சாமரங்கள்

விமலா ரமணி

'தந்தி' என்றதும் பகீர் என்றது பட்டுவுக்கு. தந்தியா? எனக்கா? யார் கொடுத்திருப்பார்கள்? என் விலாசம் யாருக்குத் தெரியும்? இவளை ஒதுக்கிய உறவுகளை விட்டு இவளே ஒதுங்கி வந்து அஞ்ஞாதவாசம் ஆரம்பித்து இருபது வருடங்களுக்கு மேலாகின்றன.

இவள் எதற்காக யாருக்காகக் காத்திருக்கிறாள்? இவளின் ஒரே காத்திருப்பு, மரணம் ஒன்றுதான்! அது வருகிறபோது வரட்டும். அதற்காக ஆரத்தி எடுக்கவா முடியும்? எதுவாக இருந்தாலும் 'சட்'டென்று மரணம் வந்துவிடவேண்டும்! சீரழியக்கூடாது! இவளுக்கு உதவ யாருமில்லை!

இன்று பாட்டு டீச்சர் என்றால் அத்தனை பேருக்கும் தெரியும். இவள் ஆசைப்பட்டுக் கற்றுக் கொண்ட இசை இன்று இவளுக்கு சோறு போடுகிறது. கச்சேரி செய்ய கனவு கண்டவளுக்கு மிச்சமிருப்பது இந்தத் தொழில்தான்! வாழ்க்கையில் எல்லோரும் முன்னேறுவார்கள். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், வர்ணம், கீதம், கீர்த்தனை என்று... இவள் ராகம், தாளம், பல்லவி பாடக் கூடிய வித்வாம்சினியாக இருந்தும் இப்போது சரளி வரிசையில் நிற்கிறாள்!

இவளின் வரிசை என்றும் தலைகீழ்தான்! இவளிடம் சரளி வரிசையும், ஜண்டை வரிசையும் கற்றுக்கொண்டு கல்யாணப் பாடலுடன் காணாமல் போனவர்கள் ரொம்பப் பேர்!

இவளைப் பெண் பார்க்க சந்திரசேகரன் வந்தபோது இவள் என்ன பாடினாள்? ஆமாம். ஆர்மோனியத்தில் சுருதி சேர்த்து காம்போதி ராகத்தில் 'காணக் கண் கோடி வேண்டும்' - என்று பாடினாள்.

கோடி என்றுதானே பாடினாள்? அதனால்தான் சந்திரசேகரனின் தாய் வரதட்சனையாக சில லட்சங்களை கேட்டாளோ?

இவள் தந்தை தயங்கித் தயங்கிச் சொன்னார். "இப்போ மொத்தமா அம்பது பவுன் போட முடியாது. பாதி போடறேன். அதே போல் ரொக்கம் ஐம்பதினாயிரத்துக்குப் பதிலா இருபது தரேன். பாக்கியை கொஞ்சம் கொஞ்சமா தந்துடறேன்".

சந்திரசேகரனின் தாயார் சிரித்தாள்.

"
நாங்க என்ன இன்ஸ்டால்மெண்டிலா கல்யாணம் பண்றோம்? மொத்தமா கொடுத்துடுங்க."

பாண்டு எழுதிக் கொடுக்காத குறையாக பத்துப்பேரை பஞ்சாயத்து வைத்து, இருபது பவுனுக்கும், இருபதினாயிரம் ரூபாய்க்கும் சம்மதிக்க வைத்தார்கள்!

பட்டுவுக்கு அவமானமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மருமகளைப் படுக்கை அறைக்கு அனுப்பும்போது மாமியார் தவறாமல் சொல்லும் வாசகம். "சீக்கிரம் ஊருக்குப் போய் பாக்கிப் பணத்தையும், நகையையும் வாங்கிட்டு வா. புருஷ சுகத்திலே உன்னோட நிலைமையை மறந்துடாதே"

தேகம் பற்றி எரியும். சந்திரசேகரன் இவளைத் தொடும்போது மாமியாரின் குரல் எதிரொலிக்கும்!

புருஷ சுகம்! கடன் சுகமா!

சுகங்கள் சோகங்களான படுக்கை அறைக் காவியம்! அவனும், "அம்மா அப்படித்தான் சொல்லுவாங்க! நீ அதை மறந்திடு" என்று ஆறுதல் சொன்னால் இதமாக இருக்கும். ஆனால் அவன் சொல்வது? "அம்மா சொல்றதைக் கேட்டே இல்லை? சீக்கிரம் உங்கப்பாகிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணு. சரி, இப்போ விளக்கை அணை".

அவன் விளக்கை அணைத்தபோதும், இவளை அணைத்தபோதும் தேகத்தில் எரிமலை வெடித்தது.

