நிமிரட்டும் புதிய உலகம்!

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு

 

 

ஏழுவண்ண நிறமிருந்தும் வீழுகின்ற மழைநீரில்

எந்நிறமும் தெரிவதில்லை!

எங்கிருந்தோ ஒளிக்கீற்று இத்துளியில் விழும்போது

இயற்கைதரும் வானவில்லை!

வாழுகின்ற மிருகங்கள், வலசைவரும் பறவைகள்

வர்ணபேதம் பார்ப்பதில்லை!

வண்ணவண்ணக் குட்டிகளை வயிற்றினிலே ஈன்றெடுத்தும்

வளர்ப்பதிலே பேதமில்லை!

 

பாழுமிந்த மானுடர்கள் வாழுமிந்தச் சமூகத்தில்

பலபேதம் காணுகின்றோம்!

பகுத்தறியும் ஆறறிவுப் படைத்தவராய்ப் பிறந்தும்நாம்

பாரபட்சம் கூறுகின்றோம்!

தாழ்வென்றும் உயர்வென்றும் சாதிகளை வளர்த்தின்று

தடுமாறி நாணுகின்றோம்!

தன்னலத்துக் கட்சிகளின் தலைவர்கள் சொற்படிந்து

சாயத்தைப் பூசுகின்றோம்!

 

ஏழையர்கள் கீழென்றும், இருப்போர்கள் மேல்நின்றும்

எகத்தாளம் போடுகின்றார்!

எம்மதமே உயர்வென்று சம்மதமே இல்லாது

இறுமாப்பில் ஆடுகின்றார்!

“வாழவிடு! வாழ்!” என்ற வழிகாட்டும் நெறிமறந்து,

வன்முறையை நாடுகின்றார்!

வல்லரசு வெள்ளையரும் பொல்லாத நிறவெறியை

வக்கிரமாய் மூட்டுகின்றார்!

 

 

மூச்சுவிட வழியின்றி, முழங்காலால் கழுத்திறுக்கி

மூச்சடைத்துக் கொன்ற மிருகம்!

முன்னின்ற மக்களெலாம் கண்டதுபோல், காட்சியிதன்

மூர்க்கத்தைக் கண்ட மனிதம்!

தீச்சுடரை ஆணவத்தீ தீண்டிவிட்ட போதினிலும்,

தீர்வுகாண வில்லை எவரும்!

திருவாளர் லிங்கன்முதல் கறுப்பினத்தார் ஆண்டபோதும்

தீரவில்லை இந்த வெறியும்!

 

நெருப்படங்கிப் போனாலும், கறுப்புநிறச் சாம்பல்தான்

நீதிகேட்டுப் படர்ந்திருக்கும்!

நெஞ்சுக்குள் கறுப்பினரும் நேசிக்கும் வெள்ளைநிறம்

நியாயத்தை  என்று உணரும்?

“பிறப்பொக்கும்” என்றுரைத்த பெருமானார் வள்ளுவரைப்

பெற்றெடுத்த இந்த மண்ணில்,

நிறம்பார்த்து வெறுப்போரும் நியாயத்தை உணரட்டும்!

நிமிரட்டும் புதிய உலகம்!


('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)







உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்