குழந்தைக் கவிவித்தகர் அருள் சுப்பிரமணியம்
கவிஞர் அருட்கவி
ஞானகணேசன்
ஆல மரமொன் றடியொடு சாய்ந்ததோ
சாலச் சிறந்ததோர் சற்குண ஆசான்
நாலும் கற்ற நற்றவ வள்ளல்
கோல அழகுக் குணப்பெரும் குன்றிவர்!
அழகிய உருவமும் அமைதிப் பேச்சும்
பழகிடு வோரைப் பாசமாய் அணைத்தலும்
இழகிய உள்ளமும் இனித்திடும் கதைகளும்
நழுவிச் சென்றதோ நல்லதோர் உறவே?
அருமை நண்பனாய் அன்பொடு அணைத்தீர்
பெருமையாய் எம்மொடு பேசிப் பழகினீர்
உருவம் போலுயர் உத்தம நண்பரே
திருவருள் உந்தனைச் சிவனடி சேர்த்ததோ?
கற்ற அறிவையும் பட்ட அறிவையில்
பற்றொடு தளைத்து பைந்தமிழ்ப் பாமலர்
வற்றா நதிபோல் வழங்கினீர்; வள்ளலே
சிற்றம் பலத்தான் திருவடி சாந்தியே!
பைந்தமிழ்ப் பாவினால் பாலரை அணைத்தே
முந்தினீர் அவையில் முத்தமிழ் வித்தகா!
செந்தமிழ் தளைத்துச் சிறுவர் நூல்பல
தந்தீர் தரமாய் தரணி போற்றவே!
நோயில் தவித்தும் நொடியா துநின்று
சேயர் கற்றிடச் செதுக்கிய பாமலர்
மாயனே உந்தன் மகிமை புகட்டுதே
காயம் நீங்கினும் உன்புகழ் நிலைக்குமே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|