சிறுவயதில் இவள் தன் தகப்பனோடு தாலுக்கா ஆபீஸ் போனபோது அங்கே சிலர் பங்கா இழுத்துக் கொண்டிருப்பார்கள். மின்விசிறி இல்லாத இடத்தில் பங்கா இழுக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது.

"
ஏம்பா அவனுக்கும் கை வலிக்காது?" அப்பாவிடம் இவள் கேட்பாள்.

"
அது அவன் தொழில் வலிச்சாலும் பங்கா இழுக்கணும். இப்படித்தான் ஒரு காவலாளி உட்காந்தபடியே பங்கா இழுத்தபடியே இறந்து போயிருக்கிறானாம்! காற்று வரவில்லையே என்று ஆபீஸர் கோபமாக வெளியே வந்து பார்த்தபோதுதான் அவன் காற்றோடு கலந்திருக்கிறான்!" இப்படி அப்பா நிறைய பழைய கதைகளைச் சொல்லுவார். ஆங்கிலேய சமஸ்தானத்தில் அவர் வேலை பார்த்தவர். மாதா மாதம் பென்ஷன் வாங்க தாலுக்கா ஆபீஸ் போவார். சில சமயம் இவளும் போவது உண்டு.

இவள் கூடப் பிறந்தவர்கள் இரண்டு பேர்கள். மூத்தவளுக்குத் திருமணமாகி எங்கோ வடக்கே இருக்கிறாள். இன்னொரு சகோதரி பற்றித் தகவல் இல்லை! காதல் திருமணம்! அம்மா இறந்த பிறகு யாருமே இவர்களைப் பார்க்க வருவதில்லை! கடைசியில் மிஞ்சியது இவளும், கடனும்தான்! அப்பாவின் வயதான காலத்தில் பிறந்தவள்! தாமதம். எல்லாவற்றிலும் தாமதம்.

கடைசியில், சந்திரசேகரன்தான் கிடைத்தான். அப்படி ஒன்றும் பெரிய படிப்பு அவன் படிக்கவில்லை. ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை!

ஆனால் அவன் தாயோ அவனை அமெரிக்க ஜனாதிபதி அளவுக்குக் கற்பனை செய்து வைத்திருந்தாள்!

அன்று, "இதோ பார்! இப்படியே நாள் போயிட்டு இருந்தா நல்லா இல்லை. நீ உடனே உன்னோட பொறந்த வீடு போறே. பாக்கிப் பணத்தை வாங்கிட்டு வர்றே" மாமியார்க்காரி துரத்தினாள்.

இவள் கிளம்பினாள். அப்பாவிடம் பணம் இருந்தால் தந்திருக்க மாட்டாரா? பென்ஷனை மட்டுமே நம்பி வாழும் ஜீவன்! இருந்த ஒரே ஒரு வீட்டையும் கடனுக்காக எழுதிக் கொடுத்தாகி விட்டது! வட்டி அவரை விழுங்கி வீடு மூழ்கி விட்டது!

இவள் கிளம்பினாள். பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். மாமியாரையும், கணவனையும் நமஸ்கரித்தாள்.

"
நான் போயிட்டு வரேன். ஸாரி, வரமாட்டேன். போறேன். ஆனா சொல்லிட்டுப் போகும்போது வரேன்னுதான் சொல்லணும். அதுதான் முறை. இங்கே எதுவும் முறையா இல்லைங்கிறதுக்காக நான் முறை தவறி நடக்கமாட்டேன். உங்க மகனுக்கு தாராளமாக ரெண்டாம் கல்யாணம் பண்ணி வையுங்க. நான் உங்க வாழ்விலே குறுக்கிடமாட்டேன். திரும்பி வரவும் மாட்டேன். சீதனமாக ஏற்கனவே கொடுத்த வெள்ளி, தங்கமெல்லாம் திரும்பக் கேட்கவில்லை. ஆனா இந்தத் தாலிச் செயின் மட்டும் கழுத்திலே இருக்கட்டும். உங்க புள்ளை கட்டின தாலிங்கிறதுக்காக சொல்லவில்லை. ஏதாவது கஷ்டம் வந்தா அடமானம் வைக்கறதுக்கு இந்த ஒரு நகையாவது இருக்கட்டும்."

ஆனந்த பைரவி அழுகையானது. கிளம்பிவிட்டாள். மறக்காமல் ஆர்மோனியத்தை எடுத்துக்கொண்டாள்! இனி அதில்தான் இவள் சுருதி சேர்க்க வேண்டும். வாழ்வின் ஆதார சுருதி என்றோ கலைந்து போனது!

அன்று கிளம்பினவள்தான். இவள் அப்பாவைத் தேடிப்போன போது அவர் மரணப் படுக்கையில் இருந்தார்.

