அவர்கள்
வி.உஷா
அம்பையின் கதையில்
படித்ததுதான் அவள் நினைவுக்கு வந்தது.
வயதான பெண் அவள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறாள். உடல்
ஒடுங்கிப் போயிருந்தாலும் உள்ளம் பழைய தினங்களைக் கிளறிப் பார்த்தபடியே
இருக்கிறது. இத்தனை வருடங்கள் நம் வாழ்க்கை எப்படி ஓடியது என்று அவள்
யோசிக்கிறாள்.
கிலோ கிலோவாக கோதுமை மாவு பிசைந்தது, உருளைக்கிழங்கு வேகவைத்தது,
வெங்காயம் நறுக்கியது... என்று ஒரே நினைவுகள்தான் மாறி மாறி வருகின்றன.
சமையலறை தவிர வேறு எந்த எண்ணமும் அவளுடைய உள்ளுணர்வுகளில் பதிவாகவில்லை.
ஸ்தம்பித்துப் போகிறாள்.
அம்பையில் கதையில் வந்த அந்தப் பெண்மணிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம்
என்று அருணா நினைத்துப் பார்த்தாள்.
வலித்தது.
ஒரு வித்தியாசமும் இல்லை. சொல்லப்போனால் இன்னும் கூடுதல் சுமைகள்
தூக்குகிற கழுதையாக ஆகிப் போயிருக்கிறாள். அந்தப் பெண்மணிக்காவது அவள்
உழைப்பு சமையலறையுடன் முடிந்து போயிருந்தது. தனக்கு அப்படியல்ல என்று
நினைத்தபோது சுயவிரக்கத்தாலும் அவமானத்தாலும் அவள் சிரம் தாழ்ந்தது.
‘‘அருணா...’’
சம்பத்தின் குரல் ஓங்கிக் கேட்டது.
முகத்தோடு சேர்த்து கலங்கிய விழிகளையும் துடைத்துக் கொண்டு அவள் அவனிடம்
போனாள்.
‘‘என்ன இது?’’ என்றான் தட்டைக் காட்டி.
‘‘ஏன்..? ரவா உப்புமா..’’
‘‘எனக்குப் பிடிக்காதுன்னு தெரியுமில்லையா உனக்கு?’’
‘‘ஒருநாள் சாப்பிடக்கூடாதா? வெங்காயம், தக்காளின்னு சேர்த்து
கிச்சடியாத்தானே செஞ்சிருக்கேன்?’’
‘‘சாப்பிட்டுதான் தீரணும்கிறியா?’’
‘‘ஜஸ்ட் ஒரு நாள்..’’
‘‘ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்ங்கிறியா?’’
‘‘மாவு அரைக்க நேரமில்லே... இந்த வாரம் ஸண்டே முழுக்க விருந்தாளிகள்..
சமையல், டிபன், காப்பின்னு கிச்சனே கதின்னு கெடந்தேன்.. முந்தாநாள் அடை
ஆச்சு.. நேத்திக்கு அரிசி உப்புமா.. இன்னிக்குதான் ரவா உப்புமா.. அதுவும்
ரொம்ப நாள் கழிச்சு..’’
திடீரென்று அவன் எழுந்தான். கையை உதறினான். வாஷ் பேசினில் கை நீட்டி
அலம்பிக் கொண்டான்.
அவளிடம் வந்து நின்றான்.
‘‘நிறுத்த மாட்டியா பேச்சை? பதிலுக்கு பதில் பேசிக்கிட்டேதான் இருப்பியா?
வேணும்னேதானே இப்படி பண்ணறே? சொல்லு’’ என்றான்.
சடாரென்று முகம் சிவந்தது. பேசி முடிப்பதற்குள் உதடுகள் துடித்துவிட்டன.
