எரிதழல்  கொண்டு வா 

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

அடிப்பட்டும்   உதைப்பட்டும்   குருதி   சிந்தி

          அரும்உயிர்கள்   ஆயிரமாய்  பலிகொ  டுத்தும்

அடிமையெனும்   தளையுடைத்து   நம்மின்  முன்னோர்

          அரும்நாட்டை   மீட்டெடுத்துத்  தந்த  தெல்லாம்

படிப்படியாய்   முன்னேற்றி  வளம்பெ  ருக்கிப்

          பாரினிலே  நம்நாட்டை  தலைநி  மிர்த்த

பிடிப்புடனே  உழைத்திடுவோம்   பெருமை   சேர்ப்போம்

          பீடுதனில்  உயர்த்திடவோம்   எனநி  னைத்தே !

 

பாலாறும்   தேனாறும்   ஓடு  மென்றார்

          பட்டினியும்   வறுமையெல்லாம்   போகு  மென்றார்

நாலாறு   வளங்களெல்லாம்   சேரு  மென்றார்

          நல்லதொரு   நாடாக   வளரு   மென்றார்

தேளாறு   கொட்டியது  போல  வன்றோ

          தேசத்தை   வலியாலே   துடிக்க  வைத்தே

ஆளாளும்  நாடுதனை   ஆளும்   வாய்ப்பில்

          அடியோடு   சுரண்டுகின்றார்   நாளு  மிங்கே !

 

அரசியலில்  நேர்மையெல்லாம்   போன  தின்று

          ஆள்வோரும்   எதிர்ப்போரும்   கைகள்  கோர்த்து

வரவுதரும்   ஊழலுக்குத்   துணையாய்   சேர்ந்து

          வளந்தன்னைச்   சேர்ப்பதிலே   கூட்டாய்  நின்று

குரல்முழக்கி   வெளிப்படையாய்   எதிர்ப்ப  தைப்போல்

          கூச்சலிட்டே   திரைமறைவில்   கொள்ளை   யிட்டார்

கரம்தட்டி   வேடிக்கை   பார்ப்ப   தன்றிக்

          கயவரினை   விரட்டுதற்கே   அச்சம்   கொண்டோம் !

 

மாதம்மும்   மாரிபெய்த   மழைவ   ளத்தை

          மனக்கண்ணில்   காணுமாறு   காட்டை   விற்றார்

சீதளத்தைக்   கொண்டமுகில்   மோதி   நீரைச்

          சிந்தவைத்த   மலைகளினைத்   தகர்த்து   விற்றார்

ஆதவன்தான்  எழுமுன்னே   கலப்பை   யாலே

          ஆழமாக   உழுதிட்ட   வயலை   விற்றார்

நாதமாகப்   பாய்ந்தஆறும்   வற்றிப்   போக

          நாள்தோறும்   குழிபறித்து   மணலை   விற்றார் !

 

பரந்திருந்த  ஏரிகளைக்  குளங்கள்   தம்மைப்

          பட்டாபோல்   அரசியலார்  பங்கு  போட்டார்

புறம்போக்கு  நிலங்களினைத்   தமதாய்   ஆக்கிப்

          பூகூவி   விற்றல்போல்   விற்றுத்   தீர்த்தார்

பரம்பரையாய்   செய்துவந்த   தொழிலை  யெல்லாம்

          படிப்படியாய்   எந்திரமாய்   மாற்றி   வைத்தார்

சிரம்தாழ்த்தி   அந்நியர்கள்   இந்த   நாட்டை

          சிந்தாமல்   அள்ளுதற்கே   இசைவ  ளித்தார் !

 

எரிதழலை   ஏந்திடுவோம்   இந்த   நாட்டை

          ஏப்பமிடும்   அரசியலார்   கையெ  ரிப்போம்

எரிதழலை   ஏந்திடுவோம்   வணிகம்   தன்னை

          ஏந்திபிற   நாடளித்தோர்   கையெ  ரிப்போம்

எரிதழலை  ஏந்திடுவோம்   உள்நா  டற்ற

          எந்தவொரு   பொருளையுமே   சாம்பல்  செய்வோம்

எரிதழலை   ஏந்தியிந்த   நாட்டைக்   காக்க

          ஏய்ப்போரை  எரித்திடுவோம்   வாரீர்  வாரீர் !



('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)







உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்