இது காதலா......?

நியாஸ் அஹ்மத்

காலையில் வெகு சீக்கிரமே எழுவது என் வழக்கம் அன்றும் அப்படியே.... எழுந்து, மம்மி தந்த பாலைக் குடித்து விட்டு, நேராக டாயிலெட் சென்று என் காலைக் கடன்களை முடித்து... அம்மா வரும் வரை காத்திருந்தேன். அம்மா வந்து கால் கழுவி, என்னை குளிக்க வைத்தாள். குளித்து உடம்பு முழுவதும் பவுடர் போட்டு,  பள்ளி சீருடை அணிவித்து, தோசை ஊட்டினாள்.

பள்ளிக்கு போவதென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கு காரணம் பிந்து..... என் பள்ளி நாட்களை பளீரென மின்னச் செய்தவள். என் தோழி, தேவதை, துணை இத்யாதி,  இத்யாதி.....

பிந்து என் வகுப்பில் படிப்பவள், படிப்பில் படு சுட்டி, கற்பூர மூளை, எதையும் ஒரு முறை சொன்னால் சட்டென பிடித்துக் கொள்வாள். நாட்கள் ஒவ்வொன்றும் நங்கூரமிட்டு நிற்காதா என ஏங்க வைக்கும் அன்புக்கு சொந்தக்காரி. நான் எப்பொழுதும் அவள் பக்கத்தில்தான் உட்காருவேன்.

அவள் வீடு, பள்ளிக்கு மிக அருகிலேயே இருந்தது, ஆனாலும் அவள் எனக்காக காத்திருப்பாள். என்னை யார் பள்ளிக்கு தூக்கிப் போனாலும் 'பிந்து வீட்டுக்கா துக்கிப் போ....' என்று அழுது ஆர்பாட்டம் செய்வேன். அவள் வீடு வந்ததும் நிற்கச் சொல்லி, அவளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன்.

அவளை அவள் அம்மா தூக்கிக் கொள்ள, என்னை என் அம்மா தூக்கிக் கொண்டுபோய் எங்கள் வகுப்பில் விடுவார்கள். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும் எனக்கு ஏதோ போல் இருக்கும், அவளும் அதயே நினைப்பதாகச் சொன்னாள்.

எந்த ஒரு கலை நிகழ்ச்சி என்றாலும், நாங்கள் இருவரும் சேர்ந்தே கலந்துக் கொள்ள வைக்கப் பட்டோம். பார்ப்பவர் எல்லாம் ஜோடிப் பொருத்தம் அற்புதம் என்றே வியப்பார்கள்.

மதியம் அவள் வீட்டில் வைத்தே எனக்கும் அம்மா சோறு ஊட்டுவார்கள். நிறைய நாள் அவள் சப்பாடையோ அல்லது என் சாப்பாடையோ இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம். எங்கள் நட்பு வீடுவரை வந்தது. விடுமுறை தினங்களிலும்....,  நான் அவள் வீடே கெதியென இருப்பேன். எங்கள் இருவர் குடும்பமும் நட்பால் பினைந்தது.

அவள் அப்பா என்னை வாடா மருமகனே என்றுதான் அழைப்பார். கேலிக்காக... ''என்னடா மருமகனே.... என் பொண்ணைக் கட்டிக்கிறியா...?''  என்று கேட்பார் 'ஓ...!' என்று சொல்லி ஓடிவிடுவேன்.

எல்லாம் நான் ஒன்னாவது முடிக்கும் வரைதான்....கடவுளெனும் கொடியவன்.... பிஞ்சு உன்ளங்களை சிதைத்து, ரத்தம் குடிக்கும் இறக்க மற்றவன். நாங்கள் பிரிய நாள் குறித்தான்........ அவள் தந்தைக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி போகவேண்டிய நிர்பந்தம் வந்தது.

அதற்க்கு முந்தைய நாள் இரவு.... நாங்கள் ரொம்ப நேரம் விளையாடினோம், இந்த பிரபஞ்சமே இன்றுடன் முடிந்து விட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு. மறுநாள் அவள் அந்த டெம்போவில், அம்மாவுடன் ஏறும்வரை அழுது கொண்டே இருந்தோம்.

