெரிய விருந்தில் உற்சாகமாக கலந்துகொண்டபோதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த மகனுக்கு என்ன நேர்ந்துவிட்டது? துடித்துப் போனார் பிரிகேடியர்;. அவசர அவசரமாக விருந்து வைபவத்திலிருந்து புறப்பட்டார்;. உயிருக்கு ஆபத்தான நிலையில் அசோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனே வீட்டிற்குத் திரும்பும்படியும் அவரது ஊரில் வசிக்கும் சுமனாவின் தமையனே செய்தியைச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.

மகனுக்கு என்ன நடந்ததோ என்று நினைக்கும்போதே நெஞ்சு இரண்டாகப் பிளந்துவிடும் போன்ற வேதனையை உணர்ந்தார் பிரிகேடியர் சில்வா. மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் யாருடனும் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் இருந்தது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது சில்வாவுக்கு. அரச உலங்கு வானூர்தியிலும் பின்னர் டாக்சியிலும் பயணித்து விரைவாகவே வீட்டை நெருங்கினார்.

புயலுக்கு பின் தோன்றும் ஒருவித மயான அமைதி அவர் மூச்சை முட்டியது. உறவினர்கள், அக்கம்பக்கத்தார் என்று வீட்டில் குழுமிநின்ற கூட்டம் அப்போதும் ஒருவித பயத்துடன் விலகி பிரிகேடியருக்கு வழிவிட்டது. அவர்கள் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவரை மிரட்ட மெல்ல வீட்டினுள் காலடி எடுத்துவைத்தார்.

சில்வா வந்துவிட்டதைக் கண்டதும் வெள்ளை நிறச் சேலை அணிந்திருந்த சுமனா ஓடி வந்து கணவனை அணைத்துக்கொண்டு ஓவென்று கதறினாள். அழுது அழுது அவள் கண்கள் வீங்கிச் சிவந்திருந்தன. தொண்டை வரண்டு குரல் கம்மியிருந்தது. அவளால் கணவனை நிமிர்ந்துபார்த்து சரியாகப் பேசக் கூட முடியவில்லை. சிலையென நின்றார் பிரிகேடியர் சில்வா.

''அசோகா எங்கள விட்டுட்டுப் போயிட்டான்........'' சுமனா கதறுவது கனவு போல இருந்தது. அவரால் நம்பமுடியவில்லை. ''என்ன நடக்கிறது இங்க? என்ர மகனுக்கு என்னாயிற்று?'' சிந்தனையினூடே சோர்ந்து விழுந்த மனைவியை இறுகப்பற்றினார். அவர் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் எட்டிப்பார்த்தன.

அவரது சந்தேகத்திற்கு சூழ நின்றவர்கள் விளக்கம் கொடுத்தனர்.

''அசோகவும் அந்த தமிழ் பொடியன் ராஜாவும், இன்னும் ரெண்டு மூன்று பொடியன்களும் சேர்ந்து நேற்று மத்தியானம் கடலுக்கு குளிக்கப் போயிருக்கீனம். போன இடத்தில அந்தப் பொடியன் ராஜாவ பெரிய அலையொன்று இழுத்துக்கொண்டு போயிருக்குது. அவன் உதவி கேட்டு கத்தியிருக்கிறான். ஒருத்தரும் போக இல்லை. எங்கட தம்பி அசோக அவனோட நல்ல சினேகிதம் தானே. நண்பனுக்கு ஆபத்து என்றதும் உதவிசெய்யுறதுக்காக கையை நீட்டியிருக்கிறான். அது அலை ரெண்டு பேரையும் இழுத்துக்கொண்டு பொயிற்றுது.''

அதிர்ச்சியில் உறைந்து போனார் சில்வா. அந்த நேரத்திலும் ஆற்றாமையோடு கோபமும் கலந்து வெளிப்பட்டது. ''அசோக்காவுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறன் அந்த சினேகிதம் எங்களுக்கு கூடாதென்று' சில்வாவின் உதடுகள் முணுமுணுத்தன.

சுமனாவின் தமையன் அருகில் வந்து சில்வாவைத் தேற்றினார். ''கடல் இழுத்துக்கொண்டு போனாலும் எப்பிடியும் ரெண்டு பேரும் உயிரோட திரும்பி விடுவீனம் என்டுதான் விடிய விடிய ஆட்களை அனுப்பித் தேடினனாங்கள். கடைசியில ரெண்டுபேரின்ட உடல்களும் தான் ஒன்றா கரை ஒதுங்கியிருக்கிறதா தகவல் கிடைச்சுது.'' சொல்லும் போதே விம்மிவிட்டார் அவர்.

சில்வாவால் தாங்க முடியவில்லை. இடிவிழுந்தவர்போல நொடியில் ஒடுங்கிப் போனார். எதுவும் பேசாமல் மௌனமாக வந்து சோபாவில் விழுந்தார். பெண்கள் இருவர் கைத்தாங்கலாக சுமனாவை அழைத்து வந்து பிரிகேடியர் சில்வாவின் அருகில் அமரச் செய்தனர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதனர். தேற்றும் திராணியற்று கூடியிருந்தவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
கடற்கரையில் காலையில் கண்டெடுத்த உடல் மாலை வேளையில் தான் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பெட்டி கட்டப்பட்டிருந்தது. அது திறப்பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை.

