நிழலைத்
துரத்தினவன்
யுவன் சந்திரசேகர்
உடல் நனைய மனமும் குளிர்ந்து மிருதுவாகிக்கொண்டே வந்தது. குளியலறையின்
மங்கிய விளக்கொளியில் என் உடல் எனக்கே அன்னியமாகவும் அபூர்வ
மினுமினுப்புடனும் தென்பட்டது. லாட்ஜ் குளியலறையின் பிரத்தியேக
நாற்றத்துடன் நான் உபயோகித்த சோப்பின் மணமும் கலந்த புது வாசனையை
உணர்ந்தேன்.
சட்டென்று, இடது பக்கச் சுவரில் என் நிழல். துவட்டிய தலையைத் துடைத்துக்
கொண்டிருந்தவன், மூக்குக்கண்ணாடியை அணிந்து கொண்டேன். துண்டை இடுப்பில்
சுற்றியபடி நிழலை வெறித்துப் பார்த்தேன்.
பத்து நாள் தாடி சிம்புகளாய்த் துருத்திக்கொண்டிருக்க, லேசாய் அதைத்த
கன்னம். ஒப்பனைகளற்ற என் முகம் எனக்கே விகாரமாய் தோன்றியது. நிழல்
முகத்தின் கண்களின் முன்னால் ஒரு திரைபோல் இருந்தது கண்ணாடி. தொடர்ந்து
நிழலைப் பார்க்கப் பிடிக்காமல் பார்வையை விலக்கினேன்.
குளியலறையின் தனிமை வெளியில் நானும் என் நிழலும் சிறைப்பட்டிருந்தோம்.
தன்னிச்சையாய் போலவும், அடக்க முடியாத பெரு விருப்பத்தினால் போலவும்
மீண்டும் மீண்டும் நிழலில் படிந்தது என் பார்வை. குளியலறையில் மைக்
கீற்றல்கள், குங்குமத் தீற்றல்கள், ஒட்டுப்பொட்டு மற்றும் விதவிதமான –
மிக நுட்பமான அருவறுப்புணர்வை ஏற்படுத்திய – கறைகளுக்கருகில் சுவாதீனமாய்
அசைந்து கொண்டிருந்தது என் நிழல்.
அடித்தொண்டையில் ஒரு ஆழ்ந்த கசப்பை உணர்ந்தேன். சமத்தன்மை இழந்து
உளறிக்கொண்டிருந்தது என் மூச்சு.
இரவு உணவுக்காகத் தெருவில் இறங்கினேன். பிரயாண அலுப்பில் கால்களும்
நடையும் தளர்ந்திருந்தன. கடற்காற்றும், கடற்கரை நாற்றமும், குறுமணலும்
படிந்த தெருக்களில் நடந்தேன். திரையரங்கு ஒன்றிலிருந்து வெளியேறிய
கூட்டத்தின் ஒரு பகுதி என்னையும் நடத்திச் சென்றது.
சடாரென்று இருள் கவ்வியது. மின் தடை. தெருவின் இயக்கம் முடங்கியவிட்டதாகத்
தோன்றியது. நிழலுருவங்களுடன் நின்று கொண்டிருந்தேன். ஜெனரேட்டர்களின்
படபடத்த ஓசையுடன் துடிதுடித்து எரிய ஆரம்பித்தன விளக்குகள்.
அறைக்குத் திரும்பி ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். நிழல் என்ற
சொல்லும் அதன் அர்த்தப் பரிமாணங்களும் என்னை மொய்த்தன. சிகரெட்டுப் புகை
நீண்ட கோடுகளாய் உயர்ந்து ஒழுங்கற்ற வடிவங்களை எழுதிக் கலைந்தது.
அப்பாதான் நிழலை எனக்குக் காட்டினார். ஹரிக்கேன் விளக்கின் ஒளியில்
சுவரில் விசித்திரமான நிழல் வடிவங்களைச் செய்து காட்டுவார் அப்பா. பறவைகள்,
மிருகங்கள், ஆயுதங்கள், சுவரில் தோன்றும் வடிவங்களின் பினன்ணியில் கதைகள்
சொல்வார். விநோதமான கதைகள். அண்ணனைக் கொன்ற தம்பி. அப்பாவை சிறையில்
அடைத்த பிள்ளை. நோய்ப் படுக்கையில் இருந்துகொண்டு மனைவியை வதைத்த புருஷன்,
புலியிடம் கடிபட்டுச் செத்தவன், தன்பலம் மறந்து குழிக்குள் வீழ்ந்து மரம்
சுமக்கும், பிச்சையெடுக்கும் யானைகள். சாதாரண, மிகச் சாதாரண மனிதர்களும்
அவர்களுக்கிடையேயான உறவுகளும் நிகழ்த்திய பயங்கரங்களின் கதைகள்.
