கோழையா நீ ? 

அருட்கவி ஞானகணேசன்

பக்தியொடு வாழ்வியலைப் பார்த்துநீ மகிழ்ந்து

   படைத்தவனை அனுதினமும் பாடியே புகழ்வாய்!

விக்கினம் ஏதுமின்றி வித்தகனா யோங்க

   வீரியத்தை வளர்த்திடுவாய் வேங்கையினைப் போல

சிக்கனத்தில் எந்நாளும் சிரத்தைதனைக் கொண்டு

    சீவியத்தில் முன்னேறச் செய்திடுவாய் பணியே!

பக்கவாதம் பிடித்தவன்போல் படுத்துநீ தூங்கி

    பாழாக்கி யிழப்பதேனோ பசுமையான வாழ்வை?

 

மற்றவரைப் போலநீயும் மண்ணினிலே வாழ

    மடமையொடு ஏங்கித்தான் மாள்வதுவு மேனோ?

தற்கொலையை எண்ணுவதே தாழ்வுமிக்க செயலாம்

    தந்தைதாய் தனயர்க்குத் தாங்கொணாத் துயரே!

பற்றுடனே உன்தொழிலைப் பகலிரவாய்ப் பார்த்தே

    பாரினிலே உயர்ந்தோங்கிப் புகழுடனே வாழ்க!

தற்பெருமை தாழ்வுயர்வு தயக்கங்க ளெல்லாம்

    தள்ளிநீ வைத்துமே தரணியிலே உயர்வாய்!

 

அம்மையப்பன் ஆக்கியநல் அழகுமிகு மேனி

   ஆண்டவனார் அருளியதே ஆவியெனும் மூச்சு!

செம்மையொடு வாழ்வதுவே சேயுனக்கு அழகு!

   சிதைத்துவிட எண்ணுவது சந்ததிக்கே இழுக்கு!

இம்மையிலே செய்கின்ற இழிவான செயலை

   இறைவனவன் பொறுப்பானோ எண்ணிப்பார் உறவே!

சிம்மாள வாழ்வினையே சிரம்கொண்டு வாழ

    சீரான சந்ததியோ சிரந்தாழ்த்தி வாழ்த்தும்!

 

சுத்தியே திரிந்துநீ சோம்பேறித் தனமாய்

   சுற்றம் சுகமிழந்து துடிப்பதுவு மேனோ?

பத்தரை மாத்தெனப் பாசத்தைப் பொழிந்து

   பாலினைப் பொழிந்ததாய் பதைத்தலும் அழகோ?

இத்தரை மீதினில் எத்தனை தொழில்கள்

   ஈடிலாச் சேவைகள் எண்ணியே பாராய்!

பித்தராய் வலிந்து பிரிப்பதோ உயிரை?

   பிரமனும் பொறுப்பனோ பாதகச் செயலை?  

 

ஆளலாம் உறுதியோ டாக்கையது இருப்பின்!

   வாழலாம் எம்மிடம் வல்லமை பெருகில்!

காளைபோ லென்றும் கட்டுடல் காத்து

   கண்ணியராய் வாழக் கவினுலகு போற்றும்!

கோழையாய்ப் பதுங்கிக் குனிவதை விடுத்து

   கோமக னாயுயர் கோலோச்சு வாயே!

வாழ்ந்திடப் பிறந்தநீ வாழ்க்கையை வாழு!

   வாழ்வு மொருமுறை வாழ்ந்திடல் சிறப்பே!



('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)







உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்