உள்ளே வெளியே  

கவிஞர் வெ.நாதமணி
 

ள்ளப்பணம் உள்ளிருக்கக் கள்வரெலாம் வெளியிருக்க
காணொலியில் கவியரங்கம் நடத்துகின்ற காலமிது
உள்ளேபோய் வந்தவரை ஒதுக்கிவைத்த தக்காலம்
உள்ளேபோய் வருவதுவும் ஒருதகுதி அரசியலில்
உள்ளமெலாங் கருப்பாக உடைமட்டும் வெளுப்பாக
உல்லாச வாகனத்தில் உலவுகின்ற அரசியலார்
உள்ளிருக்க வேண்டியவர் உயர்பதவி வகித்திருக்க
உள்ளபடி பலர் வெளியில் ஒன்றுமின்றி வாடுகின்றார்  
 
அல்லாஏசு ஈசனென்ற அனைவருமே ஒன்றேதான்
அறிந்தார்க்கு உள்ளேயும் வெளியேயும் அவரிருப்பர்
உள்ளிருப்பை மறைப்பதற்கு வெளியிலுள்ள செருப்பெடுத்து
உள்வைக்கும் வல்லவரும் நம்மிடையே உலவுகின்றார்
உள்ளிருக்கும் வார்த்தைக்கு நீயாவாய் எசமானன்
உதிர்த்துவிட்ட வார்த்தையெலாம் உனையாளும் எசமானாம்
சொல்லிவைத்தார் சான்றோரச் சொல்லறிந்து நீநடந்தால்
சிக்கலில்லை சிதைவுமில்லை சிறப்பெல்லாம் நீயடைவாய்
 
உள்ளிருக்கும் ஆழியின்நீர் உயரலையாய் வெளிப்போந்தால்
ஊரழியும் உயிரழியும் ஒவ்வொன்றும் இடம்மாறும்
உள்ளிருக்கும் அரவந்தன் உறைவிடத்தை விட்டகல
உயிரிழக்கும் அன்றிபிற உயிரினுக்கும் உலைவைக்கும்
உள்ளிருக்கும் காற்றால்தான் எந்தவொரு பந்தும்தன்
உருவத்தைப் பெற்றிலங்கும் அதுநீங்கின் உருவிழக்கும்
உள்ளிழுத்து வெளியேற்றும் மூச்சொருநாள் நின்றுபோக
உனதுபெயர் பிணமாகும் இடுகாட்டூர் பயணமேகும் 
 
உள்ளிருந்த உண்மையெலாம் ஒருநாளில் வெளிவருமே
உண்டமது உள்ளிருக்கும் உண்மையினை உளறவைக்கும்
உள்ளிறங்கும் மதுவுன்றன் உயர்பண்பைக் கீழிறக்கும்
உண்டமது உணர்வழித்து உன்மதிப்பைக் கெடுத்துவிடும்
கள்ளமெலாம் உள்ளேறும் கற்றதெல்லாம் காற்றிலேறும்
கள்நஞ்சு உள்ளிருந்தால் கண்ணியங்கள் கரைந்துபோகும்
பள்ளத்தை நோக்கியென்றும் பாய்கின்ற வெள்ளம்போல்
பணம்பொருள் புகழ்யாவும் பட்டென்று பட்டுவிடும் 
 
உள்ளிருக்கும் தலைக்கனமே உயர்ந்தாரை மதிக்காது
உயர்வாகத் தனைநினைந்து உன்மத்தம் கொண்டாடும்
எள்ளிநகை யாடியென்றும் ஏழையரைப் புண்படுத்தும்
எனக்குநிகர் யாரென்று எக்களித்துக் கொக்கரிக்கும்
தள்ளிவைக்கும் பெரியோரை தானென்ற அகங்காரம்
தலைக்கனந்தான் வெளிப்பட்டால் தகவெல்லாம் சீர்குலைக்கும்
உள்ளபெயர் அத்தனைக்கும் கொள்ளிவைத்துச் சூறையாடும்

ஒண்டவிடா தக்குணத்தை ஓட்டுவீரே உமைவிட்டு



('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்