அப்பா இல்லாத நேரங்களில் சுவரைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். என்
உருவத்தின் நையாண்டி வடிவமாய் நிழல் தெரியும். நான் கையை உயர்த்தினால்
தானும் உயர்த்தும், நான் சிரித்தால் முகத்தை மட்டும் உப்பிக் கொண்டு
கோமாளி காட்டும். நிழலை வளைக்க வேண்டுமென்றால் நானும் வளைய வேண்டும்.
நிழலும் ஒரு நபர் என்று தோன்றும்.
அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். அறைக்குள் ஒரு ஜன்னல் வழியாக
நுழைந்த காற்று புகையை வாரிக்கொண்டு மறு ஜன்னல் வழியாக வெளியேறியது. கீழே
வாகன நடமாட்டம் குறைந்திருந்தது. ஜன்னலின் வழியே சுருள் வில்லை
நீட்டியதுபோல் வளைவுகளோடு முன்னேறின. வீதியை இருளும் மௌனமும்
போர்த்தியிருந்தன.
நிழல் ஒரு நெருக்கடியாக மாறின சந்தர்ப்பம் நினைவு வருகிறது.
அந்தத் தெருவைத் தாண்டித்தான் நான் வசித்த தெருவுக்குப் போகவேண்டும்.
தெருமுனை இருட்டுக்குள் நுளைந்தபோது யாரோ பார்க்கிற உணர்வு உள்ளேறியது.
உணர்வு சிறுகச் சிறுக பயமாய் உருக்கொண்டது. சோகையான தெரு விளக்கின்
மங்கிய ஒளியில் அந்த நாய் புலப்பட சற்று நேரம் பிடித்தது. இருட்டுக்குள்
குட்டி இருட்டாகக் கறுப்பு நாய். உயிர் பலம் முழுவதையும் ஒளிரும் கண்களில்
தேக்கி என்னையே உறுத்துப் பார்த்தவாறிருந்தது.
அதன் எந்த சமிஞைக்குப் பதிலென ஓட ஆரம்பித்தேன், தெரியவில்லை. நான் ஓடத்
துவங்கியதும் அது துரத்தத் துவங்கியதும் அநேகமாக ஒரே கணத்தில்
ஆரம்பித்திருக்க வேண்டும். பெரும்பான்மையாய் இருட்டும், இடையிடையே
ஜீவனற்ற தெரு விளக்குகளுமாய் நீண்ட தெருவில் இருளாகவும் நிழலாகவும் மாறிய
தோற்றங்களில் துரத்தும் நாய்க்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தேன். ஊசிகளின்
கற்பனையில் தொப்புள் கூசித் துடிக்க, மரணம் துரத்துவதான பிரமையில் ஓடினேன்.
தெருமுனைக்கு வந்தபோது அனிச்சையாய் திரும்பிப் பார்த்தேன். தெருவின் கடைசி
மங்கல் விளக்கினடியில் நானும் என் நிழலும் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
தெருவின் ஏதோ ஒரு இடத்தில் நாயின் பிராந்தியம் முடிந்திருக்கவேண்டும்.
நாய் நின்று பயம் துரத்த ஓடியிருக்கிறேன். உடனடியாய் நிறுத்த முடியாத
வேகத்தை மெல்லக் குறைத்து நான் நின்றபோது என்னைத் துரத்தி வந்த என்
நிழலுக்கும் என்போலவே மூச்சிறைத்துக்கொண்டிருந்தது.
நிழல் என்னைத் தொடருகிறது என்ற என் பல வருஷ நம்பிக்கை பொடிப்பொடியான
தருணம் அது. நிழல் தொடரவில்லை, துரத்துகிறது. நான் கவனிக்காதபோதும் நிழல்
ஒன்றின் துரத்தலில்தான் நடமாடுகிறேனோ? லேசான நடுக்கத்தை உணர்ந்தேன்.
மறுநாள் இஸ்மாயிலிடம் இதைச் சொல்ல நேரிட்டபோது அவனுக்கும் நிழல் பற்றிச்
சொல்வதற்கு இருந்தது. அலைபாயும் கண்களுடன் முழுக்கக் கேட்டான்.
நிம்மதியற்ற கண்கள் இஸ்மாயிலுக்கு. சமீப காலமாக நிழல் தன்னையும் தொந்தரவு
செய்வதாகவும், அதுநாள் வரை தான் வரைந்திருந்த ஓவியங்கள் அத்தனையையும்
முந்தின வாரம் கொளுத்திவிட்டதாகவும் சொன்னான். அதுவரையில் தான் வரைந்தது
வெறும் படங்கள்தாம். உண்மையில் நிழல்களின் உலகம் ஒன்று இருக்கிறது.
உருவங்களின் உலகத்துக்குச் சமமானது அது என்றான். தற்சமயம் நிழல்களை வரைய
முயன்றுகொண்டிருப்பதாகவும், ஆனால் ஒரு முறையும் நிழலை வரைந்துவிட முடியும்
என்று தோன்றவில்லை என்றும் சொன்னான்.
