வாய்த்
திறக்க
மாட்டேன்
மு.வரதராசனார்
"நீங்கள்
எப்படி
சாமி,
இங்கே
வந்து
சேர்ந்தீர்கள்?"
என்று
திகைப்போடு
கேட்டான்
அவன்.
"இப்படித்தான்,
உன்னைப்
போல்தான்"
என்று
அக்கறை
இல்லாதவன்
போல்
பதில்
சொல்லி
முகத்தை
அப்பால்
திருப்பிக்
கொண்டேன்.
"என்னை
மறந்து
விட்டாற்
போல்
தெரிகிறது,
நான்
தெரியவில்லையா,
சாமி?"
என்று
அவன்
கேட்டதும்
திரும்பிப்
பார்த்தேன்.
எனக்கு
அவன்
யார்
என்றே
தெரியவில்லை.
ஒருவேளை
அவன்
என்னை
அறிந்திருக்கலாம்
பட்டணத்தில்
பார்த்திருக்கலாம்
என்று
எண்ணினேன்.
"நீ
யார்
தெரியவில்லை,
அப்பா"
என்றேன்.
"என்ன
சாமி!
இப்படிச்
சொல்கிறீர்களே!
நான்
உங்கள்
பக்கத்து
வீட்டிலே..."
என்றான்.
எனக்கு
அப்போது
தான்
நினைவுக்கு
வந்தது.
பக்கத்து
பங்களாவிலே
அவனை
அடிக்கடி
பார்த்தது
நினைவுக்கு
வந்தது.
அந்த
வியாபாரியின்
வீட்டிலே
அவன்
சில
மாதங்களுக்கு
முன்னே
வேலைக்காரனாக
இருந்தது
நினைவுக்கு
வந்தது.
"ஓ!
நீயா
அப்பா!
செ.ப.அய்யர்
வீட்டில்
வேலை
செய்து
கொண்டிருந்தேயே!
சரிதான்;
மறந்துவிட்டேன்,
அப்பா!
பட்டணத்திலே
எத்தனையோ
பேரைப்
பார்க்கிறோம்.
மறந்து
விடுகிறோம்"
என்று
நீட்டினேன்.
"என்ன
சாமி;
எத்தனை
நாள்
என்னோடு
பேசியிருக்கிறீர்கள்!"
"ஆமாம்
அப்பா!
நான்
தான்
சொன்னேனே!
மறந்து
விட்டேன்"
என்று
குரலாலே
சரிப்படுத்தினேன்.
"ஆமாம்
சாமி!
நீங்கள்
இங்கே
எப்படி
வந்து
சேர்ந்தீர்கள்?
மறுபடியும்
ஏதாவது
காந்தி
சண்டையா?"
என்று
அவன்
பழைய
கேள்வியைப்
புதிய
வடிவத்தில்
கேட்டான்.
"காந்தி
சண்டை
எல்லாம்
முடிந்து
போய்
விட்டது.
இப்போது
ஏதப்பா"
என்று
பதில்
சொல்லாமலே
மறைக்கப்
பார்த்தேன்.
அவனோ
விடவில்லை.
"நேற்றுக்கூட
யாரோ
சொன்னார்களே.
பட்டணம்
தமிழருக்குச்
சொந்தம்
என்று
காந்தி
புதுச்
சண்டை
போடப்
போகிறாராம்.
வேறு
நாட்டார்
யாரோ
அவர்களுக்கு
வேண்டும்
என்று
கேட்கிறார்களாம்"
என்று
அவன்
அறிந்த
அரசியலை
என்னிடம்
கொட்டினான்.
"அதெல்லாம்
ஒன்றும்
இல்லை
அப்பா.
அப்படிப்
பேச்சு
இருக்கிறது.
அவ்வளவுதான்.
நம்ம
பட்டணத்துக்கு
யாராவது
சண்டை
போடுவார்களா?
கட்டின
பெண்டாட்டியை
யாராவது
கேட்டால்
விட
முடியுமா?
கலியாணம்
ஆன
பிறகு
என்
பெண்டாட்டியா,
உன்
பெண்டாட்டியா
என்று
சண்டை
போடுவது
வெட்கம்
அல்லவா?"
என்று
பழைய
கேள்வியை
மறைப்பதற்காக
முயன்றேன்.
