பயணம்

நியாஸ் அஹமட்

நான் ஓமன் நாட்டில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என் துறையில் ஒரு ஓட்டுனர் இருந்தார், முதல் முதலாய் நானும் அவரும் வெளியில் செல்ல வேண்டியுருந்தது ரொம்ப தூரம் ஆகையால்..., நான் பேச்சுக் கொடுக்க வேண்டுமே என்று முதலில் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தேன்...

அவர் நல்ல சிவப்பு நிறம், ஐந்தடிக்கும் அதிகமான உயரம், தலையில் பின்னாடி மட்டுமே சில மயிர்கள் தொங்கிக் கொண்டிருந்தது.., மீசைக்கு டை இன்றுதான்... அடித்திருப்பார் போலும்.., அதிலும் ஒன்றிரண்டு வெள்ளிக்கம்பி எட்டிப்பார்த்தது...!

"
எப்படி இருகிறீர்கள்?"

"
நல்ல இருக்கிறேன் சார்!" என்றார் சுத்தமான தமிழில்

ஆச்சர்யத்தில் "தமிழா!.. சார்" என்றேன்

"
ஆமாம்! சார், திருச்சி பக்கத்தில் ஒரு கிராமம்"

"
உங்கள் மனைவி எப்படியிருக்கிறார்கள்? " என்றேன்...

என்னனை ஊடுருவி பார்த்த அவர் "இன்னும் கல்யாணம் ஆகவில்லை"
என்றார் அதிலேயே அவர் எத்தனை முறை இந்த கேள்வியை எதிர் கொண்டிருப்பார் என்று என்னால் யூகிக்க முடிந்தது..

அதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் அதற்குப் பிறகு பேசவே இல்லை நான்கு மணி நேர பயணம் முழுவதும் ஒரு கனத்த மௌனமே நிலவியது. திரும்பி வரும் வழியிலும் நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை.

வெளிநாடுகளில் ஒரு ஆணோ!., பெண்ணோ!., திருமணம் செய்யாமல் வாழ்வதென்பது மிகவும் சாதாரணம், ஆனால், நம் நாட்டில் கல்யாணம் என்பது ஓர் 'social responsibility', நம் கலாச்சாரமும், மதங்களும் அதையே!.., போதிக்கின்றன. திருமணம் இல்லை என்றால் அவர்களை நாம் ஒரு குற்றவாளியைப் போல் பார்க்கிறோம்..!

அன்று வண்டியை விட்டு இறங்கி ஒன்றுமே சொல்லாமல் சென்றவன்தான்...! அவரை பார்ப்பதை தவிர்த்தேன் ஏதோ கொலைகுற்றம் செய்தவன் போல் அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தலைகவிழ்ந்து சென்றுவிடுவேன்...!


ஆனால் ஒரே துறையில் வேலை செய்துக்கொண்டு எவ்வளவு நாள்தான் பார்க்காமல் இருப்பது, விதி மூன்று மாதம் கழித்து மறுபடியும் அவருடன் அதே இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது...! சரி இந்த முறை அவ்வாறு ஏதும் பேசக்கூடாது என்று நினைத்து..... அவரிடம் "சின்னதாக ஒரு ஹலோ! சொன்னேன்" பதிலுக்கு அவரும் ஒரு "ஹலோ" சொன்னார்!...

எப்படியும் பேசாமல் போக முடியாது சரி என்று "சார் இந்த ஊரில் மழை பெய்யுமா?"

"
பெய்யும் சார்.. எப்பவாவது" என்றார்

மறுபடியும் ஒரு கனத்த மௌனம் பின் அவர் "நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் எந்த ஊர் சொந்த ஊர்? என்ற சம்பிரதாய கேள்விகள் கேட்டார்"

நானும் கார் கண்ணாடி வழியே வெளியில் பார்த்துக்கொண்டே.... பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்...!

"
என்ன சார் எதோ வேண்டா வெறுப்பாக பதில் சொல்லுகிறீர்கள்"

"
இல்ல சார்... அன்னைக்கி நான் கேட்ட கேள்வியில் நீங்கள் மனசுடைந்ததை நான் பார்த்தேன் அதனால்தான் என்றேன்..!" மிகவும் கனிவான குரலில்.

"
நீங்கள் என்ன சார் செய்வீர்கள் அது என் விதி..." என்றார்....

தன் கதையை சொன்னார்...!

"கூட பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர், என்னையும் சேர்த்து ஒன்பது பேர்!.., இரண்டு அக்கா, ஆறு தங்கைகள் நான் ஒருவனே ஆண்பிள்ளை..!, எல்லா சகோதரிகளையும் கரைஏற்ற வேண்டிய மிக முக்கிய பொறுப்பு என் தலையில், அதற்காகத்தான்.., நான் வெளிநாடு வந்தேன் வந்து இருபது வருடம் ஓடிவிட்டது., போன மாதம்தான் என் கடைசி தங்கையை கரை சேர்த்தேன் இந்த வருடம் முடிவில் நானும் கல்யாணம் செய்துக்கொள்வேன்" என்றார்...! ஒரே..... மூச்சில். இதை சொல்லும்போது அவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகை அது வெற்றிக்களிப்பில் வீரனிடம் காண்பது...

"
இதுவரை எந்த சகோதரிகள் திருமணத்திலும் நான் பங்கெடுத்துக் கொண்டதில்லை... மூன்று, நான்கு வருடத்திற்க்கு ஒருமுறை ஊருக்குப் போவேன்..." என்றார்!

"
என் டிக்கெட் பணமும் கல்யாண சேலைவுககுத்தான் போகும்" என்றார்

"
என்ன சார் இது ரொம்ப கஷ்டமாக இருக்குமே!!" என்றேன்

"
என்ன சார் பண்ணுறது, இது என் விதி" என்றார்

எல்லா மனிதருக்குள்ளும் ஒரு சுரங்கம் இருக்கிறது அதில் தங்கம் வேட்டிஎடுத்தது போக, பெரும் பள்ளமே மீந்துப்போகும்..... அந்த பள்ளத்தாக்கை நிரப்பும் ஒரு அட்சய பாத்திரமாகத் தான் தாரம் என்றொரு சொந்தம் இருக்கிறது.

அதற்குப்பிறகு அவர் மேல் ஒரு பெர்ர்ர்ர்ரிய மரியாதையே! வந்தது. அன்றிலிருந்து இன்று வரை அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராகவே இருக்கிறார்......

வண்டி விட்டு அன்று இறங்கும்போது சார் "உங்கள் அப்பா... என்ன செய்தார் என்றேன்.." ஒரு தயக்கத்தோடு,

"ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்தார்...." என்றார்

"அப்படி என்றால் ?"

"அரசாங்க பொது மருத்துவமனை, ஆனால் இது சின்ன, சின்ன கிராமத்தில் எல்லாம் இருக்கும், அவர்களின் முக்கிய பணிகளில் தடுப்பூசி போடுதல், கொசு மருந்தடித்தல், கற்பகால மாத்திரைகள் கொடுத்தல்... இன்னபிற, அவற்றில் முக்கியமானது குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவது " என்றார் முகத்தில் சலனமே இல்லாமல்

நான் அவர் என்னை இறக்கிவிட்ட இடத்திலேயே நின்றேன் சிலையாய்........

 

niyaz_fawaaz@yahoo.com