வைகையாற்றின் மணல் தரையில், தொலைவில் ஆற்றுப் பாலத்தின் மேல் தடதடத்து
ஓடின ரயிலையும், சற்றுத் தள்ளி ஒழுக்காக ஓடிக்கொண்டிருந்த நீரில்
நட்சத்திரங்களையும் பார்த்தபடி கேட்டுக்கொண்டிந்தேன் எதுவும் புரியாதவனாக.
அவன் என்ன சொல்ல வருகிறான்? தொடர்ந்து சொன்னான், ஒவ்வொரு முறையும்
தோல்வியையே சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது. உருவத்தை வரையாமல் நிழலை வரைய
முடிவதில்லை. நிழலை மட்டும் தனியாக வரைந்தாலோ, அதுவும் ஒரு உருவமாகி
விடுகிறது. நிழலாகவே இருக்கும் நிழலை வரைவதுதான் தனக்கு முன்னுள்ள சவால்
என்றான்.
மணல் பரப்பின் மீது இருள் ஒரு பெரும் மௌனமாக இறங்கியிருந்தது. ரயில் பாலம்
தன் இரும்புத்தன்மைகளை உதிர்த்துவிட்டு வெறும் துவாரங்களும் கோடுகளும்
வளைகோடுகளுமாய் மிஞ்சி நின்றது. இஸ்மாயில் கடைசி முறையாக சிகரெட்டை
ஆழ்ந்து இழுத்துவிட்டு நீரில் எறிந்தான். பின், நிழல் என்பது ஒரு உணர்வு
என்று படுகிறது என்றும், நிறங்களிலும் உருவங்களிலும் சில பேதங்களை
ஏற்படுத்துவதன் மூலம் நிழலின் தன்மையை ஓவியமாக்கிவிட முடியும் என்று
நம்புவதாகவும் சொன்னான். முடிவாக, தற்செயலாகவே என்றாலும் நிழலை
எதிர்கொள்ள நேரிட்டது மிக முக்கியமான விஷயம் என்று தான் நினைப்பதாகவும்
சொன்னான். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்
முகாமுக்கு நான் போகப்போகிறேனா என்று கேட்டுவிட்டுப் போய் விட்டான்
இஸ்மாயில்.
சுpகரெட்டுகள் வேகமாய்த் தீர்கின்றன. அறைக்குள் சிகரெட்டுப் புகையின்
கடும் நெடி நிரம்பிவிட்டது. கடலின் விளிம்புக்கு மேலாக வெட்டிய மின்னல்
அறைக்குள் நிறைந்து விலகியது. கிளர்த்திவிடப்பட்ட ஞாபகங்களின் பின்னணியில்
தூக்கம் வெகு தொலைவில் இருந்தது.
எழுத்தாளர் முகாமில் ஓசைகளின் குழப்பம் மிகுந்திருந்தது. ஆகிருதிகளும்,
தத்துவங்களும், கோட்பாடுகளும். சுமூகவியல் கேள்விகளும் துரத்த, அறுந்த
கேள்விகளைக் கையில் வைத்துக்கொண்டு இங்குமங்கும் போய்க்கொண்டிருந்தனர்
பலரும். வியாதி பீடித்த நாய் போல் மூலையில் சுருண்டுகொண்டது எழுத்து.
வெளியில் வந்தேன். கடற்கரை நோக்கிப் போனேன். கடற்கரை முலாம் பூசிக்கொண்டு
விட்டது. குழந்தையின் சருமம் போல் மிருதுவாயிருந்தது மணல். வசீகரமான
பெண்ணொருத்தி தன் நிழலை என்மீது படரவிட்டுப் போனாள். எழுச்சியற்று அவளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன். ஒளியை எதிர்கொள்வதன் பிரதிவினையாக நிழல்
ஏற்படத்தான் செய்யும். ஆயினும், நிழல் இல்லாதிருக்கும் சமயங்களும்
இருக்கவே செய்கின்றன என்று தோன்றியது.
சூரியன் கடலுக்குள் மூழ்கியாயிற்று. இரை தேடப்போன பறவைகள் கூட்டையும்
இருட்டையும் நோக்கித் திரும்பிப்கொண்டிருந்தன. இட்டு நிரப்ப அவசியமற்ற
இடைவெளி போல் அந்தி வெளிச்சம் பரவியிருந்தது. ஆழ்ந்த, நிறமும் சலனமும்
அற்ற நீர்நிலை போன்ற மௌனம். சமுத்திரமும் ஆகாயமும் தரையும் ஒரு
பிரம்மாண்டமான ஒத்திசையின் தியானத்தில் மூழ்கிய இந்தத் தருணம் காலத்தின்
பரப்பில் ஆரம்பமும் முடிவும் அற்று நீளும் புள்ளியாகவும் நான்தான் அது
எனவும் தோன்றியது. கடற்காற்று அணைத்துவிடாது கைக்கூட்டுக்குள் நெருப்பை
ஏற்றி சிகரெட் பற்ற வைத்தேன். தற்செயலாய் தான் கவனித்தேன். அப்போது நான்
நிழலற்று அமர்ந்திருந்தேன்.
காலச்சுவடு சஞ்சிகை - இதழ் 10, 1995
|