உத்தமர்களும்
உபதேசிகளும் !
எஸ்.எம்.எம்.பஷீர்,
இலண்டன்
கதிரவன் கண்திறக்க
ஜபல் அல் சைத்தூன்
மலையடிவார
ஆலய முன்றலில்
அமைதியின் உருவாய்
அமர்ந்திருக்கிறார் ஏசு
உபதேசத்திற்காய்
அருகருகாய்
உட்காந்திருக்கிறார்கள் மக்கள்
அசிங்கப்பட்டுப்போன
விபச்சாரி இவளென்று
யூத ஆச்சாரிகள்
இழுத்து வந்தவளை
ஏறிட்டுப் பார்க்கிறார் ஏசு,
காமக் கொசுக்களின்
தொல்லைகளை துய்த்தவள்
துயரம் தோய
துவண்டு நிற்கிறாள்
கற்களை வெறித்தபடி
வித்தக யூதர்கள்
விரித்த வலையில்
வீழ்வாரோ ஏசு ?
' மோஸையின் பிராமணப்படி
ஏசுவே நீர் இவளைக்
கல்லெறிந்து கொல்வீரோ ? '
தலை கவிழ்கிறார் ஏசு
விரல்கள் மண்ணில் புதைந்து எழ
கூச்சல்கள் சுற்றி வளைக்க
கற்குவியல் மேல்
பார்வை குவித்து
அவரின் அதரங்கள் அசைந்தன.
'உங்களில் யாரேனும்
பாவம் புரியாதான்
முதலில் கல்லை
விட்டெறியட்டும் ! '
நிசப்தம் நிலைகொள்ள
காலடி ஓசைகள்
கரைந்து போக
பாவிகள் பார்வையை
விட்டகல
ஏசு தலை நிமிர்த்த
அவர் முன்னாள்
கண்ணீரை நீரோடையாக்கி
தனித்தே நிற்கிறாள்
பாவம் நீக்கிய பாவை
உபதேசத்திற்காய்!
sbazeer@yahoo.co.uk
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|