காலமே கவலைக்கு மருந்து
புலவர் முருகேசு மயில்வாகனன்
கவலைக்கு வித்து கடுமன அழுத்தமே
அவல நிலைக்கு ஆட்படா திருத்தலில்
கவனங் கொண்டாலே கவலை ஏது?
சிவனே என்று சிந்தித் திருத்தலே!
மூலமொன் றிருப்பதை முன்பின் அறியாச்
சீலத்தை ஒழித்துச் சிந்தை சிதறக்
காலங் கழிக்கின்ற காளையரே சிந்திப்பீர்
காலன் வருமுன் களிப்பைத் தேடுவீர்.
கவலைக்கு மருந்து கல்லாமை யாமே
நவயுக உலகில் நல்லதும் கெட்டதும்
அவலப் படுத்தி அங்கிங் கலைத்தே
குவலய வாழ்வை குறுக்கியே நிற்கும்.
கற்றார், உலகில் கருத்து மிக்கோராய்
உற்ற விடத்தில் உறுதியாய் நின்றே
மற்றோர்க் குதவும் மனித நேயராய்
பற்றோ டுதவும் பண்பாள ராமே.
காலம் மாற்றும் கவலையை, நம்பு
வாலறி வாளனைப் பற்றிப் பிடித்தால்
சாலவும் நன்றே சத்தியம் உண்மை
மூலமும் அதுவே முறையாய் அறிவீர்.
ஐம்புலன் அடங்க ஆணவம் குறையும்
நாமிதை அறிந்தால் நல்லது செய்வோம்
பூம்புனல் ஆடி புனிதரைத் தேடா
ஆமை போல அம்புலன் அடக்குவீர்.
பத்மா சனத்தில் பக்குவமாய் இருந்தே
சித்தத்தை அடக்கச் சீரான தியானம்
முத்திக்கு அல்ல முறையான வாழ்வுக்கே
சத்திய சீலரைச் சரண்டைய உதவுமே.
காலம் அறிந்தே கவலை ஒழிக்க
நாலும் இரண்டும் நன்கு கற்றே
நல்ல குருவை நாடியே தேடி
நல்லுரை கேட்டே நல்வழி நடப்பீர்.
கூட்டிப் பெருக்குவீர் குப்பையை மனதில்
ஈட்டும் செல்வத்தை இரப்போர்க்குக் கொடுத்தே
ஈட்டும் அறத்தால் இன்பம் ஓங்கும்
ஊட்டும் சக்தி உன்னுள் அறிவீர்.
மருந்தொன்று கண்டேன் மாயையைப் போக்க
குருவின் அறிவுரை கூடியே சேர்ந்திடப்
புருடன் திருவருள் பூரணமாய்க் கிடைத்திட்டால்
மருவினிய காலத்தில் மாசுகள் மறையுமே.
('இலக்கியவெளி சஞ்சிகை'
மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய
வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட
கவிதை - காலம்
22-08-2020)