"சரி,
அது
போகட்டும்
சாமி.
நீங்கள்
இங்கே
வந்தது
தானே
எனக்கு
எப்படியோ
இருக்கிறது"
என்றான்.
இனிமேல்
மறைக்கக்
கூடாது
என்று
அப்போதுதான்
உண்மையைச்
சொல்லத்
தொடங்கினேன்.
அந்தச்
சிறைக்குப்
போய்
சேர்ந்த
மூன்றாம்
நாள்
நடந்தது
இது.
சிறைக்குப்
போய்
ஒரு
மாதம்
ஆகிவிட்டபடியால்
அவன்
பழைய
கைதியாக
இருந்தான்.
எனக்கு
அந்த
இடத்தில்
பழக்கம்
மூன்றாம்
நாள்
ஆனபடியால்
கொஞ்சம்
புதியவனாக
இருந்தேன்.
அதனால்
தான்
அவன்
என்னை
உற்றுப்
பார்த்து
அடையாளம்
தெரிந்து
கொண்டு
கேட்டான்.
என்
கதையைச்
சொல்லி
முடிக்கும்
வரையில்
கேட்டுக்
கொண்டிருந்தான்.
அவனுடைய
மனத்தின்
மயக்கம்
அப்போதும்
தீராதபடியால்
கேள்விகள்
கேட்கத்
தொடங்கிவிட்டான்.
"சாமி!
உங்களுக்கு
ஏன்
சாமி
இந்தத்
தொல்லை?
சும்மா
இருந்திருக்கக்
கூடாதா?
அந்தக்
கூட்டுப்பட்டு
நிலையத்தில்
எத்தனையோ
பேர்
இதைப்
பார்த்துக்
கொண்டு
சும்மாபோய்
விடவில்லையா?
நீங்களும்
அப்படி
வந்து
விட்டிருக்கக்
கூடாதா?
அவன்
அரிசி
ஒரு
படி
எடுத்துக்
கொண்டு
போனால்தான்
உங்களுக்கு
என்ன?
ஒன்பதுபடி
எடுத்துக்
கொண்டு
போனால்தான்
உங்களுக்கு
என்ன?
அந்தப்
போலிசுக்காரன்
அந்தக்
கிராமத்தானை
எப்படிப்
பேசினால்
உங்களுக்கு
என்ன?
நீங்கள்
ஏன்
போலீசுக்காரனையும்
ஸ்டேஷன்
மாஸ்டரையும்
எதிர்க்க
வேண்டும்?"
என்று
வருத்தத்தோடு
பலவாறு
கேட்டான்.
நிலைமை
விளக்குவதற்காக
அவனுக்கு
விரிவாகச்
சொன்னேன்.
"அப்பா!
அரிசி
கொண்டு
வந்த
அவன்
ஒன்றும்
தெரியாத
ஏழை.
கண்ணில்
நீர்விட்டுப்
போலீசுக்காரனையும்
ஸ்டேஷன்
மாஸ்டரையும்
காலில்
விழுந்து
கெஞ்சினான்.
அந்த
ஒரு
படி
அரிசியை
அங்கேயே
விட்டுவிட்டுப்
போய்விடுவதாகச்
சொன்னான்.
அபராதம்
வேண்டுமானாலும்
கட்டிவிடுவதாக
ஒரு
ரூபாய்
எடுத்துக்
கொடுத்தான்.
பெயர்
எழுதி
வழக்குப்
போட
வேண்டா,
குற்றவாளியாக்க
வேண்டா
என்று
எவ்வளவோ
கெஞ்சினான்.
அதற்கு
முன்
நாள்
வியாழக்கிழமை
வீட்டில்
குழந்தைகளும்
மனைவியும்
பட்டினி
இருந்தார்களாம்.
பட்டணத்தில்
ஓர்
ஏழை
பட்டினி
இருந்தால்
பக்கத்து
வீட்டாரும்
கேட்கமாட்டார்கள்
அல்லவா?
அதற்காகப்
பணம்
எப்படியோ
கடன்
வாங்கிக்
கொண்டு
ரயிலில்
போய்த்
தாம்பரத்துக்குப்
பக்கத்தில்
ஏதோ
கிராமத்திலிருந்து
இரண்டு
படி
அரிசி
எடுத்து
வந்தானாம்.