அமைதியாக அவள் நின்றாள். உள்ளே வெப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த
எட்டு வருடங்களாக இதே டைனிங் டேபிளில், இவனுக்கு எவ்வளவு ரொட்டிகளும்
கூட்டுகளும் வத்தக்குழம்புகளும் சாம்பார்களும் செய்து சுடச்சுட
பரிமாறியிருக்கிறாள்.? எத்தனை தேங்காய் துருவி, எவ்வளவு வறுத்து அரைத்து
அத்தனையும் ருசிருசியாக.. சத்துள்ளதாக.. புத்தம்புதிதாக..
ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது பாராட்டு வந்திருக்குமா? ‘‘இந்த வெங்காய பஜ்ஜி
பிரமாதம் அருணா!’’ என்று ஒரே ஒரு வரி அங்கீகாரமாவது கொடுத்திருப்பானா?
‘இப்படியெல்லாம் பிரமாதமாய் சமைத்துப்போட வேண்டியது உன் கடமை. ரசித்தாலும்
அதை வெளிக்காட்டாமல் மவுனமாக சாப்பிட வேண்டியதுதான் என் வேலை. முடிந்தால்
அதில் குற்றம் குறை கண்டுபிடித்துச் சொல்வேன். ஏன் தெரியுமா?
மனைவிகளையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும். இல்லையென்றால் நம்
தலைமீது தேங்காய் உடைத்துவிடுவார்கள்!’
பெண்களைப் பற்றிய அவனுடைய முடிவான அபிப்ராயம் இது. மாற்றிக்கொள்ள
விரும்பாத முரட்டுத்தனமான தீர்மானம்!
அழைப்பு மணியின் மெல்லிய குயிலோசை கேட்டது.
அவன் குளியலறையில் இருந்தான்.
ஈரக்கையைத் துண்டு எடுத்து துடைத்துவிட்டு அவள் வாசலுக்கு விரைந்தாள்.
திறந்தபோது மாதவன் நின்றிருந்தான்.
எதிர் ஃப்ளாட் இளைஞன். புதிதாக திருமணமாகி இளம் மனைவியுடன் குடித்தனம்
செய்பவன்.
புன்னகையுடன், ‘‘யெஸ் மாதவன் சார், உள்ளே வாங்க..’’ என்றாள் அருணா.
அவனும் முறுவலித்துவிட்டு, ‘‘ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா மேடம்?’’ என்றான்
மென்மையாக.
‘‘சொல்லுங்க..’’
‘‘சரிதா மார்க்கெட்டுக்குப் போயிருக்கா... எனக்கு ஒரு அர்ஜென்ட் கால்
வந்ததால, நான் உடனே சைட்டுக்குப் போயாகணும்.. அவ வந்தா இந்த சாவியைக்
கொடுத்துடுங்களேன்.. முடியுமா? ப்ளீஸ்..’’ என்றான் கெஞ்சுவதைப் போல.
‘‘இதென்ன மாதவன் சார் இவ்வளவு தயக்கம் உங்களுக்கு? ஆஃப்டர் ஆல், இட்ஸ் மை
ட்யூட்டி ஆஸ் எ நெய்பர்.. குடுங்க...’’
‘‘தாங்க் யூ மேடம்.. வெரி கைன்ட் ஆஃப் யூ.. ஸீ யு.. பை பை..!’’ சிறுவனைப்
போல் அவன் படிகளில் இறங்கி விரைகிற சுறுசுறுப்பைப் பார்த்தபடி
புன்னகையுடன் அவள் திரும்பியபோது..
சம்பத் நின்றிருந்தான்.
‘‘எதுக்கு வந்தான்?’’ என்றான் காட்டமாக.
‘‘இதோ இதுக்காக..’’ அவள் விரல்கள் சாவியை எடுத்துக் காட்டின.
‘‘நீயே வாங்கிப்பியா? என்னைக் கூப்பிட மாட்டியா? எவன் வந்தாலும் நீயே
இளிச்சுக்கிட்டுபேசுவியா... பெரிய......... நினைப்பா?’’
தோட்டாக்களைப் போல சீறி வந்த அந்த வார்த்தைகளின் வேகம் தாங்காது அவள்
ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.