"
... என்னம்மா வந்துட்டே? புள்ளை உண்டாகி இருக்கியா?" மகிழ்ச்சியுடன் கேட்டார். மகள் மசக்கைக்காகப் பிறந்தகத்திற்கு சீராட வந்திருப்பதாக நினைத்துவிட்டார். சாகப்போகிற உயிருக்கு ஒரு ஆறுதல். பொய் சொன்னாள் பாவமில்லை.

'
ஆமாம்' என்று தலை அசைத்தாள்.

இவள் கையைப் பிடித்தபடி அப்பா உயிர் துறந்தார். அதன்பின் இடம் பெயர்ந்து பாலக்காட்டுக்கு அருகில் இருக்கும் இந்தச் சிற்றூரில் வாழ ஆரம்பித்தாள். இவளைப்பற்றி யாருக்கும் தெரியாது. இவள் பெயர் பட்டு என்பது கூட நாளடைவில் மறைந்துபோய் பாட்டு டீச்சர் என்றாகிவிட்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகுஇவள் விலாசம் தேடி ஒரு தந்தி!

இவளைப்பற்றி யாராவது தகவல் கொடுத்திருப்பார்களோ? எந்த அனுமனும் இவளிடம் கணையாழி பெறவில்லை. எந்த ராமனும் இவளை இனி சிறை மீட்கப் போவதில்லை! தந்தியை இவள் பிரிக்க நினைத்தபோது

வாசலில் கால் டாக்ஸி ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து இவளின் சகோதரி, எங்கோ காதலில் வாழ்ந்து கொண்டிருந்தவள் வந்து இறங்குகிறாள். காணாமல் போனவள் கிடைத்திருக்கிறாள்! வரும்போதே பொருமியபடி அழுதபடி வருகிறாள்.

"
பட்டு, இனிமே அந்த மனுஷனோட வாழப் போறதில்லை. உறவுகளை முறிச்சுட்டு வந்துட்டேன். அந்தக் குடும்பத்துக்காக மாடா உழைச்சேன். கடைசியிலே அந்த ஆள் என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தியோட ரகசியமா குடித்தனம் நடத்தறானாம். என்னை ஒரு கருவேப்பில்லையா பயன்படுத்தி எத்தனை வருஷம் ஏமாத்தியிருக்கான் தெரியுமா?"

இத்தனை நாள் பிறந்த வீட்டுக்கு வழி தெரியாமல் இருந்தவளுக்கு, தூக்கி எறியப்பட்ட பிறகு வழி தெரிந்திருக்கிறது.

"
கஷ்டப்பட்டு விலாசம் தேடி உன்னைக் கண்டு பிடிச்சிருக்கேன். என்னைப் 'போ'ன்னு சொல்லிடாதே. இருக்கிறதிலே ரெண்டு பேரும் கஞ்சியோ, கூழோ குடிச்சிக்கலாம். உன்னை நம்பித்தான் வந்திருக்கேன்" குப்புறப்படுத்து அழுகிறாள் அவள். பட்டு பார்க்கிறாள்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை போலீஸூக்குக் காட்டிக் கொடுத்து சிறைத் தண்டனை வாங்கித் தந்த புதுமைப் பெண் நிஷா சர்மாவின் புகைப்படமும் பேட்டிகளும் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இவள்கூட ஒரு புதுமைப் பெண்தான். திருமண உறவை முறித்துக் கொண்டு, தன்னால் வாழ்ந்து காட்ட முடியும் என்று நிருபித்த பெண்!

இவள் சாமரங்கள் வீசிப் பழக்கப்பட்டவள். அந்தக் காற்றில் காற்று வாங்கியவர்களின் பட்டியல் முடிந்து போனது என்றுதான் நினைத்திருந்தாள். இல்லை! இன்னும் முடியவில்லை. இதோ விட்டுப்போன பழைய உறவு. புதிய அவதாரம் எடுத்து வந்திருக்கிறது.

கை வலித்தாலும் சாமரம் வீச வேண்டிய அவசியம்.

பட்டு பேசவில்லை. கையிலிருக்கும் தந்தியைப் பார்க்கிறாள்.

இவள் தன் கழுத்தில் சுமப்பது கயிறு அல்ல! சாமரங்கள்!

இது ஒரு பாதுகாப்பு வளையம். இனியும் இவளால் அக்னிச் சிறகெடுத்துப் பறக்க முடியும். ஏனெனில், இவள் பங்கா இழுத்துப் பழக்கப்பட்டவள். கச்சேரியில் கடைசியில் மங்களம் பாடுவார்கள். இவள் பாதிக் கச்சேரியில் எழுந்து வந்தவள். கச்சேரி இன்னும் பாக்கி இருக்கிறது. இவள் நிம்மதியாகத் தந்தியை கிழித்தெறிந்தாள்! மனம் இலேசாகிறது
!

 

vimalaramanis@yahoo.com