வழியிலே
யாரோ
ஒருவர்
மிரட்டிப்
பார்த்துப்
பாதி
எடுத்துக்
கொண்டு
அனுப்பினாராம்.
வெள்ளிக்கிழமை
ஒரு
நாளாவது
அரைவயிறாவது
குழந்தைகள்
சாப்பிடட்டும்
என்று
எடுத்து
வந்தானாம்.
அப்படிப்பட்டவனை
மிரட்டலாமா?
அழ
வைக்கலாமா?
அதனால்
தான்
எனக்கு
ஆத்திரம்
வந்தது.
அதே
ரயிலில்
மூட்டை
மூட்டையாகத்
திருட்டு
அரிசி
போகிறது.
பணக்கார
வீட்டுக்
கலியாணங்களுக்குக்
கிச்சலிச்
சம்பாவும்
ஊசிச்
சம்பாவும்
நல்ல
நல்ல
அரிசி
மூட்டைகள்
எவ்வளவோ
மோட்டாரில்
போகின்றன.
அதற்கெல்லாம்
அதிகாரிகளே
துணையாகவும்
காவலாகவும்
இருக்கிறார்கள்.
இந்த
ஓர்
ஏழைக்கு
ஒரு
படி
அரிசி
விட்டுவிடக்
கூடாதா
என்று
ஸ்டேஷன்
மாஸ்டரைக்
கேட்டேன்.
இதற்காக
போலீசுக்காரன்
என்னைப்
பிடித்துத்
தள்ளினான்.
அதனால்
தான்
நான்
ஓங்கி
ஓர்
அறை
கொடுத்தேன்"
என்று
சொல்லி
முடிப்பதற்குள்
அவன்
கண்களில்
தாரை
தாரையாகக்
கண்ணீரைக்
கண்டேன்.
சிறிது
நேரம்
அமைதி
நிலவிற்று.
பக்கத்து
அறையில்
யாரோ
பாடிக்
கொண்டிருந்தார்கள்.
அது
பாரதியார்
பாட்டுத்தான்.
"ஆடுவோமே
பள்ளுப்
பாடுவோமே"
என்ற
பள்ளுப்
பாட்டுத்தான்.
"எல்லோரும்
சமமென்பது
உறுதியாச்சு"
என்ற
அடியை
அழுத்தந்
திருத்தமாக
அந்தக்
கைதி
பாடியது
ஏனோ
தெரியவில்லை.
அதற்குப்
பதில்
சொல்வது
போல்,
"இல்லை
இல்லை"
என்று
மனச்சான்று
சொல்லிக்
கொண்டிருந்தது.
திடீரென்று
பாட்டை
நிறுத்தினார்கள்.
பூட்ஸ்
போட்டு
நடக்கும்
ஒலி
கேட்டது.
சிறை
அதிகாரிகள்
யாரோ
அந்தப்
பக்கமாக
நடந்து
போய்க்
கொண்டிருந்தார்கள்.
கண்ணைத்
துடைத்துக்
கொண்டே
அவன்
பேசினான்
"இந்தக்
காலத்தில்
பணக்காரரைப்
பற்றி
ஒன்றுமே
பேசக்
கூடாது,
பணிந்து
போய்விட
வேண்டும்,
சாமி"
என்று
எனக்கு
அறிவுரை
கூறுவது
போல்
சொன்னான்.
அவன்
சொன்னது
சரி
என்று
அடிக்கடி
என்
மனத்திலே
தோன்றியதும்
உண்டு.
ஆனாலும்
அப்போதும்
அவனிடம்
ஒப்புக்
கொள்ள
மனம்
வரவில்லை.
அப்படிப்
பணப்பூசை
செய்ய
என்னால்
முடியாதப்பா,
"நான்
கடவுளை
நம்புகிறவன்
தெரியுமா?"
என்று
வீரமாக
ஒரு
சொல்
சொன்னேன்.
அவன்
பேசாமல்
தலை
குனிந்து
இருந்தான்.
அவனுடைய
கவலையை
மாற்றுவதற்காக
வேடிக்கையாகப்
பேச்சை
மாற்றினேன்.
"உனக்கு
எது
அப்பா
தெய்வம்?
பணமா?
கடவுளா?"
என்று
கேட்டேன்.
"இரண்டும்
தான்"
என்று
உடனே
சொல்லி
முடித்தான்.