''தண்ணியில கிடந்து உடம்பு நல்லா உப்பிப்போச்சுது. பத்தாததுக்கு மீனுகளும், காகங்களும்..........'' கதறிவிட்டார் மேஜர்ஜெனரல் சில்வா.

''ஐயோ என்ர மகனுக்கா இப்பிடி ஒரு சாவு வரவேணும். அவன் அப்பாவி. யாரும் புண்படுறதைக் கூட அவன் விரும்பமாட்டானே. நான் தான் கல் நெஞ்சன். அவன் ஒவ்வொரு உயிரையும் தன்ர உயிர் மாதிரி நேசிச்சவன். அவனுக்கா இந்த நிலைமை.....'' பிரிகேடியர் உரக்கக் குரலில் சொல்லிச் சொல்லி பிரேதப் பெட்டியின் மீது விழுந்து புறண்டார்.

இரண்டொருவர் தைரியமாக முன்வந்து அவரை ஆசுவாசப்படுத்தினர். வேரற்ற மரமாய் சாய்ந்திருந்த சுமனா தலையை உயர்த்திப் பார்த்தாள்.

''எங்கட பிள்ளை அநியாயமா சாகயில்லை. அவன் ஒரு உயிரைக் காப்பாத்துறதுக்காக தன்ரை உயிரைக் கொடுத்திருக்கிறான். அவனைப் போல ஒரு பிள்ளையப் பெத்ததுக்காக நான் பெருமைப்படுறன்.'' உறுதியான குரலில் பேசினாள் சுமனா. அவளது சொற்கள் ஏனோ சில்வாவின் நெஞ்சில் ஈட்டி போல் பாய்ந்தன.

இருட்டுவதற்கு முன்பாகவே இறுதிக்கிரியைகள் எல்லாம் முடிந்து விட்டிருந்தன. சாவி கொடுத்த பொம்மைகள் போல சில்வாவும், சுமனாவும் இயங்கினர். கண்மூடித்திறப்பதற்குள் இருபத்திரண்டு ஆண்டுகள் பெற்றெடுத்து பேணி வளர்த்த அருமைச் செல்வன் ஒரே நாளில் சாம்பலோடு சாம்பலாய் கரைந்து போனான். பிள்ளையைப் பறிகொடுத்த துயரத்தை இருவராலும் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

அசோகவின் திடீர் மறைவை அறிந்ததும் உடனடியாகவே; சில்வாவுக்கு வழங்கப்பட இருந்த பாராட்டு விழாக்கள், விருந்து உபசாரங்கள், விருது விழா என்பன ரத்துச் செய்யப்பட்டன. சில்வாவுக்கு இந்த உலக ஞாபகமே இல்லாமல் போயிருந்தது.

அப்போதுதான் அந்தக் கடிதம் அவர் கண்களில் பட்டது. மரண வீட்டின் அல்லோல கல்லோலத்தில் மறுநாள் வந்த அரச முத்திரை பதித்த கடிதத்தை சில்வா பிரித்துப் பார்க்கவே இல்லை. சுமனாதான் அதை அவர் பார்வைக்காக கொண்டுவந்து அவரது அலுவலக அறை மேசையில் போட்டுவிட்டுப் போனாள். பிரிக்க மனமற்று கடிதத்தைப் பிரித்தார் சில்வா. மரண வீட்டிற்கு முதல்நாள் திகதியிடப்பட்ட கடிதம் அது. பிரிகேடியர்; சில்வாவுக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கியுள்ளமைக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தது. கூடவே அவரது சேவை தமக்கு மிகவும் அவசியம் தேவைப்படுவதால் மேஜர் ஜெனரல் சில்வா விரும்பின் அவரது சேவைக்காலத்தை மேலும் நீடிக்கலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை வாசித்த போது அவரது உதடுகள் ஏளனமாய் வளைந்தன. ''அசோக...'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. சுவரில் மாட்டியிருந்த அசோகாவின் புகைப்படத்தில் அவர் பார்வை பதிந்தது. தனக்கு கிடைத்த கேடயங்கள், தங்கமெடல்கள் எல்லாவற்றையும் இரண்டு கைகளிலும் அள்ளியெடுத்துக்கொண்டு போய் அசோகாவின் படத்திற்கு கீழே வைத்தார். கண்களை இறுக மூடிக்கொண்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

''அந்த ஒரு உயிரை காப்பாத்த வேணும் என்ற ஒரே நோக்கத்துக்காக உயிர் விட்டவன் நீ. நானோ என்ர ஒரே நோக்கத்திற்காக எத்தனை உயிர்களை அநியாயமாக காவு கொண்டிருக்கிறன்'' மேஜர்ஜெனரல் சில்வாவின் உதடுகள் முணுமுணுத்தன. சேவை நீடிப்புக்கோறி வந்திருந்த கடிதத்தை எடுத்து கிழித்துப்போட்டார். அவர் உடல் குலுங்கியது. அவர் தோள்களை ஆதரவாக வருடியது சுமனாவின் கரங்கள். மெல்லத் திரும்பி அவள் தோளில் சாய்ந்து விசும்பினார் சில்வா.

 



editor@tamilauthors.com