ஆழ்நிலை நினைவில் மூழ்கி இருந்தவனை அம்மா தட்டி எழுப்பினாள் 'ஏண்டா...! உன்னை எத்தனை முறை கூப்பிடுறது, காது செவிடாப் போச்சா...?' திடுக்கிட்டு விழித்தவன் 'என்ன....?' என்றேன். 'நாம பிந்து வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னேனே....! கிளம்பு' சரி என்று கிளம்பி போனோம்.

அதற்குப் பிறகு ஒரு வாரம் அவள் நினைவாக இருந்தது, பின்... என் நாட்கள் ஊருண்டோட,  நான் அவளை மறந்தேப் போனேன். பிந்து போல் நிறைய பேர் என் வாழ்வில் வந்து போனார்கள், இன்று எனக்கும் திருமணமாகி, இரண்டு பிள்ளைகள்.

இருபத்தைந்து வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கப் போகிறேன். அம்மாதான் பிந்துவின் அம்மாவை எங்கேயோ கடைத்தெருவில் பார்த்து... நலம் விசாரித்திருக்கிறாள். அவசரத்தில் இருந்ததினால் இருவரும் மேற்கொண்டு எதுவும் போசாமல் விடைபெற்றுவிட்டார்கள்.

அவர்கள் வீடு இந்த சந்தில்தான் இருக்கு என்று, பிந்தோட அம்மா சொன்னார்கள். பின் வீடு தேடி கண்டுபிடித்து சென்றோம். வீடு ரொம்ப சின்னதாக இருந்தது. ஒரே ஒரு உடைந்த நாற்காலி இருந்ததுஇ அதில் நான் உட்கார்ந்துக் கொள்ள, அம்மா தரையில் அமர்ந்தாள்.

ஒரு சேலைத் திரை மட்டுமே மறைப்பாய் இருக்க, உள்ளே இரு பெண் குரல்கள். பிந்துவின் தந்தை, திரையை விலக்கி வெளியே வந்தார், வயது அவர் முகத்தில் பல கோலங்கள் வரைந்திருந்தது, தலையில் ஒரு முடி கூட இல்லை.

''வணக்கம்...''

''வணக்கம் சார்...!, எப்படி இருக்கீங்க...?'

''ம்... ஏதோ இருக்கோம்....''

என் கண்கள் உள்ளயே நிலை கொண்டிருக்க..... சிறிது நேர மவுனத்துக்கு பின், அம்மாதான் ஆரம்பித்தாள்....
'பிந்து எப்படி இருக்காள்...?' என்றாள்.
அவர் குனிந்த தலை நிமிராமலேயே..... 'என்னத்த சொல்லுறது, அவளாகவே விருப்பப் பட்டுத்தான் அபிஷேக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டாள் நாங்கள் அவள் விருப்பத்துக்கு என்றுமே குறுக்கே நின்றதில்லை.

அவரும் நல்லா படிச்சவர்தான். ஒரு நிதி நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். என் சொத்த எல்லாம் வித்து சிறப்பா கல்யாணம் பண்ணினோம். ரெண்டு வருஷம் நல்லாத்தான் போச்சு. என்ன ஆச்சோ தெரியாது...? அந்த கம்பெனி முதலாளி ஓடிட்டான். சினச்சர் ஆதொரிட்டி இவர்ன்னு சொல்லி போலீஸ் அரெஸ்ட் பண்ணிடிச்சு, பெயில்ல வெளியே அன்னைக்கி ராத்திரி எல்லாரும் தூங்கும் போது தூக்குப் போட்டு போயிட்டாரு...'ன்னு சொல்லி தேம்பி தேம்பி அழுதார்.

உள்ளிருந்தும் அழுகுரல் கேட்டது. மேற்கொண்டு யாரும் எதுவும் பேச சக்தி இல்லாமல் மவுனத்தை ஆயுதமாக்கி அங்கிருந்து விடை பெற்றோம். நானோ அம்மாவோ கடைசி வரை பிந்துவை பார்க்கவில்லை, எனக்கும் பிந்துவை வேறு கோலத்தில் பார்க்கும் தைரியம் இல்லை.

தவழ்ந்து வந்த குழ்ந்தையைப் பார்த்தேன், அப்படியே சின்ன வயசு பிந்துவை உரித்து வைத்திருந்தது.



niyaz_fawaaz@yahoo.com