"அதுதான்
முடியாது.
நான்
சொல்லவில்லை,
அப்பா.
ஒருவன்
கடவுளையும்
பணத்தையும்
ஒரு
நிலையில்
பூசை
செய்ய
முடியாது
என்று
பெரியோர்களே
சொல்லியிருக்கிறார்கள்"
என்றேன்.
என்
தத்துவப்
பேச்சு
அவனுடைய
நெஞ்சில்
பதியவில்லை.
"என்னவோ
சாமி,
பணக்காரருக்கு
அடங்கிப்
போவது
தான்
நல்லது"
என்றான்.
அப்போதுதான்
எனக்கு
ஓர்
எண்ணம்
தோன்றியது.
அவன்
சிறைத்
தண்டனை
அடைந்ததில்
இது
போல்
ஒரு
காரணம்
இருக்க
வேண்டும்
என்று
தோன்றியது.
அவனை
உடனே
கேட்டேன்.
அந்தப்
பதிலும்
எதிர்பார்த்தபடியே
இருந்தது.
அவன்
வேலை
செய்துவந்த
இடம்
பெரிய
கள்ள
மார்க்கெட்டுச்
சூழல்!
தடபுடலாகச்
செலவும்
செய்வார்கள்.
கணக்கு
வழக்கற்ற
வருவாய்க்கும்
வழி
தெரிந்து
தேடிக்
குவிப்பார்கள்.
கள்ள
மார்க்கெட்
என்பது
அவர்களுக்குக்
கை
கண்ட
மூலிகை
போல.
என்னுடன்
கைதியாயிருந்தவன்
படிப்பு
இல்லாதவன்;
ஆகையால்
தந்திரம்
தெரியாதவன்;
கள்ள
மார்க்கெட்டுக்குப்
பயன்
படாதவன்.
உண்மையை
மறைத்துப்
பேசத்
தெரியாத
அவனை
நம்பினால்
அவர்களுக்கு
இடர்
தானே!
அவர்களுடைய
செல்வமும்
செல்வாக்கும்
என்ன
வேண்டுமானாலும்
செய்யும்!
அவர்களுடைய
பெண்ணுக்குத்
திருமணம்
செய்தபோது
நாற்பதாயிரம்
ரூபாய்
செலவு
செய்தார்கள்.
நகை
மட்டும்
இருபதாயிரம்.
அன்றைக்கு
ஒருநாள்,
ஒரு
வேளையில்
குறைந்தது
ஐயாயிரம்
பேர்
கலியாணப்
பந்தலில்
சாப்பிட்டார்கள்.
நாங்களே
பார்த்து
வியந்தோம்.
எட்டு
அவுன்சு
அரிசிக்கு
ஏங்கிக்
கிடக்கும்
காலத்தில்
ஐயாயிரம்
பேருக்குச்
சோறு
போட
முடிந்ததே!
ஆனால்,
பாவம்
அந்த
ஏழை
எப்படியோ
பலியாகிவிட்டான்.
திருமணச்
சாப்பாட்டு
அரிசி
திருட்டு
வழியில்
வந்தது
அல்லவா?
அந்த
வழக்கிலே
தாங்கள்
அகப்படாமல்
அவனைத்
தள்ளிவிட்டார்களோ
என்னவோ
தெரியவில்லை.
பங்கீட்டு
அதிகாரியும்
போலீசாரும்
திருமணம்
முடிந்த
எட்டாம்
நாள்
வந்தார்களாம்.
அப்போது
அந்த
ஏழையின்
பெயரைச்
சொன்னார்களாம்.
அவனுக்குச்
சம்மன்
வந்ததாம்.
"டே!
யார்
என்ன
கேட்டாலும்
நீதிமன்றத்தில்
வாயை
மூடிக்கொண்டு
இரு.
மூன்று
மாதம்,
நான்கு
மாதம்
தண்டனை
போடுவார்கள்.
பேசாமல்
இருந்துவிட்டு
வா.
நாங்கள்
பார்த்துக்
கொள்வோம்.
உன்
குடும்பத்தையும்
காப்பாற்றுவோம்.
நீ
வந்த
பிறகு
உனக்கு
இருக்கும்
கடனைத்
தீர்த்து
அந்த
நிலத்தை
உனக்கே
திருப்பிக்
கொடுத்துவிடுவோம்"
என்று
முதலாளி
சொன்னாராம்.