திகுதிகுவென்று சொக்கப்பனை போல உடல் எரிந்தது. மண்புழுவை விட அற்பமாக ஒரு
பிறவியெடுத்து, அவன் கால்களுக்குக் கீழே நசுங்குகிற மாதிரி அவலமான
உணர்வுடன் அவள் துடித்தாள். இன்னும் ஏன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்
என்ற ஒரே கேள்வி மட்டும் கத்தியின் முனை போல குத்திக் கொண்டிருந்தது.
சம்பத் இரு கைகளாலும் முகத்தை வேகமாக தேய்த்துக் கொண்டான். உஸ்ஸென்று
சப்தத்துடன் மூச்சுவிட்டான்.
மிக நெருங்கி அவள் பக்கத்தில் நின்றான்.
அவள் விரல்களைப் பற்றியபடி ‘‘பொண்ணுன்னா பூ மாதிரி இருக்கணும் அருணா.. பூ
கூட இல்லே, மொட்டு மாதிரி அவ்வளவு ஸாஃப்ட்டா இருக்கணும்.. குரலே வெளில
கேக்கக்கூடாது.. நடந்தா பூமி அதிராம, சிரிச்சா பல்லு தெரியாம.. அதுதான்
அழகுடி அருணா! அதுதான் எனக்குப் பிடிச்ச அழகு.. எங்க பாட்டி அப்படித்தான்
இருந்தா, எங்க அம்மா அப்படித்தான் இருந்தா.. நீயும் அப்படி இரேண்டி அருணா!
அப்படி இருந்தாத்தாண்டி எனக்குப் பிடிக்குது.. புரிஞ்சுதா? புரியணும்..
இத்தனை வருஷம் புரியலேன்னா இப்பவாவது புரிஞ்சுக்கோ..’’ என்றவன், அவள்
கண்களை அழுத்தமாகப் பார்த்துவிட்டு விருட்டென்று திரும்பிப் போனான்.
அப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அருணா
எதிர்பார்க்கவில்லை.
ராத்திரி சமையலுக்குக் கீரையை என்ன செய்யலாம், பூசணியை என்ன செய்யலாம்
என்று யோசித்தபடி வேகமாக வீடு வரும் வழியில் திடீரென்று அந்த பைக் ஆள்
எதிரில் வந்ததும், கத்தியைக் காட்டி மிரட்டியதும், செயினை கத்திமுனையில்
பறித்துக் கொண்டு போனதும் கண்கட்டுவித்தை போல நடந்து முடிந்துவிட்டது!
ஏழு மணிக்குத்தான் சம்பத் வீட்டுக்கு வந்தான்.
அம்பு போல பாய்ந்து அவளிடம் நின்றான்.
‘‘செயின் திருடு போச்சாமே? பைக்ல வந்து மிரட்டி வாங்கிட்டுப் போனானாமே..
நிஜமாவா... நிஜமாவா?’’ என்றான் வியர்வை கொப்புளிக்க.
அமைதியுடன் நிமிர்ந்தவள் ‘‘ஆமாம்..’’ என்றாள் நிதானமாக..
‘‘என்ன பொண்ணு நீ?’’ என்றான் மிகவும் எரிச்சலுடன். ‘‘ஒவ்வொருத்தியும்
ராக்கெட்ல போறா, ப்ளேன் ஓட்டறா... ஏன், நம்ம கிராமத்துப் பொண்ணு லாரியும்
ட்ராக்டரும் ஓட்டுது.. இப்படியா கோழையா இருக்கறது... எதிர்ல வந்து நிக்கற
திருடன்கிட்ட செயினை கழட்டி குடுத்துகிட்டு? ஆர் யு நாட் அஷேம்ட்?’’
அருணா அவனையே பார்த்தாள்.
மிக மென்மையான புன்னகை ஒன்று மிக நிதானமாக அவளுடைய அதரங்களிலிருந்து
வெளிப்பட்டது.
|