"வாயை
திறந்து
தப்பும்
தவறுமாக
எங்களைப்
பற்றி
ஏதாவது
உளறிக்
கொட்டினால்
உனக்குத்தான்
தொல்லை.
ஆயுள்
தண்டனை
கிடைத்தாலும்
கிடைத்துவிடும்"
என்று
மிரட்டினாராம்.
இந்த
உண்மையை
அவன்
வாயிலிருந்து
வாங்குவதற்கு
எவ்வளவோ
பாடுபட்டேன்.
"சாமி,
யாருக்கும்
சொல்ல
வேண்டா;
மறந்து
விடுங்கள்"
என்று
என்னைப்
பார்த்து
கண்
கலங்கிக்
கேட்டான்.
அய்யோ!
அவனுக்கு
இன்னும்
பணப்
பூசையில்
நம்பிக்கை
இருந்தது.
"அப்பா
நான்
யாருக்கும்
சொல்லவே
மாட்டேன்.
ஆனால்,
ஒன்று
சொல்கிறேன்.
இப்படிப்
பயந்து
பணப்
பூசை
செய்தும்
பயன்
இல்லையே!
ஒரு
குற்றமும்
செய்யாத
உனக்குப்
பதினைந்து
மாதத்
தண்டனை
ஆகியிருக்கிறதே!"
என்றேன்.
"நான்
என்ன
செய்வேன்,
சாமி?
தலைவிதி
யாரை
விட்டது!"
என்றான்.
"அப்பா,
எப்படியும்
சிறைக்கு
வந்துவிட்டாய்.
இங்கேயாவது
எண்ணிப்பார்.
ஒன்றே
ஒன்று
சொல்கிறேன்.
பணமும்
உனக்கு
ஒரு
தெய்வமாக
இருக்கிறது.
ஏன்?
உலகத்திற்கே
தெய்வமாக
இருக்கிறது.
ஆனால்
இந்தப்
பணத்
தெய்வத்தைச்
சிலர்
நம்புகிறார்கள்.
சிலர்
பூஜை
செய்கிறார்கள்.
சிலர்
கைக்குள்
வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்
பணத்தெய்வம்
யாரநக்
காப்பாற்றுகிறது,
தெரியுமா?
நம்புகிறவர்களை
அல்ல,
பூசை
செய்கிறவர்களை
அல்ல,
கைக்குள்
அடக்கிவைத்திருக்கிறவர்களை
மட்டுமே
காப்பாற்றுகிறது"
என்றேன்.
"உண்மைதான்,
சாமி"
என்றான்
அந்தக்
கைதி.
தேசத்திற்காகச்
சில
முறை
சிறை
சென்று
பல
கைதிகளுடன்
நான்
பழகியிருக்கிறேன்
அல்லவா?
அதனால்
"உண்மைதான்,
சாமி"
என்று
அவன்
சொன்ன
பதிலால்
மனம்
திருந்திவிட்டதாக
நான்
நம்பவில்லை.
அன்று
இரவு
நல்ல
தூக்கத்தில்
இருந்து
கொசுக்கடி
பொறுக்க
முடியாமல்
விழித்துக்
கொண்டேன்.
என்
புதிய
தோழன்
குறட்டை
விட்டுக்
கொண்டிருந்தான்.
ஒரு
முறை
வாய்
பிதற்றினான்.
"சாமி!
எனக்கு
நிலம்
கூட
வேண்டா
சாமி!
நீங்களே
எடுத்துக்
கொள்ளுங்கள்
-
என்
பசங்கள்
வயிற்றைப்
பார்த்துக்
கொள்ளுங்கள்
-
எட்டு
அவுன்சு.
எட்டு
அவுன்சு
என்று
சொல்கிறார்கள்
-
நீங்கள்
சொன்னபடி
கேட்பேன்,
சாமி
-
வாயே
திறக்கமாட்டேன்"
என்ற
சொற்களை
அறைகுறையாகப்
பிதற்றிக்கொண்டே
மறுபடியும்
குறட்டை
விட்டான்.
"பணத்
தெய்வமே!
உனக்குக்
கண்
இல்லையா?"
என்று
சொல்லிக்
கொண்டே
நான்
கொட்டாவி
விட்டேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|